ஃபைட்டர்

உண்மைக் கதைகள்
4.9 out of 5 (65 रेटिंग्स)
कहानी को शेयर करें

ஃபைட்டர்
(FIGHTER)
- சிவா ஏகநாதன்

“விஜய்! முடிஞ்சவர உன் மைண்ட்-அ வேறு எதுலயாவது டைவர்ட் பண்ணப்பாரு..இல்லனா, நடந்ததையே நெனைக்க வச்சுட்டிருக்கும்..நீ ஏன் ஒரு பெட் வாங்கி வளர்க்கக்கூடாது? நாயி, லவ் பேர்ட்ஸ் அந்த மாதிரி?” என்று என்னை நோக்கி இதே போன்ற பலரது அறிவுரைகள் வந்தவண்ணம் இருந்தன.

எனக்கும் ஒரு கட்டத்தில் அதை ஏன் முயற்சித்துப் பார்க்கக்கூடாது என்று எண்ணம் தோன்றியதும் சில நண்பர்களிடம் விசாரிக்கத் தொடங்கினேன். எனக்கு சிறு வயதிலிருந்தே செல்லப்பிராணி வளர்க்கும் ஆசை இருந்ததில்லை. அதன் வளர்ப்பு பற்றிய எந்தவொரு அனுபவமும் எனக்கும் அம்மாவுக்கும் இருந்ததில்லை. இருந்தும், சந்தையில் பல வகையான நாய்க்குட்டிகளையும் விதவிதமான பறவை வகைகளையும் கடக்க நேரிட்டது. ஏனோ, நாய்க்குட்டிகளை வாங்கி வளர்க்கும் ஈடுபாடு எங்கள் இருவரிடமும் தோன்றவேயில்லை.

இறுதியாக ஏதேனும் பறவை வாங்கலாம் என்று முடிவெடுத்தபோது, “இப்போ குளிர் காலம் தம்பி! இப்போதைக்கு அது வாங்குறது நல்லதில்ல; அத நம்ம சரியா பராமரிக்கலனா சீக்கு வந்துரும்..கொஞ்ச நாள் போனப்பெறவு வாங்குங்க” என்று பறவைகள் வளர்ப்பு பற்றி அனுபவமுள்ள ஒரு பெரியவர் கூற, அந்த முடிவும் கைவிடப்பட்டது.

சில நாள்கள் வரை செல்லப்பிராணி வளர்க்கும் பேச்சே எழவில்லை.

மனச்சோர்வை மறக்க இயன்றவரை ஏதேனும் ஒரு வேலையை இழுத்துப்போட்டுக்கொண்டு அதில் கவனம் செலுத்த முயன்றேன்; இருப்பினும், உள்ளத்தில் தங்கிவிட்ட காயங்கள் வலியைக் கொடுத்துக்கொண்டே தான் இருந்தன. எதிலும் முனைப்பில்லாமல், சுய அக்கறை கொள்ளாமல், முன்பு போல் நண்பர்களிடம் பழக விருப்பமில்லாமல் தனித்தே இருந்தேன். மெய்யுலகிலிருந்து தப்பிக்க புத்தகங்கள் மட்டுமே கைவசம் இருந்தன.

பின்னொரு நாள் ஊரிலிருந்து திரும்பியிருந்த என் மச்சான் சுரேஷுடன் மீன்காட்சியகத்திற்குச் சென்றிருந்தேன். அவனுக்காக மீன் வாங்க வந்த இடத்தில் அதிசயமாக என்னை பல வண்ணமயமான மீன்கள் கவர்ந்திழுத்தன. அதில் ஒரு நீல வண்ண மீன் என்னை வசீகரித்தது; அது மட்டும் தனியாக ஒரு சிறு தொட்டியில் சுறுசுறுப்புடன் நீந்திக்கொண்டிருந்தது. அதன் உடல் மொத்தம் அடர் நீல நிறமாக இருக்க, துடுப்புகளோ சிவப்பும் நீலமும் என இரண்டும் கலந்த நிறம்; ஆண் மயில் தோகை போல் ரம்மியமாக விரிந்தாடிய அதன் வாலின் அழகோ என்னை முற்றிலும் அதன் வசமாக்கிவிட்டது. இரண்டுக்கும் மேற்பட்ட நிறங்கள் கொண்ட அந்த மென்மையான வால் துடுப்பு ஒரு கோணத்தில் காற்றில் பறக்கும் காரிகையின் முந்தானை போல் கூட தோன்றியது. ஹும்! வியப்பாக தான் இருந்தது! ஓர் உயிருக்குள் தான் எத்தனை நிறங்கள்!

