JUNE 10th - JULY 10th
நேரச் சிதறல்
— ராஜாத்தி
"பாவி பசங்க இப்படி போறானுங்களே! குழிக்குள்ள வண்டிய விட்டுத்தான் ஓட்டனுமா கொஞ்சம் மெதுவா போனா என்ன?" என்று தன் வீட்டு கேட்டில் இருந்து ஒவ்வொரு வண்டி போகும்போதும், அந்த சாலையை பார்த்துக் கத்திக் கொண்டே இருந்தார் அந்த வயதான மூதாட்டி.
யார் கேட்பார்? அந்த முதியவரின் குரலை! அதை ஒருவராவது கேட்டிருந்தால் ஒரு குடும்பத்தின் ஆணிவேரைப் பறித்த சம்பவம் நிகழ்ந்தேறியிருக்குமோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
சம்பவம் நடந்த அன்று:
அது அரசாங்கம் அமைத்த பாதாளச் சாக்கடை, சாலையின் மத்தியில் பள்ளம் இறக்கி அதை சரிவர மூடாமல் விட்டு, நாளடைவில் வாகனங்கள் சென்றும் வந்தும் அந்த இடம் குழி விழுந்து பள்ளமாகி நிறைய விபத்துக்கள் நடக்கும் பகுதியானது.
விபத்து நடக்கும் சாலை எதிரில் தான் அந்த மூதாட்டி, அவர் மகன் மற்றும் மருமகள் உடன் வசித்து வருகிறார்.அவருக்கு ஒவ்வொரு விபத்து நடக்கும் போதும் அங்கு உள்ள தெரு மக்களிடம் அதை சீக்கிரம் சீர் அமைக்கச் சொல்லி கேட்டுக் கொண்டே இருப்பார். தன் மகனிடமும் நச்சரித்து, அவ்வூரின் பஞ்சாயத்து அலுவலகம் சென்று மனு கூட கொடுக்க வைத்தார்.ஆனால் எப்பவும் போல அது கிணற்றில் போட்ட கல் போலானது.
இதனாலே வருவோர் போவோரை மெதுவாக போகச் சொல்லி தன்பாட்டில் புலம்பிக் கொண்டே இருப்பார்.
இன்றும் அதே போல,
காலை எழுந்ததும் அன்றாட வேலை இதான் என்பது போல், முறத்தில் மண் அள்ளி அந்த குழிக்குள் தன்னால் முடிந்த அளவு மணலைக் கொட்டி அதை நிரப்பிக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த அவரின் மருமகள், "ஏன் அத்த நீங்க வேல மெனக்கெட்டு போட்ட மண்ணெல்லாம் கொஞ்ச நேரத்துல வண்டிங்க போய் காத்தா கலந்து போக போகுது எதுக்கு இந்த வயசுல உடம்பு முடியாம இத செஞ்சிகிட்டு? காபி தண்ணி குடிக்கலாம் வாங்க" என்று அழைக்க,
"இல்ல கனகா… இரு, இத மட்டும் கொட்டிட்டு வாரேன். நீயும் கூட்டின மண்ண அப்புடியே தள்ளி இதுல போடு வா" என்றவரை முறைக்க மட்டுமே முடிந்தது.
"கிழவிய பாரு, நாம ஒன்னு சொன்னா அது நம்மல வேலை வாங்குது. இதை சரியும் பண்ணி தொலைக்க மாட்டுகுறாங்க, நாளும் பொழுதும் எவனாச்சும் விழுந்து நம்மல பதற வைக்கிறாங்க." என்று புலம்பிக் கொண்டே கூட்டிய மண்ணை அதில் தள்ளிவிட்டு தண்ணீர் தெளித்து கோலம் போட்டு உள்ளே சென்றார் அவரின் மருமகள்.
காலையில் எழுந்ததில் இருந்தே அந்த மூதாட்டிக்கு ஏனோ மனதே சரி இல்லை அதனால் தன் மகனிடம், "ராகவா இன்னொரு வாட்டி பஞ்சாயத்து போர்டுக்கு போய் இன்னைக்காச்சும் சரி பண்ண ஆளு அனுப்புறாங்களா கேளு, இல்ல தலைவர்கிட்ட சொல்லி கொஞ்சம் அங்க என்னனு பாக்க சொல்லிட்டு வாயா, நேத்து அந்த ஸ்கூட்டர்ல வந்த பொம்பளைப்பிள்ளை விழுந்தது கண்ணுக்குள்ளையே இருக்கு", என்று வருத்தமாக சொல்லவும் அதற்கு மகன் மறுப்பு தெரிவித்து ஏதோ சொல்ல வரவும், தன் தாயின் முகத்தில் தெரிந்த வருத்தத்தில் எதும் சொல்லாமல் பஞ்சாயத்து போர்டுக்கு கிளம்பிச் சென்றார்.
