JUNE 10th - JULY 10th
வீட்டிற்குள் நுழைந்த செங்கண்ணன் வந்ததும் வராததுமாய் அவன் மனைவியிடம்
"அந்த கொடம் எங்க" என்றார்
"எந்த கொடம்"
"அதான்.. அந்த புது சில்வர் கொடந்தான்" என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் இருந்த பரண்மேல் பார்வையை செலுத்தினான்.
"அதோ.. அங்கிருக்கே.. ஏணி போட்டு அத கீழ எடுத்து வை. நான் அரூர் வரிக்கும் போய்ட்டு வரேன்" என்றவன் சட்டைப்பையை பார்த்தான்.
சட்டைப்பைக்குள்ளே ஒரு பழைய ஐநூறு ரூபாய் தாளும் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றும் இருந்தது. வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒரு ஆட்டை பிடித்துக்கொள்வதாக சொல்லி கரீம் பாய் கொடுத்த முன்பணம் அது. அப்போதெல்லாம் அரசாங்கம் பணம் மதிப்பிழப்பை அறிவித்திருக்கவில்லை. போகிற காரியத்துக்கு இந்த பணமே போதுமென நினைத்தான் செங்கண்ணன்.
அடுப்பை ஊதாங்குழலில் 'ஊ...வ் ஊ...வ்" என்று ஊதிக்கொண்டிருந்த அவன் மனைவி ஊதுவதை நிறுத்திவிட்டுக் கேட்டாள் "என்ன ஏதுன்னு சொல்லாம உம்பாட்டுக்கு கொடத்த எடுக்க சொல்ற .. என்னா அடமானம் வக்ய போறியா?"
"அடமானம்லாம் வக்கில.. ஒரேயடியா வித்துப்புடலாம்னு இரிக்கேன். திரும்பி வந்து விலாவாரியா நான் சொல்றேன். டவுன் பஸ்சு வர நேரமாச்சு. இத உட்டா அடுத்து 2மணி பஸ்தான்" என்று சொல்லிக் கொண்டே வீட்டிலிருந்து வெளியேறினான்.
"இந்த மனுசன் என்னாத்துக்கு இன்னிக்கு இப்பிடி பறபறக்குதுன்னு தெர்லியே" தனக்குத்தானே சொல்லிக்கொண்டு புகைந்துக் கொண்டிருந்த அடுப்பை மீண்டும் ஊதத் தொடங்கினாள்.
ஒரு மாதம் முன்பு மாநில அரசு உள்ளாட்சித் தேர்தலை அறிவித்திருந்தது. அறிவித்ததிலிருந்து ஒரே களேபரம் தான். ஊர்த்தலைவர் பதவிக்கு கண்ணப்பனுக்கும் தேவராஜிக்கும் கடுமையான போட்டி. ஊர்த்தலைவரை தேர்ந்தெடுப்பதைப் பற்றி ஊரில் பஞ்சாயத்து நடந்தது. தேவராஜி ஊர் பொதுவுக்கு ஐந்து லட்சம் தருவதாகவும் தம்மை அன்னபோஸ்ட்டாக ஊரார் தேர்வு செய்ய வேண்டுமென்று கோரினான். கண்ணப்பன் விட்டுக்கொடுக்க முடியாதென்று சொல்லிவிட்டான். ஊரார் பஞ்சாயத்து தோல்வியுற்று தேர்தல் உறுதியானது. தேவராஜிக்கு தான் ஊரில் செல்வாக்கு அதிகமாக இருந்தது. அதனால் தேவராஜி தான் ஜெயிப்பான் என்று ஊர் மக்கள் எல்லோரும் முன்கூட்டியே பேசிக்கொண்டார்கள். ஜெயிக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் காசை வாரி இறைத்து செலவு செய்தான் தேவராஜ். எல்லாம் பின்னாடி சம்பாதித்துக் கொள்ளலாம்ன்ற எண்ணம் தான்.
