JUNE 10th - JULY 10th
அதிகாலை குளக்கரையில் பெரியப்பாவும் அம்மாவும் அரை மணி நேரமா ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்,
பெரியப்பாவும் நிதானமாக கேட்டுக்கொண்டிருக்கிறார்; சைகையில் பதில் சொல்வதை பார்க்கும்போதே தெரிகிறது சமாதானப்படுத்துகிறார் என்று.
அய்யரிடம் விவரங்களை கேட்டுவிட்டு, அவர்கள் பேச்சையும் கவனித்துவிட்டு, அம்மாவின் கண்களில் சிந்திய கண்ணீருக்கு காரணத்தை நானே கற்பனையும் செய்துகொண்டு, அவர்களை நோக்கி நடந்தேன்.
நான் அருகில் வருவதை இருவரும் உணர்ந்தாலும் , இருவரும் என்னைப் பார்த்தும் அவர்கள் பேச்சை மாற்ற வில்லை.
அம்மா சொல்லிக் கொண்டும் அழுது கொண்டும் இருக்கிறார், பெரியப்பாவும் ஆறுதல் கூற வார்த்தைகளை தேடுகிறார், கிடைக்காமல் மௌனமாக நிற்கிறார்.
இப்படி செய்வாங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை! அண்ணா !
அவளுக்கு மூணாம் நாள் சாமி கும்பிட வரைக்குமாவது கொஞ்சம் பொருத்து இருந்திருக்கலாம், ஒவ்வொரு பிரச்சனையா அடிமேல் அடியா எங்க மேல விழுது
எனக்கு எதுவும் புரியாம அவங்க பேசும் வார்த்தைகளைக் கொண்டே !
என்ன நடக்கிறது ? யார் மேல வருத்தம் ? என்று யோசிச்சிட்டு நிற்கிறேன்
திரும்பவும்; என் அம்மா பெரியப்பாவை பார்த்து, என்னால எப்படி அண்ணா தாங்கிக்க முடியும் ?
(அம்மா என்னை பார்த்து) இவனுக்கு எதுவுமே இதுவரைக்கும் தெரியாதுன்னா தெரிஞ்சா உடைஞ்சு போயிடுவான்…?
நான் உடனே ஏம்மா? என்னாச்சு ? யார் என்ன சொன்னாங்க? எதுவா இருந்தாலும் நாம வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.
இப்ப நாம அவளுக்கு சாமி கும்பிடணும் வந்திருக்கோம், அந்த ஐயர் கிட்ட நான் ஏற்கனவே எல்லாம் பேசிட்டேன், இன்னும் பத்து நிமிஷத்துல முடிச்சிருவாரு அடுத்ததா நாமதான்.
ஆனா அம்மாவுக்கு திரும்பவும் தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது, சொற்கள் கோபத்தை துணைக்கு அழைக்கிறது அவள் சொல்ல வந்ததைச் சொல்ல !
பாருடா ! மூணாம் நாள் சாமி கும்பிட தாலியை கேட்டதற்கு தாலிக்கொடியை எடுத்துட்டு தாலியை மட்டும் கொடுத்து அனுப்புறாங்க
யாருமா? உன்னோட மாமனார் வீடுதான்,
அதனால இப்ப என்னம்மா? நான் என் அம்மாவின் பேச்சுக்கு எந்தவித வினைக்கும் ஆட் கொள்ளாமல் மிகச் சாதாரணமாக கேட்டுவிட்டேன்.
அம்மாவும் பெரியப்பாவும் என்னை ஒருகணம் உற்றுப் பார்த்தார்கள்.
மீண்டும் நான்…. அதனால இப்ப என்னம்மா ?
கொடி அவங்க போட்டது, தாலி நம்ம போட்டது அவங்க போட்டதை அவங்க எடுத்துக்கிட்டாங்க.
