அடுத்த நொடி ஆச்சரியம்

கற்பனை
4.9 out of 5 (570 Ratings)
Share this story

அடுத்த நொடி ஆச்சரியம் !...

விடியல் பிறந்தது... ஒரு இனிய சூரிய உதயம்... கதிரவனின் ஒளியோ...கண்ணை தழுவ...இசைஞானி இசையோ...காதை தழுவ...கண் விழித்தான் சஞ்சித்...

தொலைக்காட்சி பெட்டியில் யாரோ... இந்த நாள் இனிய நாளாகும் என விடை பெற்று கொண்டிருந்தார்...

உள்ளங்கைகளை உரசி பார்த்து விட்டு எழுந்தான்.கட்டிலின் வலப்புறம் இருந்த நாட்காட்டியை பார்த்தான்.... விவேகானந்தர் தீர்க்கமான பார்வையால் வசிகரித்து கொண்டிருந்தார்...

அருகே சென்று, தேதி கிழித்து எதையோ வாசித்தவுடன்... புன்னகைத்தான்... " உற்சாகமாக இருக்க தொடங்குவது தான்; வெற்றிகரமான வாழ்க்கையை வாழ தொடங்குவதற்கான முதல் படி" - சுவாமி விவேகானந்தர்... என்றிருந்தது... இயல்பாக உற்சாகம் தொற்றி கொண்டது....

சாதாரண பொறியாளர் வேலை பார்க்கும் சஞ்சித்திற்கு... என்றோ ஒருநாள் பெரிய ஆளாக, புகழ்பெற்ற மனிதராக ஆக வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் மனதில் எரிதழலாய் எரிந்து கொண்டே தானிருந்தது....

என்ன செய்வது... எத்தனையோ திறமையான இளைஞர்கள்... குடும்ப சூழ்நிலை காரணமாக... முயற்சி செய்து கூட பார்க்க முடியாமல்... தன் கனவுகளை நெஞ்சில் புதைத்து கொண்டு... கிடைத்த வேலையில்...வாழ்க்கையை நகர்த்துதலை போல... தானும் நகர்த்தி கொண்டிருந்தான்...

ஒரு சிறு திருத்தம்... கனவுகளை நெஞ்சிற்குள் புதைக்க வில்லை... மாறாக...விதைத்து வைத்திருந்தான்....

வழக்கம் போல், சரியான நேரத்தில் வேலைக்கு கிளம்பி... தன் இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தவடன், வண்டியின் கண்ணாடியில் ...முகம் பார்த்து கொண்டே... சட்டை பையில் இருந்த குளிரூட்டும் கண்ணாடி அணிந்து... தலையை கோதி...தன்னையே...ரசித்தான்... நீ அழகன்டா... என கூறி சிரித்த போது... கன்னத்தில் அழகாய் குழி விழுந்தது...

"தன்னை ரசிக்கும் ஒருவரால் தான்...இந்த உலகை ரசிக்க முடியும்"... யாரோ... சொன்னது... அவன்... நினைவில் தோன்றி மறைந்தது...

வாகனத்தை இயக்கி... மெதுவாக வீட்டை விட்டு.. வெளியே வந்தததும்... எதிர்வீட்டு வாசலில் அந்த நடுத்தர வயது பெண்மணி.. தனது இரு சக்கரவாகனத்தை...கிளப்ப முடியாமல் உதைத்து; உதைத்து முயற்சித்து கொண்டிருந்தார்...

வேலைக்கு தாமதமாகுதே...என்ற கவலையும்... கால்களில் ஏற்பட்ட வலியும்... ஒன்றாய் தெரிய... சஞ்சித் வரும் திசை நோக்கினார்...

அவர்கள் ஒன்றும் கேட்காமலே... அப்பெண்மணியிடம்... என்னக்கா... என்னாச்சு... நகருங்கள் நான் பார்க்கிறேன் என... உரிமையுடன் அணுகினான்....

என்ன மாயமோ... சஞ்சித் உதைத்த...ஒரே உதையில்... வண்டி கிளம்பியது... ரொம்ப நன்றிப்பா... என.. அப்பெண்ணின் முகத்தில்... நன்றி கலந்த பாச புன்னகை...தவழ்ந்தது...

