சதுரங்கம் - விஜி ஆர் கிருஷ்ணன்

vijiradha.pmv
த்ரில்லர்
4.6 out of 5 (27 Ratings)
Share this story

காலை ஒன்பது மணி இருக்கும், பள்ளியின் மெயின் கேட் வழியே

ரோகிணி நுழைவதை பார்த்த அடுத்த நிமிடம் பள்ளி மைதானத்தில் விளையாடி கொண்டும் பேசிக்கொண்டும் இருந்த மாணவர்கள் கப், சிப் என பிரேயர் இடத்தில் கூட, ரோகிணி முதல்வர் என்று பொறிக்கப்பட்ட அறையினுள் நுழைந்தாள்.

முப்பது வயது இளமையான ரோகிணியின் உழைப்பில் உருவானது இந்த விவேகானந்தர் பள்ளி. இருநூற்று ஐம்பது மாணவர்கள் பயிலும் பள்ளி இது.

ஒரு பத்து மணி அளவில் அலுவலக வாசலில் ஒரு பெண்மணி ஒரு குழந்தையுடன் நிற்க, ரோகிணி உள்ளே அழைத்து அமர சொன்னாள்.

“என்னம்மா, எங்கேர்ந்து வரீங்க?”

“குழந்தையை ஸ்கூல்ல சேக்கணுமா?”

“அது வந்து, ஆமா யூ. கே. ஜி ல சேக்கணும்.”

அந்த பெண் தலையை நிமிர்த்தாமல், கிணற்றினுள் இருந்து பேசுவது போல் மிகவும் நடுங்கிய குரலில் சொல்ல,

“தாயம்மா, இவங்க குடிக்க கொஞ்சம் தண்ணி குடுங்க, அப்படியே இந்த பாப்பாவ விளையாட்டு அறைக்கு கூட்டிட்டு போய் கொஞ்சம் விளையாட வைங்க...”

“சரிம்மா, பயமும், பதட்டமும் ஏன்? குழந்தைக்கு அட்மிஷன் தானே வேணும்?”

“இல்ல, அது வந்து கௌரி யோட பர்த், செர்டிபிகேட், டிசி, எதுவுமே என் கிட்ட இல்ல.”

“ஓகே, இவ்ளோ தானே பிறந்த தேதி கொடும்மா, மறுபடியும் அப்ளை பண்ணா போச்சு,”

அவள் கண்களில் சிறிய நம்பிக்கை கீற்று,

“அப்படியா மேடம்?”

“ஆமா, இன்னைக்கே, அட்மிஷன் போடலாம், ஆபீஸ்ல போய் பார்ம் ஃபில்லப் செஞ்சி கொடுங்க, பணம் கட்ட ஒரு வாரம் டைம் எடுத்துக்கோங்க.” என்றாள் ரோகிணி.

“இல்ல மேடம் பணம் இன்னைக்கே கட்டிடுவேன், ஆனா ஒரு பிரச்சனை.”

“சொல்லுங்க...”

“இல்ல கௌரிய வெளியே விடாம பாத்துக்கணும், யார் வந்து கூப்பிட்டாலும் அனுப்ப கூடாது.”

“ஹூம், இது மாதிரி நிறைய பேரெண்ட்ஸ் வராங்க, ஏன் உங்க வீட்டுக்காரரோட சண்டை போட்டு வந்துடீங்களா, அவங்க குழந்தைய கேக்கறாங்களா?”

“இல்ல, எங்க வீட்டுக்காரர கொலை பண்ணிட்டாங்க, அதான் இவளையும் ஏதாச்சும் செஞ்சிடுவாங்களோன்னு.”

“ஓ மை காட், இதென்ன கொடுமை ஏம்மா நீயே சின்ன பொண்ணா தான் இருக்க, உனக்கு எத்தனை வயசு?”

“இருபது”

“வாட்?... ஓகே இப்போ நான் கிளாஸ் விசிட் போகணும், பொண்ண கிளாஸ்ல விட்டுட்டு வெயிட் பண்ணுங்க, லஞ்ச் முடிஞ்சதும் பேசுவோம். உங்க கதையை சொல்லணும்னு நினச்சா சொல்லலாம், மத்தபடி என்ன மீறி இங்க இந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராது. தாயம்மா, இவங்களுக்கு யூ. கே. ஜி கிளாஸ் காட்டுங்க...” என்ற ரோகிணி, தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

அந்த பெண்ணின் கண்களில் இருந்த ஏதோ ஒன்று, அவளுக்கு உதவுமாறு சொல்லுதே, ம் என்ற ஆழ்ந்த பெருமூச்சுடன் யோசித்தாள் ரோகிணி.

