ஒரு ஊர் பிறந்த கதை

உண்மைக் கதைகள்
4.8 out of 5 (13 )

பொற்றையடி ஒரு சிறிய கிராமம்.ஊருக்குள் மொத்தமே ஐம்பது வீடுகள் மட்டுமே உள்ளன.மக்கள் இருப்பிடம் தாண்டியதும் வயல்வெளிகள் இருக்கு.இங்கு நெல்,மற்றும் வாழை முக்கிய பயிர்கள் ஆகும்.வயலை தாண்டியதும் தரிசு நிலங்கள் உள்ளன.அதை அடுத்து ஒரு சிறிய குன்று இருக்கும்.இதை பொத்தை என்று சொல்வார்கள்.இந்த பொத்தையில் தான் அறுவடை காலத்தில் நெற்களம் அமைக்கப்படும் இந்த பொத்தைக்கு அருகே வாய்க்கால் ஒன்று உள்ளது இங்கு எப்பொழுதும் தண்ணீர் ஓடி கொண்டிருக்கும் அந்த கிராமத்திலுள்ள மக்கள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் இந்த தண்ணீரை உபயோகப்படுத்துவார்கள் இந்த பொத்தையின் அருகில் இருப்பதால் தான் அந்த ஊருக்கு பொத்தையடி என்ற பெயரே வந்தது. ஒரு பக்கம் வயல்கள்,இன்னொரு பக்கம் வாய்க்கால் என்று பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.வாய்க்கால் ஊரை சுற்றி ஓடி தெற்கு எல்லையில் உள்ள குளத்தில் சேர்ந்து விடும்.

இந்த வாய்க்கால் கரை ஓரத்தில் பத்து வீடுகள் உள்ளன.இந்த வீட்டில் உள்ளவர்களை பத்து வீட்டு குடும்பத்தார் என்று சொல்வார்கள். வள்ளியும் கந்தனும் வயதில மூத்த தம்பதி.இவர்களுக்கு குழந்தை இல்லை.அதனால் மற்ற குடும்பத்தினர் இவர்களை அன்போடு பார்த்து கொள்வர்.அதே போல் இவர்கள் இருவரும் மற்றவர்களை நன்கு அரவணைத்து கொள்வார்கள்.

அந்த ஊர் பெரியதனக்காரர் பெயர் சண்முகம்.இவருக்கு தான் நிலபுலன்கள் அதிகம் உண்டு.இவர் வயலில் தான் அந்தப் பத்து விட்டு குடும்பத்தார்களும் விவசாய வேலை செய்வார்கள் விவசாயம் இல்லாத காலத்தில் இவர்கள் தூங்கியே பொழுதை கழிப்பார்கள்.

கந்தனுக்கு ஒரு யோசனைதோன்றியது.வாய்க்காலை ஒட்டி கிடக்கும் தரிசு நிலங்களை திருத்தி சிறு பயிர்கள் வளர்க்கலாமே என்று நினைத்தார் வேலை இல்லாமல் இருக்கும் மற்றவர்களையும் இந்த பணிகளில் ஈடுபடுத்தி பயிர்களை வளர்த்து அவர்களது பொருளாதார நிலையும் இன்னும் மேம்படுத்தலாம் என்று அவர் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.

உடனே அவர் ஊருக்கு பெரியவர் சண்முகத்தை பார்க்க சென்றார்.கந்தனை கண்டதும் அவர் என்ன டே வாய்க்கால்கரை காத்து இந்த பக்கம் வீசுதுன்னு சிரித்து கொண்டே கேட்டார்.அண்ணே வாய்க்காலை ஒட்டி இருக்க தரிசு நிலத்தை திருத்தி காய்கறி தோட்டம் அமைக்கலாம் என்று நினைக்கிறேன் வயலில் விவசாய வேலை இல்லாத பொழுது அந்த பயலுக சும்மா தூங்கித் தூங்கி பொழுதை கழிக்கிறாங்க. தரிச திருத்தி தோட்டம் போட்டா வேலைக்கு வேலையும் ஆச்சு வருமானத்துக்கு வழி பார்த்ததும் ஆச்சு அதனாலே.உங்க கிட்ட யோசனை கேட்கலாமேன்னு வந்தேன் என்று சொன்னார்.சண்முகம் நல்ல யோசனை தான் டே நீ நினச்ச மாதிரியே வேலை ஆரம்பியுங்கள்.நம்ம விவசாய ஆபீஸ்ல இருந்து நல்ல தரமான விதைகள்,மரக்கன்றுகள் வாங்கி நட்டு கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னார்.