முதலிலேயே...என்னை கூப்பிட வேண்டிய தானே... என.. அன்புடன் கோபித்து கொண்டு...புன்னகையுடன் மீண்டும் தன் பயணத்தை துவக்கினான்....

இப்படியாகவே...போகும் வழி முழுக்க, என்ன மாமா...செளக்கியமா... மாப்ள... சாப்ட்டியா... பார்த்து போமா...தங்கச்சி...என...வாகனம் நகர நகர... அவன் பந்தங்களின் வட்டமும்... விரிந்த வண்ணம் இருந்தன...

ஒரு சிறு புன்னகையும்... ஒரு சில அக்கறை வார்த்தைகளும்... பெரும் நட்பையும்..சகோதரத்துவத்துவத்தையும் திறக்கும் சாவிகள் என உணர்ந்திருந்தான்...

ஒருவழியாக தொழிற்சாலைக்கு வந்தடைந்தான்... வாயிற்காவலர் வடிவேலு..வாஞ்சையுடன் வணக்கம் வைத்தார்... தம்பி... பெண்ணுக்கு அடுத்த மாதம் திருமணம்...கடனாக கொஞ்சம் பணம் தரமுடியுமா என தயங்கி தயங்கி கேட்டார்... கொஞ்சமும் முகம் சுழிக்காமல்... தன் சட்டை பையிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் தாளெடுத்து அவர் கைகளில் திணித்து... அண்ணே...கடன் கொடுக்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை... இதை தங்கள் பெண்ணின் திருமணத்திற்கு என் அன்பளிப்பாக ஏற்று கொள்ளுங்கள்... என புன்னகைத்தவாறே உள்ளே சென்றான்... வடிவேலு நன்றியுடன் அவன் போவதையே பார்த்தார்....

தேநீர் கொண்டு வரும் பையன் முதற்கொண்டு... நிர்வாக இயக்குனர் வரை... எதிர்ப்பட்ட அனைவருக்கும்... உற்சாகத்துடன் வணக்கம் சொன்னான்... அவர்களும் அதே உற்சாகத்தை பிரதிபலித்தனர்... நாம் பிறரை அணுகும் போது... வெளிபடுத்தும்... எண்ண அலைகளே... மீண்டும் நமக்கு திரும்ப வரும் என்ற சூட்சுமம் உணர்ந்தவனாய் பழகினான் சஞ்சித்... இதனால்...சக தொழிலாளர்களும்... சஞ்சித்திற்கு அணுசரனையாகவும்... ஆதரவாகவும் இருந்தனர்...

குறைந்த காலத்தில் முடிக்க முடியாது என தொழிலாளர்கள் மலைத்த போதெல்லாம்... சஞ்சித் சென்று பேசியவுடன், நம்பிக்கை தந்தவுடன், உற்சாக படுத்தியவுடன்... மள மள வென...முடித்து தந்து அசத்திடுவர்...

அதிகாரம் செய்யும் போக்கை விட, ஒரு தொழிலாளிக்கு... அன்பும், மரியாதையும், தட்டி கொடுத்து வேலை வாங்கும் தன்மையுமே... அதிக பலன் தரும் என்பதையும்...தன் சொந்த அனுபவத்திலே... உணர்ந்திருந்தான் சஞ்சித்...

ஆர்வத்துடனும் அக்கறையுடனும் தன் இருக்கையில் அமர்ந்து.. கணிணியில் வேலையை துவக்கி இருந்தான்.. சிறிது நேரத்தில் மேலாளர் அறையின் அழைப்பு மணி ஒலித்தது... உள்ளே சென்ற அலுவலக உதவியாளர் நேராக சஞ்சிதிடம் வந்தார்... ஐயா..தங்களை உள்ளே அழைக்கிறார்...என்றார்... நன்றி அண்ணா என கூறி விட்டு.. மேலாளர் அறைக்கு சென்று... கதவை சிறிதே திறந்து... உள்ளே வரலாமா...என கேட்டான்...

வாங்க சஞ்சித்... வந்து அமருங்கள் என மேலாளர் உரைக்க... நன்றி என அமர்ந்தான்...

எவ்வளவு மரியாதை தருகிறானோ... அவ்வளவு மரியாதையை மீண்டும் எதிர்பார்ப்பான் சஞ்சித் என... அவரும் தெரிந்து வைத்திருந்தார்...

