134 Views

HEGELUM MARXUM

Educational & Professional | 15 Chapters

Author: Anna. Nagarathinam

134 Views

The philosophy of  Hegel and  Feuerbach are described in this book in a simple way. It is clearly mentioned how the dialectics and materialistic aspects evolved from German philosophy. Although Hegel and Feuerbach made great contributions to the dialectics and materialism respectively, it is only Marx developed a holistic, scientific and dialectical materialist theory that was entangled in Hegel's dialectical idealism and Feuerbach ma....

ஜெர்மானிய வரலாற்றுப் பின்னணி

ஜெர்மானியப் புரட்சி என்பது துப்பாக்கியாலும், மக்கள் திரட்சியாலும் வரப்போவதில்லை, மாறாக, அப்புரட்சி, தத்துவத்தாலும், கருத்துக்களாலும் நடந்தேறும். நம்முடைய காலம், ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் காலம் ஆகும். பிரெஞ்சு புரட்சியின் முடிக்கப்படாத பணிகள், ஜெர்மன் தத்துவத்தால் முடிக்கப்பட வேண்டும் - ஹெகல்

image

ஜெர்மனி

பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஜெர்மனி பொருளாதார ரீதியாகப் பிளவுண்டு மிகவும் பின்னடைந்து இருந்தது. சமூக, பொருளாதாரப் பிற்போக்குத் தனத்தில் உழன்று கொண்டிருந்தது. ஹெகல் வாழ்ந்தக் காலம், ஜெர்மனிக்கு என்று தனியாக ஓர் அரசு இல்லாத காலமாகும். ஜெர்மனி, 1815 வரையிலும் ரோமானியப் பேரரசின் ஒரு பகுதியாக மட்டும் இருந்தது. ரோமானியப் பேரரசு, சிதறுண்டுக் கிடந்த சுமார் 300 பகுதிகளால் இணைக்கப்பட்ட ஒரு பேரரசாகும். அவற்றுக்குள் ஒற்றுமையில்லை. பிராந்தியரீதியில் ஜெர்மனி பல நாடுகளின் ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்தது. வடக்கில் இங்கிலாந்தும், மேற்கில் பிரான்சும், கிழக்கில் ஏகாதிபத்திய ருஷ்யாவும், தெற்கில் ஆஸ்திரிய-ஹங்கேரியும் அதிகார மையங்களாக இருந்தன. இந்த அதிகார மையங்களின் இராணுவங்கள், ஜெர்மனியின் குறுக்கும், நெடுக்குமாகப் பயணித்தவாறு இருந்தன. அப்போது ஜெர்மனிக்கு உதவ யாருமில்லை. 1815 இல் ரோமானியப் பேரரசு முடிவுக்கு வந்த பின்னர், வியன்னா காங்கிரசில் 38 பகுதிகளை உள்ளடக்கிய ஜெர்மானியக் கூட்டரசு உருவாக்கப்பட்டது.

இங்கிலாந்தும், பிரான்சும் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் பெரிய அளவில் ஓர் அறிவியல் மரபைத் தன்னகத்தே கொண்டிருந்தன. ஆனால் ஜெர்மனி அத்தகைய ஓர் அறிவியல் மரபை அப்போது பெற்றிருக்கவில்லை. மேலும் இங்குச் சமூகம், தனிநபர், பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான சிந்தனைகள் வளர்ந்து இருக்கவில்லை. பிரஞ்சு மற்றும் பிரிட்டன் சிந்தனையாளர்கள் அறிவியல் ஆய்வின்மூலம் பிரபஞ்சத்தின் விதிகளைக் கண்டறிய முடியும் என்று கூறினர். இதன்மூலம் பிரபஞ்சத்தில் தனிநபரும், சமூகமும் ஒற்றுமையாக வாழமுடியும் என்றும், மானுடம் விடுதலைப் பெறவியலும் என்றும் நம்பினர். ஆனால் ஜெர்மானியர்கள் இத்தகைய சிந்தனை மரபைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் இவர்கள் வரலாற்றுச் சிந்தனையில் மேம்பட்டவர்களாக இருந்தனர். இவர்களைப் பொருத்தவரை வரலாறு என்பது சமூக நிகழ்வுகளின் தொடர் நிகழ்ச்சி போக்காகும்

