JUNE 10th - JULY 10th
ஜூலை11, 1939
மோகனூர், நாமக்கல் மாவட்டம்
*மெட்ராஜ் ராஜதானி கலாசாலையில்* கூட வாசிக்கும், காளியண்ண கவுண்டனின் வீட்டின் வெளி முற்றத்தில் அன்றைய சுதேசமித்திரன் பத்திரிக்கையை வைத்துக்கொண்டு, அவனுடன் சுவாரசியமாய் பேசிக்கொண்டு இருந்தார்கள் வரதுவும், கோபாலனும்.
“ மெட்ராஸ் மாகாண முதல்வர் ராஜாஜி அவசரச் சட்டம் கொண்டு வந்துட்டார். எல்லா ஜாதிக்காராளும் கோவிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் பண்ணலாம். அவாளுக்குச் சட்டப்படி அரசாங்கம் பாதுகாப்பு தரும்னு” என்று வரது பத்திரிக்கையில் வந்த செய்தியை வாசித்தான்.
“ மூணு நாளுக்கு முன்னாடி, மதுரையில் வைத்தியநாத ஐயரின் ஆலயப் பிரவேசம் நல்லப்படியாய் முடிந்தது. தேவரோட ஒத்துழைப்பும், ராஜாஜியின் ஆதரவும் இல்லாவிட்டால் இது சாத்தியமே இல்லை. ஐயரோட மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போனவா எல்லாரும் பத்திரமாய் வீடு திரும்பும் வரை நம்ம ஆட்கள் பாதுகாப்பு தரணும்ன்னு வீதி வீதியாய் பிரசங்கம், துண்டுப் பிரசுரம் ன்னு அவர் சொன்னதை வேத வாக்காய் இல்லே அவா மனுஷா எடுத்துண்டுட்டா” கோபாலன் வியப்புடன் சொன்னான்.
“மிஸ்டர் காந்தி இது ஒரு மிராக்கிள்ன்னு சொல்லிட்டார். அஞ்சு சக்கிலி பறையன், ஒரு சாணான் சாதிக்காரனை இல்லே கோவிலுக்கு கூட்டிக்கிட்டுப் போய் அம்மனை தரிசனம் செய்ய வெச்சிருக்கார்? அந்தப் பக்கத்து ஜனங்களுக்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தெய்வத்துக்குச் சமம்” என்றான் காளியண்ணன்.
“அந்த வார்த்தையை சொல்லாதே காளி, ஹரிஜன்னு சொல்ல பழகிக்கோ ”வரது கொஞ்சம் வேகமாய் சொன்னதும், சரி சரி என்றான் காளியண்ணன்.
“கோவில் சிவாச்சாரியார் கர்ப்பக்கிரகத்தை பூட்டி சாவியை எடுத்துண்டு போயிட்டாராம், கோவில் தர்மகர்த்தாதான் பூட்டை ஒடைச்சி, அவாள உள்ளே அழைச்சாராம். இப்ப அம்மனுக்கு தீட்டுப்பட்டுடுத்துன்னு உற்சவ விக்கிரத்தை எடுத்துண்டு போய் அவா எடத்தில் வெச்சி பூஜை பண்ணிண்டு இருக்காளாம்” சுவாரசியமாய் அரசியல் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது, வரதுவின் தங்கை கங்காவின் சின்ன மைத்துனன் சீனு, வரது மாமா வரது மாமா என்று அலறிக்கொண்டே ஓடி வந்து, அவர்கள் முன்னால் அப்படியே விழுந்தான்.
*
கங்கா, கிணற்றில் இருந்து நீரை சேந்தி பெரிய பித்தளை *கங்காளத்தில்* நிறைத்து விட்டு, பாத்திரம் தேய்க்க உட்கார்ந்தாள். இரு கால்களையும் சேர்க்கவே முடியவில்லை. வலி உயிர் போனது. இரண்டு தொடைகளும் எரிந்தன. முதுகும் வலித்தது.
தேய்த்த பாத்திரங்களை எடுத்துக்கொண்டுப் போய் அடுக்களையில் வைத்தாள். பழக்கமில்லாத ஒன்பது கஜம் புடைவை. அது வேறு உடம்பில் நிற்காமல் அவளைப் படுத்தியது.