காலை நேரம் இப்படியே செல்ல கனகாவும், சாப்பிடாமல் சென்ற தன் கணவரை திட்டிகொண்டு, தன் மாமியாரைப் பார்த்து, "அத்தை இப்ப போய் அவர அனுப்பனுமா சாப்பிட கூட இல்ல" என்ற மருமகளிடம், "மனசே சரியில்லை கனகா இவனுக அதை சரி செய்ய 'நேரம்' எடுக்க எடுக்க ஏதோ தப்பா நடக்க போகுற மாறியே உள்ளுக்குள்ள பதறுது" என்றவரிடம்,
“ஒன்னும் ஆகாது அத்தை” என்று அவரின் மருமகள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ‘டொம்’ என்ற சத்தம் கேட்க, அவர்கள் 'எந்நாளும் கேட்கவே கூடாது' என்று நினைக்கும் அலறல் சத்தம் வெளிய கேட்க, "ஆத்தே" அலறியபடி இருவரும் வெளிய வருவதற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.
ஆம், அவர்கள் பயந்த நிகழ்வு நடந்தேறிவிட்டது.வேலைக்கு நேரம் ஆகிற்று என்று இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற ஒரு நடுத்தர வயதுள்ள ஆண், அப்பள்ளத்தில் வண்டியை இறக்கி ஏற்றியதில் வண்டி சற்று நிலைத் தடுமாற கணப்பொழுதில் கட்டுப்பாடின்றி தூரச் சென்று விழுந்தது. அதில் ஓட்டுனரும் பாதி தூரம் தலை நிலத்தில் தேய்ந்தபடி இழுத்துச் சென்று விழுந்தார். இதில் அவர் போட்டு இருந்த தலைக் கவசமும் நொறுங்கி போய் தலை தொங்க இரத்தம் தோய மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் நடந்த கோர விபத்தைப் பார்த்து பதறி அவரைத் தூக்கி 'என்ன ஆனது?' என்று பார்க்கையிலேயே இரத்த வாந்தி எடுத்து மயங்க, மேலும் அவருக்கு குபுகுபுவென காது, மூக்கு, தலை என்று ரத்தம் பீறிட்டு வர ஆரம்பித்தது.
நிலமையின் தீவிரத்தை கண்டு, சிலர் அவரச ஊர்திக்கு அழைத்துச் சொல்ல, அவர்களும் அடிபட்ட இடத்தைக் கேட்டறிந்து, 'அவரின் தலையைச் சாய விடாமல் நிமிர்த்தி வைக்க சொல்லி தண்ணீர் ஏதும் கொடுக்க வேண்டாம்' என்று சில முதலுதவி வழிமுறையைச் செய்ய சொல்லி அறிவுறுத்த, சில இளைஞர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் அவர் சட்டைப் பையில் இருந்த கைப்பேசி மூலம் அவர் வீட்டிற்கும் தகவல் சொல்லப் பட்டது.
இதனை எல்லாம் பார்த்த அந்த மூதாட்டி நெஞ்சம் படபடக்க அங்கேயே அமர்ந்து விட்டார்.அவர் அமர்ந்த விதமே கனகாவை பயமுறுத்த, உள்ளே ஓடிப் போய் தண்ணீர் கொண்டு வந்து குடிக்க கொடுத்தார்.
அந்த நேரம் அவசர ஊர்தி வர, அவரை அதில் ஏற்றவும், அடிபட்டவரின் மனைவி இரண்டு பள்ளி செல்லும் சிறுவர்களுடன் அழுது கொண்டே அவ்விடம் வரவும் சரியாக இருந்தது, அச்சிறுவர்களைப் பார்த்தவர்களுக்கு மனம் கணத்து போனது.
அவசர ஊர்தி அதற்கே உரிய சத்தத்துடன் அலறிகோண்டு வந்து விபத்துகுள்ளானவரை, அவரது குடும்பத்தின் கதறலுடன் ஏற்றிக் கொண்டு செல்லவும், ராகவன் அத்தெரு முனையை அடையவும் சரியாக இருந்தது.
