இன்னுயிர் தந்தனை

பதின்பருவக் கதைகள்
4.8 out of 5 (62 )

" கண்மணி, எழுந்துரு... ராத்திரில நேரங்கழிச்சி தூங்கற, காலையில பத்து மணி ஆவப் போது, இன்னும் எழுந்துக்க மாட்ற, வயசுப் பொண்ணு காலையில எழுந்துக்க மாட்ற " டீ போட்டுக் கொண்டு வந்து வைத்தார். கண்மணியின் அம்மா.

கண்மணியின் தந்தை சின்னதாக டூ வீலர் பஞ்சர் ஒட்டும் கடைக்கு சொந்தக்காரர். ஒரு தம்பி, கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கிறான், அடுத்து ஒரு தங்கை, பன்னிரண்டாம் வகுப்பு . கண்மணி பத்தாம் வகுப்பு வரை படித்தவள். அதற்கு மேல் படிக்க கண்மணிக்கு ஆர்வம் இல்லை.

காண்பவர்களை ஒரு முறையாவது திரும்பி பார்க்க வைக்கும் துறுத் துறுப்பான அழகு.. கல கலவென பேசி உடனே பழகி விடும் இயல்பு கண்மணிக்கு. அன்பான தாய் தந்தை, பாசம் மிக்க தம்பி தங்கை.. அழகான குடும்பம்.. ஆனால் பிள்ளைகள் வளர வளர வரவு போதவில்லை.

ஒரு நாள் கண்மணி தன் அம்மாவிடம் கேட்டாள்,

" அம்மா, நான் வீட்டுல சாப்டுட்டு, சாப்பிட்டு சும்மா தானே இருக்கேன்.. நீயும் சும்மா என்ன எதாவது திட்டிக்கிட்டே இருக்க, நான் வேணா வேலைக்கு போகட்டுமா ? எனக்கும் பொழுது போகும், வீட்டுக்கும் செலவுக்கு பணம் கிடைக்கும் இல்ல?"

" வேலைக்கு எல்லாம் வேணாம், நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது.. அப்பாவும் உன்ன வேலைக்கு போக விட மாட்டாரு "

" ம்மா.. ஏம்மா.. சரிப்பட்டு வராது ? அப்பாகிட்ட நீ சொல்லும்மா, நீ சொன்னா அப்பா கேப்பாரு தான.. "

' இவளுக்கு எப்டி சொல்லிப் புரிய வக்கிறது?" கண்ணுக்கு லட்சணமான வயசுப் பொண்ணு அதோட, கண்மணி ரொம்ப வெகுளித்தனமானவ..

" ம்மா, சரின்னு சொல்லும்மா, நம்ம பக்கத்து வீட்டு ரமணி அக்கா கூட எக்ஸ்போட்டுல தான வேலைக்கு போறாங்க, அக்காகிட்ட சொல்லி வேலைக்கு சேர்த்து விட சொல்லும்மா "

" எக்ஸ்போட்டு வேலைக்கா ? முடியாது "

" ம்மா .. ம்மா .. நான் வேலைக்கு போனா வீட்டு செலவுக்கு ஆகும் இல்ல... ம்மா சரின்னு சொல்லும்மா " என்று ஒரே நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள் கண்மணி.

அவர்கள் வீடு இருப்பது ராணி அண்ணா நகர். பிள்ளைகள் சின்ன வயதாக இருக்கும் வரை சுசிலாவுக்கு ஏரியாவைப் பற்றி எதுவும் கவலை இல்லை.. மரக்காணத்தில் பிறந்து வளர்ந்த சுசிலாவுக்கு புகுந்த வீடாக அமைந்தது சென்னையிலிருக்கும் ராணி அண்ணா நகர்.

ஆரம்பத்தில் அந்த ஒண்டிக் குடித்தன வாழ்க்கை பிடிக்கவில்லை என்றாலும் போகப் போக பழகி விட்டது..