காலையில் , மாமியார் பாக்யா, இங்கே ஆச்சார அனுஷ்டாங்கள் ஜாஸ்தி. மடியாய் இருக்கணும். ஒன்பது கஜம், கச்சை வைத்து கட்டிக்கோ என்று கண்டிப்பாய் சொல்லி விட்டாள்.
கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆகியிருந்தாலும், ஆறு மாதத்துக்கு முன்பு திரண்ட அவளை நேற்றுத்தான் புக்ககம் கொண்டு விட்டார்கள்.
எல்லா பெண்களும் அவளுக்கு தாம்பத்திய வாழ்க்கையைப் பற்றிப் பாடம் எடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவளுக்குத்தான் புரியவே இல்லை.
ஆண் பெண் உறவு பற்றி விளக்கமாய் சொன்ன அக்காவிடம், சீ என்ன அசிங்கம் என்றதும், இருபத்தி நாலு மணி நேரமும் பூஜை, புனஸ்காரம், ராம ஜபம் என்று இருக்கும் நம்ம அப்பா அம்மாவும் இப்படி செஞ்சதாலதான் நாம எல்லாம் பொறந்தோம் என்றதும், அவளால் நம்பவே முடியவில்லை.
புக்ககம் கிளம்பும் நேரம். அம்மா, கணவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கணும், கத்தி அழுது ஆர்ப்பாடம் செஞ்சி எங்க மானத்தை வாங்கிடாதேன்னு சொன்னதை மட்டும் மனதில் நன்கு வாங்கிக்கொண்டாள்.
முதல் நாளிரவு, பெரியவர்கள் காலில் அவளும் அவள் கணவன் ரகோத்தமனும் நமஸ்காரம் செய்ததும், அழகாய் ஆண் குழந்தை பொறக்கட்டும் என்று எல்லாரும் ஆசிர்வாதித்தார்கள்.
எல்லாம் சொல்லித் தந்து தயார் பண்ணிக்கேளா? என்று மாமியார் கேட்டதற்கு, அவள் அம்மா தலையை அசைப்பதைப் பார்த்தாள்.
ஏகப்பட்ட அலங்காரம் செய்து கங்காவை , கணவன் பக்கத்தில் அமர வைத்து விட்டு அறை கதவைச் சாத்திக்கொண்டு சென்றார்கள் இரு மூத்த சுமங்கலிகள். ஆஜானுபாகுவாய்க் காட்சியளித்த இருபத்தி ஐந்து வயது ரகோத்தமனின் அண்மை அவளுக்கு பயத்தை தந்தது. தம்பதியருக்குப் பன்னிரண்டு வயசு வித்தியாசம் வெகு உத்தமம் என்று எல்லாரும் பாராட்டவே செய்தார்கள்.
தனக்கு நடப்பது என்னவென்று தெரியாமல், கணவன் சொன்னதை செய்துகொண்டு இருந்தாள். அவன் செயல் உயிர் போகும் வலியைத் தந்தாலும், தாய் சொன்ன அறிவுரை நினைவு வந்து, வேதனையிலும், தன் உடலின் மீதான ஒரு வகையான அவமானத்திலும் பெருகும் கண்ணீருடன், கீழ் உதட்டை கடித்துக்கொண்டு மெளனமாய் இருந்தாள் அந்தப் பதிமூன்று வயதுச் சிறுமி.
காலையில் யாரையும் நிமிர்ந்தும் பார்க்காமல் ஸ்நானம் செய்து விட்டு வந்தாள். மாமியார் இட்ட வேலைகளை செய்துகொண்டும் இருந்தாள். காலை பலகாரம் ஆனதும், அப்பாவும் அம்மாவும் நாமக்கல்லுக்குக் கிளம்பினர். சமர்த்தாய் இருந்துக்கோ என்று அம்மா சொன்னதும் தான் அவளுக்கு அழுகை வந்தது.
அப்பா, அம்மாவைப் பார்க்கணும் என்று மனசு கேவியது. வரது அண்ணா மட்டும், அவனோட சர்வகலாசாலையில் வாசித்த, கோபாலன் அகத்தில் ஒரு நாள் தங்கி விட்டு, நாளைக்கு நாமக்கல்லுக்குப் போவதற்கு முன்பு வந்து அவளைப் பார்த்துவிட்டுச் செல்வதாய் சொல்லியிருக்கிறான்.