புன்னகைத்தவாறே...மேலாளர் பேச துவங்கினார்... இன்று இரவு சென்னையில்... ஒரு பெரிய நட்சத்திர விடுதியில் வெளிநாட்டு வாடிக்கையாளர் சந்திப்பு இருக்கிறது... எதிர்பாராத வேறு பணி நிமித்தமாக என்னால் கலந்து கொள்ள முடியாத நிலை. ஆகையால்...நீங்கள் நமது நிறுவனத்தின் சார்பாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்...

கண்டிப்பாக ஐயா என்றான் உற்சாகமாக...இதோ.. இது தான் தேவையான கோப்புகள்... உடனே... நிதி பிரிவிற்கு செல்லுங்கள்.. அவர்கள்..உங்களுக்கான விமான பயண சீட்டு மற்றும் இதர செலவிற்கான பணமும் தருவார்கள் என்றும் கூறினார்...

இருபத்தைந்து வருட கால விமான பயண ஆசை.... இப்படி சட்டென்று நிறைவேற போகிறது என போன நொடி வரை சஞ்சித் அறிந்திருக்கவில்லை…

மிகுந்த மகிழ்ச்சியாக கிளம்பினான்... பயணச்சீட்டை பெற்று கொண்டு... பெருமையுடன் தன் தாயிடம் சென்று... காலில் விழுந்து ஆசி பெற்று விசயத்தை கூறினான்...

நீ சிறுவனாக இருந்தது முதல் இன்று வரை...தினமும் இரவில் வானில் பறக்கும் விமானத்தை காட்டி, ஒரு நாள்...இந்த விமானத்தில்...நான் பறப்பேன் என்பாயே... அந்த ஆசையை...இன்று... இறைவன் நிறைவேற்ற போகிறான் என்றாள்...ஆனந்த கண்ணீரோடு....

சட்டென ஒரு விஷயம் புரிந்தது சஞ்சித்திற்க்கு... இரவு வேளையில்...தன் வீட்டு வாசலில்...உணவருந்திய பிறகு... தன் தாயிடமும்...நண்பர்களிடமும்...அமர்ந்து பேசும் வழக்கமிருந்தது அவனுக்கு... அப்போது.. அவன் எந்த விமானத்தை காட்டி. ஆசையுடன்... ஒருநாள் இதில் பறப்பேன் என சொல்வானோ... அதே விமானத்தில்... அவனுக்கு பயணிக்கும் வாய்ப்பு வாய்த்திருந்தது !....

சரியான நேரத்திற்கு புறப்பட்டு விமான நிலையம்வந்தடைந்தான்... பாதுகாப்பு சோதனைகள் முடித்து... விமானத்து நெருங்க நெருங்க...இதய துடிப்பு சற்று அதிகரித்து தானிருந்தது...

வரிசையில் சென்று முதல் அடி விமானத்திற்குள் எடுத்து வைத்த போது...அத்தனை பிரமிப்புடன் ஒரு சிலிர்ப்பே ஏற்பட்டது அவனுக்கு...

தன்னை போலவே, புன்னகை பூத்த முகத்துடன் வரவேற்ற... விமான பணிபெண்களும் மேலும் பரவசமாக்கினர்...

விமான இயந்திர சத்தமும் அதன் உட்பகுதியில் நிலவிய...சற்று கூடுதலான குளிர் சாதன காற்றும்... உள்ளத்தை குதூகலமாக்கியது...

தனது இருக்கை கண்டறிந்தவுடன்.... சொர்கத்தில் இடம் கிடைத்தது போன்ற உணர்வு... தலைக்கு மேலே... இரயில் பெட்டியில் உள்ள படுக்கை வசதி போன்ற பொருட்கள் வைக்கும் அறையை கண்டு ஆச்சரியம் அடைந்தான்.

அதற்குள்ளாகவே, சக பயணிகளின் பெட்டி மற்றும் பைகளால் சற்று நிரம்பி இருந்த இடத்திற்குள், தனது பையை நுழைத்து...பத்திர படுத்தினான்....

சிம்மாசனத்தில் முதல் முறையாக அமரும் மன்னன் போல, ஒரு மிடுக்குடன் அமர்ந்தான்...

