116 Views

ARAPPOR AANDAVAN DHILEEPAN-2

History & Politics | 8 Chapters

Author: TAMIZHDESAN IMAYAKAPPIYAN

116 Views

LTTE rule towards socialist Tamil Eelam A book that classifies the world models of revolutionary movement based on Gandhianism, Communism, and Imperialism.

முன்னுரை

காப்பியா வாசிப்பகம்

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்

83 இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

தமிழக மக்களுக்கு ஈழப் போர் குறித்த வாழ்வையும் பேரினவாத அரசால் நாளாந்தம் மக்கள் படும் பேரவலத்தையும் ஒரு நூறு கவிதைகளாகவும் கதைகளாகவும் சொல்லியிருக்கிறேன். புலம்பெயர் வாழ்வில் தமிழகப் பார்வையை உரை நடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச் சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கண இலக்கிய அகராதிக் காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப் பிரதிகளாகவும், நாடோடிப் பயணங்களாகவும், கலா சாலை போதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும் பதிவு செய்திருக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் மூத்தகுடி கலாச்சாரப் பயணங்கள் மற்றும் கல்விப் புலக்கலைப் பேரதிகார நுட்பவியல் குறித்தும் மனைவி தமிழ் இனியா சொற்களை விதைத்து வருகிறார். புகார்க் காண்டத்திலிருந்து மதுரைக் காண்டம் வந்துள்ள கொடை மகன் இமயக்காப்பியன்(6) படைப்பாக்கப் பணியில் முந்நீர் போல் எமக்கு பேருதவியாக இருக்கிறான். துயரங்களின் சாட்சிகள் மரணிப்பதில்லை என்கிற காத்திரச் சொல்லின் சாட்சிகளாய் நாங்கள். கீழடி / உலகின் / மூத்த காலடி

எனக்கான உதவிகளை செய்யும் குழந்தைகள் சக்தி என்கிற விடுதலைவெண்பா, சூரியவாசன் என்கிற இலக்கியப்புரட்சியாளன், ரித்திஷா என்கிற நிழலினி, விதுஷி, பார்பி என்கிற மோனலிக்கும், பாரா முகமாகவே போய்விட்ட ஜேர்மனியில் வாழும் குழந்தைகளான பூர்த்திகா என்கிற இதழினி, அரிகரசுதன் என்கிற எளிஞன் ஆகியோருக்கும் நன்றி சொல்ல தேவையில்லை. எக்காலத்திலும் நன்றிக்குரியவர்களாக இருக்கும் என் சின்னத்தாய் செல்வி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தாருக்கும் மற்றும் எனது அக்கா பத்மாவதி, தீபாவிற்கும் நன்றிகள் பல.

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

திலீபன்

தான் நேசித்த மக்களுக்காக

தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன்

எத்தகைய உயர்ந்த உன்னதமான

தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த

அற்புதமான அர்ப்பணிப்பைத் தான்

திலீபன் செய்திருக்கிறான்

-தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள்

சமர்ப்பணம்

உலகெங்கிலும் மொழி, இன விடுதலைப் போரில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு

Like what you read?
{{global.chaps[0].like_count}} {{global.chaps[0].like_text}}

திலீபன் எனும்  பார்த்திபன்

திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 29, 1963 - செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்தியவழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர் இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம். 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் மரணம் எய்தினார்.

ஐந்து அம்சக் கோரிக்கை: மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

எதிர்வினைகள்: திலீபனின் உண்ணாவிரதம் தொடர்பாகவோ கோரிக்கைகள் தொடர்பாகவோ இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களின் புரிதல் மிகக் குறைவு. அதற்கான காரணம் சிங்கள ஊடகங்கள் வெளியிடும் செய்திகளே அவர்களுக்கு கிட்டுவதும், அதுவே உண்மை என பெரும்பான்மை சிங்கள சமூகம் நம்பிவிடுவதும் சில காரணங்களாகும், இருப்பினும் அதனையும் தாண்டி உண்மையறிதல் எனும் கொள்கைக் கொண்ட சிங்களவர்களும் இருக்கவே செய்கின்றனர். அவ்வாறானவர்களின் பார்வையில் திலீபனின் உண்ணாவிரதமும் அவர் கொண்ட கொள்கையின் திடமான பற்றும், அவரது சாகும் வரையான துணிவும் கூட பேசப்படுகின்றன. குறிப்பாக திலீபனின் கொள்கைக்கான உண்ணாவிரதத்தையும், விமல் வீரவங்ச போன்ற சிங்கள அரசியலாளர்களின் கபடமான போலி உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்ட சிங்களப் பதிவுகளும் உள்ளன.

தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடு-திலீபன்!

தியாகி தீலீபனின் தியாக வரலாறு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விளங்குவதோடு மட்டுமல்லாது, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது. இந்த முக்கிய விடயங்களைச் சற்று ஆழமாக அணுகித் தர்க்கிப்பதானது, தியாகி திலீபனின் இருபத்தியிரண்டாவது ஆண்டு நினைவு தினத்திற்குப் பொருத்தமானதாக அமையும் என்று நாம் நம்புகின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான்! இங்கே தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருக்கிற இயல்பு, அடக்குமுறைகளுக்கு; அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும்; விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பாரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது தேசியத் தலைவரின் அடிப்படை இயல்பாகும்!

இந்த இயல்புத் தன்மைதான் தமிழீழத் தேசியத் தலைவரையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986ம் ஆண்டு, நவம்பர் மாதத்தின்போது, இந்தியாவில் தமிழ் நாட்டிலிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராகத் தலைவர் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பைத் தேசியத் தலைவர் பிரபாகரன் உடனே ஆரம்பித்தார். இந்தச் சாகும் வரையிலான உண்ணா நோன்பு ஒரு போராட்ட வடிவமாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரால்தான் முதன்முதலில் செய்யப்பட்டது.

அப்போது நடைபெற்ற சில விடயங்களை, நாங்கள் இப்போதும் நெஞ்சில் நிலைநிறுத்திக்கொள்ளுவது வரலாற்றுக்கடனாகின்றது. தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒரு நாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். ‘அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே’ – என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள்.

அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய பதில் இதுதான்:

‘இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ண்Pர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!’

ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றைத் தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. தலைவர் தன்னுடைய உண்ணா நோன்பை முடித்தார். தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்கின்ற தேசியத் தலைவரின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் உள்ளூரப் படிந்திருந்தது. தேசியத் தலைவர் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான். திலீபனின் இந்த உண்ணா நோன்புப் போராட்டம், தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பையும் குறியிட்டுத்தான் நிற்கின்றது! இந்த இலட்சிய உறுதிதான், தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் – 1987ல் – நடாத்தினான். ‘ஒரு சொட்டுத் தண்ண்ணீர் அருந்தாமல், நான் எனது உண்ணா நோன்பை ஆரம்பிக்கப் போகின்றேன்’ – என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் திலீபனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். ‘தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தைத் தொடரலாம்’- என்று தலைவர் பிரபாகரன் திலீபனைக் கேட்டுக்கொண்டார். ஆனால் திலீபனோ, தலைவரிடமே பதில் கேள்வி ஒன்றைக் கேட்டான். ‘அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல்தானே சாகும்வரை உண்ணா விரதத்தை மேற்கொண்டிருந்தீர்கள். என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீர்கள்?’

அத்தகைய ஒரு தலைமை! இத்தகைய ஒரு தியாகி!.

உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது!
இவ்வாறு, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாகத்தான் தியாகி திலீபன் விளங்கினான்.

ஈழம் எம் நாடெனும் போதினிலே
ஒரு ஈகம் பிறக்குது வாழ்வினிலே
திலீபன் தந்த இவ் உணர்வினிலே
தாகம் வளருது நாட்டினிலே

வேகம் கொண்டதோர் பிள்ளையவன்
வேதனை வேள்வியில் உயிர் எறிந்தான்
தாகம் தமிழீழம் ஒன்றே என்று
மோகம் கொண்டு தன் உடல் தகித்தான்

அந்நியர் காலடி எம் மண்ணில்
ஆக்கமாய் என்றுமே ஆகாது-எனப்
புண்ணியவான் இவன் கூறிவட்டு
புதுமைப் புரட்சியில் விழி சாய்த்தான்.

தொட்டு நாம் மேடையில் ஏற்றி விட்டோம்
உடல் கெட்டவன் பாடையில் இறங்கிவந்தான்
பட்டறிவு இதுவும் போதாதா
நம் மக்களும் முழுதாய் இணைவதற்கு

கட்டையிலே அவன் போனாலும்
வெட்டையிலே உண்மை எடுத்துரைத்தான்
பட்டை யடித்த பாரதப் படையினரின்
கொட்டமடக்கிட வழி சமைத்தான்.

நெட்ட நெடுந்தூரம் இல்லை ஐயா- வெகு
கிட்டடியில் எம் வெற்றி வரும்.
கொட்டமடித்தவர் எல்லோரும்-எம்
காலடி தொட்டிடும் வேளை வரும்

நினைவுகளுடன்:- தீட்சண்யன் (15.9.1994)

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

எங்கள் முற்றத்தில் விடுதலை சீட்டென..!

அகிம்சை எனும் உயரிய ஒழுக்கத்தின்பால் இயங்குவதாக காட்டிக்கொண்டிருந்த இந்தியா தனது கோரமுகத்தைக் காட்டியது. நல்லூரில் 15.09.1987 அன்று ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தான். ஒரு துளி நீர் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் அந்த தியாக வேள்வியில் மெழுகாய் உருகினான். அவன் நேசித்த மக்கள் அலையலையாய் அவன் முன் திரண்டார்கள். அவன் மெல்ல மெல்ல உருகி அணைந்து கொண்டு போவதைக்கண்டு துடித்தார்கள். அந்த மக்களின் துடிப்பைக் கண்டு அவனால் பேச முடியாத நிலையிலும் பேசவேண்டும் என்கிற துடிப்போடு அவன் பேசுகையில்...

"நான் இறந்து விண்ணிலிருந்து அங்கே உள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்த நாளை எதிர் பார்த்துக்கொண்டேயிருப்பேன்." என்று கூறினான். அத்தகைய நம்பிக்கையோடு பயணித்துவிட்ட அந்த வீரர்களின் நம்பிக்கை ஒருபொழுதும் தோற்றுவிடாது. பரிபூரண சுதந்திரத்தை எமது மக்கள் அடைந்தே தீருவார்கள். திலீபன் போன்றவர்கள் மிக அருமையானவர்களே.

