36 Views

POARINRI AMAIYAATHU ULAGU-4

Biographies & Autobiographies | 8 Chapters

Author: Tamizhdesan Imayakappiyan

36 Views

Interviews are  some drops from the ocean of Biographies. This book is a collection of interviews of some famous Tamil poets, writers, meme creators and specialists from different proffessions. There are much about failures as about Successes. The dreams of those people with their eyes wide open to pen their words are given as interviews.

காப்பியா வாசிப்பகம்

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்

83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

தமிழக மக்களுக்கு ஈழப் போர் குறித்த வாழ்வையும் பேரினவாத அரசால் நாளாந்தம் மக்கள் படும் பேரவலத்தையும் ஒரு நூறு கவிதைகளாகவும் கதைகளாகவும் சொல்லியிருக்கிறேன். புலம்பெயர் வாழ்வில் தமிழகப் பார்வையை உரை நடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச் சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கண இலக்கிய அகராதிக் காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப் பிரதிகளாகவும், நாடோடிப் பயணங்களாகவும், கலா சாலை போதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும் பதிவு செய்திருக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் மூத்தகுடி கலாச்சாரப் பயணங்கள் மற்றும் கல்விப் புலக்கலைப் பேரதிகார நுட்பவியல் குறித்தும் மனைவி தமிழ் இனியா சொற்களை விதைத்து வருகிறார். புகார்க் காண்டத்திலிருந்து மதுரைக் காண்டம் வந்துள்ள கொடை மகன் இமயக்காப்பியன்(6) படைப்பாக்கப் பணியில் முந்நீர் போல் எமக்கு பேருதவியாக இருக்கிறான். துயரங்களின் சாட்சிகள் மரணிப்பதில்லை என்கிற காத்திரச் சொல்லின் சாட்சிகளாய் நாங்கள். கீழடி / உலகின் / மூத்த காலடி

எனக்கான உதவிகளை செய்யும் குழந்தைகள் சக்தி என்கிற விடுதலைவெண்பா, சூரியவாசன் என்கிற இலக்கியப்புரட்சியாளன், ரித்திஷா என்கிற நிழலினி, விதுஷி, பார்பி என்கிற மோனலிக்கும், பாரா முகமாகவே போய்விட்ட ஜேர்மனியில் வாழும் குழந்தைகளான பூர்த்திகா என்கிற இதழினி, அரிகரசுதன் என்கிற எளிஞன் ஆகியோருக்கும் நன்றி சொல்ல தேவையில்லை. எக்காலத்திலும் நன்றிக்குரியவர்களாக இருக்கும் என் சின்னத்தாய் செல்வி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தாருக்கும் மற்றும் எனது அக்கா பத்மாவதி, தீபாவிற்கும் நன்றிகள் பல.

-தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

சுயசரிதைகளின் ஒரு துளியாய் :நேர்காணல்கள்

நேர்காணல் (Interview) என்பது கேள்விகள் கேட்டு பதில்களைப் பெறும் ஒரு உரையாடல் ஆகும்.நேர்காணல் என்பது பொதுவாக கேள்விகள் கேட்கும் ஒருவரும் பதில்கள் தருபவர் ஒருவருமாக ஒன்றுக்கு ஒன்று உரையாடலாகவே இருக்கும். நேர்காணல் பல்வேறு துறையில் பல்வேறு வகையில் காணப்படுகின்றன.

நவீன காணொளிக்காட்சி மூலம் நடைபெறுகிற நேர்காணல்

செய்திக்கு மூலமாக இருப்பவரை அல்லது தானே செய்தியாகும் ஒருவரை நேர்காணல் கொள்வது செய்தி திரட்டுவதில் முக்கியமான ஒன்றாகும். செய்தியாளராக இருப்பவர் நேர்காணல் கொள்வதில் திறனுடையவராக இருக்க வேண்டும். நேர்காணல்கள் இல்லாமல் செய்திகள் இல்லை எனுமளவிற்கு செய்திகளில் நேர்காணல்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

விளக்கம்: நேர்காணல் என்பது ஒருவரோடு தொடர்பு கொண்டு அவர் மூலமாக விவரங்களைக் கேட்டுப் பெறுவதாகும். இது நேரிலோ அல்லது தொலைபேசி வழியாகவோ அல்லது கடிதம் வழியாகவோ அல்லது புதிய தகவல் தொடர்பு சாதன வழியாகவோ இருக்கலாம். ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி நேர்காணல் (Interview) என்பதற்கு "மனிதர்கள் நேருக்கு நேராகச் சந்தித்தல்; அதாவது கூட்டம் நடத்தக் காணுதல், செய்தித்தாளில் பணியாற்றுகின்ற ஒருவரும் வெளியிடுவதற்காகத் தகவல்களைத் தர அவர் தேடும் ஒருவரும் கூடிப் பேசுதல்" என்று பொருள் தருகிறது.

நோக்கம்: நேர்காணல் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு நோக்கத்துடன் நடத்தப் பெறும். நோக்கமற்ற நேர்காணல் பொழுது போக்குப் பேச்சு போலாகிவிடும். நேர்காணல் செய்பவர் நேர்காணலின் நோக்கம் குறித்துத் தெளிவாக இருக்க வேண்டும். பொதுவாக நேர்காணல் நடத்துவதற்கான நோக்கங்கள் சில உள்ளன. அவை;

1. நடப்பு அறிதல் - நடந்து கொண்டிருக்கும் சில சுவையான நிகழ்வுகள் குறித்த விபரம், கருத்தறிய அதனுடன் தொடர்புடையவரிடம் நேர்காணல் செய்தல்.

2. நிகழ்வு விவரம் அறிதல் - நடைபெறப் போகும் முக்கிய நிகழ்வு குறித்த விபரம், கருத்தறிய அதனுடன் தொடர்புடையவரிடம் நேர்காணல் செய்தல்.

3. கருத்து வெளிப்படுத்தல் - தலைவர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் போன்றவர்களின் ஆளுமைத் திறன், தனித்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்த நேர்காணல் செய்தல்.

நேர்காணல் வகைகள்

1. நேர்காணல்கள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். இருப்பினும் பொதுவாக நேர்காணல்கள் கீழ்காணும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.

2. தெருவில் காண்போர் நேர்காணல் - தெருவில் காணும் ஒருவரிடம் ஏதாவது ஒன்றைப் பற்றி கருத்தறிய நேர்காணல் செய்தல்.

3. தற்செயல் நேர்காணல் - திட்டம் எதுவுமில்லாத நிலையில் குறிப்பிடத் தகுந்தவர்களை எதிர்பாராமல் சந்திக்கும் நிலையில் நேர்காணல் செய்தல்

4. ஆளுமை விளக்க நேர்காணல் - புகழ் பெற்ற ஒருவரையோ அல்லது சோதனை முயற்சியில் சாதனையாளராக உள்ளவரையோ அவரது ஆளுமைத் திறனை வெளிக்கொணர நேர்காணல் செய்தல்

5. செய்தி நேர்காணல் - செய்தியைப் பெறும் நோக்கில் செய்தி தரும் ஒருவரிடம் நேர்காணல் செய்தல்

6. செய்திக் கூட்ட நேர்காணல் - செய்தி அளிப்பதற்காக அழைக்கப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அந்த செய்தி தொடர்பாக நேர்காணல் செய்தல்

7. செய்திச் சுருக்க நேர்காணல் - அரசு அல்லது அமைப்பு தான் வெளியிட விரும்பும் செய்திக் குறிப்பை அளிக்கும் போது அது குறித்த நேர்காணல் செய்தல் (இம்முறையில் அதிகமாக சேள்விகள் கேட்கப்படுவதில்லை)

8. சிற்றுண்டிக் கூட்ட நேர்காணல் - முக்கிய நகரங்களில் செய்திச் சுருக்கம் அளிக்க சிற்றுண்டி அளித்து அது குறித்த செய்தியையும் நெருக்கமான முறையில் பரிமாறிக் கொள்ளும் நேர்காணல்.

9. தொலைபேசி நேர்காணல் - ஒரு இடத்திலிருந்து கொண்டு குறிப்பிட்ட நபரிடம் தொலைபேசி வழியாக நேர்காணல் செய்தல்

10. அடைகாத்தல் நேர்காணல் - சில வேளைகளில், கொள்கைகளை/ தங்கள் கருத்துக்களை எப்படியாவது திணிக்கும் சூழலை உருவாக்குகிறார்கள். இவற்றிற்கான நேர்காணல் அடைகாத்தல் நேர்காணல் என்று ஒதுக்கப்படுகிறது

11. பட்டம் பறக்கவிடும் நேர்காணல் - செய்தியாளர் ஏற்பாடு செய்து நடத்தும் நேர்காணலில் சில முக்கியமானவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது கருத்துக்களை செய்தியாளர் கருத்து போல் வெளியிடச் செய்துவிடுவதுண்டு. இவ்வகை நேர்காணல்கள் "பட்டம் பறக்கவிடும் நேர்காணல்" எனப்படுகிறது.

12. மின்னஞ்சல் நேர்காணல் - நவீன ஊடகமான இணையத்தில் மின்னஞ்சல் வழியாக சில குறிப்பிட்ட கேள்விகளை அனுப்பி பதில் பெறும் நேர்காணல்.

13. நிகழ்பட உரையாடல் நேர்காணல் - இணையத்தில் நிகழ்பட உரையாடல் (Video Conference) மூலம் செய்யப்படும் நேர்காணல்.

நேர்காணல் செய்தல் -நேர்காணல் கொள்ளப்படுபவரிடமிருந்து நேர்காணல் செய்பவர் பல தகவல்களை வெளிக் கொண்டு வரும் தனித்திறனுடையவராக இருக்க வேண்டும். அவரிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவர் தனிப்பட்டு "இதனை வெளியிட வேண்டாம்" (Off the record) என்று கூறும் செய்திகளை வெளியிட்டு விடக் கூடாது.பொதுவாக நேர்காணலுக்கு திட்டமிடுதல், இணங்க வைத்தல், தெளிவாக அறிதல், தொடர் முயற்சி எனும் நான்கு முக்கிய பங்குகள் இருக்க வேண்டும்.

பயன்கள்

  1. நேர்காணலினால் பல நன்மைகள் கிடைத்தாலும் அவை கீழ்காணும் முக்கியப் பயனைக் கொண்டுள்ளது.
  2. செய்திகளை உருவாக்குதல்
  3. வேறுபாடுகளை வெளிக்கொணர்தல்
  4. பொதுமக்கள் கருத்து உருவாக்குதல்
  5. அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் அறிய துணை செய்தல்
  6. கண்டுபிடிப்புகள், திட்டங்கள் விளக்குதல்
  7. சமுதாயத்தில் புகழ் பெற்றவர்கள் - வாசகர்கள் ஆகியோர்க்கு இணைப்பாக இருத்தல்
  8. பல்வேறு கருத்துக்கள் வெளிவர வாய்ப்பாயிருத்தல்
  9. சுவையான கட்டுரை கிடைத்தல்
  10. செய்யக் கூடியதும்- செய்யக் கூடாததும்
  11. நேர்காணலில் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும் என்பதைச் செய்தியாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  12. செய்யக் கூடியது
  13. நேர்காணல் தருபவருடன் தொடர்பு கொண்டு ஒப்புதல் பெற்று இடம், நேரம் போன்றவற்றைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
  14. நேர்காணல் குறித்து திட்டம் தீட்டிக் கொள்ள வேண்டும். கேட்க வேண்டிய கேள்விகளையும் வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
  15. நேர்காணல் கொள்பவர் குறித்தும், நேர்காணலுக்கான பொருள் குறித்தும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
  16. நேர்காணலை ஆவலுடன் நடத்துவதுடன், சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
  17. நல்ல உடையணிந்து செல்ல வேண்டும்.
  18. கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில் போதாத நிலையில் அது குறித்த கூடுதல் கேள்விகள் கேட்க வேண்டும்.
  19. குறிப்பிட்ட நேரத்திற்குச் செல்ல வேண்டும்.
  20. நேர்காணலின் நோக்கத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
  21. குறிப்புகள் சரியான முறையில் எடுக்க வேண்டும்.
  22. எவற்றை வெளியிடுவது? எவற்றை வெளியிடக் கூடாது? என்பதில் தெளிவு வேண்டும்.
  23. முடிந்தால் வெளியீட்டிற்கு முன்பு எழுதிய நேர்காணலைக் கொடுத்து, நேர்காணல் அளித்தவரிடம் ஒப்புதல் பெறலாம்.
  24. செய்யக் கூடாதது
  25. நேர்காணல் தருபவரை விட தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கக் கூடாது.
  26. நேர்காணல் தருபவரிடம் அடிமை போல் நடக்கக் கூடாது; அதே சமயம் ஆட்டிப்படைக்க நினைக்கவும் கூடாது.
  27. நேர்காணலின் போது அடிக்கடி இடையில் குறுக்கிடவோ, கூறும் கருத்துக்களை அலட்சியப்படுத்தவோ கூடாது.
  28. கருத்து முரண்பாடுகளையோ, உணர்வுகளையோ வேறுபடுத்தக் கூடாது.
  29. தேவையற்ற பேச்சுக்களில் நேரத்தை வீணடிக்கக் கூடாது.
  30. விவாதத்தைத் தவிர்க்க வேண்டும்.
  31. தாமாக நேர்காணலை முடித்துக் கொள்ளக் கூடாது.

நேர்காணல் கட்டுரை எழுதுதல் -நேர்காணல் கட்டுரையை இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற நிலை இல்லை. இருப்பினும் கட்டுரை சுவையாக அமைவது செய்தியாளரின் எழுத்துத் திறமையில்தான் உள்ளது. பொதுவாக நேர்காணல் கட்டுரை எழுதுவதில் இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.