தலைக்குக் குளித்தது, ஈரம் போகாமல் தலைப்பாரத்தைத் தந்தது. அப்பாவுக்கு, எப்பொழுதும் தன் பொண்ணோட நீண்ட அடர்த்தியான கூந்தலைப்பார்த்து அவ்வளவு பெருமை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர்தான் இரண்டு ஈரிழைத் துண்டுகளை வைத்துக்கொண்டு துவட்டி விடுவார்.
எல்லா வேலைகளையும் செய்ய அம்மா பழக்கியிருந்ததால் கங்காவுக்கு வேலை செய்வது கஷ்டமாய் இல்லை. ஆனால் ராத்திரி நடந்ததை நினைத்துத்தான் அவளுக்கு மிகவும் பயமாய் இருந்தது.
தலையை முண்டனம் செய்துக்கொண்டு மடிப் புடைவையுடன், ஒருவர் மீதும் பட்டுக்கொள்ளாதவாறு பின் முற்றத்தில் மூலையில் ஓரமாய் ராமஜபம் செய்துக்கொண்டு இருந்த அத்தைப் பாட்டி, “ ஒன் மாட்டுப் பொண்ணுக்குத் தல முடி அழகுடி ” என்றார்.
அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, யார் தலையை பின்னி விட்டாலும் அழுதுக்கொண்டேதான் தலைப் பின்னுவார்கள். அது ஏன் என்பது அவருக்கு பதினாலு வயதில் புரிந்தது.
“போதுமே அக்கா! பொம்மை மாதிரி இத்துணூண்டு இருக்கா. ரகுவுக்குப் பொருத்தமாவே இல்லைன்னு எவ்வளவோ சொன்னேன். உங்கண்ணாவும் அப்பாவும் கேக்கலை. அந்த ஜோசியர் குப்பாச்சார், பத்துப் பொருத்தமும் அமோகமாய் பொருந்தியிருக்கு, இந்த சம்மந்தம் அமைஞ்சா, ரகு ஓஹோன்னு இருப்பான்ன்னு சொல்லிட்டார். அவர் சொன்னா இவருக்கு வேத வாக்கு இல்லியோ ”என்று அலுத்துக்கொண்டாள்.
“ எதையாவது சொல்லிண்டு இரு! கொழந்தை எத்தனை சமர்த்தாய் இருக்கா? காலையிலேயே இருந்து எத்தனை வேலை செஞ்சிண்டு இருக்கா” என்றுச் சொல்லிக்கொண்டே உள்ளே வந்த பெரிய மாமியார், “இங்க வாடி குழந்தே, தலையைத் துவட்டி விடுகிறேன் “ என்று அழைத்தார்.
அப்பொழுது வாசல் பக்கம் ஓவென்று சத்தம். அழுகை சத்தமும், கோபமாய் மாமனார் கத்துவதும் கேட்டது. சமையலறையிலிருந்த பெண்களும் என்னவோ ஏதோ என்று ஓடினார்கள்.
என்னவென்று தயக்கத்துடன் கங்கா எட்டிப் பார்க்கும்பொழுது, தலை விரிக்கோலமாய், நெஞ்சில் அடித்துக்கொண்டே ஓடி வந்த பாக்யா, மூலையில் கிடந்த விளக்குமாற்றால் எடுத்து கங்காவை அடிக்க தொடங்கினாள்.
சின்ன மாமனார் முற்றத்திலிருந்த கழுநீர்ப் பானையை எடுத்து அப்படியே அவள் மீது கொட்டினார். செய்வதறியாது கீழே விழுந்து கங்காவை காலால் மிதித்தார்.
தன் மடி ஆச்சாரத்தை மறந்து ஓடி வந்த அத்தை பாட்டி, வேண்டாம்டா வேண்டாம், யாருக்கு என்ன ஆச்சு? இந்தக் கொழந்தையை ஏன் அடிக்கிறேள்” என்று கங்காவை மறைத்துக்கொண்டு கூவினார்.
