137 Views

PULI - MAKKAL KAPPIYAM PESUGIRADHU-2

Literature & Fiction | 9 Chapters

Author: TAMIZHDESAN IMAYAKAPPIYAN

137 Views

Puli Makkal Kappiyam Pesigirathu 2 KurudimalaiUnnaiye Mayal KondenVannathikulam A book consisting of three novels.

முன்னுரை

காப்பியா வாசிப்பகம்

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்
83 இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.
எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.
மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.
85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.
தமிழக மக்களுக்கு ஈழப் போர் குறித்த வாழ்வையும் பேரினவாத அரசால் நாளாந்தம் மக்கள் படும் பேரவலத்தையும் ஒரு நூறு கவிதைகளாகவும் கதைகளாகவும் சொல்லியிருக்கிறேன். புலம்பெயர் வாழ்வில் தமிழகப் பார்வையை உரை நடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச் சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கண இலக்கிய அகராதிக் காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப் பிரதிகளாகவும், நாடோடிப் பயணங்களாகவும், கலா சாலை போதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும் பதிவு செய்திருக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் மூத்தகுடி கலாச்சாரப் பயணங்கள் மற்றும் கல்விப் புலக்கலைப் பேரதிகார நுட்பவியல் குறித்தும் மனைவி தமிழ் இனியா சொற்களை விதைத்து வருகிறார். புகார்க் காண்டத்திலிருந்து மதுரைக் காண்டம் வந்துள்ள கொடை மகன் இமயக்காப்பியன்(6) படைப்பாக்கப் பணியில் முந்நீர் போல் எமக்கு பேருதவியாக இருக்கிறான். துயரங்களின் சாட்சிகள் மரணிப்பதில்லை என்கிற காத்திரச் சொல்லின் சாட்சிகளாய் நாங்கள். கீழடி / உலகின் / மூத்த காலடி
எனக்கான உதவிகளை செய்யும் குழந்தைகள் சக்தி என்கிற விடுதலைவெண்பா, சூரியவாசன் என்கிற இலக்கியப்புரட்சியாளன், ரித்திஷா என்கிற நிழலினி, விதுஷி, பார்பி என்கிற மோனலிக்கும், பாரா முகமாகவே போய்விட்ட ஜேர்மனியில் வாழும் குழந்தைகளான பூர்த்திகா என்கிற இதழினி, அரிகரசுதன் என்கிற எளிஞன் ஆகியோருக்கும் நன்றி சொல்ல தேவையில்லை. எக்காலத்திலும் நன்றிக்குரியவர்களாக இருக்கும் என் சின்னத்தாய் செல்வி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தாருக்கும் மற்றும் எனது அக்கா பத்மாவதி, தீபாவிற்கும் நன்றிகள் பல.

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

Like what you read?
{{global.chaps[0].like_count}} {{global.chaps[0].like_text}}

குருதிமலை

தி.ஞானசேகரன்

அணிந்துரை

கலாநிதி நா. சுப்பிரமணியன் (யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்)

தமிழ் நாவலிலக்கியத்துக்கு ஈழத்து மண்ணில் ஒரு தனி வரலாறு உண்டு. 1885 இல் வெளிவந்த சித்திலெவ்வையின் அசன்பேயுடைய கதையிலிருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. கடந்த 110 ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தின் தமிழ் நாவலிலக்கியம் பல படி நிலைப் பரிணாமங்களையும் எய்தியுள்ளது. இவ்வாறான வளர்ச்சி வரலாற்றில் முக்கிய கட்டங்களை உணர்த்தி நிற்கும் தரமான படைப்புகளிலொன்று திரு. தி. ஞானசேகரன் அவர்களின் இந்தக் குருதிமலை. ஈழத்தமிழரின் ஒரு முக்கிய சமூகப் பிரிவினரான மலைகத் தோட்டத் தொழிலாளர் சமுதாயத்தினரின் பௌத்த சிங்கள பேரினவாதச் சூழலிலே தம் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்காகத் தற்காப்புப் போராட்டத்தை நிகழ்த்தி வருபவர்களின் வரைலாற்றின் ஒரு காலகட்டம் இந்நாவலின் மூலம் எமது காட்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நாவலுக்குப் பொருளாக அமையும் தொழிலாளர் சமூகம் இலங்கையின் பொருளியல் அடித்தளத்தைத் தாங்கி நிற்பது. ஆனால் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையில் பல்வகைச் சுரண்டல்களுக்கும் உட்பட்டு நின்ற இவர்களின் வரலாறு ஒரு கண்ணீர் காவியம் ஆகும். இலங்கையின் தோட்டங்களில் கூலிகளாகப் பணிபுரிவதற்காக தமிழகத்தினின்று கடந்த நூற்றாண்டில் அழைத்து வரப்பட்டவர்களின் பரம்பரையினர் இவர்கள். தோட்டங்களை நிர்வாகம் செய்தவர்களின் மனித நேய மற்ற அணுகுமுறைகள், "சுரண்டல்" உளப்பாங்கு என்பன இவர்களின் கண்ணீருக்கான தொடக்க நிலைக் காரணிகள். நாளடைவில் பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கொடூர பார்வையும் இவர்கள் மீது படிந்தது. 1948 இல் இவர்களின் குடியுரிமை பறிபோயிற்று. 1970களில் "தோட்டங்கள் தேசியமயம்" என்ற பெயரில் ஆட்சியாளரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அயற்கிராமங்களின் சிங்கள மக்கள் இத்தொழிலாளர்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பதற்குத் துணை நின்றன.

இவ்வாறு "முன்மமே தொடர்கதை" ஆகிவிட்ட இத்தொழிலாளர் சமூகத்தின் அநுபவங்களை நாவலிலக்கித்துக்குக் கருவாகக் கொள்ளும் முயற்சி "நந்தி" யின் மலைக்கொழுந்து (1964) நாவலுடன் தொடங்குகிறது@ (இவருக்கு முன்பே புதுமைப்பித்தன் தனது "துன்பக்கேணி" கதையில் (இதனைக் குறுநாவல் எனலாம்) இத்தொழிலாளர் வாழ்வின் அவலங்களைச் சித்தரித்துள்ளார் என்பது இத்தொடர்பில் நினைவிற் கொள்ளத் தக்கது) தொடர்ந்து, கோகிலம் சுப்பையா என்பாரின் தூரத்துப்பச்சை (1964) யோ. பெனடிக்ட் பாலனின் சொந்தக்காரன் (1968) தொ. சிக்கன ராஜுவின் தாயகம் (குறுநாவல் - 1969). தெளிவத்த ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை (1974) கே. ஆர். டேவிட்டின் வரலாறு அவளைத் தோற்றுவிட்டது. (1976) ஸி.வி. வேலுப்பிள்ளையின் இனிப்பட மாட்டேன் (1984) க. சதாசிவத்தின் மூட்டத்தினுள்ளே.... (1988), மாத்தளை சோமுவின் அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் முதலிய நாவல்களிலே இத்தொழிலாளர் பிரச்சினைகள் பல்வேறு நிலைகளிற் பேசப்பட்டுள்ளன.

மேற்குறித்த நாவல்களுக்கும் குருதிமலைக்கும் இடையில் குறிப்பிடத்தக்க அடிப்படை வேறுபாடு உள்ளது. தொழிலாளர்களின் பொதுவான துன்பதுயரங்கள், உள்முரண்பாடுகள், தோட்ட நிர்வாகத்தின் சுரண்டல் உளப்பாங்கு, குடியுரிமை இழப்பின் துயரவிளைவுகள் தொழிசங்க நிலையிலான போராட்ட எழுச்சிகள் முதலியவற்றிற் சிலவற்றின் சித்தரிப்புகளாக மேற்படி நாவல்கள் பலவும் அமைந்தன. தோட்ட நிர்வாகம் பற்றிய விமர்சனம், தொழிலாளர்களின் பரிதாபநிலை பற்றிய கவன ஈர்ப்பு என்பனவே மேற்படி நாவல்களில் மையப்படுத்தப்பட்ட அம்சங்கள். ஆனால் குருதிமலை நாவலின் கதையம்சம் குறித்த ஒரு பிரச்சினைச் சூழலை மையப்படுத்தியது. "தோட்டங்கள் தேசிய மயமாக்கம்" என்ற சூழலே இதன் பிரச்சினை மையமாகும். மேற்படி சூழலிலே பேருருக் கொண்டெழுந்த பௌத்த சிங்கள பேரினவாதம் என்ற ஆக்கிரமிப்பு உணர்வோட்டம் பற்றிய விமர்சனமாக இது அமைகிறது. மேற்படி ஆக்கிரமிப்பு உணர்வோட்டத்துக்கு எதிராகத் தொழிலாளர் மத்தியில் உருவான பேரெழுச்சி இந்நாவலிலே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வகையிலே குறித்த ஒரு பிரச்சினைச் சூழலை மையப்படுத்திய கதையம்சம் கொண்டது என்ற வகையிலே இப்படைப்பு மலையகத் தமிழ் நாவல் வரலாற்றிலும், பொதுவாக ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலும் தனிக்கவனத்துக்குரிய ஒன்றாகிறது.

