JUNE 10th - JULY 10th
“தாத்தா இந்த விமானத்துல நெஜமாவே தங்கத்தால வேய்ந்திருக்காங்களா? யாரும் திருட மாட்டாங்களா?"
"கோயில்லடாக்கண்ணு யாரும் தொட மாட்டாங்க."
"தாத்தா இந்த சுரங்கப்பாதை வழியாப்போனா எங்க போவோம்?"
"தெரியாதுடா, அதன் வாயில் மூடிட்டாங்க. அந்த காலத்துல ராஜா குடும்பத்த சேர்ந்தவங்க போர் நேரத்துல தப்பிக்க இப்படி ஒரு ஏற்பாடு."
"ராஜாவோட ஃபேமிலி மட்டும் தப்பிச்சா போதுமா?"
"இதபாரு எத்தனை முறை நா இதுக்கு பதில் சொல்லியிருக்கேன். சும்மா சும்மா கேள்வி கேக்காம மீனாக்ஷி அம்மன வேண்டிக்கோ."
இந்த உரையாடல் நேத்து நடந்தாப்போல இருந்தது கண்மணிக்கு. அவளுக்கு இப்போ வயசு முப்பது . அஞ்சு வயசுல அவளுக்கே ஒரு பொண்ணு இருக்கா. மீனாக்ஷி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகர் கோயில், திருமலை நாயக்கர் மஹால், கோடை கண்காட்சின்னு கண்மணிக்கு கோடை விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீட்டுக்கு போன நினைவுகள் வந்து அவளை தூங்க விடாமல் படுத்திச்சு.
தாத்தாவுடன் அவ கோயிலுக்கு மட்டும் போகல, அவளின் உற்ற தோழனா தாத்தா இருந்தாரு. கிரிக்கெட் மேட்சா இருக்கட்டும், இளையராஜா பாட்டா இருக்கட்டும், கர்நாடக சங்கீதமா இருக்கட்டும், புதினங்களா இருக்கட்டும் அவளுக்கு அனைத்தையும் அறிமுகப்படுத்தினது விசு தாத்தாதான். சென்னையில், அடுக்குமாடி குடியிருப்புல, வேலைக்கு போகும் பிசி பெற்றோர்களோட ஒரேப்பொண்ணா வளர்ந்த கண்மணிக்கு கோடைகாலத்துல அனுபவ வாழ்க்கைப் பாடங்கள், பொழுது போக்குகள் என தாத்தா பல விஷயங்களை கத்துக்கொடுத்தாரு. ஒருமுறை, "கார்தாலயே எழுந்து பால் வாங்கிட்டு வறீங்க, பாட்டிய ஏன் உடனே எழுப்பமாட்டேங்கறீங்க?" என கண்மணி கேட்க, "அவ பாவம் நாள் முழுக்க உழைக்கிறா, கொஞ்சநேரம் தூங்கட்டுமே," ன்னு தாத்தா பதில் சொன்னபோது அவர் மனைவி மேல வச்சிருந்த மரியாதைய நெனைச்சு சந்தோஷப்பட்டா கண்மணி .
கண்மணி மதுரையில் உள்ள தியாகராஜா பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுத்தது கூட தாத்தாவோடு சேர்ந்து இருக்கணும் என்கிற ஆசையினாலத்தான். தாத்தா வீட்டு புத்தக அறை அவளுக்கு இன்றும் நினைவில் இருக்கு. ஸ்டான்லி கார்ட்னர், அகாத்தா கிறிஸ்டி, வுட்ஹவுஸ்,கல்கி கிருஷ்ணமூர்த்தி, தி.ஜானகிராமன், லா. ச. ராமாமிர்தம் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் எழுதின புத்தகங்களை அடுக்கி வெசிருப்பாரு. மணிக்கணக்குல அங்க படிச்ச நினைவு கண்மணிக்கு பேரானந்தத்த கொடுத்துச்சு. "நீ குடுத்தியே ஜான் கிருஷம் எழுதிய ரைன் மேக்கர், பிராமாதமா இருந்துது. நீ கொடுத்த உடையார் புதினம் இரண்டு பாகம் முடிச்சுட்டேன், மீதி பாகங்களை மதுரைக்கு வரும்போது எடுத்துட்டு வா," என்று தாத்தாகிட்டயிருந்து வந்த தொலைபேசி அழைப்ப நெனச்சு சிரிச்சுக்கிட்டா கண்மணி. இரண்டு பேரும் மாத்தி மாத்தி புத்தக பரிந்துரை செஞ்சுப்பாங்க.