பத்தாம் வகுப்போடு நின்று விட்ட கண்மணி எப்போதும் விளையாட்டு, சுட்டித்தனம் என்று சந்தோஷமாகவே பொழுதைக் கழித்தாள். நாளாக ஆக தான் வீட்டின் பற்றாக்குறை இலேசாக அவளுக்கும் புரிய வைப்பது.

ஆனால் சுசிலாவுக்கு தான் பயம் .. ஏரியா பசங்களுக்கு எப்போதும் தெரு முனையிலே தான் வாசம்.. கேரம் போர்டு விளையாடுவது, தம்மடிப்பது என்று எந்நேரமும் ஒரு கும்பல் நிற்றுக் கொண்டு இருக்கும். ஆனால் கண்மணியின் நச்சரிப்பு நாளுக்கு நாள் அதிகமானது.

எனவே வேலைக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்து, ஒரு நாள் ரமணியிடம் இதைப் பற்றி பேசினாள் சுசீலா.

" அக்கா, நீ ஒன்னும் பயப்படாம எங்கூட வேலைக்கு அனுப்பி வைக்கா.. கண்மணிய பத்தரமா கூட்டுன்னு போய் கூட்டியாற வேண்டியது என் பொறுப்பு.. சரியா..?" அது மட்டும் இல்லக்கா நம்ம ஏரியா பசங்கப் பத்தி நீ ஒன்னும் கவலப் படாத, நாங்க எல்லாம் தைரியமா வேலைக்கு போய் பத்தரமா வீட்டுக்கு திரும்பி வரோம்ணா அதுக்கும் காரணம் நம்ம ஏரியா பசங்க தான்.. நம்ம ஏரியா பசங்கள பாத்தா வெளிய எல்லா பயலுகளுக்கும் ஒரு பயம் இருக்குது, யாரும் எங்ககிட்ட வாலாட்ட மாட்டாங்க.. நம்ம பசங்க தான் ஏரியா பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு அது தெரியுமா உனக்கு? நாளைக்கே எங்கூட அனுப்புக்கா " என்றாள்.

" கண்மணி, நான் அப்பாக்கிட்ட கேட்டுக்கறேன்.. நீ கவனமா அக்கா கூடவே போய், அக்கா கூடவே வரணும், அநாசியமா எந்த பசங்க கூடயும் பேச்சி வச்சிக்க கூடாது.. சரியா ? " என்று வேலைக்கு போகும் முன்பே சுசீலா கண்மணிக்கு எச்சரிக்கை உணர்வை தந்துக் கொண்டு இருந்தாள்.


ஆறு மாதங்கள் ஓடி விட்டது..

கண்மணிக்கு வேலைப் பிடித்து இருந்தது. ஓரளவிற்கு சம்பளமும் வருவதால் குடும்பத்தை நடத்துவதில் சற்று சிரமம் இல்லாமல் இருந்தது..

வேலைக்கு சென்ற ஆரம்பத்தில் அம்மா தான் கண்மணிக்கு தலையில் நன்கு எண்ணெய் வைத்து பின்னல் போட்டு அனுப்புவாள்.. ஆனால் கொஞ்ச நாட்களாக,

கண்மணி தலைக்கு எண்ணெய் வைப்பது பிடிக்காமல்.. அப்படியே தலை முடியை பிரித்துப் போட்டு ஒரு சின்ன கிளிப் போட்டுக் கொள்ளத் தொடங்கினாள்.. அம்மா வைத்து விட்ட போது பொட்டு கண்ணுக்கு தெரியும்படி கொஞ்சம் பெரியதாக இருந்தது.. ஆனால் இப்போது கண்ணாடி போட்டுக் கொண்டு தான் தேட வேண்டும்.. அந்த அளவுக்கு இருந்தது.

ஒரு நாள்,
உதட்டை துப்பட்டாவால் துடைத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தாள் கண்மணி.