இந்நாவலின் ஆசிரியர் யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சார்ந்தவர்@ மலையகத்திலே மருத்துவப்பணி புரிபவர்@ கலைத்துறையிற் பட்டம் பெற்றவருங்கூட கடந்த ஏறத்தாழ 30 ஆண்டுகளாகப் படைப்பிலக்கியத் துறையிற் கவனம் செலுத்திவரும் இவர் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக நோக்கும் பண்பினர். அப்பிரச்சினைகளுக்கு மனிதநேயம் நோக்கிலே தீர்வுநாடும் ஒருவராகவே இவர் தம்மை இனங்காட்டி வந்துள்ளார். காலதரிசனம் (சிறுகதைத் தொகுதி) புதிய சுவடுகள் (நாவல்) ஆகியவற்றின் மூலம் இலக்கிய உலகிலே தம்மை அடையாளங்காட்டிக் கொண்ட இவரை, "முதல்வரிசைப் படைப்பாளிகளுள் ஒருவர்" என்ற கணிப்புக்கு இட்டுச் செல்லும் சிறப்பு இந்தக் குருதிமலைக்கு உரியது. தாம் நீண்டகாலமாகப் பணி புரிந்துவரும் மலையகச் சூழலிலே தமது கவனத்துக்கு சமூகத்தின் வரலாற்று நிகழ்வுகளை ஒரு சமூகப் பார்வையாளன் தளத்தில் நுனிந்து நோக்கி ஒரு வரலாற்று ஆவனம் எனத்தக்கவகையிலே இதனை இவர் உருவாக்கியுள்ளார்.

நாவல் என்பது உண்மையில் ஒரு கதை கூறும் முயற்சியல்ல. அது குறித்த ஒரு பிரச்சினை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினைகளின் தர்க்கரீதியான வளர்ச்சியினை வரலாற்று முறையில் எடுத்துரைப்பதாகும். அது வெறும் நிகழ்ச்சி விவரணமாக அமையாமல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மனித உணர்வுகளதும் உறவுகளினதும் இயங்கு நிலைகளை உள்ளத்தைத் தொடும் அநுபவங்களாக்கித் தருவதாக அமையும்போதே நாவல் என்ற பரிமாணத்தை எய்தும். இவ்வாறு அறுபவங்களாக்கும் முயற்சியே கதையம்சமாக உருப்பெறும். குருதிமலை நாவலிலும் இவ்வாறே பிரச்சினைகளின் வரலாறு கதையம்சமாக விரிகிறது.

தோட்டங்களைத் தேசியமயமாக்கும் திட்டம் அமுலுக்கு வந்த காலத்தில் தொடக்கத்தில் மலையகத் தொழிலாளர் சமூகம் அதனை வரவேற்றது. அத்திட்டத்தால் தமது கல்வி, பொருளியல், அந்தஸ்து என்பன உயரும் என அச்சகமும் நம்பியது. ஆனால் அத்திட்டம் செயற்படத் தொடங்கிய போது அதனை அத்தொழிலாளர் சமூகம் அநுபவிக்க முடியவில்லை என்பதோடமையாமல் அதுவரை அம்மக்கள் அநுபவித்தவற்றைக் கூடப் பறிகொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அயற் கிராமங்களின் சிங்கள மக்கள் தோட்டங்களைச் சூறையாடிதோடு தொழிhளரின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்கவும் முற்பட்டனர். இவ்வாறான சூழ்நிலையிலே தொழிலாளரின் தற்காப்புப் போராட்ட எழுச்சி நிகழ்கிறது. இந்த எழுச்சியின் முன் சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பு முயற்சி பணிந்தது. ஆக்கிரமிப்பாளர் பலரும் சட்டத்தின் பிடியில் அகப்படுகின்றனர். இது தோட்டங்கள் தேசிய மயமாக்கிய காலகட்டத்தில் (1970 களில்) மலையகத்தின் பல்வேறு தோட்டங்களில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் வரலாறு. இதனை ஒரு குறித்த தோட்டக்களத்தில் சில கதைமாந்தரின் எணர்வுகளிலும் உறவுகளிலும் அநுபவங்களாக்கி கதைவடிவம் தந்துள்ளார் ஞானசேகரன்.

தோட்டங்கள் தேசியமயமாக்கத்தின் நல்விளைவுகளைத் தொழிலாளர் சமூகம் அநுபவிப்பதற்குத் தடையாக அமையும் சிங்கள பேரினவாதத்திற்குக் காட்டுருவாக அமையும் கதை மாந்தராக பண்டா முதலாளி, கிராமசேவகர் முதலியோர் அமைகின்றனர். தொழிலாள வர்க்கத்தின் பழைய தலைமை பேரினவாதத்துக்குப் பணிந்துவிட்ட நிலையில் புதிய உறுதியான தலைமை உருவாகின்றது. புத்தி சாதுரியத்தோடு தொழிலாளரை வழிநடத்தும் இத்தலைவன் போராட்டத்தில் ஏற்படுத்திய பொதுசன அபிப்பிராயத்தின் முன் ஆக்கிரமிப்பாளர் பணிந்தனர் எனக் கதை நிறைவடைகிறது.

நாவலை வளர்த்துச் செல்லும் முறையிலும் தொழிலாளரின் பண்பாட்டுக் கோலங்களைப் பதிவு செய்யும் முறையிலும் மிகப் பொறுப்புணர்வுடன் ஞானசேகரன் செயற்பட்டுள்ளார். குறிப்பாகப் பௌத்த-சிங்கள பேரினவாதத்தைத் தோலுரித்துக் காட்டும் அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் சிங்களப் பொது மனிதனைக் கண்டிக்க முற்படவில்லை. அத்துடன் அமையாமல், பியசேனா, சுமணபால, முதியான்சே முதலிய சிங்கள மாந்தர் தொழிலாளர் சார்பாக நின்று போராடுவதைக் காட்டியுள்ளதன் மூலம் இன உறவுக்கு உள்ள வாய்ப்புகளையும் இனங்காட்டியுள்ளார். வீரையாவின் தங்கை செந்தாமரைக்கும் பியசேனாவுக்கும் காதல் மலர்வதைக் காட்டுவதனூடாக இந்நாவல் இனவிரோதக் கருத்துக்கொண்டதல்ல என்பதை ஞானசேகரன் அவர்கள் அழுத்தமாக உணர்த்தி விடுகிறார்.

ஆசிரியர் கூற்றாகவே நாவல் வளர்த்துச் செல்லப்படுகிறது. மலையகப் பேச்சு மொழி விரவிய சராசரித் தமிழ் நடை இதிற் பயில்கிறது.

இந்நாவல் வாசகர்களுக்கு புதிய அநுபவத்தை வழங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

++++++++

அத்தியாயம் ஒன்று

பனிமூட்டத்திற்குள் அமிழ்ந்துகிடந்த அந்த மலைப் பிரதேசத்தில், காலைக் கதிரவனின் ஒளிக்கீறல்கள் தூரத்தே தெரிந்த மலையுச்சியின் பின்னாலிருந்து பரவத்தொடங்கின. பஞ்சுக் கூட்டங்கள்போல் எங்கும் பரவியிருந்த பனிப்புகார்கள் சிறிது சிறிதாக விலகத் தொடங்கின.

கொழுந்து மடுவத்தை நோக்கி வீரய்யா நடந்து கொண்டிருந்தான். முதன் நாள் இரவு அவனும் அவனது நண்பர்களுமாகச் சேர்ந்து மடுவத்தின் முன்னால் அமைத்த அலங்காரப் பந்தல் இப்போது அழகாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. பந்தலின் முகப்பில் கட்டியிருந்த வாழை மரங்களும், வண்ணக் கடதாசிகளும், கரத்தை றோட்டுவரை தொங்கவிடப்பட்டிருந்த தோரணங்களும், அந்த அதிகாலைப் பொழுதின் இளங்காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன.

மடுவத்தை வந்தடைந்த வீரய்யா கையிலே கட்டியிருந்த கடிகாரத்தை ஒரு தடவை திருப்பிப் பார்த்தான்.

""ரொம்ப நேரமாச்சு, இன்னும் ஒருத்தனையும் காணோம்"" முணுமுணுத்துக்கொண்டே தான் கொண்டு வந்த பூக்களை மடுவத்தின் அரைச் சுவரின்மேல் வைத்து விட்டு தூரத்தே தெரிந்த லயங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினான்.

சில இளைஞர்களும், சிறுவர்களும் மடுவத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் வருவது பனிமூட்டத்தினூடே மங்கலாகத் தெரிந்தது.

இன்னும் சிறிது நேரத்தில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகள் யாவும் அவன் மனக்கண்முன் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின.

இளைஞர்கள் இப்போது மடுவத்தை வந்தடைந்தனர்.

""என்ன வீரய்யா, மொதல்லயே வந்திட்டியா? நான் போயி ஆளுங்கெல்லாத்தையும் கூட்டிக்கொண்டு வர நேரமாயிருச்சு"" என முன்னால் வந்த இளைஞன் அசட்டுச் சிரிப்புடன் கூறினான்.

""என்னடா ராமு, நீயே இப்படிச் சொணங்கிவந்தா எத்தினை மணிக்குத்தாண்டா இந்த வேலையெல்லாஞ் செஞ்சு முடிக்கிறது?... ரொம்ப வேலை கெடக்கு... கண்டக்கையா பங்களாவிலையிருந்து நாக்காலி எடுத்து வரணும், கடைக்குப்போய் சோடாப் போத்தல் கொண்டு வரணும்.... இந்த எடமெல்லாங் கூட்டித் துப்புரவாக்கணும்...."" என்றான் வீரய்யா.

