பட்டாம்பூச்சி

Swarna
பதின்பருவக் கதைகள்
5 out of 5 (27 रेटिंग्स)
कहानी को शेयर करें

ஒரு சனிக்கிழமை முற்பகல் நேரம் . மொபைல் போனை எடுத்து வாட்சப் மெசேஜ்களை பார்க்க கையில் காபி கோப்பையுடன் அமர்கிறேன்.

ஐபேட் வைத்துக் கொண்டு மகள் ஹொம்வொர்க் செய்து கொண்டிருக்கிறாள். ஸ்கிரீன் பார்த்தால் கண்களுக்கு நல்லது இல்லை என ஐபேட், மொபைல் தராமலிருந்த நாட்களை எண்ணி சிரித்துக் கொள்கிறேன். இப்பொழுது எல்லோருக்குமான உலகமும் கைகளுக்குள்ளேயே வந்து விட்டது. எல்லோருக்குமான தனித் தனி சிறு உலகம். இவ்வுலகிற்குள் செல்ல தடைகள் விதிக்க முடிவதில்லை. பிள்ளைகள் எங்கெல்லாம் சஞ்சரிக்கிறார்கள் என கண்காணிப்பதொன்றே வழியென மாற்றியிருக்கிறது காலம்.

யோசனையில் இருந்து வெளி வந்து வாட்சப்பிற்குள் போகிறேன். கல்லூரி க்ரூப்பில் தோழிகள் ஏதேதோ பேசியிருக்கிறார்கள். தலையும் புரியாமல் வாலும் புரியாமல் , எதைப் பற்றி பேசியிருக்கிறார்கள் என பார்க்கத் தோன்றாமல் வெளியில் வந்து அடுத்த மெசேஜைப் பார்க்கிறேன். ட்ரென்ட்ஸ் விளம்பரம். முன்பெல்லாம் எஸ்எம்எஸ்ஸில் வரும் விளம்பரங்கள் இப்போது வாட்சப் வரை வந்து விட்டது. .

ஸ்க்ரோல் செய்து அடுத்த மெசேஜைப் பார்த்த எனக்கு சிறிது அதிர்ச்சி . புதிய எண்ணாக இருந்தது. புகைப்படம் இல்லை , பெயரும் இல்லை . ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு வந்திருந்த மெசேஜ் அது. மொபைலின் திரையையே வெறித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன், பலவித எண்ண அலைகள் மேலோங்கி எழுவதை தடுக்க முடியாமல். அந்த ஒரு மெசேஜ் என்னை காலத்தின் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது.

அன்றும் ஒரு சனிக்கிழமையே. நானும் தங்கையும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். அம்மா சமையலறையில் இருந்தாள். அப்பாவும் பக்கத்து விட்டு மாமாவும் கேட்டின் அருகே நின்று பேசிக்கொண்டிருப்பது உள்ளே கேட்டது.

அம்மா எங்கள் இருவரையும் திட்டிக்கொண்டே சமையல் செய்துக்கொண்டிருந்தாள்.

“ ப்ளஸ் ஒன் போயிட்டா படிக்காம இருக்கனும்னு இல்ல. ப்ளஸ்டூவுக்கான போர்சன் எல்லாம் எடுத்து , என்ன இருக்குனு பார்த்து படிக்கலாம். இப்படி டிவி முன்னவே இருந்தா மார்க் எங்க இருந்து வரும் எப்படி நல்ல காலேஜ்ல சீட் கிடைக்கும் ?