" ஏ..கண்மணி, என்னாச்சு வாயில ? காட்டு " என்று அம்மா கேட்க,

" ஒன்னும் இல்லம்மா, ஒன்னும் இல்ல " என்று முகத்தைக் காட்டாமல் திரும்பிக் கொண்டாள்..

" ஏய்..திரும்பு இந்த பக்கம் " என்று அம்மா உதட்டை பார்த்தாள்.. சிகப்பு சாயம் ஒட்டி இருந்தது..

" என்னாடி இது.. செவப்பா இருக்குது " என்று அம்மா கேட்க..
" அது வந்தும்மா.. வந்து " என்று தயங்கிய போது,

" அது லிப்ஸ்டிக் ம்மா, அக்கா தினமும் அத போட்டுக்கறா, உனக்கு தெரியாம அவ பேக்குலயே மறைச்சி வச்சி இருக்காம்மா " என்று போட்டுக் கொடுத்தாள் கண்மணியின் தங்கை,

கண்மணியின் நடை, உடை, பாவனை எல்லாம் கொஞ்ச கொஞ்சமாக மாறி இருந்தது. சரி வேலைக்கு போகும்போது இப்படி பராமரித்துக் கொள்வது ஒன்றும் தவறு இல்லை என்று தனக்கு தானே சமாதானமும் செய்துக் கொண்டாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை,

ரமணி வந்தாள்.

" வா ரமணி, உக்காரு, இங்கேயே தான் இருக்கோம் ஆனாலும் பாத்துக்கவே முடியறது இல்ல.. இரு, டீ போட்டுட்டு வரேன் "

" அக்கா, கண்மணி எங்க..? "

"குளிச்சிட்டு இருக்கா.. "

" அக்கா உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.. "

" சொல்லு ரமணி "

" இங்க வேணாம், நீ அப்புறமா எங்க வீட்டுக்கு வாக்கா.. அங்க பேசிக்கலாம் " என்று கூறி விட்டு கிளம்பினாள் ரமணி..

கண்மணிக்கு ரமணியைப் பார்த்ததும் முகம் மாறியது. சுசீலாவும் அதை கவனித்தாள். வீட்டு வேலையை முடித்து விட்டு ரமணியைப் பார்க்க கிளம்பினாள்.

" அக்கா, இப்பல்லாம் கண்மணி ரொம்ப மாறிடுச்சி க்கா.. ஒரே எடத்துல தான் வேலை செய்றோம்னு பேரு, ஆனா எங்கிட்ட இப்பல்லாம் முகம் கொடுத்துக் கூட பேசறது இல்ல.."

" ஏன் என்னாச்சி "

" அக்கா, அது வந்து, எங்க
முதலாளி பையன் சந்தோசு இருக்கு இல்ல, அது கூட இப்பல்லாம் ரொம்ப நெருங்கி பழகுது, நான் அதை கவனிச்சிட்டு ஒரு நாளு கூப்பிட்டு கண்டிச்சேன், அன்னையில இருந்து கண்மணி எங்கூட பேசறது இல்லக்கா,
எனக்கு மனசுக்கு ஒன்னும் சரியா படல, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த பையன் ஒரு மாதிரி. அதான் உங்கிட்ட சொல்லிடலாம்னு தோனுச்சி, பாத்துக்கோக்கா, புள்ளைக்கு நல்லவிதமா எடுத்து சொல்லு, கோவப்பட்டுடாத "
என்று எச்சரிக்கை செய்து அனுப்பினாள் ரமணி.

மகளின் போக்கில் ஏற்கனவே கவலைக் கொண்டு இருந்த சுசீலாவுக்கு ரமணி சொன்ன விஷயம் கேட்டு நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல இருந்தது.

கண்மணி கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டு இருந்தாள். ஆடையும் புதிதாக உடுத்தி இருந்தாள்.