என்னை கவனித்தபடி அருகே வந்த சுரேஷ், “இது ஃபைட்டர் விஜய்! இந்த பிரீட் எல்லாமே கலர்ஃபுல்லா அட்ராக்டிவ்வா இருக்கும்..வாங்குறியா? வீட்டுல வச்சுக்குறதுக்கும் நல்லா இருக்கும்..கோல்டு ஃபிஷ் மாதிரி மோட்டார்லாம் போட்டு மெயிண்டயின் பண்ணணும்னு அவசியமில்ல! அதுபாட்டுக்கு இருக்கும்” என்றவுடன் எனக்கு சிறுவயது நினைவுகள் தான் வந்தன. ஃபைட்டர் மீன்களை சண்டை போடவிட்டு வேடிக்கை பார்த்த கூட்டத்தில் நானும் ஒருவனாய் இருந்தேன்.

“ஆங்! வாங்கலாம் மச்சா! இது தனியா இருக்குமா?” என்று கேட்டேன்.

ஒரு புன்முறுவலுடன், “தனியா தான் இருக்கணும்!” என்றான்.

அந்தக் கடையிலேயே அதற்கென ஒரு சிறிய மீன் தொட்டியையும், வழக்கமாக அதற்கிடும் உணவையும் வாங்கிவிட்டு வீடு திரும்பினோம். என்னை மயக்கியது போல் அம்மாவையும் அந்த மீன் மயக்கத் தவறவில்லை. நடுக்கூடத்தில் அதற்கென ஒரு இடம் அமைந்தததும் அந்த இடமே அழகாகக் காட்சியளித்தது. மெய்யுலகிலிருந்து தப்பித்துக்கொள்ள இன்னொரு வழி உருவானது போலிருந்தது.

அதே சமயத்தில் வீட்டிற்கு யாரும் எதிர்பாராத விதமாக அழையா விருந்தாளியாக வந்தது ஒரு சாம்பல் நிறப் பூனை. முதலில் தெரியாமல் வீட்டிற்குள் நுழைகிறதென்று நானும் அம்மாவும் விரட்டிப் பார்த்தோம். ஆனால் எவ்வளவு விரட்ட முயன்றாலும், தினமும் மீண்டும் மீண்டும் வந்ததன் காரணம் புரியவில்லை. முற்றத்தின் ஒரு மூலையில் கழிவு சாமான்கள் நிரம்பி கிடக்கும். அதையே தன் இருப்பிடமாக அப்பூனை ஆக்கிக்கொண்டது. ஒரு கட்டத்திற்கு மேல் விரட்டவில்லை; அதுவும் இங்கே வளர்வது போல் பயமில்லாமல் வந்து சென்றது.

அம்மா அதற்கு பாலும், சோறும் வைக்க வைக்க நன்கு எங்களுடன் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது. தானாக வருகை வந்து ஒரு செல்லப்பிராணியாக மாறியது என்னை ஆச்சரியப்படுத்தியது. சில நாள்களில் அந்த ஆச்சரியம் இருமடங்கானது.. இல்லை மும்மடங்கானது!

“அம்மா! ஒரு நிமிசம் இங்க வந்து பாரேன்!” என்று உள்ளே வேலையாக இருந்தவளை அதைப் பார்க்க வைக்க வேண்டும் என்ற ஆவலுடன் இடைவிடாமல் அழைத்தேன்.