தரிசு நிலத்தை கொத்தி கிளறி உழுது பயிர் நடுவதற்கு ஏதுவாக சரி செய்தார்கள். அப்புறம் வாய்க்காலில் இருந்து ஒரு சிறு கிளை வாய்க்கால் தோண்டி அதன் மூலம் வாய்க்கால் நீர் இந்த பயிர்களை விளைவிக்க பயன்படுமாறு அமைப்பையும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.ஒரு புறம் முருங்கை எலுமிச்சை கருவேப்பிலை மரக்கன்றுகள் நடப்பட்டன இன்னொருபக்கம் கத்தரி வெண்டை புடலை அவரை பாகல் பூசணி போன்ற கொடியில் படரும், தரையில் படரும் செடிகளும் பயிர் செய்தார்கள்.

ஒருநாள் சண்முகம் வந்து இந்த இடத்தை எல்லாம் பார்வையிட்டு நல்ல செஞ்சு இருக்கீங்கப்பா என்று அவர்களைப் பாராட்டிப் பேசினார் அதன்பின் இந்த இடத்துக்கு பட்டா வாங்க வேண்டும் யார் யார் பெயருக்கு பட்டா வாங்க வேண்டுமோ அவர்கள் பெயரை குறித்து கொடுங்கள் என்று கந்தனிடம் கேட்டார் .அதற்கு அவர் அண்ணே ஒரே பட்டாவாக வாங்குவோம்.பத்து வீட்டு குடும்ப பட்டா என்று பொதுவான பெயரில் வாங்குவோம். தனித்தனி பெயர்கள் வேண்டாம்.அதே போல் பத்திரத்தையும் இதே பெயரில் பதிவு பண்ணுவோம்.இந்த குடும்பத்தார் அனைவரும் தலைமுறை தலைமுறையாக இந்த நிலத்தை அனுபவித்து கொள்ளலாம்.ஆனால் விற்க விலை சாட்ட உரிமை கிடையாது என்று பத்திரத்தில தெளிவா பதிவு பண்ணனும் என்று கந்தன் சொல்ல அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.வாழ்க்கைக்கு அடிப்படை ஜீவாதாரத்துக்கு சிறந்த வழி அமைச்சாச்சு.

அடுத்து குழந்தைகளுக்கு தேவையான கல்வி வசதி பற்றிய எண்ணம் தோன்றியது.அந்த ஊர் குழந்தைகள் மூன்று மைல் தொலைவில் உள்ள பக்கத்து ஊர் பள்ளியில் படித்து வந்தார்கள்.பத்து வீட்டு குடும்பத்தை சேர்ந்த செல்வி என்ற பெண் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து,அருகில் உள்ள இன்னொரு டவுன் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து ஆசிரியர் ஆனார்.தம் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று நினைத்து கந்தனிடம் பேசினாள்.பெரியப்பா நம்ம ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் வேணும்.நீங்க ஊர் பெரியவரிடம் பேசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங்கள்.அனுமதி கிடைக்கும் வரை நம்ம ஊர் சாவடியில் நான் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கிறேன் என்று சொன்னாள்.அதே போல் கந்தனும் ஊர் பெரியவரும் கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள்.அவரும் விரைவில் பள்ளி கட்ட அனுமதி வாங்கி ,கட்டடம் கட்ட ஆரம்பித்தார்கள்.புது கட்டிடம் வரும் வரை செல்வி குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்தாள்.அவள் கூட பயின்றவர்கள் வந்து குழந்தைகளுக்கு ஓவியம் விளையாட்டு போன்று பல துறைகளில் கால் பதிக்க உதவினர்.இதை பார்த்த மற்ற கிராமங்களில் இருந்தும் பிள்ளைகள் வர ஆரம்பித்தனர்.புது பள்ளிக்கூடம் கட்டப்பட்டு , பொற்றையடி ஆரம்ப பள்ளி என்று பெயர் சூட்டப்பட்டு, கலெக்டர் முன்னிலையில் கந்தனும் சண்முகமும் குத்து விளக்கு ஏற்றி பள்ளியை ஆரம்பித்து வைத்தார்கள்..அது சிறிது சிறிதாக வளர்ந்து உயர்நிலைப்பள்ளி ஆகியது.இங்கு படித்து ,பின் கல்லூரி சென்று மேற்படிப்பு படித்து உயர் பதவியில் அமர்ந்தவர்கள் தாம் படித்த பள்ளி மாணவர்களுக்கு மேற்படிப்பு பயில வழி காட்டினார்கள்.அழியாத கல்வி செல்வமும் கிடைத்து விட்டது.