கண்ணப்பன் தேவராஜை விட கொஞ்சம் வசதி குறைவுதான். ஆனால் அவன் ஓட்டு கேட்ட விதம் வித்தியாசமாக இருந்தது. எதிரே தென்படும் எல்லாரிடமும் நெடுஞ்சாணாக நீண்டு காலில் விழுந்தான்.
"இந்த முறை எனக்கொரு வாய்ப்பு குடுங்க.." என்று காலைப் பிடித்துக்கொண்டான்
"சரி உனக்கு ஓட்டு போடுறன். காலை உடுப்பா" என்று சொன்னாலும் காலை விடுவதில்லை.
"எனக்கு ஓட்டுப் போடுறன்னு சத்தியம் செய்யுங்க அப்பன்னதான் கால உடுவேன்" என்று கெஞ்சினான்.
சத்தியம் வாங்காமல் காலை விடுவதில்லை.
கண்ணப்பன் ஊராரின் கால்களில் விழுவதைப் பார்த்து தேவராஜின் குடும்பத்தினர் சிரித்தனர்.
"தேவராஜி ரெண்டாவது முறையா நிக்கறான். அஞ்சு வருஷம் இந்த ஊருக்கு தலைவனா இர்ந்து என்னத்த பெருசா செஞ்சுபுட்டான். கண்ணப்பன் கால்ல எல்லாம் உளுந்து ஒரு மொற வாய்ப்பு குடுங்கன்னு கெஞ்சறான். அவனுக்கு இந்த முறை ஓட்டு போட்டு தான் பார்ப்போமே" என்று வடக்குத்தெரு சோமசுந்தரம் பேசியது தேவராஜின் காதுக்கும் வந்தது.
இதையெல்லாம் கேட்ட தேவராஜிக்கு தேர்தல் தேதி நெருங்க நெருங்க உள்ளூர கொஞ்சம் ஆட்டம் கண்டு விட்டது. உடனடியாக தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை செய்தான்.
தேர்தலுக்கு இரண்டு நாள் முன்பு தனது பண்ணைத் தோட்டத்தில் மாடுகள் தீனி தின்னும் ரெண்டுத் தொட்டிகளை சுத்தம் செய்தான். அதில் கேன்களில் வாங்கி வந்த பட்டை சாராயத்தை கால்வாசி ஊற்றி முக்கால்வாசி தண்ணீர் ஊற்றினான். ஊரில் போவோர் வருவோர் எல்லோரையும் தனது பண்ணை தோட்டத்துக்கு அனுப்பி வைத்தான்.
தோட்டத்தில் சாராயம் தாராளமாக கிடைக்கிறது என்று தெரிந்தவுடன் அங்கே இரண்டு நாளும் தங்கிக்கொண்டவர்களும் உண்டு.ஒரே முறை போய் குடித்துவிட்டு திரும்பியவர்களும் உண்டு. அடிக்கடி போய் குடித்துவிட்டு வந்தவர்களும் உண்டு. மாலையில் போனால் மட்டும் கோழிக்கறி கிடைக்கும். அதனால் மாலையில் கூட்டம் அங்கு அதிகமாக இருந்தது. மற்ற நேரங்களில் தொட்டுக்க ஊறுகாய் மட்டும்தான்.
தேவராஜ்க்கு செங்கண்ணன் ஒரு வகையில் மாமன் முறை. அன்று செங்கண்ணனைக் கண்ட தேவராஜ்
"மாமா நம்ம தோட்டத்து பக்கம் போயிட்டு வாங்க மாமா"என்று நாகரீகமாகவும் மரியாதையாகவும் சொன்னான்.
எப்போதாவது குடிக்கும் பழக்கமுள்ள செங்கண்ணன் சிரித்துக்கொண்டே தலையாட்டினார்.
தேவராஜ் சொல்லும் முன்பே செங்கண்ணனுக்கு அங்கு நடப்பதெல்லாம் தெரியும். இருந்தாலும் தேவராஜி சொல்லும் வரை அவர் அங்கு செல்லவில்லை.
