JUNE 10th - JULY 10th
மனிதம்
“அம்மா..நீ அந்த வேலைக்கு போக வேண்டாமுன்னு சொன்னா கேக்கறியா..அப்பா தான் நல்ல சம்பாதிக்கிறார் ல..அப்புறம் என்ன உனக்கு..அவங்க குடுக்கற சம்பளம் தான் வந்து நிறைய போகுதா உனக்கு..இப்போ பாரு..படுத்திட்ட..போதா குறைக்கு அங்க இன்னிக்கே போனும்னு அடம் பிடிக்கறையே..இன்னிக்கு தான் காய்ச்சல் வரல..திரும்பிட்டுன்னா என்ன பண்ணுவ..சொன்னா கேளும்மா..” என்று திட்டலில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தாள் காயத்ரி..
“இதோ பாரு காயத்ரி..எங்க அப்பத்தா காலத்துக்கு முன்னாடியே இருந்து நாம தான் அவங்க வீட்டுக்கு வேலைக்கு போறோம்..அதுமட்டுமில்லாம எங்க ஆயி சாகும்போது கூட, என்கிட்டே அவங்க வீட்டுக்கு கட்டாயம் வேலைக்கு போனும்னு சொல்லிட்டு தான் போச்சு.. அத என்னால மீற முடியாது..நாங்கஉன் விருப்ப படி படிக்க வைக்கிறோம்..உன்னைய கட்டாயபடுத்தலையே ..அதே போல நீயும் என்ன கட்டாய படுத்தாத..என் உசுருள்ள வரைக்கும் அங்கன தான் போனும்” என்று முடித்து விட்டாள் வள்ளி.
காயத்ரி...இளங்கலை கணிதம் இறுதியாண்டு படிக்கிறாள்..
அவள் தகப்பன் முத்து அரசாங்க மருத்துவமனையில் உதவியாளனாக இருக்கிறான்.ப்ளஸ் 2 வரை படித்திருந்த அவனை காயத்ரி வளர வளர,தபால் மூலம் படிக்க தூண்டி ஒரு டிகிரி வாங்க வைத்து விட்டாள்.அந்த விஷயத்தில் தன் தாய் என்றே மகளை, முத்து கொண்டாடுவான்.மகள் என்ன சொன்னாலும் வேதம் அவனுக்கு..
தாய் வள்ளி எவ்வளோ சொல்லியும் பஞ்சாபகேசன் வீட்டிற்கு எடுபிடியாக செல்கிறாள்.எடுபிடி என்றால் வீட்டு வேலைக்கு அல்ல..அவர்கள் வீட்டை பெருக்கி சுத்த படுத்தி, மாடுகளை, தொழுவத்தை சுத்த படுத்தி வைப்பது..அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அவர்கள் கழிவறை சுத்தமும் வள்ளிதான் செய்கிறாள். ஆனால் அவர்களோ....
தாயின் வார்த்தையை கேட்ட காயத்ரிக்கு சுறு சுறுவென்று கோவம் வந்தது..”என்னம்மா பேசற நீ..பெரியவங்க ஏதோ சொல்லிட்டு போய்ட்டாங்க ன்றதுக்காக காலம் முழுசும் அங்கேயே உழைக்க போறியா..நீ செய்ம்மா நா வேண்டாங்கல..ஆனா அவங்கல்லாம் நடந்துக்கறதுக்கு நீ இன்னும் மானங்கெட்டு அங்க போனுமான்னு தான் கேட்கறேன்.” என்று வெடித்தாள் காயத்ரி.
வள்ளி ஏதும் பேசாமல் இருக்க.. காயத்ரி தொடர்ந்தாள்..ஏம்மா..நாமளும் மனுஷங்க தானே..நமக்கு இருக்கற மாதிரி அவங்களுக்கும் ரெண்டு கை காலு தான இருக்கு..ஆனா ,அவங்களுக்கு மட்டும் ஏதோ எக்ஸ்ட்ராவா கொம்பு இருக்கற மாதிரி சிலுத்துக்கராங்களே..உன்கிட்ட எல்லா வேலையும் வாங்குற அவங்க, உன்ன மனுஷியா மதிக்கிறாங்களா..மனுஷியா கூட வேண்டாம்..அவங்க வீட்டுல உள்ள ஐந்தறிவு ஜீவனுக்கு இருக்கற மரியாத கூட உனக்கு இல்லை..ஆனா நீ.. உனக்கு ரோஷமே வராதாம்மா..மாடு, நாய் எல்லாம் வீட்டுக்குள்ள விடுறாங்க ..ஆனா உன்ன உள்ள விடமாட்டங்க..ஏம்மா..நாம எந்த விதத்துலம்மா அவங்கள விட குறைஞ்சு போய்ட்டோம்..” அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைத்தது காயத்ரிக்கு..