“ கண்மணி, எங்க கிளம்பற? இது என்ன சுடிதாரு புதுசு மாதிரி இருக்கு, எப்ப வாங்குனது இது ? என்று கேட்க,

கண்மணிக்கு ஓரளவுக்கு புரிந்து விட்டது. ரமணி அக்கா வீட்டுக்கு வந்து போய் இருக்காங்க, அம்மா மறுபடியும் வெளியே போய் வந்து இருக்காங்க. இதை எல்லாம் வைத்து, அம்மாவுக்கு ஏதோ விஷயம் தெரிந்து விட்டதாக கண்மணி ஓரளவுக்கு கணித்து விட்டாள். எப்படி சமாளிப்பது என்று யோசித்தாள்.

இன்று சந்தோஷ் உடன் வெளியே செல்வதாக இருந்தது. நேரம் ஆகிறது, என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தாள். வசமாக சிக்கிக் கொண்டு விட்டது புரிந்தாலும், வெளியே போக வேண்டும் என்பதிலேயே கவனம் இருந்தது.

“ அம்மா, அது வந்து கூட வேலை பாக்கற பிரண்டுங்க நாலு பேரு ஒரே மாதிரி ட்ரெஸ் வாங்கினோம்.. அது பேக்குலயே இருந்துச்சிம்மா... சொல்ல மறந்துட்டேன் "என்றாள்

ஆனாலும் அந்த புதுத் துணியைப் பார்த்தால் மிக அதிக விலை இருக்கும் போல தோன்றியது.. கண்மணி ஏதோ பொய் சொல்லி சமாளிக்கிறாள் என்று மட்டும்
புரிந்தது.

“ கண்மணி, எங்க கிளம்பற ?" இன்னக்கி நீ எங்கயும் போக வேணாம்... வீட்டுல இரு, மீன் கொழம்பு வச்சி இருக்கேன்.... நீ தினமும் டப்பா சோறு தான எடுத்துனு போற, இன்னைக்கு நம்ம எல்லாரும் சேந்தே சாப்டலாம். அப்பாவும் வந்துடட்டும்... பாவம் மனுஷன்.. நீ வீட்டுல சாப்டறதுக்கு இல்லங்கறதுக்காக அவரும் மீனு கறின்னு எதுவும் எடுக்க வுடல.. அதனால இன்னைக்கு நீ எங்கயும் போவாம வீட்டில இரும்மா “ என்றாள் சுசீலா.

அப்பா, தம்பி தங்கை அனைவருடனும் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று கூறி, கண்மணியை வீட்டிலேயே இருக்க வைத்தாள் சுசீலா. கண்மணிக்கு தவிப்பு தாங்கவில்லை.. என்ன செய்வது என்றுத் தெரியாமல் அவளும் சாப்பிட உட்கார்ந்தாள். மனசு முழுதும் சந்தோஷ் பற்றிய நினைவாகவே இருந்தது.. அவளுக்காக காத்திருப்பான் என்று நினைக்கையில் கண்களில் நீர் முட்டியது. சுசீலா அதை கண்டும் காணாதது போலவே இருந்தாள்.

" கண்மணி, இன்னைக்கு தாம்மா நிம்மதியா சாப்பிட போறோம்.. நீ இல்லாம கவுச்சி வாங்கி சமைச்சி சாப்பிட மனசு வரல டா.." என்று கூறிக் கொண்டே சாதத்தை பிசைந்து முள் இல்லாமல் மீனை புட்டு சாதத்துக்குள் வைத்து கண்மணிக்கு ஊட்டி விட்டார் அவள் அப்பா.

கண்மணியின் கண்கள் லேசாக கசிவதைக் கண்டு,
" ஏ.. சுசீலா.. காரம் கூட போட்டியா இன்னா... புள்ள கண்ணுல இருந்து தண்ணி வருது பாரு.." என்று கூறியபடி தன் தோல் மீது இருந்த துண்டு எடுத்து கண்மணியின் கண்களை துடைத்து விட்டார்.. இது எதுவுமே கண்மணிக்கு கண் முன் நடப்பது போன்றே தெரியவில்லை.