அன்று மாலை தேவராஜின் தோட்டத்துக்கு சென்ற செங்கண்ணன் மாட்டுத் தொட்டியில் இருந்த சாராயத்தை அதற்கென்று அங்கு வைக்கப்பட்டிருந்த தம்ளரில் மொண்டுவந்து உட்கார்ந்து கொண்டு மெதுவாக குடிக்கத் தொடங்கினார். அங்கே வடக்குத் தெரு சோமசுந்தரமும் கண்ணப்பனின் பங்காளியான ராஜகோபாலும் கூட இருந்தார்கள்.
சிலர் தேர்தல் அன்றும் ஓட்டு போட்டுவிட்டு அங்கு குடிக்க சென்றனர். தேர்தல் அன்று தேவராஜ் தோட்டத்தில் சாராயம் கொடுப்பதை யாரோ போலீசுக்கு சொல்லிவிட்டார்கள். போலீஸ் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. தேர்தல் விதிமுறை மீறல் நடந்திருப்பதாக தேவராஜ் மீது வழக்கு பதியப் போவது உறுதிதான் என்று கண்ணப்பன் அணியினர் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு போன போலீஸ் அங்கிருந்த தீனி தொட்டிகளைப் பார்வையிட்டனர். பின்பு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்தத் தொட்டிகளில் முக்கால்வாசி தண்ணீரும் ரெண்டு படித் தவிடும் தான் இருந்தது. உடனே இன்ஸ்பெக்டர் "யோவ் கான்ஸ்டபிள் உள்ள கையைவுட்டுப்பாருய்யா.. உள்ள பாட்லு கீட்லு இருக்கபோவுது" என்றார்.
உள்ளே கையை விட்டு துளாவிய கான்ஸ்டபிளுக்கு சில புண்ணாக்குகள் மட்டுமே தென்பட்டது.
போலீஸ் வரக்கூடிய செய்தியை முன்கூட்டியே தெரிந்துகொண்ட தேவராஜ் அணியினர் தொட்டியில் சாராயத்தை காலி செய்துவிட்டு தண்ணீர் ஊற்றி தவிடு கலந்து விட்டிருந்தனர்.
கண்ணப்பன் அணியினர் தான் போலீசுக்கு தகவல் சொல்லி இருப்பார்கள் என்று தேர்தல் அன்றே கண்ணப்பன் அணிக்கும் தேவராஜ் அணிக்கும் சண்டை வந்து விட்டது.
தேர்தல் நடந்த மூன்றாவது நாளில் அரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சீட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஊர்மக்கள் கணித்தது போலவே தேவராஜ் 102 ஓட்டுகள் முன்னணியில் இருந்தார். தேவராஜின் தம்பி ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பட்டாசுகளை ஊரில் வெடித்தான். அப்போது வீதியில் மேய்ச்சலுக்குச் சென்று கொண்டிருந்த செங்கண்ணனின் செம்மறி ஆடுகள் தலை தெறித்து ஓடின. கையில் நீண்ட தடியை வைத்துக்கொண்டு ஆடுகளின் பின்னால் வந்து கொண்டிருந்த செங்கண்ணன் சிதறி ஓடும் ஆடுகளை ஒருவழிப்படுத்த "ஏய்..ஏய்..." என்று கத்திக் கொண்டே ஓடினார்.
வாக்குச்சீட்டு எண்ணிக்கை முடிந்தது. இறுதியில் பதினேழு ஓட்டுக்கள் வெற்றியை நிர்ணயம் செய்தது. பதினேழே ஓட்டு வித்தியாசத்தில் கண்ணப்பன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். தேவராஜால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை ஏற்றுக் கொள்ளாத தேவராஜ் மறு எண்ணிக்கை வேண்டுமென்று கோரினான். அரசு அதிகாரிகள் கண்ணப்பனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளும்படி சமரச முயற்சி செய்தனர். தேவராஜ் ஏதேதோ காரணங்களைச் சொல்லி மறு எண்ணிக்கை வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றான்.