இப்ப கொடி முக்கியமா ? இல்ல, சாமி கும்பிடுவதற்கு தாலியும் நான் கட்டின மஞ்ச கயிறு முக்கியமா ? கொஞ்சம் யோசிங்க ? என்ன கேட்டீங்கன்னா, தாலியும் மஞ்ச கயிறு போதும்மா.
இப்பதான் என் பெரியப்பாவுக்கு மூச்சே வந்தது, இதா பாரு! தாமரை இதை இவன் ஒரு சீரியஸான விஷயமாக எடுத்துக்கல, இந்த நிதானம்தான் இப்போதைக்கு அவனுக்கும் நல்லது உனக்கும் நல்லது
நீ ரொம்பவும் சங்கட படுற, பரவால விடு! நீ இவ்வளவு சங்கடப்படாதே, எல்லாம் சரியாயிடும் , கொஞ்ச நாளைக்கு இத பத்தி எல்லாம் யாருகிட்டயும் பேசாம இரு.
இப்பதான் அண்ணே எனக்கு இன்னும் வருத்தமா இருக்கு !!!
இப்படி பேசுபவனை கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தங்களா ?
இவன் பொண்டாட்டி போனதுக்கு நான் கவலைப்படவா?
மூணு மாசம் கைக்குழந்தைக்கு அம்மா இல்ல, அதை நெனச்சு நான் கவலைப்படவா?
இவனோட மதிப்பை குறைவாக எடை போடுறாங்களே அதை நெனச்சு நான் கவலைப்படவா?
தாலிக்கொடிக்காக எதுக்கு அழுவுறம்மா ன்னு எதார்த்தமா கேட்கிறான் அந்த பதிலைக் கேட்டு நான் கண்ணீரோடு பெருமைபடவா?
இப்போ என் பெரியப்பா என் அம்மாவின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் என்னை பார்த்து, டேய்! எனக்கு உண்மையாலுமே என்ன சொல்றதுன்னு தெரியலடா கண்ணா,
ஆனால் இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் இனிமேல் நீ நிறைய சந்திக்கப் போற, இப்ப இருக்கற இந்த மனநிலையிலேயே இரு, எல்லாத்தையும் அணுகு.
இதே போல நிதானமாகவே பேசு, கோபம் மட்டும் படாத.
உனக்கு பொண்ணு இருக்கா அந்த குழந்தையை ஒழுங்கா பார்த்துக்கோ அவளுக்காக எல்லாத்தையும் தாங்கிக்கோ.
தூரத்திலிருக்கும் ஐயர் எங்களுக்கு சைகை காட்டிக் கூப்பிட, அம்மா கண்ணை
தொடச்சிட்டு நடக்க ஆரம்பித்தார், நாங்கள் இருவரும் பின் தொடர்ந்தோம்.
நடக்கும் போது என் வருத்தமும் கோபமும் என் அம்மாவின் மீதுதான் அதிகமா இருந்தது
இதப் போயி ஏன் அம்மா இப்ப பேசணும்? இங்க பேசணும் ? அவரின் கூற்று நியாயமாகவே இருந்தாலும் நெஜமாலுமே தாலியுடன் “தாலிக்கொடி இல்லை” என்பதை நானோ ! சாமி கும்பிட வரவங்களோ! கண்டிப்பாக கவனிக்கப் போவதில்லை.
ஏன் ? என் மனைவியின் தாலிக்கு எத்தனையோ முறை முத்தம் கொடுத்திருக்கிறேன், ஆனால் தாலிக்கொடியில் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்று ஒரு துளி கூட எண்ணியதில்லை, எல்லா நேரங்களிலும் எனக்கு அவளும், அவள் மீதுள்ள காதலும் மட்டுமே என் கண்களுக்கு தெரிந்தது.
ஆனால் அம்மாவின் வருத்தமும் கண்ணீரும் என்மேல் உள்ள பாசத்தையும், ஒரு தனி மனிதன் மேல் உள்ள சுய கௌரவத்தையும் சொல்லிக் காட்டுகிறது.