18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அறிவொளி இயக்கம் இங்கிலாந்திலும் பிரான்சிலும் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தது. ஆனால் அது ஜெர்மனியில் குறைந்தளவே பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோலப் பிரிட்டன் மற்றும் பிரஞ்சு அறிவொளி இயக்கத்தை ஒப்பிடும்போது ஜெர்மனிய அறிவொளி இயக்கம் பிற்போக்கானதாக இருந்தது. மேற்கத்திய அறிவொளி இயக்கம் மானுட இனத்தை ஆரத் தழுவிக் கொண்டிருந்தது. ஆனால் ஜெர்மானியச் சிந்தனை மரபு மனிதனுக்கான மாண்பை உயர்த்திப் பிடித்தாலும் ஜெர்மானிய ஆன்மாவையே கொண்டாடியது. மேற்கத்திய அறிவொளி இயக்கம் பிரபஞ்சக் கோட்பாட்டில் திளைத்திருக்க, ஜெர்மானிய அறிவொளி இயக்கம், மரபுசார்ந்த தேசியத்திற்கு ஏங்கி நின்றது.

இயற்கை மற்றும் சமூக அறிவியலின் சாதனைகள், மரபு ஜெர்மன் தத்துவத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கு வகித்தன. வேதியியல் மற்றும் இயற்பியல் போன்ற துறைகள் உருவாகத் தொடங்கின, உயிரினம் சார்ந்த ஆய்வு கணிசமான முன்னேற்றத்தை அடைந்தது. கணிதத்தில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகள், இயற்கையின் நிகழ்முறைகளைத் துல்லியமான அளவில் புரிந்து கொள்ள உதவின. சுற்றுப்புறச் சூழலால் உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியை நிலைப்படுத்துவதற்கான லாமர்க்கின் கோட்பாடு - அதாவது வானியல், புவியியல் மற்றும் கருவியல் கோட்பாடுகள், மனித சமூகம் குறித்தக் கோட்பாடுகள் - முன்னணிக்கு வந்தன. இதன் மூலம் தவிர்க்க முடியாத வகையில், வளர்ச்சிப் பற்றிய கருத்தும், எதார்த்தத்தைப் பற்றிய அறிதல் முறையும் உருவாயின.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜெர்மனி, அதன் பொருளாதார மற்றும் அரசியல் பின்தங்கிய தன்மையைக் கடந்து, ஒரு முதலாளித்துவ புரட்சியை நெருங்கியது; பிரான்சில் இருந்ததைப் போலவே, ஜெர்மன் சமூக பொருளாதார புரட்சியானது, ஒரு தத்துவ அடிப்படையை உருவாக்கியது. இதன் வரலாற்றுப் பின்னணியுடன், இதை இனி விளக்குவோம்.

Like what you read?
{{global.chaps[0].like_count}} {{global.chaps[0].like_text}}

தத்துவ வரலாற்றில் இயங்காவியல் கண்ணோட்டத்தின் ஆதிக்கம்

18-ஆம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதம் பெருமளவுக்கு இயக்கவியல் ரீதியானதாகவும் (Mechanistic), இயங்காவியல் ரீதியானதாகவும் (Metaphysical) இருந்தது. ஏனென்றால் அந்தக் காலத்தில் எல்லா இயற்கை விஞ்ஞானங்களுள் எந்திரவியல் (Mechanics) மட்டுமே வளர்ச்சிப் பெற்றிருந்தது - எங்கல்ஸ்

மெடாபிசிக்ஸ் (Metaphysics) என்பது மிகவும் பழைமையான தத்துவப் போக்காகும். வரலாற்றில் இந்தப் போக்கைக் குறிக்கும் சொல்லானது, பல அர்த்தங்களைத் தாங்கி வந்திருக்கின்றது. இது பௌதீகத்திற்கு அப்பால் இருக்கின்ற விசயங்களைக் குறித்துப் பேசும் தத்துவப் போக்காக இருந்தது. இது மீமெய்யியல் என்று அழைக்கப்பட்டது. இதை மாறாநிலைவாதம் என்றும், இயக்க மறுப்பியல் என்றும், இயங்காவியல் என்றும் வழங்கப்பட்டு வருகிறது. இது அணுகுமுறைச் சார்ந்த தத்துவமாகும்.