மகளின் மன வேதனை புரிந்த வள்ளி ..”காயத்ரி மா...நீ ஏண்டா இப்படி அலட்டிக்கற..இதெல்லாம் நம்ம ஜாதியில பொறந்தவங்களுக்கு பழகிடுச்சி..நீ நாலு எழுத்து நல்லா படிச்சதும் உனக்கு அது தப்பா தோணுது..அவ்வளவுதான்..அதோட...என்றவளை இடைமறித்தாள் காயத்ரி.
“போதும்மா..போதும்..ஜாதியாம் ஜாதி..அத யாரும்மா படைச்சா..அந்த கடவுளா..படைக்கும் போது எல்லாரையும் ஒண்ணா தானேம்மா ஆண்டவன் படைச்சான்..இவங்க யாரு அத பிரிக்க...செய்யற வேலைய வச்சு ஜாதி பிரிச்சாங்க.. இல்லன்னு சொல்லல..ஆனா இப்ப யாரும்மா அந்தந்த தொழில பாக்கறாங்க..இவ்ளோ ஏன்மா...என்னோட அப்பா படிக்கலயா..வேலை பாக்கலயா...சொல்லு பாப்போம்.
“ இல்ல காயத்ரிம்மா..யாருமே இத செய்ய மாட்டேன் அத செய்ய மாட்டேன்னு சொன்னா..அப்போ இந்த வேலைய யாரு பாக்கறது..
“ஐயோ..அம்மா..நா செய்யற வேலைய தப்புன்னு சொல்லலம்மா..உன்ன மதிக்காம இழிவு படுத்தறாங்களேன்னு தான் எனக்கு கஷ்டமார்க்கு..ஆனா உனக்கு புரிய மாட்டேங்குது..ஏம்மா அவங்க உறவுல நடந்த கல்யாண வீட்டுல சாப்பிட உக்காந்த உன்னை எழுப்பினாங்களேம்மா அத மறந்திட்டியா..இல்ல இன்னமும் உன்ன அவங்க வீட்டு உள் வழியா வரத அனுமதிக்கலையே..அத என்ன சொல்ற.. எல்லாத்தையும் விடும்மா..நான் படிக்கறத பாத்து ஏளனப் படுத்தினாங்களே..அத என்ன செய்ய.. அது மட்டுமா..அவங்கள சாமின்னு கூப்பிடறியே..அவங்க என்ன கோவிலுக்கு உள்ள இருக்கற சாமியாம்மா..அவங்களுக்கு யாரு இந்த அதிகாரத்த குடுத்தது..ஒரே ஒரு நாள் நான் அவங்க பையன அங்கிள்னு கூப்பிட்டேன்னு அவங்க வந்த வரத்து...இதெல்லாம் சொன்னா...
“காயத்ரி..எனக்கு புரியுது..ஆனா என்னால அங்க போகாம இருக்க முடியாதுஅவங்க சொல்றத கேட்டுதான் ஆகணும்.. மேற்கொண்டு நீ பேச்ச வளத்தாம காலேஜ்க்கு கெளம்புற வழிய பாரு..என்றாள்” வள்ளி..
“அம்மா...என்ன அடக்காதம்மா...நீயே சொல்லு..அந்த சாமி வீட்டு பேத்தி என்னோட க்ளாஸ்மேட் தானே..அவளை விட நான் எந்த அளவுளம்மா குறைஞ்சிட்டேன்...ஏதோ நமக்கு வசதி இல்ல... அவ்வளவுதானே..அதுக்காககண்டமேனிக்கு பேசுறதா..அம்மா நான் கடைசியா சொல்றேன்..நீ இனிமே அங்க போக கூடாது கூடாது கூடாது..
“சரிம்மா..நீ கெளம்பு..அப்புறமா பேசிக்கலாம்..உனக்கென்ன..இன்னிக்கு நான் போக கூடாது அவ்வளவுதானே..நா போகல போதுமா”..என்று சமாதான படுத்தவும் கிளம்பினாள் காயத்ரி..