சாப்பிட்டு முடித்த பின், அம்மா அப்பா சிறிது கண் அயர்ந்து தூங்க, அந்த நேரத்தைப் பயன்படுத்தி வெளியே போகத் தயாரானாள் கண்மணி. வீட்டு வாசலைத் தாண்டும் நேரத்தில் ..

" கண்மணி " என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நின்றாள். அம்மா நின்றுக் கொண்டு இருந்தாள்.

" கண்மணி, எங்கே போற.. நான் தான் உன்னை இன்னக்கி வீட்டுலயே இருக்க சொன்னேன் இல்ல.. அப்புறம் எங்க கிளம்பற.. உள்ள போ.." என்று அம்மா கொஞ்சம் அதட்டும் குரலில் அழுத்தமாக கூறினாள்..

கண்மணிக்கு சந்தோஷிடம் இருந்து தொடர்ந்து போன் வந்த வண்ணம் இருந்தது.. வீட்டிலிருக்கும் போது அவளுடைய போனை சைலன்டில் போட்டு விடுவாள்.. சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக.. எடுத்து பேசவும் முடியாத படி அம்மா.. கூப்பிடு தூரத்திலேயே இருந்தாள்.

கண்மணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை... நேரமாகிக் கொண்டே இருந்தது. நான்கு, ஐந்து, ஆறு என்று நேரம் போக போக கண்மணிக்கு இனி வெளியே போக வாய்ப்பில்லை என்று எண்ணி அழுதுக் கொண்டே படுத்து விட்டாள்.

ஏனோ அந்த ஒரு நாளில் அவளை வெளியே அனுப்ப வேண்டாம் என்று சுசீலாவின் உள் மனம் அவளை எச்சரித்துக் கொண்டே இருந்தது. கண்மணிக்கு ஏதும் தவறாக நடந்து விடக் கூடாது தொடர்ந்து பிரார்த்தனை செய்தது அவளின் தாய் உள்ளம்.

கண்மணி வராததால் மிகவும் கடுப்பாகிப் போன சந்தோஷ் ஏமாற்றத்துடன் தன் வீட்டுக்கு சென்று விட்டான். பிறகு மெசேஜ் மூலம் தான் வர முடியாத காரணங்களை தெரிவித்தாள் கண்மணி. அதற்கு அவனிடம் இருந்து பதில் மெசேஜ் எதுவும் வரவில்லை.. தன் காதலன் ஊடல் கொண்ட கோபத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டு தானும் துயரப்பட்டு தாளாத சோகத்தில் இருந்தாள் கண்மணி. ஆனால் அவன் எதிர்பார்த்தது அவள் மெசேஜ்களை அல்ல, அவளை.

மறுநாள் வேலைக்கு கிளம்பும் முன் அம்மாவின் மறைமுக எச்சரிக்கை வார்த்தைகளாக வந்தது. கண்மணியை இந்த மாதத்தோடு வேலையை விட்டு நிற்கும்படி கூறி அனுப்பினாள்.

கம்பெனியில் ரமணி அக்காவை பார்க்கவே பிடிக்கவில்லை. அவளால் தான் நேற்று சந்தோஷை சந்திக்க போக முடியாமல் போனது என்று அவள் மீது கடும் கோபம் உண்டானது.

அலுவலக அறையை நோக்கிச் சென்றாள். அங்கே சந்தோஷ் இல்லை. பெரிய முதலாளியான சந்தோஷின் அப்பா தான் இருந்தார். ஏமாற்றத்துடன் திரும்பி வந்த கண்மணிக்கு வேலையில் மனம் செல்லவில்லை...