"தாத்தா, சிவகாமியின் சபதத்துல அஜந்தா எல்லோரா குகைகள் பத்தி எழுதியிருக்காருல்ல, அங்க போய் நீங்களும் நானும் சேர்ந்து சுத்தி பார்க்கணும்," என்பது போல கண்மணி அடிக்கடி தன் ஆசைகள தாத்தாவிடம் சொல்லுவா. தாத்தாவும் சரி சரின்னு தலை ஆட்டுவாரு. புத்தகங்களில் வரும் இடங்களுக்கு சேர்ந்து போகணும் என ரெண்டு பேரும் பேசிப்பாங்க. தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், ஶ்ரீரங்கம், மாமல்லபுரம் என சில இடங்களுக்கு சேர்ந்தும் போயிருக்காங்க. அவளுக்கு திருமணம் நிச்சியமான போது, "தாத்தா உங்கள மாதிரி நல்ல கணவர் எனக்கு கிடைப்பாறா?" என வெகுளியா கேட்ட போது, "நான் கூட சின்ன வயசுல உன் பாட்டிய ரொம்ப திட்டியிருக்கேன். வாழ்க்கைல பொறுமை ரொம்ப அவசியம். கோப தாபங்கள் எல்லாம் வயசாக தானா கொறஞ்சிடும்," என்ற அவரோட நிதர்சனமான பதில் அவள மணவாழக்கைக்கும் தயார் படுத்திச்சு.
இப்படி தாத்தாவோட நினைவுகள் கண்மணிய அன்று இரவு, கனவும் நினைவுமா வந்து படுத்தியது. இது என்ன சங்க காலத்துல வருகிற பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் கதை போல தாத்தாவுக்கு ஏதாவது ஆபத்தா? என்று கலங்கினா கண்மணி. கடிகாரத்த பார்த்தா மணி ரெண்டு, இப்போ கால் பண்ணினா ரொம்ப பயப்படுவாங்க, நாளை காலை பேசலாம் என மனசை திடப்படுத்திக் கொண்டா.
-----
அதே நேரத்துல விசு தாத்தா தூக்கம் வராம தலமாட்டுலஅவர் வச்சிருந்த பெரிய என்வலப்ப எடுத்தாரு. கட்டிலின் பக்கத்துல இருந்த மின்விளக்க போட்டு என்வலப்பிலிருந்து கண்மணி எழுதிய கடிதங்களையும் புகைப்படங்களையும் எடுத்து ஒன்னொண்ணா பார்த்தாரு. அனைத்து கடிதங்களும் "அன்பு தாத்தாவுக்கு," என்று அவருக்குத்தான் எழுதப்பட்டிருந்தது. ஒரு பக்கம் பக்கவாதத்துல சிறிது பாதிக்கப்பட்டிருந்தாலும், குரல் முன்னப்போல பேச முடியாத போனாலும், வாசிப்பை மட்டும் அவர் விடல. கடந்த இரண்டு ஆண்டுகளா பெருசா அவரால நடமாட முடியாட்டியும், கண்மணியோட கடிதங்களை, அவ அனுப்புற புத்தகங்களை விடாமல் படிச்சிடுவாரு.
அவளுடைய கடிதம் ஒண்ணுகூட அவளோட தினசரி வாழ்கையோ, வேலையோ பற்றி இருக்காது. இருவருக்கும் பிடித்த விஷயங்கள பத்தி மட்டுமே எழுதியிருப்பா. சமீபத்தில் வந்த கடிதத்தில் , "இந்த ரஃபேல் நடால் சரியான இயந்திரம். 14வது முறையா ஃப்ரெஞ்ச் ஓபன் ஜெய்ச்சுட்டான். இத்தனை காயங்களோட, எத்தனை முயற்சி பண்ணியிருந்தா இது சாத்தியம் தாத்தா?" என்றும், "இனிமேல் ஐபிஎல் பார்கப்போறதில்ல. தோனிக்கு வயசாயிடுச்சு, டீம் எல்லாம் மாறிப்போச்சு, எல்லாம் பிக்சிங். இதுல வருஷத்துக்கு ரெண்டு முறை வேற நடத்தப் போறாங்களாம்," என தாத்தா பாணியிலேயே விமர்சித்தது அவருக்கு ரொம்ப பிடிச்சுயிருந்தது. கடந்த இரண்டு வருடங்களா, கோவிட் கட்டுப்பாடு மற்றும் பக்கவாதத்தால தனிமையா உணர்ந்த விசு தாத்தா கண்மணியின் மூலமா உலகத்தை ரசிக்க ஆரம்பிச்சாரு. அவளுடைய கடிதங்களை ஆவலோடு எதிர்பார்க்கத் துவங்கினார். அன்று இரவு அவருக்கும் உறக்கம் வரல, கண்மணிய பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் வந்தது.