பெரிய மாமியார், “ காவேரில குளிக்கப் போன ரகு சொழல்ல மாட்டிண்டுட்டான். வண்ணான் பொணமாய் வாசல் திண்ணையில கொண்டு வந்து போட்டு இருக்கான். பெருமாளே” தூணில் மடார் மடார் என்று முட்டிக்கொண்டார். தலையில் இருந்து ரத்தமாய் வடிந்தது.
ஐய்யோ என்று அலறினார் அத்தைபாட்டி
துக்கிரி முண்டே, சண்டாளி, சனியன், இப்படி வந்த நாளே எங் குழந்தையை முழுங்கிடுத்தே! என்று மாமியார் கத்திக்கொண்டே அப்படியே மயங்கி விழுந்தாள்.
“ஐயோ என் பிள்ளை போயிட்டானே. குடும்பத்தோட மூத்த வாரிசை பறிகொடுத்துட்டு நிக்கிறேனே! எனக்கு கொள்ளிப் போட பிள்ளைன்னு நினைச்சா, அவனுக்கு நான் போடும்படி ஆயிடுத்தே! என்று மாமனார் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்.
அவர்களுக்கு சிசுருஷை செய்ய அங்கிருந்தவர்கள் போவதை பார்த்ததும், சட்டென்று மயங்கிக் கிடந்த கங்காவை வாரி தூக்கி எடுத்து கொல்லைப்பக்கம் இருந்த மாட்டு தொழுவத்துக்கு விரைந்தார் அத்தைப் பாட்டி.
*
எதுவும் புரியாமல், சிறுவன் சீனுவைத் தூக்கி உட்கார வைத்தார்கள்.
மாமா மாமா என்று அழுதுகொண்டே எழுந்து உட்கார்ந்த சீனு “ எங்கண்ணா ரகோத்தமன் இன்னைக்கு காலைல காவேரில குளிக்கப் போனான். சுழல்ல மாட்டிண்டு” தேம்பியவன், “ பொணமா அவனைக் கொண்டு வந்து வாசல் திண்ணையில போட்டு இருக்கா” என்றான்.
அப்படியே உட்கார்ந்து விட்டான் வரது.
கோபாலன் நீட்டிய சொம்பில் இருந்த தண்ணியை மளார் மளார் என்று முகத்தில் தெளித்துக்கொண்டு மிச்ச நீரை கட கடவென்று குடித்தான் வரது.
“மாமா! மன்னியை எல்லாரும் அடிக்கிறா ” என்று தேம்பிக்கொண்டே சொன்னான்.
“என்னடா சொல்லரே?” வரது கேட்டதும், “ அதுக்குத்தான் ஓடிவந்தேன். கோபாலன் ஆத்துக்குதான் மொத்தல்ல ஒங்களைத் தேடிண்டு போனேன், அவாத்து மாமிதான், நீங்க இங்கே இருப்பேள்ன்னு சொன்னா. மன்னியை விளக்குமாத்தாலே எங்கம்மா அடி அடின்னு அடிச்சா. நத்தம் சித்தப்பா காலாலே மிதிச்சார். அப்புறம்..” மேலே பேச முடியாமல் தேம்பினான்.
வரது மனதின் படபடப்பை அடக்கினான். அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது, காளியண்ணன், “ வரது! எப்படியாவது தங்கச்சியை கூட்டிக்கிட்டு வந்துடு, என்னோட பிளஷர் காரை எடுத்துக்கிட்டு ,எங்க தென்னந் தோப்பு கிழக்கு வாசல் பக்கமாய் வரேன். அந்த கப்பி சாலை வழியாய் போய் நாமக்கல் ரஸ்தாவைப் பிடிச்சிடலாம். கோபாலா! உனக்குத்தான் சரியாய் வழி தெரியும். அவனோட போ” என்று சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் வேகமாய்ப் போனான்.
சீனுவும், கோபாலனும் கூட வர தங்கை கங்கா வீட்டைப் பார்த்து ஓடினான் வரது.