""அவசரப்படாதே வீரய்யா. ஐஞ்சு நிமிசத்தில எல்லா வேலையும் செஞ்சு முடிச்சுப்புடலாம். நான் இப்பவே போயி நாக்காலி கொண்டு வர்றேன்"" எனக் கூறிய ராமு தனது நண்பர்களில் இருவரை அழைத்துக் கொண்டு கண்டக்டரின் பங்களாவை நோக்கிப் புறப்பட்டான்.

பந்தலின் நடுவே போடப்பட்டிருந்த மேசையின்மேல் வெள்ளைத் துணியொன்றை எடுத்துவைத்தான் அங்கு நின்ற ஓர் இளைஞன்.

சிறிது நேரத்தில் ஆண்களும், பெண்களும், சிறுவர்களுமாக அநேகர் அந்த மண்டபத்தில் வந்து கூடினர். சிறுவர்கள் ஓடியாடுவதும், கூச்சல் போடுவதுமாக இருந்தனர். ஆண்களும் பெண்களும் கூட்டங் கூட்டமாக நின்று எதைப்பற்றியெல்லாமோ வாயோயாமல் கதைத்தனர். அவர்கள் எல்லோரதும் முகங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

வீரய்யாவின் தங்கை செந்தாமரை அப்போது ஆரத்தித் தட்டுடன் மேசையருகே வந்தாள். செந்தாமரைக்குப் பதினேழு அல்லது பதினெட்டு வயதுதானிருக்கும். தோட்டத்திலிருக்கும் பெண்களில் அவள்தான் அதிக அழகுள்ளவள் என்ற காரணத்தினால், விழாவுக்கு வரும் பிரமுகர்களுக்கு ஆரத்தி எடுப்பதற்கு அவளை ஒழுங்கு செய்திருந்தனர். கொழுந்து நிறைந்த தேயிலைச் செடியைப் போன்று தளதளப்புடன் காணப்பட்ட அவளது வாளிப்பான உடலில் ஒருவகை பூரிப்பு நிறைந்திருந்தது. அவள் தன்னை அலங்கரித்த விதம் அவளது அழகுக்கு மேலும் அழகைக் கொடுத்தது. அங்கு நின்ற இளைஞர்கள் பலரின் கண்கள் அவளது அழகை அடிக்கடி இரசித்துக் கொண்டிருந்தன.

""என்ன வீரய்யா! எல்லா வேலையளும் செஞ்சு முடிச்சிட்டீங்களா?"" எனக் கேட்டபடி அங்கு வந்து மாரிமுத்துத் தலைவர் பந்தலை ஒரு தடவை சுற்றுமுற்றும் பார்த்தார்.

""என்னங்க தலைவரே, நீங்கதானே மொதல்ல இங்கை வந்து நின்னு எல்லாத்தையும் கவனிக்கணும். நீங்களே பிந்தி வந்தா எப்படி?"" எனக் கேட்கவேண்டும்போல் வீரய்யாவுக்குத் தோன்றியது. ஆனாலும் அவன் எதுவுமே கூறாது தலைவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தான்.

நடவிலே போடப்பட்டிருந்த மேசையைக் கவனித்த தலைவர், ""என்ன வீரய்யா இன்னும் மாலையெல்லாம் கொண்டு வரல்லியா?"" என யோசனையுடன் கேட்டார்.

""இப்பத்தாங்க பண்டாரம் மாலையைக் கட்டி முடிச்சாரு, சுட்டிமுடிச்சவுடனையே நேரா எடுத்துக்கிட்டு வர்ரேன்"" எனக் கூறியபடி கையிலே கொள்டுவந்த மாலைகளை மேசையின்மேல் இருந்த தட்டில் வைத்தான். அப்போதுதான் அங்கு வந்த செபமாலை.

""எத்தினை மாலை கொண்டு வந்திருக்கே?"" எனக் கேட்டபடி மாலைகளைக் கையிலே எடுத்துப் பார்த்தார் தலைவர்.

""மூணு மாலைங்க.... ஒரு மாலை தேயிலைக் கொழுந்திலேயே கட்டியிருக்குங்க...."" என்றான் செபமாலை.

அப்போது தலைவரின் அருகே வந்த கறுப்பண்ணன் கங்காணி, ""என்னங்க தலைவரண்ணே, மூணு மாலை போதுங்களா?.... தொரைக்கு ஒரு மாலை போடணும்.... அப்புறம் கண்டக்கையா வருவாரு..... அவருக்கு ஒண்ணு இனி வர்றவங்களுக்கு வேறு மாலை வேணும்....."" எனக் கூறியபடி மாலைகளை உற்றுப் பார்த்தார்.

கறுப்பண்ணன் கங்காணிக்குத் தலைவரையொத்த வயதுதான் மதிக்கலாம். ஆனாலும் தலையில் வழுக்கை விழாததால் அவர் தலைவரைவிட சற்று இளமையானவர் போலத் தோற்றமளித்தார்.

""நீங்க கொஞ்சம் சும்மா இருங்க கங்காணி. இன்னிக்கி தொரை, கண்டக்கையாவுக்கெல்லாம் மாலையில்ல@ கூட்டத்துக்கு வர்றது நம்ப மந்திரிதானே - அவருக்குப் போடத்தான் மாலை கட்டியிருக்கு"" எனச் சற்றுக் கண்டிப்பான குரலில் கூறினான் வீரய்யா.

""அப்புடியா வெசயம்! இது என்ன கொழுந்திலை கட்டியிருக்கிற மாலை. ஆள் ஓசரத்துக்கு இருக்கும்போல தெரியுது. இந்த மாலையை யாரு மந்திக்குப் போடுவாரு"" எனக் கேட்;டபடி பெரிதாக இருந்த மாலையைக் கையில் எடுத்து உயர்த்திப் பிடித்தவாறு ஆச்சரியம் ததும்பக் கண்களை அகல விரித்தபடி கேட்டார் கங்காணி.

""அந்த மாலையை நம்ம தலைவர்தான் மந்திக்குப் போடனும் தொழிலாளர்கள் சார்பா தலைவரு போடுறதாலைதான் அந்த மாலையைக் கொழுந்தாலையே கட்டியிருக்கோம்"" எனக் கூறிவிட்டு புன்னகை செய்தான் வீரய்யா.

பக்கத்தில் நின்றிருந்த தலைவர் அதைக் கேட்டுத் தலையை ஆட்டியபடி அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார். அவரது பற்கள் வெற்றிலைக் காவி படிந்து கருமையாகத் தெரிந்தன.

வீரய்யா ஒலிபெருக்கி சம்பந்தப்பட்ட வேலைகள் யாவும் முடிந்து விட்டதா எனக் கவனிக்க மடுவத்தின் உள்ளே சென்றான். அவனைத் தொடர்ந்து ராமுவுக்கு செப மாலையும் சென்றனர்.

தோட்டத்து கண்டக்டர் அப்போது மேடையை வந்தடைந்தார்.

""சலாங்கையா"" எனப் பணிவுடன் வணக்கம் தெரிவித்த கறுப்பண்ணன் கங்காணி, கண்டக்டர் அமருவதற்காக கதிரை ஒன்றை எடுத்து வந்து போட்டார்.

மூக்குக் கண்ணாடியைக் கழற்றி சேட் பெக்கட்டுக்குள் திணித்துக்கொண்டே கதிரையில் அமர்ந்தார் கண்டக்டர். பின்னர் தானணிந்திருந்த தொப்பியை எடுத்து மேசையில் வைத்துவிட்டு, தனது நரைத்த தலைமயிரைத் தடவியவாறு அங்கு குழுமியிருந்தவர்களைக் கண்ணோட்டம் விட்டார்.

""என்னாங்கையா தொரையை இன்னும் காணோங்களே?"" தலையைச் சொறிந்த வண்ணம் கண்டக்டரைப் பார்த்துக் கேட்டார் தலைவர்.

""இப்பதான் தொரை எனக்கு டெலிபோன் பண்ணினாரு. இன்னும் கொஞ்ச நேரத்திலை வந்திடுவாரு"" என்றார் கண்டக்டர்.

""நல்லதுங்க! எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிருக்கோமுங்க.... மந்திரிமாருங்க தோட்டத்துக்கு வர்ரது இது தாங்க மொதல் தடவை. தோட்டங்களையெல்லாம் இண்ணையிலிருந்து அரசாங்கம் எடுத்திருச்சி. இனிமே நம்மளுக்கெல்லாம் விடுதலை கெடச்சமாதிரித்தாங்க"" எனக்குழைத்து கொண்டார் தலைவர்.

வெளியே நின்றிருந்த ஒரு சிறுவன் அங்கு ஓடி வந்து ""ஐயா ஐயா நாட்டிலிருந்து கூட்டமா ஆளுங்க வர்றாங்க"" எனத் தலைவரைப் பார்த்துக் கூறினான்.

எல்லோரும் வெளியே எட்டிப் பார்த்தனர்.

மேடையருகே நின்ற செந்தாமரையும் ஆவலுடன் வெளியே பார்த்தாள்.

கிராமத்திலிருந்து தோட்டத்துக்கு வரும் ஒற்றையடிப் பாதையில் ஒருவர்பின் ஒருவராக பலர் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

""ரொம்பப்பேர் வர்றாங்க.... இங்கதான் வர்றாங்க போலையிருக்கு"" என ஆச்சரியத்துடன் கூறினார் தலைவர்.