"ஒரு புனித இலட்சியம் நிறைவேரவேனும் எண்பதற்காகத் தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறோம்." எனத் திலீபன் நல்லூரில் உண்ணாவிரத மேடையில், அவனோடு கூட இருந்த கவிஞர் வாஞ்சிநாதன் நீர் அருந்தக் கேட்டபோது அவரிடம் இவ்வாறு கூறினான்.

எமது விடுதலைப் பயணம் அப்படிப்பட்டதுதான், எம்மை மிகக் கடுமையாக வருத்தித்தான் அந்த உயரிய விடுதலையை வென்றெடுக்க முடியும். அதுவே பெறுமதி மிக்கதாயிருக்கும் என்பதை அவனது வாழ்க்கை எமக்கு உணர்த்துகிறது.

எந்த நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் அவனது இயல்பு பாரதியார் கண்ட சிட்டுக்குருவியை எண்ணவைக்கும். அத்துணை துடிப்பு, வேகத்துடன் விசையுறத்திரிந்தான். இந்த வேகமும் துடிப்பும் எம் ஒவ்வொருவரிலும் ஆளவேண்டும். அத்தகைய வீரனின் நினைவில் நனைவோம்.

– எரிமலை (புரட்டாசி 1994) இதழிலிருந்து வேர்கள் .

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை
அவர்களின் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்கள் பற்றி...

தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருந்ததும் அவன் வீரச் சாவைத் தழுவிக் கொண்டதும் இன்றுவரை எதோ நம்பமுடியாத செய்தி போலத் தான் இருக்கிறது. உண்மையிலேயே திலீபனை உண்ணாவிரத மேடையிலேயே கொண்டு உட்கார்த்திவிட்டோம். கந்தன் கருணை வீட்டிலிருந்து அவனை அழைத்துவந்து நல்லூரின் அந்த வீதியிலே, மனோன்மணி அம்மன் கோவில் மூலையிலே அமைக்கப்பட்ட மேடையிலே உட்கார்த்தி இருக்கிறோம். நான் உண்மையைச் சொல்கிறேன்; நான் என்றுமே பொய் சொல்வதில்லை; அப்பொழுது திலீபனை நாங்கள் சாகக் கொடுப்போமேன்று நான் கருதவில்லை. ஆனால் திலீபன் கருதியிருந்தான். நான் கருதவில்லை. ஒரு 4,5 நாட்கள் வரையும் திலீபனைச் சாகக் கொடுப்போமேன்று நான் கருதவில்லை. இந்தியாவை அப்பொழுது நம்பாவிட்டாலும் முதற்பலியாக திலீபனையே சாவுகொள்ளக் கொடுப்போமேன்று நான் கருதவில்லை. எனவே அந்த 4 நாட்கள் வரையும் எதிர்ப்புணர்வை இந்தியாவுக்குக் காட்டுகிறோம் என்பது போலத் தான் கழிந்தது. ஆனால் 4வது நாள் திலீபனிடம் பேசிவிட்டு வரும்போது, எனக்குச் சாடையாக ஏதோ மனதில் இவனை நாம் இழந்துவிடுவோமோ என்ற எண்ணம் எனக்குள்ளேயே வரத் தொடங்கியது.

நானும் திலீபனும் மிக நெருக்கமானவர்கள். ஒரு வழியில் சொன்னால் என்னை இந்த விடுதலைப் புலிகளுடன் இணைக்க வைத்ததே திலீபனும் கேணல் கிட்டுவும் தான். நான்காம் நாளுக்குப் பிறகு என்னுடைய அந்தர ஆத்மா சொல்கிறது, திலீபனை இழக்கப் போகிறாய் என்று. இந்த மண் இவனை இழக்கப் போகிறது என்ற குரல் எனக்குள்ளே கேட்கத் தொடங்கியது. அப்பொழுது தான் அந்தக் கவிதையை எழுதினேன். எழுதிவிட்டு எல்லோருமே, திலீபனுக்கு அமைக்கப்பட்ட மேடைக்கு அருகில் அமைக்கப்பட்ட மேடையில் ஏறித்தான் கவிதையை வாசித்தோம். நான் கவிதை எழுதிவிட்டேன் என்பதும் நான் இன்று கவிதையை வாசிக்கப் போகிறேன் என்பதும் திலீபனுக்குத் தெரிந்துவிட்டது. திலீபன் எனக்கு ஒரு செய்தி அனுப்புகிறான். "புதுவை அண்ணையை, தயவுசெய்து கவிதையை வாசிக்க வரவிடவேண்டாம் இந்த மேடைக்கு. ஏனென்றால் நான் தாங்க மாட்டேன்; அவரும் தாங்க மாட்டார்" . எனவே அந்த மேடைக்கு ஏறி தயவுசெய்து வாசிக்க வேண்டாம் என்று சொல்லி, அதே போல் அந்தக் கவிதை மேடையில் வாசிக்கப்படவில்லை. அது அப்பொழுது எங்களுடையை நிதர்சனத்தினுடைய ஒளிபரப்பு நடந்து கொண்டிருந்த நேரம், நாலாம் நாள் அந்த ஒளிபரப்பினூடாக அந்தக் கவிதையை ஒளிபரப்பினோம். மேடையிலிருந்து திலீபன் அந்தக் கவிதையைக் கேட்டான். அந்தக் கவிதையை இன்றுவரை உச்சமாக – அற்புதமான மன உணர்வின் பதிவாகத் தான் நான் நினைக்கிறேன்.

"நாவிழந்து நாதமணி பேச்சிழந்து தூண்
துவண்ட மாதிரியாகப் போய் முடியப் போகிறாயா..
காற்றே நீ நிறுத்து; கடல் அலையே நீ நிறுத்து;
கூற்றுவனா அவனைக் கொண்டு வந்து தூக்கிலிடு"

எனக்கு என்னவென்று சொன்னால் அந்தர ஆத்மா கூறத் தொடங்கிவிட்டதல்லவா திலீபனை நீ பறிகொடுக்கப் போகிறாய் என்று. அந்த உணர்வலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது, சனக்கூட்டத்திலிருந்த பல்லாயிரக்கணக்கனோர் "ஒ" என்று கத்தியதை நான் அறிவேன். ஏனென்று சொன்னால் ஒளிப்பதிவை முடித்துவிட்டு ஒளிபரப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது, நானும் அந்த வீதியிலே பார்த்துக் கொண்டு நின்றேன். அந்தச் சூழலிலே எனக்கு ஏற்பட்ட உணர்வு, அந்த முதல் நான்கு நாட்களிலும் ஏற்பட்ட உணர்வல்ல. அந்தக் கவிதையைப் பார்த்தால் தெரியும் உன்னை நாங்கள் இழக்கப் போகிறோமா என்று சொல்லிக் கேட்கும்..
—- நன்றி : எரிமலை ——–
இனி, போராடும் தமிழினத்தின் கவிஞர் புதுவை அவர்கள் அன்று தியாகி. லெப். கேணல் திலீபனின் நினைவாக எழுதிய கவிதையின் வரிகள்…

கூற்றுவனைத் தூக்கிலிடு

எங்கே என் தம்பி?
எங்கே என் தம்பி?
இங்கே இருந்தானே, இருந்தவனைக் காணவில்லை
எங்கே என் தம்பி?
மெல்ல…மெல்ல
அந்த விளக்கணையும் வேளையிலே
எல்லோரும் சேர்ந்து ‘எண்ணையிடு’ என்றோமே
கல்லான நெஞ்சே….!
நீ கண்திறந்து பார்க்கவில்லை
நாவரண்டு நாவரண்டு,
நாதமணிப் பேச்சிழந்து
பூ சுருண்டமாதிரியாய் போய்முடிந்து விட்டானா?
காற்றே நீ மூசு,
கடலலையே பொங்கி எழு.
கூற்றுவனா?
அவனைக் கொண்டுவந்து தூக்கிலிடு
எங்கே என் தம்பி?
எங்கே என் தம்பி?
இங்கே இருந்தானே இருந்தவனைக் காணவில்லை
என் இனிய திலீபனே!
ஒரு வார்த்தை…
ஒரே ஒரு வார்த்தை மட்டும்…..
பேசிவிடு
"தமிழீழம்" என்ற தாரக மந்திரத்தைச்
சொல்லிவிட்டு;
மீண்டும் தூங்கி விடு
மக்கள் சமுத்திரத்தில்
மரணித்து விட்ட வீரனே!
ஒரு வார்த்தை;
ஒரே ஒரு வார்த்தை மட்டும்
பேசிவிட்டுத் தூங்கு……
என்னினிய தோழனே!
உனது மரணப்படுக்கை கூட
இங்கே மகத்துவம் மிக்கதாகி விட்டது
நீ கண்மூடியபடி தூங்குகின்றாய்
அந்தப் படுக்கை இங்கோர் பூகம்பத்தையே வரவழைக்கிறது
உன் சாவே இங்கோர் சரித்திரமாகிவிட்டது
செத்த பின்னர்!
ஊர்கூடித்
தேம்புவதுதான் இங்கு வழக்கம்.
ஆனால்….
ஊரே தேம்பிக் கொண்டிருந்தபோது
மரணித்த வரலாறு
உன்னுடன்தான் ஆரம்பமாகிறது
சாவு பலதடவை உன்னைச் சந்திக்கவந்து
தோல்வி கண்டது
இப்போது
சாவை நீயாகச் சந்திக்கச்சென்று
வெற்றிகண்டு விட்டாய்
என் இனிய திலீபனே!
நீ கையில் ஆயுதம் ஏந்தியபோதும்
உன்னை அருகிருந்து பார்த்துள்ளேன்.
நீ….நெஞ்சில் அகிம்சை ஏந்திய போதும்
அருகிலி பார்த்துள்ளேன்
எந்த வித்தியாசமும் தெரியவில்லை
போராளிகளுக்குரிய போர்க்குணமே உன்னில் தெரிந்தது
இந்திய அரசே!
இது உனக்குப் புரிகிறதா?
தம்பி திலீபன்…..உன்னிடம் என்னதான் கேட்டான்
எங்களை
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவிடு என்றான்.
எங்கள் மண்ணின்
இறைமையைத் தா என்றான்
இது குற்றமா?
இதற்காகத்தானே போராடினான்
இதற்காகத்தானே போராடினான்
இதற்கு என்ன பதில் தரப்போகின்றாய்……
உன் பதிலை
நேற்று வந்த விமானத்திலும் எதிர்பார்த்தோம்
தாமதித்துவிட்டாய்
நீ கடத்திய ஒவ்வொரு நொடிப் பொழுதும்
இங்கோர் புயலையே உருவாக்கிவிட்டாய்
திலீபன் என்ற புயல்
உன்னைச் சும்மா விடாது
உசுப்பியே தீரும்
எங்கே என் தம்பி?
எங்கே என் தம்பி?
இங்கே இருந்தானே!
இருந்தவனைக் காணவில்லை.
என்இனிய திலீபனே!
நிம்மதியாய்த் தூங்கு
நிலம் வெடிக்கப் போகிறது
நிம்மதியாய்த் தூங்கு
நிலம் வெடிக்கப்போகிறது.
காற்றே நீ முக
கடலலையே பொங்கி எழு
கூற்றுவனா?
அவனைக் கொண்டுவந்து தூக்கிவிடு!