இப்போதுதான் அவனுக்கு, அருகில் உள்ளவர்களை பார்க்கும் எண்ணமே வந்ததது... தனது பக்கத்து இருக்கையில் மிகவும் எளிமையாக... கண்களில் மிகவும் கனிவோடு ஒரு பெரிய மனிதர் அமர்ந்திருந்ததை கண்டான். அவரைப் பார்த்தாலே... மிகுந்த மரியாதையும்...மிகவும் பழகியவர் போன்ற உணர்வும் தோன்றியது.

விமான பணிபெண் சில பாதுகாப்பு உபகரணங்களை கையில் ஏந்தியவாறு இவனை கடக்கும் பொழுது....ஏதோ ஒன்றை தவற விட... அது கீழே விழுந்தது... சற்றும் யோசிக்காமல் உடனே சஞ்சித் அப்பெண்ணின் கால் இடையே கிடந்த அந்த பாதுகாப்பு உடையை எடுத்து அவளிடம் நீட்டினான்.... மிக்க நன்றி.. நீங்கள் மிகவும் நல்ல மனிதர் என்று ஆத்மார்த்தமாய் நன்றி கூறி விட்டு நகர்ந்தாள்....

அனைவரும் தங்களுடைய அலைபேசியை அணைத்து வைக்கவும் என்ற அறிவிப்பு வந்ததும், அருகிலிருந்த பெரிய மனிதரின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது... வணக்கம்... என்று...கம்பீர குரலில் அவர் பேச ஆரம்பித்தவுடன்... செவி ஈர்ப்பு விசையில் சாய்ந்தே விட்டான்.... விமானம் புறப்பட போகிறது... வந்தததும் மீண்டும் அழைக்கிறேன்...என்று சொல்லி, தொடர்பை துண்டித்து... சட்டை பையில் வைத்து கொண்டார்....

அக்குரல் அவன் மூளைக்குள்...ஏதோ செய்தது....எங்கேயோ கேட்ட குரல்....ஆனால்...அது எங்கே எங்கே என, மனது ... காதருகே கேட்கும் வண்டின் ரீங்காரம் போல் கேட்டு கொண்டே இருந்தது....

இன்னும் சற்று நேரத்தில் விமானம் புறப்பட இருக்கிறது... எனும் வேளையில்... தம்பி ... மன்னிக்கவும்...என் கை பையை மேலிருந்து எடுக்க வேண்டும்...அதில் ஒரு முக்கியமான மாத்திரை இருக்கிறது...கொஞ்சம் எழுந்து வழி விட முடியுமா என்று சஞ்சித்திடம் கேட்டார்....

தாராளமாக ஐயா வென, உடனடியாக எழுந்து... வழி விட்டபடியே... நான் எடுத்து தரட்டுமா ஐயா என அன்புடன் கேட்டான்... பரவாயில்ல தம்பி... என்றவாறே...வெளிவந்து... மேலறையில் கை விட்டு தேடினார்... பை காணவில்லை... சிறிது பதட்டமாக மீண்டும் தேடினார்... அவரையே ரசித்து கொண்டிருந்த சஞ்சித்திற்கு சட்டென நிலைமை புரிந்தது....

ஐயா நான் பார்க்கிறேன் நகருங்கள் என்று அவர் அனுமதி இல்லாமலே தேட ஆரம்பித்தான். அது சக பயணிகளின் சற்று பெரிய மடிக்கணினி பைகளுக்கு நடுவே... சிக்கி கொஞ்சமாகவே... தெரிந்தது....எப்படியோ... சிறிது மெனக்கெட்டே... அக்கைப்பையை எடுத்து தந்தான் சஞ்சித்...

ரொம்ப நன்றிப்பா... என்று வாங்கி அந்த மாத்திரையை விழுங்கி விட்டு, ஆசுவாசமாக அமர்ந்தார்... பரவாயில்ல ஐயா... இதற்கு போய்..நீங்க...நன்றி என...பெரிய வார்த்தையெல்லாம்.... சொல்லாதீர்கள் ஐயா... என... சஞ்சித் பெருந்தன்மையுடன் புன்னகைத்தான்....