கேள்வி பதில் வடிவம்-நேர்காணல் குறித்த ஒரு சிறிய முன்னுரை கொடுத்துவிட்டு, நேர்காணல் நடந்தது நடந்தபடியே கேள்வி, பதில்களாக சொற்களைக் கூட மாற்றாமல் அப்படியே எழுதுவிடுவது.

கட்டுரை வடிவம்-நேர்காணலை கட்டுரை வடிவில் எழுதுவதில் எழுதுகின்ற பொழுது, எழுதுபவர் மிகவும் சுதந்திரமாகக் கட்டுரையை அமைத்துக் கொண்டு நேர்காணல் தந்தவர், சூழ்நிலை போன்றவைகள் பற்றி விவரித்து, இடையிடையே நேர்காணல் தந்தவர் சொன்ன மேற்கோள்கள் கொடுத்து கட்டுரை அமைக்கலாம். செய்தியாளர் கவனித்தவற்றுடன் கருதுபவைகளையும் எழுதலாம். இருப்பினும் கட்டுரை எழுதுவதில் சில வழிகாட்டல்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.அவற்றில்,

அறிமுக உரை/நேர்காணலின் கருதுகோள்/பதில்கள்/தொடர்/மேற்கோள்கள்/நேர்காணல் விவரங்கள்/புகைப்படங்கள் ஆகியவை அவசியம் இருக்க வேண்டும்.

1. சுந்தர ராமசாமி

நீங்கள் எழுத்தாளனாய் வாழ்வைத் தொடங்கி, இத்தனை காலம் எழுத்து வாழ்வில் பயணம் செய்து நிறைய அனுபவங்களைப் பெற்ற பின்பும் இன்று உங்கள் எழுத்து வாழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் எழுதத் தொடங்கிய பின் ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன. கனவுபோல் நழுவி விட்டிருக்கிறது காலம். எப்போதும் என் எழுத்து வாழ்க்கை சீராகவோ ஒழுங்காகவோ இருந்தது என்று சொல்ல முடியாது. நிறைய மேடு பள்ளங்கள். தத்தளிப்புகள். அவதூறுகளை மௌனத்தைக் கடைப்பிடித்து எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அவமானம். இவையெல்லாம் இருந்திருக்கின்றன. சூழல் கழுத்தை நெரித்தபோது ஒருசில வருடங்கள் எழுதாமலும் இருந்திருக்கிறேன். எழுத்தை விட்டு விடுவோமா என்றும் யோசித்திருக்கிறேன். பிழைப்புக்கான வேலை நிர்ப்பந்தங்கள் எழுத்துக்கான நேரத்தை ஒழித்துக் கட்டிவிட்ட காலமும் உண்டு. எழுத்தைக் குறைந்த பட்ச வாசகர்களிடம்கூடக் கொண்டு போக முடியாத திணறல் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. என் எழுத்துகள் பலவும் ஐநூறு அல்லது ஆயிரம் பிரதிகள் அச்சேற்றப்படும் சிற்றிதழ்களில்தான் வெளிவந்தன.

இப்போது நிலைமையில் சில மாற்றங்கள். முழு நேரமும் எழுத்து அல்லது வாசிப்புத்தான். வேறு பொறுப்புகள் இல்லை. மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் முன்னைவிடவும் எவ்வளவோ மேல். வயது ஆக ஆக ஆரோக்கியம் கூடிக்கொண்டே போகிறது. ஆகச் சிறிய வயதில்தான் ஆக மோசமான நோயாளியாக இருந்தேன்.
எதிர்மறையான விமர்சனங்களையும் அவற்றின் சூட்சுமம் பார்த்துத் தரம் பிரிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். எழுத்தாளர்களின் தலைநகரமான சென்னையிலிருந்து வெகு தொலைவில் ஒரு வித்தியாசமான பின்னணியில் வாழ்ந்து வருவதால் இலக்கிய அரசியலின் சூட்சுமங்களை வெகுவாகப் பிந்தித்தான் புரிந்துகொண்டேன். ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் வைத்துப் பார்க்க இப்போது கற்றுக்கொண்டு விட்டேன். மிகுந்த நம்பிக்கையுடன், நிறையச் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறேன். ஆசைகள் நிறைவேற சூழலின் ஒத்துழைப்பும் வேண்டும்.

நீங்கள் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்த தமிழ்ச் சூழலுக்கும் பின்வந்த காலங்களில், தமிழ்ச் சூழல் அதை எதிர்கொண்ட சவால்களையும் முகம் கொடுத்து முன் சென்றிருக்கிறது என்று நம்புகிறீர்களா?

மாற்றங்கள் சிறுகச் சிறுக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பெரிய பாய்ச்சல் என்று சொல்ல முடியாது. தமிழ் இனி 2000 இலக்கிய அரங்கில்கூட நீங்கள் கவனித்திருக்கலாம். யுவன் சந்திரசேகர் என்ற கவிஞர் கவிதை பற்றிய அவரது ‘விசேஷத் தத்துவத்தைப்’ பேசும்போதுகூட இருநூறு, முன்னூறு பேர் அதைக் கேட்கிறார்கள். என் சிறுவயதில் ம. பொ. சி., ஜீவா, அண்ணா போன்றவர்கள் இலக்கியத்தை அரசியலுடன் கலந்து பேசும்போதுதான் இவ்வளவு கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். ஆழமான, கடினமான இலக்கியக் கட்டுரைகளின் ஜெராக்ஸ் பிரதிகளைப் பெறத்தான் ஒரே கூட்டம். எதற்கெடுத்தாலும் புரியவில்லை என்ற பேச்சு குறைந்து கடினமான விஷயங்களையும் அதிக உழைப்பைச் செலுத்திப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தலைதூக்கி இருக்கிறது.

நவீனத்துவத்திற்குப் பிந்திய இலக்கியப் போக்குகளைப் பற்றிய பேச்சு – அமைப்பியல், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் போன்றவை – இந்திய மொழிகளிலேயே தமிழில் அதிகமாக இருக்கலாம். அல்லது அதிகமாக இருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கலாம்.

‘பிச்சமூர்த்தியின் கலை – மரபும் மனித நேயமும்’ என்ற படைப்பு, படைப்பாளியின் ஆளுமை பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க ஆய்வு ஒன்றைத் தந்தவர் நீங்கள். இப்போது புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தொகுத்து மிகவும் கனதியான தொகுப்பொன்றை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். தமிழ்ச் சூழலில் இவ்விரு ஆளுமைகளின் தேர்வுக்கான காரணம் என்ன?

​புதுமைப்பித்தனின் படைப்புகளைச் சிறப்பாகப் பதிப்பித்திருப்பவர் ஆ. இரா. வேங்கடாசலபதி. நான் அதற்கு முன்னுரை மட்டுமே எழுதியிருக்கிறேன்.
புதுமைப்பித்தன் சிறுவயதிலேயே என்னை ஆட்கொண்டவர். இதைப் பற்றிப் பல பேட்டிகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அவரது கதையான மகாமசானத்தைப் படித்தபோது அது தந்த எதார்த்த உணர்வு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் என்னைப் பாதித்தது. மிகுந்த கிளர்ச்சி அடைந்தேன். எதார்த்தத்திற்கும் மொழிக்குமான உறவில் கூடிவந்த அழகியல் தந்த கிளர்ச்சி அது. ரொமான்டிசிஸத்துக்கு எதிரான ஒரு மனோபாவம் சிறுவயதிலிருந்து தொடர்ந்து எனக்கு இருந்து வருகிறது.

தமிழ்ச் சூழலின் வகைமாதிரிகளைப் புதுமைப்பித்தன்போல் பதிவு செய்தவர் எவரும் இல்லை. இந்த வகைமாதிரிகளின் வீச்சும் விரிவும் எனக்கு மிக முக்கியமானவை. மேலேயிருந்து கீழே இருப்பவர்கள் வரையிலும் மேன்மைகளிலிருந்து தாழ்வுகள் வரையிலும் இலக்கியப் படைப்புக்கு உகந்த விஷயம் என்பதை அவர்தான் நிரூபித்தார். பகுதிகள் என்றில்லாமல் மொத்த வாழ்க்கையையும் முக்கியத்துவப்படுத்தினார். அவர் படைப்புகளில், ‘வாழ்க்கையை நேரடியாகப் பார்’ என்ற செய்தி இருக்கிறது. இந்தச் செய்தியும் எனக்கு முக்கியமானது. தமிழ்ச் சமூகத்தின் தாழ்வு கனவும் கற்பனையும் சார்ந்த பார்வை. நீண்ட கவிதை மரபின் பின்விளைவு இது. சமயம், புராணம் ஆகியவையும் இவற்றில் கலந்து கிடக்கின்றன. தமிழர்களின் ரொமான்டிக் மனோபாவத்தைத்தான் சகல வணிகச் சக்திகளும் – இதழ்கள், திரைப்படங்கள், அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், தொலைக்காட்சி – சுரண்டிக்கொண்டிருக்கின்றன. மொழி உருவாக்கும் ரொமான்டிசிஸம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. புதுமைப்பித்தனின் பார்வை இன்றையத் தேவை என்று நான் நம்புகிறேன்.

எழுத்தாளர்கள் தங்கள் அறச் சாரங்களை இழந்துகொண்டிருக்கிறார்கள். குறுக்கு வழியில் வெற்றி என்பதுதான் இன்றைய ஸ்லோகம். புகழ் ஒளியில் சதா இருந்துகொண்டிருக்க வேண்டும். பரிசுகள் வந்து சேருபவை அல்ல; வாங்கப்படுபவை. அரசியல் சமரசங்களின் மூலம்தான் எழுத்தாளன் நிகழ்கால வெற்றிகளைப் பெற முடியும். இவ்வகையான சிந்தனைகள் தலைவிரித்தாடுகின்றன. இவற்றிற்கு நேர் எதிரான மன நிலையில் வாழ்ந்தவர் ந. பிச்சமூர்த்தி. அவரிடமிருந்த கல்ச்சர் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு இன்று அவசரத் தேவையாக இருக்கிறது. தாழ்ந்து போவது அல்ல; தன்மானத்தை விட்டுக் கொடுக்காத பிடிவாதம்தான் எழுத்தாளனுக்குத் தேவை. போராட்டம்தான் அவன் வழியே தவிர சமரசம் அல்ல. கனமான புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தவர் பிச்சமூர்த்தி. ஆனால் அவர் தன் வாசிப்பை விளம்பரப்படுத்திக் கொள்ளவேயில்லை. தான் எழுதியுள்ள படைப்புகளை முன்னிலைப்படுத்த தானே உழைப்பது எழுத்தாளனுக்கு அவமானம் என்று அவர் நம்பினார். நாளிதழ்களில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது உடன் பணிபுரிபவர்களுக்குக்கூட அவர் ஒரு கவிஞர் என்பது தெரியாது.

இன்றையச் சூழலைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது பிச்சமூர்த்தியைப் போன்ற ஒரு கலைஞர் வெகு சமீபத்தில் தமிழகத்தில் வாழ்ந்திருந்தார் என்பதை நம்பவே கஷ்டமாக இருக்கிறது. அவருடன் உறவு கொண்ருந்தவர்கள் எல்லோரும் மிகவும் சாதாரணமானவர்கள். பண்டாரங்கள், பைராகிகள், கைரேகை பார்ப்பவர்கள், ஜோசியர்கள், அரைகுறை வைத்தியர்கள், பிச்சையெடுப்பதற்காகத் துறவறம் பூண்டவர்கள், கோயில், குளம், மண்டபங்களில் உட்கார்ந்து தங்கள் வாழ்நாளைக் கழித்தவர்கள், சிறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்.

மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்குமான பாலத்தை நிர்மாணித்தவர் அவர்தான். அலட்டிக்கொள்ளாமல் அதை லெகுவாகச் செய்தார். இன்று எனக்கு அவர் கவிதைகளில் பெரிய ஈடுபாடு இல்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. சிறுகதை ஆசிரியர்களில் இன்றும் அவருக்கு மிக முக்கியமான இடம் உண்டு.

உங்கள் படைப்பு வாழ்வில் நீங்கள் கவிதை, சிறுகதை, நாவல், உரைநடை, மொழிபெயர்ப்பு போன்றவைகளில் காலூன்றி நின்றிருக்கிறீர்கள். இவற்றில் உங்கள் சிந்தனையை மிகத் தெளிவாக வெளிப்படுத்த ஏற்ற உலகமாக எதை அதிகமாகக் கருதுகிறீர்கள்?

முதலில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். அப்போது வேறு இலக்கிய உருவம் எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. அப்பா என்னை உதவாக்கரை என்று நினைத்தார்.

​அதை நியாயமான மதிப்பீடு என்றுதான் சொல்வேன். இலக்கியத்தில் ஒன்றைச் சாதித்து, வெளி உலகத்தில் என்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்து, அப்பாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று ந¤னைத்துத்தான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். இடதுசாரி இயக்கத் தொடர்பும் அவர்களுடைய தத்துவங்களில் நான் கொண்டிருந்த நம்பிக்கையும் படைப்புக்கு ஒரு சமூக நியாயத்தை உருவாக்கித் தந்திருந்தன.

அதன் பின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலை எழுதினேன். க. நா. சு. வின் தூண்டுதலால்தான் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதத் தொடங்கினேன். இலக்கிய உருவங்கள் சார்ந்த நம்பிக்கைகள் எனக்கு முக்கியமானவை. ஒரு உருவத்தை மற்றொரு உருவத்துடன் பொறுப்பின்றிக் குழப்பியடிப் பதில் விருப்பமில்லை. ஒவ்வொரு உருவத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அழுத்தம் இருக்கிறது. ஒரு முன்னுரிமை இருக்கிறது. ஆனால் எந்த உருவத்தில் அதிக நம்பிக்கை என்று கேட்டால் என் குறிக்கோள் சார்ந்து எல்லா உருவங்களிலும் என்றுதான் சொல்வேன். தெரிந்தோ தெரியாமலோ நோக்கம் அல்லது விஷயம்தான் உருவத்தைத் தேர்ந்தெடுக்கிறது. இருப்பினும் வாழ்வின் புதிர்களை ஆராய நாவல் தரும் வசதியைப் பிற உருவங்கள் தராததால் நாவல்மீது தனியான மரியாதை வைத்திருக்கிறேன்.