செந்தாமரையின் உள்ளம் ஒரு கணம் குதூலத்தில் நிறைந்தது.

""இப்பவே மடுவத்திலை ஆள் நெறைஞ்சுபோச்சு..... அவங்களும் வந்துட்டாங்கன்னா நிக்கிறதுக்கே எடம் கெடையாது"" என்றார் கறுப்பண்ணன் கங்கானி வியப்புடன்.

சிறிது நேரத்தில் கிராமத்திலிருந்து வந்தவர்கள் மடுவத்தை வந்தடைந்தனர். அநேகர் மடுவத்தினுள்ளே நுழைய முடியாமல் வெளியிலேயே நின்றனர். பார்த்த இடமெல்லாம் தலைகள் தெரிந்தன.

செந்தாமரையின் கண்கள் சனக் கூட்டத்தைத் துழாவின ஆவலுடன் அவளது கணகள் சுழன்று வந்தன.

கிராமத்திலிருந்து சற்றுப் பருமனான தோற்றதுடைய ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மேடையருகே வந்தார். அவரைப் பார்த்ததும், ""அட, நம்ப பண்டா மாத்தியா கூட கூட்டத்துக்கு வந்திருக்காரு. மந்திரி வாறாருன்னு நாங்க ஒங்களுக்கு சொல்லக்கூட இல்லையே..."" என வியப்புடன் கூறினார் தலைவர்.

""ஏங் தலைவர், நீங்க எங்களுக்கு சொல்லாட்டி நாங்க கூட்டத்துக்கு வரக்கூடாதா?"" என அசட்டுச் சிரிப்புடன் கேட்டார் வந்தவர்.

""அப்பிடியில்லீங்க மாத்தியா, மந்திரி நம்ப தோட்டத்துக்குத் தானே வாறாரு@ நாங்க தானே கூட்டத்துக்கு ஒழுங்கு செஞ்சிருக்கோம்.... அதனால தாங்க கேட்டேன்.""

""அப்படி சொல்லவேணாங் தலைவர். இப்ப தோட்டமெல்லாம் அரசாங்கம் எடுத்திருக்குத்தானே... இப்ப நீங்க நாங்க எல்லாங் அரசாங்கத்து ஆள்தானே. நம்ப எல்லாத்துக்கும் ஒரே மந்திரிதாங்.... நம்ப மந்திரி வந்தா நாங்க எல்லாம் வரத்தானே வேணுங்.|

பண்டா முதலாளியைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு வந்து சேர்ந்த கிராமசேவகர் தனக்குத் தெரிந்த தமிழில் கூறிவிட்டு சிரித்தார்.

அப்போது தோட்டத்துரையின் கார் விரைந்து வந்து மடுவத்தின் முன்னால் நின்றது. கூட்டத்தில் இப்போது சற்று அமைதி நிலவியது.

கண்டக்டர் எழுந்து காரின் அருகே சென்று ~குட்மோனிங்| எனத் துரைக்கு வந்தனம் தெரிவித்தார்.

""மந்திரி இன்னும் வரவில்லையா?"" என ஆங்கிலத்தில் கேட்டபடி காரிலிருந்து இறங்கினார் துரை.

""இன்னும் வரவில்லை சார். அடுத்த தோட்டத்தில் நடைபெறும் கூட்டத்திலே பங்கு பற்றிக் கொண்டிருக்கிநாரென இங்கு வந்தவர்கள் கூறினார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவாரென நினைக்கிறேன்"" எனக் கூறிய கண்டக்டர் துரையைப் பந்தலுக்கு அழைத்துச் சென்றார்.

துரை அங்கு குழுமியிருந்த சனக் கூட்டத்தைப் பார்வையிட்டவாறு நடந்து சென்று கதிரையில் அமர்ந்தார்.

சிறிது நேரத்தின் பின்னர் ஒரு காரும் அதனைத் தொடர்ந்து ~ஜீப்| வண்டியொன்றும் ஒன்றன்பின் ஒன்றாக மடுவத்தின் அருகே வந்து சேர்ந்தன.

மாரிமுத்துத் தலைவர் அவசர அவசரமாக பந்தலின் நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மைக்கின் முன்னால் சென்று, ""அமைதி அமைதி, மந்திரி வந்துவிட்டார்.... எல்லோரும் அமைதியாக இருங்கள்"" எனப் பதட்டத்துடன் கூறினார்.

பட்டாசு வெடிகள் பலத்த சத்தத்துடன் முழங்கின. துரையும் கண்டக்டரும் அங்கு குழுமியிருந்தவர்களும் மந்திரியை எதிர்கொண்டு அழைப்பதற்காக காரின் அருகே சென்றனர்.

கறுப்பண்ணன் கங்கானி பெருமிதத்துடன் மாலைத் தட்டை ஏந்தியவாறு முன்னே சென்றார்.

துரை முதலில் மந்திரியின் கையைப் பிடித்துக் குலுக்கி அவரை வரவேற்றுவிட்டு, மட்டில் தயாராக வைக்கப்பட்டிருந்த மாலை ஒன்றை எடுத்து மந்திரிக்குச் சூட்டினார். அப்போது பலத்த கைதட்டலும் ~மந்திரி வாழ்க| என்ற வாழ்த்தொலியும் வானைப் பிளந்தன.

அடுத்த கண்டக்டர் சென்று மாலை அணிவித்து விட்டு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். மீண்டும் கரகோஷமும் ~மந்திரி வாழ்க| என்ற ஒலியும் பலமாக ஒலித்தன.

மக்கள் ஒருவரோடொருவர் முண்டியடித்துக் கொண்டு எப்படியாவது மந்திரியைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆர்வத்துடன் முன்னே சென்றனர். மந்திரி எல்லோரையும் பார்த்துக் கரங்கூப்பி வணக்கம் தெரிவித்தார். பண்டா முதலாளி அவரது கண்ணில் பட்டபோது மந்திரி அவரைப் பார்த்து அறிமுகச் சிரிப்பொன்றை உதிர்த்தார்.

ஒலிபெருக்கியில் பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கி வந்த மாரிமுத்துத் தலைவர், மந்திரிக்கு மாலை அணிவிப்பதங்காக முன்னே வருவதற்கு எத்தனித்து, சனக்கூட்டத்தின் மத்தியில் அகப்பட்டு முண்டியடித்துக் கொண்டிருந்தார்.

தலைவரைக் காணாத கறுப்பண்ணன் கங்காணி கையில் இருந்த மாலைத் தட்டுடன் அங்குமிங்குமாக அலை மோதிய வண்ணம் இருந்தார்.

அதனைப்பார்த்த செந்தாமரை தன்னை மறந்து ~களுக்| கென்று சிரித்தாள்.

தட்டுடன் மாலையை வைத்துக்கொண்டு அதனை மந்திரிக்கு அணியாது தடுமாறிக்கொண்டிருந்த கறுப்பண்ணனைப் பார்த்ததும் பண்டா முதலாளிக்கு ஒரு யோசனை தோன்றியது. திடீரெனத் தட்டியிலிருந்த மாலையை எடுத்து மந்திரியின் கழுத்தில் அணிந்துவிட்டு பலத்த குரலில், ""அபே மந்திரி துமாட்ட ஜயவேவா"" எனத் தன்னிரு கைகளையும் உயரத் தூக்கிக் கோஷமிட்டார்.

அவரைத் தொடர்ந்து அவருடன் வந்த கிராம மக்களும் பலத்த குரலில் ""ஜயவேவா"" என ஒலியெழுப்பினார்.

மாரிமுத்துத் தலைவர் திகைத்துப்போய் நின்றார்.

தான் மந்திரிக்கு அணிவிக்கவிருந்த மாலையை பண்டா முதலாளி மந்திரிக்குச் சூட்டிவிட்டு வெற்றிக் களிப்புக் கொண்டாடுவதைப் பார்த்ததும் அவருக்கு ஆத்தரமும் அவமானமும் பொங்கி வந்தன.

மிகப்பெரிய கொழுந்து மாலையைத் தனக்குச் சூடிய பண்டா முதலாளியின் முதுகில் நன்றி தெரிவிக்கும் முகமாக அன்புடன் தட்டிய மந்திரி மேடையை நோக்கி மெதுவாக நடந்தார்.

மேடையருகே தயாராக இருந்த செந்தாமரை மந்திரிக்கு ஆரத்தி எடுத்தாள்.

வீரய்யா அவரது நெற்றியில் சந்தனத் திலகமிட்டு அவரை வரவேற்றான்.

மந்திரியின் பேச்சைக் கேட்பதற்காக மக்கள் ஆவலுடன் மேடையருகே நெருங்கினர். வேறு தோட்டங்களுக்கும் செல்ல வேண்டி இருந்ததால் மந்திரி காலந்தாழ்த்தாது உரை நிகழ்த்தத் தொடங்கினார். சிங்கள மொழியில் அவரது உரை நிகழ்ந்தது.