ஒருவழியாக விமானம் புறப்பட்டது.... கண்ணை மூடி...தன் இஷ்ட தெய்வத்தை வேண்டி கொண்டான்.... இந்த நீண்ட நாள்... ஆசையை...நிறைவேற்றிய பிரபஞ்ச சக்திக்கும்...நன்றி சொன்னான் மனதிற்குள்....

ராட்சத ராட்டினத்தில் மேலெழும்போது ஏற்படும் அதே குறுகுறுப்பு அடிவயிற்றில் தோன்ற... மேலும் குதூகலமானான்.... அவன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி... அவ்வளவு மலர்ச்சி....இனி நூறு முறை பயணம் செய்யும் வாய்ப்புகள் கிடைத்தாலும்... இந்த முதன்முறை அனுபவம் மீண்டும் கிடைக்காதல்லவா!.... எப்போதுமே... முதல் அனுபவமே... முத்தான அனுபவம்... வாழ் நாள்...முழுக்க மறக்க முடியாத நிகழ்வாக இந்த விமான பயணம் இருக்க போகிறது ஐயா.... என்று அருகிலிருந்த ஐயாவிடம் கூற... அவரும் புன்முறுவல் பூத்தவாறே தலையசைத்தார்...சஞ்சித் மேலும் அவரிடம், இலவச இணைப்பாக...தங்கள் முகமும் மறக்காமல்.... என் நினைவிருக்கும் வரை.... தொடர்ந்து வரும் என்றான்... ஐயாவின் முகம்... பிரகாசமானது....

இருக்கைக்கு இடையில் இருந்த அவன் கைமேல் தன் கையை வைத்து.. ஒரு மெல்லிய அழுத்தம் தந்து எடுத்து கொண்டார். அந்த அழுத்தத்தில் பல பொருத்தமான உணர்வுகள் வெளிபட்டன....

மீண்டும் கண்மூடி ஏதோ யோசனையில் ஆழ்ந்தார்... சஞ்சித்தோ... ஐன்னலின் வழியே.. தன் ஊர் கோவிலின் கோபுரம் தெரிகிறதா... ஆறு தெரிகிறதா... தன் வீடு தெரிகிறதா என்று கூட எட்டிப்பார்த்த படியே வந்தான்.... இருந்தாலும்... ஐயாவை திரும்பி திரும்பி அடிக்கடி பார்த்து கொண்டான். அவரின் முகமும் குரலும்... அவன் மனத்திரையில் மறுஒளிபரப்பு ஆன வண்ணமே இருந்தன.

சரி கேட்டே விடலாம் அவரிடமே என்ற உணர்வு...உந்தி தள்ளியது...மெதுவாக அவரிடம் ஐயா! என்றான். சிறிது கண் திறந்தார்... மன்னிக்கவும்... உங்களிடம் ஒன்று கேட்கலாமா என்ற தயக்கத்துடன் கேட்டான்...

ம்... என்றார் பாந்தமாக....

என் பெயர் சஞ்சித்... ஐயா என்றான்... அவரும் ...என் பெயர் தமிழ் என்றார்... ஏற்கனவே, தமிழில் ஏற்கனவே மிகுந்த ஈடுபாடு கொண்ட சஞ்சித்தின் கண்கள்... மேலும் ஆச்சரியத்தில் விரிந்தன...

ஐயா.. தங்களின் முகமும் குரலும் மிக மிக பரிச்சயமாய் உள்ளது...எங்கோ பார்த்தது போல் என்பதையும் தாண்டி... பல நாள் பழகிய உணர்வே மேலோங்குகிறது...தாங்கள் யாரென அறிந்து கொள்ள... மூளை...குடையாய் குடைகிறது...என்றான் அறியாதவனாய்....

ஆம்... "அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியம் தான் வாழ்க்கை " என்ற இரகசியம் அறியாதவனாய்!....

நான் ஒரு “எழுத்தாளன்” என்றே துவங்கினார்... ஒரு கர்வம் தோய்ந்த காந்த குரலில்... அதோடு...நான் ஒரு நடிகனும் கூட... என் எழுத்தின் மீது உள்ள ஈர்ப்பின் காரணமாக... சில இயக்குநர்கள்...என் நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் வந்து விட்டனர்... அவர்களின் நட்பிற்காக... சில படங்களில் நடித்து இருக்கிறேன்... நீ அந்த படங்களில் ஏதோ ஒன்றில் என்னை பார்த்திருக்கலாம் என்றார்...