தமிழில் நீண்டகாலமாக ஒரு எதார்த்தவாதப் பண்பு இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது இந்த எதார்த்தவாதப் பண்பு தொடர்பான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தமிழில் ஒரு எழுத்தாளன் தான் நினைத்ததை முற்று முழுதாக எழுதவுமில்லை, சொல்லவுமில்லை என்கிறார்கள். இந்த எதார்த்தவாதம் என்பது ஒரு தேர்வுக்கு உட்பட்ட அல்லது சமூக மனோபாவத்தை ஏற்று சுத்திகரிக்கப்பட்ட இலக்கிய முயற்சிகள்தானா?

படைப்பில் புறத்தைப் பற்றிய பேச்சு எல்லாம் அகத்தை ஊடுருவத்தான். தோற்றம் சாரத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். எதார்த்தவாதம் என்பது ஒரு தளத்தின் பொதுப்பெயரே தவிர ஒரு படைப்பின் குணத்தைத் தீர்மான¤க்கக்கூடியது அல்ல. ஒரு எதார்த்தத்தளத்தைச் சேர்ந்த ஒரு எழுத்து நம்மை ஆட்கொள்ளும்போது அதே தளத்தைச் சேர்ந்த மற்றொன்று மிகுந்த சலிப்பைத் தருகிறது. ஊடுருவல்தான் முக்கியம். எதார்த்தத்தளம் சார்ந்த ஊடுருவல் தமிழ் வாழ்வின் ஸ்திதிக்கு இன்று பொருந்தி வருகிறது. அதன்மீதான என் விருப்பம் தமிழ் வாழ்வைக் கடுமையாகப் பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் சார்ந்தது.

தமிழில் எதார்த்தவாதிகள் எவரும் அதையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கவும் இல்லை. ‘ஆறில் ஒரு பங்கு’, ‘சின்னச் சங்கரன்’ போன்ற கதைகளை எழுதிய பாரதிதான் ‘ஞானரத’த்தையும் எழுதியிருக்கிறான். ‘பொன்னகரம்’, ‘கவந்தனும் காமனும்’ போன்ற கதைகளை எழுதிய புதுமைப்பித்தன் தான் ‘ஞானக்குகை’, ‘பிரம்மராக்ஷஸ்’ போன்றவற்றையும் படைத்திருக்கிறான். கு. ப. ரா., ந. பிச்சமூர்த்தி போன்றவர்களும் எதார்த்தவாதத்தைத் தாண்டிப் பல கதைகளை எழுதியிருக்கிறார்கள். மௌனி எதார்த்தவாதத்துக்குள் நுழையவே இல்லை. எதார்த்தம் தாண்டிய படைப்பு நம்பிக்கைகளைப் புதிய கண்டுபிடிப்புகள்போல் இப்போது சிலர் பேசுவது உண்மை அல்ல.

என் ‘பல்லக்குத் தூக்கிகள்’ தொகுப்புகூட எதார்த்தவாதக் கதைகளைச் சேர்ந்தது அல்ல. இப்போதைய என் கதைத் தொகுப்பின் தலைப்பான ‘காகங்கள்’ கதையையும் ஒரு எதார்த்தவாதக் கதை என்று சொல்ல முடியாது. இவையெல்லாம் மேல்நாட்டுத் தத்துவங்களைப் படித்துவிட்டுப் போலி செய்தவையும் அல்ல. இந்திய மரபில் இல்லாத மாந்த்ரீக எதார்த்தம் வேறு எந்தத் தேசத்திலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

எதார்த்தவாதத்தின் பாதிப்பைப் பெற்ற ஒரு மூளையால்தான் அமைப்பியல்வாதம், பின்னமைப்பியல் வாதம், பின்நவீனத்துவம் போன்ற தத்துவங்களைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். எதார்த்தவாதம் வழியாகத்தான் நீங்கள் அவற்றைத் தாண்டிச் செல்லும் தத்துவங்களுக்கும் போக வேண்டும். நம் வாழ்வின் ஸ்திதியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத, மிகச் சிக்கலான தத்துவங்களைப் பேசுவதன் மூலம் பேசுபவர்களுக்கு உபயோகப்படும் அதிகார மையங்களை உருவாக்கலாம். தமிழ் வாழ்க்கையில் எந்தப் பாதிப்பையும் நிகழ்த்த முடியாது. தமிழ்ச் சூழலில் அரசியல் சார்ந்த இன்டெலச்சுவல் வர்க்கத்தின் அதிகபட்ச எல்லை பாரதிதாசன். புதுமைப் பித்தன் இன்றும் அவர்களுக்கு ஒரு புதிர். இவையெல்லாம் தமிழ் எதார்த்தங்கள். புதிய சிந்தனை களின் அறிமுகங்களை நான் வரவேற்கிறேன். அந்தச் சிந்தனைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவற்றின் பாதிப்பையும் பெற வேண்டும். அந்தச் சிந்தனைகளுக்கு முற்பட்டவை யெல்லாம் காலாவதியாகிவிட்டன என்ற பாவனை உண்மையில்லை. ஆசிரியர் ‘இறந்துவிட்டார்’ என்று கூறுகிறவர்கள் ஆசிரியருக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் விமர்சனங்களைத்தான் இப்போதும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். படைப்பாளி அதீத முக்கியத்துவம் பெற்று வருகிறான் என்றுகூடச் சொல்லலாம். எல்லாப் பிரதியும் ஒன்று என்று சொன்னவர்கள் பாரதியைப் பற்றியும் புதுமைப்பித்தனைப் பற்றியும் இன்றையப் படைப்பாளிகளில் பொருட்படுத்தத் தகுந்தவர்களைப் பற்றியுமே பேசுகிறார்கள்.

தமிழ் நாவல் வெளிப்பாட்டு முறையில் உங்கள் ‘ஜே. ஜே : சில குறிப்புகள்’ ஒரு முக்கியமான திருப்பம். இது இயல்பாக நடந்ததா அல்லது முற்கற்பிதத்துடனான எழுத்துச் செயல்பாடா?

பெருமளவு இயல்பாக நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதை எழுதி முடித்த நிலையில் தமிழ் நாவல் மரபில் அது வித்தியாசமானது என்ற உணர்வு மட்டும்தான் எனக்கு இருந்தது. நண்பர்களும் முன் பின் தெரியாத வாசகர்களும் சாதகமான அபிப்பிராயங்களைக் கூறத் தொடங்கிய போது நான் எதிர்பாராத காரியம் நடந்திருப்பதாக உணர்ந்தேன். விமர்சகர்கள் அதைக் கடுமையாகக் கண்டிக்க ஆரம்பித்தார்கள். வாசகர்களின் வரவேற்பு வழக்கத்திற்கு மாறாக இருந்தது. அபிப்பிராயங்களை விமர்சனம் சிறிய அளவில்கூடப் பிரதிபலிக்கவில்லை என்பது என் அனுபவம்.

மொழியையோ சிந்தனையையோ தமிழில் யாரும் இப்படி கைகொண்டு வெளிப்படுத்தவில்லை. நாம் இதனைத் தமிழில் செய்வோம் என்றாவது நினைக்கவில்லையா அல்லது தமிழ் நாவல் வெளிப்பாட்டு முறையில் இது ஒரு புதுக் காலடி என்றாவது எண்ணவில்லையா?

பிறர் செய்து வைத்திருக்கும் காரியங்களையோ நான் செய்து முடித்துவிட்ட காரியங்களையோ திரும்பச் செய்யக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருந்திருக்கிறேன். படைப்பு என்பது புதிது. இதற்கு முன் இல்லாதது. கோடிக்கணக்கான குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் இப்போது பிறந்திருக்கும் குழந்தை இதற்கு முன் பிறந்ததே இல்லை. இயற்கையிலேயே படைப்பு இப்படி. நிகழ்த்தியதை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவது பழக்கம் அல்லது சகஜம்.

‘ஒரு புளியமரத்தின் கதை’ வெளிவந்தபோது குடும்பங்களுக்கு வெளியே

​உருவாக்கப்பட்ட நாவல் என்று எதுவும் இருக்கவில்லை. மனிதனுக்கும் கருத்துகளுக்குமான உறவு வலுமையானது. உணர்ச்சித் தளங்களில் வேர் விட்டு நிற்பது. அதனால்தான் கருத்துகள் சார்ந்த முறிவு மனிதனை மிக மோசமாகப் பாதிக்கிறது. ‘ஜே. ஜே : சில குறிப்புகள்’ மனிதனுக்கும் கருத்துகளுக்குமான உறவைப் பற்றிச் சொல்கிறது. ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் குடும்பத்துக்கும் மனிதனுக்குமான உறவைச் சொல்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். குடும்பம் ஒரு நிறைவான அமைப்பு தானா? அதன் தோற்றத்திற்கும் உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கும் இசைவு உண்டா? குறையுணர்ச்சியுடன்தான் மனிதன் குடும்பத்துக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கிறானா? இதுபோன்ற பல கேள்விகள் இருக்கின்றன. உள்ளூர இருந்த ஆவேசம்தான் புதிய படைப்புகளைப் பார்க்கத் தூண்டிக்கொண்டே போயிருக்கிறது. பெரிய திட்டங்கள் என்று இல்லை. புதுமைக்காகப் புதுமை என்பதும் இல்லை. சிறிய அளவிலான யோசனைகள்தான்.

படைப்புத் தொடர்பான தீவிர ஆவேசம் தெரிகிறதே உங்களிடம். . .
அந்த ஆவேசம் எப்போதும் இருந்து இப்போதும் இருப்பதுதான். ஒரு மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசையிலிருந்து பிரிக்க முடியாத ஆவேசம் அது. உலக இலக்கியப் படத்தில் சிறிய நாடுகள், சிறிய மொழிகள்கூட அவற்றுக்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. தமிழ் மரபும் செழுமையும் கொண்ட மொழி. இங்கும் பெரிய காரியங்கள் நடக்க வேண்டும். அதற்கான சூழல் உருவாக வேண்டும். எழுத்தாளன் சமூக மதிப்பைப் பெற வேண்டும். எழுதுவது மட்டுமே படைப்பு என்று நான் நினைக்கவில்லை. படைப்புக்கு வெளியே சக மனிதனிடம் நாம் வெளிப்படுத்தும் சிந்தனைகள், வாசிப்பில் நாம் கொண்டிருக்கும் ஆர்வம், சுயப்பரிசோதனை, சொல்லையும் செயலையும் இயன்ற அளவு இணைப்பதற்கான முயற்சி, ஜீவராசிகள் அனைத்தின்மீதும் கொள்ளும் பரிவு எல்லாமே படைப்பு மனத்திலிருந்து தோன்றுபவைதான்.

உங்கள் எழுத்தை வாசிக்கும்போது முரண்பாடுகள்மீதான உணர்வுகளையே காண முடிகிறது. தனிமனிதர்கள்மீதான முரண்பாடு, தத்துவங்கள்மீதான முரண்பாடு. உங்களுக்குத் தனி மனிதன், சமூகம், சமூக நிறுவனங்கள், தத்துவங்கள் எதுவுமே திருப்தியைத் தரவில்லையா?

சமூக வாழ்க்கையில் எனக்குத் திருப்தி இல்லை. தத்துவங்கள் சார்ந்தும் சமூக ஒழுக்கங்கள் சார்ந்தும் மனிதன் போடுகிற வேஷம் மிகப் பெரிய சீரழிவை உருவாக்குகிறது. உயர்வானவையும் மனித ஸ்பரிசம் படும்போது கீழிறக்கம் கொள்கின்றன. பதவியைப் பிடிக்கத் தத்துவங்களைப் பயன்படுத்தும்போது உபயோக மதிப்பு உள்ளார்ந்த சாரத்தை அரித்து விடுகிறது. பார்வையற்றோர் பள்ளிக்கு வெளிநாட்டிலிருந்து வரும் உணவை ஆசிரியர்கள் திட்டமிட்டுத் திருடுகிறார்கள். மனிதன் மேலானவன் என்பதை ஒரு ஸ்லோகமாக்க நான் விரும்பவில்லை. மனிதநேயம் படைப்பாளி நம்பித் தீர வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அல்ல.

படைப்பாளியிடம் அனுபவம் சார்ந்த பார்வைதான் வலிமையாக இருக்க வேண்டும். சகல பாதிப்புகளும் அந்த அனுபவத்துக்குள் இருக்கின்றன. மனித ஸ்திதியை அது எவ்வளவு கேவலமாக இருக்கும் நிலையிலும் புரிதல் சார்ந்து மேலெடுத்துச் சென்றுவிட முடியும். பிரக்ஞைபூர்வமான வேஷதாரிகளைத் திருத்துவது மிகக் கடினம். வேஷதாரி களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகம் தமிழ்ச் சமூகம். கபடமற்ற ஜனங்களின் சரிவு அல்ல பிரச்சினை. திட்டமிட்டு ஏமாற்றும் சக்திகளின் கூட்டு ஒப்பந்தம்தான் பெரிய பிரச்சினை.

நீங்கள் உணர்ச்சிபூர்வமாக இருந்தாலும் உங்கள் மொழி ஆளுகையில் அறிவின் மொழியினூடாக உங்கள் சிந்தனை வெளிப்படுவது எப்படி சாத்தியமாகிறது?