காயத்ரியின் மதிப்பெண்களுக்கு அவளுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தும் அவள் ஆசிரிய பணியில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக, கணிதம் எடுத்து படிக்க தொடங்கினாள். காயத்ரி படிக்கும் காலேஜில் தான் பஞ்சாப கேசனின் பேத்தி மாதங்கியும் படித்தாள்..ஆனால், காயத்ரி அங்கே படிக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக, கல்லூரியை மாற்றி விட்டார் பஞ்சாப கேசன்.இதில் வேடிக்கை என்னவென்றால், காயத்ரியும்,மாதங்கியும் நெருங்கிய தோழிகள்..இன்னும், காயத்ரிதான் மாதங்கியின் டியூஷன் டீச்சர் என்று கூட சொல்லலாம். கணிதமே வராத மாதங்கி பஞ்சாபகேசனிடம் பாடாய் படுகிறாள்..என்ன செய்வது...காயத்ரியிடம் கேட்டதாக கேள்விப்பட்டாரோ, தொலைந்தாள் மாதங்கி..பஞ்சுவின் மகனும் மருமகளும் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், பேத்தியை இங்கே விட்டிருக்கிறார்கள்.
இயல்பிலேயே ஜாதி வெறியில் ஊறியவர் பஞ்சாபகேசன்.தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்று புத்தகத்தில் எழுதியது வெறும் ஏட்டு கல்வி மட்டும் தான் அவருக்கு..சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறியவர் அவர்..அவரது மகன் கிருஷ்ணனும் அப்படி இல்லை என்றாலும் தகப்பனுக்காக ஊருக்கு வரும் நேரங்களில், அவர் விருப்ப படி இருப்பான்..என்றாலும் அவனுக்கு காயத்ரி மீது ஒரு வாஞ்சை எப்போதுமே உண்டு,,அவன் மனைவி மீனாட்சியும் அப்படியே..வெளிநாட்டில் இருப்பதாலோ என்னவோ..அவளும் எல்லோரையும் சமமாக பாவிக்கும் எண்ணம் உடையவள்.
அவர்களின் நெருங்கிய உறவினர் திருமணத்தில் தான் பஞ்சு, இலையில் அமர்ந்து விட்ட வள்ளியையும் முத்துவையும், சாப்பிடும் முன் எழுப்பி விட்டார்.இந்த விஷயம் காயத்ரியின் வளர் இளம் பருவத்தில் நிகழ்ந்ததால் அவளுக்கு பஞ்சுவை பிடிக்காது..அடிக்கடி இது குறித்து விவாதம் வரும்..முத்து தான் சமாதான படுத்துவான்.
காயத்ரியின் ஒரே குறிக்கோள் ஆசிரிய பணியில் அமர்ந்து தன்னால் இயன்ற அளவிற்கு, ஜாதியை ஒழிக்க போராடுவது தான்..இன்னும் சொல்ல போனால் மாணவ சமுதாயத்தின் மூலம் பற்ற வைக்கும் சிறு நெருப்பு பெரும் பிழம்பாக உருவெடுக்கும் என்பதில் உறுதியாய் இருந்தாள் என்றே சொல்லலாம்.
வீட்டிலிருந்து கிளம்பிய காயத்ரி, பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றாள்.அவள் வந்த கொஞ்ச நேரத்திலேயே மாதங்கியும் வந்து சேர்ந்தாள்..இருவரும் சேர்ந்து செல்வது தான் வழக்கம்.எப்பொழுதும் கல கலப்பாக இருக்கும் காயத்ரி, இன்று உம்மென்று இருப்பதை பார்த்து
மாதங்கி, “என்ன காயு, என்ன பிரச்சனை..அம்மா நல்லாருக்கங்களா? ஏன் உம்முன்னு இருக்க...”
“ஒன்னும் இல்ல மாதி...”
“ ஹேய்..இல்ல காயு..நீ சரியா இல்லை..என்னன்னு சொல்லு”
“ ப்ச்..அது .. உங்க தாத்தா வீட்டுக்கு , அம்மா போறத பத்திதான் பிரச்சனை..வேற ஒன்னும் இல்லை..”
“ ம்ம்..புரியுது காயு உன் வேதனை..ஆனா தாத்தவ மாத்த முடியாதுப்பா..என்ன பண்ண...அம்மா வர வேணாம்னு நானும் தான் சொல்றேன்..கேக்க மாட்டாங்களே..” என்று அலுத்து கொண்டாள் மாதங்கி..