நெடுநாள் கழித்து என் கண்களில் தெரிந்த உற்சாகத்தைக் கண்டு வியப்புடன், “இதோ இதோ வந்துட்டேன்! என்னப்பா, என்ன அங்க?” என்றபடி விறுவிறுவென வந்தவள் நான் பார்த்த திசையைப் பார்த்து நின்றாள்.

உதட்டில் மலர்ந்த புன்னகையுடன், “ஓ! இதுக்குத்தான் இந்தப் பூனை இந்த இடத்தப் புடிச்சுருக்கா! நா அன்னைக்கே நெனச்சேன். சரியா போச்சு" என்றாள்.

எங்கள் பார்வை அந்த மூலையிருந்த குகைக்குள் இருந்து முதன்முதலாக வெளியுலகிற்கு அடியெடுத்து வந்திருக்கும் இரண்டு அழகான பூனைக்குட்டிகள் மீது தான் இருந்தன. அதற்கு நடக்கக் கற்றுக்கொள்ளும் பருவம் அது; இரண்டுமே அதன் தாய் நிறம். இவ்வளவு நாள்கள் தன் குட்டிகளை மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, தாய்ப்பூனை உணவுக்காக வெளியே சென்று வந்து கொண்டிருந்திருக்கிறது. இப்போது அதன் குட்டிகள் வெளியே வரும் நேரம் வந்துவிட்டது போலும்!

தாய்ப்பூனை தன் மடியைக் காட்டியபடி அமர்ந்திருக்க, அந்த இரு பிஞ்சுக் குட்டிகளும் போட்டிப்போட்டுக்கொண்டு பால் குடிப்பதும், மோதி விளையாடுவதும், அவை செய்யும் சிறு சிறு சேட்டைகளும் காண புதுமையான அனுபவமாக இருந்தது.

அவைகளை அலைபேசியில் நிழற்படங்கள் எடுத்து அழகு பார்த்தேன். அந்தப் படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மனம் ஏதோ நினைவுகளில் சிக்கிக்கொள்ள, இயல்பு நிலை கண்முன் வந்து என்னை மௌனமாக அமர வைத்தது.
அருகே வந்து என் காலை வருடிய அந்தப் பிஞ்சுப் பூனைகளைப் பார்த்தேன். பார்த்ததும், பயந்து இரண்டடி பின்னால் சென்ற இரண்டும், பின் மெதுவாக என் முன்னால் வந்தமர்ந்து என்னைப் பார்த்தன. அதன் அழகான மற்றும் அப்பாவியான முகங்கள் மனத்திற்கு இதமான உணர்வை அளித்தன.

தாய்ப்பூனை வெளியே சென்றுவிட்டால் இரண்டும் அதன் குகையை விட்டு வெளியே ஒரு அடி நகராது. அது திரும்பி வந்து குரல் கொடுத்த பின்பு தான் வெளியே வருவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக அர்த்தம். இதுவே தினமும் தொடர ஆரம்பித்தது. வளர வளர இரண்டுக்கும் சேட்டை அதிகரித்தது. நான் கூட அதைத் தொட்டு கையில் தூக்கும் அளவுக்கு பழகிவிட்டேன். வீட்டுற்குள்ளே கூட சகஜமாய் சுற்றித்திரிய ஆரம்பித்தது.

அவ்வப்போது தொட்டியில் நீந்திக்கொண்டிருக்கும் மீன் திடீரென்று காணாமல் போய்விட்டது போல் அதிர்ச்சியூட்டும். ஆனால், கீழே கற்களுக்கிடையில் ஒளிந்து கிடக்கும். அம்மா தன் விரலால் ஒரு தட்டு தட்டியபின் மேலெழும்பி வரும். இதுவே சில நாள்கள் வரை வாடிக்கையாய் வைத்திருந்தது. அதன் சரியான காரணம் அப்போது புரியவில்லை. தொட்டியில் நீரை அடிக்கடி மாற்றியும் அது முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லாமல் இருந்தது கவலையைத் தந்தது.
அந்தக் கவலையை மேலும் கூட்டும் விதமாக தாய்ப்பூனை திடீரென ஒரு நாள் தன் இரண்டு குட்டிகளுடன் இடம்பெயர்ந்து செல்ல முயற்சி செய்தது. தன் இரு குட்டிகளையும் ஒவ்வொன்றாக வாயில் கவ்வியபடி மூன்று வீடுகள் தள்ளியிருந்த காலியிடத்திற்குள் சென்று தஞ்சமடைந்தது.