அந்த இடத்துல நான் என் அம்மாவை கொஞ்சம் மனதிற்குள் திட்டினாலும் அவள் கண்ணீரின் அர்த்தங்கள் ஒரு பேய் போல என்னை அந்த நொடியிலிருந்து ஆட்கொண்டுவிட்டது.
என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன், அந்த நாழிகையை கடந்து செல்ல விரும்பினேன்.
நான், என் பெண் குழந்தை, என் அம்மா-அப்பா
அனைவரும் ஐயர் சொன்ன கிழக்கு திசையை நோக்கி அமர்கிறோம், கூட வந்தவங்க எங்களைச் சுற்றி நிக்கிறாங்க.
வாழ்க்கையில் யாருமே அப்படி ஒரு சூழ்நிலையை சந்திக்கக்கூடாது,
3 மாத குழந்தை தன்னுடைய அம்மாவின் 3ம் நாள் பூஜையில்,
மொழியும் தெரியாமல் இடமும் தெரியாமல் ஐயரின் மந்திர சத்தம்
எங்கள் காதிலும் என் குழந்தையின் காதிலும் விழுகிறது, அந்த நொடியில் அவளின் முகத்தைப் பார்க்கும் பொழுது, என்னால் என் கண்களில் வரும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை, மனம் ஓவென்று கதறிக்கதறி அழுகிறது, ஆனால் இடம் பொருள் ஏவல் என்னை காப்பாற்றுகிறது.
அன்று முதல் இன்று வரை எனக்கும், என் மகளுக்கும் (அவள் உருவமாய் அமைந்த என் மகளுக்கும்)” அவள்தான் குலதெய்வம் என்று நினைத்துக்கொண்டேன்.
காரியங்களை செய்துவிட்டு அனைவரும் அமைதியாக வீடு திரும்பினோம்,
சில நாட்கள் கண்ணீருடன் கழிகின்றன.
கொஞ்சம் படித்து இருந்ததால் எப்போதுமே அறிவியலை மட்டுமே மனம் நம்பியது,
அன்று ஒரு இரவு வினோதமான சிந்தனை ! என்னவென்றால் !….
இந்த பேய், பிசாசு, ஆவி இவைகளெல்லாம் நெஜமாலுமே இருக்கக் கூடாதா? என்று கூட யோசித்தேன், அப்படியாவது என் மனைவியை திரும்ப பார்க்க முடியுமே? என்கிற பேராசையால்.
“நினைவலைகள்” - இருப்பதிலேயே ஆக பெரிய ஆயுதம் நினைவுகள் மட்டுமே, ஏனெனில் அவைகள்தான் நம்மை ஊனம் படுத்துவதற்கும், ஊன்றுகோலாய் மாற்றுவதற்கும் முயற்சி செய்து கொண்டே இருக்கும்.
அன்றைய இரவில் தான் எனக்கு புரிந்தது “சில கோபங்களும் சில வருத்தங்களும்” தீர்க்கப்படுவதில்லை மாறாக மற்றவர்களுக்குள் கடத்தப்படுகிறது என்று.
அந்த 29வது வயதில் தான் முதல்முறையாக என் கௌரவத்தை பற்றி முதல் முறையாக யோசிக்க ஆரம்பித்தேன்,
என்னதான் மற்றவர்கள் நமக்கு செய்த விஷயங்களை திரும்பத் திரும்ப யோசித்தாலும், என்னை சாந்தப் படுத்தியது என்னவோ அவளின் பிரிவின் வலி மட்டும்தான், பல வலிகளை அந்த ஒரு வலியின் மூலம் என்னுள்ளே புதைத்துக் கொள்ள பழக ஆரம்பித்தேன்.
அட! போடா! அவ போனது விடவா? நமக்கு இப்போ இன்னொரு வலி ! வரப்போகுது, எனக்குள் நானே பேசிக்கொள்கிறேன்.