சின்னது இருக்கு பாரு, எப்பவும் டிவி தான். லீவ் விட்டா போதும் டிவியே கதின்னு இருக்க வேண்டியது. எல்லாம் கொஞ்ச நாள் தான்டி. நீ டென்த் போயிட்டா , கேபிள்ல கட் பண்ண சொல்றேன் இரு”

“ கொஞ்ச நேரத்துல படிக்க போறேன்மா”

“ அவ போறப்ப, நானும் போறேன்மா”

புதிதாக ஒரு பேச்சுகுரல் கேட்கவும் யாரென பார்க்க ஸ்க்ரீனை விலக்கி கொண்டு வாசலுக்கு போகிறேன். போஸ்ட்மேன் அங்கிள் அப்பாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு அப்பால் சற்று தூரத்தில் எதிரிலிருக்கும் காலி மனையில் பசங்க கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்த பசங்க மட்டும் ஜாலியா விளையாடறாங்க என நினைத்துக் கொண்டேன். நம்மால் நினைத்தாலும் இப்படி விளையாட முடியுமா என ஏக்க பெருமூச்சு விட்டுக்கொணடே பார்வையை வேறு பக்கம் திருப்புகிறேன். அங்கே சிறுவர் சிறுமியர்கள் தட்டானும் பட்டாம்பூச்சியையும் பிடிக்க ஆயத்தமாவதை நின்று வேடிக்கை பார்க்கலானேன். தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த தங்கை , என்னை காணாமல் தேடிக் கொண்டு வந்து என்னுடன் சேர்ந்து கொண்டாள்.. போஸ்ட்மேன் அங்கிள், பக்கத்து வீட்டு மாமா இருவரும் சென்றுவிட அப்பாவும் வீட்டிற்குள்ளே சென்றுவிட்டார்.

தும்பை செடியை கொத்தாக கையில் வைத்து கொண்டு பட்டாம்பூச்சியின் பின்னே ஒரு பட்டாளம் போக தயாராகிறது. தும்பைச் செடி கொத்தை ஒங்கி அடித்தால் பூச்சி இறந்துவிடும். மெல்ல அடித்தால், இலைகளுக்குள் ஊடுருவி பறந்துவிடும். ஓங்கியும் இல்லாமல், மெதுவாகவும் இல்லாமல், சரியான வேகத்தில் அடித்தால்தான் செடிகளுக்கு அடியில் அகப்படும்.

ஒவ்வொரு செடியாய் பறித்து கொத்தாக மாற்றிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். தும்பை பூக்களை ஒவ்வொன்றாக கோர்த்து முறுக்கு செய்து கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. அவளைச் சுற்றி அவளை வேடிக்கைபார்த்தவாறு சிறுமியர் கூட்டம். இன்னொருபுறம் தட்டான் பிடிக்கும் பட்டாளம். இவ்வளவு அமைதியாய் எந்த பட்டாளமும் தயாராகுமா என தெரியவில்லை. . சிறு சத்தமோ, அசைவோ தெரிந்தால் கூட பறந்துவிடும் பட்டாம்பூச்சிகள். பட்டாம்பூச்சி பட்டாளத்தின் தலைவனிடம் பேச்சு குடுத்தேன்.

“ டேய் அசோக் “

“ என்னக்கா ? “

“ அந்த கருப்பு, வெள்ளை , சிகப்பு பட்டாம்பூச்சி பிடிச்சா எனக்கு தர்ரியா ?”

“ எதுக்கு ? நீ மறுபடியும் பறக்க விடவா ?. அந்த பட்டாம்பூச்சி பிடிக்கிறது ரொம்ப கஷ்டம். நாங்க கஷ்டப்பட்டு பிடிச்சு குடுத்தா , நீ ஈசியா பறக்க விட்டுடற. நான் தர மாட்டேன் போக்கா. “

“ டேய் ப்ளீஸ் டா. பிடிச்சு தரேன்னு போன தடவை சத்தியம் எல்லாம் செஞ்சு குடுத்த . மறந்துடாத.”