ஏன் இப்படி செய்தது என்று புரியாமல் இருந்த என்னிடம், “அதுங்க இப்படி தான் பண்ணும்பா; பூனை குட்டி போட்டதும் ஏழு இடம் மாறுமாம்.. சின்ன வயசுல சொல்லி கேட்டிருக்கேன்.. எங்க அமைதியான இடமா இருக்கோ, அங்க தான் அது வசிக்கும்பாங்க” என்று அம்மா விளக்கம் தந்தாள்.

அவள் கேள்விப்பட்டது சரியா தவறா எனத் தெரியவில்லை. ஆனால் அவள் கூறியபடியே அது இடம் விட்டு இடம் மாறிக்கொண்டே தான் இருந்தது. ஆனால் தெருவை விட்டு தாண்டவில்லை.

தெருவில் குடியிருந்தவர்களிடமும் சில நாள்களில் பரிச்சயம் ஆகிவிட்டது. கண்ணெட்டும் தூரத்திலேயே அதன் குட்டிகளுடன் சுற்றித்திரிந்தது ஒருவகையில் எனக்கு ஆறுதலளித்தது.

சோர்வாக நீந்திக்கொண்டிருந்த மீன் ஒரு நாள் நன்கு அடியில் சென்று படுத்துக்கொண்டு நகராமல் இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் மேலே வரவைக்க இயலவில்லை. செத்துவிட்டதோ என்று அஞ்சிய நொடி, அதன் வாலும் துடுப்பும் அசைவிலேயே இருப்பதைப் பார்க்க முடிந்தது.

சுரேஷிடம் கேட்டபோது, “தண்ணி கண்டிஷன் சம்டைம்ஸ் ஒத்துக்காம இருக்கும் விஜய்..அதனால ஏதாச்சும் அஃபெக்ட் ஆகியிருக்கும்..அதான் இப்பிடி பிகேவ் பண்ணுது..மருந்து வாங்கி விட்டுப்பாரு..பார்க்கலாம்!” என்றான்.

இதற்கு கூட மருந்து கிடைக்கும் என்று எனக்கு அப்போது தான் தெரிந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் தூக்கமின்மை சார்ந்த சில பெயரறியாத பிரச்சனைகளைச் சந்தித்தபோது மருத்துவர் எனக்கு பரிந்துரைத்த முக்கியமான மாத்திரை மன அழுத்தத்தைக் குறைக்கத்தான் என்றறிந்துகொண்ட போது கூட இதே சிந்தனை தான் மனத்தில் ஓடியது.

இரவு நேரம் ஆகியிருந்ததால் காலையில் எழுந்ததும் கடைக்குச் சென்று மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். அந்த நேரம் எதிர்பாராத விதமாக ஒரு கெட்ட செய்தி எனக்காக காத்துக்கொண்டிருந்தது.

மீனுக்கு ஏதும் நடந்திருக்கவில்லை. ஆனால் தாய்ப்பூனை அன்று விடியற்காலை சாலையின் நடுவே செத்துக் கிடந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறினர். ஏதோ ஒரு வண்டி அதன் மீதேறிவிட்டது என்ற பேச்சு அடிப்பட்டது. காலையில் வந்த குப்பை வண்டி அதை அகற்றிவிட்டுச் சென்றதாகவும் பேசிக்கொண்டனர்.