வீட்டு வாசல் முழுக்கக் கூட்டம். அழுகை சத்தமும் கூக்குரலுமாய் இருந்தது. அவனைப் பார்த்ததும் கையை ஓங்கிக்கொண்டு வந்த கங்காவின் மாமனார், “ மகாபாவிகளா, ஜாதகத்தை மாத்தி எழுதி என் குலத்தையே அழிச்சிட்டேளே! சேலம் குப்பாச்சார் பார்த்து தந்த பொருத்தம் பொய்க்கவே பொய்க்காதுன்னு நம்பினேனே” என்று கத்தியவர் அப்படியே கீழே விழுந்தார்.
கையும் காலும் முகமும் இழுக்க ஆரம்பித்தது. அவரை அப்படியே தூக்கிக்கொண்டு உள்ளே போனார்கள்.
வரது என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே நின்றான். தங்கை கதி என்னவாயிற்றோ என்று நினைத்து வீட்டினுள் போகலாமா என்று யோசித்துக்கொண்டே திண்ணைப் பக்கமாய் போனான்.
ரேழி கதவருகில் ஒரு நார்மடி அம்மாள் நிற்பது தெரிந்தது. அவனைப் பார்த்துக் கையை அசைத்தது அந்த உருவம்.
அவன் கவனித்தது தெரிந்ததும், பின் பக்கம் வரும்படி ஜாடை காட்டியது அந்த உருவம். அவனுக்குப் புரிந்தது. திண்ணையை ஒட்டி தோட்டி வருவதற்காக இருந்த சின்ன சந்து வழியாய், கொல்லைக்குச் சத்தமில்லாமல் ஓடினான் வரது.
அவன் அந்த வழியாக வருவதைப் பார்த்த அத்தைப் பாட்டி, வீட்டிற்குள் சென்றார். கொல்லைப் பக்கம் வந்தவனைப் பார்த்து, மாட்டுத் தொழுவத்தை ஜாடை காட்டினாள்.
உள்ளே கோணியால் மூடியிருந்த தங்கையை தூக்கியதும் அவள் முணங்கியதைக் கேட்டு அவள் உயிரோடு இருப்பது தெரிந்தது.
அப்படியே தூக்கிக்கொண்டு, பின் பக்கம் இருந்த வாய்க்கால் வழியாய் ஓடினான். எந்த பக்கம் போவது என்று யோசிக்கும்பொழுது, தூரத்தில் நின்றிருந்த கோபாலன் மேல் துண்டை ஆட்டியவாறு இப்படி வா என்று சைகை செய்தான்.
*
வீடு மிக அமைதியாய் இருந்தது. இரண்டு வயதுக் குழந்தை லச்சுவுக்கும், நான்கு வயது புட்டனுக்கும் கூட ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறதென்று புரிந்து சத்தம் போடாமல் இருந்தார்கள்.
கண்களை மூடிக்கொண்டு தூணில் சாய்ந்திருந்த வரது காதில், வாசல் பக்கம் தந்தையின் பெயர் சொல்லி அழைக்கும் சத்தம் கேட்டது.
தந்தை வாங்கோ என்று அழைப்பது கேட்டு அவனும் எழுந்து போனான்.
அக்கிரஹாரத்துப் பெரியவர்கள் நாலைந்துபேர்கள் திண்ணையில் உட்காருவதைப் பார்த்தான்.
“நேத்து மோகனூர்ல எல்லா காரியங்களும் ஆயிடுத்து. பாவம் ரகோத்தமன் தோப்பனாருக்கு பக்க வாதம் வந்து படுத்த படுக்கை ஆயிட்டார். அவர் தம்பி ரங்கராஜன் தான் எல்லா காரியமும் செஞ்சான்” கோண்டு சொன்னதும், ஹூம் என்று பெருமூச்சு விட்டார் நாராயணன்.
“நம்ம காரியம் ஆரம்பிக்கணுமே! குழந்தைக்கு ஒடம்பு சொஸ்தமாயிடுத்தா”
நம்ம காரியம்ன்னா?” வரது கோபமாய்க் கேட்டான்.
“வரது, நாங்க பெரியவா பேசிண்டு இருக்கோம். நீ பேசாதே” என்றவர், ”இதோ பாரு. ஊரு ஒலகத்துக்கு பயந்துதான் ஆகணும். என்ன செய்ய? அவளோட தலைவிதி அனுபவிச்சித்தான் ஆகணும்” என்றார் நாராயணன் விரக்தியாய்.