“ சரி . பிடிச்சு தந்து தொலைக்கிறேன். அப்போ அந்த அக்கா கையில இருக்க சாக்லேட்ட தர சொல்லு. அப்போ தான் பட்டாம்பூச்சி”

“ சரி டா . தர சொல்றேன் “

“ நான் ஏன்டி அவனுக்கு சாக்லேட் குடுக்கனும் ? “

“ உள்ள இருக்க என் சாக்லேட்ட நீ எடுத்துக்கோடி . இத அவன்கிட்ட குடு”

“ ஹ்ம்ம்ம் சரி ஓகே. பேச்சு மாற கூடாது”

“ மாட்டேன்”

சாக்லேட் உடன்படிக்கைக்கு பின் பட்டாம்பூச்சி தேடும் படலம் தொடங்கியது. அவ்வளவு எளிதாக கிடைக்காது அந்த கருப்பு வெள்ளை சிகப்பு பட்டாம்பூச்சி. சாக்லேட் அச்சிறுவர்களை குதூகலமாக இயங்க வைத்தது. கண்களில் அகப்பட்டாலும் கைகளில் அகப்படாமல் பறந்து விடும் . விரல்களினூடே லாவகமாக பறக்கும் வித்தையை கற்று வைந்திருந்தது.

மெதுவாக ஊர்ந்து செல்வது போல் சென்று அடிக்கிறான். பட பட வென செடிகளுக்கு இடையில் பறந்து சென்றுவிடுகிறது ஆரவாரிக்கும் சிறுவர்களை அமைதியுறச் செய்து அது புதிதாய் அமர்ந்திருக்கும் செடியை நோக்கி முன்னேறுகிறான். இந்த முறையும் தப்பித்துவிட்டது . ஆறேழு முறை முயன்று பிடித்தே விட்டான் அசோக். இதற்கிடையில் சிறுவர்கள் சிலர் பிரௌன் நிறத்தில் மஞ்சள் பொட்டுகள் உள்ள பட்டாம்பூச்சிகள் சிலவற்றை பிடித்திருந்தாரகள். அவர்களுக்குள் ஒரே ஆரவாரம்.

எனக்கு பிடித்தமான அப்படாம்பூச்சியை கைகளில் வாங்க ஆர்வமாய் இருக்கையில் அம்மாவின் குரல் ஓங்கி கேட்டது.என் பெயரைச் சொல்லித்தான் அழைக்கிறாள். கோபமாக இருக்கிறது அவளது குரல். அவளது குரலே என்னை பதற்றமடைய வைக்கிறது .

என்ன செய்தோம், ஏதாவது தவறு செய்துவிட்டோமா, மறைத்த டெஸ்ட் மார்க்கை பற்றி தெரிந்துவிட்டதோ, கண்ணாடி டப்பாவை உடைத்து யாருக்கும் தெரியாமல் மேல் அலமாரியில் வைத்ததை பார்த்துவிட்டாளோ, பூப்பறித்த போது பூவுடன் மொட்டையும் சேர்த்து பறித்தது தெரிந்து விட்டதோ. தினமும் பால்காரர் பாலூற்றியதும் பால் செம்பிலிருந்து சிறிது பால் குடிப்பது தெரிந்து விட்டதோ. மின்னல் வேகத்தில் யோசனைகள் தாக்கியபடி தயங்கிக் கொண்டே அம்மாவின் முன் நின்ற எனக்கு வேறு அதிர்ச்சி காத்திருந்தது .

“ யாருடி இவன் ? “

“ யாரும்மா ?”

அப்பாவின் கைகளில் ஒரு இன்லேண்ட் லெட்டர்.

“ நீ சொல்லாம தான் அவன் லெட்டர் போட்ருக்கானா? அவ்ளோ தைரியமா வீட்டுக்கே லெட்டர் போடறான்னா , நீ சொல்லாமலா போட்ருப்பான்? “

“ எனக்கு என்ன பேசிட்டு இருக்கீங்கன்னே புரியலம்மா “

“ கூட கூட பேசறப்பவே தெரியும் . இது மாதிரி ஏதாச்சும் பன்னுவனு. ஏங்க நீங்களே அந்த கருமாந்திரத்த அவ கிட்ட காட்டுங்க.”

லெட்டரை நீட்டிய அப்பாவிடமிருந்து வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.