பிரச்சனை பெரிதாகும் போல இருந்ததால் வாக்கு எண்ணிக்கை மய்ய தலைமை அதிகாரி தலையை பிய்த்துக் கொண்டிருந்தார். இறுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் அங்குவந்து தேவராஜிடம் நேரடியாகப் பேசி பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். தேவராஜ் தோல்வியை ஒப்புக் கொள்ளும்படி ஆயிற்று.
இவ்வளவு பணம் செலவு செய்தும் ஜெயிக்க முடியவில்லையே என்று தேவராஜி அழுதான். அவனது குடும்பத்தினரும் கதறி அழுதனர். பணம் சிறிதளவே செலவு செஞ்ச கண்ணப்பன் ஜெயித்து விட்டானே என்று அவன் மேல் கடும் கோபமும் பொறாமையும் கொண்டனர்.
தேவராஜின் தம்பி ஒளித்து வைத்திருந்த மீதியான சாராயத்தை குடித்துவிட்டு கண்ணப்பனை வெட்டுவதற்காக கொடுவாளைக் கையில் எடுத்தான்.
உடனே தேவராஜி "தோத்தது போதாதுன்னு ஜெயிலுக்கு வேற போனுமாடா" தம்பியின் கன்னத்தில் ஒரு அறை விட்டு கையிலிருந்த கொடுவாளை வாங்கி தூரத்தில் வீசினான்.
"நம்மகிட்ட வாங்கித் தின்னப் பையன் நம்மளயே எதுத்து நின்னு தோக்கடிச்சிருக்கான். நீ வேண்ணா பாத்துகுனு சும்மா இரு.. என்னால இருக்க முடியாது. ஒண்ணு நான் இருக்கனும் இல்ல அவன் இருக்கனும்" என்று உளறிக் கொண்டு மீண்டும் கொடுவாளை எடுக்கப் போனான்.
"இவன அந்த ரூமுக்குள்ள தள்ளி கதவை சாத்துங்கடா... ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணிட்டாலும் பண்ணிடுவான்" தேவராஜி கட்டளையிட்டான்.
இரண்டு பேர் அவனை இழுத்துக்கொண்டு போய் தோட்டத்திலிருந்த அந்த அறையின் உள்ளே தள்ளிவிட்டு கதவை சாத்தினர்.
"இந்த ஊர்க்கார பயலுக நன்றி கெட்டவங்களா இருக்காங்களே. காசையும் வாங்கிக்கன்னு பொருளையும் வாங்கிகின்னு சாராயத்தையும் குடிச்சிட்டு ஓட்டு போடாம இப்படி ஏமாத்திட்டாங்களே" என்று தேவராஜின் மச்சான் தூபம் போட்டான்.
உடனே தேவராஜிக்கு எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது. யார் யார் ஓட்டு போட்டு இருப்பார்கள். யார் யார் ஏமாற்றி இருப்பார்கள்.. எல்லாருமே நம்மிடம் சிரித்துக்கொண்டே ஓட்டு போடுவதாக சொன்னார்களே.. இவங்களுக்கு அப்படி என்ன நான் துரோகம் பண்ணிட்டன்.
முன்பு கண்ணப்பனுக்கு ஓட்டு போடலாமென பேசிவிட்டு பிறகு தேவராஜோட தோட்டத்திற்கு வந்து இரண்டு நாள் குடித்துவிட்டுப் போன சோமசுந்தரத்தின் நினைவு அப்போது தேவராஜிக்கு வந்தது. சோமசுந்தரம் யாருக்கு ஓட்டு போட்டிருப்பான்? கூட இருந்தே குழி பறித்து விட்டானோ? அவனை மாதிரி இன்னும் எத்தனை பேர்களோ? இப்படி ஏமாற்றி விட்டார்களே...பாவிகள்? மனம் வெதும்பினான்.