""இங்கு குழுமியிருக்கும் தோட்ட உத்தியோகத்தர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிராமத்தில் இருந்து வந்த ஆதவாளர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தை முதற்கண் தெரிவிக்கிறேன். இன்று முதல் எமது நாட்டில் இருக்கும் தேயிலைத் தோட்டங்கள் யாவும் அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டன. நூறு வருடங்களுக்கு மேல் அந்நியர்களின் கையில் இருந்த எமது செல்வங்கள் இன்று எமது கைகளுக்குக் கிடைத்திருக்கின்றன. இதனால் எமது நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. முக்கியமாக தோட்டங்கள் அரசுடமையானதினால் தோட்டத் தொழிலாளர்கள்தான் முதலில் விமோசனம் அடையப் போகின்றார்கள். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தொழிலாளர்களுக்குச் சம்பளம் அதிகரித்துக் கொடுக்கப்படுவதோடு அவர்களது தொழிலுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். இங்கிருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வசதி செய்வோம். தோட்டத்தில் பெறப்படும் இலாபத்தின் ஒரு பகுதி தொழிலாளர்களிடையே பகிர்ந்து அளிக்கப்படுவதோடு நிலமற்றவர்களுக்கும் காணி வழங்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.""

மந்திரியின் பேச்சின் சுருக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறினார். மந்திரியுடன் கூட வந்த அரசியல் அமைப்பாளர். கரகோஷம் வானை முட்டியது.

""மந்திரி வாழ்க"" எனத் தொழிலாளர்கள் வாழ்த்தினர்.

அதனை அடுத்து வீரய்யா மேடைக்குச் சென்று மந்திரிக்கும் அவருடன் கூட வந்தவர்களுக்கும் தொழிலாளர்கள் சார்பில் நன்றியுரை கூறினான்.

வேறு தோட்டங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில் மந்திரி பங்குபற்ற வேண்டியிருந்ததால் அவர் அவசர அவசரமாகப் புறப்பட்டார். முக்கியமாக துரை. கண்டக்டர், வீரய்யா முதலியோரது கைகளை அன்புடன் பற்றி தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் பண்டா முதலாளியின் முதுகில் அன்புடன் தட்டிப் புன்னகை செய்தபடி காரிலே சென்று ஏறினார் மந்திரி.

""ஜயவேவா"" என்ற கோஷம் இப்போது வானை முட்டி மோதியது.

மந்திரியின் கார் புறப்பட்டுச் சென்றதும் துரையும் தனது காரில் ஏறிப் புறப்பட்டார்.

மந்திரி எப்போது அங்கிருந்து புறப்படுவார், கூட்டம் எப்போது முடிவடையுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாரிமுத்துத் தலைவர் சினத்துடன் பண்டா முதலாளியின் அருகே சென்றார்.

""என்னாங்க மாத்தயா, நீங்க என்னா நினைச்சுக்கிட்டு அந்த மாலையை எடுத்து மந்திக்குப் போட்டீங்க? இந்தத் தோட்டத்தில் நான் பத்து வருஷமா தலைவரு வேலை செஞ்சிக்கிட்டு வாரேன்@ என்னை யாரும் இந்த மாதிரி அவமானப்படுத்தல்ல. நான் தலைவரா.... இல்ல நீங்க தலைவரா?""

மாரிமுத்துத் தலைவரின் குரல் ஆத்திரத்தில் தடுமாறியது.

பண்டா முதலாளி தலைவரின் அருகே நெருங்கி அவரது தோளில் தனது கையால் மெதுவாகத் தட்டிச் சிரித்துவிட்டு,

""என்னாங் தலைவர் மிச்சங் கோபப்படுகறீங்க.... நம்ப மந்திரிக்கு மாலை போடுற நேரத்திலை நீங்க அங்கினைக்கி இல்லை தானே... அதுதாங் நாங் கோட்டது.... நாங் மாலை போட்டாலும், தோட்டத்து ஆளுங்க தான் கூட்டம் வச்சது சொல்லி மந்திரிக்குத் தெரியுங் தானே. தோட்டத்து ஆளுங்களுக்குத் தானே இனிமே மந்திரி ஒதவி செய்யப் போறது.... நம்மளுக்கு இல்லைத்தானே, இதுக்கிபோய் பெரிசா கோபப்படாதீங்க"" எனச் சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது அவர்களது சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த ராமு, ""அப்புடிச் சொல்லாதீங்க மாத்தியா, எங்க தலைவரு போட இருந்த மாலைய நீங்க போட்டது சரியில்லை"" எனப் படபடத்தான்.

""எங்க தோட்டத்து ஆளுங்களையே அவமதிக்கிற மாதிரி செஞ்சுப்புட்டீங்க"" எனக் குமுறினான் பக்கத்தில் நின்ற செபமாலை.

இப்போது பண்டா முதலாளியையும் தலைவரையும் பலர் சூழ்ந்து கொண்டனர். வாக்குவாதம் முற்றி ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடவுங் கூடுமென நினைத்த வீரய்யா நிதானமாக,

""முடிஞ்சுபோன வெசயத்தைப் பற்றி இனிக் கதைச்சு என்னா பெரயோசனம். நடந்தது நடந்து முடிஞ்சிச்சு..... சும்மா பேசிகிட்டு இருக்காம நடக்க வேண்டியதைக் கவனியுங்க....| எனக் கூறிவிட்டு ராமுவின் கைகளைப் பற்றி, ""இங்கபாரு ராமு அந்த ஸ்பீக்கர்காறங்களை அனுப்பனும், செபமாலையைக் கூட்டிக்கிட்டுப் போயி ஸ்பீக்கர் எல்லாம் அவுத்து அவுங்களை அனுப்புறதுக்கு வேண்டியதைக் கவனி"" எனக் கூறினான்.

பண்டா முதலாளியுடன் கூட வந்திருந்த கிராம சேவகர் அவரை அவசரமாக அழைத்தார்.

பண்டா முதலாளி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மெதுவாக அவ்விடத்தை விட்டு நழுவினார்.

கூட்டம் சிறிது சிறிதாகக் கலையத் தொடங்கியது.

நாட்டிலிருந்து வந்திருந்த ஓர் இளைஞனின் கண்கள் மேசையருகே நின்றிருந்த செந்தாமரையையே ஏக்கத்துடன் பார்த்த வண்ணம் இருந்தன. அப்போது செந்தாமரையின் பார்வை அவனது பக்கம் திரும்பியது. அவன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். செந்தாமரை நாணத்துடன் குனிந்து கொண்டாள். அவளது இதழ்களிலிருந்தும் மெல்லிதாக ஒரு புன்னகை மலர்ந்தது. புறப்பட வேண்டிய நேரம் நெருங்கியதும் அவன் அவளிடம் கண்களால் விடை பெற்றுக் கொண்டான். அவள் ஏக்கத்துடன் அவளையே பார்த்த வண்ணம் இருந்தாள்.

அத்தியாயம் இரண்டு

அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் தோட்டத்தில் வேலை கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள் தத்தமது சொந்த வேலைகளைக் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர். பெண்களில் சிலர் தமது வீட்டைப் பெருக்குவதில் முனைந்திருந்தனர். சிலர் பீலிக்குச் சென்று வீட்டுப் பாத்திரங்களைத் துலக்குவதிலும் ஆடைகளைத் துவைத்துக் குளிப்பதுமாக இருந்தனர். வீட்டில் வேலை இல்லாதவர்கள் ~மிலார்| பொறுக்குவதற்காக மலைக்குச் சென்றிருந்தனர். ஆண்களில் பலர் தமது மரக்கறித் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

வழுக்கங் பாறை லயத்தின் தொங்கல் காம்பராவின் முன்புறத்திலுள்ள இஸ்தோப்பில் அன்றைய தினசரியை வாசித்துக் கொண்டிருந்தான் வீரய்யா. அவனது தாய் மீனாச்சி காம்பராவின் உள்ளே சாணியால் நிலத்தை மெழுகிச் கொண்டிருந்தாள்.

""என்ன வீரய்யா இன்னைய பேப்பரா? இன்னிக்குப் பேப்பரிலை நம்ப தோட்டத்து வெசயமா ஏதும் போட்டிக்காங்களா?"" எனக் கேட்டபடி உள்ளே நுழைந்தான் ராமு.

பத்திரிகை வாசிப்பதில் மூழ்கியிருந்த ராமுவின் குரல் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தான். அப்பொழுது தான் செபமாலையும் ராமுவின் பின்னால் வருவது தெரிந்தது.

இருவரும் இஸ்தோப்பில் இருந்த வாங்கில் அமர்ந்து கொண்டனர்.

""தோட்டத் தொரைமாருக்கெல்லாம் நேற்று மாவட்டக் காரியாலயத்தில் மீட்டிங் இருந்திச்சில்லையா..... அதில நம்ப மந்திரி பேசியிருந்ததை விசேசமா போட்டிருக்காங்க"" எனக் கூறிக் கொண்டே பத்திரிகையை செபாமாலையிடம் கொடுத்தான் வீரய்யா.

""தொரமாருக்கெல்லாம் என்னதான் மந்திரி சொல்லியிருக்காரு?"" என ஆவலுடன் கேட்டான் ராமு.

""மொதலாவதாக தோட்டத்திலை இருந்து இனிமே உத்தியோகத்தர் களையோ தோட்டத் தொழிலாளர்களையோ தொரைமார் வெளியே போடமுடியாது""

""அப்படியா ரொம்ப நல்லது@ இனிமே இந்த தொரைமாருங்க ஆட்டமெல்லாம் நின்னுபோயிடும். அவுங்க நெனைச்சபடி தோட்டத்திரை எதுவுமே செய்ய முடியாது"" என்றான் ராமு.