இயங்காவியல் அணுகுமுறையானது, வரலாற்று ரீதியாக பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது. பொதுவாக, இயங்கியலுக்கு எதிரான பொருளில் இது பயன்படுத்தப்படுகிறது. அதாவது, மெடாபிசிக்ஸ் என்பது ஒருதலைப்பட்சமான மற்றும் அருவமானப் பண்புகளைக் கொண்டது. அது, முழுமையில் இருக்கும் கூறுகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை முற்றொருமையாக்க முனைகிறது. சான்றாக, ஹெராக்ளிட்டஸ் இருப்புக்கான ஒரு அம்சத்தை மட்டும் வலியுறுத்தினார். அதாவது பொருட்களின் மாற்றம் குறித்துப் பேசினார். இதை சோஃபிஸ்டுகள் முற்றிலும் சார்புத்தன்மைக் கொண்டதாக விளக்கினர். அதைப் போல, எலிய தத்துவவாதிகளும் ஹெராக்ளிட்டசின் கொள்கையை விமர்சித்தனர். அவர்கள் இருப்பு என்பது நிலைத்தத் தன்மை கொண்டது என்று கூறினர். இவர்கள் மாறாதது என்ற மற்றொரு தீவிரத்தன்மைக்குச் சென்றனர். இவ்வாறாக, கிரேக்கத் தத்துவ வரலாற்றில், சில தத்துவவாதிகள் உலகைப் பாய்ச்சலில் இருப்பதாகக் கண்டனர். இதற்கு மாறாக, மற்ற சிலர், அதை அசையாதப் பொருளாகக் கண்டனர்.

image

அரிஸ்டாடில்

அதையடுத்து, அரிஸ்டாடில் என்ற தத்துவ அறிஞரிடமும் இத்தகையப் போக்கு இருந்தது. பிளேட்டோவின் ‘படிவங்கள்’(Forms) பற்றிய தத்துவத்தை நிராகரித்ததுதான், அரிஸ்டாட்டிலின் மெட்டாபிசிக்ஸின் தொடக்கப் புள்ளியாகும். பிளேட்டோவின் கோட்பாட்டின்படி, பொருள்கள் மாறக்கூடியவை, ஆனால் அந்த மாற்றங்கள் உண்மையானவை அல்ல; மாறாக, இத்தகைய கருத்து, நிரந்தரத்தன்மை மற்றும் மாறாத வடிவத்துடன் ஒத்திருக்கின்றன, மேலும் இந்த வடிவத்தை அறிவால் மட்டுமே உணர முடியும். இந்த உலகில் அழகாக இருப்பதாக உணரப்பட்ட ஒரு பொருள், உண்மையில் அழகான வடிவத்தின் ஒழுங்கற்ற வெளிப்பாடாகும். இந்த கோட்பாட்டிற்கு எதிராக, அரிஸ்டாட்டில் தனது வாதங்களை முன்வைத்தார். அவர் பிளேட்டோவின் கருத்துக்களைக் கவிதைத்தனம் நிறைந்தவை, ஆனால் அவை வெற்று மொழிகள் என்று நிராகரித்தார். அரிஸ்டாட்டிலின் முதல் தத்துவம் மெட்டாபிசிக்ஸ் என்று அழைக்கப்பட்டது. இது இருப்புநிலைப் பற்றியும், அதன் அருவமான குணங்கள் பற்றியும் ஆராயும் இயலாக உருவானது. ஒரு விஞ்ஞானி என்ற முறையில் அரிஸ்டாடில் பொருள் உலகின் யதார்த்தத்தில் மிகுந்த கவனம் செலுத்தினார். அரிஸ்டாடிலின் கருத்துக்கள்தாம் பல நூற்றாண்டுகள் மிகவும் செல்வாக்குச் செலுத்தி வந்தது.