அதைக் கேட்டதும் அனிச்சையாய் என் கண்கள் அதன் குட்டிகளைத் தேடின. வீதி முழுக்க தேடி பார்த்தும், இரண்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அரை மணி நேரம் வரை தேடியலைந்த பின், ஒரு மர நிழலில் நின்றிருந்த காரின் மீது சாய்ந்து நின்றேன். அப்போது எங்கிருந்தோ அதன் சத்தம் கேட்டது; முதிர்ச்சியடையாத பிஞ்சுக் குரல் அது. அவை இரண்டும் மர நிழலில் நின்றிருந்த அந்த காருக்கு கீழே தான் பதுங்கியிருந்தன; தங்கள் தாய் ஏதேனும் சாப்பிட கொண்டு வருவாள் என காத்திருக்கும் அக்குட்டிகளின் முகங்களைப் பார்த்தேன்; தாயை அழைக்கும் அதன் இடைவிடாத கூக்குரலைக் கேட்டேன்; மனம் சற்று கலங்கித்தான் போனது.

“இந்தாடா.. ஒங்க அம்மா இனிமே வராது.. வெளிய வந்து இதச் சாப்பிடுங்க..” என்று தெருவில் உள்ளோர் காருக்கு வெளியே உணவை வைத்துவிட்டுச் சென்றனர்.

ஆனால் அதன் தாய் வந்து குரல் கொடுக்காத வரை இரண்டும் எளிதில் வெளியே வரப்போவதில்லை என்று நினைத்தபடி வீட்டிற்குள் சென்றேன். கையில் கொண்டுவந்த நீல நிற மருந்தை கடைக்காரர் கூறியவாறே இரு சொட்டுகள் மீன் தொட்டியில் விட்டேன். தண்ணீர் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக நீலமாக மாறிக்கொண்டே வந்தது. நேற்று பார்த்தது போன்றே நோயுற்ற மீன் சிறு அசைவுகளுடன் அடியில் கிடந்தபடி இருந்தது.

அமைதியாக கட்டிலில் சாய்ந்த எனக்கு, மனமெல்லாம் அக்குட்டிகளின் பரிதாபமான முகங்களே நிறைந்திருந்தன. அவைகளைப் பார்க்கும்போது ஏனோ எங்கள் நிலைமையே தான் எனக்கு பிரதிபலிப்பது போன்று தோன்றியது.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னர், கொரோனா காலத்தில், குறைந்த கால இடைவெளியில் தந்தை, தங்கை என இருவரை அடுத்தடுத்ததாக பறிகொடுத்துவிட்டு நானும் அம்மாவும் செய்வதறியாது மனமுடைந்து நின்ற காட்சி தான் இப்போது அந்த இரண்டு குட்டிகளைப் பார்க்கும்போதும் மனத்தில் தோன்றியது. எங்கள் வாழ்வை முற்றிலுமாக புரட்டிப்போட்ட சம்பவங்கள் அவை. அதிலடைந்த அதிர்ச்சி இன்னும் என் மனம் விட்டு நீங்கியிருக்கவில்லை. அவர்களின் இழப்பை ஏனோ இத்தனை நாள்கள் ஆகியும் ஏற்க முடிவதில்லை. நாள்கள் நகர நகர அவர்களை எங்கோ தனியாக விட்டுவிட்டு வந்தது போன்றதொரு உணர்வை எப்படி போக்க வைப்பதென்று தெரியவில்லை. எப்போதாவது சிறு இன்பம் தோன்றினாலும் அதை அவர்கள் இல்லாமல் அனுபவிக்கின்றோமே என்ற குற்றவுணர்வு பின்தொடர்வதை எப்படி தவிர்ப்பதென்று தெரியாமல் விழிக்கிறேன். இழப்பின் வலி என்பது இது தானோ? இழப்பின் வலி என்னவென்பதை யாரையாவது இழந்த பிறகே தான் மனிதர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பது இயற்கையின் நியதி போலும்!

மனம் தாளாத வலியைச் சுமந்ததால் என்னவோ அது உடல்நலத்தையும் பாதித்தது. போதாதற்கு, வேலையின்மை எனும் நாட்டின் சாபமும் உடன் சேர்ந்து கொண்டது. மன அழுத்தமும் இரட்டிப்பானது. அம்மா மட்டுமே பக்கபலமாக துணை நின்றாள். நான் நம்பிக்கையின்றி இருக்கும்போதெல்லாம் தோள் பிடித்துச் சொல்வாள்.