“என்னை எல்லாரும் க்ஷமிக்கணும்” என்று கையெடுத்து வணங்கியவன்,” தலைவிதியாவது ஒன்னாவது. எல்லாம் மனுஷா உண்டாக்கியது. காலம் மாறிண்டு இருக்கு. பால்ய விவாகம் , பால்ய வைதவ்யம் வேண்டாம்ன்னு எல்லாருமே சொல்ல ஆரம்பிச்சாச்சு. பால்ய விவாகம் கூடாதுன்னு ஷார்த்தா சட்டம் போட்டு பத்து வருஷத்துக்கு மேலே ஆச்சு. என் சேலம் ஷட்டகரோட சொந்தம், அந்த பொண்ணுக்கு பதினாறு வயசு இருக்கும். பாம்பு கொத்திப் புருஷன் போய்ட்டான். வீட்டு மனுஷா பிடிவாதமா, இந்த கோலமெல்லாம் வேண்டாம்ன்னு, அவளைப் படிக்க வைக்கப் பட்டணத்துக்கு அனுப்பிட்டா”
“இது கிராமம் , அதெல்லாம் நடக்காது” சுப்பய்யரின் குரல் கண்டிப்புடன் ஒலித்தது.
“தோ பாருங்கோ, வர சித்திரையில என் படிப்பும் முடியறது. என் மார்க்கைப் பார்த்து, உபாத்தியாயர் உத்தியோகமும் நிச்சயம்ன்னு எங்க பிரின்சிபாலே சொல்லிட்டார். நான் கங்காவை மட்ராஸ்க்கு அழைச்சிப் போயி படிக்க வைக்கிறேன். போதும்பா, குழந்தை என்ன பாவம் பண்ணித்து? இந்த வயசில் இருந்து இந்த கோலம் வேண்டாம்பா” என்றான் வரது.
“தோ பாரு வரது. அவ எனக்கும் குழந்தைதான். ஆனா நமக்குன்னு சாஸ்திரம், சம்பிரதாயம்ன்னு இருக்கு. அதை என்னால மீற முடியாது. நீ உன் ஜோலியப் பார்த்துண்டு கிளம்பு” என்றார் தந்தை உறுதியாய்.
ஊராருக்கு பயந்துண்டு, என் தங்கை வாழ்க்கையை நாசமாக்க நா விடமாட்டேன் என்றான் கோபமாய்.
நாணா என்று ரேழி இருட்டில் இருந்து தாய் அழைக்கும் குரல் கேட்டது.
“தோ நாராயணின் தாயாரே வந்துட்டார். இவாளுக்கு எடுத்துச் சொல்லட்டும். தபஸ்வி மாதிரின்னா, பதினாலு வயசில் இருந்து வாழ்ந்துண்டு இருக்காளே” பக்தியுடன் குப்புசாமி ஐயர் சொன்னார்.
“தபஸ்வியா? அதெல்லாம் நான் என்னத்தக் கண்டேன். பதினஞ்சு வயசில் , அலங்கோலம் பண்ணி மூலையில் ஒக்காத்தி வெச்சிட்டா. வயத்துல நாணா மூணு மாசம். எனக்கு என்ன நடந்தது, நடக்கறது ன்னு இன்னி வரை புரியாமலேயே என் ஆயுசு போயிடுத்து. என்னை மாதிரி ஒன் கொழந்தையை அலங்கோலம் ஆக்கிடாதேடா நாணா. வரது சொல்கிறா மாதிரி, பட்டணத்துக்கு அழைச்சிண்டு போயி படிக்க வை” இருட்டிலிருந்து அவர் குரல் தெளிவாய் சொன்னது.
“என்னமா சொல்லரே” என்று சிறிது தடுமாற்றத்துடன் கேட்டார்.
“வேண்டாம்டா, அவ்வளவுதான் சொல்வேன். அப்படி இவா சொல்கிறா மாதிரி, சாஸ்திரம் சம்பிரதாயம்தான் பெருசுன்னா, மருத்துவச்சிகிட்டக் கேட்டு ஏதாவது மருந்து வாங்கிக்கொடுத்துடு. ஓரேயடியாய் போய் சேர்ந்துடட்டும். இப்படி நாளும் அணு அணுவாய் சித்திரவதை வேண்டாம்” என்றார் உறுதியான குரலில்.