இருபது நாட்களுக்கும் மேல் ஆகி விட்டது. சந்தோஷை காண முடியவில்லை, தவிர போன் செய்தாலும் எடுக்கவில்லை எவ்வளவு மெசேஜ் அனுப்பினாலும் பதில் இல்லை. நாளாக, ஆக கண்மணிக்கு இந்த உலகமே இருண்டது போல ஆகி விட்டது. சந்தோஷை காணாமல் பேசாமல் அவளுக்கு வாழ்க்கையே வெறுமையாக இருந்தது..

ஆரம்பத்தில் தன் மீது ஊடல் கொண்ட கோபம் என்று தான் எண்ணி இருந்தாள். அது
அவளுக்கு கொஞ்சம் பெருமிதமாகவும் இருந்தது..அந்த தவிப்பு அவளுக்கு ஒரு வித ஆனந்த வலியைக் கொடுத்தது. ஆனால் போக போக அது தேயத் தொடங்கியது.

அன்று காலை, பெரிய முதலாளி அனைவரையும் அழைத்து ஒரு இடத்தில் அமர வைத்து சொன்னார். தன் மகன் சந்தோஷிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருப்பதாகவும், மேனேஜரிடம் அனைவருக்கும் பத்திரிக்கை வினியோகம் செய்யும்படியும் கூறினார்.

அனைவரும் திருமணத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கூறி விட்டு கிளம்பினார்.

அப்போது கம்பெனியில் எந்த மெஷினும் ஓடவில்லை.. ஆனால் கண்மணிக்கு மட்டும் அனைத்து மெஷின்களும் ஒன்றாக இயங்குவது போல காதுகளை கிழிக்கும் அளவுக்கு பயங்கரமான சத்தம் கேட்டது போல இருந்தது. சில நிமிடங்களில் கண்மணி நின்ற இடத்திலேயே மயங்கி விழுந்தாள். கண்மணிக்கு என்ன நேர்ந்து இருக்கும் என்று அங்கு இருந்த அவளுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் புரிந்தது... ரமணி அக்கா உட்பட.

அதன் பிறகு கண்மணி வேலைக்கு போகவில்லை. எப்போதும் கையில் போன் வைத்துக் கொண்டே இருந்தாள். சந்தோஷிடம் இருந்து ஒரு போன் அல்லது ஒரு மெசேஜ் வராதா என்று அவளுடைய பொய் மனம் ஏங்கியது. வாழ்க்கை சூன்யமாகி விட்டது.. எப்போதும் யாருக்கும் தெரியாதபடிக் கண்ணீர் வந்துக் கொண்டே இருந்தது.


அம்மாவுக்கு நிலைமை நன்றாக புரித்தது. எவனோ எப்படியோ கல்யாணம் பண்ணிட்டு போய் தொலையட்டும், கண்மணி ஒரு வழியாக அதுல மாட்டாம திரும்ப கிடைத்து விட்ட நிம்மதி.
' அழுவட்டும், எத்தன நாளைக்கு அழப் போறா... '

ஒருநாள்,
கண்மணியின் தம்பி டிவி பார்த்துக் கொண்டு இருந்தான்... செய்திக் கண்டு அதிர்ந்தான்..

" அம்மா, அம்மா இங்க வந்து பாரேன்... விஜய் டிவி யில, சந்திரா ஸ்டோர்ஸ் நாடகத்துல நடிக்குமே மல்லி ன்னு.. அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சாம் மா... "

" அட கடவுளே.. ஏண்டா அந்தப் பொண்ணு இப்புடி பண்ணிக்கிச்சு, எவ்ளோ அழகா இருக்கும்.. கலகலன்னு பேசுமே...டிவியில வேலை பாக்குது கைநிறைய சம்பளம், பாவம் அவங்க அப்பா அம்மா. வாழ வேண்டிய வயசுல இந்த பொண்ணுக்கு கடவுளு இப்புடி எழுதிட்டானே " என்று கண் கலங்கி புலம்பினாள் சுசீலா.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த கண்மணிக்கும் கண்களில் நீர் வந்தது.. அம்மாவுக்கு மனசு ஒரு மாதிரி இருந்தது.