""அதுமட்டுமல்ல, தொரமாருங்க இஷ்டத்துக்கு தோட்டத்திலை யாரையும் வேலைக்கும் சேர்க்க முடியாதாம்@ அரசாங்கத்திலை இருந்து அனுப்புற ஆளுங்களை மட்டுந்தான் வேலைக்கு சேத்துக்கிறணுமாம்"" எனத் தொடர்ந்து கூறினான் வீரய்யா.

""ஆமா ஆமா, இவ்வளவு நாளா தொரைமாருங்க வூட்டு ஆளுங்களையும் ஸ்டாப்புமாருங்கவூட்டு ஆளுங்களையுந்தானே தோட்டத்திலை உத்தியோகங்களுக்கு சேத்துக்கிட்டு வந்தாங்க@ யாரைப் பார்த்தாலும் அவுங்க அவுங்க அண்ணன் - தம்பி, மச்சான் மாமனாகவே இருக்காங்க. இனிமே அதெல்லாம் நடக்காது.""

இதுவரை நேரமும் மரக்கறி தோட்டத்தில வேலை செய்துகொண்டிருந்த வீரய்யாவின் தந்தை மாயாகண்டி அப்போது இஸ்தோப்பின் உள்ளே நுழைந்தார். தோட்டத்திலிருந்து கொண்டுவந்த மரக்கறிகளை சுவர் ஓரமாக இருக்கும் செலவுப் பெட்டியின் மேல் வைத்துவிட்டு, நெற்றியிலே படிந்திருந்த வியர்வையை ஒரு துண்டினால் துடைத்துக் கொண்டார்.

""இனிமே தொலைமாருங்க நெனைச்சபடி தோட்டத்தை நடத்தமுடியாது. ஒவ்வொரு தோட்டத்திலையும் தோட்ட நிர்வாக கமிட்டின்னு ஒண்ணு அமைக்கப் போறாங்களாம். அதிலை தோட்டத் தொழிலாளர்கள் சார்பிலும் உத்தியோகத்தர் சார்பிலும் பிரதிநிதிங்க இருப்பாங்க@ அவங்களோட கலந்து ஆலோசிச்சுத்தான் தொரை தோட்டத்திலை எதையும் செய்ய முடியும்"" என பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்த செபமாலைக் கூறினான்.

""என்னதான் இருந்தாலுந் தம்பி தோட்டங்களைக் கொம்பனிக் காலத்திலை நடத்தினமாதிரி அரசாங்கத்திலை நடத்துவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை"" என அலட்சியமாகக் கூறிக்கொண்டே, காதிலே செருகிவைத்திருந்த குறைச் சுருட்டை எடுத்து வாயில் பொருத்தி அதனைப் பற்றவைத்தார் மாயாண்டி.

அவர் அப்படிக் கூறியது அங்கிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

""என்னங்க மாமேன், அப்படிச் சொல்லிப்புட்டீங்க! இப்ப தோட்டத்தை அரசாங்கம் எடுத்ததினால் ஆளுங்கெல்லாம் எவ்வளவு சந்தோஷப்படுறாங்கன்னு தெரியுமா? நீங்க மட்டும் ஏன் இப்படிச் சொல்லுறீங்க?"" என வியப்புடன் கேட்டான் ராமு.

""தோட்டத்தை அரசாங்கம் எடுத்ததை நீங்க என்னமோ சாதாரணமாக நெனைச்சுப்புட்டீங்க போலையிருக்கு@ இனிமேதான் நம்மளுக்கு எவ்வளவோ ஒதவி கெடைக்கப் போவுது இவ்வளவு காலமும் கொம்பனிக் காரங்களுக்கும் தோட்டச் சொந்தக்காரங்களுக்கும் நாம அடிமையா இருந்தோம். இவங்க நெனைச்ச மாதிரி நம்மளை ஆட்டிப் படைச்சுக்கிட்டு இருந்தாங்க.... இனிமே இந்த நாட்டிலை இருக்கிற மத்தவங்க மாதிரி நாமளும் தலை நிமிர்ந்து நடக்கலாம்"" என விபரமாகக் கூறினான் செபமாலை.

""என்னங்க தம்பி எனக்குத் தெரியாத வெசயமா.... இந்தத் தேயிலையை இங்க கொண்டாந்து உண்டாக்கினதே அந்த வெள்ளைக்காரங்கதானே. அவுங்க தோட்டத்தை நடத்தினதை விடவா அரசாங்கத்திலை பெரிசா நடத்திப்புடப் போறாங்க?"" எனக் கேட்ட மாயாண்டி, அலட்சியமாகப் புகையை வெளியே ஊதினார்.

""அப்புடி இல்லீங்க மாமேன். நீங்க கொம்பனிக் காலத்து நெனைப்புலேயே இப்பவும் இருக்கிறீங்க.... இப்ப காலம் மாறிக்கிட்டே போவுது. நிச்சயமாக தோட்டத்து ஆளுங்களுக்கு இனிமேதான் நல்லது கெடைக்கப்போவுது.""

இதுவரை நேரமும் வீட்டை மெழுகிக்கொண்டு இவர்களது சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டிருந்த மீனாச்சி வெளியே எழுந்து வந்தாள்.

""இவரு எப்பவும் இப்படித்தான் செபமாலை, ஏடக்குறுக்க ஏதாச்சும் வெளங்காம பேசிகிட்டு இருப்பாரு@ அதை வுட்டுட்டு வேற என்ன தம்பி போட்டிருக்கு அதைச் சொல்லுங்க"" எனக் கூறியபடி அவள் வாசலுக்குச் சென்று சாணிக் கையைக் கழுவினாள்.

""மந்திரி வேற ஒரு வெசயத்தையும் தொரைமாருக்கு சொல்லியிருக்காரு@ இனிமே தொலைமாருங்க எல்லாரும் கட்டாயமா தோட்டத்து ஆளுங்களோட நல்ல மொறையில நடந்துக்கணுமாம். முந்தி மாதிரி தொரைத்தனமா நடந்துக்காம ஆளுங்களோட அன்பாகப் பழகணுமாம்"" என்றான் செபமாலை.

அப்போது செந்தாமரை தண்ணீர்க் குடத்துடன் வீட்டினுள் நுழைந்தாள்.

""இவ்வளவு நேரமா பீலியிலை என்ன செஞ்சுகிட்டு இருந்தே? அங்க போய் என்னதான் செய்வியோ தெரியாது. இவுங்கெல்லாம் வந்து எவ்வளவு நேரமாச்சு? இன்னும் தேத்தண்ணிகூட கொடுக்கல..... வெரசா தண்ணி சுடவச்சி தேத்தண்ணி உத்து"" எனச் செந்தாமரையிடம் கூறிய மீனாச்சி செலவுப் பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்த மரக் கறிகளை எடுத்து நறுக்கத் தொடங்கினாள்.

செந்தாமரை எதுவுமே பேசாது புன்னகை செய்தவண்ணம் அடுப்படிப் பக்கஞ் சென்றாள்.

ஏங்க தம்பி, நான் ஒண்ணு கேக்கிறேன். தோட்டத்து ஆளுங்களோட தொரைமாருங்க கூட்டாளித்தனமா நடந்துகிட்டா தோட்ட வேலைங்கெல்லாம் எப்படி ஒழுங்கா நடக்கும்? தொரை ஆளுங்களோட கண்டிப்பா நடந்து கிட்டாத்தான் ஆளுங்க பயந்து ஒழுங்கா வேலையைச் செய்வாங்க..... அரசாங்கம் சொல்லுறபடி பாத்தா தோட்டத்தைச் சுறுக்கா மூடிடுவாங்க போலையிருக்கே"" என்றார் மாயாண்டி சிந்தனையுடன்,

""அப்படியில்லேப்பா, தோட்டத்து ஆளுங்களை அடிமையா நடத்த வேணாமுனுதான் அரசாங்கம் சொல்லுது@ அதோட தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகத்தில் அக்கறை காட்டுறதால, தோட்டம் ஒருநாளும் நஷ்டத்தில் போகாது"" என்றான் வீரய்யா விபரமாக,

""அதெல்லாஞ்சரி. தொரைமாருங்களுக்கு அரசாங்கம் சொல்லியிருக்கிற மாதிரி அவுங்க கேட்டு நடப்பாங்கன்னு எப்படி சொல்ல முடியும்?"" எனக் கேட்டார் மாயாண்டி சிந்தனையுடன்.

""அரசாங்கம் சொல்லுறபடிதான் தொலைமாருங்க தோட்டத்தை நடத்தணும். இல்லேன்னா அவுங்க வேலைய பறிகொடுக்க வேண்டியது தான்.... இல்லாட்டி தோட்டத்தை வுட்டு வேறை தோட்டத்துக்கு மாத்திப்போடு வாங்க"" என்றான் ராமு.

""ஏங்க தம்பி, இப்ப நாம வேலைக்குப் போனாத்தான் பேரு போடுவாங்க.... இனிமேலாவது மத்தவங்களுக்கு மாதிரி நம்மளுக்கும் மாதச் சம்பளம் கொடுப்பாங்களா?"" மீனாச்சி ஆவலுடன் கேட்டாள்.

