JUNE 10th - JULY 10th
அன்ன தாதா
"பொழைக்கத் தெரியாத மனுஷன்! ஒரு காசு சம்பாதிக்கத் தெரியல. மூதாதையர் சொத்தாம். முத்துப் போலக் கும்புட்டு வைச்சுக்கிட்டு இருக்காரு."
சரசு ஒரு நாளைப் பார்த்தாற்போல் ஒரே போல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். எனக்கும் இந்த வசனம் மனப்பாடம் ஆகி விட்டது.
"கொஞ்சம் வசனத்தை மாத்தித் தான் பேசேன் சரசு!" புளித்துப் போன வார்த்தைகள் இரு காதுக்குள்ளும் சுரீரென்று பாய்ந்ததில் பதறிச் சொல்லி விட்டேன்.
பொங்கி விட்டாள்.
"ம்ஹான்..வசனத்த மாத்திப்புட்டா என் வாழ்க்கை மாறிடுமாக்கும்! இருந்திருந்து உங்களுக்குன்னு வாக்கப் பட்டேனுல்ல. என்னச் சொல்லணும்."
"என்ன குறைச்சலக் கண்டுக்கிட்ட? உடுக்கத் துணியிருக்கு. உங்க ( உண்ணச்) சோறிருக்கு. இருக்க வீடிருக்கு. இதுக்கு மேல என்ன வேணும்? ம்ம்!" என் குரலில் இருந்த ஆங்காரம் எனக்கே விகாரமாய்த் தோன்றியது. எங்கோ இடித்த இடிக்கு இங்கு வந்து மழை பொழியும் மேகம் நான். எனக்கே அது தெளிவாய்த் தெரிய சரசுவைக் கேட்ட கையோடு எழுந்து வாசல் பக்கம் வந்தேன்.
சரசுவும் நானும் அப்படித்தான். கரை தொட்டுச் செல்லும் அலை போல உரசலும் புரசலுமாய் செல்கிறது வாழ்க்கை.
உள்ளே இன்னும் எனக்கு ஜென்மார்ச்சனை முடிய வில்லை. வாசல் வரை வார்த்தைகள் வந்து மோதிச் சென்றது.
திடீரென்று சிரிப்பு வந்தது. தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன..பாடத் தோன்றியது. சிரித்தாலும் கத்துவாள் சரசு.
வாசல் தாழ்வாரக் கம்பியைப் பிடித்துக் கொண்டு யாருக்கோ காத்திருப்பது போல் பாவனை செய்தேன். சரசுவுக்கா புரியாது? அவள் வார்த்தை வாணலியில் நான் வறுபடுவதைத் தவிர்க்கத் தான் இந்த தாழ்வார வாசம் என்று.
பின்னாடியே வந்து விட்டாள்.
"உங்களைத் தான். இன்னைக்கே போய் ரெண்டுல ஒண்ணு கேட்டுட்டு வாங்க! சும்மாவே கெடக்கற அந்த சொத்து..அது சொத்தையா மொத்தையான்னு நான் பார்த்துக்கறேன். ஆனா அத நமக்கு எழுதி வைக்கச் சொல்லுங்க.பாகப் பிரிவினை செய்யறேன்னு சொல்லி பல வருஷமாகுது. இன்னும் பங்காளிச் சண்டை முடிஞ்ச பாடில்ல!"
"அது ..பரம்பரை வீடுடி. சேகருக்கும் பாத்தியதை இருக்கு. சும்மா ஊதின சங்கையே ஊதிக்கிட்டு இருக்காத."
"அவருக்கு மட்டுமா? உங்க பெரியப்பாரு சித்தப்பாரு மகனுங்க..அவங்களை ஏன் விட்டீங்க..?"
"அவங்க எங்க அப்பாவுக்கு விட்டுத் தரதாச் சொன்னாங்க தானே! தெரிஞ்சதையே தெரியாத மாதிரி கேட்கறியே?"
"என்ன தானே.. அது இதுவரைக்கும் சொத்துங்கற பேருல சொத்தையாத் தான் நிக்குது. சொத்துன்னா என்னங்க? இல்ல தெரியாமத் தான் கேட்கறேன். சொத்துன்னா என்ன? இந்தாம்மா இது உன் சொத்துன்னா அதப் பத்திரமா பாதுகாக்கறோம். பாதுகாத்து பிள்ளைகளுக்குக் கொடுக்கறோம். அது எதுக்கு? அதான் சொத்துங்கறது எதுக்கு?". ஆவேசம் புகுந்த காளி போல் கையை ஆட்டி ஆட்டிப் பேசினாள் சரசு. உருண்ட விழிகளில் இன்றைக்கே பேசித் தீர்த்து விடுவோம் என்ற உறுதி தெரிந்தது.