“ ப்ரியமானவளுக்கு,

எப்படி இருக்கிறாய். உன்னை பார்க்காமல் எனக்கு நாட்கள் நகருவதேயில்லை. தனியே இருக்கையில் நாம் சந்தித்த தருணங்களை நினைத்துக் கொள்கிறேன் எனக்கு பிடித்தவாரே உன் தலையில் ரோஜா சூட்டிக்கொள்ள ஆரம்பித்ததில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்

எப்பவும் போல ஆஞ்சநேயர் கோவிலுக்கு போவதாய் பொய் சொல்லிவிட்டு என்னை பார்க்க வரும் நேரத்திற்காக காத்திருக்கிறேன். எனக்கு பிடித்த பச்சை நிற ஆடை அணிந்து வா.

காதலுடன் காத்திருக்கும் ,

நான் “

கைகள் நடுங்க லெட்டரை பிடித்திருந்தேன். கண்கள் தானாக கசிய ஆரம்பித்தது.

“ அம்மா , இது யாருன்னே தெரியல. யாருக்கோ வந்ததாக இருக்கும். எனக்கு நிஜமா தெரியலம்மா”

“ ஒவ்வொரு சனிக்கிழமையும் கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு போறது அவன பார்க்கிறதுக்குத்தானா? இந்த பொண்ணு என்ன என்ன செய்ய காத்திருக்காளோ. ஊரு முன்னாடி நம்ம மானத்த வாங்காம விட மாட்டா போலிருக்கே. சொந்தக்காரங்களுக்கு எல்லாம் தெரிந்தா நம்மள பத்தி என்ன எல்லாம் பேசுவாங்களோ.”

பெருங்குரலுக்கு நடுவில் அவள் விசும்ப தொடங்கியிருந்தாள். சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த தங்கையை விரட்டி விட்டார் அப்பா. அழுது கொண்டே நான் சொல்லியது இருவர் செவிகளிலும் விழுந்ததா எனக் கூட தெரியவில்லை.

“ அம்மா சத்தியமா எனக்கு தெரியாது . அப்பா நீங்களாச்சும் கேளுங்க, எனக்கு நிஜமாவே தெரியலப்பா”

“ செய்றதையும் செஞ்சுட்டு பொய் வேற பேசுறியா நீ”

“ அம்மாவும் பொண்ணும் கொஞ்ச நேரம் பேசாம இருங்க.”

அப்பாவின் அதட்டலில் அமைதியானாள் அம்மா. என் கண்களிலிருந்து வரும் கண்ணீரை என்னாலே நிறுத்த முடியவில்லை.

“ நீயே இப்படி கத்தி பக்கத்துவீட்டுக்கெல்லாம் தெரியர மாதிரி செய்யப் போறியா? ஏற்கனவே பொண்ணுக்கு லெட்டர் எல்லாம் வருதுனு அந்த ராமன் கேட்டுட்டு போறான். நீ கத்தி ஆர்ப்பாட்டம் பன்றதுக்கு நீயே லெட்டர போயி அவங்க வீட்ல காட்டிட்டு வந்துடு”

அப்பாவின் கர்ஜனையில் மொத்தமாக அமைதியானாள் அம்மா. இவள் இப்படி செய்திருக்க மாட்டாள் என நீங்களாச்சும் சொல்லுங்க அப்பா என மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால்,

“ உன் ரூமுக்கு போ”

அதற்குபிறகு விட்டில் யாரும் அந்த லெட்டரை பற்றி பேசவில்லை. ஒருவிதமான இறுக்கமான சூழ்நிலையிலேயே நாட்கள் நகர்ந்தது. சற்றே இயல்பு நிலைக்கு திரும்ப மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அச்சமயங்களில் என் வேண்டுதல் எல்லாம் இன்னொரு லெட்டர் வராமல் இருக்க வேண்டும் என்பதே.

திரும்பிய இயல்பும் புது இயல்பாய் இருந்தது. கோவிலுக்கு செல்ல தடை , தனியே வெளிய செல்லத் தடை , டியூஷனுக்கு ஆட்டோ அமர்த்த பட்டது , சைக்கிளை எடுக்கத் தடை, தோழிகளை பார்க்கப் போவதற்கு தடை. அம்மாவின் சந்தேக பார்வை என் மீது அடிக்கடி விழ ஆரம்பித்தது. ப்ளஸ் டூ முடிக்கும் வரையில் தடைகள் நீக்கபடவேயில்லை. அதன்பின் தடைகள் நீக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போனது.