தமிழ்ச் சூழலில் உணர்ச்சியின் பீறிடல்களைச் சிறுவயதிலிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன். புகழும் பணமும் பதவியும் தேடித் தர ஏற்ற விற்பனைப் பண்டமாகவே உணர்ச்சியின் பீறிடல் தமிழ்ச் சமூகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் மேடைக் கத்தல்கள், தமிழ்த் திரைப்படங்களில் கண்ணீரின் பிரவாகம், வணிக எழுத்தாளர்களின் நெகிழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் எதிராக நான் என் உணர்ச்சியைச் செம்மை செய்துகொள்ள விரும்பினேன். வாசகர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் சுயமான விமர்சனம் உருவாகும். இந்த விழிப்புநிலையிலிருந்துதான் ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும் செயல்பாடுகள் தோன்றுகின்றன. அறிவு சார்ந்த மொழி உருவாகும்போது இன்னும் ஆரோக்கியமான விவாதங்களை நடத்த முடியும். இப்படியெல்லாம் யோசிக்கிறேன்.

மதங்களில், தத்துவங்களில் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்பது உங்கள் குரலாக உள்ளது. மனிதர்கள் பற்றிப் பிடிப்பதற்கு ஏதாவது ஒரு ஆதாரம் தேவையில்லையா? உங்கள் அனுபவம் சார்ந்து இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மனிதர்களின் சமய நம்பிக்கைகளுக்கு எதிராக நான் எதுவும் சொல்ல விரும்புவதில்லை. அவன் விரும்பும் சமயத்தில் அல்லது தத்துவத்தில் அல்லது சிந்தனைகளில் நம்பிக்கை கொள்ளட்டும். எவற்றினூடாகவும் மனித வாழ்க்கை சார்ந்த விமர்சனமும் கனவும் ஒருவனுக்கு இருக்குமென்றால் அவனுடன் விவாதம் செய்ய எனக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் எந்தத் துறையைச் சேர்ந்த போலிகளுடனும் நான் விவாதத்தில் ஈடுபட முடியாது. அது என்னையே அழித்துக் கொள்வதாகும். முற்போக்கு, பிற்போக்கு சார்ந்த பழைய இலக்கணங்கள் எல்லாம் சுக்கு நூறாகத் தெறித்துவிட்டன. சங்கராச்சாரி ஜாதி புத்தி கொண்ட பிற்போக்குவாதி என்பது என் எண்ணம். ஜெயலலிதா பக்தி கொண்ட வீரமணி எந்த விதத்தில் முற்போக்குவாதி? பொதுவுடைமைவாதிகள் – இவர்களில் பலர் முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் – கால் நூற்றாண்டேனும் சகல மனித ஒடுக்கல்களையும் அறிந்த நிலையில் சோவியத் சர்வாதிகாரத்துக்குத் துணை போனவர்கள். தங்கள் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய விளக்கம் எதுவும் அளிக்காமலே அவ்வாழ்க்கை புதைந்துபோய்விட்ட திருப்தியில் இப்போதும் ஜனநாயகம் பற்றியும் சமூக முன்னேற்றம் பறஞறியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தனிமனிதன் எந்த அளவுக்குச் சமூக மனிதனாகவும் இருக்கிறான் என்பது எனக்கு முக்கியம். எந்த அளவுக்கு வெளிப்படையாகவும் பகிர்ந்துகொள்கிறவனாகவும் இருக்கிறான்? சமூகப் பிரக்ஞையுடன் செயல்படுகிறானா அல்லது ஏமாற்றுவதற்காகச் செயல்படுகிறானா? படைப்பாளியின் எழுத்து எந்தவிதமான வாழ்க்கையைச் சென்றடைய அவன் கனவு காண்கிறான் என்பதைக் காட்டுகிறது. மனித சாரத்தைப் பேண முற்படுகிறவர்களுடன் நான் மானசீக உறவு வைத்துக்கொண்டிருக்கிறேன். என் ஊரையும் உலகத்தையும் தழுவிய உறவு இது.

நீங்கள் முதல் எழுதத் தொடங்கிய நாவல் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’. 38, 40களில் அக்கதை நடக்கிறது. ஆனால் இடையில் உங்களுடைய இரு நாவல்கள் வெளிவந்தன. மூன்றாவது நாவலாகத்தான் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ வெளிவந்தது. தமிழ்ச் சூழலில் ஏன் அந்த நாவல் அதிகக் கவனம் பெறாது போய்விட்டது. இதுவே உங்கள் முதல் வெளிவந்த நாவலாக இருந்தால் நீங்கள் தமிழில் அதிகக் கவனத்துக்குரிய படைப்பாளியாக ஏற்கப்பட்டிருப்பீர்களா?

நான் 1978, 79 காலங்களில்தான் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை எழுதத் தொடங்கி னேன். (இப்போது வெளிவந்திருப்பது அதிலிருந்து வெகுவாக விலகிவந்த ஒரு எழுத்துருவம்.) ஆகவே இது என் முதல் நாவல் அல்ல. முதல் நாவலாக வந்திருந்தால் அதிகக் கவனம் பெற்றிருக்கும், மூன்றாவது நாவலாக வந்ததால்தான் கவனம் பெறாது போய்விட்டது என்பது உண்மை என்றால் அது கவனம் பெறாமல் போனது நல்லதுதான். ஏனென்றால் அதன் உயிர்ப்பு சார்ந்து அது வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் எனக்கு இருக்கிறதே தவிர அதன் வரிசை சார்ந்து அது வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

என் மூன்று நாவல்களில் மிக முக்கியமான நாவலாக நான் கருதுவது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’தான். அதுதான் வாழ்க்கையை அதன் முழுமையான தளத்திற்கு விரித்துப் பார்க்க முயல்கிறது. அது காட்சியளிக்கும் வகையிலேயே எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டால் அது எனக்கு ஒரு இழப்புத்தான். அந்த நாவலில் வரிகளுக்குப் பின்னால் இருக்கும் வரிகள் மிக முக்கியமானவை என்று நம்புகிறேன். அவற்றைத் தொகுத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு தொகுத்துப் பார்க்க சிரத்தையான, ஆழமான வாசிப்புத் தேவை. அதை ஊடுருவி வாசித்த பின்பும் ஏற்கவில்லையென்றால் அதை நான் மதிக்கிறேன். இதற்கு மேல் செய்ய எதுவும் இல்லை. மோஸ்தர் சார்ந்த புறக்கோலங்கள் இல்லை என்ற காரணத்திற்காக அது உதாசீனப்படுத்தப்பட்டால் வாசகனுக்கு அது ஒரு இழப்பு என்றே சொல்வேன்.

உங்கள் எழுத்துக்களின் பின்னால் ஒரு தொனி இருக்கிறது. இப்போது இருப்பவன் புரிந்துகொள்ளா விட்டாலும் எதிர்காலத்தில் என்னைப் புரிந்துகொள்ளும் ஒரு வாசகன் வருவான். அவனுக்காகவே நான் எழுதுகிறேன் என்கிறீர்கள். அப்படியான வாசகன் வந்துவிட்டானா?

திட்டவட்டமாக அப்படி சொல்ல முடியாது. வாழும் காலத்தில் அங்கீகாரம் பெற முடியாத எழுத்தாளன் தன் உயிர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள எவ்வளவோ வாக்கியங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதில் ஒன்றுதான் ‘இன்று இல்லையென்றாலும் நாளை ஒளி வரும்’ என்பது. சமூக ஸ்திதி¬யும் எழுத்தாளனின் ஆதங்கத்தையும்தான் இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன. பலருக்கு ஒளி வராமல் போயிருக்கிறது. புல் முளைத்து மண்டியிருக்கிறது. எதிர்மறையான சூழலில் நம்பிக்கை கொண்டு செயல்பட பல மந்திரங்கள் தேவையாக இருக்கின்றன. போன நூற்றாண்டு முழுக்கப் பல படைப்பாளிகள் வெவ்வேறு வகைகளில் இந்த மந்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். சிலருக்குக் காலம் துணை நின்றும் இருக்கிறது.

உங்கள் ‘காற்றில் கலந்த பேரோசை’யில் ஜீவாவைப் பற்றி எழுதியுள்ளீர்கள். பெரியார் உங்களைப் பாதிக்கவில்லையா? இத்தேர்வுக்கு அரசியலும் ஒரு காரணமாக இருக்குமோ?

ஜீவா எங்கள் ஊரைச் சேர்ந்தவர். பத்து வயது வாக்கில் நான் அவரைப் பார்த்தாயிற்று. பின்பு அவரது மறைவு வரையிலும் அந்தத் தொடர்பு நீடித்தது. எங்கள் ஊருக்குப் பெரியார் வந்துபோகக் கூடியவர் என்றாலும் என் குடும்பப் பின்னணியில் அவர் பெயர் அடிபடவே இல்லை. சிறுவயதில் நான் மலையாள எழுத்தாளர்களைத்தான் அதிகம் படித்தேன். எம். கோவிந்தன், சி. ஜே. தாமஸ், தகழி, பஷீர் போன்றவர்களை. எங்கள் பகுதி தமிழகத்துடன் இணைந்த பின்புதான் எனக்குப் பெரியார்மீது கவனம் வந்தது. அவருடைய உண்மை உணர்ச்சியை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த உண்மைகளை அவர் முன்வைக்கும் முறைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் ஈரமோ, அழகியலோ, அரவணைப்போ இல்லை.

பெரியாரை நீங்கள் நிராகரிப்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட மொழி சம்பந்தமாக மட்டும்தானா?

பெரியாரை நான் நிராகரிக்கவில்லை. அவருடைய கருத்துகளில் பெரும்பான்மையானவை நான் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். சொல்முறை பற்றிச் சொன்னேன். மொழிக்கும் கருத்துக்குமான உறவு எனக்கு மிக முக்கியம். அவரது இயக்கத்தில் அவர் ஒருவர்தான் சொல்லோடு செயலை இணைத்திருந்தவர். பின்னால் வந்தவர்கள் எவரையுமே அப்படி சொல்ல முடியாது. அரசியல் தளத்தில் ஆகப் பெரிய அநாகரீகங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். அந்த இயக்கத்தின் இன்றையச் சரிவு கொடுமையானது.

நீங்கள் மார்க்ஸிய சித்தாந்தத்தில் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கிறீர்கள். பின்னால் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இவ் இடைவெளி மார்க்ஸியத்தின் போதாமை காரணமாக ஏற்பட்டதா அல்லது மார்க்ஸிய நிறுவனங்களின் பலவீனங்களின் அடிப்படையில் ஏற்பட்டதா?

மார்க்ஸியம் ஒரு தத்துவம்தான். சமய நெறி அல்ல. தத்துவங்கள் காலத்தின் போக்குக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்ய இடம் தருபவை. அந்த வாசலை இங்கு சாத்திவிட்டார்கள். குறுகிய நோக்கங்களுக்காக தத்துவங்கள் பயன்படுத்தப்படும்போது அவை இறுகி அதன் சாராம்சத்தை இழந்து அடையாளங்களாக மாறிவிடுகின்றன. அடையாளங்கள் சார்ந்து நம்பிக்கை மதிப்பிடப்படுகிறது. இந்த விஷயங்களைத்தான் நான் ‘ஜே. ஜே : சில குற¤ப்புக’ளில் சொல்ல முயல்கிறேன். தத்துவத்துடன் நான் நேரடியாக மோதவில்லை. மிகப் பெரிய நாகரீகத்தை உருவாக்க முற்படுகிறவர்கள் கருத்துச் சுதந்திரம், ஜனநாயகப் பண்பு ஆகியவற்றில்கூட நம்பிக்கையற்ற அதிகாரிகளாக மாறுவதுதான் என் பிரச்சினை. எல்லா அரசியல் கட்சிகளிலும், சமய அமைப்புகளிலும் இந்த நிலை இருக்கிறது.

சுந்தர ராமசாமி என்ற படைப்பாளியை, ஆளுமையை உருவாக்குவதில் மலையாளச் சூழலுக்கு எந்தவிதமான பங்களிப்பு உள்ளது?

பெரிய அளவில் பங்களிப்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது. இடதுசாரிச் சிந்தனைகளில் கவனம்கொள்ள என்னைத் தூண்டியவை மலையாள எழுத்துகள்தான். மார்க்ஸிய பார்வை கொண்ட சிறுகதைகளை நான் ஆரம்பகாலத்தில் எழுதத் தூண்டுதல் பெற்றதும் மலையாளப் படைப்பிலக்கியத்தின் பாதிப்பாக இருக்கலாம்.
ஈழத்து தமிழ்ச் சூழலில் மேற்கு நாடுகளுக்கான தமிழ் புலம் பெயர்வு அதிகமாக நடந்திருக்கிறது. அங்கு போய் தமிழில் எழுதுகிறார்கள். தமிழில் புலம் பெயர்

​இலக்கியம் என்ற ஒரு அம்சம் ஏற்பட்டுள்ளது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?
என்னை மிகவும் பாதித்த விஷயம் இது. இருபத்தைந்து வருடங்களாகவே எனக்கு ஈழத்து எழுத்தாளர்கள் பலர் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். அங்கு நிகழ்ந்த எல்லாப் பிரச்சினைகளையும் இவர்களைப் பற்றிய என் ஞாபகங்கள் வழியாகத்தான் பார்க்கிறேன். புலம் பெயர்ந்த தமிழர்களையும் அவர்கள் வசிக்கும் இடங்களையும் ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது. கசப்பான பல உண்மைகள் இருக்கின்றன. அவர்களுடைய வாழ்க்கை அங்கு நீடிக்கும் என்றால் அவர்கள் குடும்பங்களிலிருந்து தமிழ் வெளியே போய்ச் சூழலில் இருக்கும் மொழி உள்ளே வந்து விடும். குழந்தைகளால் தமிழைக் காப்பாற்ற முடியாது. இது வரலாற்றின் கட்டாயம். இந்தத் தலைமுறையில் ஏதேனும் தமிழ் எழுத்துகள் வந்தால்தான் உண்டு. படைப்பு உருவாவதற்கு மொழியறிவு மட்டும் போதாது. மொழி சார்ந்த வாழ்க்கையும் வேண்டும்.

பின் நவீனத்துவக் கோட்பாட்டைத் தமிழ்ச் சூழலுடன் எப்படி பொருத்திப் பார்க்கிறீர்கள்?

