JUNE 10th - JULY 10th
களைத்த உயிர்களைக் கனிவுடன் தட்டித் தூங்கவைக்கும் தாயான இரவு.
இருளின் அமைதியைக் கிழித்துக் கொண்டு கைபேசி அலறியது.
"ஹலோ!" என்றாள் தன்யா எரிச்சலுடன்.
“சதுரா டிடக்டிவ் ஏஜன்சி? என் பெயர் ஹர்ஷிதா. மதர் தெரஸா ஹாஸ்டல் ஃபார் விமன், அடையாறிலிருந்து பேசறேன். ஒரு குற்றத்தை ரிப்போர்ட் செய்யணும்" குரலில் படிப்பு இருந்தது, அவசரம் இருந்தது, கோபம் இருந்தது. கூடவே... பயம்?
"கோ அஹெட்" என்றாள் தன்யா. சொல்லும்போதே, படாரென்ற சப்தத்தோடு தொடர்பு அறுந்தது.
"ஹலோ? ஹலோ?" கூவிப் பார்த்துவிட்டு, மீண்டும் அழைக்கலாமா என்று தன்யா கொட்டாவிகளுக்கிடையில் யோசித்துக் கொண்டிருந்தபோது, கைபேசி மறுபடி அழைத்தது.
"யெஸ்? ஹர்ஷிதா?"
"ஹர்ஷிதாதான் பேசறேன். கொஞ்சம் உடனே கிளம்பி வரமுடியுமா?"
"ஹலோ, யார் நீங்க? எதுக்காக இந்த அர்த்தராத்திரியில் கூப்பிடறீங்க? ஏதோ குற்றத்தை ரிப்போர்ட் பண்ணணும்னு சொன்னீங்க?" என்று கேட்டாள் தன்யா.
"ஆமா. நான் செய்துட்ட குற்றம். அதை உங்ககிட்டச் சொல்லத் தைரியமில்லை. லெட்டரா எழுதிவெச்சிருக்கேன். இப்போ இன்னொரு குற்றம் செய்யப் போறேன். தற்கொலை!" என்ற ஹர்ஷிதாவின் பதிலில் பதட்டமானாள் தன்யா.
"ஹலோ? ஹர்ஷிதா? அவசரப்படாதீங்க. நான் உடனே கிளம்பிவரேன். எதுவானாலும் பேசிக்கலாம். ஹலோ! ஹலோ ..." மறுமுனை வைக்கப்பட்டுவிட்டதை உணர்ந்து பதட்டமானாள் தன்யா. வேகவேகமாகத் தர்ஷினியை எழுப்பி, ஸ்கூட்டியில் ஆரோகணித்தபோது சில நிமிடங்களே கடந்திருந்தன.
(ஒரு மினி அறிமுகம். தன்யா-தர்ஷினி இருவரும் கஸின்ஸ். சதுரா துப்பறியும் நிறுவனம் என்ற அமைப்பை அவர்கள் சகோதரன் தர்மாவோடு சேர்ந்து நடத்தி வருகிறார்கள்.)
"போலீஸ்க்குத் தகவல் கொடுத்திடுவோமா?" என்றாள் தர்ஷினி, கூகுல் மேப்ஸில் மதர் தெரஸா ஹாஸ்டலைத் தேடியவாறே.
"இது ஏதாவது ப்ராங்க்கா இருந்தா? நடுவில் ஒருதரம் கால் கட்டாச்சு. ஒருவேளை யோசிக்காம கால் பண்ணிட்டு, டயலாக் யோசிச்சுட்டு மறுபடி பண்றாங்களோ?"
"வாய்ப்பு இருக்கு" ஒப்புக்கொண்டாள் தர்ஷினி.
அவர்கள் ஹாஸ்டலை அடைந்தபோது, காம்பவுண்ட் கதவு திறந்தே இருந்தது. “என்ன இது, இவ்வளவு அலட்சியமா இருக்காங்க, அதுவும் லேடிஸ் ஹாஸ்டல்ல?” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்த தன்யா, அதிர்ந்தாள்.
ஆம், திகில் திரைப்படத்தில் வருவது போன்ற காட்சி அவள் கண்முன்னே தெரிந்தது.