“இதுக்கு மேல நடக்க என்னப்பா இருக்கு? போனவங்களும் திரும்பி வரப்போறதில்ல..இனிமே உனக்கு நான், எனக்கு நீ..அவ்ளோதான்..வாழ்ந்து தான் பார்ப்போமே!” என்று. அவளுக்குப் பிறந்த பக்குவம் எனக்குள்ளும் பிறக்கத்தான் அத்தனை சிரமப்படுகிறேன்.

அக்காலங்களில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததைப் பற்றி சிந்திக்கும் போதெல்லாம் என் மனத்தில் தோன்றுவதெல்லாம் ஒன்று தான்.

“மன அழுத்தங்குறது சாதாரண விஷயமில்ல; அது நம்ம உடல்ல பல எதிர்வினைகள உண்டாக்கும். உண்மையிலேயே அது ஒரு கொடிய நோய்..அதுக்கு மருத்துவ உதவி அவசியம்..அதே சமயத்துல மனசுக்கு நிம்மதி தர்ற ஒரு சூழல உண்டாக்கிக்குறதும் அத்தியாவசியம்”.

இப்போது அப்படிப்பட்ட ஒரு சூழலைத் தான் தினமும் தேட முயல்கிறேன். ஏனென்றால் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் இப்போதும் பிரிந்து சென்றவர்களை மனம் தேடாமல் இல்லை; அவர்கள் குரலைக் கேட்டுவிட முடியாதா என ஏங்கி தவிக்காமல் இல்லை. அதே போன்று தானே இப்போது அந்தக் குட்டிகளும் ஏங்கிக்கொண்டிருக்கும்? மனிதனுக்கு விலங்கிற்கும் இதிலென்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது! சிந்திப்பாற்றலால் நாம் ஒரு படி உயர்ந்து நிற்கிறோமே தவிர நாமும் விலங்கினம் தான்! ஓர் உயிருக்கும் இன்னோர் உயிருக்கும் இடையேயுள்ள பிணைப்பு சட்டென்று தொலையும் போது மனிதர்கள் தேடி ஏங்குவது போலத்தான் அந்த விலங்குகளின் உணர்வுகளும் இயங்குமென்று நினைக்கிறேன்.

இவ்வாறு என் மனம் முழுவதும் எண்ணங்களால் படையெடுக்கப்பட்டு சூழ்ந்த நொடி மீன் தொட்டியிலும் மருந்தின் நீல நிறம் படையெடுத்து சூழ்ந்திருந்தது.

அன்று இரவும் அக்குட்டிகளை சென்று ஒரு முறை பார்த்தேன். காருக்கு வெளியே வைத்த உணவு அப்படியே தான் இருந்தது. உள்ளே தள்ளி வைத்தாலும் அவை சாப்பிட மறுத்தது. நாளை காலை எப்படியும் வெளியே வரும் என்ற நம்பிக்கையுடன் உறங்கச் சென்றேன்.

நள்ளிரவு நேரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தன. இது வழக்கமாக கேட்பது தான் என நினைத்தேன். ஆனால் விடிந்த பின்னர் தான் அதன் அர்த்தம் புரிந்தது. நான்கைந்து நாய்கள் அந்த இரண்டு பூனைக்குட்டிகளையும் துரத்தியிருக்கிறது. ஒன்று மட்டும் எப்படியோ மரத்தில் ஏறி தப்பி விட்டது. மற்றொன்று நாயிடம் சிக்கியிருக்கும் என்று தான் நினைக்கத் தோன்றியது. அப்படி சிக்காமல் இருந்திருந்தால், ஒரு வேளை வழி தவறிப் போயிருந்தால் இந்த நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்திருக்கும் என்று ஏதோ ஒரு நம்பிக்கையுடன் அன்றிரவு வரை காத்திருந்தேன். ஆனால் வரவில்லை.