ஒரு வாரம் ஓடிப் போனது. அன்று காலை ஊரிலுள்ள கூட்டுறவு பால் சொசைட்டியில் பால் ஊற்றுவதற்காக பால் கேன்களோடு எட்டுபேர் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். பால் ஊற்றிவிட்டவர்கள் சிறிது தள்ளி இருந்த கல் மேடையின் மீது உட்கார்ந்துக் கொண்டிருந்தனர். சிலர் காலியான பால் கேன்களை பிடித்தவாறு வெறுமனே நின்றுக் கொண்டும் சிலர் ஊர்க் கதை பேசிக் கொண்டும் இருந்தார்கள்.
அப்போது அங்கே தேவராஜின் தம்பி பால் எடுத்துக்கொண்டு வந்தான். அவன் வரிசையில் நிற்காமல் பால் ஊற்றும் இடத்திற்கு நேராகச் சென்றான். பால் வாங்குபவர் "அண்ணா.. வரிசைல வாங்கண்ணா" என்றார்.
"இந்த ஊர்க்காரங்க நன்றி கெட்டவங்க.. இவிங்க பின்னாடில்லாம் என்னால நிக்க முடியாது"
தேவராஜியின் தம்பி சொன்ன பதில் பாதை மாறி இருப்பதை உணர்ந்த பால்வாங்குபவன் நமக்கெதுக்கு வம்பு என்று அமைதியாகிவிட்டான். தொடர்ந்து வரிசையில் வந்தவர்களின் பாலை வாங்கித் கொண்டிருந்தான்.
தேவராஜ் தம்பியின் சீண்டலைக் கேட்ட வரிசையில் நின்றுகொண்டிருந்த சோமசுந்தரம் "ஏம்பா.. ஊர்க்காரங்கள பொத்தாம் பொதுவா நன்றிகெட்டவங்கன்னு எப்படிப்பா நீ சொல்லலாம்" என்றான்.
"மாட்டுத்தொட்டில நெறப்பி வச்சிருந்த எங்க மூத்திரத்த குடிச்சிட்டு ஓட்டு போடாமப் போன இந்த ஊரு சனங்க நன்றி உள்ளவங்களா..?"
அவனது வார்த்தைகளை கேட்ட பலர் முகம் சுளித்தனர். சோமசுந்தரமும் அங்கு போய் குடித்தவனாயிற்றே. கோபம் தலைக்கு ஏறியது. இம்மாதிரியான வார்த்தைகளை எப்போதும் அவன் கேட்டதில்லை. தாமும் அங்கு போய் குடித்தது எவ்வளவு பிழையென்று அப்போது தான் உணர்ந்தான். இதை அவன் உணர்கையில் காலம் கடந்துவிட்டிருக்கிறதே! "நமக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை" என்று தம்மையே நொந்தவாறு மறுபேச்சு பேசாமல் வரிசையில் நின்றான்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த தேவராஜின் மாமா முறையாகும் செங்கண்ணனுக்கு கோபம் கொப்பளித்தது. அவரும் அங்கு போய் குடித்தவராயிற்றே!
"எலே... கறந்த பாலு மடியேறாது. சொன்ன சொல்லும் அப்படித்தான். வார்த்தய அளந்து பேசு" சற்று காட்டமாகவே சொன்னார்.
"வா..மாமா.. நீ மீத்தி வச்சிட்டு போன பூண்டு ஊறுகா கல்லு மேல உன்னம் காய்ஞ்சினு கீது. வந்து கொஞ்சம் நக்கிட்டு போவ வா..." என்றான் நக்கலாக.
கல் மேடை மீது உட்கார்ந்திருந்த தண்டபாணி குடிப்பதில்லை. குடித்தவர்களைத் தானே அவன் ஏளனம் செய்கிறான் என்ற இறுமாப்பில் அவன் செங்கண்ணனைப் பார்த்து கெக்கலிப் போட்டு சிரித்தான்.