ரத்த வெள்ளத்தில் ஒரு பெண். அவளுக்கருகில் பிரமித்து நின்றுகொண்டு ஒருத்தி.
இவர்கள் நெருங்கியதும் “ஹர்…ஹர்ஷிதா! நான் வந்தபோது… இப்படி… ரத்…” தலையைச் சுற்றியதுபோலும், அப்படியே தரையில் சாயப் போனவளைத் தன்யா தாங்கிக் கொண்டு, அந்த் இடத்திலிருந்து நகர்த்தினாள். தர்ஷினி போலீசைத் தொடர்பு கொண்டாள்.
*****
ஹாஸ்டல் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
வார்டன் விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து அமர்ந்தவர் அமர்ந்தவர்தான். போலீஸ் வந்ததும் “அம்மா…” என்று அவளை உலுக்கினாள் வெளியில் பார்த்த பெண். அதன்பிறகே அசைந்தார். போலீஸிடம் மெல்லிய குரலில் பேசினார்.
தன்யா, தர்ஷினியைப் பார்த்ததும் “வாங்க ட்ரபிள்மேக்கர்ஸ்! என்ன விஷயம் சொல்லுங்க” என்றாள் இன்ஸ்பெக்டர் குந்தவை.
தன்யா தனக்குத் தெரிந்ததைச் சொல்லி முடித்ததும் “ஹர்ஷிதா… மூணு வருஷமா எங்க ஹாஸ்டல்ல இருக்கா. தைரியமான பொண்ணு… அவ… தற்கொலை…” சொன்னதையே திரும்பச் சொல்லி, தலையைக் கைகளில் தாங்கிக் கொண்டார் வார்டன்.
“பாடியை முதலில் பார்த்த பொண்ணு யாரு?” என்று கேட்டாள் குந்தவை.
“விலாசினி. என் பொண்ணுதான். இங்கேதான் அவளும் தங்கியிருக்கா. ஹர்ஷிதாவும் அவளும் ரூம்மேட்ஸ்.”
“மேடம், ராத்திரியில கேட்டைப் பூட்ட மாட்டீங்களா?” என்று கேட்டாள் தன்யா.
“வாட் டூ யூ மீன்? கேட் ஒன்பது மணிக்கெல்லாம் பூட்டிடுவோம். அதோட வாட்ச்வுமனும் இருக்காங்க” என்றார் வார்டன்.
“வாட்ச்வுமனா? நாங்க யாரையும் பார்க்கலையே!”
“நான் வந்தபோதே ருத்ரம்மாவைக் காணும்மா. கேட் திறந்துதான் இருந்தது” என்றாள் விலாசினி.
அதற்குள் பின்னால் ஒரு கான்ஸ்டபிளிடம் பிரசன்னமாக, “என்ன மங்கை?” என்று கேட்டாள் இன்ஸ்பெக்டர் குந்தவை.
“பில்டிங்குக்குப் பின்னாடி காக்கி ட்ரெஸ்ல ஒரு அம்மா கிடக்கறாங்க, கத்தியால் குத்தப்பட்டிருக்காங்க” என்றாள் கான்ஸ்டபிள் மங்கை.
“ஷிட்!” என்று எழுந்தாள் குந்தவை.
*****
குந்தவை ஹர்ஷிதாவின் அறைக்குத் திரும்பியபோது, போலீஸ் தன் சோதனையை முடித்திருந்தது. தன்யா ஒரு கடிதத்தை நீட்டினாள். கம்ப்யூட்டர் ப்ரிண்ட்-அவுட். தமிழில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.
நான் செய்த குற்றங்கள் பெரியவை. அதிகம்.
எனக்கு நானே நீதிபதி. செய்த குற்றம் – போதைமருந்து விநியோகித்தல். விதித்த தண்டனை – மரணம்.
என் கூட்டாளிகளைக் காட்டிக் கொடுக்க விருப்பம் இல்லை. போகிறேன்.
“வெரி க்ளியர். கேஸ் முடிஞ்சு போயிருக்கும் – அந்த வாட்ச்வுமன் கொல்லப்படாம இருந்திருந்தா” என்றாள் குந்தவை.
ஷார்ப்! மனதிற்குள் பாராட்டினாள் தன்யா.