தலைவர் பிரபாவின் உரை

(தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் மறைவையொட்டி அன்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் தமிழீழ மக்களுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனமான உரை அன்றும் இன்றும் என்றும் எமது விடுதலைக்கு நாம் தான் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதை வலியுறுத்தி நிற்கிறது.)

எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது; வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது; அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கிறது. இவை எல்லாம் எமது ஆயுதப் போராட்டவரலாற்றில் நாம் ஈட்டிய வீரசாதனைகள். ஆனால் எனது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது; வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. சாத்வீகப் போராட்டத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஒரு மகத்தான தியாகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலைகுனிய வைத்த நிகழ்ச்சி. உலகத்தின் மனச்சாட்சியைச் சீண்டிவிட்ட நிகழ்ச்சி.

தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக, ஒருவன் எத்தகைய உயர்ந்த – உன்னதமான தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான். ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.

நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதி வாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு. அவன் துடித்துத் துடித்துச் செத்துக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை சாதாரண மனிதப் பிறவியாகப் பார்க்கவில்லை. தன்னை எரித்துக்கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன். அதில் நான் பெருமை கொண்டேன். இலட்சிய உறுதியின் உச்சக் கட்டமாக திலீபன் தன்னை அழித்துக் கொண்டான். அவன் உண்மையிற் சாகவில்லை. காலத்தால் சாகாத வரலாற்றுப் புருசனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கிறது. இது அர்த்தமற்ற சாவு என இந்திய தூதர் கூறியிருக்கிறார். தமது உறுதி மொழிகளை நம்பியிருந்தால் திலீபன் உயிர் தப்பியிருப்பான் எனச் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன? என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். எமது உரிமைகள் வழங்கப்படும், எமது மக்களுக்கும் மண்ணுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும், தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பூமியில் தம்மைத் தாமே ஆளும் வாய்ப்பு அளிக்கப்படும்- இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம். எமது மக்களினதும் மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.

இதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எனது மக்களாகிய உங்களுக்கு தெரியும்.

தமிழ் அகதிகள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்லமுடியாது முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்க சிங்களக் குடியேற்றங்கள் துரித கதியில் தமிழ் மண்ணைக் கபளீகரம் செய்தது.சிங்கள அரசின் போலீஸ் நிர்வாகம் தமிழ்ப் பகுதிகளில் விஸ்தரிக்கப்பட்டது. அவசரம் அவசரமாக சிங்கள இனவாதம் தமிழ்ப் பகுதிகளில் ஊடுருவியது. சமாதான ஒப்பந்தம் என்கின்ற போர்வையில் சமாதானப் படையின் அனுசரணையுடன் சிங்கள அரச ஆதிக்கம் தமிழீழப் பகுதிகளில் நிலை கொள்ள முயன்றது. இந்தப் பேராபத்தை உணர்ந்து கொண்ட திலீபன் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி காண திட சங்கற்பம் கொண்டான்.

சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் அர்த்தமில்லை. பாரதம் தான் எமது இனப் பிரச்சனையில் தலையிட்டது. பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதமளித்தது.பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம் தான் எமது ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்தது. ஆகவே பாரத அரசிடம் தான் நாம் உரிமை கோரிப் போராட வேண்டும். எனவே தான் பாரதத்துடன் தர்ம யுத்தம் ஒன்றைத் தொடுத்தான் திலீபன். அத்தோடு பாரத்ததின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அஹிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக் கொண்டான்.

முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் விடுதலைப் புலி வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வடக்கு கிழக்கு அடங்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் புலிகள் முன்னெடுக்கும் இந்த சாத்வீகப் போராட்டத்தில் அணி திரள வேண்டும் மக்களின் ஒன்று திரண்ட சக்தி மூலமே – மக்களின் ஒருமுகப்பட்ட எழுச்சி மூலமே – எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். திலீபனின் ஈடு இணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இது தான்.

பேறுபெற்ற பெருவீரன் திலீபனண்ணா

"புரந்தார்கண் நீர்மல்கச் சாகின்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து"

தம்மைக்காத்த மன்னனுடைய கண்களில் நீர் பெருகுமாறு சாகப்பெற்றால் அந்தச்சாவு இரந்தாவது பெற்றுக்கொள்ளத்தக்க பெருமையுடையதாகும். "படைச்செருக்கு" எனும் அதிகாரத்தில் வள்ளுவப்பெருந்தகை கூறியிருக்கும் இக்கூற்றானது எமது விடுதலைக்காய்போராடி வீழ்ந்த மாவீரர்களுக்கு சாலப்பொருத்தமானதொன்றாகும். இன்னும் சொல்லப்போனால் சாவுக்கு சாவாலாகும் சந்தர்ப்பங்களை வழங்கும் மாமறவர்களைப் பெருமைப்படுத்துகின்றது இந்தத் திருக்குறள் எனலாம்.
திலீபனண்ணாவின் உடலில் நீர் வற்றிக்கொண்டே போக தலைவர் அவர்களின் விழிகளில் நீர் கோர்த்துக்கொண்டது. அன்பு, நட்பு, பணிவு, உறுதி, தெளிவு, அறிவு, ஆற்றல்கள், வீரம், தந்திரம், இவையெல்லாவற்றிற்கும் மேலாக தாய்மண்பற்று தலைவன்மேற்கொண்ட மரியாதைகலந்த சகோரதத்துவம் எல்லாமே நிறைந்த ஒரு பெரும் வீரனை இழக்க நேரிடும்போது அவர் கலங்கி நின்றார். திலீபனண்ணா விழிமூடிக்கொண்ட அந்நாளில் தலைவர் அவர்கள் வலிசுமந்துநின்றார். அதனாலேயே திலீபனண்ணாவின் இறுதிநாளான செப்ரெம்பர் இருபத்தியாறாம் தேதியில் அவர் உண்ணாவிரதத்தை கடைப்பிடித்துவந்தார். வேந்தன் விழிசொரிய விடைபெற்றுச்சென்ற எங்கள் அண்ணனே திலீபா நீ பெரும் பேறுபெற்றுவிட்டாய். - கலைமகள்

அதிகாலை.......!!

மின்சாரம் துண்டித்தது. மேடையில் மெழுகுவர்த்தி ஏற்றப்படுகிறது. காற்றில் அணைந்தது அது. பின்னர் ஏற்ற முடியவில்லை. இருட்டில் கழிகிறது நேரம். மின்சாரம் வந்துவிட்டது.....!!

திலீபன் உடலை இரண்டு மூன்று பேரின் கரங்கள் தொட்டுப்பார்க்கிறது. உடம்பு ஈரமாய் இருக்கிறது. குளிரத் தொடங்கியதாய் உணர்கிறார்கள்......!!

முந்தைய இரவில் தான் படுத்திருந்த கட்டில் மாற்றப்பட்டது. மூச்சுவிடுவது லேசாய் உணரப்பட்டாலும் கையும் காலும் அதிகமாய் ஆடியது. அதுவரை படுத்திருந்தது சிறிய கட்டில் என்பதால் பெரிய கட்டிலுக்கு மாற்றினார்கள். அப்போதுதான் திலீபன் உடலில் இருந்து லேசாய் சிறுநீர் வெளியேறி இருந்தது. உடையையும் மாற்றினார்கள். உடை மாற்றிக் கொள்வதை ஆடம்பரம் என்று நினைப்பவன் அவன். அதைத்தடுக்கும் சக்தியை 24 மணி நேரத்துக்கு முன்பே இழந்துவிட்டான்..........!!

1 கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
2 ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்க மாட்டேன்
3 மருத்துவப் பரிசோதனை செய்யக்கூடாது.
4 நான் உணர்வு இழந்தபிறகும் வாயில் தண்ணீர் ஊற்றக்கூடாது
5 இறக்கும் வரை எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக்கூடாது

- தனது நண்பர்களிடம் மறைமுகமாக திலீபன் வாங்கிய சத்தியங்கள்.அடுத்தவர்களுக்காக அல்ல தனக்கு உண்மையாக இருக்க நினைத்தவன்.......!!
அந்தப் பன்னிரெண்டு நாளில் மூன்று முறை மக்களிடம் பேசினார். "நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்." - திரும்பத் திரும்ப இதையே சொன்னார்.
அவர் விரும்பிக் கேட்கும் கவிதையை திரும்பத்திரும்ப வாசித்தார்கள்:

ஓ! மரணித்த வீரனே! - உன்
ஆயுதங்களை எனக்குத் தா......!!
உன்
சீருடைகளை எனக்குத் தா........!!
உன்
பாதணிகளை எனக்குத் தா........!!
ஓ! மரணித்த வீரனே!

- 25ம் தேதி இந்தப் பாடல் பாடப்பட்டபோது கேட்கும் நிலையில் திலீபன் உடல்நிலை இல்லை........!!

26ம் தேதி காலை 10 மணி 48 நிமிடம் உடலில் உயிரே இல்லை.

-தமிழ் ஈழத்துக்காக 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து செப்டம்பர் 26 / 1987-ல் தன் உயிரைத் துறந்தார் திலீபன்........!!

லங்காசிறி

திலீபன் நினைவுகள் - போதைப்பொருள் பாவனையார்களுக்கு அர்ப்பணம்...

மக்களின் நல்வாழ்விற்காகவும், அவர்களின் மேன்மைக்காகவும், உரிமைக்காகவும், தண்ணீர், வெந்நீர்கூட அருந்தாது இருபத்தி மூன்று வயதேயான திலீபன் தன்னுயிர் ஈந்து இருபத்தொன்பது வருடங்களாகிவிட்டன. திலீபன் தன்னுயிரீந்த அந்த மண்ணில் இன்று தமிழ் இளைஞர்கள் குடிவெறிக்கு உள்ளாகி போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள் என்ற செய்தியானது பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.

திலீபனைப் பற்றிய நினைவுகள் இத்தகைய இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் என்று நம்புவோமாக. "அவனை சாகவிட விரும்பும் ஒவ்வொருவரும் அறிக...