----
மறுநாள் காலை பாட்டியிடமிருந்தே அழைப்பு வந்தது. "கண்மணி, தாத்தா ராத்திரி முழுசா தூங்கல. ரொம்ப பலவீனமா இருக்காரு, நீ எழுதிய கடிதங்களையும், அனுப்பிய புகைப்படங்களையும் பார்த்துட்டே இருக்காரு... ஒரு எட்டு இங்க வந்துட்டு போக முடியுமா?" என்று தயங்கியபடியே கேட்டார். கண்மணிக்கும் உள்ளுணர்வு போகச் சொல்ல, "அவசியம் வரேன் பாட்டி," என்று பதிலளிச்சா. ஒரு வாரம் அலுவலகத்துல கெஞ்சி லீவு போட்டுட்டு, குழந்தைக்கும் பள்ளில லீவு சொல்லிட்டு, கணவரை மதுரையில வொர்க்-ஃப்ரம்-ஹோம் பண்ணிக்கோ என்று கெஞ்சலாக கேட்டு, நிறைய புத்தகங்களையும், கேமராவும் எடுத்துட்டு கார்ல புறப்பட்டா.
தாத்தாவோட கிரிக்கெட் விளையாடியது, அக்கம் பக்கத்தினரோட சேர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஷார்ஜா கோப்பை போட்டிகள் தொலைக்காட்சில பார்த்தது, பாட்டியுடன் சேர்ந்து தட்டை, தேங்குழல் செஞ்சது, மொட்டை மாடியில வடாம் பிழிஞ்சது, தோட்டத்துல மாம்பழம் சாப்பிட்டு கொட்டையை புதைச்சது... என்று இனிய நினைவுகளில் மகிழ்ந்தபடி, அந்த நெடும் கார் பயணத்தை கழிச்சா. ஒருமுறை மாங்கொட்டை புதைச்சது போல, வாழை மரம் வளர வாழைப்பழத்தை நட்ட நினைவு வர, தனக்குத் தானே சிரிச்சப்படி அந்த மதுரை வீட்டை நோக்கி பயணிச்சா.
—
வீட்டுக்கு போனதும் பாட்டி, மாமா, மாமி, அவங்க பசங்க என ஏக களேபரமா உபசரிப்ப்புகள் நடக்க, அமைதியா தாத்தா பக்கத்துல போய் உக்காந்துக்கிட்டா கண்மணி. நிமிடங்கள் நகர்ந்தது தெரியாம தாத்தாவின் கையை பிடிச்சபடி, அவர் தோளில் தலையசாச்சிக்கிட்டு உக்கார்ந்த கண்மணியும் , விசு தாத்தாவும் வெறும் வார்த்தைகள்ல பரிமாறிக்க முடியாத எண்ணற்ற விஷயங்கள மௌனத்துல பரிமாறிக்கிட்டாங்க. இருவரின் விழிகள்லயும் தாரை தாரையா நீர் வழிந்து ஓடிச்சு.
அடுத்த ஒரு வாரம் தாத்தாவோட ஆனந்தமா கழிச்சா கண்மணி. அவரை ச்க்கர நாற்காலில உக்காரவெச்சு மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு போனா. அவரை ரோட்டுல அமர்தியபடி மாமா பசங்களோட கிரிக்கெட் விளையாடினா, ராத்திரி மணிக்கணக்குல அவர் பக்கத்துல உக்கார்ந்து, அவர் கேட்க புத்தகம் படிச்சா, புகைப்படங்கள, அதுவும் தாத்தா சிரிச்சபடி நிறைய எடுத்தா. நாளை என்பது இல்லாதது போல ஆனந்தமா தாத்தாவோட கழிச்சா. அவரும், அவர் உடம்புல இருக்கும் அத்தனை உயிர் சக்தியையும் சேர்த்து சந்தோஷமா அவளோட விளையாடினாரு, பயணிச்சாரு. ஒரு வாரம் முடிஞ்சு கிளம்பும் நேரத்துல, இனி தாத்தாவுக்கு என்ன நேர்ந்தாலும் இந்த நாட்களோட இனிய நினைவுகள் நமக்கு உறுதுணையா இருக்கும் என்று நம்பி புறப்பட்டா கண்மணி.
#346
45,990
990
: 45,000
20
5 (20 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Revathy Balu
ஜாலியாக படிக்க முடிந்தது.
gayathridhananjayan
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50