பின் நவீனத்துவக் கோட்பாடும் தமிழ்ச் சூழலும் இன்றுவரையிலும் பொருந்தாமல்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். படைப்புகள் வழியாக அதன் பாதிப்பு குறிப்பிடும்படி நிகழ்ந்ததாகவும் தெரியவில்லை. சகல முனைகளிலும் சுதந்திரத்தின் எல்லைகளை விரிக்க வேண்டும் என்றாலும் கூட நடைமுறையில் பாலியல் விவரணைகளில் மட்டும்தான் விரிக்கப்படுகிறது. இது அதிர்ச்சி மதிப்புக்குத் தரும் முகஞகியத்துவம் தவிர வேறு அல்ல. பின் நவீனத்துவக் கோட்பாட்டைத் தமிழ்ச் சூழலுடன் இணைத்துக் காட்டும் படைப்புச் சிந்தனை தோன்றும் என்றால் அந்தச் சிந்தனை இன்னும் அதிகக் கௌரவத்தைப் பெறும். படைப்பிலக்கியத்தையும் பாதிக்கும்.

தமிழ் சிற்றிதழ் வரவில் காலச்சுவடு மிக முக்கியமானது. அச்சிற்றிதழ் வருகைக்கான குறிக்கோள்கள் எட்டப்பட்டு விட்டனவா? இப்போது எங்கே நிற்கிறது?

இப்போது காலச்சுவடை உருவாக்குவதில் எனக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. கண்ணனும் மனுஷ்ய புத்திரனும் அவர்களது நண்பர்களின் உதவியுடன் செய்து வரும் காரியம். நான் நடத்தி வந்த காலச்சுவடின் எல்லைகள் இப்போது பெரிய அளவுக்கு விரிந்திருக்கின்றன. குறிக்கோளைச் சென்றடைந்துவிட்டோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தமிழ் வாசகர்களிடையே மிகப் பெரிய விழிப்புநிலையையும் சுதந்திர உணர்வையும் உருவாக்க வேண்டும். வாழ்க்கையை மதிப்பிடவும் மறுபரிசீலனை செய்யவும் புதியவற்றை ஏற்கவும் பழையவற்றைக் கழிக்கவும் அவர்களால் சாத்தியப்பட வேண்டும்.

தமிழ் இனி 2000 சந்திப்பில் எதைச் சாதிக்க வேண்டுமென விரும்பினீர்கள்?

தமிழ் இனியை உருவாக்கியவர்களின் நோக்கம் எல்லோரும் கூடி கடந்து வந்த பாதையைப் பற்றியும் இனி நடக்க வேண்டிய பாதையைப் பற்றியும் ஆழமாகச் சிந்திப்பது என்பதுதான். அதன் நோக்கம் ஓரளவு நிறைவேறிற்று என்று ந¤னைக்கிறேன். இதன் மூலம் பல நல்ல விளைவுகள் கூடி வரவேண்டும்.

அண்மைக்காலமாக ஈழத்துடன் உங்களுக்கான தொடர்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொடர்பாக உங்கள் மனநிலை என்ன?

ஈழத்து இலக்கியம் பற்றிச் சொல்வதென்றால் கவிதைப் படைப்புகளிலும் விமர்சனச் சிந்தனைகளிலும் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டியிருக்கிறது. சமீப காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த வாழ்க்கை நெருக்கடிகள் மிகப் பெரிய நாவலுக்கான களத்தை விரிப்பவை. அவ்வகையான முயற்சிகள் தோன்றாமல் இருப்பது புரிந்து கொள்ள முடியாத கேள்வியாகவே இருக்கிறது. தங்களைப் பற்றித் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் மிகையான அபிப்பிராயங்களையும் பிறர் உருவாக்கும் மிகையான அபிப்பிராயங்களையும் மறுபரிசீலனை செய்ய அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

எதிர்காலத்தில் படைப்புகளைத் தரும் உத்தேசங்களில் உங்களை ஈடுபடுத்தியிருக்கிறீர்களா?

நிச்சயமாக. ஒருசிலவேனும் கூடி வரும் என்று நம்புகிறேன்.

2. செ. கணேசலிங்கன்

எழுத்தாளர்கள் பெருகி இருக்கின்றார்கள்;

எழுத்து வளரவில்லை!

ஈழத்தமிழ் எழுத்தாளர்களுள் மூத்த முன்னோடிகளுள் ஒருவரான செ. கணேசலிங்கன் அவர்கள், சென்னை வடபழநியில் வசித்து வருகின்றார். இப்போது அவருக்கு வயது 89. 2011 ஆம் ஆண்டு ‘ஈழத்தமிழ் எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் நான் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட நூலுக்கு, இந்து ஆங்கில ஏட்டில் விமர்சனம் வெளியாகி இருந்தது. அதை எழுதியவர் ஐயா கணேசலிங்கன் அவர்கள். அப்போதே அவரைச் சந்தித்து நேர்காணல் செய்ய விழைந்தேன். இப்போதுதான் வாய்ப்பு அமைந்தது. 27.4.2017 அன்று சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். சன்னமான குரலில்தான் பேசினார். கூர்ந்து கவனித்து உரையாடலைப் பதிவு செய்தேன். அதைத் தட்டச்சு செய்து கொண்டு போய் அவரிடம் கொடுத்தபோது வியந்தார். நீங்கள் ஏதோ சும்மா கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள் என்று நினைத்தேன். வரி பிறழாமல் அப்படியே எழுதி இருக்கின்றீர்களே. You are a brilliant என்று பாராட்டினார்.

அவரைப்பற்றிய ஓர் அறிமுகம்

ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை அறக்கட்டளையின் 45 ஆம் ஆண்டு விழாவின்போது (15.3.2008), இவருக்கு எஸ்கேஎம் இலக்கிய விருது அளித்துச் சிறப்பித்துள்ளனர். அவ்விருதில் வழங்கிய தகுதிப்பட்டயத்தில்

இவரைப் பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்புகள்....

1942 இல் சிறுகதை எழுத்தாளராக ஈழத்து இலக்கிய வானில் உதயமாகி,

1965 இல் நீண்ட பயணம் என்ற புதினத்தின் மூலம் முழு நிலவாகப் பரிணமித்தார். ஈழத்தின் வடபகுதியில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராக இவரது தூரிகை நர்த்தனமாடியது.

பகவத் கீதையும்/திருக்குறளும்,

மாக்கியவல்லியும், வள்ளுவரும்

அர்த்தசாஸ்திரமும், திருக்குறளும்

என்ற மூன்று ஒப்பீட்டுத் திறனாய்வு நூல்களில் வள்ளுவம் மற்றவற்றோடு உடன்படும், முரண்படும் இடங்களைத் தெள்ளிதின் விளக்கியுள்ளார்.

அன்போடு இயைந்த வாழ்வும், அறத்துடன் நடத்தும் அரசியலும் வள்ளுவரின் உயர்தனிச் சிந்தனைத் துளிகள் என்ற கருத்தினை நிறுவிய பாங்கு இவரது நுண்மான் நுழைபுலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. மார்க்சியச் சிந்தனையாளரான இவர், தமிழகச் சித்தர்களையும் இஸ்லாமிய சூபிகளையும் ஒப்பிட்டு இவர்களின் ஒரே சிந்தனை ஓட்டத்தைத் தெள்ளிதின் விளக்கிய மாண்பு போற்றுதலுக்குரியது. ஏனெனில் இவரது தந்தையாரே ஒரு சித்தராக வாழ்ந்தவர். நீண்ட பயணம், செவ்வானம், சடங்கு ஆகிய புதினங்கள் மக்களிடையே விளங்கி வந்த சாதிய ஏற்றத்தாழ்வுக் கொடுமைகளுக்கு மரண அடி கொடுக்கும் மூன்று தலைமுறைக் கதைகளாய்ப் பரிணமித்து, ஆங்கில முத்தொகுதி இலக்கியத்தினை ஈழத்திற்கு அறிமுகப்படுத்திய சிறப்பு அறிஞர் செ.கணேசலிங்கன் அவர்களையே சாரும். ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனிச்சிறப்புடன் வைத்து எண்ணத்தகுந்த திறன் உடையவராய் விளங்கி வருகிறார். கடித இலக்கியம், திறனாய்வு, புதினம், சிறுகதை, ஒப்பீட்டு, இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் இவர் தனித் தன்மை பெற்ற பன்முகப் படைப்பாளி இவர். இதுகாறும் 41 புதினங்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 20 கட்டுரைத் தொகுப்புகள், இவர் தமிழுக்கு அளித்த அறிவுக்கொடை ஆகும். ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனக்கென அழியாத முத்திரை பதித்தவர். ஈழக்கலவரத்திற்குப் பின் புலம் பெயர்ந்து, இதுபோது சென்னை வடபழநியில் வாழ்ந்து வருகின்றார். மரணத்தின் நிழலில் என்ற அரிய படைப்புக்கு, 1996 இல் தமிழக அரசு விருது நல்கியுள்ளது. சென்னையில் இவர் நடத்திவரும் குமரன் புத்தக இல்லம் இதுவரை 200 நூல்களுக்கும் மேல் வெளியிட்டுள்ளது. ஈழத்து எழுத்தாளர்களின் அரிய நூல்களை வெளியிட்டு வருவதனால், தீவிர வாசகர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், வேண்டும் ஆதாரங்களைத் தருவதன் மூலம், அவ்வரிய நூல்கள் எல்லாம் மறைந்துவிடும் நிலையில் இருந்து மீட்டுள்ளார். தமிழனாய்ப் பிறந்ததன் பயனாய் தமிழ் இலக்கியத்திற்கு அரை நூற்றாண்டாய் அரும்பணி ஆற்றித் தன் நன்றிக்கடனைச் செலுத்திக் குடத்தில் இட்ட விளக்காய் ஒளிர்ந்து வரும் இவரது பேரொளி, குன்றில் இட்ட விளக்காய் விளங்கப் பேரவா கொண்ட இப்பேரவை இவ்வாண்டிற்கான எஸ்கேஎம் விருதினை வழங்குவதன் மூலம் தன் கடமையைச் செய்கிறது.

அறிஞர் செ.கணேசலிங்கன் அவர்களின் பணி தொடரட்டும்.

இனி அவருடன் எனது நேர்காணல்......

ஐயா, உங்கள் இளமைப் பருவம் குறித்துச் சொல்லுங்கள்.

என் சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் உரும்பிராய் என்ற கிராமம். 1928 ல் பிறந்தேன். அப்பா செல்லையா. தாய் ராசம்மாள். தந்தை மலேசியாவில் வேலை செய்தவர். பிறகு இலங்கைக்கு வந்து தோட்டத்தில் வேலை பார்த்தார். பிறகு யாழ்ப்பாணத்தில் சொந்த விவசாயம். காய்கறிகள்தான் அதிமாகப் பயிரிட்டோம். கத்தரி, வெண்டை, புகையிலை விளைவித்தோம். யாழ்ப்பாணம் சந்தையில்தான் விற்பனை. ஒருகாலம் வரையிலும் புகையிலையைக் கேரளத்திற்கு ஏற்றுமதி செய்து வந்தோம். பிறகு அதற்கு இந்தியா தடை விதித்தது. அத்தோடு நின்று போய்விட்டது.

நாங்கள் ஐந்து ஆண் பிள்ளைகள்தான். பெண்கள் ஒருவரும் இல்லை. மூத்தவர் சுப்பிரமணியம். அடுத்தது நான். எனக்கு இளையவர்கள் சோமசுந்தரம் கனடாவிலும், தெட்சிணாமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் இங்கிலாந்திலும் வசிக்கின்றார்கள். இப்போது இருக்கின்ற பரமேஸ்வரா பல்கலைக்கழகம் கல்லூரியாக (மேனிலைப்பள்ளி) இருந்தபோது அங்கே இன்டர் சயின்ஸ் படித்தேன். ‘அட்வான்ஸ் லெவல்’ என்று இப்போது சொல்கிறார்களே அதற்குத்தான் அப்போது இன்டர் சயின்ஸ் என்று பெயர். அப்போது இலங்கையில் தேர்வு அமைப்புகள் கிடையாது. மெட்ரிகுலேசன் சான்றிதழ் கூட லண்டனில் இருந்துதான் வந்தது. பி.ஏ. பைனல் படிக்க முடியாமல் பிரச்சினைகள் ஆகிவிட்டன. பிறகு அக்கவுண்டன்சி செய்தேன். 1950 இல் அரசாங்க சேவையில் சேர்ந்து விட்டேன். ஆரம்பப் பணிதான். பிறகு, முதலாவது ஸ்டேண்டர்டுக்கு வந்தேன். ஐஏஎஸ் போல அங்கே இருக்கின்ற தேர்வு எழுதுகின்ற வேளையில் ஒரு பிரச்சினை வந்தது. இந்தியாவுக்கு வந்து விட்டேன். மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் அங்கே போய்ப் பணியில் சேர்ந்தேன். பிறகு சில ஆண்டுகளில் விலகல் கடிதம் கொடுத்து வெளியே வந்து விட்டேன்.

உங்களுடைய வாசிப்பு எப்படித் தொடங்கிற்று?

மாணவனாக இருந்தபோதே பத்திரிகைகள் வாசித்துப் பழக்கம். 40களில் ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு ஒரு கதை எழுதி அனுப்பினேன். அதற்கு முதல் பரிசு கொடுத்தார்கள்.

130 ரூபாய்க்கு மணி ஆர்டர் வந்தது.

அன்றைக்கு அது பெரிய காசு. அதன்பிறகு கொழும்பில் இருந்து வருகின்ற பல ஏடுகளுக்கு எழுதிக் கொண்டே இருந்தேன்.

எல்லாமே கதைகளும், நாவல்களும்தானா? அரசியல் கட்டுரைகள் எழுதினீர்களா?