அவனது பசி வலியது. அவனது தாகமும் வலியது. ஆனால் அவற்றிலும் வலியது அவனது சனங்களின் கோபம்..." என்று திலீபன் சாகும்வரையான உண்ணாவிரதம் இருந்து கொண்டிருந்த போது அவரது நண்பன் ம.நிலாந்தனால் எழுதி வெளியிடப்பட்ட கவிதை அடிகளே இவை. திலீபனை உண்ணாவிரதம் இருக்க அமர்த்தியவர்களில் ஒருவரான கவிஞர் காசி ஆனந்தன் அந்த உண்ணாவிரத மேடையில் பாடிய கவிதை அடி பின்வருமாறு அமைந்தது,

"திலீபன் அழைப்பது சாவையா? இந்த சின்னவயதில் இது தேவையா?" திலீபன் எனது அரசியல் மாணவன். பிள்ளையைப் பற்றி தாய் - தந்தையர் புரிந்திருப்பதைவிடவும் அந்தப் பிள்ளையைப் பற்றி ஓர் ஆசிரியன் புரிந்திருக்கக்கூடியது அதிகம்.

ஆதலால் திலீபனைப் பற்றி நான் எழுதக்கூடிய குறிப்பு ஒருபுறம் இரத்தமும், தசையானதாகவும் மறுபுறம் அறிவியல் பரிமாணங் கொண்டதாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். திலீபனது சொந்தப் பெயர் பார்த்தீபன். எனக்குப் பல புனைபெயர்கள் உண்டு. அவற்றில் ஒன்றான "திலீபன்" என்ற பெயரையே தனக்கான புனைபெயராக சூடிக் கொண்டான்.

திலீபன் என்ற புனைபெயரை நான் உணர்வுபூர்வமாக எனக்கு தேர்ந்தெடுக்கவில்லை. என்மீது அன்புள்ள ஒருவராக பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி நா. சுப்பிரமணிய ஐயர் விளங்கினார். எனது வெளியீடுகளையோ கட்டுரைகளையோ புனைபெயர்களில் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு இருந்தது. இந்த வகையில் காலத்திற்குக் காலம் நான் பல புனைபெயர்களில் எழுதுவது வழக்கம். அந்த வகையில் எனக்கு ஒரு புனைபெயர் தேவைப்பட்ட தருணத்தில் சுப்பிரமணிய ஐயாவிடம் எனக்கு ஒரு புனைபெயர் சொல்லுமாறு கேட்டேன் அவர் முன்பின் யோசிக்காமல் இயல்பாகவே திலீபன் என்றார்.

Like what you read?
{{global.chaps[1].like_count}} {{global.chaps[1].like_text}}

ஈழத்தமிழரின் போர்க்கால இலக்கியம்

தியாகு

ஈழத்தமிழரின் போர்க்கால இலக்கியம். உங்கள் குரல்: தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர், (தொகுப்பாசிரியர்: செ.சீனி நைனா முகம்மது, ஆசிரியர் உங்கள் குரல்) ஜனவரி 2007, ப. 269-284. (உங்கள் குரல், அறை எண் 2, முதல் மாடி, 22, சைனா சித்திரீட்டு, 10200, புலாவ் பினாங்கு, மலேசியா).

என்.செல்வராஜா,
நூலகவியலாளர், ஐக்கிய இராச்சியம்

1948 இல் இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் தமிழ் பேசும் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள் படிப்படியாகத் தீவிரமடைந்து வந்தது. தமிழரின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் சென்ற தமிழ் அரசியல்வாதிகள் சாத்விகப் போராட்டங்களின் வழியாக இந்த அடக்குமுறைகளுக்குத் தீர்வுகாண முயன்று தோல்வி கண்டமை இன்று வரலாறாகி விட்டது. இலங்கையில் தமிழரின் விடுதலைப் போராட்டம் சாத்வீகப் போராட்ட நிலையிலிருந்து ஆயுதப் போராட்டமுறைக்குப் பரிணாம வளர்ச்சி பெற்ற எழுபதுகளின் இறுதிப்பகுதிகளிலேயே போரியல் சார்ந்த நூல்கள் ஆங்காங்கே வெளிவர ஆரம்பித்து விட்டன.

1974ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு இறுதி நாளில் பதினொரு அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்ப்பலியுடன் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கெதிராக விடுத்த வெளிப்படையான அச்சுறுத்தலானது, கல்வித்துறையின் திட்டமிட்ட தரப்படுத்தல்களால் எதிர்காலத்தையே இழந்துநின்ற தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தின்பால் தள்ளியது. தொடர்ந்து சிங்கள அரசியல்வாதிகளால் 1977, 1983 ஆண்டுகளில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனக்கலவர வன்முறைகளும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான அவசியத்தையும் தனி நாடு ஒன்றிற்கான தேவையையும் வலியுறுத்தின.

1981இல் யாழ்ப்பாண மண்ணில் யாழ்ப்பாணப் பொது நூலகம், ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகிய தமிழரின் அறிவியல், ஊடகவியல் நிறுவனங்களை சிங்கள அரசின் கூலிப்படைகளால் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட சம்பவமானது, அதுவரை காலமும் கொரில்லாப் போராட்டமுறைகளை இளைஞர்களின் வன்முறைப் போராட்டவடிவமாகக் கருதி வந்த புத்திஜீவிகளையும் விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்த்தது.

அரசின் பாரிய கெடுபிடிகளுக்கு மத்தியில் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய பிரசுரங்களை தாயக மண்ணில் வெளிப்படையாக அச்சிட முடியாத நிலை ஆரம்பத்தில் காணப்பட்டது. தமிழ்ப் பிரதேசங்களில் இயங்கிய தமிழரின் அச்சகங்கள் எவையும் பகிரங்கமாக இப்பிரசுரங்களை தாயக மண்ணில் அச்சிட முன்வரவில்லை. அச்சகங்கள் அனைத்தும் அரசின் காவல்துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. இனவிடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த துணிச்சலுடன் முன்வந்த பல ஈழத்துப் படைப்பாளிகளும் அந்நாட்களில் புனைபெயரினுள் மறைந்திருந்தே இத்தகைய இலக்கியங்களைப் படைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. ஆரம்பகால விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்;டிருந்த பல்வேறு போராட்ட அமைப்புக்களும் தமது தளங்களை தமிழகத்திலும் கொண்டியங்கியதால் அக்காலகட்ட வெளியீடுகள் அதிகளவில் தமிழகத்தில் அச்சிடப்பெற்று, தாயகத்துக்குக் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டன. விடுதலைப் போராளிகளில் படைப்பிலக்கிய ஆர்வம் கொண்டிருந்தவர்களுக்கும் இது நல்ல வாய்ப்பாயிற்று.

ஈழத்தவரின் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாக பல நூல்கள் ஆரம்பகாலத்தில் வெளிவந்திருந்தன. பண்டிதர் க.பொ.இரத்தினம், கவிஞர் காசி ஆனந்தன் போன்றேரின் விடுதலை உணர்ச்சிமிக்க படைப்புகளை சுதந்திரன், தீப்பொறி போன்ற அரசியல் ஏடுகள் எழுபதுகளில் தாங்கி வந்தன. தனி ஆட்சி என்ற நூல் கா.பொ.இரத்தினம் அவர்களால் எழுதப்பெற்று, யாழ்ப்பாணத்திலிருந்து ஒக்டோபர் 1972 இல் வெளிவந்திருந்தது. பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள் இலங்கை அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையில் 1970-71 ஆண்டுக் காலப்பகுதியில் ஆற்றிய உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருந்தன.

ஈழத்தவரின் போராட்ட வரலாற்றுடன் தொடர்புபட்ட முக்கியமானதொரு நூல் லங்காராணி என்பதாகும். அருளர் எழுதி சென்னை கனல் வெளியீடாக டிசம்பர், 1978 இல் 256 பக்கங்களில் இந்த வரலாற்று முக்கியத்துவமான நூல் வெளிவந்திருந்தது. இதன் இரண்டாவது பதிப்பு, யாழ்ப்பாணத்திலிருந்து ஈழப்புரட்சி அமைப்பினரால் (ஈரோஸ்) 1988 இல் வெளியிடப்பட்டிருந்தது. 1977 ஆகஸ்ட் இலங்கை இனக்கலவரத்தின் போது கொழும்பிலிருந்து ஈழத்தமிழர்களை அகதிகளாக ஏற்றி, வடபுலத்திற்குக் கொண்டு வந்த கப்பலின் பெயர் லங்காராணி. லங்காராணியின் கடற்பிரயாணத்தின் பின்னணியில் அதன் பிரயாணிகளின் உணர்வலைகளின் ஊடாக ஈழத்து இனப்பிரச்சினையின் பூதாகாரத்தன்மை யையும் விடுதலைப் போராட்டத்தின் தேவையையும் அழகாகச் சித்திரிக்கும் நாவல்; இதுவாகும். விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக இளைஞர்களை ஈடுபடத் தூண்டிய நூலாக இந்நூல் கருதப்படுகின்றது.

ஈழப் போராட்டம் பல்வேறு இயக்கங்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட எண்பதுகளின் ஆரம்பப் பகுதியில் புதியதோர் உலகம் என்ற நாவல் கோவிந்தன் என்ற போராளியால் எழுதப்பட்டு சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. வெளியீட்டாளர் விபரமோ, அச்சக விபரமோ இந்நூலில் குறிப்பிடப்படவில்லை. மே 1985 இல் 365 பக்கங்களில் முதற்பதிப்பு வெளிவந்தது. இரண்டாவது பதிப்பு, கோவை, விடியல் பதிப்பகத்தினால் உப்பிலிப்பாளையத்திலிருந்து ஏப்ரல் 1997இல் மாணவர் மறுதோன்றி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்தது. விடுதலைப் போராளியான இந்நூலாசிரியர் இந்நூலுக்கான முன்னுரையில் குறிப்பிட்ட சில வாசகங்கள் நூலின் உள்ளடக்கத்தை தெளிவாக்குகின்றது. "பெப்ரவரி 15, 1985 இல் நான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பில் இருந்து வெளியேறிய தோழர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். நாம் வெளியேறிய பின்பு எம்மை அழிப்பதற்காகத் தேடிய அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டு இரு மாதங்கள் தலைமறைவாக இருந்தோம். அக்காலத்திலேயே இந்நாவல் படைக்கப்பட்டது. இந்நாவல் தனியொரு மனிதனின் படைப்பல்ல. பல தோழர்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்புடன் உருவான கூட்டுப்படைப்பு. தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு வருடகாலமாக நடைபெற்ற உண்மைச் சம்பவங்களிலிருந்தே இந்நாவல் உருப்பெற்றுள்ளது." இந்நாவலைப் படைத்த கோவிந்தன் பின்னர் இனந்தெரியாதோரினால் கொல்லப்பட்டார்.

