உண்ணும் உணவில் கொஞ்சம் கட்டுக்கம்பிகளை சேர்த்து கொள்ளுங்கள் என்று யாராகிலும் சொன்னால் என்ன செய்வீர்கள்? என்னிடம் கேட்டால் உடல் மெலிந்து, கூனி குறுகி, குருதியின் சூடு தனிந்து, ஒட்டி உலர்ந்து ஏதோ மூச்சு விடும் எண்ணங்களெல்லாம் கட்டப்பட கொஞ்சம் கவிதைகள் அவசியமே. ஒரு கவிதை சொல்லுங்களேன் என கேட்கும்போது 'அம்மா' என்ற சொல்லுக்கு மேல் கவிதை உண்டா என்று சாப்பிட்டு கை கழுவி நழுவி விடுகிறோம் நம்மில் பலர். என்றாலும் கவிதைகள் தான் எத்தனை தினுசுகள். குண்டா ஒரு கவிதை, ஒல்லியா ஒரு கவிதை, உம்முனு ஒரு கவிதை, கம்முனு ஒரு கவிதை, முகம் கழுவி, எண்ணை வைத்து தலை வாரி லட்சணமா ஒரு கவிதை, இதெல்லாம் அழுக்கா என்ன என்றொரு கவிதை, சீனி வெடியென ஒரு கவிதை, வெங்காய வெடி என மற்றொரு கவிதை, ஊசி குத்துகிற மாதிரி ஒரு கவிதை, கடப்பாரையால் ஈரலை நெம்பிவிடுகிற கவிதை. இப்படி கவிதைகள் தன்னளவில் ஊறிக்கொண்டே, நச்சரித்துக்கொண்டே இருக்கின்றன. கண்டதையும் கவிதையாக்கலாம் என்ற நம்பிக்கை கவிஞனுக்கே உரித்தான பார்வை. எழுத்துகளில் கழிவு இல்லை. இதனை வாசிக்கும்போதே உங்கள் எண்ண ஓட்டங்களை இடை மறித்து, அத்தனை மணி நேரம் இறுகியிருந்த உங்கள் உதடுகளில் புன்னகை பூத்தால், தலை நிமிர்ந்து 'ஆமா' என்று உங்களோடு நீங்களே சொல்லிக்கொண்டால் மறக்காமல் பகிருங்கள்.
- துரை. விமல்ராஜ்