""மாதச் சம்பளத்தைப் பற்றி இனிமேதான் பேசப்போறாங்க. மத்தவங்களுக்கு மாதச் சம்பளம் கொடுக்கிற மாதிரி நம்மளுக்கும் கொடுக்கத்தான் செய்வாங்க@ அதோட நம்ப தோட்டத்து புள்ளைகளுக்கு படிக்கிறதுக்கு வேண்டிய வசதியும் செஞ்சு கொடுப்பாங்க. ஸ்கூலையும் அரசாங்கத்துக்கு எடுத்து தோட்டப் புள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுக்க புதுசா மாஸ்டர்மாரையும் அனுப்பிவைப்பாங்க.""

""அப்புடின்னா இனிமே நம்மளுக்கெல்லாம் நல்ல காலமுன்னு சொல்லுங்க தம்பி"" என மகிழ்வுடன் கூறினாள் மீனாட்சி.

""நீங்க சொல்லுறது எல்லாஞ் சரிதான். நம்ப பாட்டன் பூட்டன் காலத்திலை இருந்தே நாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிறோமே. இவ்வளவு காலமும் இல்லாம இப்ப ஏன் இந்த அரசாங்கத்துக்கு நம்ப மேலை அக்கறை வந்திருக்கு? அதைக் கொஞ்சமாவது யோசிக்சுப் பாத்தீங்களா?"" எனக் கேட்டுவிட்டு வாயிலே ஊறிய சுருட்டுச் சாரத்தை வெளியே துப்பினார் மாயாண்டி.

""இவ்வளவு காலமும் தேயிலைத் தோட்டங்களெல்லாம் வெள்ளைக்காரங்களுக்குச் சொந்தமா இருந்திச்சி. ஆதாயமெல்லாம் அவுங்க நாட்டுக்குப் போய்க்கிட்டு இருந்திச்சி. ஆனா, இப்ப தோட்டங்களை அரசாங்கம் எடுத்ததினால ஆதாயமெல்லாம் நம்ப நாட்டுக்கு கெடைக்கப் போவுது. அது நம்மளுக்கும் நல்லது. நம்ப நாட்டுக்கும் நல்லது."" வீரய்யா விளக்கம் கொடுத்தான்.

""நீங்கதான் என்னென்னமோ பெரிசா பேசிக்கிறீங்க........ இனிமே போகப் போகத்தான் எல்லாந் தெரியப்போவுது"" என்றார் மாயாண்டி வெளியே பார்த்தபடி.

செந்தாமரை எல்லோருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தான்.

எல்லோரும் தேநீர் அருந்தத் தொடங்கினர்.

சிறிது நேரம் நண்பர்களது சம்பாஷணை தோட்ட விஷயங்களைப் பற்றியே சுற்றிச் சுற்றி வந்தது.

""சரி வீரய்யா, நான் வரட்டுமா? வூட்டுல கொஞ்சம் வேலை யிருக்கு"" எனக் கூறியபடி எழுந்திருந்தான் ராமு. அவனைத் தொடர்ந்து செபமாலையும் எழுந்தான்.

இருவரும் புறப்பட்டுச் சென்றதும் வீரய்யா மீண்டும் பத்திரிகையை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். அவனது உள்ளத்தில் தொழிலாளர்களின் எதிர்காலம் ஒளிமயமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

அத்தியாயம் மூன்று

கடந்த நான்கு நாட்களாக பண்டா முதலாளியின் உள்ளம் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. பக்கத்துத் தோட்டத்தில் நடந்த கூட்டத்தின் போது மந்திரி அவரைப் பார்த்து அறிமுகச் சிரிப்பை உதிர்த்ததும் எதிர்பாராத விதமாக அவர் மந்திரிக்கு மாலை அணிந்து தன் ஆதரவைக் காட்டிய நிகழ்ச்சியும், அவரது மனதில் அடிக்கடி வந்து கொண்டிருந்தன.

வீட்டின் பின்புறமாக இருந்த சிறிய கொட்டிலில் போடப்பட்டிருந்த கதிரையொன்றில் சாய்ந்தவாறு அவர் சுருட்டு ஒன்றைப் புகைத்துக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்திற்கு முன்னர் பக்கத்துத் தோட்டத்திலிருந்து வந்த ஒரு தொழிலாளியிடம் இரண்டு போத்தல் கள்ளுக்குரிய பணத்தைக் குறைத்து வாங்கிவிட்டது. அப்போதுதான் அவரது நினைவில் வந்தது.

நிலத்தில் சிந்தியிருந்த கள்ளின் நெடி ஒரு கணம் அவ்விடத்தில் வீசியது.

தோட்டங்களில் சம்பளம் போடுவதற்கு இன்னும் ஒரு கிழமையிருந்ததினால் அவருக்கு வியாபாரம் இப்போது கம்மியாகவே இருந்தது. இதுவரை ஐந்தாறு பேர்தான் கள்ளுக் குடித்துவிட்டுத் திரும்பியிருந்தனர். மூலையிலிருந்த முட்டியில் அரைவாசிக்கு மேல் கள்ளு அப்படியே கிடந்தது.

முற்றத்தில் படுத்திருந்த அவரது நாய் ஒரு கணம் தலையை நிமிர்த்திக் குரைத்துவிட்டு, வருபவர் வாடிக்கையாளர் என்பதைப் புரிந்து கொண்டதினாலோ என்னவோ மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டது.

பண்டா முதலாளி வெளியே எட்டிப் பார்த்தார்@ அங்கு கறுப்பண்ணன் கங்கானி வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த போது மந்திரி வந்தன்று மாலைத் தட்டுடன் கறுப்பண்ணன் கங்காணி அங்குமிங்கும் ஓடித்திரிந்த காட்சி அவரது நினைவில் வந்தது. தன்னையும் மீறிக் கொண்டு அவர் வாய் விட்டுச் சிரித்தார்.

பண்டா முதலாளி எட்டிப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டதும் வாயிலே நிரம்பியிருந்த வெற்றிலைத் துப்பலை வேலியோரமாக நின்ற கித்துள் மரத்தடியில் எட்டி உமிழ்ந்துவிட்டு சிரிப்பை வர வழைத்துக் கொண்டார் கறுப்பண்ணன் கங்காணி.

""ஏங் கங்காணி@ இந்த நாலு நாளா இங்க வரேல்லைத் தானே"" எனக் கேட்டுக்கொண்டே கறுப்பண்ணனை வரவேற்றார் பண்டா முதலாளி.

""நம்ப வயல்லை கொஞ்சம் வேலையிருந்திச்சுங்க. அதுனாலே வரமுடியாம போயிருச்சுங்க..... இன்னிக்குத் தாங்க கொஞ்ச நேரங் கெடச்சிச்சு"" எனக் கூறியபடி கொட்டிலினுள்ளே நுழைந்து அங்கே கிடந்த வாங்கில் அமர்ந்தார் கறுப்பண்ணன் கங்கானி.

""அப்புடியா.... நம்ப தலைவரையும் இந்தப் பக்கம் காங்கேல்ல... நம்பமேலை கோபப்பட்டது சொல்லி நான் நெனைச்சது.""

""அப்படி நெனைக்க வேணாங்க மாத்தியா, ஒங்க மேல எங்களுக்கு அப்படியேதுங் கோபமில்லீங்க. நம்ப தலைவருக்கு ரெண்டு நாளா சொகமில்லீங்க...... அதுதாங்க..."" என இழுத்தார் கங்காணி.

பண்டா முதலாளி சிரட்டையில் கள்ளை வார்த்துக்கொண்டு வந்து கங்காணியிடம் கொடுத்தார். இரு கைகளினாலும் அதனை வாங்கித் தனது வாயில் வைத்து ஓர் உறிஞ்சு உறிஞ்சிவிட்டு வாயைச் சப்புக் கொட்டிக் கொண்டார் கங்காணி.

""என்னங்க மாத்தியா இன்னிக்கு கள்ளு ரொம்பப் புளிப்பா இருக்கே@ பழைய கள்ளை ஏதும் கலந்துப்புட்டீங்களா?""

""ச்சா, என்னாங்க கங்காணி அப்புடிச் சொல்லுறது...... ஒங்களுக்கு நாங் அப்படி செய்யிறதா? இன்னிக்குத்தான் மரத்திலை இருந்து ஏறக்கினது"" எனக் கூறிவிட்டு வீட்டின் முன் பக்கத்தில் இருந்த தனது மனைவிக்குக் கேட்கும்படியாக, ""மெனிக்கே..... மே கங்காணிட்ட அளகெயின்ட"" எனக் கூறினார்.

வீட்டின் முன்புறமாகவுள்ள விறாந்தையில் பலசரக்குக் கடையொன்றையும் பண்டா முதலாளி வைத்திருக்கிறார். அந்தப் பகுதியில் வேறு கடைகள் ஏதும் இல்லாததால் அவருக்குப் பலசரகக்குக் கடையிலிருந்தும் கணிசமான வருமானம் கிடைத்தது. அந்தக் கடையை அவரது மனைவி மெனிக்காதான் கவனித்துக் கொள்வாள்.

பக்கத்துத் தோட்டங்களிலிருந்து அவரிடம் கள்ளு குடிக்க வருபவர்களும், அந்தக் கிராம மக்களும் அவரது கடையிலேதான் அன்றாட தேவைகளுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிச் செல்வார்கள்.

கள்ளுக் குடிப்பவர்கள் சுவைப்பதற்கென்றே தயாரித்து வைத்திருந்த மரவள்ளிக் கிழங்குக் கூட்டை சேம்பு இலைமொன்றில் எடுத்துவைத்து கங்காணியின் முன்னால் வைத்தாள் மெனிக்கே.