முறிந்த பனை என்ற மற்றொரு நூலும் ஈழப்போராட்டத்தின் பின்புலத்தில் நூலாசிரியரை படுகொலைக்குள்ளாக்கிய மற்றொரு நூலாகும். ராஜினி திரணகம, ராஜன் ஹ_ல், தயா சோமசுந்தரம், கே.ஸ்ரீதரன் ஆகிய நால்வர் இணைந்து இவ்வாவணத்தைத் தொகுத்திருந்தார்கள். யாழ்ப்பாணம், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற அமைப்பு இந்நூலை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டிருந்தது. 1வது பதிப்பு, 1996 இல் வெளிவந்திருந்தது. 576 பக்கங்கள் கொண்டதாக புகைப்படங்கள் சகிதம் வெளியான இந்நூல் இரு பகுதிகளாக அமைந்திருந்தது. இந்நூலின் முதற்பாகம் 1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தமும் இந்தியப்படையின் வருகையும் நிகழ்ந்த காலகட்டத்தில் நின்று ஈழத்து இனப்பிரச்சினையின் ஒரு பரிமாணத்தை-ஈழத்தமிழர் போராட்டத்தின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் நோக்கில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கமாகவும், இரண்டாம் பகுதி அக்காலகட்டத்தில் இந்தியப்படையினரின் தாக்குதல் பற்றிய பல்வேறு புலனாய்வு அறிக்கைகளும் ஆய்வுகளும் கொண்டதாகவும் அமைந்துள்ளது. The Broken Palmyrah என்ற தலைப்பில் இதன் மூல நூல் ஆங்கிலத்தில் வெளியான சிறிது காலத்தில் இந்நூலின் முக்கிய பங்காளியான ராஜினி திரணகம அவர்கள் யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

எண்பதுகளில் வெளியான பல போராட்ட அறிவியல் நூல்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே விளைநிலமாக இருந்துள்ளது என்றால் மிகையாகாது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சிக்கழகம் என்ற மாணவர் அமைப்பு பல சிறுநூல்களை வெளியிட்டு அரசியலறிவை மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் ஜனரஞ்சகமாகப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

தான்பிரீன்-தொடரும் பயணம் என்ற நூல் ப.ராமஸ்வாமி என்ற புனைபெயரில் எழுதப்பெற்று மறுமலர்ச்சிக் கழகத்தினால் 1985இல் வெளியிடப்பட்டது. அயர்லாந்து விடுதலைப் போராட்டம் பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்த்து 750 ஆண்டுகளாகத் தொடர்கின்றது. 1916-1948 காலப்பகுதியில் சிறப்பினைப்பெற்ற தலைவர்கள் ஆர்தர் கிரிபித், மைக்கல் கொலின்ஸ், டி வலெரா பொன்றோருக்கு இணையாகக் குறிப்பிடத்தகுந்த ஒரு போராளியான தான்பிரீன் அவர்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாறே இந்நூலாகும்.

தெலுங்கானா போராட்டம் என்ற மற்றொரு நூலும் மறுமலர்ச்சிக் கழகத்தின் முக்கிய நூலாகும். சுகந்தம் வெளியீடாக 1986இல் 60 பக்கம் கொண்டதாக வெளிவந்திருந்தது. இந்நூல் தெலுங்கானா ஹைதராபாத் சமஸ்தானத்தி;ன் ஒரு பகுதியாக இருந்த காலகட்டத்தில் (இன்று அது ஆந்திரப்பிரதேசத்தின் ஒரு பகுதியாகும்) நடைபெற்ற நிலவுடைமைக்கு எதிரானதோர் போராட்டத்தின் வரலாற்றை விளக்குவதாக அமைந்திருந்தது.

அரசியல் விழிப்புணர்வினை ஒரு நீண்டகாலப் போராட்டத்துக்குத் தயாராகும் ஈழத்தமிழ் மக்களுக்கு வழங்குவதென்பது மிக முக்கியமான போராட்ட முன்னெடுப்பாக அந்நாட்களில் கருதப்பட்டது. அரசியல், கொள்கை பரப்பு நூல்களாக பல நூல்கள் அவ்வேளையில் வெளியிடப்பட்டன. அரச பாதுகாப்புப்படையினரின் கழுகுக் கண்களிலிருந்து தப்பி, மலிவு விலையிலும், இலவச வெளியீடுகளாகவும் இவை மக்கள் மத்தியில் பரவலாக விநியோகிக்கப்பட்டன.

சோசலிசத் தமிழீழத்தை நோக்கி என்ற நூல் இவ்வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை பரப்பு, வெளியீட்டுப் பிரிவினால் மாசி 1980இல் தமிழ்நாட்டிலிருந்து அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது. இரண்டு பகுதிகள் அடங்கியுள்ள இந்நூலின் முதலாம் பாகத்தில், சுயநிர்ணய உரிமையும், தனிநாட்டுக் கோரிக்கையும் என்ற தலைப்பில் இலங்கையின் மார்க்சியவாதிகளின் குழம்பிய நிலையும், சுயநிர்ணய உரிமையும் பிரிந்துசெல்லும் உரிமையும், தனிநாட்டுக் கோரிக்கையும் பாட்டாளிவர்க்க ஒருமைப்பாடும், விடுதலைப் புலிகளும் வர்க்கப் போராட்டமும், தனித்தமிழ் ஈழம் சாத்தியமாகுமா ஆகிய விடயங்கள் ஆய்வுக்குள்ளாகியுள்ளன. இரண்டாம் பாகத்தில், சிங்கள இளைஞரின் ஆயுதக் கிளர்ச்சி என்ற தலைப்பில் 1971 ஏப்ரலில் இடம்பெற்ற ஜனதா விமுக்தி பெரமுன என்ற துஏP இயக்கத்தின் போராட்டம் தோல்வியில் முடிந்தமை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியலும் இராணுவமும் என்ற நூலும் இந்த வகையில் குறிப்பிடத்தகுந்ததாகும். ஆசிரியர் விபரம் இல்லாத இந்நூல் தீப்பொறி வெளியீடாக மார்கழி 1985.இல் வெளிவந்திருந்தது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல்தன்மை, பொதுமக்கள், விடுதலை இயக்கங்கள் மத்தியிலுள்ள போராட்டம், இராணுவம் பற்றிய தவறான கருத்துக்களின் தன்மை, அவற்றால் விடுதலைப் போராட்டத்திலே ஏற்பட்டிருந்த மோசமான பின்னடைவுகள் போன்றவற்றை இச்சிறுநூல் ஆராய முற்படுகின்றது. தோழர் சந்ததியார் (வசந்தன்) நினைவு வெளியீடாக வெளியிடப்பட்ட தீப்பொறி வெளியீடு என்பதைத்தவிர வேறு எவ்வித பிரசுரத்தகவல்களும் அக்காலகட்டத்து அரசியல் நெருக்கடிகளின் காரணமாக நூலில் குறிப்பிடப்படவில்லை.

ஒன்றிணைந்து போராடுவோம் என்ற நூல் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவினால் மே 1985 இல் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கை அரசு, இஸ்ரவேலிய மொஸாட் அமைப்புடன் இணைந்து தமிழ்-முஸ்லீம் மக்களிடையே பெரும் மோதலைத் திட்டமிட்டு ஏற்படுத்தியது. அவ்வேளையில் இவ்விரு இனங்களுக்குமிடையே ஒற்றுமையைப் பேணும் வகையில் ஈழப் போரியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையானதொரு காலகட்டத்தில் இச்சிறுநூல் பிரசுரமானது.

சோசலிசத் தத்துவமும் கெரில்லா யுத்தமும் என்ற மற்றொரு நூலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார வெளியீட்டு வாரியத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. இதன் 2வது பதிப்பு, டிசம்பர் 1984இல் 92 பக்கங்களில் வெளியானது. செ.குவேரா எழுதிய "கெரில்லாப் போராட்டத்தின் சாராம்சம்", ரெஜி டெப்ரே எழுதிய "புரட்சியில் புரட்சி" என்ற கட்டுரையின் சில பகுதிகள், மாவோ சே துங் எழுதிய "கெரில்லா போர்முறை", அமில்கார் கப்ரால் எழுதிய "தேசிய விடுதலையும் சமூக புரட்சியும்", "மக்கள் மத்தியில் கெரில்லாக்கள்" ஆகிய நான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இதுவாகும். விடுதலைப் போராளிகளின் அரசியல் அறிவினை விருத்திசெய்யும் வகையில் இத்தகைய தேர்ந்த படைப்புகள் பல சிறுநூலுருவில் அக்காலத்தில் வெளிவந்தன.

தமிழ்த் தேசியமும் சமுதாயக் கொந்தளிப்பும். என்ற தலைப்பில் கா.சிவத்தம்பி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையொன்று சென்னையிலிருந்து ஈரோஸ் ஆவணக்காப்பக வெளியீடாக பெப்ரவரி 1986இல் வெளியிடப்பட்டிருந்தது. 1986 ஜனவரி 2ம் திகதி முதல் 8ம் திகதிவரை, ||ஈழமுரசு|| நாளேட்டில் தொடர்கட்டுரையாக வெளிவந்த இவ்வுரை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இது 31.12.1985இல் யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரி மண்டபத்தில் பேராசிரியர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய ||ஹண்டி பேரின்பநாயகம் நினைவுப் பேருரை||யின் தமிழாக்கமாகும்.

ஈழப்போராட்டத்தின் எழுச்சிக்கு கட்டியம்கூறும் வகையில் எம்மவரின் படைப்பிலக்கியங்களும் அந்நாளில் வீறுடன் எழுந்தன. அவை இன்றுவரை தொடர்ந்தவண்ணம் உள்ளன. தாயகத்தில் போரிலக்கியமாகப் படைக்கப்பட்ட பல கவிதை நூல்களை அடியொற்றிப் பின்னாளில் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலும் பரணிபாடுதலாக அது தொடரச் செய்தது.

மரணம் என்ற கவிதைத் தொகுதி செழியன் என்பவரால் படைக்கப்பெற்று சென்னை 94: சிவா பதிப்பகத்தினால் சூளைமேட்டில் அச்சிடப்பெற்று 40 பக்கங்களில் வெளியாகியிருந்தது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால கட்டத்தில் வெளியான இந்த நூலின் முன்னுரையில் "தினமும் துப்பாக்கி வேட்டுக்களும் உயிரற்ற உடல்களும் எரிகின்ற மணமும் கொண்ட தேசத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அழகிய அந்திக் காட்சிகளை, பௌர்ணமி நிலாவைப்பற்றி எண்ணி எங்களால் எழுத முடியவில்லை. சிறையிடப்பட்ட எங்கள் இரவுகளை, அதிகாலைப் பொழுதுகளை, முட்களை ஏந்தும் பூக்களைப் பற்றியே எழுதமுடிகிறது." என்று குறிப்பிட்டிருந்தார். இதுவே ஈழத்தவரின் போர்க்கால கவிதை இலக்கியங்களின் அடிநாதமாக அமைந்திருந்தது.

ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை என்ற தொகுப்பு செழியனின் மற்றொரு பிற்காலப் படைப்பாகும். கொழும்பு மூன்றாவது மனிதன் வெளியீடாக, ஆகஸ்ட் 2002 இல் இது வெளிவந்திருந்தது. தேசிய விடுதலைப்போராட்ட இலக்கியத்தில் முன்னோடியானவையாகவும் பல தளங்களில் முதன்மையானவையாகவும் அமைந்த கவிதைகளில் செழியனின் கவிதைகளும் அடங்கும். அனுபவத்தின் ஆழம், உணர்வின் செறிவு, கடப்பாட்டின் தீவிரம் என்பன அவரது கவிதைகளின் அடிநாதமாக அமைந்துள்ளன.

மரணத்துள் வாழ்வோம் என்ற பெயரில் உ.சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் ஆகிய நால்வரும் தொகுத்து ஒரு போரியல் கவிதைத் தொகுதியை வெளியிட்டிருந்தார்கள். முதலில் யாழ்ப்பாணம் தமிழியல் வெளியீடாக 1985 இலும் பின்னர் கோவை விடியல் பதிப்பகத்தின் வாயிலாக உப்பிலிபாளையத்திலிருந்து 2வது பதிப்பாக டிசம்பர் 1996 இலும் இந்த நூல் 170 பக்கங்களில் வெளிவந்திருந்தது. ஈழத்தின் 31 இளம் கவிஞர்களின் 82 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். சமகால ஈழத்து இனப் பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட இக் கவிதைத் தொகுப்பில் மூன்று பெண் கவிஞர்களின் பெண்நிலைப்பட்ட அநுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வந்துள்ளமையும் சிறப்பம்சமாகும்.

இந்நூலின் தொகுப்பாளர்களில் ஒருவரான உருத்திரமூர்த்தி சேரன், ஈழத்தின் புகழ்பூத்த முன்னோடிக் கவிஞரான "மஹாகவி" (அமரர் து.உருத்திரமூர்த்தி) அவர்களின் மகனாவார். சேரன் ஈழத்தின் போர்க்கால படைப்பாளிகளுள் குறிப்பிடத்தகுந்தவர். இரண்டாவது சூரிய உதயம் என்ற சேரனின் முதலாவது கவிதைத் தொகுப்பு சென்னை பொதுமை வெளியீடாக ஜுன் 1983 இல் வெளிவந்தது. சேரனின் மூன்று நெடுங்கவிதைகளும் ஏழு சிறுகவிதைகளும் ஒரு பாடலும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. 1978-82 காலப்பகுதியில் சிங்களப் பேரினவாதத்தால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும் சிறுபான்மையினத்தவர்களின் உண்மையான-வாழ்ந்து பெற்ற-அனுபவம் இக்கவிதைகளில் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டிருந்தது. யமன் என்ற இவரது மற்றொரு கவிதைத் தொகுப்பு, இவரது சொந்தமண்ணான அளவெட்டியிலிருந்து படைப்பாளிகள் வட்டம் வெளியீடாக 1984 இல் யாழ்ப்பாணம் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியாகியது. இக்கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் ஜுலை 1983க்குப் பிறகு எழுதப்பட்டவை. ஈழத்தமிழரின் பல்வேறு இன்னல்களை உணர்வுகலந்து சொல்லிச் செல்பவை. கானல் வரி என்ற இவரது கவிதைத் தொகுப்பும் சென்னை, பொன்னி வெளியீடாக சென்னை இராசகிளி பிரின்டர்ஸ் வாயிலாக அச்சிடப்பெற்றிருந்தது. 1975 முதல் 1981 வரையிலான காலப்பகுதியில் சேரன் எழுதிய கவிதைகளில் தேர்ந்தெடுத்த 28 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். பின்னாளில் இவர் புலம்பெயர்ந்து கனடாவில் புலம்பெயர்ந்து வாழத் தொடங்கிய பின்னர் எலும்புக்கூடுகளின் ஊர்வலம் என்ற கவிதைத் தொகுப்பினை கனடா, தேடல் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார். தாயக தேசத்தின் அன்றாட வாழ்வில் ஏற்பட்ட அவலங்களையும் அலங்கோல அரசியலையும் தாளலயங்;களைக் கடந்து வரலாறு ஆக்கும் முயற்சியாக எலும்புக்கூடுகளின் ஊர்வலம் அமைந்திருந்தது. காலம் காலமாக நின்று எமது துயரங்களையும் சொல்லில் மாளாத இழப்புக்களையும் மரணத்துள் வாழ்ந்த கதைகளையும் சொல்லி உலகின் மனச்சாட்சியை அதிரவைத்துக் கொண்டிருக்கும் கவிதைகள் இவை. இதைத் தொடர்ந்து நீ இப்பொழுது இறங்கும் ஆறு என்ற தலைப்பில் சேரனின் 100 கவிதைகளைக் கொண்ட தொகுப்பொன்று ஓகஸ்ட் 2000 இலும் மீண்டும் கடலுக்கு என்ற தலைப்பில் மற்றொரு கவிதைத் தொகுப்பு டிசம்பர் 2004 இலும் வெளியாகியிருந்தன. அவருடைய கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசைவியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவதுதான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடிகளை, ஒடுக்குமுறைகளை, சேரன் கவிதைகளாகத் தந்தபோது அது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் இலக்கியமாயிற்று. மறுபுறத்தில் சமூக விமர்சனமாகவும் அது விரிந்தபோது, சமூகம் சார்ந்த பல அரசியல், அறவியல், சமூகவியல் விவாதங்களுக்கு இட்டுச்சென்றது. அந்த வகையில் கவிதையின் இன்னுமொரு முக்கியமான பரிமாணத்தை அவருடைய கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. கனடா யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்று அங்கு பேராசிரியராகப் பணிபுரியும் சேரனின் கவிதைத் துறைப் பங்களிப்பு ஈழத்தின் போரியல் இலக்கியத்தின் வரலாற்றுப் பதிவாகின்றது.

சேரனைப் போன்றே ஈழத்தின் போர்க்கால இலக்கியத்துக்குச் செழுமை சேர்த்த மற்றொரு படைப்பாளி, கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்பவராவார். தற்போது புவம்பெயர்ந்த நோர்வேயில் வாழும் இவரது ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற கவிதைத் தொகுதி சென்னை காந்தளகத்தின் வாயிலாக 1986இல் வெளிவந்தது. இச்சிறு காவியம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் கோரத்தையும் கொடுமையையும் மட்டுமல்லாது தீரத்தையும் தியாகத்தையும் சித்திரிக்கின்றது. இதே ஆண்டு சூரியனோடு பேசுதல் என்ற மற்றொரு தொகுதியை வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்கள் கோவை, யாழ். பதிப்பகத்தின வாயிலாக பெப்ரவரி 1986 இல் வெளியிட்டார். இதன் இரண்டாவது பதிப்பு ஜுலை 1987 இல் மைலாப்பூர் மிதிலா அச்சகத்தினால் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கான வெளியீட்டுரையில் துரை மடங்கன் அவர்கள் "போர்க்களமாய் மாறிப்போன ஈழமண்ணிலிருந்து முகிழ்த்த இவரது இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைப் பலப்பல பரிமாணங்களுடன் புலனாக்குவதால் இவற்றை மக்களுக்கு வழங்குவதும் கூடப் போராட்டத்துக்குப் புரியும் உதவியே" என்று குறிப்பிட்டிருந்தார்.

நமக்கென்றொரு புல்வெளி என்ற கவிதைத் தொகுதியையும் இவர் சென்னை, க்ரியா வெளியீடாக மார்ச் 1987இல் வெளியிட்டிருந்தார். ஒரு அகதியின் பாடல் என்ற கவிதைத் தொகுதியில் வ.ஐ.ச.ஜெயபாலன் தான் வாழுகின்ற காலத்தின் நெருக்கடியைப் பல்வேறு தளங்களில் அனுபவித்துக் கவிதையாக்கியிருந்தார். அவை போரிலக்கியத்தில் ஒரு அகதியின் குரலாகத் துயரங்களைச் சொல்லி நிற்கின்றது. கனடா: தேடல் பதிப்பகம், ரொரன்ரோவிலிருந்து மார்ச் 1991 இல் இந்நூலை வெளியிட்டிருந்தது. வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைகளின் பெரும்பாலானவற்றைத் தொகுத்து 320 பக்கங்களில் வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைகள்: பெருந்தொகை என்ற பெயரில் சென்னை ஸ்நேகா வெளியீட்டகம் ஒரு பாரிய தொகுதியை ஏப்ரல் 2002இல் வெளியிட்டிருக்கின்றது. நேரடித்தன்மையும் உள்ளுறை உவமமும் ஒருசேரவாய்க்கப்பெற்ற எளிமையான, எனினும் செறிவான மொழிவளம் கொண்ட வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைகளின் பெருந்தொகுப்பு இதுவாகும். ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற இவரது குறுங்காவியம் உள்ளிட்ட பெரும்பான்மையான கவிதைகள் இதில் அடங்கியுள்ளன. ஈழத்தமிழரின் போரியல் வாழ்வின் கணிசமான காலப்பகுதியின் குறுக்குவெட்டுமுகத்தை இக்கவிதைகளில் தரிசிக்க முடிகின்றது.

ஈழத்து போரியல் கவிதை இலக்கியத்தில் காசி ஆனந்தனின் பணி குறிப்பிடத்தகுந்ததாகும். அவரின் பாதிப்பில் இன்றும் பல இளங்கவிஞர்கள் எழுச்சிக் கவிதைகளைப் பாடி வருகின்றார்கள். காசி ஆனந்தனின் ஆரம்பகாலக் கவிதாவரிகள் இன்றைய பல கவிதைகளில் பொது வாசகங்களாக எடுத்தாளப்பட்டுள்ளன. ஈழப்போராட்டத்தின் இலக்கியத் தடத்தை இன்று வழிநடத்திச் செல்பவராக புதுவை இரத்தினதுரை இனங்காணப்படுகின்றார்.

இரத்த புஷ்பங்கள் என்ற கவிதைத் தொகுப்பு புதுவை இரத்தினதுரை அவர்கள் ஆரம்ப காலங்களில் எழுதி கண்டி கலைஞர் பதிப்பகத்தின் வாயிலாக மார்ச் 1980 இல் வெளியிட்ட கவிதைத் தொகுதியாகும். வானம் சிவக்கிறது, ஒரு தோழனின் காதல் கடிதம் என்ற இரு கவிதைத் தொகுதிகளை ஏற்கெனவே தந்த புதுவை இரத்தினதுரையின் மூன்றாவது நூலாக வெளிவந்த 27 கவிதைகளைக்கொண்ட தொகுப்;பு இதுவாகும்.

பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் என்ற புதுவை இரத்தினதுரையின் கவிதைத் தொகுப்பு யாழ்ப்பாணம் நங்கூரம் வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்ளது. பங்குனி 2005இல் 432 பக்கங்களுடன் வெளியான இத்தொகுப்பில், வெளிச்சம் இதழில் கார்த்திகை 1993இல் வெளிவந்த "தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே" என்ற கவிதையில் தொடங்கி, வெளிச்சம் சஞ்சிகையின் மாசி 2005இல் வெளியான "இருந்ததும் இல்லையென்றானதும்" என்ற கவிதை வரை 12 ஆண்டுகளில் கவிஞர் புதுவை இயற்றிய மொத்தம் 155 கவிதைகள் இடம் பிடித்திருக்கின்றன. இந்நூலையும் நூலாசிரியரையும், நூலாசிரியரின் கவித்துவ வளர்ச்சிப்படிநிலைகளையும் கவிஞரின் இலக்கிய வரலாற்றினையும் ஆழமாக அறிமுகம் செய்வதாக அமைந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் 28 பக்கங்கள் கொண்ட விரிவான விமர்சனக் கட்டுரை, இந்நூலுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளது.

வியாசனின் உலைக்களம் புதுவை இரத்தினதுரை அவர்களின் மற்றொரு பரிமாணத்தை வித்தியாசமான ஈழத்துப் போராட்டக்கால இலக்கிய வடிவத்தில் தரிசிக்க வைக்கின்றது. தாயகத்திலிருந்து தமிழ்த்தாய் வெளியீடாக ஜுலை 2003இல் கிளிநொச்சி நிலா பதிப்பகத்தின் வாயிலாக 256 பக்கங்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் வியாசன் என்ற புனைபெயரில் ||விடுதலைப்புலிகள்|| அதிகாரபூர்வ ஏட்டில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். போரியலையும் அது சார்ந்திருக்கும் அரசியலின் ஆழப்பாடுகளையும் சுழியோடி, நுகர்ந்து, மென்று விழுங்கி, அதை அக்கு வேறு ஆணி வேறாகத் தனது பேனாமுனையால் உலைக்களத்தின் மூலம் வெளிக்கொண்டுவரும் முயற்சியாக இது அமைந்துள்ளது. விடுதலைப்புலிகள் ஏட்டில் இக்கவிதைகள் வெளியான போது, விடுதலைப் போரின் அந்தந்தக் காலங்களிலான சமூக அரசியல் நிலைமைகளையும் ஒரு கவிஞனின் அதன் மீதான பார்வையையும் தரிசிக்க வைப்பதாக அமைந்திருந்தன. காலத்தின் பிரதிபிம்பமாக இக்கவிதைகள் விளங்குகின்றன.

ஈழத்தின் கவிதை இலக்கியத்துறையில் நினைவுகொள்ளத்தக்க மற்றொரு கவிஞர் கி.பி.அரவிந்தன் ஆவார். புலம்பெயர்ந்து பிரான்ஸ் தேசத்தில் தற்போது வாழ்கின்ற இவர் ஈழப் போhட்டத்தில் விடுதலைப் போராளியாக இருந்தவர். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன. முத்தான மூன்று படைப்புக்களை தமிழகத்திலிருந்து வெளியீடு செய்தவர் இவர்.

இனி ஒரு வைகறை கி.பி.அரவிந்தன் எழுதிய முதலாவது கவிதைத் தொகுப்பாகும். சென்னை அடையாறிலிருந்து பொன்னி வெளியீடாக மார்ச் 1991இல் சென்னை இராசகிளி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. தனது முகவுரையில் இவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். "இவை எனது குறிப்பேடுகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டவை. எழுத்துக்களினாலான இவ்வுணர்வுகள் கவிதைகளாயிருப்பின் போராளியாயிருந்த ஒருவன் கவிஞனாகின்றான்". முகம்கொள் கி.பி.அரவிந்தனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சென்னை கீதாஞ்சலி வெளியீடாக, நவம்பர் 1992 இல் இந்நூல் வெளிவந்தது. இத் தொகுதியிலுள்ள கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை உள்ளடக்கியவை. யாழ்ப்பாணத்து அனுபவங்கள், தமிழகத்தில் வாழ்ந்த இடைக்காலத்தனுபவங்கள், அகதி வாழ்வின் பாதிப்புக்கள். இக்கவிதைகள் வரலாற்று அனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல, அவ்வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால் பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டு பண்படுத்தப்பட்டு கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன. கனவின் மீதி. இவரது மூன்றாவது கவிதைத் தொகுதியாகும். சென்னை, மடிப்பாக்கம் பொன்னி வெளியீடாக ஆகஸ்ட் 1999 இல் இந்நூல் வெளிவந்தது. "ஒரு நாட்டில் வாழுகின்ற ஓர் இனத்திலுள்ள அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்கு கைவந்துள்ளதென்றே கருதுகின்றேன்" என்று இந்நூலுக்கான முன்னுரையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இத்தொகுப்பில் 31 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்வாழ்வின் நெருக்கடிகள் பற்றி இவை பேசுகின்றன.

ஈழத்தின் போரியல் வரலாற்றுக் காலகட்டத்தில் வெளியான அனைத்துக் கவிதைகளும் போராட்டம் சார்ந்தவையல்ல. போராட்டத்தின் வலிகள், போராளிகளின் வீரதீரங்கள், உடன்பிறப்புக்களின் இழப்புக்கள், வன்மங்கள், உடைமைகளின் அழிப்புக்கள், இடப்பெயர்வின் அவலங்கள், புலம்பெயர்ந்து சென்ற உறவுகளின் பிரிவுத் துயர், மானிடத்தையும் பெண்மையையும் இழிவுபடுத்தும் சித்திரவதை நுணுக்கங்கள் என ஒரு போராட்ட வாழ்வின் பல்வேறு பக்கங்களையும் போரியல் இலக்கியங்கள் தொட்டுச் செல்கின்றன. ஈழத்தமிழரின் தனித்துவமான இலக்கியமாக உலகளாவிய தமிழ் இலக்கியப் படைப்புக்களில், நின்று நிலைத்திருக்கப்போகும் வலிமைபெற்ற போரியல் இலக்;கியத்துக்குக் கதியால் போட்டு நீரூற்றி வளர்த்த ஈழத்துக் கவிஞர்கள் அனைவரையும் இச்சிறு கட்டுரைக்குள் அடக்குவது என்பது இயலாத காரியமாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாக மாதிரிக்கு ஒன்றாகவே இப்படைப்பாளிகளை உதாரணமாக இங்கு காட்டக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் குறிப்பிடத்தகுந்த மேலும் சில படைப்புக்களை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

அந்த விடியலுக்கு என்ற கவிதைத் தொகுப்பினை க.இளங்கோ. சென்னை சூளைமேட்டிலிருந்து சிவா பதிப்பகத்தின் வாயிலாக 1985இல் வெளியிட்டிருந்தார். "தான் பார்த்து-தான் ரசித்து-தான் வெதும்பி-தான் பாடிய சுதந்திர கீதங்கள் ஈழப்போர்முனைக்கு இசையமைக்க வருகின்றது. மக்களே! மக்களே!! என்பதே இந்தக் கவிதைக்குப் பின்னால் கேட்கும் மிருதங்கம். எழுக! எழுக! என்பதே இந்தக் கவிதையோடு இயல்பாகப் பின்னப்பட்ட வயலின் இசை.|| என்று முல்லையூரான் அவர்கள் இந்நூலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மண்ணும் எங்கள் நாட்களும் என்ற கவிதைத் தொகுதி யாழ்ப்பாணம்: தர்க்கீகம் வெளியீடாக வைகாசி 1982இல் வெளிவந்தது. ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களான குறிஞ்சித்தென்னவன், மு.புஷ்பராஜன், வ.ஐ.ச.ஜெயபாலன், சாருமதி, க.ஆதவன், எம்.ஏ.நுஃமான், ஹம்சத்வனி, கவியரசன், புசல்லாவை குறிஞ்சிவளவன், சு.வில்வரத்தினம், சுந்தரன், அ.யேசுராசா, அரு.சிவானந்தன், யோகராணி, ரவீந்திரன், ஆகிய ஈழத்துக் கவிஞர்களின் விடுதலைக்கவிதைகளின் தொகுப்பாக இது அமைந்திருந்தது.

இந்த மழை ஓயாதோ? என்ற கவிதைத் தொகுப்பு கனகரவி (இயற்பெயர்: கனகரத்தினம் இரவீந்திரன்) அவர்களால் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட வெளியீடாக 2001இல் வெளிவந்திருந்தது. சமகால மக்களின் அவலங்களும் அலட்சியங்களும் கவிதைகளாகப் பதிவு செய்யப்படுவது எதிர்கால சந்ததியினருக்கு அவசியமான ஒன்று என்ற அடிப்படையில் இக்கவிதைத் தொகுதி முக்கியத்துவம் பெறுகின்றது. இடப்பெயர்வு, மீள்குடியேற்றம், நாடுவிட்டு ஓடுவோர், குண்டு போடும் அரசு, துப்பாக்கி ஏந்தியோரின் அநியாயச் செயல்கள், மண்ணோடு போராடும் மனிதர்கள், அமைதி விருப்பம், சிறையினில் வாடுவோர் துயரம், பிந்துனுவௌ முகாம் அழிப்பு, காணாமல் போனவர்கள் என்று பல்வேறு சமகால ஈழத்துப் போராட்ட வாழ்வியலை இக்கவிதைகள் படம்பிடிக்கின்றன. ஊடகவியலாளரான கவிஞரின் பாடுபொருள் பரந்துபட்டதாக உள்ளது இத்தொகுதிக்கான சிறப்பம்சமாகும்.

இலக்குத் தெரிகிறது என்ற தொகுதி தூயவன் என்ற விடுதலைப் போராளியின் படைப்பாகும். (இயற்பெயர்: சு.தனேஸ்குமார்). தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப்பிரிவு இத்தொகுப்பினை சித்திரை 1993இல் வெளியிட்டிருந்தது. கவிஞர் தூயவன், ஈழவிடுதலைப்போரில் களத்தில் நின்று போராடும் ஒரு போராளி. விடுதலையை அவாவி நிற்பவர். வாழ்வில் மற்றவரின் கண்களுக்குப் புலப்படாத பக்கங்கள் இவரின் பார்வைக்குக் கிட்டுகின்றன. அவை இங்கு கவிதைகளில் பதிவுக்குள்ளாகியுள்ளன.