“இவ ட்ரக்ஸ் பெட்லர்ங்கறது உண்மைதானா?” என்று வார்டனிடம் கேட்டாள் குந்தவை.
வார்டன் குழப்பமாகத் தலையசைத்தாள். “இந்த ஹாஸ்டலில் அந்தச் சனியன் நுழையக் கூடாதுன்னு எவ்வளவோ முயற்சி செய்தேன். இருந்தாலும் இரண்டொருத்தர் அப்பப்போ மாட்டுவாங்க. இவங்களுக்குச் சப்ளை பண்றது யார்னு நான் இன்வெஸ்டிகேட் பண்ணிட்டேதான் இருந்தேன்” என்றாள்.
“விலாசினி?” என்றாள் தன்யா.
“எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனா நான் அம்மாகிட்ட எதுவும் சொல்லல. காரணம் ஹர்ஷிதா கிண்டர்கார்ட்டன்லேர்ந்து என் பெஸ்ட் ஃப்ரெண்ட். இன்றைக்குக் காலையில அவகிட்ட உடைச்சுப் பேசிட்டேன். சாயங்காலம் என் ப்ரெண்டோட பர்த்டே பார்ட்டி. நான் திரும்பி வந்ததும் எங்கிட்ட உண்மையைச் சொல்லணும்னு அவளை எச்சரிச்சுட்டுத்தான் போயிருந்தேன். நான் வரதுக்குள்ள அந்தப் பாவி இப்படிப் பண்ணிப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” கொணகொணவென்று அழுகைக் குரலில் பேசினாள் விலாசினி.
வார்டன் “எனக்குத் தெரியாம இவ்வளவு நடந்திருக்கா? இந்தக் காலப் பிள்ளைங்க…” என்றாள் வெறுப்பாய்.
“அவ என் உயிர்த் தோழிம்மா! வேறு என்ன செய்யச் சொல்ற என்னை?” கேவினாள் விலாசினி.
குந்தவை யோசனையாய் நெற்றியைக் கீறினாள்.
அறையைச் சுற்றிப் பார்த்த தன்யா, பல சான்றிதழ்கள் அங்கே மாட்டப்பட்டிருப்பதைக் கண்டாள். அவற்றில் ஹர்ஷிதா, விலாசினி இருவர் பெயர்களுமே இருந்தது. ஒரு இடத்தில் ஃப்ரேம் சமீபத்தில் எடுக்கப்பட்டதுபோல் வெற்றிடமாக, சுத்தமாக இருந்தது.
“இங்கே என்ன இருந்தது?” என்று கேட்டாள் தன்யா.
விலாசினி யோசித்தாள். “ஹர்ஷிதாவோட குடும்ப ஃபோட்டோன்னு நினைக்கறேன். எதுக்கோ எடுத்திருக்கா” என்றாள்.
“அத்லெட்ஸா ரெண்டுபேரும்?” என்றாள் தர்ஷினி.
விலாசினி புன்னகைத்தாள். “ஆமா. நான் பாஷனேட். அவ ப்ரில்லியண்ட். ஆனா கொஞ்சநாளா அவ சரியா விளையாடறதில்லை” என்றாள்.
“ட்ரக் அடிக்டால விளையாட முடியாது” என்றாள் குந்தவை.
“திரும்பத் திரும்பச் சொல்லாதீங்க. உண்மைன்னாலும், வலிக்குது” என்றாள் விலாசினி அழுகையுடன்.
******
“இவங்க கண்ணில் இருக்கும் அதிர்ச்சியும் சோகமும் உண்மை. ஹர்ஷிதா மரணம், தற்கொலை. வாட்ச்வுமனோட மரணம், கோ-இன்சிடன்ஸ். அப்படித்தான் முடிவுகட்ட வேண்டியிருக்கு” என்றாள் குந்தவை.
தன்யா “ஹர்ஷிதாவோட க்ளாஸ்ல படிக்கற ரெண்டு பெண்கள் இருக்காங்கல்ல, அவங்களை நான் மறுபடி விசாரிக்கணும்” என்றாள்.
“ஏற்கெனவே ராத்திரிபூரா அவங்க யாரும் தூங்கலை. விசாரணைங்கற பேர்ல வறுத்து எடுத்தாச்சு” என்றாள் குந்தவை.
“ஒரே ஒரு கேள்வி” என்றாள் தன்யா.