நிதானத்தை மட்டும் இழக்காதே! என்று பெரியப்பா அவர்கள் சொன்னது “திரும்பத்திரும்ப” என் மனதிற்குள் வந்து வந்து போகுது.
இன்னும் சில நாட்கள் கழித்து என் மாமனார் வீட்டாரின் செயலை யோசித்தபோது, அவர்கள் செய்த செயலில் கண்ணியம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் காரியம் இருக்கிறது, அது என்னவென்று தான்? என்னால் இன்றுவரை புரிந்து கொள்ள முடியவில்லை.
காரியம் 1 :
அவர்கள், அவ்வளவு சீக்கிரமாக என் மறுமணத்தை பற்றி யோசித்து விட்டாங்களா?
காரியம் 2 :
இல்லை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட என் மனைவியின் வைத்திய செலவுக்கு அன்றைய கடனாளியாக இருந்த நான் , அதை தீர்ப்பதற்காக தாலிக்கொடியை விற்று விடுவானோ ? என்று எண்ணி விட்டாங்களா?
காரியம் 3 :
இல்லை பேத்திக்கு வரும் காலத்தில் செய்யவேண்டிய செய்முறைகளை கருத்தில் கொண்டு அன்றைய சேமிப்பாக அதை அவர் எடுத்து வைத்துக் கொண்டாங்களா?
காரியம் 4 :
இல்லை தன் மகளின் இறப்பில் நோயின் பங்கை விட, என்னுடைய பங்கு அதிகம் என்று நினைத்து விட்டாங்களா?,
மனம் ஒரு குரங்குதானே! எல்லாவற்றையும் யோசிக்கும் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும்.
பாசம் நம் கண்ணை மறைக்கும் போது தெளிவு பிறப்பது கொஞ்சம் கடினம்தான்.
இங்கே சந்தேகப்படுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, அதேபோல் அதை தெளிவு ஆக்கிக் கொள்ள அவர்களுக்கு கடமையும் உண்டு.
நிறைய நேரங்களில் உரிமை மட்டுமே நம்பி உறவுகளை வெறுக்கிறோம் அதிலுள்ள கடமையை மறந்துவிடுகிறோம்.
இங்கே கடமை என்பது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நியாயம் /உண்மை.
உண்மை எப்போதுமே யாரை சார்ந்தும் இருக்காது, எனவேதான் அதை அணுகத்தயங்கி, அது தன்னைச் சார்ந்து மட்டுமே இருக்கட்டும் என்று விட்டு விடுகிறோம் (எப்படி தன் சாதிக்காரன் எப்பவும் முக்கியம் என்று எண்ணுகிறோமோ அதேபோல, ).
இந்த மனித இனத்திற்கு தான் இப்படி ஒரு வினோத வாழ்க்கை முறை.
பிறக்கும் போது இருக்கும் அறியாமையும், இயல்பும்,
உண்மையான சிரிப்பும், அழுகையும்,
எதார்த்தமான உணர்ச்சிகளும்
வயது ஏற ஏற , மூளை முதிர்ச்சி பெற பெற
இளமை முதுமையாக மாற மாற
எல்லாவற்றிலும் நச்சுத்தன்மையை ஏற்றுக் கொள்கிறோம்.
நான் ஆணித்தரமாக சொல்லுவேன், நமக்கு வரும் நோய் நம்மிடமுள்ள நச்சின் அளவைப் பொருத்ததே !
உதாரணத்திற்கு ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் குழந்தைகளுக்கு பொதுவாக இல்லையே ! ?
நம் வாழ்வில் மெச்சூரிட்டி அல்லது பக்குவம் என்பது குழந்தையைப் போல் நஞ்சில்லாத மனமும், அதன்மூலம் கிடைக்கும் நல்ல செயலுமாகும் இருக்கட்டும்.
--------------------------------------------xxx-------------------------------------------
#766
47,600
100
: 47,500
2
5 (2 )
asiyamohi2411
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50