நவீன அறிவியல் உலகத்தில் இயங்காவியல் இன்னொரு வடிவத்தை எடுத்துக் கொண்டது. உண்மையான இயற்கை விஞ்ஞானம் 15-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் தொடங்கியது. அது இயற்கையை அதன் தனித்தனிப் பிரிவுகளில் பகுத்தாய்தல், இயற்கை சார்ந்த வேறுபட்ட நிகழ்வுப்போக்குகளையும், பொருள்களையும் திட்டவட்டமான இனங்களாக வகைப்படுத்தல். அங்ககப் பொருள்களின் அகநிலைக் கட்டமைப்பை அவற்றின் பன்முக வடிவங்களிலும் நுணுகி ஆய்தல் ஆகிய அணுகுமுறைகளைக் கொண்டிருந்தது.

ஆனால், இந்த வகை ஆய்வுமுறையானது, இயற்கைப் பொருள்களையும் நிகழ்வுப் போக்குகளையும், பிரபஞ்சத்தின் பிரும்மாண்டமான முழுமையுடன் அவற்றுக்குள்ள தொடர்புகளிலிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தி நோக்கும் பழக்கத்தையும், அவற்றின் இயக்கத்தில் அல்லாது ஓய்வில், அவை அடிப்படையில் மாறிகள் (variables) என்ற நிலையில் அல்லாது மாறிலிகள் (constants) என்ற நிலையில், அவற்றின் வாழ்வில் அல்லாது அவற்றின் மரணத்தில் வைத்து நோக்கும் பழக்கத்தையும் மரபுரிமையாக நம்மிடையே விட்டுச் சென்றுள்ளது, அது ஒரு குறுகிய, இயங்காவியல் சிந்தனைப் பாங்கினைத் தோற்றுவித்தது என்று எங்கல்ஸ் கூறினார்.

அக்காலக்கட்டத்தில் தோன்றியப் பொருள்முதல்வாதக் கோட்பாடுகள் யாவும், கெப்லர், கலிலியோ, நியூட்டன் போன்றவர்கள் அறிவியல் துறையில் கண்டெடுத்த மாபெரும் கண்டுபிடிப்புகளையும், கருத்துக்களையும் அடியொற்றியே இருந்தன. உயிரியல் துறையில் இன்னும் பரிணாமவாதக் கோட்பாடு முழுமையாக வளரவில்லை. இதன் விளைவாக இயற்கைப் பொருள்களிலும், அவற்றின் இயக்கங்களிலும் எழுகின்ற மாற்றங்கள் யாவும் வெறும் அளவு மாற்றங்களே என்ற கருத்தே அப்போது மேலோங்கி இருந்தது. இத்தகைய கண்ணோட்டமே, சில நூற்றாண்டுகள் வரை இது தொடர்ந்தது.

image

நியூட்டன்

சொல்லப் போனால் வான்மண்டல, பூமண்டலச் சடப்பொருள்களின் எந்திரவியல் மட்டுமே, சுருங்கச் சொன்னால், ஈர்ப்பு சக்தியின் (gravity) எந்திரவியல் மட்டுமே உச்சத்தில் இருந்தது. வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற அறிவியல்கள் கரு நிலையில் இருந்தது. அவை, முற்றிலும் எந்திரவியல் அடிப்படையிலான காரணங்களாலேயே விளக்கப்பட்டன. டெக்கார்ட்டேவைப் பொருத்தவரை விலங்கு என்பது ஓர் எந்திரம்; அதைப்போலவே பதினெட்டாம் நூற்றாண்டுப் பொருள்முதல்வாதிகளுக்கு மனிதன் ஓர் எந்திரமாக தென்பட்டான் என்று எங்கல்ஸ் கூறினார். இவ்வாறாக அனைத்துத் துறைகளிலும் எந்திரவியல் பார்வையே நிறைந்திருந்தது. இது தத்துவத் துறையிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது.