அப்படியா...ஐயா... மிக்க மகிழ்ச்சி... தாங்கள் எழுதிய புத்தகங்கள் என்னவென்று கூற முடியுமா ஐயா என கேட்டான்... ஐயாவிற்கோ... பெரும் ஆச்சரியம்... இதுவரை, நடிகர் என்று சொன்னதும்...அவர் நடித்த படங்களை பற்றி தான் எல்லோரும் கேட்பார்களே...தவிர... இவரின் படைப்புகளை பற்றி சாமானிய மக்கள் யாரும் கேட்டதில்லை...

ஐயாவிற்கு அவன் மேல், இன்னும் கொஞ்சம் மரியாதை வந்தது....சிரித்து கொண்டே.. தான் எழுதிய புத்தகங்களின் பெயர்களை சொன்னார்... அதை கேட்ட சஞ்சித்... ஐயா.. "மரமோ மனிதனோ; வளரவிடுங்கள் " எழுதிய தமிழ் தாசனா நீங்கள்!... அந்த புத்தகம்... என் மனதில் ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தியது ஐயா...என்றதும்... இனம் புரியாத பாசமே அவன் மேல் வந்துவிட்டது அவருக்கு....

தங்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி ஐயா...என்றான் அவர் கரம் பற்றிக்கொண்டு...

தேசிய விருதுபெற்ற அந்த தமிழ் படத்தின் இயக்குநர் இரா.முரளியும் இந்த புத்தகத்தை வாசித்த பின்னர் தான்...என் நண்பரானார்... அவரின் நட்பிற்காக தான்...அந்த திரைப்படத்தில் நடித்தேன்... பிறகு அது மேலும் பல திரைப்பட இயக்குநர்களின் நட்பிற்கு வழிவகுத்தது என்றார்.....

ஐயா.. இதோ எனது பெயர், விலாச அட்டை... தயவு செய்து நீங்கள் ஊருக்கு வரும் போது என் வீட்டிற்க்கு வந்து உணவருந்தி எங்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்...என்றான்.

அதை வாஞ்சையுடன் வாங்கி கொண்ட தமிழ் தாசன் ஐயா... அவரது பெயர் அட்டையை அவனிடம் தந்து...

தம்பி! நான் விமானத்தில் ஏறிய முதலே...உன்னை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன். வாசலில் கை கூப்பி வரவேற்ற பணிப்பெண்ணுக்கு நீ மட்டும் தான் பதில் வணக்கம் கை கூப்பி செய்தாய்... அத்தனை சிநேகமாய் எல்லோரயும் பார்த்து புன்னகைத்தாய்... அந்த பணிப்பெண்ணின் கால் அருகே கிடந்த பொருளை எடுத்து தந்தாய்... நான் யாரென தெரியாமலே... எனக்கு மருந்து பை எடுத்து கொடுத்து உதவினாய்...

தமிழ் புத்தகங்கள் வாசிக்கிறாய்... அன்போடு என்னை...வீட்டுக்கே அழைக்கிறாய்...

இந்த காலத்தில் சக மனிதர்களை.. மனிதர்களாக பார்க்கும் பழக்கமே.... குறைந்து கொண்டே வருகிறது...பிறரை மதித்தலும், பிறருக்கு உதவுதலும் சிறந்த குணங்கள்... அதை என்றென்றும் கடைபிடிப்பாயாக... என வாழ்த்தினார்....

கண்டிப்பாக ஐயா... புத்தகங்கள் வாசிப்பதும், கவிதைகள் எழுதுவதும், ஏன் கண்ணாடியில் தன்னை சில நொடிகள் ரசிக்கும் போதும் மட்டுமே... எனக்காக அந்த நாளில் நான் வாழ்ந்த நிமிடங்களாய் தோன்றும்... அதுவே... என் மகிழ்ச்சியை வளர்க்கும்... மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதே...நீண்ட ஆயுளுக்கு வழி... என எங்கோ படித்த நியாபகம் என்றான்....

மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை மிக எளிமையாக சொல்லி விட்டாயப்பா.... என தமிழ்தாசன் சிரித்தார்....

