சிந்தனை சிறகுகள் துவங்கும் போது இவ்வளவு சீரியஸாக தொடர்ந்து எழுதுவேன் என்றெல்லாம் யோசித்ததே இல்லை. அதுவும் அதனைப் புத்தக வடிவில் வரும் அளவுக்கு எழுதுவேன் என்று நினைத்ததே இல்லை. எல்லாம் இறையருள். ஐந்து வருடங்களுக்கு முன், நண்பர் டாக்டர். பேதுரு தேவதாசன் அவர்கள் மூலம் 'உன்னதச்சிறகுகள்' குழுவில் இணைய அழைப்பு வந்த போது, இதனை நிறுவிய நிர்வாகி, நண்பர், ஊடகவியலாளர், உலகளாவிய தொழில் முனைவோர்களின் ஊக்குநர், சகோ. Jebakumar, "நாம் எல்லோரும் எழுத வேண்டும், இன்றைய, டிஜிட்டல் தலைமுறை கிறிஸ்தவர்களுக்கு, சரியான முறையில், சரியான விடயங்களைக் கொடுக்காவிட்டால், அவர்களைக் கொத்திக் கொண்டு போக இந்த இணைய உலகம், கழுகு போல தயாராக இருக்கிறது" என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. அதனை மற்றவர்கள் எப்படி எடுத்தார்களோ எனக்குத் தெரியாது, ஆனால் நான் இதற்கென்று, எழுத, மெனக்கெட வேண்டுமென்று தீர்மானம் செய்தேன். அதற்கு ஏற்ப என் பணி வாழ்க்கையிலும், எழுதுவதற்கு ஏற்ற சூழல் மற்றும் பயணங்களும் அமைந்தது இறைவனின் ஆசியே. இவ்விதம் எனது எழுதுகோல் இயங்கக் காரணமான ஜெபக்குமார் அண்ணன், எம் குடும்ப நண்பர், மருத்துவர். பேதுரு தேவதாசன் மற்றும் உன்னத சிறகுகள் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.
850-க்கும் மேலான இந்தத் தொடர் பதிவுகளை, உன்னத சிறகுகள், பிறந்தது ஒளிர்வதற்காக, Born to Shine, கிறிஸ்க்ராஸ், நம்மைச்சுற்றி, நெகேமியா ஃபிரெண்ஸ், தென்னிந்திய திருச்சபை உறுப்பினர்கள், Renaissance Scripture Study Forum உள்ளிட்ட புலனங்கள் மற்றும் முகநூல் குழுக்களில் பதிவு செய்யவும், அதற்கு கிடைத்து வரும் ஆதரவுகளுக்கும், உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்லி மகிழ்கிறேன்.