அடுத்தபடியாக சண்முகம் தம் ஊர் மக்கள் சொந்தக்காலில் நின்று சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து ஆடு,மாடு,வங்கி மூலம் கடன் பெற்று கொடுத்தார்.அனைவருக்கும் அவரே கியாரண்டி கை எழுத்து போட்டார்.மக்களிடம் இருந்து பால்,காய்கறிகளை மொத்த கொள்முதல் செய்து விற்பனைக்கும் வழி வகுத்தார்.அதனால் பொற்றையடி மக்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்பும் ஏற்பட்டது.

இந்த ஊரை பார்த்து அருகில் உள்ள கிராமத்து மக்களும் தரிசு நிலத்தை திருத்தி பயிர் செய்ய ஆரம்பித்தனர்.சோம்பேறியாக பொழுதை கழிக்காமல் சுறுசுறுப்பாக உழைத்தனர் உழைப்பின் பலன் பொருள் ஈட்டினர் வசதியான வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர்.

பத்து வீட்டுக்காரர்கள் முன்பு போலவே ஒற்றுமையாக இருந்தார்கள்.முதன்முதலில் பள்ளி ஆரம்பிக்க வித்திட்ட செல்வி பொற்றையடி பள்ளியின நிரந்தர தாளாளர் ஆனார்.கந்தன் அந்த குடும்பத்தாரின் பாதுகாவலன் ஆனார்.

உழைத்த கை சும்மா இருக்காது அல்லவா.மீண்டும் மூலிகை பயிர்கள் வளர்த்து மூலிகை பண்ணைஆரம்பித்தனர்..விவசாயக் கல்லூரியில் பயின்ற அந்த ஊர் மாணவன் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவைப்பட்ட மூலிகைகள் வளர்க்க உதவினார்.இன்னொரு மாணவன் ஏற்றுமதி பொறுப்பை தன் வசம் எடுத்து கொண்டான்.

எவ்வளவு செல்வ செழிப்புடன் இருந்தாலும் அந்த ஊர் மக்கள் தங்களை வாழ வைத்த பூமித் தாயை வணங்க மறக்கவில்லை.வயலிலோ இல்லை காய்கறி தோட்டத்திலோ செருப்பு போட்டு நடக்க மாட்டார்கள். அங்கு விளையும் காய்கறிகளை ஊர் மக்கள் யார் வேண்டுமானாலும் பறித்து கொள்ளலாம் பணம் கொடுக்க தேவையில்லை.ஏன் என்றால் ஊர் மக்களின் உழைப்பும் அந்த தோட்டத்தை உருவாக்கியதில் உள்ளது.

இப்படியாக ஒரு சிறிய கிராமம் கூட்டு உழைப்பால் வளர்ந்து சிறந்து விளங்கியது.மக்களுக்கு தேவையான ஆடை அணிகலன் கடை,மளிகை கடை அந்த ஊரை சேர்ந்தவர்களால் திறக்கப்பட்டது.ஊர் சாவடியில் ஒரு சிறிய நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. பொற்றையடி பள்ளி பழைய மாணவர்கள் பத்திரிகைகள்,கதை புத்தகஙகள்,கல்வி சம்பந்தப்பட்ட புத்தகம்.வாங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

ஊர் கோடி தேர் இழுப்பது என்று ஒரு பழமொழி உண்டு.அது போல் அந்த ஓர் மக்களாலே ஒரு புதிய ஊர் பிறந்தது.அதற்கு விதை ஊன்றிய கந்தனையும்,அவருடன் கை கோர்த்த பத்து வீட்டு காரர்களையும்,அந்த சாதனை செய்ய உறுதுணையாக பெரும் தனக்காரர் சண்முகத்தையும் என்றும் மறக்க முடியாது.

முதலில் உடல் உழைப்புக்கு ஒரு வழி ஏற்படுத்தி கொண்டு.அதன் மூலம் ஊதியத்தை பெருக்கி கொண்டும்,பின்.அழியாத கல்வி செல்வம் பெற பள்ளிக்கூடம் கட்டி குழந்தைகளின் எதிர்காலத்துக்கு விளக்கேற்றி வைத்து, படிப்படியாக தங்கள் ஜீவாதாரத்தை வளர்த்து கொண்ட பொற்றையடி என்ற ஊர் பிறந்த கதை இது.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...