அரசியல் கட்டுரைகள் எழுதவில்லை. செல்வநாயகம் நடத்திய சுதந்திரன் ஏட்டிலும் கூட சிறுகதைகள்தான் எழுதினேன். ஈழத்தமிழர்களுக்கு ஒரு பெரிய தலைவர் அவர்தான். அடுத்து பாரி நிலையத்திற்கு நாவல்கள் எழுதினேன். அதன் உரிமையாளர் செல்லப்பா நல்ல நண்பர் ஆனார்.

உங்கள் எழுத்துப்பணி எப்படித் தொடங்கியது?

1958 இல் இருந்து சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். முதல் சிறுகதை ‘அறிவு’ 1965 முதல் நாவல்கள் எழுதத் தொடங்கினேன். ஓராண்டுக்கு இரண்டு நாவல்கள்தான் எழுதுகிறேன். ஒவ்வொன்றும் சராசரியாக 176 பக்கங்கள். பெரும்பாலும், சென்னையில் உள்ள பாரி நிலையம்தான் வெளியிட்டது.

முதலாவது சிறுகதைத் தொகுப்பு சங்கமம்.

நீங்கள் எழுதிய முதல் நாவல் எது?

நீண்ட பயணம். சிறுகதைத் தொகுப்புகள் ஐந்து வெளியிட்டு இருக்கின்றேன். அதில் 200 க்கு மேல் சிறுகதைகள் உள்ளன. எழுதிய நாவல்கள் 65. என்னுடைய புத்தகங்களின் பின் பகுதியில் அந்தப் பட்டியல் உள்ளது. இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றேன்.

அந்தக் காலத்தில் என்னென்ன நாளிதழ்கள்,வார இதழ்கள் வெளிவந்தன?

‘தினகரன்’ அதில் ஒவ்வொரு வாரமும் சிறுகதைகள் எழுதிக்கொண்டு இருந்தேன்.

சுதந்திரன் என்று ஒரு பத்திரிகை வந்தது.

அதிலும் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதினேன்.

அங்கேயே அச்சிட்டீர்களா?

இல்லை. எல்லாமே சென்னையில்தான் அச்சிட்டோம். பாரி நிலையத்துக்காரர்கள்தான் வெளியிட்டார்கள். பிறகு அவர் என்னிடம் நீங்களே சொந்தமாக ஒரு பதிப்பகம் தொடங்குங்கள் என்று சொன்னார். அதனால் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ என்ற புத்தக நிலையத்தைத் தொடங்கினேன். அதை இப்போது என் இரண்டாவது மகள் நடத்திக் கொண்டு இருக்கின்றாள்.

என்னுடைய மூத்த மகள் குந்தவி அமெரிக்காவில் பாஸ்டனில் வசிக்கின்றார். அவருக்கு இரண்டு பிள்ளைகள்.

அடுத்தது மகன் குமரன். தற்போது கொழும்பில் ‘குமரன் பப்ளிஷிங் ஹவுஸ்’ என்ற பெயரில் புத்தக வணிகத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றார்.

எத்தனை புத்தகங்கள் வெளியிட்டு இருக்கின்றீர்கள்?

ஏறக்குறைய 100 புத்தகங்கள் வெளியிட்டு இருக்கின்றோம். தமிழக அரசின் நூலக ஆணையத்தின் கொள்முதலை நம்பித்தான் தொழில் நடத்திக்கொண்டு இருந்தோம்.

ஒவ்வொரு ஆண்டும் பத்துப் பதினைந்து தலைப்புகள் கொடுப்போம். நான்கைந்து புத்தகங்கள் வாங்குவார்கள். அதை வைத்து எப்படியோ சமாளித்துக் கொண்டு வந்தோம்.

ஜெயலலிதா வந்தபிறகு அந்தக் கொள்முதல் அப்படியே நின்று போய்விட்டது. ஆனால் நான் எப்படியும் ஆண்டுக்கு இரண்டு நாவல்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றேன்.

பாடப்புத்தகங்கள் அச்சிட்டதில் நல்ல வருமானம் கிடைத்தது. அந்த லாபத்தில்தான் கொழும்பில் ஒரு பெரிய அச்சகத்தையும் அமைத்தோம். இப்போது அந்தத் தொழிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேக்கம் அடைந்து வருகின்றது.

இங்கே புத்தக விற்பனை வெகுவாகக் குறைந்து விட்டது. அச்சகம் இப்போது இல்லை.

இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றீர்களா?

ஆமாம். கருப்பும் வெள்ளையும் என்ற எனது அடுத்த நாவல் அடுத்த மாதம் வெளியாகிறது.

கைலாசபதி, சிவத்தம்பி

எழுத்து உலகில் உங்களுடைய நண்பர்கள் யார்?

கைலாசபதி, சிவத்தம்பி இருவரும்தான் என்னுடைய நெருங்கிய தோழர்கள். இருவருமே பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.

கைலாசபதி ஜார்ஜ் தாம்சனிடம் படித்து முனைவர் பட்டம் பெற்று வந்தார். தாம்ப்சன் ஒரு பெரிய மார்க்சிஸ்ட்.

கைலாசபதி எழுதிய ‘Tamil Heroic Poetry’ என்ற சங்க இலக்கிய ஆராய்சி மிக அருமையானது. சமூகவியல் குறித்து நிறைய எழுதி இருக்கின்றார். அதற்கு நிகர் சொல்ல முடியாது. அவர் எழுதிய ‘பண்டைத்தமிழர் தமிழர் வாழ்வும் வழிபாடும்’ என்ற நூலை நான் கொண்டு வந்து பாரி நிலையம் வழியாக வெளியிட்டபிறகுதான், இந்தியாவில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. கல்லூரிகளில் எல்லாம் அந்த நூலைத் தேடிப் படிக்கத் தொடங்கினார்கள்.

ஒரு சினிமாவை, ஒரு கதையை, ஒரு நாவலை எப்படி ஆராய்வது என்பது குறித்து கைலாசபதி மட்டும்தான் எழுதி இருக்கின்றார். அவருடைய தரத்திற்கு எழுதுபவர்கள் யாரும் இன்றைக்கு இல்லை. கொஞ்சம் கடினமாக இருக்கும்.

‘செவ்வானம்’ என்ற என்னுடைய முதலாவது நாவலுக்குக் கைலாசபதிதான் முன்னுரை எழுதினார். அவருடைய முதல் நான்கு புத்தகங்களை பாரி நிலையம் வெளியிட்டது. அதன்பிறகு மற்ற எல்லாப் புத்தகங்களையும் நான்தான் வெளியிட்டேன்.

நாடகத்துறை என்றால் சிவத்தம்பிதான். கொழும்பில் என்னுடைய வீட்டுக்கு எதிர் வீடுதான். அவருடைய புத்தகங்களை என் மகன் குமரன் வெளியிட்டு இருக்கின்றார்.

மார்க்சியத்தைப் புரிய வேண்டுமானால்

Historical Material, Diabolical Material இரண்டும் தெரிய வேண்டும்.

இவை இரண்டும்தான் அடிப்படை.(Base Materials) இதில் நான் எழுதியவை சிறப்பாக இருப்பதாகச் சொல்லுவார்கள்.

சில நாள்களுக்கு முன்பு காலமான கண்ணன் என்பவர் மார்க்சிய நூலகம் ஒன்று வைத்து இருந்தார். நல்ல தமிழ் அறிஞர். மார்க்சியம் படிப்பதற்கhக அவரிடம் வருகின்ற மாணவர்கள், ‘என்ன சார் எவ்வளவுதான் படித்தாலும் ஒன்றும் புரியவில்லையே?’ என்று சொல்லுவார்களாம்.

அப்போது அவர், ‘நீங்கள் முதலில் கணேசலிங்கம் எழுதிய குந்தவைக்குக் கடிதங்கள், குமரனுக்குக் கடிதங்கள் ஆகிய புத்தகங்களைப் படித்து விட்டு வாருங்கள். பிறகு நான் சொல்லித் தருகிறேன்’ என்று சொல்லுவாராம். இதை அவரே என்னிடம் சொன்னார். அந்த அளவுக்குப் பிரபலமான புத்தகங்கள் அவை.

பத்திரிகை எழுத்து என்றால் நாங்கள்தான். ஒரு வலுவான குழுவாக இருந்தோம். வேறு அணிக்கு மாற முடியாது. அவர்களும் எங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கைலாசபதி, சிவத்தம்பி இருவருமே தவறி விட்டார்கள். பழைய ஆள்களுள் நான் ஒருவன்தான் இருக்கின்றேன்.

கைலாசபதி இறந்தபிறகு அவருடைய மனைவியிடம்தான் உரிமைகள் இருந்தன. அவருடைய 13 புத்தகங்களையும் வெளியிடும் உரிமையை அவர் எனக்குக் கொடுத்தார்.

நான் அதை என் மகளுக்கு எழுதிக் கொடுத்தேன். இப்போது என்னுடைய இரண்டாவது மகள்தான் புத்தக விற்பனையைக் கவனித்துக் கொள்கின்றார். கைலாசபதியின் மூத்த மகளும், என்னுடைய மகளும் சேர்ந்துதான் அந்தப் புத்தக விற்பனையைக் கவனித்துக் கொள்கின்றார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் ஒரு பேராசிரியரை இந்து ராம் அறிமுகம் செய்து வைத்தார். அவருக்கு எங்கள் மூவரைப் பற்றியும் நன்கு தெரிந்து இருந்தது. அப்படி இங்கே குறிப்பிட்ட சிலருக்கு எங்களைப் பற்றி நன்றாகத் தெரியும்.

கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக என்னுடைய நினைவு ஆற்றல் வெகுவாகக் குறைந்து விட்டது. வேறு பெயர்கள் நினைவுக்கு வரவில்லை.

இந்து ராம் நட்பு

இந்து ராம் உங்களுக்கு எப்படிப் பழக்கம்?

‘மண்ணும் மக்களும்’ என்று ஒரு நாவல் எழுதினேன். அது ஒரு புரட்சிகர நாவல் என்று சொல்லித்தான் கரைச்சல் வந்தது. எனவே, இலங்கையில் அதைத் தடை செய்தார்கள்.

அப்போது ராம் அமெரிக்கhவில் படித்துக் கொண்டு இருந்தார். நான் எழுதிய சில நாவல்களை அவர் படித்திருந்தார். இங்கே வந்தபிறகு என்னை சந்திக்க விழைந்தார். அப்படித்தான் தொடர்புகள் ஏற்பட்டன. அப்போது ஏற்பட்ட பழக்கம் இன்றுவரையிலும் தொடர்கின்றது. இந்து அலுவலகத்தில் அவரது அறைக்குப் பக்கத்திலேயே எனக்குத் தனியாக ஒரு இடம் ஒதுக்கிக் கொடுத்து நான் தொடர்ந்து எழுதுவதற்கு வசதி செய்து கொடுத்து இருக்கின்றார். அங்கேதான் உட்கார்ந்து எழுதுகிறேன். 36 ஆண்டுகளாக எங்கள் நட்பு தொடர்கின்றது.

இந்த வயதிலும் அங்கே போகின்றீர்களா?

ஆமாம். வீட்டில் இருந்து வடபழநி வரை நடந்து போய், பேருந்தில் ஏறினால், அண்ணா சாலையில் இந்து அலுவலக வாசலிலேயே இறக்கி விட்டு விடுவார்கள். அதுதான் எனக்கு நாள்தோறும் நடைப்பயிற்சி. அங்கே நான் காகிதத்தில் எழுதுவதை இந்து தமிழ் ஏட்டில் வேலை பார்க்கின்ற கண்ணன் என்ற தம்பி தட்டச்சு செய்து தருகின்றார்.

1991 ஆம் ஆண்டு மனைவி இறந்து விட்டார். மகன் குமரன் அவ்வப்போது சென்னைக்கு வந்துபோவார். புத்தகக் காட்சிக்கு வருவார். அவருக்கு ஒரு மகன். அமெரிக்காவில் என் மூத்த மகள் இருக்கின்றாள். அவரைப் பார்ப்பதற்காகப் பாஸ்போர்ட் எடுக்க வேண்டி இருந்தது. எனவே, இலங்கைக்குச் சென்று பாஸ்போர்ட் எடுத்தேன். அமெரிக்காவுக்குப் போய்ப் பார்த்தேன். மூன்று மாதங்கள் அங்கே தங்கி இருந்தேன்.

என்னுடன் பிறந்த ஒரு தம்பி கனடாவிலும் மற்றும் இரு தம்பிகள் இங்கிலாந்திலும் இருக்கின்றார்கள். இங்கிலாந்துக்குச் சென்று அவர்களுடன் ஒரு மாதம் தங்கி இருந்தேன். மு.வ. நூற்றாண்டு விழாவுக்காக மலேசியாவுக்கு ஒருமுறை சென்று வந்தேன். வேறு எந்த வெளிநாட்டுக்கும் போனது இல்லை.

அயல்நாடுகளில் உங்கள் புத்தக விற்பனை எப்படி இருக்கிறது?

அந்தக் காலத்தில் கொஞ்சம் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தோம். அதெல்லாம் இப்போது நின்று போய்விட்டது. அஞ்சல் செலவுகள் அதிகமாகி விட்டபடியால் அனுப்ப முடியவில்லை.

உங்களுடைய நாவல்களின் கரு என்ன?

சமூக அரசியல் முற்போக்கு நாவல்கள்தான். என்னுடைய நடை தனியானது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கொடைக்கானல் சென்று ஒரு வாரம் அல்லது பத்து நாள்கள் தங்குவேன். ஒரு நாவல் எழுதி முடித்து விடுவேன். அப்படி 25 ஆண்டுகளாகக் கொடைக்கானல் சென்று வந்தேன்.

கொடைக்கானலில் தேவதாஸ் என்ற ஒரு சர்ச் பாதர் நண்பர் ஆனார். அவருடைய வீட்டிலேயே நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தார்.

அது எனக்கு எளிதாகப் போயிற்று. அங்கேயே தங்கி எழுதுவேன். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அங்கே போக முடியவில்லை.

