வட “நெல்லை அப்போஸ்தல”னின் வாழ்க்கை வரலாறெழுதும் சிலாக்கியத்தைப் பெற்ற யாம், அதை எமக்குக் கிட்டின பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனம். நெல்லையத்தியட்சாதீனத்தின் முது பெருங்குருவாம் கனம் கனோன் S. பால் மாணிக்கம் ஐயரவர்கள், வடதிருநெல்வேலிக்கு அனுப்பப்பட்ட தெய்வத் திருதொண்டன் கனம் தாமஸ் கெஜற்றன் ராக்லந்து ஐயரவர்களின் வரலாற்றை ஒரு சிறு நூலாக எழுதித் தரவேண்டும் என்று கேட்டபொழுது (1973) அதை அப்பெரியார் மூலமாக எம்பெருமான் இயேசுநாதர் அனுப்பிய ஒரு கட்டளையாக மதித்து, கர்த்தருடைய சுத்தக் கிருபையினருளினால் அந்நூலை ஆக்கி முடித்தனம் (1975). கனோன் ஐயரவர்கள் அதைத் தங்கள் சொந்தச் செலவில் வெளியிட்டார்கள். ஆயிரம் பிரதிகளும் ஒரு சில மாதங்களுக்குள் விற்பனையாகிவிட்டன. நூலை வாங்கவேண்டுமென்று விரும்பின பலருக்குப் பிரதிகள் கிடைக்கவில்லை. எனவே இரண்டாம் பதிப்பை வெளியிட வேண்டிய நிலையேற்பட்டது.
கனம் பால் மாணிக்கம் ஐயரவர்கள் அப்பொறுப்பை எம்மிடம் விட்டுவிடவே, யாம் பெத்தேல் நிறுவனத்தாரை அண்மினோம். அவர்களும் மனமுவந்து அப்போஸ்தலனின் வாழ்க்கை வரலாற்று நூலை மறுபதிப்புச் செய்ய முன் வந்தனர். அவர்களுக்கு எம் நன்றி.
''நண்பர் சுவிசேஷ நற்பணி ஜெபக்குழு”வினரின் ஓவியப் பெருந்தகை திரு நவநீதர் அவர்கள் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட நூலொன்றினின்று ராக்லந்து ஐயரவர்களுடைய உருவப்படத்தை வர்ணப்படமாக்கித் தந்து உதவினார்கள். அவர்களே “வட நெல்லை மூவர்" வாழ்ந்ததும், அப்போஸ்தலன் வாழ்ந்து இறந்ததுமான பங்களாவையும், அப்போஸ்தலனின் கல்லறையையும் மேற் சொன்ன நூலில் பிரசுரிக்கப்பட்டிருந்த வண்ணமே வரைந்து தந்தார்கள், அவர்களுக்கு எம் நன்றி உரித்து.