பாட்டி என்று அப்படியே நெடுஞ்சாணாய் விழுந்து நமஸ்கரித்தான் வரது.
நாராயணன் ஒன்றும் சொல்ல தோன்றாமல், வந்தவர்களை கையெடுத்து வணங்கிவிட்டு, உள்ளே சென்றார்.
“ஹூம் அந்தக்காலத்துல என் அத்தை வகையறால இப்படித்தான் பொண்ணுக்கு தலையை மழிக்க மாட்டேன்னு சொன்னாதாலே அந்த குடும்பத்தையே ஒத்துக்கி வெச்சிட்டா. ஊரும் மனுஷாலும் நன்னா இருக்க வேண்டாமோ? மழைப் பெஞ்சாத்தானே பயிர் வெளையும்? ராத்திரியோட ராத்திரியா ஊரை விட்டுப் போனவா கதி என்ன ஆச்சுன்னு இன்னி வரை தெரியலே? ஊர் கட்டுப்பாட்டுக்கு எல்லாரும் பயந்தா. அது ஒரு காலம்!
“வரது பட்டணத்துக்கு அழைச்சிண்டுப் போயிடரேன்ன்னு சொல்லரான். அந்த கிழவியும் அதுக்கு ஒத்து ஊதரது”
கலிக்காலம்! வேற என்ன சொல்ல என்று முணங்கியபடி கூட்டம் எழுந்துபோனது.
*
தாயின் மடியில் படுத்திருந்தாள் கங்கா.
கங்கா , எப்படிமா இருக்கா “ என்று வரது கேட்டதும், பொங்கிய கண்ணீரைத் துடைத்தவாறு, இருக்கா என்றவர்,”அந்த நகமம் பிராமணன் அப்படிக் காலால் மிதிச்சி இருக்கான். பாவி நன்னா இருப்பானா? வைத்தியர் சின்ன வயசுதான் சரியாயிடும்ன்னு சொல்லியிருக்கார். தெனமும் உளுத்தங்கஞ்சி கொடுக்க சொல்லியிருக்கார். வள்ளி தெனமும் தைலம் போட்டு நீவி விடரா. ஆபத்துக்குப் பாவமில்லைன்னு ஒங்கப்பா ஒன்னும் சொல்லை. எப்படியோ குழந்தை எழுந்து ஒக்காந்து, நடமாடிண்டு இருந்தா போதும். நாமகிரி அம்மனைத்தான் வேண்டிண்டு இருக்கேன்.” என்றார் வரதுவின் தாயார்.
“அந்த அத்தை பாட்டி மட்டும் இவளக் காப்பாத்தாமப் போயிருந்தா, கொன்னு குழி தோண்டிப் பொதச்சிருப்பா. அப்புறம் பாட்டி சொன்னது கேட்டுதா. அப்பா, அவர் தாயின் பேச்சை மீறவே மாட்டார். பாட்டி இப்படிப் பேசுவான்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை”
“கேட்டேன் கேட்டேன்! பாவம், எல்லா கொடுமையையும் அனுபவிச்சவர் இல்லியா? என்னமோ நீ சொன்னதைக் கேட்டதும் மனசுக்கு நிம்மதியா இருந்தாலும், நடக்குமான்னு பயமாகவும் இருந்தது. இனி அத்தை பார்த்துப்பார். அவர் பேச்சுக்கு எல்லாருமே கட்டுப்படுவா!” தாயின் குரலில் ஒரு நிம்மதி.
அம்மா! பட்டணத்தில் * சிஸ்டர் சுப்பு லஷ்மி*ன்னு, ஒரு ஸ்மார்த்தா அம்மாள் விதந்துவான பொண் குழந்தைகளுக்கேன்னு ஒரு ஸ்கூல் நடத்தரா. சாஸ்திர சம்பிரதாயத்துக்கு விரோதம்ன்னு கொஞ்ச பேர் எதிர்த்தாலும், நாளுக்கு நாள் சாதாரண ஜனங்கள்ல இருந்து பெரிய மனுஷாள் வரை அவருக்கு ஆதரவு பெருகிண்டு இருக்கு. அங்க நம்ம கங்காவை சேர்த்து நன்னா வாசிக்க வைக்கணும். இனி கங்கா என் பொறுப்பு. இது சத்தியம்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அமைதியாய் உட்கார்ந்திருந்த அவன் மனைவி சகுந்தலா, ஆமாம்மா. இனி கங்கா எங்களோட மூத்த பொண்ணு என்று சொன்னாள்.
இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த கங்கா,” அப்ப பாட்டி மாதிரி நான் இருக்க வேண்டாமா” கங்கா கேட்டது, “வேண்டாம்டி கொழந்தே. மெட்ராஸ்ல பள்ளிக்கூடம் போவியாம், நன்னா படிச்சி, பெரிய வாத்திச்சி வேலைக்கு போய் சந்தோஷமாய் இருப்பியாய்” வரதுச் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது ,அப்படியே நகர்ந்து அவன் மடியில் தலையை வைத்துக்கொண்டு,” லச்சுவுக்கு பாடுவியே கிளி கிளின்னு ஒரு பாட்டு, அதைப் பாடேன்” என்று பலவீனமான குரலில் கேட்டாள்.
என்ன பாட்டுடி
அதுதான் ஆனை மிதிச்சி செத்துப் போயிட்டார்ன்னு சொன்னியே அவர் பாட்டு. லச்சுவையும், புட்டனையும் தூங்க வைக்க எப்போதும் பாடுவியே?
மெல்ல தங்கையின் தலையை வருடியபடி, சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்று பாட ஆரம்பித்தான்.
“ சகுந்தலா! நாழியாறது. கொழந்தைகளையும் அழைச்சிண்டு சாப்பிடவா! கிருஷ்ணா ராமா” என்று சொல்லிகொண்டே மருமகளுடன் அறையை விட்டு வெளியேறினாள் அவர்களின் தாய்.
பாடிக்கொண்டு இருந்தவன், “ உன் கண்ணில் நீர் வழிந்தால் ! “ என்ற வரிகளை மேற்க்கொண்டு பாட முடியாமல் அவன் தொண்டை அடைத்தது. கண்ணில் இருந்து நீர் வழிந்தது.
பல நாட்களுக்கு பிறகு கிடைத்த நிம்மதியிலும், பாதுகாப்பிலும் குழந்தை கங்கா அமைதியான தூக்கத்தில் ஆழ்ந்தாள்.
****
*மெட்ராஸ் ராஜதானி கலா சாலை- சென்னை பிரசிடென்சி காலேஜ்
*மெட்ராஸ் ராஜதானி/ மாகாணம்- ஆந்திரா, கர்நாடக,கேரளாவின் சில பகுதிகள் இணைந்த பகுதி.
மதுரை வைத்தியநாத ஐயர், 8 ஜூலை, 1939ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு ஆலயபிரவேசம் நடத்திக் காட்டியவர்.
“மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சர் ராஜாஜி, ஜூலை 11, 1939, அனைத்து மக்களும் கோவில்களில் நுழைய அனுமதிக்கும் ஆலய பிரவேச அவசரச் சட்டத்தை அமல்படுத்தினார்.
“கங்காளம்- அண்டா
*சிஸ்டர் சுப்புலக்ஷ்மி* சென்னையில் இளம் விதவைகளுக்கான தங்கிப் படிக்கும் பள்ளியை ஆரம்பித்தவர். சென்னை ஐஸ் அவுஸ் இடத்தில் தங்க இடமும்,கல்வியும், லேடிவெலிங்டன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, சாரதா வித்தியாலயா போன்றவை அவரால் ஆரம்பிக்கப்பட்டது. 1911ல் தென்னகத்தின் முதல் பட்டதாரி பெண். அன்றைய மெட்ராஸ் ராஜதானியில் ஐந்து முதல் பதினைந்து வரையான வயதுகளில் இருந்த இளம் விதவைகளின் எண்ணிக்கை சுமார் இருபது ஆயிரம் .
#242
Current Rank
53,477
Points
Reader Points 1,810
Editor Points : 51,667
37 readers have supported this story
Ratings & Reviews 4.9 (37 Ratings)
jayanthinarayanan1967
shruthymariappan
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points