இந்த பள்ளி அவளுக்கு ஒரு குடும்பம் போல், பெரும்பாலும் பெண்கள் தங்கள் பிரச்சனை களை, ரோகிணியிடம் சொல்ல, அவளும் பள்ளி நேரம் போக மீதி நேரம் பெண்களுக்காக செலவிட்டாள்.

காலை வேலைகள் முடிந்ததும், கௌரியின் தாயை அழைத்து வர சொன்னாள்.

“உங்க பேரு..”

“மீனா, மேடம்”

“சரி மீனா சொல்லுங்க, உங்களுக்கும், கௌரி க்கும் என்ன பிரச்சனை?”

“அது வந்து, வந்து...” கொஞ்ச நேரம் மென்று விழுங்கி பின் தன் கதையை சொன்னாள்.

-----------------

மீனா ரொம்ப அழகு, பணக்கார வீட்டு ஒரே செல்லபெண், அம்மாவும், அப்பாவும் மலேசியாவில், மீனா காரைக்குடியில் இருந்த தன் பாட்டி அலமேலு வீட்டில் இருந்து ஒரு மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தாள்.

பள்ளி சென்று வரும் வழியில் குமார் தன் நண்பர்களுடன் ஒரு டீ கடையில் அரட்டை அடிப்பான்

முழங்கால் வரை பிரவுன் கலர் யூனிபார்ம் அணிந்து, ரெட்டை பின்னல் போட்டு, புது நிறத்தில், தினமும் பள்ளி செல்லும் மீனா, குமார் கண்ணில் பட, அவளை காதலிக்க ஆரம்பித்தான்.

முதலில் பயந்த மீனாவுக்கும், குமார் தன்னிடம் பேசுவது பிடிக்க, ஸ்கூல் கட் அடித்து விட்டு அடிக்கடி அவனுடன் சுத்த ஆரம்பித்தாள். அலமேலு காதுக்கு விஷயம் தெரிய வந்தது.

“ஏண்டா, பரமசிவம் இனிமே உம்பொண்ண என்னால கட்டி காக்க முடியாது, நான் இன்னும் சின்ன புள்ளனு நினைச்சி சோறு ஊட்டி, சீராட்டி வளத்துனு, வந்தா, பள்ளிக்கூடம் போவாம ஊரு பொறுக்குறா, பச்ச புள்ளய மயக்குன அந்த படுபாவி நாசமா போவ...” என்று போனில் கத்திக்கொண்டிருந்தாள்.

மறுநாள் தோழியிடம் மீனா ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினாள்.

“குமார் எங்க பாட்டி இனிமே ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க, அவங்களுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சு, எங்க அப்பா, அம்மா கிட்ட போன் பண்ணி சொல்லிட்டாங்க, அவங்க வந்து என்ன மலேசியாவுக்கு கூட்டிட்டு போய்ட்டா, அப்பறம் உன்ன பாக்கவே முடியாது, அதுக்குள்ள என்ன எங்கயாவது கூட்டிட்டு போ, நாளைக்கு ராத்திரி நான் நம்ம தெரு முக்குல நிப்பேன்”

இப்படிக்கு மீனா.

குமாருக்கு ஒரு இருவது வயது தான் இருக்கும், இவ்வளவு பெரிய முடிவு எடுக்க அவனுக்கு தைரியம் இல்லை.

அவன் நண்பர்கள் அவனுக்கு ஒரு ஐயாயிரம் ருபாய் புரட்டி கொடுத்து, தைரியம் சொல்ல, ஒரு ஆட்டோவில் வந்து மீனாவை அழைத்து கொண்டு கோயம்பத்தூர் சென்று விட்டான்.

அங்கே இருந்த ஒரு நண்பன் மூலமாக ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்தான். ஒரு கோவிலில் 14 வயசு மீனாவுக்கும், இருபது வயசு குமாருக்கும் பொம்மை கல்யாணம் போல் ஒன்று நடந்தது.

மீனாவின் வீட்டில் ஆட்கள் குவிய

“ஆச்சி, இப்பவே போய் அந்த பயல கண்ட துண்டமா வெட்டி போட்டு, நம்ம புள்ளய தூக்கியாறோம்.”

“ஆங், தூக்கியாந்து அவள நடுவீட்லவச்சி கொஞ்ச சொல்றியளா?”

“வெட்டுனா ரெண்டு பேரையும் வெட்டிட்டு வாங்கடா.”

மீனாவின் அப்பா போன் செய்து “ஆத்தா அவ இந்த வயசுல இப்படி தறி கெட்டு போய்ட்டா, இனி வந்தா வீட்ல சேக்காத, பட்டினி கெடந்து சாவட்டும், நம்ம எதுக்கு கொல்லனும்?”

“அதுவும் சரி தான், டேய் வுடுங்கடா, எங்க போவா, அவன் விட்டுட்டு போனா இங்கன தான வருவா, அன்னைக்கு நானே அவ ஓடுன காலவெட்டறேன்.”