“ஓகே” என்ற குந்தவை, கேள்வியைக் கேட்டதும் ஆச்சரியப்பட்டாள்.
“ஹர்ஷிதா, விலாசினியோட எக்ஸ்ட்ரா-கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் என்னென்ன?”
*****
வார்டனின் விசாலமான அறையில் மாணவிகள் கூடியிருந்தார்கள்.
குந்தவை “இன்று இரவில் இரண்டு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துடுச்சு. போதைமருந்து விவகாரத்தில் ஈடுபட்டிருந்த ஹர்ஷிதாவின் தற்கொலை, வாட்ச்வுமனோட கொலை. இன்று உங்க ஹாஸ்டலுக்கு யாரோ தவறான நோக்கத்தோட வந்திருக்கணும். யாருன்னு பார்க்க கேட்டைத் திறந்த வாட்ச்வுமன் தாக்கப்பட்டிருக்கணும். ஆனா அதே நேரத்தில் எதிர்பாராதவிதமா ஹர்ஷிதா மேலேர்ந்து விழுந்ததும் வந்தவங்க ஓடிட்டாங்க. இனி வந்தவங்க யாரு, ஹர்ஷிதாவின் பின்னாலிருந்து போதை மருந்து விற்கத் தூண்டியவர்கள் யார், இந்த உண்மைகள் துப்பறியப்படும்” என்று சொல்லி அமர்ந்தாள்.
தன்யா எழுந்தாள்.
“மேடம் தன்னுடைய நேரடி இன்வெஸ்டிகஷனில் கிடைத்த ஆதாரங்களை வைத்து அவங்க எடுத்த முடிவை இங்கே சொல்லியிருக்காங்க. இப்போ ஆதாரங்களை மறந்துட்டு, கொஞ்சம் ஊகங்களில் போய்ப் பார்க்கலாமே” – எல்லோருடைய முகங்களும் எதிர்ப்பைக் காட்டுவதை உணர்ந்தாலும் தன்யா அயராமல் மேலும் பேசினாள்.
“இதுவரை நீங்க சொன்னது, ஹர்ஷிதா தற்கொலை செய்துகொண்டாள்னு! அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் இல்லையா?”
“எப்படிச் சொல்றீங்க? சும்மா ஆதாரமில்லாம இப்படியெல்லாம் கெஸ் பண்ணக் கூடாது!”
தர்ஷினி புன்னகைத்தாள். “இன்ஸ்பெக்டர், ஹர்ஷிதா மேலிருந்து முன்புறம் தரையில்பட விழுந்திருக்கா. அப்போ, முன் தலையில் மட்டும்தானே அடிபடணும்? எப்படிப் பின் தலையிலும் அடிபட்டிருக்கு?”
“அவ, மல்லாக்க விழுந்து, அப்புறம் திரும்பியிருக்கலாமே!” என்றாள் இன்ஸ்பெக்டர் குந்தவை.
“அப்போ, முன் தலையில் காயம் எப்படி வந்தது?” தர்ஷினி கேட்டதும் குந்தவை விழித்தாள்.
“அது… எங்கேயாவது கம்பியில் பட்டு, கீழே விழும்போது…”
“ப்ளீஸ் இன்ஸ்பெக்டர். அப்படி இடிச்சுக்கல்லாம் அங்கே எதுவும் இல்லை! இட் வாஸ் அ நீட் ஃபால்! சரி, நீங்க போஸ்ட்மார்ட்டத்தில் நான் சொல்ற விஷயங்களைச் செக் பண்ணிக்கலாம். இப்போதைக்கு இப்படி இருக்குன்னு வெச்சுக்கிட்டு, தன்யா சொல்றதைக் கேளுங்க” என்றாள் தர்ஷினி.
“என்ன கேட்கணும்? அவங்க தியரியை நானே சொல்றேன். அதாவது ஹர்ஷிதா உண்மையைச் சொல்லிடக் கூடாதுன்னு தடுக்க யாரோ இங்கே வந்திருக்கணும். மங்கையைக் கொன்னுட்டு மேலே போயிருக்கணும். ஹர்ஷிதா திருந்தி உண்மையை ஒத்துக்க நினைச்சு, உங்களுக்குக் கால் பண்ணியிருக்காங்க. அப்போ உள்ளே போனவங்க ஹர்ஷிதாவைப் பின்னாடியிருந்து தாக்கிருக்காங்க. அதுக்கப்புறம் அவளைக் கீழே தள்ளிட்டாங்க. சரியா?”