"பாகத்தப் பிரிச்சுக் கொடுத்தாங்கள்ல. அவங்களச் சொல்லணும். முழுசா பேரு மாத்தாம .. மூத்தவனுக்கா சின்னவனுக்கான்னு சொல்லாம .. குந்தி பாண்டவருக்குச் சொன்ன மாதிரி 'எடுத்துங்கடா' ன்னு சொல்லிட்டுச் செத்தா என்ன அர்த்தம்? ஒண்ணுத்துக்கும் உதவாம அந்தச் சொத்து இருந்து தான் என்ன லாபம்? ஒண்ணு அந்த வீட்டுல இருந்து வாடகை வரணும். இல்ல வீட்ட வித்து பணம் கைக்கு வரணும். உலகமே பணம்ங்கற மூணெழுத்துல தானே சுத்துது. போன உங்கப்பாருக்கு அது தெரியாமப் போச்சாக்கும். வெள்ளக்காரன் மியூசியம் மாதிரி பார்த்து பத்திரமா வைச்சுக்கோங்கடான்னு சொல்லிட்டுப் போனாரு. அதால நமக்கு என்ன வரும்படி?"
நான் ட்ராக்கை மாற்றினேன்.
"சரசு! சோடா வேணுமா? இவ்வளவு நேரம் மாங்குமாங்குன்னு பேசறியே. ஒரு சபைல பேசி இருந்தாக்கூட டொப்பு டொப்புன்னு கையத் தட்டியிருப்பானுங்க. இது ஒரு கை ஓசை சரசு..இந்தா வாங்கிக்க!" மெலிதாய் கை தட்டினேன் நான்.
அவள் முகத்தில் மெல்லிய நாணம் படர்ந்தது. அப்பாடா! இதைப் பிடித்துக் கொண்டே சமரசப் பாதையில் சவாசனம் பண்ணி விடலாம். மனப்பால் குடித்த எனக்கு வில்லனாய் வந்து சேர்ந்தான் என் பால்யத் தோழன் ரகுபதி.
"என்னடா சங்கரலிங்கம்? ஒரே சங்கடலிங்கமா இருக்க போல இருக்கு? வாணச் சத்தம் வாசலத் தாண்டிக் கேட்கவும் தான் ஆபத்பாந்தவா அனாதரட்சகான்னு நீ கூப்பிடாமயே ஓடோடி வந்து விட்டேன்."
"சங்கர்ன்னு தானே கூப்பிடுவ? இன்னிக்கென்ன முழுப்பேரும் முழங்கியாகுது? என் வீட்டு வம்பென்னன்னு உனக்குத் தெரிஞ்சாகணும். அதுக்குத் தானே? இரு இந்த நேரம் பார்த்து சரசு உள்ள போயிட்டாளே! உனக்கு பாயாசம் வைக்கப் போயிருப்பா! இருந்து சாப்பிட்டுட்டுப் போ!"
"இத்தனை நேர ரௌத்திரத்துக்குப் பிறகும் நீ பாயாசம் எதிர்பார்க்கறியே.. ரொம்பவே நல்லவன் டா நீ!" ரகுபதி சிரித்தான்.
சத்தம் கேட்டு கையில் டம்ளருடன் வந்தாள் சரசு.
"டேய்! பாயாசமா? பாய்சனாடா?" காதில் முணுமுணுத்தான்
ரகுபதி.
"இந்தாங்க அண்ணே தண்ணி. வீட்டுக்கு வந்தவுகளுக்கு ஒரு தண்ணி கூட கொடுக்கத் தெரியாத பச்சப் புள்ளையா வளர்த்து என் கையில கொடுத்துட்டுப் போயிட்டாங்க எம் மாமியாரு. ஏதோ நான் இருக்கேனோ உங்களுக்குத் தண்ணி கொடுத்தேனோ.. ம்ஹூம்..சரியான சமயம் வந்தீங்கண்ணே! தெனைக்கும் நடக்கற இந்த கூத்துக்கு ஒரு வழி சொல்லிட்டுப் போங்க.!"