அக்கரைக்குப் போன அம்மாவுக்கு என்ற தொகுதி ஹம்சத்வனி என்ற முக்கியமான படைப்பாளியின் கவிதைத் தொகுப்பாகும். சென்னை: தமிழியல் வெளியீடாக ஓகஸ்ட் 1985 இல் இது வெளிவந்தது. நூலாசிரியரின் முன்னுரையில் குறிப்பிடும் வாசகங்களே இந்நூலுக்கான விளக்கத்தைத் தருகின்றது. "தமிழ் ஈழத்தின் மிகப்பயங்கரமான கணங்கள் என்னுள்ளே ஏற்படுத்திய ஆழமான அதிர்வின் பிரதிபலிப்புக்களே எனது கவிதைகள். எனது கிராமங்களும் வீதிகளும் பச்சை வயல்வெளிகளும் ஒரு நாள் சிறைமீட்கப்படும். அந்த மீட்சிக்கு ஒரு உரமாக எனது கவிதைகள் அமையுமாயின் நான் மகிழ்வேன்" என்று தன் ஆதங்கத்தை இந்நூலில் கவிஞர் ஹம்சத்வனி வெளிப்படுத்தியுள்ளார். 1980-1985 ஆண்டுகளுக்கிடைப்பட்ட ஈழத்தமிழரின் துயர்மிகு அவல வாழ்வை இக்கவிதைகள் பதிவு செய்கின்றன.

அனுபவ வலிகள் என்ற தொகுதி இரணையூர் பாலசுதர்சினி அவர்களால் வவுனியா: விண்மணி வெளியீட்டகத்தினூடாக வெளியிடப்பெற்ற கவிதைத் தொகுப்பாகும். இதன் 1வது பதிப்பு, 2004இல் வெளியிடப்பட்டது. வன்னி மண்ணின் இரணையூரிலிருந்து புறப்பட்ட பெண் எழுத்தாளரான பாலசுதர்சனியின் கவிதைகள் இவை. மண் பற்றியும், மனிதர்கள் பற்றியும் இவை பேசுகின்றன. சமாதான சாபங்கள், எழு பெண்ணாய், வெற்றி நிச்சயம், சுதந்திர ஒளி, சீதனம், அகதியாய் எனப் பல்வேறுபட்ட விடயங்களினூடாக பெண்களின் முடக்கி வைக்கப்பட்ட அனுபவ வலிகளைத் தன் கவிதைவரிகளினூடாக வெளிக் கொண்டுவரும் கவிதைத் தொகுதி இது. போரியல் வாழ்வில் ஈழப்பெண்களின் பார்வை இக்கவிதைகளில் முனைப்புப்பெற்றுள்ளன.

ஆனையிறவு என்ற தொகுப்பு 42 கவிஞர்களின் கவிதைகளைக் கொண்டது. வவுனியாவிலிருந்து வெளிச்சம் வெளியீடாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் பண்பாட்டுக் கழகம், நடுவப்பணியகம், ஜுன் 2000 இல் இத்தொகுப்பினை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு இராணுவ முகாம் ஆக்கிரமிப்பு வெற்றியைக் களத்திலேயே நின்று தரிசித்த பாட்டுத் திறத்தோர் எழுதிய கவிதைகள் இவை. ஆனையிறவு மீட்புச் சமர்களில் இதுவரை வீரமரணமடைந்த மாவீரர்களுக்;குக் காணிக்கையாக இக் கவிதைத் தொகுதி வெளிவந்தது.

செம்மணி. என்ற தலைப்பில் வெளியான நூலி;ல் 24 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. வெளிச்சம் வெளியீடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பண்பாட்டுக் கழகத்தின் நடுவப் பணியகம், செப்டெம்பர் 1998இல் இத்தொகுப்பை வெளியிட்டது. யாழ்ப்பாணத்தில் இராணுவ முற்றுகையின் போது கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போனோராக்கப்பட்டு வதையின் பின் புதைக்கப்பட்ட எம் உறவுகளுக்கான கவிதைகள் இவை. 1995இல் ரிவிரச என்ற யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் போரின்பின், தென்மராட்சியிலும்; வடமராட்சியிலும் தஞ்சமடைந்த தமிழ்மக்களை மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கைமூலம் சிறைப்படுத்திச் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றது. அக்காலகட்டத்தில்; சிங்கள இராணுவம் அவர்களை யாருங்காணாமற் பிடித்துச்சென்று படுகொலைசெய்து செம்மணியிற் புதைத்த வஞ்சகச்செயலை அம்பலப்படுத்தும் பதிவுகளாக இவை அமைகின்றன. செம்மணிப் புதைகுழிகள் எம்மக்களிடையே ஏற்படுத்திய கொதிப்புணர்வின் அடையாளமாகவே இக்கவிதைகள் அமைகின்றன.

சிறுகதை, நாவல் இலக்கியத் துறையில் போரியல் பதிவுகள் ஏராளமாக ஈழத்தமிழர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. 1980களிலிருந்து ஈழத்தில் வெளியாகும் சிறுகதைகளில் இதன் பாதிப்பு பெரிதளவில் இருப்பதை அவதானிக்கலாம். குறிப்பாக வன்னி மண்ணிலிருந்து வெளியாகும் படைப்பிலக்கியங்கள் அனைத்திலும் இதன் பாதிப்பு துலக்கமாகத் தெரிகின்றது.

வாசல் ஒவ்வொன்றும் என்ற பெயரில் புதுவை இரத்தினதுரை அவர்கள் கருணாகரன் என்பவருடன் இணைந்து சிறுகதைத் தொகுதியொன்றினையும் வெளியிட்டிருந்தார். கோயம்புத்தூர் விடியல் பதிப்பகம், இந்நூலை டிசம்பர் 2001இல் 160 பக்கங்களில் வெளியிட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் இலக்கிய இதழான வெளிச்சம் சஞ்சிகையில் வெளிவந்த பத்தொன்பது படைப்பாளிகளின் 19 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்வகையில் இது இரண்டாவது தொகுப்பாகவும் அமைகின்றது. இரு தசாப்தங்களைத் தாண்டி நடந்துகொண்டிருக்கும் யுத்தசூழலின் அவலங்கள், அது மனித வாழ்விலும், மனிதவிழுமியங்களிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், நம்பிக்கை, தோல்வி, வெறுப்பு, கோபம் உள்ளிட்ட மனித உணர்வுகளின் ஆதிக்கம், அவற்றில் தொழிற்படும் தன்மை என்பன பற்றிய இயல்பான வெளிப்பாடுகளாக அமைந்துள்ள கதைகள் இவை.

வெளிச்சம் சிறுகதைகள் 1. என்ற பெயரில் வெளிச்சம் ஆசிரியர் குழுவினரால் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு நல்லதொரு உதாரணமாகின்றது. விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் இத்தொகுப்பினை மேற்கொண்டிருந்தது. மார்ச் 1996 இல் வெளியான இந்நூலில் வெளிச்சம் சஞ்சிகையில் வெளிவந்த தேர்ந்த சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 15 சிறுகதைகள் உள்ளன. தாயக விடுதலைப் போரின் பல்வேறு பரிணாமங்கள், இலக்கிய வடிவில் பிரதிபலிக்கின்றன. சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் அரசியல் எழுச்சியையும், மன உணர்வுகளையும் போராட்டக் கால அனுபவங்களையும் இக்கதைகள் பேசுகின்றன.

அதிர்ச்சி நோய் எமக்கல்ல என்ற உருவகக் கதைத் தொகுதி நாக.பத்மநாதன் அவர்களால் யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் வெளியீடாக புரட்டாதி 1993இல் வெளிவந்திருந்தது. மண்பற்றும், இன விடுதலையும்-இதற்கான தியாகங்களும் அலை வீசி நிற்கும் 34 உருவகக் கதைகளின் தொகுப்பு இதுவாகும்.

அம்மாளைக் கும்பிடுறானுகள் சிறுகதைத் தொகுதி, இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கால உண்மைக் கதைகளைக் கொண்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப் பிரிவு ஓகஸ்ட் 1994இல் முதற் பதிப்பையும், ஆகஸ்ட் 1997இல் 2வது பதிப்பையும் மேற்கொண்டிருந்தது. இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்புக் காலகட்ட வாழ்க்கையையும், அந்த வாழ்க்கையின் அவலங்களையும் சோகங்களையும் சித்திரிக்கும் படைப்புக்களாக 14 கதைகளும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொடூரத்தினைச் சித்திரிப்பதாக ஒரு கதையும் இத்தொகுதியில் அமைகின்றன. இத்தொகுப்பின் இரண்டாவது பாகமாக வில்லுக்குளத்துப் பறவைகள் என்ற தலைப்பில் மேலும் பல உண்மைக் கதைகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியீட்டுப் பிரிவினால், ஆடி 1995இல் வெளியிடப்பட்டது. இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக் காலகட்டத்தின் உண்மை நிகழ்வுகள் கதைவடிவில் தொகுக்கப்பட்ட இரண்டாம் பகுதியாக இந்நூல் அமைகின்றது. 17 உண்மைக் கதைகளைக் கொண்ட இத்தொகுதியில் இந்திய அமைதிப்படையின் வேட்டைக்குப் பலியான அப்பாவித் தமிழ் மக்களின் கதைகள், போராட்டத்தில் தம்மைப் பலியாக்கிய மக்களின் கதைகள், போராளிகளை நேசித்து அவர்களைக் காப்பாற்றத் துணிவுடனும் சாதுரியத்துடனும் செயற்பட்;ட மக்களின் கதைகள் எனப் பலவாறாகப் பதிவுபெறுகின்றன.

Like what you read?
{{global.chaps[2].like_count}} {{global.chaps[2].like_text}}
Like what you read?
{{global.chaps[3].like_count}} {{global.chaps[3].like_text}}
Like what you read?
{{global.chaps[4].like_count}} {{global.chaps[4].like_text}}
Like what you read?
{{global.chaps[5].like_count}} {{global.chaps[5].like_text}}
Like what you read?
{{global.chaps[6].like_count}} {{global.chaps[6].like_text}}
Like what you read?
{{global.chaps[7].like_count}} {{global.chaps[7].like_text}}

{{user_data.book_status}}

History & Politics | 8 Chapters

Author: TAMIZHDESAN IMAYAKAPPIYAN

Support the author, spread word about the book to continue reading for free.

ARAPPOR AANDAVAN DHILEEPAN-2

Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}

Be the first to comment
Reply To: {{insta_features.post_comments_reply.reply_to_username}}
A-
A+
{{global.swiggy_msg_text}}