ஒருநாள்,
" ம்மா எனக்கு தினமும் தலை வலி அதிமாயிட்டே இருக்கும்மா, டாக்டர் தான் கண்ணாடி போட சொன்னாரு இல்ல, நீ இன்னும் வாங்கி தர மாட்ற.. " என்றாள் கண்மணியின் தங்கை.

" ரெண்டு நாளு பொருத்துக்கோம்மா... கண்டிப்பா கண்ணாடி வாங்கி தரேன் "

" ம்மா, எனக்கு இன்னும் காலேஜ்க்கு பணம் கட்டல, எத்தினி வாட்டி தான் கேக்கறது மா உங்கிட்ட " தம்பியும் பணம் கேட்க ஆரம்பித்து விட்டான்.

" டேய் அடுத்த வாரம் கட்டலாண்டா, முதல்ல இவளுக்கு கண்ணாடி வாங்கி தரணும், அப்புறமா காலேஜ்க்கு பணம் தரேன் "

" ஆமா, எப்ப பணம் கேட்டாலும் இப்டியே சொல்லுங்க " என்று புலம்பி விட்டு போனான்.

கண்மணி இதை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

இரவு, எட்டு மணிக்கு மேல் அனைவரும் சாப்பிட உட்கார்ந்தனர். கண்மணியின் அப்பாவும் மிகவும் சோர்வுடன் வந்து அமர்ந்தார்.

வீடு இயல்புக்கு எதிரான ஒரு அமைதியில் இருந்தது. யாரும் யாருடனும் பேசவில்லை. கண்மணி அனைவரையும் ஒரு முறை பார்த்தாள் கண்கள் குளமானது. அனைவரும் தூங்க சென்ற பிறகு தானும் ஒரு முடிவுக்கு வந்தாள்.

" பசங்க, ஆளுக்கு ஒரு பிரச்சனையை சொல்லி பணம் கேக்கறாங்க, நானும் எதையாவது சொல்வி சமாளிக்கிறேன், இன்னாங்க பண்றது ? "

அம்மாவின் குரல் கேட்டது கண்மணிக்கு,

" எனக்கும் இன்னா பண்றதுன்னு தெரியல, சுசீலா, மின்ன மாதிரி பஞ்சர் ஒட்றதுக்கு வண்டிங்க வரல.. நானும் எப்டியோ இத்தினி வருசமா காலத்த ஓட்டிட்டேன்.. பணத்துக்கு யார் யார்கிட்டயோ கேட்டு பாத்துட்டேன்... எல்லாரும் கைய விரிச்சிட்டாங்க..

" கண்மணி வேலைக்கு போனதால கொஞ்சம் நிம்மதியா இருந்துது.. ஆனா இன்னாத்துக்கு வேலைய வுட்டுச்சின்னு தெரியல.. அதுக்கிட்ட நம்ம எப்டி கேக்ககறது... மறுபடியும் வேலைக்கு போனா குடும்பம் கொஞ்சம் கஸ்டம் இல்லாம ஓடும்.. எனக்கும் ஓடம்பு மின்ன மாதிரி இல்ல.. அடிக்கடி மாரு வலிக்குது..
ஆனா வயசுப் பொண்ணுக்கிட்ட நம்ம எப்டி வேலைக்கு போவலையான்னு கேக்கறது..சரி புள்ளக்கி வேலைக்கு போக புடிக்கலன்னா அது பத்தி நம்ம பேசக்கூடாது "

" நீங்க ஒன்னும் இத பத்தி கவலப்பட வேணாம்.. நான் வேணாக்கூட வீட்டு வேலைக்கு போறேன்.. கே கே நகர்ல ஒரு வீட்டில வேலைக்கு ஆள் வேணுமாம் . குமாரி கூட சொல்லுச்சி.. நான் போறங்க வேலைக்கு... "

" சுசிலா, உன்ன கல்யாணம் கட்னதுல இருந்து உன்ன வேலைக்கு எல்லாம் போவ வுட்டது இல்ல, இந்த வயசுல இப்போ போய் உனக்கு இந்த மாதிரி ஒரு நெலம வந்துருச்சு பாரு..என்று கூறி விசும்பி அழ ஆரம்பித்து விட்டார்..