"உஷ்! சும்மாயிரு சரசு. வரவுகளுக்கு தண்ணி கொடுக்க உம் மாமியார் எனக்கு கத்துக் கொடுக்கல சரி..தண்ணியோட சேத்து தாவாரம் வரைக்கும் வீட்டு வெவகாரத்தையும் கொண்டாந்து நிறுத்தறதை உனக்கு யாரு கத்துக் கொடுத்தா? என் மாமியாரான்னு நான் கேட்க மாட்டேன்." அடிக்குரலில் சீறினேன் நான்.
என் சீறலுக்கென்ன பாம்பின் சீறலுக்கே பயப்பட மாட்டாள் என் பத்தினி. தோளில் விழுந்த தூசியை அசட்டையாய்த் தட்டி விட்டாற்போல் என் கோபத்தைத் தட்டிவிட்டு சிக்ஸர் அடித்தாள் சரசு.
"ரகுபதி அண்ணே! இன்னைக்குச் சாப்பாடு இங்க தான் உங்களுக்கு. அண்ணி கிட்ட சொல்லி அவங்களையும் கூட்டிக்கிட்டு வந்துடுங்க. பாழாப் போன பரம்பரை வீடு பாடுபடுத்துது என்ன. அத வைச்சு ஒரு காசு பாப்போமுன்னா அண்ணனும் தம்பியும் கிணத்துல விழுந்த கல்லு மாதிரி கம்முன்னு இருக்காங்க."
"என்னடி இவ.. சொன்னதையே சொல்லிக்கிட்டு! கேட்டுக்க ரகுபதி.. எங்க பூர்வீகச் சொத்தா ஒரு வீடு வந்துதுப்பா. அதுவே ஏகப்பட்ட பிரச்சனைக்கு அப்புறம் கோர்ட் கேஸாகி இப்பத் தான் கைக்கு வந்துருக்கு. அதுக்குத் தான் இவ கோலாட்டம் ஆடறா!"
"ம்ம்.கோலாட்டம்! ஏன் குரங்காட்டம்ன்னு தான் சொல்லிப் பாருங்களேன்! இப்ப கைக்கு வந்திருச்சுல்ல வீடு.. என்ன பண்ணனும்? ஒண்ணு உங்க அண்ணனுக்குப் பணத்தக் கொடுத்துட்டு நாம போய் இருக்கணும். இல்ல நமக்குப் பணத்த தந்துட்டு உங்க அண்ணன் போய் இருக்கணும். இல்ல.. அத வாடகைக்கு விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் பணத்தப் பிரிச்சுக்கணும். என்ன ரகுபதிண்ணே! நான் சொல்றது ஞாயம் தானே!"
தாழ்வாரத் திண்ணையில் காற்று சில்லென்று அடிக்கப் புடவைத் தலைப்பால் கழுத்தைச் சுற்றிப் போர்த்திக் கொண்டாள் சரசு.
"கேட்டுக்கோ ரகுபதி. அந்த சொத்த சொத்து மாதிரி நினைச்சுக்கோன்னு எங்க அப்பா சொல்லிட்டுப் போனாரு. இவ அத சொத்தைன்னு சொல்றா. கோவம் வருமா வராதா ஒரு மனுஷனுக்கு!"
ரகுபதிக்கு ஏண்டா இந்தப் பஞ்சாயத்துக்கு வந்தோம் என்றிருந்தது.
"சும்மா கெடந்த சங்கை ஊதிப் பாத்தாப்புல நல்லா வந்து சேர்ந்தேண்டா சங்கர் உன் வீட்டு விஷயம் கேட்க. இப்ப உன் பக்கம் நிக்கறதா? தங்கச்சி பக்கம் நிக்கறதா?" மெல்ல அவன் பக்கம் நெருங்கிக் கிசுகிசுத்தவர்..
"ம்ம்! என்னடா வீடு அது? பிரயோசனம் இல்லாத பாழடைஞ்ச வீடா? மராமத்து பண்ண வேண்டியது தானே?" கெத்தாகச் சொல்லி சரசுவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டார். எப்படி என் பேச்சை ஆரம்பிச்சேன் பாத்தியா தங்கச்சி என்ற பெருமை அந்தக் கண்ணில் தெரிந்தது.