அதற்குள் பேருந்து வர இருவரும் ஏறினார்கள்..காயத்ரியின் கல்லூரியை தாண்டிதான் மாதங்கி செல்ல வேண்டும் என்பதால், அதே பேருந்திலேயே கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
காயத்ரியின் நிறுத்தம் வரவே அவள் மாதியிடம் சொல்லிவிட்டு இறங்கினாள். நிறுத்தத்தில் இறங்கினாலும், அங்கிருந்து ஒரு வழிப்பாதை என்பதால் குறுக்கே நுழைந்து செல்ல வேண்டும்.
அப்படி செல்லும்போது, மனது துக்கமாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும் வழியில் உள்ள விநாயகர் கோவிலில் கும்பிட்டு செல்வது காயத்ரியின் வழக்கம்.இன்றும் கோவிலுள் நுழைந்து நெஞ்சு பொறுக்காமல் விநாயகருடன் வாதிட்டாள் மனதிற்குள்ளே..
“ ஏம்பா பிள்ளையாரே..இது உனக்கே நியாயமா..நீ எல்லாருக்கும் பொது தான,,நீ வேற்றுமை பாக்கறியா..ஆனா இந்த பாழாப்போன மனுஷங்க மட்டும் ஏன்பா இப்படி வேறுபடுத்தறாங்க..இதெல்லாம் நீ கேட்க மாட்டியா..
தெய்வம் உன்னையே நான் நீ நான்னு ஏக வசனத்துல பேசறேன்,,ஆனா அந்த வீட்டுல உள்ளவற சாமின்னு கூப்பிடணுமாம்.அவரு என்ன வானத்தில இருந்து குதிச்சாரா..இல்ல உங்க அப்பா அம்மா இருக்காங்களே சிவபார்வதி..அவங்களோட புள்ளையா..கேட்டு சொல்லு பாப்போம்.
இத பாரு..அந்த சாமி ஐயா கண்டிப்பா மாறனும்.நீதான் மாத்தணும்.இல்ல ..நடக்கறதே வேற சொல்லிட்டேன்..நீ மட்டும் அப்படி செய்யல..இனி உன்னோட பிரெண்ட்ஷிப்புக்கு டாட்டா காட்டிட்டு போய்டே இருப்பேன்..ஆமா..” என்றவள் மட மடவென்று பிரகாரத்தை விட்டு வெளியேறி கல்லூரியை நோக்கி நடக்க தொடங்கினாள்.
சிறிது தூரம் சென்றவள் கண்ணில் கோவிலை தாண்டி அடுத்த தெருவில் கூடியிருந்த கூட்டம் கண்ணில் படவே ஒரு நிமிடம் போகவா என்று யோசித்து விட்டு பார்த்து விட்டு செல்வோமே என்று அருகில் வந்தவள் பெரிதாக அதிர்ந்தாள்.ஏனெனில் அங்கே நம் பஞ்சு ஐயா இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்க, அருகில் கோவில் பூசாரியும் அவரது நண்பருமான
சிவகைலாசம் கைகளை பிசைந்து கொண்டிருந்தார்..அருகில் சென்ற காயத்ரி
“என்னங்கையா..இவர ஹாஸ்பிடல் கொண்டு போகாம இப்படி போட்டு வச்சிருக்கீங்க என்று கேட்க. பூசாரியோ, இல்லையம்மா காயத்ரி..என் பெண்ணிற்கு நிச்சயம் ஆகிருக்கு..இப்ப ரத்தம், ஹாஸ்பிடல் என்று போவது தீட்டு அதனால் தான் பார்க்கிறேன் என்று மென்று முழுங்கி கொண்டிருந்தார் அவர்.
“அட ச்சே உங்களுக்கு மனிதாபிமானமே கிடையாதா..நீங்கதான் போல..இவ்வளவு கூட்டம் நிக்குதே அவங்கள்ள யாரையாச்சும் தூக்கிட்டு போக சொல்லிருக்கலாம்ல..என்றவள்..கூட்டத்தை பார்த்து,என்ன பண்றீங்க எல்லாரும் கேஸ் பன்னுவாங்கண்ணு பயப்படறீங்களா..நா பாத்துக்கறேன் தூக்குங்க இவரை “ என்று அருகில் சென்ற ஆட்டோவில் ஏற்றி அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றாள்.