“அப்படியானா, ஹர்ஷிதா தற்கொலை பண்ணிக்கப் போறதா எங்கிட்ட ஏன் சொல்லணும்?” தன்யாவின் கேள்வியில் தடுமாறிப் போனாள் குந்தவை.
“மறுபடியும் என்னுடைய தியரிக்கே வரேன், மேடம். முதல் கால் பண்ணியது ஹர்ஷிதா. இரண்டாவது பேசியது – ஹர்ஷிதா அல்ல! கொலையை தற்கொலையாய் மாற்றச் செய்த தந்திரம் இது!”
தன்யா சொன்னதைக் கவனமாகக் கேட்ட குந்தவை “அப்போ, இரண்டாவதா பேசியது – அதாவது கொலையாளி – ஒரு பெண்!” என்றாள் ஆச்சரியமாய். “அவள் எப்படி சரியா ஹர்ஷிதா ரூமுக்கு வந்தா? முனாடியே இங்கே வந்திருக்காளா? யாருமே அவளை ஏன் கவனிக்கலை?”
“வெரிகுட் இன்ஸ்பெக்டர்! இப்போ என் தியரியோட மெயின் பார்ட்க்கு வந்துட்டீங்க. இப்போ கொஞ்சம் லேட்டரல் திங்க்கிங் செய்யலாம்” என்றாள் தன்யா. எழுந்து, உலவிக் கொண்டே பேசலானாள்.
“இரண்டு ரூம்மேட்ஸ். இவர்களில் ஒருவர் ட்ரக்ஸ் பெட்லர். அவர் ஹர்ஷிதாதான் என்பது போலீஸ் இன்வெஸ்டிகேஷனோட முடிவு. ஒருவேளை அது விலாசினியா இருந்தா? அந்த உண்மை ஹர்ஷிதாவுக்குத் தெரியவந்து இன்று இரவு உண்மையை ஒத்துக்கணும்னு ஹர்ஷிதா விலாசினியை எச்சரிச்சிருந்தா?
“விலாசினி உண்மையை ஒத்துட்டுத் திருந்த மறுத்ததும் அவங்களை ரிப்போர்ட் பண்ண ஹர்ஷிதா எனக்குக் கால் பண்ணியிருந்தா?”
“இருக்கலாம். ஆனா அப்படித்தான்னு எப்படிச் சொல்லமுடியும்?” என்றாள் குந்தவை. “உங்க ஊகங்களை வைத்துக் குட்டையைக் குழப்பாதீங்க. விலாசினிக்கு எதிரா ஏதாவது ஆதரமிருந்தாத்தான் நீங்க பேசணும்” என்றாள் கோபத்துடன்.
“இன்ஸ்பெக்டர், ஆதாரங்கள்னு என்னிடம் எதுவும் இல்லை. ஆனா தற்போதைய நிலையை நான் வேற தியரி வெச்சு விளக்கிப் பார்க்கறேன், அவ்வளவுதான். நீங்க ஜஸ்ட் நான் சொல்றதைக் கேட்டா போதும்” என்ற தன்யா, குந்தவை சரி என்பதுபோல் முகபாவம் காட்டியதும் தொடர்ந்தாள். “ஹர்ஷிதா எனக்குச் செய்த கால் உடனேயே கட் ஆகிடுச்சு. ஆனா மறுபடி கால் வந்தது. தற்கொலை பண்ணிக்கப் போறதா சொன்னாங்க…”
“அதனால? புரியலை.”
“முதலில் கால் பண்ணியவுடனே ஹர்ஷிதாவோட அறையில் இருந்தவங்க அவங்க மண்டையில் பலமா தாக்கியிருக்காங்க. ஹர்ஷிதா இறந்ததும் அவங்களுக்குத் தன் தப்பு புரிஞ்சிருக்கு. நான் அந்தக் கால் பற்றி நிச்சயமா ஆராய்வேன்னு தெரிஞ்சுக்கிட்டு, என்னை திசைதிருப்பறதுக்காக மறுபடி எனக்குக் கால் பண்ணி ஹர்ஷிதாவோட குரலில் பேசியிருக்காங்க. அப்புறம் அவங்களைக் கீழே தள்ளிவிட்டுட்டாங்க. அவங்க விலாசினியா தானே இருக்க முடியும்?”