"மராமத்தா? அதான் வருஷந் தவறாம ஆள வைச்சுப் பண்ணிக்கிட்டு வராங்களே! இப்ப என்ன விஷயம்ன்னா.. எங்களுக்கு புள்ளகுட்டியே இல்லன்னா..இவர் அண்ணன் சேகருக்கு கல்யாணமே ஆகல..அவருக்கும் வயசு அம்பத்து நாலாச்சு. இனிமேலாம் பொண்ணு கெடைக்காது. தவிர அவரு குணத்துக்கு அமையவும் அமையாது. உம்முன்னு இருக்கறவர ஊமச்சி கூடக் கட்டிக்க மாட்டா. இருக்கற சொத்து அண்ணனுக்கும் சேர்த்துன்னு இவரு சொல்றாரு. அண்ணனே நம்ம சொத்து தானே. நாம தானே அவரையும் பார்த்துக்கிடணும்ன்னு நான் சொல்றேன். அப்படி இருக்கும் போது பரம்பரைச் சொத்தா வந்த அந்த வீட்டை வித்தோ , வாடகைக்கு விட்டோ சம்பாதிச்சா என்னங்கறது தான் என் கேள்வி.! இப்ப சொல்லுங்க ரெண்டு பேரும். எனக்கு ஒரு ஞாயத்தை!"
சங்கரலிங்கம் தலையைக் குனிந்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.
"எல்லாம் சரி தான். ஆனா சேகரண்ணே போன இடம் தெரியலயே தங்கச்சி. அவர் வந்தா தானே வீட்டைப் பத்திப் பேசி முடிவெடுக்க முடியும்?" இப்போது தான் பேசியது எப்படி என சங்கரைப் பார்த்தார் ரகுபதி.
"வரும் போது வரட்டும்ண்ணே. வாடகைக்கு விட்டு வர்ற பணத்த பாதி பங்கு அவருக்குன்னு எடுத்து வைச்சுட வேண்டியது தானே. கேட்டா.. வாடகைக்குன்னு வந்து வந்து பாக்கறாங்களாம். ஆனா வரத் தான் மாட்டேங்கறாங்களாம். உங்க ப்ரெண்ட் சொல்றாரு. நாம இன்னும் கொஞ்சம் முனைஞ்சு தேடினா வராம எங்க போயிடப் போறாங்க. சொல்லுங்க!"
"சரசுவுக்குப் புரியவே இல்லடா ரகுபதி. இத்தோட இருவது தரமாச்சு. அந்த வீட்டுக்கு வாடகையாளர் வந்து பார்க்கறது... கிட்டி முட்டி நெருங்கி வர மாதிரி இருக்கும். விட்டுருவாங்க! வரவங்களுக்கு ஆயிரம் காரணம் இருப்பது போல் விடறவங்களுக்கு ஆயிரம் காரணங்கள். ஆனால் அவங்க சொல்றதில்ல. இத்தனைக்கும் அந்த வீட்டுல நடுப்புற ஒரு கல்யாணமே நடத்தற மாதிரி பெரிய ஹால், அதைத் தவிர்த்து ரெண்டு ரூமு , பெரிய சமையக்கட்டு. வரவங்களாம் பெரிய ஹாலை வைச்சுக்கிட்டு என்ன செய்ய.. சின்னூண்டு ரூமா இருக்குன்னு சொல்லிட்டுப் போறாங்க. ஹாலை தடுத்து ரூமைப் பெரிசாக்கிக் கட்டித் தரீங்களான்னு கேட்கறாங்க. கிழவனும், கழுதையும் கதை மாதிரி வரவங்க சொல்லுக்குத் தகுந்த மாதிரியெல்லாம் நான் மாற்றம் செஞ்சுக்கிட்டு இருந்தா கதையில வர கிழவனாட்டாம் தனியா தான் தெருவில் நிக்கணும்..ஆக.."
பேசிய என்னை இடை மறித்தாள் என் மனைவி சரசு.
"ஆக வாடகை வைக்கவே வேணாமுன்னு விட்டுக் கடாசிட்டீங்க! அதைத் தான் வேணாங்கறேன். அவங்க கேட்கற வசதிப்படி ஹாலை இடிச்சு பெரிய ரூமா தான் ஆக்குங்களேன். என்ன குறைஞ்சு போகுது. அவ்வளவு பெரிய ஹாலுக்கு எந்த கல்யாணம் வந்து காத்துக்கிட்டு இருக்குது. கல்யாண மண்டபம் மாதிரி பெரிசாவும் இல்லாம வீடு மாதிரி சிறுசாவும் இல்லாம இரண்டுங்கெட்டானா ஒரு வீடு. அதுக்கு இத்தன பாடு!"