பஞ்சாபகேசனின் ரத்த வகை மிகவும் அரிதான AB நெகடிவ் வகையை சார்ந்தது..காயத்ரியும் அதே வகை என்பதால் கொடுத்தாள்.
அதிகமாக இரத்தபோக்கு ஏற்பட்ட காரணத்தால், அவருக்கு உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காயத்ரியிடம் எடுக்கப்பட்டதை விட அதிகமாக தேவைப்படவே, அவள் தன் கல்லூரிக்கு போன் செய்து அதே ரத்த வகை உள்ளவர்களை வரவைத்தாள்.இடையே மாதி மற்றும் தன்வீட்டிற்கு போன் செய்து தகவலும் சொல்லிவிட்டாள்.
கல்லூரிக்கு போன் செய்தவுடன் அந்த வகை ரத்தமுள்ளவர்கள் வந்து பஞ்சாபகேசனுக்கு உடனடியாக, ரத்தம் ஏற்ற பட்டு ஓரளவிற்கு நிலைமை கட்டுக்குள் வந்தது. அதற்குள் பஞ்சுவின் மனைவியும் மாதியும் வந்து சேர்ந்தார்கள்..
விஷயம் கேள்விப்பட்டு முத்துவும்,வள்ளியும் ஆஸ்பிட்டலுக்கு வந்தார்கள்.ஆனால் அந்த நிலைமையிலும் பஞ்சாபகேசன் மனைவி ஆண்டாள் அவளை “வள்ளி ,முத்து நீங்க ரெண்டு பெரும் உள்ளே வரவேண்டாம்..சாமி நல்லா ஆகிடுவாங்க..நீங்க கெளம்புங்க..என்றார்..
அதைக்கேட்ட காயத்ரிக்கு கோபம் கொப்பளிக்க , பேச வாய் திறக்க , மாதங்கி ஓடி வந்து அவள் கையை பற்றி “காயு,,சாரி சாரி..பாட்டி பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்..ப்ளீஸ் காயு..நாளைக்கு பேசிக்கலாம்..”என்று அவளை அடக்கியவள்..”உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா..தாத்தாவ காப்பாத்தி ஆஸ்பிட்டல்ல சேத்ததே காயு தான்..அவள் மட்டும் இல்லன்னா இன்னிக்கி தத்தாவ நீங்க முழுசா...என்றவள் அதற்கு மேல் பேசாமல் டாக்டரிடம் தாத்தாவை பற்றி கேட்டாள்.
வழக்கமாக அவர்கள் வரும் மருத்துவமனைக்குதான் காயத்ரி பஞ்சுவை கொண்டு வந்திருந்ததால் டாக்டர் தெரிந்தவர் தான்..
“மாதங்கி..உன் தாத்தாவுக்கு நல்ல நேரம்..இல்லன்னா காயத்ரி கண்ணுல படாம போயிருந்தா ரொம்ப கஷ்டமா போயிருக்கும்மா..அதோட ப்ளட் வேற ரொம்ப லாஸ் ஆகிருக்கு..சரியான நேரத்துல கூட்டிட்டு வந்து ப்ளட்டும் குடுத்திட்டா காயத்ரி..அதோட நியாயமா பாத்தா , அவட்ட நான் ப்ளட் எடுக்க கூடாது..பட் வேற வழி இல்லைம்மா எனக்கு..ஏன்னா அவ டொனேட் பண்ணி மூணு மாசம் முழுசா முடில மாதங்கி..ஆனாலும் எடுத்தாச்சு..அதோட எனக்கு வேலையே வைக்காமா மத்தவங்கள வர சொல்ற வேலையை அவளே செய்திட்டா..உன் தாத்தாக்கு பி பி கொஞ்சம் ஹையா தான் இருக்கு..சுகர் இருக்கறதால காயம் ஆறவும் லேட் ஆகும்..மத்தபடி ஒன்னும் பயமில்லை..ஒரு டூ டேஸ் அப்செர்வேஷன்ல வச்சிட்டு வீட்டுக்கு அழைச்சிட்டு போம்மா” என்றார் டாக்டர்
“ ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் ..என்று மாதியின் பாட்டி ஆரம்பிக்க, நீங்க மாதியோட பிரெண்டுக்கு தான் மா நன்றி சொல்லணும்..நான் செஞ்சது என்னோட டியூட்டி மட்டும்தான்..ஓகே மா..பாத்துகோங்க..நான் ஈவ்னிங் வந்து பாக்கறேன்” என்று கூறி நகர்ந்தார் டாக்டர்.