குமார் எப்படியோ சம்பாதித்து மீனாவை நல்லாவே பாத்துக்கிட்டான், ஒரு வருசத்துல ஒரு அழகான பெண் குழந்தையும் பிறக்க அவளுக்கு கௌரி என்று பெயர் வைத்து ஆசையாய் வளர்த்தார்கள், கௌரி LKG படித்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் காலை குமார் வழக்கமாக செல்லும் ஒரு டீ கடையில் டீ குடித்து விட்டு திரும்பும் போது, யாரென்று தெரியாத ஒருவன் குமார் வயிற்றில் கத்தியால் குத்த, அவன் அந்த இடத்திலேயே இறந்து விட்டான்.

மீனா அதிர்ச்சியில் உறைந்தாள்.

பக்கத்தில் உள்ளவர்கள் முதல் நாள் வந்து உதவியதோடு சரி,

“ஏம்மா மீனா, அந்த குமார் ஏதோ கள்ள கடத்தல் கும்பல் கிட்ட வேல பாத்தான்னு பேசிக்குறாங்க”

“இல்லை ங்க அவர் ஒரு கடையில கணக்கு எழுதற வேலைதான் பாத்தாரு.”

“சரி, எது எப்படியோ நீயே சின்ன புள்ளையாட்டம் இருக்க, உனக்கு ஒரு புள்ள, இந்த ஊர்ல உங்க சாதி, சனம் யாரும் இல்ல, ஏன் கொன்னாங்க, யாரு கொன்னாங்க, எதுக்கு கொன்னாங்கன்னு கூட தெரியல, போலீஸ் வேற தினமும் வருது, விசாரிக்க நீ உடனே உன் புள்ளய கூட்டிட்டு உங்க ஊருக்கு போயிடும்மா, அதான் நல்லது நாங்க எத்தனை நாளைக்கு உன்ன காப்பாத்த முடியும் சொல்லு.”

மீனாவும், கௌரியும் பாட்டி வீட்டு கதவை தட்ட, பாட்டி ஊரை கூப்பிட்டு,

“இவள முதல்ல இங்கேர்ந்து போ சொல்லுங்க.”

“பாவம், வூட்டுக்காரர கொன்னுப்புட்டாங்கனு பச்ச புள்ளையோட கண்கலங்கி நிக்குது, மன்னிச்சி விடுங்க ஆச்சி.”

“சரி நீங்க எல்லாம் சொல்றதால, இவள நம்ம பெரிய வளவுல இருக்க வூட்ல இருக்க, சொல்லுங்க, அங்கன இருக்க அஞ்சு வீட்டு வாடகையையும் வாங்கி, வயித்த கழுவட்டும் எக்காரணம் கொண்டு இந்த வாசப்படி ஏறக்கூடாது, ஆமா சொல்லிப்புட்டேன்.” என்ற பாட்டியின் கருணையில் மீனாவும், கௌரியும் அங்கே குடியேறி, கௌரியை பள்ளியில் சேர்க்க வந்தாள் மீனா.

-------------

ரோகிணி, மீனா சொன்ன கதையை கேட்டு அதிர்ச்சி ஆனாள்.

“அப்போ உங்க வீட்டுக்காரர யாரு, எதுக்கு கொன்னாங்க மீனா?”

“தெரியல மேடம்...”

“ஒரு வேளை உங்க பாட்டி?”

“பாட்டின்னா நாங்க ஓடிப்போன உடனே கொன்னிருப்பாங்களே.”

“ஒரு வேளை உங்க அப்பா, எங்க அப்பா, எங்க அம்மா இறந்த உடனே மலேசியால இருக்க ஒருத்தவங்கள கல்யாணம் பண்ணிகிட்டாரு, என்ன பாக்க கூட வர்ரதில்ல, அதான் நான் எங்க பாட்டி வீட்ல வளந்தேன்.”

“ஓ, அப்போ உங்க வீட்டுக்காரர யார் கொன்னாங்கனு தெரியல, அவங்களால கௌரிக்கும் ஆபத்து வரும்னு நினைக்கிறீங்களா?”

“அவருக்கு எதிரிங்கனு யாருமே இல்ல, அவரு நேரா கடைக்கு போவாரு, அந்த ஜவுளிக்கடையோட வரவு, செலவு இவரு தான் பாத்தாரு ராத்திரி ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்துடுவாரு மேடம்.”

“கடைல ஏதாவது பணம் வாங்கி பிரச்சனை ஆயிடுச்சோ?”

“இல்ல, கடைலேர்ந்து வந்து, எனக்கும் ஆறுதல் சொல்லிட்டு ஒரு முப்பதாயிரம் கொடுத்துட்டு போனாங்களே.”