நான் ரகுபதியையே பார்த்தேன். கண்ணாலயே அமைதிப் படுத்தினான் அவன்.
"விடு தங்கச்சி. நாளைக்கே ஊருக்குப் போய் அந்த வீட்டைப் பார்த்து என்ன பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிடறோம். ஒண்ணும் ஒத்து வரலன்னா வித்துப்புட்டு காசைப் பார்த்தரலாம். இப்ப நிம்மதியா போய்ச் சாப்பிடுங்க ரெண்டு பேரும். நான் வரேன்!" நடையைக் கட்டினார் ரகுபதி.
இதற்கு மேல் பேச என்ன இருக்கிறதென்று எதிரும் புதிருமாய் அமர்ந்து பேச்சில்லாது உண்டு முடித்தோம். மறுநாள் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தால் சரசுவும் கூட வந்திருப்பாளோ?
பறம்பு மலைக் காட்டையொட்டி இருந்த அவ்வீட்டுக்கு இரண்டு பஸ் மாதிரி நானும் ரகுபதியும் போகும் போது மதியம் மணி இரண்டாகி விட்டது. வீடு கைக்கு வந்த பொழுதில் மராமத்து பண்ண வந்தது. அதன் பின் வாடகைக்குக் கூட அங்கு அருகிலிருக்கும் மருது தான் பார்த்துக் கொள்வது. இப்ப சில மாதம் அதுவும் இல்ல. மருது கிட்ட இருந்து போனும் இல்ல..அவனே வயதானவன். இருக்கானோ இல்லையோ.. நினைத்தபடி ரகுபதியுடன் இணைந்து நடந்தேன்.
"இதோ இரண்டு தெரு தாண்டியாச்சு. முக்கு திரும்பியதும் கடைசி வீடு தான் ரகுபதி.."
"டேய் கடங்காரா! நல்ல ஏரியால வீடு வைச்சுக்கிட்டு வாடகை வரலையேங்கிறியேடா ..ஏண்டா?"
கேட்ட ரகுபதியை எரிச்சலாய்ப் பார்த்தேன்..
"நானா மாட்டேங்கறேன். வீடு தாண்டா விரட்டுது!"
"வீடென்ன ரௌடியா? சண்டை போட்டு விரட்ட? போடா…"
"இல்ல ..சத்தியமா வீடு தான் விரட்டுது. இங்க வந்து பார்த்துட்டுப் போனவங்க கனவுல சிவலிங்கம் தெரிஞ்சுதாம். நான் அதை சரசுகிட்ட சொல்லல. சொன்னா அதுக்கும் ஏதாவது சொல்லுவா!"
"என்னடா இது?"
"ஆமாடா.. ஏதோ இருக்கு. என்னன்னு தான் தெரியல! என் மூதாதையர் இந்த இடத்தை என்னவா வைச்சிருந்தாங்கன்னு தெரியல. நாங்க பொறக்கும் போது வீடா இருந்துது. ஆனா யாரும் குடியிருக்கல."
பேசிக் கொண்டே முக்கில் திரும்பி விட்டோம். திகைத்து நின்று விட்டோம்.
தெரு முக்கில் இருந்து பார்த்தால் நேர் மத்தியமாய் அந்த வீடு. வாழை மரங்களும் மாவிலையுமாய் வரவேற்பு கூற.. அதன் முன்னால் அரவம் போன்று வளைந்து நெளிந்து நிற்கும் மக்கள் கூட்டம். மருது எல்லோரையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தான்.
"டேய்..சங்கரு.. உன் வீட்டை யாரோ ஆட்டையப் போட்டுட்டாங்கடா! அதான் வந்து வந்து பார்க்கணும்ங்கறது!"
என்னை இழுத்துக் கொண்டு ஓடினான்.
உள்ளே நடுஹாலில் சிவலிங்கம் வீற்றிருக்க அதன் அருகில் காவி வேட்டியோடு தேஜஸாய் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருப்பது..
"டேய் ரகுபதி.. இவர் எங்க அண்ணண்டா. காணாமப் போன சேகர்..சந்திரசேகர்." கத்திக் கொண்டு ஓடினேன்.
"சேகரு!"