சரி கேள்... உனக்கு ஏதேனும் ஆசை இருக்கிறதா... நீ எழுதிய கவிதைகள் தொகுப்பு போல வெளியிட... எழுத்தாளன் ஆக... எந்த உதவியாயினும்....என்னிடம் தயங்காமல் கேள் தம்பி... உன்னை எனக்கு மிகவும் பிடித்துள்ளது... ஏதாவது உனக்கு செய்ய வேண்டும் போல... தோன்றுகிறது என்றார்..."கடவுளை போல"

ஏற்கனவே, நடிகராக வேண்டும் என்ற ஆசையை நெஞ்சிற்குள் புதைத்து வைத்திருந்த... இல்லை இல்லை.... "விதைத்து வைத்திருந்த சஞ்சித்திற்கு " நாம் எதை மனதார நேசித்து அடைய நினைக்கிறோமோ; அது நம்மை வந்து அடைந்தே தீரும்" என்ற பிரபஞ்ச விதி... நினைவுக்கு வந்தது....

காரணமில்லாமல் காரியம் இல்லை என்ற கூற்றிற்கேற்ப, மேலாளருக்கு வர இயலாத சூழ்நிலை, தன்னை இந்த விமான இருக்கையில்...ஐயாவின் அருகே.அமர வைத்திருப்பதை உணர்ந்தான்.

மிகுந்த நன்றி உணர்வுடன் பேச துவங்கினான்... ஐயா! முதலில் என் மனமார்ந்த நன்றிகள் தங்களுக்கு.... உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் உதிக்கும்படி நான் நடந்திருக்கிறேன் என்பதே...எனக்கு பெருமையும் வெற்றியும்... சிறு வயது முதல் பிறரை மகிழ்வித்து மகிழ்வதே...எனக்கு மிகவும் பிடித்த விஷயம்...

ஒரு திரைபடத்திலாவது என் வாழ்நாளில் நடித்து விட வேண்டும் என்பதே... என் நீண்ட நாள் கனவு...

இப்படி கேட்கிறானே என்று தவறாக நினைக்காதீர்கள் ஐயா... இது நடக்குமோ நடக்காதோ... ஆனால் கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் ஐயா... தயக்கம் காரணமாகவே... ஏகப்பட்ட வாய்புகள் ஏராளமானோரால் கை விடப்படுகின்றன ....

உங்களிடம் கேட்ட இந்த திருப்தி ஒன்று போதும் ஐயா... என்றோ எங்கோ...மீண்டும் ஒருநாள் சந்திக்கும் போது... என் முகம் கண்டவுடன்.. நான் யாரென்று நினைவிற்கு வந்து... நீங்கள் இதே புன்னகை பூத்தால்... போதும் ஐயா... என் நெஞ்செல்லாம் மலரும்.... என்று கை கூப்பினான்....

விமானம் கீழே இறங்க தொடங்கி விட்டது...உன் வாழ்க்கை...

மேலேற தொடங்கி விட்டது...

நம்பிக்கையுடன் செல்..

மீண்டும் சந்திக்கலாம்...

என அசரீரி போல் உரைத்து... விடைபெற்று கொண்டார் தமிழ்தாசன்...

ஆறு மாதங்களுக்கு பிறகு....

தமிழ்தாசன் ஐயாவின் அலைபேசி ஒலித்தது... அதே...தெய்வீக புன்னகையுடன் எடுத்தார்... மறுமுனையில் சஞ்சித்... அதே பணிவுடன்... மேலும் உற்சாகமாக... அழைத்தான்... ஐயா... நாளை காலை நான் நடித்த படத்தின் முன்னோட்ட காட்சி... தாங்கள் அவசியம் வந்திருந்து வாழ்த்த வேண்டும் ஐயா...என்றான்...

மிகச்சிறப்பு... "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்" என்ற கூற்று...உன்னால் மீண்டும் மெய் பட்டிருக்கிறது... வாழ்க வளமுடன்...என மனதார வாழ்த்தினார்.... சரி... படத்தின் பெயர் என்ன என்றார்...

சஞ்சித் மகிழ்ச்சியுடன் கூறினான்...."அடுத்த நொடி ஆச்சரியம் "

Stories you will love

X
Please Wait ...