கறுப்பண்ணன் கங்கானி அதில் ஒரு துண்டை எடுத்துக் கடித்துவிட்டு மீண்டும் கள்ளை உறிஞ்சினார்.

பலசரக்குக் கடையில் சாமான் வாங்குவதற்காக யாரோ வந்தார்கள். மெனிக்கே வியாபாரத்தைக் கவனிப்பதற்காக முன்னே சென்றாள்.

""மே மாயாண்டி எனவா"" முன் பக்கத்தில் வியாபாரத்தைக் கவனித்தவாறே பண்டா முதலாளிக்குக் கேட்கும்படியாகக் கூறினாள் மெனிக்கே.

வழுவியிருந்த சாரத்தை ஒரு தடவை தனது பருத்த சொந்தியில் வரிந்து கட்டிவிட்டு ""ஆ! என்ட மாயாண்டி..... எப்புடி? ஏங் இன்னிக்கி மிச்சங் சொணங்கி வந்தாச்சு...."" எனக் கேட்டபடி அவரை வரவேற்றார் பண்டா முதலாளி.

""நம்ப கண்டக்கையா ஒரு வெசயமா வங்களாவுக்கு வரச் சொல்லியிருந்தாரு.... அதுதாங்க போயிட்டு வரக்கொஞ்சம் சொணங்கிப் போச்சு"" எனக் கூறியபடி கறுப்பண்ணன் கங்காணியருகே அமர்ந்து கொண்டார் மாயாண்டி.

கறுப்பண்ணன் கங்காணி மாயாண்டியைப் பார்த்துச் சிரித்துவிட்டு, மீண்டும் சிரட்டையுடன் கள்ளு உறிஞ்சத் தொடங்கினார்.

பண்டா முதலாளி வேறொரு சிரட்டையில் கள்ளை வார்த்து வந்து மாயாண்டியிடம் கொடுத்தார். பின்பு வெளியே சென்று வாயில் நிறைந்திருந்த வெற்றிலைத் துப்பலை உமிழ்ந்து விட்டு வந்து,

""அதிங்சரி மாயாண்டி, வீரய்யா சொல்லி சொல்றது ஒங்க மவன்தானே.... அன்னிக்கி நம்ப மந்திரி கூட்டத்துக்கு வாறப்போ அந்தப் பெடியன்தாங் எல்லா வேலையும் செஞ்சது... நமக்கு மிச்சங் சந்தோஷம்"" எனக் கூறிவிட்டுச் சிரித்தார்.

""ஆமாங்க மாத்தியா, தோட்டத்திலே எந்த ஒரு வெசயத்துக்கும் அவன்தாங்க முன்னுக்கு நிப்பான். நம்ப தோட்டத்து ஆளுங்ககூட அவன்மேல ரொம்ப பிரியமுங்க"" எனத் தட்டுத் தடுமாறியபடி கூறினார் கறுப்பண்னன் கங்கானி.

பண்டா முதலாளியும் கறுப்பண்ணன் கங்கானியும் கூறிய வார்த்தைகள் மாயாண்டிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன.

""என்னகோ, நீங்கதான் அவனைப்பற்றிப் பெரிசா பேசிக்கிறீங்க... எந்த நேரம் பார்த்தாலும் தோட்ட வெசயமுன்னு சொல்லிக்கிட்டு பயலுங்களோட சேந்து சுத்திக்கிட்டு திரியிறான். அவனுக்கு வூட்டு வெசயத்தில கொஞ்சங்கூட அக்கறையிருக்கிறதாத் தெரியல்ல"" எனப் பொய்யாகக் குறைப்பட்டுக் கொண்டே தனது கற்றை மீசையில் படிந்திருந்த கள்ளைப் புறங்கையால் துடைத்துக் கொண்டார் மாயாண்டி.

""மாத்தியா எனக்கு இன்னொரு போத்தல் கள்ளுத் தாங்க, அப்படியே நம்ப மாயாண்டிக்கும் ஒரு போத்தல் என் கணக்கில கொடுங்க"" எனத் தடுமாறியபடி கூறினார் கறுப்பண்ணன் கங்கானி.

பண்டா முதலாளி மேலும் இரண்டு போத்தல் கள்ளை வார்த்துவந்து அவர்களது சிரட்டைகளில் நிரம்பினார்.

வெளியே இருள் சூழத் தொடங்கியது.

முற்றத்தில் காய்வதற்காகப் பரவியிருந்த கராம்புகளைப் பாயுடன் சுருட்டி எடுத்துக்கொண்டு வந்தாள் மெனிக்கே.

பண்டா முதலாளியின் தோட்டத்தில் நிறைய கராம்புச் செடிகளும், ஏலச் செடிகளும் இருக்கின்றன. அவற்றிலிருந்தும் பண்டா முதலாளிக்குக் கணிசமான வருமானம் கிடைக்கிறது.

மெனிக்கே கராம்பை உள்ளே கொண்டு வருவதைப் பார்த்ததும் நேரமாகிவிட்டதை உணர்ந்து கொண்டார் முதலாளி.

""சரிங் கங்காணி நேரமாச்சு.... நாங்களும் ரொம்பத் தூரங் போக வேணுங்"" எனக் கூறியபடி மெனிக்கே கொண்டு வந்த கராம்பை வாங்கி உள்ளே வைத்தார் பண்டா முதலாளி.

கறுப்பண்ணன் கங்காணியும் மாயாண்டியும் புறப்படுவதற்கு ஆயத்தமானார்கள்.

""அப்ப நாங்க வர்ரோமுங்க மாத்தியத"" எனக் கூறியபடி எழுந்த கறுப்பண்ணன் கங்கானி சுருட்டொன்றை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு மாயாண்டியிடமும் ஒரு சுருட்டைக் கொடுத்தார்.

இருவரும் புறப்பட்டுத் தோட்டத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.

""கங்காணி, இந்த எடங் கொஞ்சம் வரக்கட்டா இருக்கு.... விழுந்திடாம பார்த்து நடந்து வாங்க"" எனக் கூறியபடி முன்னால் நடந்தான் மாயாண்டி.

""என்ன மாயாண்டி அப்புடிச் சொல்லிப்புட்டே, இது நம்மளுக்கு பழக்கப்பட்ட பாதைதானே. இந்தக் குறுக்கில எந்த எடத்தில வரக்கட்டு இருக்கு, எந்த எடத்தில மொடக்கிருக்குன்னு எனக்கு நல்லா நெதானம் இருக்கு"" எனக் கூறிய கறுப்பண்ணன் கங்கானி கால் தடுமாறிக் கீழே விழப்போனார். உடனே மாயாண்டி அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

""பாரு மாயாண்டி அன்னிக்கி நாம மந்திரிக்குப் போடவச்சிருந்த மாலையை இந்த பண்டாப் பயல் எடுத்துப் போடிட்டான்@ அவன் ராங்கியை பாத்தியா?..... முந்தின காலத்தில அவன் லயத்துக்கு லயம் பாக்குத் தூக்கி வித்துக்கிட்டு திரிஞ்சது நமக்குத் தெரியாதா...? இப்ப என்னடான்னா பெரிச மனுசன் மாதிரி மந்திரிக்கு மாலை போட வந்திட்டான்"" எனக் கறுவிக் கொண்டார் கறுப்பண்ணன் கங்கானி.

""ஆமாங்க கங்காணி, கையில கொஞ்சம் பணம் சேர்த்திட்டா இன்னிக்கி எல்லாரும் பெரிய மனுசன்தான்... தோட்டத்து ஆளுங்க எல்லாம் இன்னிக்கி இவன் கிட்டத்தானே கள்ளுக்குடிக்கப் போறாங்க. அப்ப இவங்கிட்ட சல்லி சேராம வேற எங்க போகும்?""

""அதிலையும் பாரு மாயாண்டி இந்த பண்டாப்பய ஒரு நாளைக்கு நல்ல கள்ளு வைச்சிருக்கான்@ ஒரு நாளைக்கு மொட்டப் பச்சத்தண்ணியா ஊத்திறான்"" என்றார் கறுப்பண்ணன் கங்கானி.

Like what you read?
{{global.chaps[1].like_count}} {{global.chaps[1].like_text}}
Like what you read?
{{global.chaps[2].like_count}} {{global.chaps[2].like_text}}
Like what you read?
{{global.chaps[3].like_count}} {{global.chaps[3].like_text}}
Like what you read?
{{global.chaps[4].like_count}} {{global.chaps[4].like_text}}
Like what you read?
{{global.chaps[5].like_count}} {{global.chaps[5].like_text}}
Like what you read?
{{global.chaps[6].like_count}} {{global.chaps[6].like_text}}
Like what you read?
{{global.chaps[7].like_count}} {{global.chaps[7].like_text}}
Like what you read?
{{global.chaps[8].like_count}} {{global.chaps[8].like_text}}

{{user_data.book_status}}

Literature & Fiction | 9 Chapters

Author: TAMIZHDESAN IMAYAKAPPIYAN

Support the author, spread word about the book to continue reading for free.

PULI - MAKKAL KAPPIYAM PESUGIRADHU-2

Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}

Be the first to comment
Reply To: {{insta_features.post_comments_reply.reply_to_username}}
A-
A+
{{global.swiggy_msg_text}}