சிவப்பழம் நிமிர்ந்து பார்த்துச் சிரித்தது.
கூடியிருந்த கூட்டம் "ஹர ஹர மகாதேவ்!" என கோஷமிட்டுத் தங்கள் முன்னிருந்த இலையில் பறிமாறப்பட்ட உணவை அள்ளி விழுங்க..
நானும் ரகுபதியும் மலைத்துப் போய் அமர்ந்தோம்.
அண்ணனென்ற சிவப்பழம் அருகில் வந்தது. அன்னத்தையும், கரண்டியையும் தந்து "போ! பரிமாறு! அன்பை அளித்து அன்பைப் பெறு!" என்றது.
மந்திரத்துக்குக் கட்டுப்பட்டாற்போல் கரண்டியை வாங்கிக் கொண்டு பந்தி பந்தியாய் பரிமாறினேன்.
பத்திரிக்கை காரர்களும், டி.வி. சேனலும் முற்றுகை இட்டன அவ்வீட்டிற்கு.
அன்னதாதா என்ற சந்திரசேகர சுவாமிஜி சன்னியாசம் வாங்கிக் கொண்டு இத்தனை வருடம் வடக்கில் இருந்தாராம். இவரது ஆஸ்ரமத்துக்கு வருமானமும் நிறைய..சிஷ்யர்களும் நிறைய.
திடீரென்று ஒருநாள் கனவில் சிவலிங்கம் தெரிந்ததாம். பூர்வீக பாரம் ஒன்றிருக்க விட்டுவிட்டாயே சேகரா என்று கேட்டதாம். வந்து தோண்டியெடுத்து பிரதிஷ்டை செய்தாராம். அத்துடன் இருந்த சிறு பேழையை எடுத்துக் காட்டினார்.
அதில் ஓலையில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது.
'பாரிவள்ளல் வசமிருந்த இந்நிலம் பல கை மாறினாலும் வள்ளல் தன்மையுடனே இருக்கும் . இந்த இடம் வசிக்க முடியாத கூடம். அன்னதானக் கூடம்!
தீயினில் பெருந்தீ பசித்தீ! அத்தகைய தீயை அணைக்க இன்னொரு தீயால் மட்டுமே முடியும். அது ஆறாத அடுப்புத்தீ!
யாரொருவர் இதில் தன்னலம் பார்க்காது பிறர் நலத்துக்காய் அன்னதானம் மேற்கொள்கிறாரோ அவரின் பெயர் காலத்துக்கும் விளங்கும்"
சேகர் சுவாமிஜி எடுத்துத் தந்த பேழையில் இருந்ததை வாசித்ததும் அப்படியே அவ்வீட்டை அவருக்கு விட்டுக் கொடுப்பதாய் சொல்லி விட்டேன். சரசுவைப் பற்றிக் கூட எனக்கு நினைப்பில்லை.
ரகுபதி உடனே கிளம்பி விட நான் ஒரு வாரம் இருந்து விட்டு ஊர் திரும்பி வீட்டிற்குள் நுழைந்ததும் தான் தாமதம்! சரசு பூரிப்புடன் ஓடி வந்தாள். அவள் முகத்தின் பிரகாசத்துக்கு எவ்வொளியும் ஈடில்லை. விஷயங்களைப் பேப்பரில் படித்திருப்பாள். இல்லை..டிவியில் பார்த்திருப்பாள்.
ஓடி வந்தவள் குனிந்து என்னை கும்பிட்டு விட்டு..
"அன்னதாதா! அன்னம் அளிக்கிற வம்சத்துல பொறந்த உங்களுக்கு வாரிசு வரப் போகுதுங்க. நான் முழுகாம இருக்கேன்." அழுகையும் சிரிப்புமாய்ச் சொன்னாள்.
"அன்பை அளித்து அன்பைப் பெறு!" சுவாமியின் குரல் காதில் ஒலிக்க ..
'அன்ன தாதா!" என்றேன் நான் கைகளைக் கூப்பியபடி.
முற்றும்.
#191
मौजूदा रैंक
69,067
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 2,400
एडिटर्स पॉइंट्स : 66,667
51 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 4.7 (51 रेटिंग्स)
selvik48
vasabala
radhikapsarathy
பாராட்டுக்களும், வாழ்த்துகளும், மாலு..! கதை நன்று, சுவாரஸ்யமாக வாசிக்க வைத்தது.
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स