அவர் சென்றதும் காயத்ரி, நான் கெளம்பறேன் மாதி..என்று விட்டு “அம்மா அப்பா வாங்க நாம போலாம் என்று கிளம்ப, மாதி அவள் கையை பற்றி பாட்டியின் அருகில் கூட்டி வந்தாள்..”பாட்டி..இப்போவும் இவள வேண்டாதவன்னு சொன்னீங்கன்னா ...ப்ச்..நீ கிளம்பு காயு..அப்புறம் பாப்போம்”
“சரி மாதி..இன்னிக்கு காலேஜ்க்கு கட் தான்..பாட்டிய ஒன்னும் சொல்லாதடா..ஏற்கனவே அவங்க பயந்திருப்பாங்க..நாளைக்கு வரேன்” என்று கிளம்பினாள் காயத்ரி.
இரண்டு நாட்களில் வீட்டுக்கு அனுப்பலாம் என்று நினைத்து, பஞ்சுவின் நிலைமை நார்மலுக்கு வராததால், இரண்டு நாட்கள் ஐந்து நாட்களாக நீடித்து ஆறாம் நாள் வீட்டுக்கு வந்தார்கள்.இதற்குள் ஆண்டாள் அம்மாவின் உடல்நிலை சற்றே மோசமாகி விட்டது.உதவிக்கு ஆளில்லாமல் மாதங்கி தவித்து விட்டாள். முத்துவும் வள்ளியும் முழுக்க கூடவே இருந்து உதவினார்கள். மற்றவர்கள் எல்லாமே வந்து பார்த்து பரிதாப பட்டதோடு சரி..ஆண்டாளுக்கே வெறுத்து விட்டது..அப்போது தான் அவருக்கு உரைத்தது..இவ்வளவு நாளும் வெட்டி வீம்பாக, ஜம்பமாக பேசியவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை..இன்னும் சொல்ல போனால், பஞ்சாபகேசன் எல்லோரிடமும் தற்பெருமை பேசும் குணத்தினால் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் என்பதும் புரிந்தது. காயத்ரிக்கு நன்றி சொல்ல வேண்டுமென்று கூட தோன்றியது..
ஆனால் காயத்ரி, அன்று சென்றதற்கு பிறகு வரவே இல்லை..சாப்பாடு அங்குள்ள காண்டீனில் பார்த்துக்கொள்வதால், மருந்து வாங்க,மற்ற வேலைகளை முத்து பார்த்துகொண்டார்.
ஆனாலும் மாதங்கிக்கு ஒரு உறுத்தல்..இந்த காயத்ரி இப்படி இருக்க மாட்டாளே..என்ன ஆனது அவளுக்கு என்று..
தாத்தா வீட்டுக்கு வந்த பின்னும் அவள் வரவில்லை..நேராக முத்துவின் வீட்டிற்கு சென்று விடலாமா என்று நினைக்கையில், ஆண்டாள் அம்மாவே மாதியிடம், “ நீ அந்த காயத்ரிக்கு போன் பண்ணி வர சொல்லு..அவ அன்னைக்கு நா அப்படி சொன்னத மனசுல வச்சிக்கிட்டு வராமலே இருக்கான்னு தோணுது நேக்கு..” என்று வருத்தமாக கூறினார்.
சரி என்ற மாதி முத்துவிடம் சொல்லி கையோடு காயத்ரியை கூட்டி வர சொன்னாள்.காயத்ரியும் வந்தாள்.ஆனால் வீட்டினுள் வரவில்லை..வெளியே வராண்டாவோடு நின்று விட்டவளை பார்த்து ஆண்டாள்..”அம்மாடி காயத்ரி..உள்ள வாம்மா என்றார்.
அவரை அதிசயமாக பார்த்த காயத்ரி, “பரவாயில்லை, என்ன விஷயம்னு சொல்லுங்க..வர சொன்னீங்களாம்.” என்று சொல்ல,
“ரொம்ப நன்றி காயத்ரி..நான் உனக்கு பண்ணின,,,
அதற்குள் இடை மறித்த காயத்ரி, “எனக்கு இல்லை எங்க அப்பா அம்மாக்கு தான் நீங்க பாவம் பண்ணீங்க..ஒதுக்கி வச்சீங்க ..அதெல்லாம்...என்று பாதியிலே நிறுத்தினாள்.