மொபைல் ரிங் அடித்து, நினைவுகளிலிருந்து என்னை நிஜத்திற்கு அழைத்து வந்தது. கணவரின் எண்.

“ ஹலோ. வந்த வேலை முடிய லேட் ஆகும் போல தெரியுது”

“ லஞ்சுக்கு வந்துடறேன்னு சொன்னீங்க?”

“ ஆமா . முடிஞ்டும்னு நினைச்சேன். இன்னும் முடியல. பாக்கலாம். ஈவினிங் அம்முவ மால் கூட்டிட்டு போறேன்னு சொல்லிடு”

“ ம் சரி. நீங்க மறக்காம சாப்டுங்க”

போனை வைத்துவிட்டு நிமிர்ந்தால், மகள் இன்னும் ஐபேடுடன் இருக்கிறாள். ஹோம்வொர்க் முடித்து விட்டு ஏதோ ப்ரௌஸ் செய்துக் கொண்டிருந்தாள்.

“ அம்மு”

“………………”

“ அம்மூ”

“ வாட் மம்மி ?”

“ மம்மினு கூப்டாதனு எத்தனை தடவ சொல்றது?”

“ சரி. கூறுங்கள் ராஜமாதா அவர்களே. எதற்காக என்னை அழைத்தீர்கள்?”

“ நக்கல்டி உனக்கு. இத பாரு.”

அவள் கைகளில் மொபைலை குடுத்தேன். மெசேஜை படிக்க ஆரம்பித்தாள்.

“ டியர் அம்மு,

உன்ன மீட் பன்னது ரொம்ப ஹேப்பியா இருக்கு. உன்ன அம்முனு கூப்டலாம்னு சொன்னதும் அவ்ளோ ஹேப்பியா இருக்கு. எங்க என்னை அவாய்ட் பண்ணிடுவியோனு பயந்துட்டே இருந்தேன். தேங்க்ஸ் . நீ அப்படி பண்ணல.

ப்ளான்படி இன்னிக்கு ‘ ஐபேகோ’ல மீட் பன்றோம்தானே ?

வில் பி வெய்டிங் “

மெசஜை படித்தவள் அதிரச் சிரிக்கிறாள்.

“ உங்க நம்பர்னு கூட தெரியாம, இப்படி ஒரு மெசஜ் அனுப்பியிருக்கான்னா ஒண்ணு அவன் லூசா இருக்கனும் இல்ல என் பேர டேமேஜ் செய்யனும்னு யாரோ பன்னிருக்கனும். அதும் இல்லனா ப்ரெண்ட்ஸ் யாரச்சும் ப்ரான்க் பன்னுவாங்களா இருக்கும்”

“ஹ்ம். உனக்கு யாருனு தெரியலையா?”

“ தெரியலையே . ஏம்மா அப்படியே மீட் பன்ன போனாலும் உங்ககிட்ட சொல்லாமலா போக போறேன்?”

“அதுசரி. உன் அப்பா வர லேட் ஆகுமாம். நீ என்ன சாப்பட்ற ? ஆர்டர் தான் செய்ய போறேன்”

“வாவ். சூப்பர் எனக்கு சிக்கன் பிரியாணி. சைட் டிஷ் எனிதிங் ஓகே. நெட்ஃப்ளிக்ஸ்ல ஏதாச்சும் படம் போடறேன். பாக்கலாமா?”

“ஹ்ம் போடு”

டிவியை ஆன் செய்யும் மகளையே பார்க்கிறேன். குழந்தையாயும் இல்லாமல் குமரியாயும் இல்லாமல் சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய் இருக்கிறாள். யாரோ, தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுக்காக அவளது சிறகை வெட்டுவதில் நியாமில்லை. என் கைகளுக்குள் இருக்கும் பட்டாம்பூச்சி இவள். பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டு அழகு பார்ப்பதில்தானே மகிழ்ச்சி.

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...