ரோகிணி பெண்களுக்கு சாதாரண பிரச்சனை என்றாலே தீர்த்து வைக்காமல் விட மாட்டாள், இந்த பிரச்சனையை எப்படியும் தீர்க்க வேண்டுமே...

“சரி மீனா, ஜாக்கிரதையா கௌரியை கூட்டிட்டு போங்க, நாளைக்கு பேசுவோம்.”

மாலை பள்ளியில் இருந்து வந்து புடவை கூட மாற்றாமல் யோசனையில் இருந்தாள் ரோகிணி.

‘கொலை செய்தது யாராக இருக்கும்.’

போன் கொஞ்ச நேரம் அடித்து ஓய்ந்தது, காலர் ஐ டி பார்த்து இவளே அழைக்க,

“என்ன ரோகிணி மேடம் ரொம்ப பிஸியா, போன் கூட எடுக்காம?”

“ஓ, சாரி இளங்கோ சார், ஒரு பிரச்சனை, உங்க ஞாபகமே வரல, நல்ல வேளை கால் பண்ணீங்க,”

“சொல்லுங்க மேடம்… தினம் ஒரு பிரச்சனை யை, சந்திக்காம தூக்கம் வராது உங்களுக்கு...”

“சதுரங்க ஆட்டம் மாதிரி இருக்கு இளங்கோ சார். என் மூளைக்கு எட்டல, உங்க போலீஸ் மூளைக்கு தான் தெரியும் இதான் ஸ்டோரி கொலைகாரன் யார்னு தெரிஞ்சாதான் என் ஸ்டுடென்ட்ட காப்பாத்த முடியும்.”

“ஓகே ஒரு நாள் டைம் கொடுங்க, நான் நியூஸ் கேதர் பண்ணி சொல்றேன்.”

மறுநாள் பள்ளி அலுவலகத்தில் ரோகிணிக்கு முன்பாக சென்று காத்திருந்தான் இளங்கோ.

“ரோகிணி, வாங்க, வாங்க குட் மார்னிங், போன் பண்ணி இருக்கலாமே, ஏதாவது தகவல் தெரிஞ்சுதா?”

“ஸிம்பிள் லாஜிக், இது சதுரங்க ஆட்டம் இல்ல, ஆடு புலி ஆட்டம்.”

“நீங்க சொல்ற மீனாவோட பாட்டிக்கு சொத்து, வீடு, வாசல்னு கோடி கணக்கா தேறும். அந்த சொத்து மகனுக்கு தான் சட்டப்படி சேரனும், ஆனா அந்த பையன் மலேசியா பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்ட கோவத்துல எல்லா சொத்தையும் பேத்தி மீனா பேர்ல எழுதி வச்சிட்டாங்க, அது அந்த மலேசியன் லேடிக்கு தெரிஞ்சி போச்சு, அதுனால மீனா இருக்கற இடத்தை ஆள் வச்சி ஒரு வருசமா தேடி முதல்ல குமார கொன்னுட்டாங்க, அடுத்து மீனாவ கொல்றதுதான் பிளான், மீனா ஒரு வாரத்துல தப்பிச்சி இங்க வந்துட்டாங்க.”

“வாவ், எப்படி ஒரு நாள்ல இவ்ளோ பெரிய கேஸ கண்டு பிடிச்சீங்க.”

“என்னோட கணக்கு இது, கோயம்பத்தூர் ஸ்டேஷன்ல மீதி டீடெயில்ஸ் கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன்.”

“ம், இனிமே மீனா வையும், கௌரியையும் எப்படி காப்பாத்தறது, அதையும் நீங்களே சொல்லிடுங்க.”

“இன்னும் ஒரு வாரத்துல அந்த கொலைகாரன் கிட்ட வாக்குமூலம் வாங்கி, மலேசியா போலீஸ்கிட்ட சொல்லி அந்த அம்மாவ அரெஸ்ட் பண்ணிடுவோம், டோன்ட் ஒர்ரி.”

கண்களில் கண்ணீரோடு கை எடுத்து கும்பிட்டாள், ரோகிணி

“எல்லாரும் ஸ்கூல்ல பீஸ் மட்டும் கலக்ட் பண்ணுவாங்கனு கேள்வி பட்ருக்கேன், ஆனா இப்படி பிரச்சனை களை கலெக்ட் பண்றது ரோகிணி மேடம் மட்டும் தான்.”

“சிரித்தாள், இந்த ஸ்கூல் என்னோட கனவு, என்னோட குடும்பம், இங்க வர மாணவர்கள், பெற்றோர் கள் கவலை யை தீக்கறது என்னோட கடமை இளங்கோ சார், தேங்க்யூ.”

Stories you will love

X
Please Wait ...