எங்கே(யும்)? இல்லை!

பதின்பருவக் கதைகள்
4.7 out of 5 (13 )

எங்கே சென்றாய் என கேட்கத் தொடங்கி எங்கேயும் இல்லை என முடிவாகிறது ராம்-ன் நாத்திகன் குணாதிசயம்.

வழக்கம் போல பல சோதனைகளுக்குப் பிறகு சித்ராவுடன் முடிவாகிறது ராம்-ன் திருமணம்.

இவள் தானா எனக்கான வாழ்க்கைத் துணை?

இவளா எனக்காக பிறந்தவள்?

இந்த நம்பிக்கையற்ற கேள்விகளுக்கு காரணம் சித்ரா வாழ்க்கைத் துணையாக நிச்சயமாக ராம் சந்தித்த பல இன்னல்களே!

அனைத்துப் பிரிவினைகளையும் (பாலினம், மதம், சாதி, பணம், படிப்பு, வேலை, ராசி, நட்சத்திரம், செவ்வாய், ராகு, கேது) வடிகட்டி கிடைத்த வரன் சித்ரா.

ராம்-ன் நெடுநாள் காத்திருப்பிற்காக அவன் வயது காத்திருக்கவில்லை. நான்காம் எட்டை கடக்க தயாராகிக் கொண்டிருந்தான்.

கேள்வி வராதா என்ன!

ராமின் பெற்றோர் கடவுள் நம்பிக்கையும், சோதிட நம்பிக்கையும் மிகுந்தவர்கள். அவனுக்கும் நம்பிக்கை உண்டு. அதலாலே அவன் வயதும் கரைந்தோடியது.

ராம் இளங்கலை பட்டம் முடித்துவிட்டு நடுத்தர வேலையில் உள்ளான். இருந்தாலும் பொருளாதாரத்தில் சற்று உயர்ந்த நடுத்தர வகுப்பை சார்ந்தவன். அதனால் சற்று ஆடம்பரமான வாழ்க்கை முறையிலே வாழ்ந்தான்.

சித்ரா இளங்கலை பட்டம் பயின்றவள். முதுகலை படிப்பிற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறாள். அதற்காக வேலைக்கு சென்று பணம் ஈட்டிக்கொண்டு இருக்கிறாள். ஒவ்வொரு தேவைகளையும் யோசித்தே செய்ய வேண்டிதாக இருந்தது.

இருவருக்கும் மன வேற்றுமையும் எண்ண வேற்றுமையும் இருந்தாலும் பிரிவினைகளால் ஒற்றுமை கண்டார்கள்.

இதுதான் வேற்றுமையில் ஒற்றுமையோ?

ராம் பல முயற்சிகளுக்குப் பிறகு வருங்கால மனைவியின் இனிய குரல் ஓசையை ரசித்தான். அவள் அழகை கண்களால் படம் பிடித்தான். அவள் எண்ணியதை நிறைவேற்ற தவியாய் தவித்தான். சித்ராவின் அழகிற்கு நகைகளும், உடைகளும் கொண்டு அழகூட்ட கனவுகளில் காத்துக்கிடந்தான்.

ஆம் அவள் அழகி தான். தனக்கானாவளை யாரும் என்றும் ரசிக்காமல் இருக்க மாட்டார்கள். அவள் பருமனை ரசிப்பான், அவள் குண்டு மூக்கை ரசிப்பான், அவள் பேசும் மொழி நடையை ரசிப்பான், அவள் முதிர்ந்த நடையை ரசிப்பான், அவளை தவிர வேறொரு அழகு இந்த பிரபஞ்சத்தில் உண்டோ?

துணை இல்லாத தன் தாயையும், தன் எதிர்கால வாழ்க்கையையும் எண்ணி அச்சத்தில் தடுமாறி இருந்தாள் சித்ரா. ஒவ்வொரு எண்ணமும் தனக்கு எதிரானதாக தோன்றியது போல் உணர்ந்தால். தாயின் ஆசைகளையும், அவர் பயத்தையும் மீற முடியவில்லை அவளால்.

தனி ஒரு ஆளாக சித்ராவை வளர்த்து, படிப்பை முடிக்க அவர்களது உழைப்பு மகத்தானது. கூலி வேலையோ, சமையல் வேலையோ, துடைக்கும் வேலையோ, பெறுக்கும் வேலையோ வித்தியாசம் பாராமல் உழைத்து உருவாகியவள் தான் சித்ரா.

சித்ராவின் எண்ணங்களோ தாயாரால் கிடைத்த பட்டப்படிப்பின் வருமானம் அவர்களுக்கே உரித்தானது என்பதும் திருமணத்திற்கு பிந்தய தாயாரின் தனிமை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே. இது சாத்தியமாகுமா? இல்லை சாத்தியப்படாது என்ற பதிலே ராமின் பெற்றோரிடம் இருந்து. மனதை திடப்படுத்திக் கொண்டாள் சித்ரா.

