மனிதநேயத்தின் அடையாளமாய் மண்ணுலகில் வாழும் மனிதர்களால் போற்றப்படும் இயேசுவின் வாழ்க்கைச் சக்கரத்தை தனது மனப்பரப்பில் ஓடவிட்டு, சிலுவைச் சித்தர் ஜோசப்மோகன் குமார் எழுதியுள்ள, 'ஒரு தச்சனின் கதை' எனும் நூல் புதுக்கவிதைப் பூக்களால் தொடுக்கப்பட்டுள்ளது. கவிதைகள் படிக்க படிக்க தித்திக்கிறது. எழுதுகோலை தூரிகை யாக்கி வார்த்தை மை எடுத்து இவர் தீட்டியுள்ள கவிதைகளை வெறும் எழுத்துக்களாக பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு கவிதையும் உயிர்பெற்ற ஓவியமாகவே புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கிறது.
புத்தகத்தின் முதல் பக்கம் தொடங்கி முற்றுப்பெற்ற பக்கம் வரை வர்ணனை மழைகளால் படிக்கின்றவர்களின் இதயங்களை நனைத்திருக்கிறார். சிலுவைச் சித்தர் வார்த்தைகளைத் தேடித் தேடி கையாண்டிருப்பதாகத் தெரியவில்லை. இயல்பாகவே இவரது குருதியோட்டத்தில் குழைந்தும், குவிந்தும் கிடக்கிறது கவிதை!