இயக்கவியலும் கணிதவியலையும் உலகளாவிய ஒன்றாகக் கருதப்பட்டது. இதுதான் அப்போது நிலவிய மிகவும் முன்னேறிய விஞ்ஞானங்களின் நிலைப்பாடாகும். அந்தக் காலத்தைச் சார்ந்த சிந்தனையாளர்கள் இயக்கவியலை முழு பிரபஞ்சத்தில் இருக்கும் மர்மங்களின் திறவுகோலாகக் கண்டனர்.

மேலும் இயற்கை என்பது வரலாற்றின் ஊடே வளர்ந்தது; அதற்குக் காலத்திற்கேற்ற வரலாறு உண்டு என்னும் தெளிவு அப்போது இல்லை. உலகங்கள், பொருள்கள், அவற்றின் இயக்கங்கள் யாவும் ஒன்றோடொன்றுத் தொடர்புக் கொண்டவை, ஒன்றோடொன்று வினைபுரிபவை, ஒன்று மற்றொன்றைச் சார்ந்து இருப்பவை போன்ற கருத்தோட்டங்கள் தோன்றவில்லை. அந்நிலையில் பொருள்களையும், இயக்கங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் அந்தந்தத் துறைக்கு மட்டுமே உரியவையாகக் கருதி, தனிமைப்படுத்தி ஆராய்கின்ற போக்கே இருந்தது. இயக்கவியல் விதிகளை உயிரியல் துறைகளின் மீது செயற்கையாகத் திணிக்கின்ற நிலையே இருந்தது.

இருந்தபோதிலும், இயந்திர முறையின் பயன்பாடு பௌதிக உலகத்தை அறிதலில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம். இயற்கையான நிகழ்வுகளின் இயந்திரரீதியான கண்ணோட்டம், நியூட்டனின் கண்டுபிடிப்புகளின் சக்திவாய்ந்த செல்வாக்கால் பெரிதும் பலப்படுத்தப்பட்டது, ஏனெனில் அவர் முழுமையான கணித ஆதாரத்தை கொண்டு இயக்கவியல் ரீதியிலான காரணத்தை (mechanical causality) நிறுவினார். இருப்பினும், இயக்கவியலுக்கு இயக்கம் மட்டுமே தெரியும். ஆனால் அதற்கு வளர்ச்சி தெரியாது. அதனால்தான், அப்போதைய தத்துவவாதிகள் பயன்படுத்தும் சிந்தனை முறையானது இயங்காவியல் தன்மைக் கொண்டதாக இருந்தது.

இவ்வாறு, நவீன காலங்களில், இயற்கையை அறிந்துணர்தலில் உள்ள நுட்பங்களை பகுப்பாய்வு செய்வதிலும், வகைப்பாடுச் செய்வதிலும் முற்றொருமையாக்கும் வடிவத்தை இயக்கமறுப்பியல் எடுத்துக் கொண்டது. பகுப்பாய்வு, தனிமைப்படுத்தப் பரிசோதனை, தனித்தனி வகைப்பாடு ஆகிய நுட்பங்கள் படிப்படியாக விஞ்ஞானச் சிந்தனையைப் பாதிக்கச் செய்கின்றன. இத்தகைய கருத்துக்கள், இயற்கையின் பொருள்கள் தனித்தனியாக உள்ளன என்ற கருத்திற்கு இட்டுச் சென்றன. தத்துவமும், தனிச்சிறப்பு வாய்ந்த அறிவியலும், இயங்கியல் மற்றும் இயங்காவியல் ஆகியவற்றிற்கு இடையேயான முரண்பாட்டிற்கு இட்டுச் சென்றன. பொருட்களுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் முயற்சிகளிலிருந்து, வளர்ச்சியைப் பற்றிய கொள்கையை விளக்க வேண்டியதாயிற்று.

இயக்கமறுப்பியல் சிந்தனை முதலில் எளிய பரிணாமவாதத்தின் வடிவத்தில் தோன்றியது. பின்னர் 'படைப்பு பரிணாமத்தின் பல்வேறு வடிவங்களாக வெளிப்பட்டன. முந்தையது பண்புரீதியான மாற்றங்கள் மற்றும் படிப்படியான மாற்றங்களுக்கு இடையில் ஏற்படும் முறிவுகளை புறக்கணித்து, அளவு மற்றும் படிப்படியான மாற்றங்களை மட்டும் விவரிக்கிறது. பிந்தையது படிப்படியான அளவுரீதியான செயல்முறைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பண்புரீதியான மாற்றங்களையும், அத்தியாவசியமான மாற்றங்களையும் முற்றொருமையாக்கி விடுகிறது.