தந்தை செல்வா அவர்களோடு தொடர்புகள் உண்டா? ஈழப்பிரச்சினையில் உங்கள் கருத்து என்ன?

ஆதரவுதான். ‘ஓபராய் தேவன்’ என்று ஒருவர் இருந்தார். ஓபராய் ஓட்டலில் வேலை செய்ததால் அவருக்கு அந்தப் பெயர். எழுபதுகளில் அவர் ‘தமிழ் ஈழ ஆர்மி’ என்று வைத்து இருந்தார். என்னைத் தேடி வந்து ஆதரவு கேட்டார்.

அவருக்கு நான் உதவிகள் செய்தேன். அதேபோல அப்போது இருந்த மற்ற பல இயக்கங்களுக்கும் நான் இந்து ராமைக் கொண்டு சிலபல உதவிகள் செய்தேன். சில சின்ன குழுக்களை எல்லாம் அவர்களை எல்லாம் உமா மகேசுவரனோடு சேர்த்து விட்டேன்.

அதற்குப் பிறகு பிரபாகரன் வந்தார். எல்லோருக்கும் இங்கே பயிற்சிகளும் கொடுத்தார்கள். எதிர்பாராத சில விபத்துகளாலே எல்லாமே மாறிப் போச்சு.

பிரபாகரனைச் சந்தித்து இருக்கின்றீர்களா?

யாழ்ப்பாணத்தில் பார்த்து இருக்கின்றேன். ஆனால் பழக்கம் இல்லை.

அரசாங்கத்திடம் இருந்து உங்களுக்கு மிரட்டல்கள், சிறைவாசம் ஏதும் உண்டா?

அந்த நாவலால்தான் பிரச்சினை உண்டானது. அதனால்தான் இந்தியாவுக்கு வந்தேன்.

நீங்கள் எந்தக் கட்சியிலாவது உறுப்பினராக இருந்தீர்களா?

உறுப்பினராக இல்லை. தந்தை செல்வா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நன்றாகத் தெரியும்.

ஈழத்தமிழர் பிரச்சினை

ஈழப்பிரச்சினை குறித்து உங்கள் கருத்து என்ன?

அது ஒரு தேசியப் பிரச்சினை. தமிழ் ஈழம் தனியாகப் பிரிந்தாக வேண்டும்.

ஒரு தேசியப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு மூன்று நான்கு கூறுகள் மிக முக்கியமாகத் தேவை.

ஒன்று மொழி.

அடுத்தது சமயம்.

அடுத்தது நிலம். சைகாலஜிகல் பேக்டர்.

இலங்கையில் என்ன நடந்தது என்றால்,

56 இல் சிங்களவர்தான் தேசியப் பிரச்சினையை முதலில் எடுத்தார்கள்.

அந்த எழுச்சியில்தான் பண்டாரநாயகா ஆட்சிக்கு வந்தார்.

இனப்பிரச்சினை குறித்து ஸ்டாலின் சொல்லி இருக்கின்றார்.

ஒரு நாட்டில் மூன்று நான்கு மொழிகள், சமயங்கள் இருந்தால், அதில் ஒருவர் தேசியப் பிரச்சினையைக் கையில் எடுக்கும்போதுதான் மற்றவர்களும் அதைக் கையில் எடுப்பார்கள்.

இலங்கையில் முதலில் சிங்களவர்கள்தான் பிரச்சினையைத் தொடங்கினார்கள்.

சிங்கள மொழியைக் கையில் எடுத்தார்கள். அதனால்தான் தமிழன் இனப்பிரச்சினையைப் பேச வேண்டியதாயிற்று.

அது ஒரு பெரிய போராட்டமாக ஆனது.

ஒரு தேசிய இனப் பிரச்சினை என்பது நெருப்பு மாதிரி. எளிதில் பற்றிக்கொள்ளும். இப்போது நாம் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றோம். ஏன் என்றால், ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்து அது முடிந்து போயிற்று. அதற்குக் காரணம் இந்தியா போன்ற வேறு நாடுகளின் உதவி இல்லை. ராஜீவ் காந்தி படுகொலை எல்லாவற்றையும் மாற்றிப்போட்டு விட்டது. கடைசியாக நடைபெற்ற தேர்தலில் தமிழரை ஓட்டுப் போடாதீர்கள் என்று சொன்னதாலே ராஜபக்சே வெற்றி பெற்று விட்டான். அதுவும் ஒரு பெரிய கேடாக அமைந்து விட்டது.

முதலில் சிங்களவர்கள் சிங்கள மொழியைக் கையில் எடுத்தாலும், சமயத்தை அவ்வளவாக எடுக்கவில்லை.

ஏன் என்றால், பௌத்த சமயத்திற்கும், சைவ சமயத்திற்கும் ஓரளவுக்கு இணக்கமான போக்குகள் உண்டு. இப்போது அவர்கள் நிலத்தை எடுத்து இருக்கின்றார்கள்.

வடக்கு கிழக்கு எங்கட நாடு.

இனி எதிர்காலத்தில் இதுதான் பெரிய பிரச்சினையாக முன்னுக்கு நிற்கப் போகின்றது.

இப்போது பேச்சுவார்த்தைகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், விக்னேசுவரன் பிரபாகரன் வழியைத்தான் பின்பற்றுகிறார். இன்றைக்கோ நாளைக்கோ பிரச்சிiனைகள் ஏற்படாது.

ஆனால் ஐந்து பத்து ஆண்டுகள் கழிந்தபிறகு, அப்போதைய மாணவர்கள் தேசிய இனப்பிரச்சினையைக் கையில் எடுப்பார்கள். அப்போது பெரிய போராட்டம் வரும்.

பேச்சுவார்த்தைகளில் ஒன்றும் நடக்காது. அவன் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பான்.

1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தையே அவர்கள் இன்னமும் செய்து தரவில்லையே?

அப்போது ராஜீவ் கhந்தி சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து பேசினார். எம்.ஜி.ஆரும் கலந்துகொண்டார். பெரிய கூட்டம். நானும் அந்தக் கூட்டத்துக்குப் போயிருந்தேன்.

‘இலங்கைத் தமிழருக்கு நான் மூன்றில் ஒரு பங்கு நாடு வாங்கிக் கொடுத்து விட்டேன்’ என்று ராஜீவ்காந்தி பேசினார்.

அதில் மேலும் இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. ஒன்று, தமிழ் போலீஸ் இருக்க வேண்டும். இரண்டாவது நாடு. நிலம் தனியாக இருக்க வேண்டும். இந்த இரண்டையும் அவர்கள் தரவே இல்லை.

கடைசிக்கட்டப் போர் முடிந்து ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

சொல்லிக்கொண்டே இருப்பார்களே ஒழிய கொடுக்க மாட்டார்கள். ஏன் என்றால், இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை என்பது தமிழருக்கு மட்டும் அல்ல; சிங்களவர்கள் இடையேயும் இருக்கின்றது.

இவர்கள் சட்டப்படியாகத் தமிழருக்கு ஏதும் கொடுக்க முனைந்தால், உடனே சிங்களவர்களுள் யாரேனும் ஒருவர் அதைப் பெரிய பிரச்சினையாக ஆக்குவார். அல்லது யாரேனும் ஒரு பிக்குவே தொடங்குவார். அதற்கு ஒரு ஆயிரம் பேர் சேருவார்கள்.

அது பெரிய பிரச்சினையாக ஆகி விடும். இந்தியாவில் காஷ்மீர் பிரச்சினையும் அப்படித்தான். அதற்காக அவர்கள் பலவிதமான தியாகங்களைச் செய்து கொண்டே இருப்பார்கள்.

ஒரு நல்லது நடந்தது. ராஜபக்சே தோற்றுப் போய்விட்டான். அது நல்லது. அவன் பெரிய கhதகன். ரணில் மேற்கத்திய ஜனநாயகத்தைப் பின்பற்றிப் பேசுவார். ஆனால் அவராலும் ஒன்றும் செய்ய முடியாது. மைத்ரி ரணிலோடு இருக்கின்றார்.

எழுபதுகளுக்கு முன்பு அங்கே இடதுசாரி அரசியலை முன்னெடுத்தார்கள்.

கைலாசபதி, சிவத்தம்பி நாங்கள் எல்லோருமே சிங்கள இடதுசாரிகளோடு சேர்ந்து செயல்பட்டோம். அதன்பிறகுதான் அது தேசிய இனங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மாறிவிட்டது.

தேசிய இனப்பிரச்சினை குறித்து நீங்கள் அறிய வேண்டுமானால், பெனடிக்ட் ஆண்டர்சன் எழுதிய புத்தகத்தைத்தான் நீங்கள் படிக்க வேண்டும்.

ஏதோ கம்யுனிட்டி என்று பெயர் வரும். தேசிய இனப்பிரச்சினை என்றால் என்ன என்பதை நாங்கள் இலங்கையில் நேரடியாகப் பார்த்துவிட்டோம்.

இனப்பிரச்சினையால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் இருந்ததா?

இங்கே உள்ள மவுண்ட் ரோடு போல கொழும்பில் காலே ரோடு உண்டு. அங்கே வெள்ளவத்தையில் என்னுடைய புத்தகக் கடையில் சனிக்கிழமை இரவு கணக்கு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். திங்கட்கிழமை காலையில் கடையை முழுமையாக எரித்துச் சாம்பலாக்கி விட்டார்கள்.

என் கடையைச் சிங்களவர்கள் எரிக்கும்போது போலீஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

சிங்களவர்களோடு இராணுவமும் சேர்ந்து கொண்டு தமிழர்களின் உடைமைகளை எல்லாம் கொள்ளை அடித்தார்கள். அரிசி மூட்டை, மாவு மூட்டைகளை எல்லாம் அள்ளிப் போட்டுக் கொண்டு போனார்கள். அப்படி ஒன்றல்ல நூறு சம்பவங்கள்.

இப்போது எங்கள் கிராமத்திற்கு நாங்கள் போக முடியாது. அங்கே எங்களுடைய வீட்டில் வேறு யாரோ குடியிருக்கின்றார்கள்.

எங்களுடைய நிலத்தையும் வேறு யாரோ பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். எங்கள் நிலத்திற்குப் பக்கத்தில் இராணுவ முகாம் அமைத்தார்கள்.

அதனால் எங்கள் நிலம் மதிப்பு இழந்து போய்விட்டது. எங்கள் சொத்துகளுக்கhன பத்திரங்கள்,

ஆவணங்கள் எல்லாம் எங்களிடம் உள்ளன. ஆனால் யார் அங்கே போய்க் கேட்பது? 15 கிரவுண்டு நிலம் இருக்கும்.

ஐந்தாறு ஆண்டுகளுக்கு ஒரு கையெழுத்துப் போடுவதற்காக யாழ்ப்பாணத்திற்குப் போய் நான்கு நாட்கள் எங்கள் அண்ணா வீட்டில் தங்கி இருந்தேன். ஆனால் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கொழும்புக்குப் போய் வருகிறேன்.

அண்ணாவும் இறந்து போய்விட்டார். நாங்கள் ஓடி விளையாடிய இடங்களை எல்லாம் பார்க்கையில் வேதனையாக இருக்கின்றது.

அதை அனுபவிக்க முடியாது. ஆட்கள், சொந்தம், நிலம், வீடு எல்லாவற்றையும் பறி கொடுத்தாயிற்று. அதை விளக்க முடியாது.

அனுபவித்தால்தான் உணர முடியும். நினைத்தாலே நெஞ்சம் பதறும்.

போலீசும், நிலமும்தான் பெரிய பிரச்சினைகள். அதைத் தருவதாக ஒப்புக்கொண்டவர்கள் தரவில்லை. இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுள் தமிருடைய நாடு என்பது வடக்கும், கிழக்கும்தான்.

மற்ற ஏழு மாகாணங்களிலும் சிங்களவர்கள்தான் பெரும்பான்மை.

புத்த பிக்குகள் கொடுக்க விட மாட்டார்கள். இன்றைக்குத் தமிழர் பகுதிகளில் எல்லாம் சிங்கள ஆர்மிதான் நிற்கின்றது. பேச்சுவார்த்தையில் தீர்வு என்பது நடக்கhது.

கல்வி, வேலை வாய்ப்புகளில்தான் பிரச்சினைகள் தொடங்கியது அல்லவா?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் போதிய கல்வி நிறுவனங்கள் இல்லை. வெள்ளைக்காரன் காலத்தில் ஒரேயொரு பல்கலைக்கழகம்தான். அதுதான் பிரச்சினைக்குக் காரணம் ஆயிற்று. அப்போது ஆங்கிலத்தில் நடைபெற்ற தேர்வுகளில் தமிழ் மாணவர்கள்தான் கூடுதலாக வெற்றி பெற்றார்கள். பிறகு அவர்கள் சிங்களத்தைக் கட்டாயமாக்கினார்கள். அதுதான் பிரச்சினை.

இப்போது ஒவ்வொரு பகுதிக்கும் இவ்வளவுதான் என்று ஒதுக்கீடு கொடுத்து விட்டார்கள்.

மேனிலைக் கல்வி வரைக்கும் படிக்க முடிகின்றது. அதற்கு மேல் படிப்பதற்குத் தமிழருர்ககுப் போதிய இடங்கள் இல்லை.

செல்வநாயகம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் காலத்தில் நன்றாகப் படிக்க முடிந்தது. அவர்களுக்குப் பிறகு வாய்ப்பு கிடைக்கhத இளைஞர்கள்தான் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

அவர்கள் ஒவ்வொரு கல்லூரி (மேனிலைப்பள்ளி) வாசலிலும் வேன்களைக் கொண்டு போய் நிறுத்தி, நாங்கள் ஆயுதப் பயிற்சி பெறத் தமிழ்நாட்டுக்குப் போகிறோம்; யாரெல்லாம் வருகிறீர்கள்? என்று கேட்பார்கள். வீட்டுக்குப் போகாமல் பெற்றோரிடம் சொல்லாமல் அங்கிருந்து அப்படியே அந்த வேன்களில் ஏறிக்கொண்டுதான் இந்தியாவுக்குப் பயிற்சி பெற வந்தார்கள்.

