இயற்கை தன் இல்லமான இந்த உலகத்தில் தினம் சமைக்கும் கவிதைகளில் சில இங்கு தமிழ் ஓசைகளில் சிலையாகியிருக்கிறது. மறந்துபோன நிலாச்சோறு நினைவுகளையும், பள்ளிக்கூட குறும்புகளையும், பாட்டியிடம் கதை கேட்ட ஆர்வத்தையும் ஆசுவாசமாய் அசைபோட தமிழ் சாமரம் வீசுகின்றது. மண்ணை பிரிந்த சோகமும், தனிமை காட்டும் ஞானமும், சின்ன சின்ன ஆசையும் சிங்காரம் கட்டி தமிழ்ப்பாட்டியோடு செல்லம் கொஞ்சுகிறது.
அதிகாலை மற்றும் அந்திமாலை வானம் தரும் வரங்களும், பகலிரவு அயராது இயற்கை வகுத்த நியதிகளும், மேக வாசல் தாண்டி வாசல் வந்த மழைகளும், பூமியென்று பூத்து நின்ற புனிதமும் தமிழ் பூசிக்கொண்டு இங்கு தாளம் போட்டு பாடுகின்றன. அன்னையின் அன்பும், தாலாட்டின் கனிவும், காதலின் அழகும், குழந்தையின் குழைவும், குடும்பத்தின் உறவும் தமிழ் கவிதைத்திருவிழாவில் தேர்மீது உற்சவம் வருகிறார்கள்.
பம்பரம் போல சுழன்றோடிக்கொண்டிருக்கும் கம்பியூட்டர் காலத்தில் இந்த படைப்பு வாசிக்கும் அனைவரையும் ஒரு கணம் நிதானித்து தங்களின் வேர்களை நோக்கியும், தங்கள் பூர்வீக மண்ணின் வனப்பு மிகுந்த வாழ்க்கை குறித்தும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
அதிகாலை சூரியனாய், சன்னலோர மழையாய், தாயின் தாலாட்டாய் இந்த கவிதைகள் தமிழ் வாசம் வீசும் வாசகர்களின் மனம் குளிர, முகம் மலர, நினைவுகள் வருடி சுகமளிக்கட்டும்.
இந்த பானையில் இருந்து சில பருக்கைகள்:
"உனக்கு விழா
தினம் எடுக்கிறது
தனக்கென வாழாத வானம்"
"ஒரு குருவியின்
பாடலோடு
குளிர்காலை
கும்மியடிக்கிறது"
"முத்தாரம் தீட்டயிலே முழுமதியே நீ உறங்கு
முத்துப்பல் சிரிக்கையிலே முகவடிவே நீ உறங்கு"
"ஏர்க் காட்டில் போறவளே
என் காட்டில் பயிர் இல்லையோ"