எனவே இயங்காவியல் சிந்தனையானது பொருளின் சில அம்சங்களை மட்டும் வலியுறுத்துகிறது. குறிப்பாக, நிலைத்தத்தன்மை, திரும்பத் திரும்ப நிகழ்தல், ஒப்பீட்டுரீதியான சுதந்திரம் ஆகியனவாகும். பொருட்களை அறிந்துணரும் போக்கில் இது, கருத்துமுதல்வாத்திற்கு, வறட்டுவாதத்திற்கும் வழிவகுக்கிறது. நடைமுறையில், தேக்கநிலையை நியாயப்படுத்துகிறது. இயங்காவியல் மற்றும் வறட்டுவாதம் ஆகியவற்றிற்கு உள்ள ஒரே மாற்று மருந்தானது இயங்கியல் மட்டுமே. இது உயிரோட்டமானது. எனவே இது தேக்கநிலையைப் பொறுத்துக் கொள்ளாது. அறிதலுக்கும், அதன் நோக்கத்திற்கும் எந்த வரம்புகளையும் எப்போதும் நிர்ணயிக்காது. வரலாற்று ரீதியாக இயங்காவியல் முறைக்கு எதிரான போராட்டத்தில்தான் இயங்கியல் தோன்றி வளர்ந்தது. இயங்காவியல் வெவ்வேறு வடிவங்களில் வளர்ந்து வரும் போக்கில், இதற்கு எதிரான வரலாற்று ரீதியான தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் இயங்கியலும் கூடவே வளர்ந்தது.

மெய்யியல் வளர்ச்சியில் இயங்காவியல் கண்ணோட்டம் மிகுந்த செல்வாக்குச் செலுத்திக் கொண்டு வந்துள்ளது என்பது தெளிவாக புலனாகின்றது. இத்தகைய இயங்காவியல் கண்ணோட்டம்தான், கருத்துமுதல்வாதத்திற்கு வித்திட்டது என்று கூறலாம். இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் ஒரு முழுமையான ஒரு ஜெர்மன் கருத்துமுதல்வாதம் தோன்றியது.

Like what you read?
{{global.chaps[1].like_count}} {{global.chaps[1].like_text}}
Like what you read?
{{global.chaps[2].like_count}} {{global.chaps[2].like_text}}
Like what you read?
{{global.chaps[3].like_count}} {{global.chaps[3].like_text}}
Like what you read?
{{global.chaps[4].like_count}} {{global.chaps[4].like_text}}
Like what you read?
{{global.chaps[5].like_count}} {{global.chaps[5].like_text}}
Like what you read?
{{global.chaps[6].like_count}} {{global.chaps[6].like_text}}
Like what you read?
{{global.chaps[7].like_count}} {{global.chaps[7].like_text}}
Like what you read?
{{global.chaps[8].like_count}} {{global.chaps[8].like_text}}
Like what you read?
{{global.chaps[9].like_count}} {{global.chaps[9].like_text}}
Like what you read?
{{global.chaps[10].like_count}} {{global.chaps[10].like_text}}
Like what you read?
{{global.chaps[11].like_count}} {{global.chaps[11].like_text}}
Like what you read?
{{global.chaps[12].like_count}} {{global.chaps[12].like_text}}
Like what you read?
{{global.chaps[13].like_count}} {{global.chaps[13].like_text}}
Like what you read?
{{global.chaps[14].like_count}} {{global.chaps[14].like_text}}

{{user_data.book_status}}

Educational & Professional | 15 Chapters

Author: Anna. Nagarathinam

Support the author, spread word about the book to continue reading for free.

Why don't you tell your friends how you liked the book?

HEGELUM MARXUM

Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}

Be the first to comment
Reply To: {{insta_features.post_comments_reply.reply_to_username}}
A-
A+
{{global.swiggy_msg_text}}