குந்தவை தலையாட்டினாள். “விலாசினியா இருக்கலாம் என்கிறவரை ஒத்துக்கறேன். ஆனா வாட்ச்வுமன்?” என்றாள்.
“ஹர்ஷிதா கீழே விழுந்ததும் அதிர்ச்சியான வாட்ச் வுமன் அங்கே ஓடி வந்திருக்கணும், மேலே விலாசினியைப் பார்த்திருக்கணும்! கீழே வந்து, பேசற மாதிரி நடிச்சுக்கிட்டே விலாசினி வாட்ச் வுமனைக் குத்தியிருக்கணும்! ஹர்ஷிதா கீழே விழறதுக்கு முன்னாடியே விலாசினி ஹாஸ்டலுக்கு வந்துட்டாங்கங்கறதுக்கு ஒரே சாட்சி வாட்ச்வுமன்தானே!”
“சூப்பர்!” என்றாள் குந்தவை. “சரி, இந்த ஐடியா உங்களுக்கு எப்படித் தோணுச்சு?”
“காணாமல் போன அந்த ப்ரேம். இங்கே ஒரு ஃபோட்டோ கூட இல்லை. அதோட, அழுக்கில்லாம இருக்கற நீள்சதுரத்தோட அளவை வெச்சுப் பார்த்தா, அது இன்னொரு சர்ட்டிஃபிகேட்டா இருக்கணும்னு தோணிச்சு. அதான் அவங்க க்ளாஸ்மேட்ஸ்கிட்ட விசாரிச்சேன். ஹர்ஷிதாவும் விலாசினியும் அத்லெட்ஸ். ஹர்ஷிதா இப்போது விளையாட்டை நிறுத்தியதற்குக் காரணம், ஃபைனல் இயர் ப்ராஜக்ட் ஒர்க்னு இவங்க சொன்னாங்க. விலாசினிக்குத் தெரியாததா இவங்களுக்குத் தெரியும்னாலும், இன்னொரு பார்வைக்கு இடம் வைக்குதே! அதோடு, விலாசினி அத்லெட்டா இருந்தாலும் இந்த ஆண்டு கேரக்டர் நடிப்புக்குத் தங்கமெடல் வாங்கினவங்க” என்றாள் தன்யா.
“ஐ ஸீ! அந்த இரண்டாவது காலின் குரல்” என்றாள் குந்தவை.
மௌனம்.
வார்டன் விலாசினியைப் பளாரென்று அறைந்தாள். “என்னடி இதெல்லாம்? உண்மையைச் சொல்லு, நீ ட்ரக் அடிக்டா? ஹர்ஷிதா உன் உயிர்த்தோழின்னு சொல்லிட்டே என்னென்ன காரியம் பண்ணியிருக்கே” என்றாள்.
விலாசினி திமிராக எல்லோரையும் பார்த்தவள், திடீரென்று உடைந்து அழுதாள். “நான் என்ன செய்வேன்மா? என்ன செய்வேன்? என்னைப் போலிஈஸில் பிடிச்சுக் கொடுப்பேன்னு மிரட்டறாம்மா! என் கூட்டத்தைச் சேர்ந்தவங்களுக்குத் தெரிஞ்சா, என்னைக் கொன்னுடுவாங்கம்மா!”
வார்டன் வெறுப்புடன் தள்ளிச் செல்ல, குந்தவை விலாசினியை நெருங்கினாள்.
“உயிருக்கு ஆபத்துன்றபோது, உயிர்த்தோழியை உயிரைவிட்ட தோழியா ஆக்கிட்டாங்க” என்றாள் தன்யா. “பாவம் ஹர்ஷிதா. அவங்க நேர்மைக்கும் தைரியத்துக்கும் என் சல்யூட்.”
#507
मौजूदा रैंक
70,460
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 460
एडिटर्स पॉइंट्स : 70,000
10 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 4.6 (10 रेटिंग्स)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
jaynavin16
bniatarajanca
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स