அம்மா அப்பா பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தாள் கண்மணி.

கண்மணியின் அம்மாவுக்கு மனசே சரி இல்லை, அந்த டிவி சீரியல் பொண்ணு தற்கொலை சம்பவம் அவங்களோட மனதை மிகவும் சஞ்சலத்திற்கு ஆளாக்கி இருந்தது.

மணிக்கு ஒரு முறை, ' கண்மணி தூங்குகிறாளா ' என்று எழுந்து எழுந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். கண்மணியும் தூங்குவதை போலவே இருந்ததால், இதை கவனித்துக் கொண்டு இருந்தாள்.

திடீரென கண்மணி கண் திறந்து எழுந்து உட்கார்ந்து இருந்தாள். இந்த முறை அம்மா வந்து பார்த்ததும்,

" ம்மா, என்னம்மா இத்தன தடவை என்னை வந்து வந்து பாக்கற, ஏம்மா நீ தூங்கலையா ? "

" அது ஒன்னும் இல்லம்மா "என்று அம்மா சமாளித்தார்.

" இன்னைக்கு அந்த டிவி சீரியல் நடிகை மல்லியோட செய்தி கேட்டதுல இருந்து நீ ஒரு மாதிரி இருக்க, நான் அப்படி ஏதாவது பண்ணிக்குவேன்னு தான பயந்து பயந்து இத்தன தடவ வந்து பாக்கற ? "

" ம்மா, நான் உங்கிட்ட நேரடியா பேசல, நீயும் இது வரைக்கும் நடந்த எதையும் நேரடியா கேக்கல... ஆனாலும் முழுசா பேசன மாதிரி தாம்மா இருக்கு"

" நான் வேலைக்கு போற முன்னாடி, எனக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது, நம்ம வீடு எந்த நிலையில இருந்தாலும் நம்ம வீட்டுல குட்டி ராணி மாதிரி என்னை பாத்துக்கிட்டீங்க "

" வெளிய போன இந்த கொஞ்ச நாள்ல எனக்கு எதுவுமே புரியலம்மா... நடந்தது எல்லாமே ஒரு குழப்பமா இருக்கு, அதுக்காக தவறான எந்த முடிவுக்கும் நான் போக மாட்டேன்.. நான் என்னம்மா தப்பு செய்தேன், நான் ஏன் எதாவது பண்ணிக்கனும்? நான் உண்மையா இருந்தேன், ஏமாந்து போன வலியும் வேதனையும் எனக்கு இருந்துது நிஜந்தான், ஆனா நாளாக ஆக என்னாலயும் இப்ப நிதானமா யோசிக்க முடியுதும்மா..

" நீ எங்கூடவே நிம்மதியா தூங்கும்மா, எனக்கு இப்ப எந்த குழப்பமும் இல்ல, "
விடிந்தது, அனைவரும் எழுந்து விட்டனர். கண்மணி முகத்தில் அப்படி ஒரு அமைதியும் தெளிவும்.

" சமயலறையில் இருந்த தன் அம்மாவை இருகக் கட்டிக் கொண்டு, அம்மா நான் மறுபடியும் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்.. நீ எதுவும் பயப்பட வேணாம். நான் பத்திரமா போய் பத்திரமா திரும்பி வருவேன் " என்று கூறினாள்

பூ. கீதா சுந்தர்,
சென்னை.
91508 27982.
.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...