அருகில் வந்து நின்ற மாதங்கியை பார்த்தவள், “என்னனு கேட்டு சொல்லு மாதி இல்லன்னா நான் ஏதாவது பேசிடுவேன்..அப்புறம் நல்லாருக்காது” என்றாள்.
“இல்ல காயு..பாட்டி முன்ன மாதிரி இல்ல...அவங்க...
சட்டென்று இடைவெட்டிய காயத்ரி..”ஏன் மாதி..இப்ப அவங்க வீட்டுகாரருக்கு ரத்தம் குடுத்ததால மாறிட்டாங்களா...இல்ல அவங்கள காப்பாத்தினதால இப்ப புதுசா மாறிட்டாங்களா..ஏன் மாதி..எங்கள வீட்டுக்குள்ள விடாம, நா அவங்க கண்ல படக்கூடாதுன்னு சொன்னாரே தாத்தா..அவர் ரத்தம் உசந்தது எங்க ரத்தம் தாழ்ந்ததுன்னு பேசினாரே..இப்ப அவர் உடம்புல ஓடறது என்னோட ரத்தம்..அது மட்டுமில்ல..என்ன ஜாதி என்ன மதம்னு தெரியாத பல பேரோட ரத்தம் அவர் உடம்புல இப்ப கலந்திருக்கு..இப்ப சொல்ல சொல்லேன் அவர் என்ன ஜாதின்னு..கலர் பிரிக்க முடியுமா..இல்ல இனம் தான் பிரிக்க முடியுமா..எங்கள தொட்டாலே தீட்டுன்னு குளிப்பாங்களே..இப்ப அவங்க குளிச்சா ஏத்தின ரத்தம் எல்லாம் சுத்தம் ஆகிடுமா..கேட்டு சொல்லு பாப்போம்..
இத்தன நாளா நான் உன்ன பாக்க வராம இருந்ததுக்கு இதான் காரணம்.எனக்குள்ள அடக்கி வச்சிருந்தது பொங்கி வெளில வந்திட்டா.. ஏற்கனவே பி பி அதிகமா இருக்கற தாத்தாக்கு சரி வராதுன்னு தான் வரல..இப்பவும் நா பேசினதெல்லாம் அவர்கிட்ட சொல்ல வேணாம்..என்றவள் கண்களில் நீர் கோர்க்க பாட்டியை நோக்கினாள்..”என்ன மன்னிச்சிடுங்க பாட்டி..இப்படி பேசினதுக்கு..ஒன்னு மட்டும் சொல்றேன் பாட்டி..மனுஷங்கள பணம், பதவி, இத வச்சி பிரிச்சா கூட ஏத்துக்க முடியும்.ஆனா பிறப்பால ஏற்ற தாழ்வு பாக்கறத என்னால ஏத்துக்க முடியாது பாட்டி..மனுஷனுக்கு மனுஷத்தன்மைன்னு ஒன்னு இருந்தாலே போதும்னு நினைக்கிறவ நான்..
நியாயமும் தர்மமும் என்னனு வேத பாடங்கள படிச்ச நீங்கல்லாம் இப்படி இருந்தா படிச்சு தான் என்ன பிரயோஜனம்..எதுமே இல்ல பாட்டி..நாம செத்தா எல்லோருக்கும் ஒரே நெருப்பு தானே..அது ஜாதிக்கு ஏத்த மாதிரி எரிய போகுதா அல்லது எறியாம தள்ளி நிக்க போகுதா..இத புரிஞ்சிகிட்டா போதும் பாட்டி..நான் வரேன்..மாதி தாத்தா , பாட்டிய பாத்துக்க.. பாட்டி நான் மன்னிப்பு கேட்டது பேசினதுக்கு மட்டும்தானே தவிர, பேசின வார்த்தைகளுக்கு இல்ல” என்று அழுத்தமாக கூறிவிட்டு கிளம்பினாள்.
காயத்ரி பேசிய அனைத்தையும் உள்ளிருந்த பஞ்சாபகேசன் கேட்டு கொண்டிருந்தார்.அவர் கண்களில் இருந்து நீர் வழிந்தது.
#538
42,067
400
: 41,667
8
5 (8 )
fasicosaran
Super story❤️
priyabharathi.psg
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50