திருமணம் நெருங்கியது, இருமணம் நெருங்கவில்லை. ராம் பல இடங்களில் அதை உணர்தான். சித்ராவிடம் கேட்கவும் முயர்ச்சித்தான்.

ஆனால் அவன் ஆசைகள் கனவுகள் கரைதட்டிய கப்பலாகிவிட ராம் விரும்பவில்லை. கடவுள் கொடுத்த வரம்(ன்) என்று தேத்திக் கொண்டான். திருமண வாழ்க்கையில் ஈடுபட தன்னை தயார் படுத்திக் கொண்டான்.

ஆனாலும் அவன் மனதில் நெருடல் நெருப்பாக முழங்கியது. இந்த வரத்தை தவற விட்டால் கடவுளின் பார்வை கெட்டுவிடுமென்று சமாதானம் அடைந்தான். விட்டால் வேறு வழியும் இல்லை! வேறு வரனும் இல்லை! என நம்பிக்கையற்ற நம்பிக்கை கொண்டு இருந்தான்.

அவன் எதிர்பார்த்து காத்திருந்த நாளும் வந்தது. அவன் இதயத் துடிப்பு மகிழ்ச்சியாலும் பயத்தாலும் புது விதமான அவதாரம் எடுத்தது.

உற்றாரும் உறவினரும் கூடினார்கள், வீடு விழாக்கோலம் பூண்டது. யாரைப்பார்த்தாலும் பூமியில் புதிதாய் பிறந்தவர்கள் போல் புத்துணர்வாக திரிந்தார்கள். அனைவரும் இயல்பை விட வித்யாசமாக நடந்து கொண்டார்கள். இயல்பான நாட்களில் இவ்வாறு நடந்து கொண்டால் வேடிக்கையாக இருப்பார்களாக எனத்தோன்றியது. ஒருவேளை நிகழ்ச்சிகளுக்கே உரித்தான பாவனைகளா இவை எனவும் யோசிக்கத்தோன்றியது.

திருமண பந்தல் அழங்கரிக்கப் பட்டது. மலர்கள் விண்மீன் கூட்டம்போல குவிந்து கிடந்தது. மங்கல வாத்தியம் அனைவரையும் தயார்படுத்தியது. புரோகிதரின் மந்திர வார்த்தைகள் மழைக்கு முன் தவளை போல ஓங்கரம்மிட்டது.

திருமணப்பந்தல் நிழலில் ராம் வெளிச்சமற்றவனாக அமர்திருந்தான். சில மணித்துளிகள் கடக்க மங்கல வாத்தியமும், மந்திர வார்த்தைகளும் காதுகள் வழியாக மூளையில் மலையாக உருவெடுத்தது. புரியாத மந்திரங்களை டாக்கிங் டாம் போல முனுமுனுத்தான் ராம்.

புரோகிதர் "பொண்ண அழச்சுட்டு வாங்கோ".

நேரம் நெருங்கியது, ராம் கண்ட கனவுகளை மெய்பிக்க இனியும் காத்திருப்பு தேவை இல்லை என உறுதியானான். ஆம் புரோகிதர் கூறிய வார்த்தையால் ஊக்கம் பெற்றான். ராமின் மனநிலையோ மாங்கல்யம் கட்டினால் மலையை கடந்துவிடலாம் என்று! கடவுள் மீது பாரத்தைப் போட்டான்.

ராம் தன் பெற்றோரின் கண்களில் கண்ட பதற்றதால் உற்றார் உறவினர்கள் கூட்டத்தை மறந்து சித்ராவிற்காக காத்துக்கிடந்தான்.

சித்ரா மணபந்தல் காண நெருங்கவில்லை. அலங்காரம் நிறைவு பெறவில்லையா? நேரக் கோளாரா? அவளுக்கு ஏதேனும் உடல் நல தொந்தரவா? என ஏகப்பட்ட வித்தியாசமான எண்ணங்கள் ராமின் மனதிலே ஆளில்லா ரயில் பெட்டி போல ஓடியது.

கூட்டத்தில் சலசலப்பு

சித்ராவை பலமுறை கதவை தட்டி அழைத்தும் பதில் இல்லை!

கூட்டத்தில் சிலர் "கதவை உடைக்க வேண்டியதுதான்". என்று ஆவேசமாக முயல்கிறார்கள். கதவு உடைக்கப்பட்டது. "உள்ள பொண்ணு இல்ல" என்று ஒருவரின் குரல் சான்றளிக்கிறது.

அனைவருக்கும் பேரதிர்ச்சி! சில பெண்கள் சென்று கழிப்பறையை பார்க்கிறார்கள். சித்ராவின் தாய் மூலையில் அமர்ந்து தலையில் கரம் பற்றி குமுறுகிறாள்.