அப்போது இந்தியாவில் நிறைய இடங்களில் பயிற்சி கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். நான் பல முகாம்களைப் பார்த்து இருக்கின்றேன்.

ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு இடத்தில் பயிற்சி. பிரபாகரன் குழுவினர் மதுரை, மற்றொரு குழு தேனி, சபாரத்தினம் குழு வேறு ஒரு இடத்தில் எனப் பயிற்சி பெற்றுக் கொண்டு இருந்தார்கள். அதற்கு இந்திய அரசு முழுமையாக உதவிகள் செய்தது.

பிறகு

இந்தியக் கடற்படைதான் புலிகளுக்கு வருகின்ற ஆயுதக் கப்பல்களைக் காட்டிக் கொடுத்தது. அதன்பிறகுதான் சிங்கள ஆர்மி அதன் மேல் குண்டுகள் போட்டு அழித்தது.

அப்போதே புலிகளுக்கு நாம் தோற்கப் போகிறோம் என்பது தெரியும். அதற்கு ஏற்ற வகையில் கடைசிக்கட்டத்தில் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டு இருக்க வேண்டும். அவர் கே.பி.யை நம்பினார்.

அவன் சிங்களவர்களோடு சேர்ந்து ஏமாற்றி விட்டான். அதனால்தான் அழிவு ஏற்பட்டது. இந்தியாவிடம் இருந்து எந்த உதவிகளையும் பெற முடியவில்லை.

ராஜினி என்ற பெண் கடைசிக்கட்டப் போர் குறித்து ஒருபுத்தகம் எழுதி இருக்கின்றார்.

ஒரு கூர்வாளின் கதை. அதில் எல்லா விவரங்களையும் சொல்லி இருக்கின்றார்.

அந்தப் பெண் இறந்தபிறகுதான் அந்தப் புத்தகத்தை வெளியிட்டார்கள்.

அதில் சொல்லப்பட்டவை எல்லாம் உண்மை.

உங்கள் நூல்களைப் பற்றி யாரும் ஆய்வு செய்து இருக்கின்றார்களா?

பலர் செய்து இருக்கின்றார்கள். பெயர்கள் நினைவு இல்லை.

எழுத்தை ஓரங்கட்டிய திரைப்படங்கள்

உங்களுடைய வாழ்க்கை வரலாறை எழுதி இருக்கின்றீர்களா?

‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற நூலில் 1956 வரை எழுதி விட்டேன். அதற்குப்பிறகும் எழுதி வைத்து இருக்கின்றேன். ஆனால் வெளியிடவில்லை. என்னுடைய காலத்திற்குப் பிறகு அதை வெளியிடுமாறு சொல்லி விட்டேன். பெரிதாக இல்லை. சுருக்கமாகத்தான் எழுதி வைத்து இருக்கின்றேன்.

நான் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடத்துவது இல்லை. அண்மையில் கூட ஒரு நண்பர் ராமைக் கொண்டு ஒரு புத்தகம் வெளியிட வேண்டும் என்றார். எனக்கு அதில் விருப்பம் இல்லை.

இங்கே எவ்வளவோ எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். ஆனால் எழுத்து அவ்வளவாக வளரவில்லை. ஏன் என்றால், சினிமா உச்சகட்டத்திற்கு வளர்ந்து விட்டது.

தொலைக்காட்சிகளில் 24 மணி நேரமும் சினிமா ஓடிக்கொண்டே இருக்கின்றது. இப்போது பிள்ளைகள் சினிமாதான் பார்க்கின்றார்கள்;

படிக்கின்ற ஆர்வம் இல்லை.

1942 ஆம் ஆண்டு இலங்கையில் ‘வனராணி’ என்று ஒரு படம் தயாரித்தார்கள்.

அதில் கதாநாயகியாக நடித்த பிள்ளை தமிழ்ப்பெண்தான். தோட்டத்துப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்.

சேலையை மார்புக்கு மேலே கட்டி இருப்பார். அதற்கு மேல் ஜாக்கெட் கிடையாது.

அந்தப் படத்தை இங்கே தமிழ்நாட்டிலும் வெளியிட்டார்கள்.

அப்போது ‘ஆனந்த விகடன்’ உள்ளிட்ட அனைத்து ஏடுகளும் அதைக் கண்டித்து எழுதினார்கள். தமிழ்நாட்டின் மானம் மரியாதை எல்லாமே போய்விட்டது என்று சொன்னார்கள்.

நாங்கள் கெடுத்துவிட்டோம் என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்குத் தொலைக்காட்சிகளில் முழுநேரமும் சினிமா போடுகிறார்களே, அதைப் பாருங்கள். எப்படியெல்லாம் காட்டுகிறார்கள்.

ஆனால் இலக்கியத்தை அந்த அளவுக்கு யாரும் தொடுவதாக இல்லை.

நான் எழுதுவதை யார் படிக்கின்றார்கள்?

ஐம்பது, அறுபதுகளில் ஒரு நாவல் வெளியாகிறது என்றால், எங்கும் அதைப்பற்றித்தான் பேசுவார்கள். அன்றைக்கு 1000 புத்தகங்கள் அச்சிட்டோம். இன்றைக்கு 500 ஆகிவிட்டது.

பெண்களுக்குத் தேவையான எல்லாமே தொலைக்காட்சிகளில் இருக்கின்றது. புத்தகம் வாங்கிப் படிக்கத் தேவையே இல்லை.

நாவல் யார் வெளியிடுகின்றார்கள்? எதையோ எழுதிக்கொண்டு போகிறார்கள்.

என்னுடைய காலத்திற்குப் பிறகு யாராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் நான் எழுதிக்கொண்டு இருக்கின்றேன்.

எல்லாமே 40000 சொற்களுக்குள், 176 பக்கங்கள் என்ற அளவில்தான் எழுதுகிறேன்.

இந்து ஏட்டில் கட்டுரைகள் எல்லாமே சொல் கணக்குதான்.

இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று சொல்லி விடுவார்கள்.

பழகியவர்களுக்கு அது மிக எளிது.

3. நாகரத்தினம் கிருஷ்ணா

தனிமனித விடுதலை சமூக விடுதலை (நேர்காணல்)

(இந்த நேர்காணலை 2019 இறுதியில் பேராசிரியர் பஞ்சு சார் எடுத்திருந்தார். என அரிதாக வாய்த்த நண்பர்களில் அவரும் ஒருவர் என கடந்துபோகமுடியாது, அப்படியொரு மாமனிதர். அவருடைய நேர்காணல் என்கிறபோது மறுக்கவா முடியும் சம்மதித்தேன். காலச்சுவடுக்கு அனுப்பிவையுங்கள் என்றார். நட்பு காரணமாக காலசுவடு இதழ் அதன் பொறுபாசிரியர் கண்ணன் ஆகியோரிடம் உரிமை பாராட்டமுடியும் என்றாலும் நேர்காணல் என்னைப்பற்றியது என்பதால் தயங்கினேன், அனுப்பவில்லை. ஒரு வருடம் ஓடிவிட்ட து. மதுரையிலிருந்து தமிழ்த்தேசன் இமயக்காப்பியன் என்ற நண்பர் படைப்பாளிகளின் நேர்காணல்களை ஒரு தொகுப்பாக கொண்டுவருவதாகவும், என்னிடம் ஏதாவது நேர்காணல் இருக்கிறதா எனக்கேட்டார். பஞ்சுவிடம் ஒருவருடமாக கையிலிருக்கும் நேர்காணலை அனுப்பிவைக்கலாமா என்று கேட்டேன். அவர் இதழொன்றில் வந்தால் நன்றாக இருக்குமென்றார். நண்பர் தமிழ்த் தேசனுக்கு கவிஞர் மதுமிதா எடுத்த பழைய நேர்காணலொன்றை அனுப்பிவிட்டு, பஞ்சுவின் நேர்காணலை கடந்த மார்ச் மாதம் காலசுவடுக்குக்கு அனுப்பி வைத்தேன். பேராசிரியர் க. பஞ்சுவிற்கும், காலச்சுவடு பொறுபாசிரியருக்கும் நன்றிகள் )

* எழுதணும் என்கிற மனநிலைக்கு உங்களைச் செலுத்திய பின்புலங்களைக் கூறுங்கள்.

ஒலியின் உதவியுடன் மொழியைத் தேடவும், சொற்கள் வளம்பெற்றவுடன் எழுத்தைத் தேடவும் மனிதனை உந்தியது எதுவோ அது என்னுள்ளும் இருந்திருக்கலாம். குழந்தைகள் தம் உள்ளுணர்வை வெளிப்படுத்தச் சுவரைத் தேடுவதுபோல, எனக்கும் என்னுடையதென்று இட்டுக்கட்டிக் கதைவிட கிராமத்தில் என்வயதுத் தோழர்களைத் தேடிய அனுபவம் உண்டு. வீட்டில் அம்மா அதிகம் வாசிப்பவர் , கிராமப் பஞ்சாயத்தின் சிறிய நூலகமும் உதவியது. ஒன்பதாம் வகுப்பு படித்தபோது கிராமத்து ஆசிரியையிடம் சில இதழ்கள் கிடைத்தன. வாசிப்பை அச்சிறுவயதிலேயே வளர்த்துக் கொண்டதும் எழுதக் காரணமாக இருந்திருக்கலாம். உயர்நிலைப் பள்ளியில் ‘எண்ணம்’ என்ற கையெழுத்து இதழை மரியதாசு என்ற ஆசிரியர், பள்ளி ஓவிய ஆசிரியர் இளங்கோவன் உதவியுடன் தொடங்கினார். ஆசிரியப்பாவில் எழுதிய எனது முதல் கவிதை அதில் வெளிவந்தது. அந்த வயதுக்குரிய கட்டுரைகளும், ஒன்றிரண்டு கதைகளும் அப்போது எழுதினேன். என் தந்தை உட்பட ஊர்ப்பெரியவர்களை விமர்சனம் செய்து அபத்தமான அடுக்குமொழியில் நாடகம் எழுதியிருக்கிறேன். ஓர் இளைஞன் தற்கொலைசெய்துகொண்டு தன் கண்களைத் தானம் செய்வதாகச் சொல்லப்பட்ட எனது முதல் கதையை அம்மா இரசிக்கவில்லை.

* முதலில் வெகு சனம் சார்ந்த பெரும் பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த நீங்கள் தீவிரமான படைப்புச் சூழலில் எப்போது வந்தீர்கள்.?

அப்போதெல்லாம் வெகுசன பத்திரிகைகள் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு என்றிருந்தன. அவர்களைத் தவிரப் பிற படைப்பாளிகளின் எழுத்துக்கள் இடம்பெற, குமுதம் போன்ற இதழ்கள் இருந்தால்கூட எழுத்துக்கெனச் சில வரையறைகளை வகுத்துக்கொண்டு – படித்த நடுத்தர வகுப்பினரை, வாசகர்களை ஈர்க்கும் சக்தி எழுத்துக்கு இருக்கிறதா ? – என்கிற அடிப்படையில் படைப்பாளிகளைத் தேர்வு செய்தார்கள். அன்று தீவிர இலக்கியம் பேசும் இதழ்களும் அபூர்வம். நவீனத் தமிழிலக்கியத்தில் இரண்டொருவரைத் தவிர நாம் கொண்டாடும் பலர்( குறிப்பாக உரைநடைஇலக்கியவாதிகள்) வெகுசன இதழ்களால் அறிமுகம் ஆனவர்கள். காலப்போக்கில் அவ்விதழ்கள் காட்சி ஊடகங்களுக்குப் பலி ஆகும் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து பிரான்சுக்குக் குடிபெயர்ந்தேன். ஆங்கிலத்தில் அலிஸ்ட்டெர் மக்ளீன், ராபர்ட் லுட்லம், ஜான் கிரிஷாம் என்று வாசித்துக்கொண்டிருந்தவனுக்கு, கி மாப்பசானும், எமிலி ஜோலாவும், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன் போன்றவர்களும் வேறுவகையான பேசு பொருளை, மொழியை அறிமுகப்படுத்தினார்கள். கவிதையிலிருந்து சிறுகதை மற்றும் நாவல் வடிவம், வெகுசன இதழ்களிலிருந்து இணைய இதழ்கள்,சிற்றிதழ்களெனத் தொடர்ச்சியாக இடப்பெயர்வுகள் எனக்குள் நிகழ்ந்தன. ஆக மொத்தத்தில் பிரான்சில்குடியேறியதற்கும், இன்றைய எனது எழுத்திற்கும் நிறையத்தொடர்புகள் இருக்கின்றன.

Like what you read?
{{global.chaps[0].like_count}} {{global.chaps[0].like_text}}
Like what you read?
{{global.chaps[1].like_count}} {{global.chaps[1].like_text}}
Like what you read?
{{global.chaps[2].like_count}} {{global.chaps[2].like_text}}
Like what you read?
{{global.chaps[3].like_count}} {{global.chaps[3].like_text}}
Like what you read?
{{global.chaps[4].like_count}} {{global.chaps[4].like_text}}
Like what you read?
{{global.chaps[5].like_count}} {{global.chaps[5].like_text}}
Like what you read?
{{global.chaps[6].like_count}} {{global.chaps[6].like_text}}
Like what you read?
{{global.chaps[7].like_count}} {{global.chaps[7].like_text}}

{{user_data.book_status}}

Biographies & Autobiographies | 8 Chapters

Author: Tamizhdesan Imayakappiyan

Support the author, spread word about the book to continue reading for free.

POARINRI AMAIYAATHU ULAGU-4

Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}

Be the first to comment
Reply To: {{insta_features.post_comments_reply.reply_to_username}}
A-
A+
{{global.swiggy_msg_text}}