வாகனம் கிளம்பவும் ஆளாளுக்கு நடந்த விபத்தைப் பற்றி ஒவ்வொன்றாக பேசிக் கொண்டே இடத்தை விட்டு களையவும் வேகமாக வந்த ராகவன், 'என்ன ஆகிற்று' என்று மனைவியைக் கேட்க, அவரும் நடந்ததைச் சொன்னார். கேட்டவருக்கும் மனது பதைக்கத் தான் செய்தது. பின் தன் தாயாரைப் பார்த்தார்.
அவர் முகமே ஏதோ போல் இருக்க குனிந்து தன் தாயை தூக்கி தோளில் சாய்த்து உள்ளே அழைத்துச் சென்றார். ஜடம் போல் மகனுடன் சென்றாலும் உள்ளுக்குள் அடிபட்டவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று தொடர்ந்து கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருந்தார்.
மதியம் ஒருவருக்கும் உணவு தொண்டையைத் தாண்டி இறங்கவில்லை. ராகவனும் அவரின் இஷ்டதெய்வத்தை மனதுக்குள் அடிபட்டவருக்காக வேண்டிக் கொண்டுதான் இருந்தார்.
மாலைப்பொழுது எப்படியோ செல்ல,வெளியே பேச்சு குரல் கேட்க, ராகவனும் என்னவென்று பார்க்க வெளியே வந்தார். விபத்தைப் பற்றி விசாரிக்க வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், பக்கத்து வீட்டு ஆட்களிடம் அடிபட்டவரின் நிலைமையை சொல்லிக் கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு நின்றவரின் பின்னே வந்த பெரியவரின் காதில் விழுந்தது, அடிபட்டவர் இறந்த செய்தியே…!
கை, கால்களில் எல்லாம் நடுக்கம் பிறக்க, அவரை காவு வாங்கிய அந்த பள்ளத்தைப் பார்க்க, அது காலை பார்க்கும் போது இருந்ததை போல் இல்லாமல் சீரமைக்கப்பட்டு, 'விபத்துப்பகுதி மெதுவாகச் செல்லவும்' என்று எழுதிய பலகையும் நடப்பட்டு இருந்தது. அதைப் பார்த்தவரின் இதழ்களில் விரக்தி சிரிப்பு…!
கடமையாற்ற வேண்டிய பணியாளர்களின் அலட்சிய போக்கும், அவர்கள் சிதறடித்த நேரமும் ஒரு உயிரை இவ்வுலகை விட்டு பிரித்து, ஒரு குடும்பத்தைச் சிதைத்துவிட்டது. அது தெரியவில்லையா அவர்களுக்கு என்று சாதாரண பிரஜையாய் உள்ளுக்குள் வருத்தப்பட மட்டுமே அவரால் முடிந்தது. மறுபக்கம் இறந்தவரின் குடும்பத்தை நினைத்துப் பார்க்க! மனமோ இரும்பு குண்டை வைத்ததைப் போன்று கணக்கவும் செய்தது.
மறுநாள் இன்னொரு நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்தேறியது. இறந்தவரின் மூத்த மகன், அவர் இறந்த இடத்தில் தன் தந்தையின் "கண்ணீர் அஞ்சலி" போஸ்டரை அங்கு புதிதாய் வைத்த பலகையின் மேல் ஒட்டி விட்டு, "நீ உயிரை விட்டு பல உயிரைக் காப்பாற்றிக் கொடுத்துட்ட நைனா!" என்று சொல்லி கண்களை துடைத்துக் கொண்டே சென்ற காட்சியைப் பார்த்த அனைத்து கண்களும் வேர்க்கத்தான் செய்தது.
சிலரின் நேரச் சிதறல்களால் இங்கு பலரின் உயிர் சிதைந்து உற்றோர்ரை தவிப்பான வாழ்விற்கு தள்ளுவதை தவிர்த்து கடமையாற்றலின் அவசியத்தை உணர்த்தும் ஓர் உண்மை சம்பவம் இது…!
#373
Current Rank
30,840
Points
Reader Points 840
Editor Points : 30,000
17 readers have supported this story
Ratings & Reviews 4.9 (17 Ratings)
rengen33
Very excellent story
riyasoundh45
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points