ராம் எண்ண செய்வது என்பதறியாது எந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவது என தெரியாமல் சிலையானான்.

“முகூர்த்த நாழி முடித்தது” என்று வெறுமையுடன் புரோகிதர்.

ஆம் நேரம் கழிந்தது. ராமின் நம்பிக்கையும் கழிந்தது.

கூச்சல் குழப்பத்திற்கு நடுவில் நுழைந்தாள் சித்ரா.

ராம் சித்ராவை பார்த்து "எங்கே சென்றாய்". என்று வினாவியது ஏமாற்றம், ஏக்கம், அறியாமை, அழுகை, கோபம் என பல உணர்வுகளை வெளிக்காட்டியது.

அனைவரது காதுகளும் சித்ராவின் உதடுகளை உற்றுப்பார்த்து.

சித்ராவின் அமைதி கூட்டத்தின் அமைதியை குலைத்தது.

சித்ராவை கேள்வியால் துளைத்தது கூட்டம்.

கடவுளிடம் மன்றாடுகிறான் ராம் மனதிற்குள்.

சில மௌனங்களுக்குப் பிறகு சித்ரா "என்னை விட்டு விடுங்கள்" என்று கூறிய ஒற்றை வார்த்தை ராமின் காதுகளுக்குள் வேம்பாக வழிந்தது .

ராமின் நெஞ்சமோ இடியாக கண்களோ புயலாக. உடைந்து போனான். மனதிற்குள் பாரம் பல ஆயிரங்களானது.

சித்ராவின் தாயோ செய்வதரியாது, சொல்வதறியாது தனியே மூலையில் மரமாக வழியும் கண்ணீரை துடைக்காமல் நின்றார்.

சித்ரா நகர்ந்தாள் நொடிப்பொழுதில்.

மொத்தக்கூட்டமும் பார்வையில் சந்தேகமாக, ஏளனமாக, பரிதாபமாக ராம்-ஐ அவரவர் பங்கிற்கு பங்கிட்டுக் கொண்டனர்.

ராம் "எங்கே இருக்கிறாய் கடவுளே! நீ இருப்பது உண்மையானால் மனமாற்று அவளை " என்றான் சிறுபிள்ளைத் தனமாக.

மணமேடையில் குறுகிக் கிடத்தலானான். எத்தனை வருடக் கனவு, எத்தனை வருடக் காத்திருப்பு. நிச்சயமான நாளில் இருந்தே கனவுகளில் குடும்ப காரனாக மாறி இருந்தான்.

கடந்து போவது தானே வாழ்க்கை!

ஆனால் ராமால் ஒரு அடி கடக்க முடியவில்லை.

சில நாட்கள் கடந்தது.

மாலை வேளை கோவில் வாசலில் கண்களில் ஏக்கத்துடன் நம்பிக்கையற்ற நம்பிக்கையுடன் கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருந்தான் ராம். எதன் மீதும் பற்று அற்றவனாக இருந்தான். ஊதுபத்தியின் மணம் மூக்கை துளைத்து, இயந்திர வாத்திய இசை காதை துளைத்து மூளையை அடைந்தும் பயனில்லை.

திடீரென்று ஒரு எண்ணம் “அவளிடம் சென்று கேட்கலாமா” என்று வீரிட்டது.

கோவில் பிரகாரத்தில் சிறுமி தன் தாயிடம் "கடவுள் எங்கே? காட்டு" என்ற வினாவால் பிரமை தப்பி சிறுமியை நோக்க முயற்சித்தான் ராம்.

எதிரில் சித்ரா!

ஆச்சர்யத்துடன் கலந்த கண்களின் கண்ணீரை அடக்க முடியவில்லை அவனால். கண்ணீர் வழிந்து கண்ணங்களில் பரவி உவர்ப்பு தட்டியது அவன் உதடுகளில். அதை துடைக்கக்கூட சக்தி அற்றவன் ஆகினான்.

அவள் மனம் மாறியது!

மணமும் மாறியது!

ஆம் அவளது கரம் தனியாக இல்லை. அவளின் எண்ணத்திற்கும் மனதிற்கும் ஏற்ற துணையை கரம் பிடித்திருந்தால் சித்ரா. இருவரின் உடல் பாவனையும் முகப்பாவனையும் எதார்த்தமாக இருந்தது. அவளுக்கு சரியான பொருத்தமானதான வாழ்க்கை எனப்பட்டது.

ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் நிராகரித்துவிட்டு மிகப்பெரிய ஏமாற்றத்துடன் தன் வேண்டுதலில் முடிவு கொண்டான்.

ஏமாற்றத்தால் எழுந்த ராம் சிறுமியிடம் "எங்கேயும் இல்லை" என விடை கூறி விடை பெற்றான். நாத்திகனாக!.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...