தண்டபாணி சிரிப்பதைப் பார்த்த தேவராஜின் தம்பி "என்னா.. தண்டபாணி நீ குடிக்க வர்லன்னு சிரிக்கிறியா... உங்கூட்டுக்கு ஐநூர்ருபா குடுத்தோம். உங்கம்மா புதுசா கல்யாணமான ஒந்தங்கச்சிக்கும் தனியா ஐநூர்ருபா வேணும்னு சேத்து வாங்கிக்கிட்டா... ஆனால் ஓந்தங்கச்சி ஓட்டு போட வரவேயில்ல"
தண்டபாணி முகத்தில் சிரிப்பு வடிந்து இறுக்கமானது.
வயதில் மூத்த செங்கண்ணணனுக்கு கோபத்தில் கண் சிவந்துவிட்டது. எப்பவாச்சும் குடிக்கும் பழக்கமுள்ள செங்கண்ணன் தேவராஜி வற்புறுத்தி அழைத்ததால் தான் சென்றான். தேவராஜ் சொந்தக்காரன் என்பதால் ஓட்டும் அவனுக்கு தான் போட்டான். என்றாலும் அன்று குடித்ததை வைத்து இத்தனைப் பேர் மத்தியில் இப்படியா அவமானப்படுத்துவது? அவர் மனம் நொந்தது.
"பாலூத்திட்டு அமைதியா போ செங்கண்ணா" ரங்கனின் வார்த்தைகள் செங்கண்ணனை வேறெதும் பேசவிடாமல் தடுத்தது.
மனைவியிடம் சொல்லிவிட்டு டவுன் பஸ்சுக்கு சென்ற செங்கண்ணன் அதே பஸ்சில் திரும்பிவிட்டிருந்தார். திரும்பி வந்தவர் கையில் ஒரு பை இருந்தது. மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தவரைக் கண்ட அவர் மனைவி "யா... போன வேகத்துல திரும்பி வந்துட்ட. அரூர்ல அப்பிடி என்னா கப்பல் திருப்பற வேலை?"
பதிலேதும் சொல்லாது தன் கையிலிருந்த கைப்பையை சுவர் ஓரமாக வைத்தார்.
வந்து அந்த பையை திறந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள். "இந்த சனியன ஊட்டுக்குள்ள எதுக்கு எடுத்தாந்த?"
"அதுவா... எங்கூட வா சொல்றன்"
அந்தக் கைப்பையையும் ஏற்கனவே அவன் மனைவி எடுத்து வைத்திருந்த அந்த எவர்சில்வர் குடத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினான்.
"யா... எங்க போற இப்ப" என்றுக் கேட்டுக் கொண்டே அவன் மனைவி வேகமாக நடந்து போகும் அவன் பின்னால் ஓடி வந்தாள்.
தெருவின் தொடக்கத்திலிருந்த அந்த மாடி வீட்டின் முன் நின்ற செங்கண்ணன் "தேவராஜி.. தேவராஜி... ஊட்ட உட்டு வெளில வாப்பா"
நீல நிற லுங்கியும் வெள்ளை முண்டா பனியனும் போட்டிருந்த தேவராஜ் வாசலைத் தாண்டி வெளியே வந்தார்.
"இந்தாப்பா நீங்க குடுத்த கொடம். நான் குடிச்ச சாராயத்துக்கு பதுலா இந்தப் பைக்குள்ள ஒரு கோட்ரு இருக்குது... இனிமே எலசினுக்கு கொடம் குடுக்கறன் தண்ணி குடுக்கறன்னு என் ஊட்டு பக்கம் தயவுசெஞ்சு வந்திராதீங்க..." கையெடுத்துக் கும்பிட்டார்.
குடத்தையும் கோட்ரையும் அங்கேயே வைத்து விட்டு தேவராஜின் பதிலுக்கு காத்திராமல் வெறுங்கையோடு திரும்பி போய்க்கொண்டிருந்தார் செங்கண்ணன்.
*****
#597
मौजूदा रैंक
58,633
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 300
एडिटर्स पॉइंट्स : 58,333
6 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (6 रेटिंग्स)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
mlohans
பதவிக்காக மல்லுக்கட்டும் கிராமத்து நிகழ்வு. எதார்த்தம்
anandakumar406
Good story
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स