உயிர் தப்பியிருந்த பூனைக்குட்டி சோகத்தால் ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் என தன் உடன்பிறப்பை தேடித்தேடி அலைந்தது. உடன்பிறந்தவர்களை இளம்வயதில் இழப்பதென்பது மிகவும் கொடிது; அது வாழ்வில் ஒரு பெரும் துணையை, ஓர் ஈடில்லா நட்பை, பெற்றோருக்குப் பின் அவ்விடத்திலிருந்து அன்பு காட்டும் ஓர் உறவை இழப்பது போன்றதாகும். ஆனால் அந்தப் பூனைக்கு அது நடக்கக்கூடாது என்று எதிர்ப்பார்த்தேன்.

மறுநாள் மாலை நேரம். அம்மா கேட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இன்னும் நான்கைந்து தெருக்கள் கடந்து செல்ல வேண்டும். அப்போது தான் கேட்டது அந்தப் பூனைக்குட்டியின் சத்தம். நன்றாக மனத்தில் பதிந்திருந்தது எனக்கு. அது அந்த இன்னொரு குட்டியின் சத்தம் தான். உடனே அக்கம் பக்கம் தேடினேன். இறுதியாக ஒரு வீட்டுத் தோட்டத்தில் அதைக் கண்டடைந்தேன். அந்த வீட்டில் இருப்பவர்கள் அது எங்கிருந்தோ ஓடி வந்ததாக கூறினர். நாய்களிடமிருந்து காக்க அதை தோட்டத்தில் வைத்து பூட்டி வைத்ததும் தெரிய வந்தது. பாவம்! மிரட்சியில் இருந்தது. என்னை நன்றாக உணர்ந்தும் கையில் ஏறிக்கொள்ள மறுத்தது. ஆனால் நான் அங்கிருந்து நடக்க நடக்க, அதுவும் என் பின்னாலேயே வந்தது. இந்த முறை அதிக சுதாரிப்புடன் பதுங்கி பதுங்கி வந்தது.

இறுதியாக இருவரும் எங்கள் தெருவிற்குள் நுழைந்தோம். மற்றொன்றை தேடும் அவசியமிருக்கவில்லை. என்னுடன் வந்த குட்டியின் குரல் ஒன்றே மற்றொன்றை எங்கிருந்தோ ஓடோடி வரச் செய்தது. இரண்டும் ஒருவழியாக சந்தித்துக் கொண்டது. அவை துள்ளி விளையாடி கொஞ்சிக்கொண்டு தன் அன்பைப் பகிர்ந்துகொண்ட காட்சி விலைமதிப்பற்ற ஒன்று. அந்தத் தருணம் அந்த இரு பிஞ்சுகளும் அனுபவித்த இன்பத்தை நானும் அனுபவித்தேன்.

அடுத்தடுத்த நாளில் இரண்டும் தங்கள் உணவை தாமே தேடிக்கொள்ள ஆரம்பித்தன. யாரையும் எதிர்ப்பார்க்காமல் வாழக் கற்றுக்கொண்டன. இயற்கை தங்களுக்கென்று அமைத்த சூழலை ஏற்கப் பழகிக்கொண்டன. அவைகளைப் பார்க்கும் போதெல்லாம் யாராலும் கற்பிக்க முடியாத ஒன்றை இந்த வாயில்லா ஜீவன்கள் எனக்கு கற்றுத் தருகின்றன என்பன போன்ற எண்ணங்களே தோன்றின.

“இங்க நமக்கு என்ன தான் நடந்தாலும், இந்த உலகம் எதுக்காகவும் நிக்கப்போறதில்ல.. யாரு இருந்தாலும் இல்லைனாலும் நமக்குனு இருக்க வாழ்க்க நகர்ந்து போயிட்டே தான் இருக்கும்.. நாம தான் நகராம ஒரே எடத்துல நின்னு ஏன், எதுக்கு நாம இந்த உலகத்துக்கு வர்றோம், ஏன் இந்த வாழ்க்க, ஏன் விட்டுப் போறோம்னு விடையைத் தேடி தேடி நேரத்த வீணாக்குறோம்..

எல்லா லைஃப்-க்கும் ஒரு பர்ப்பஸ் இருக்குனு சொல்லுவாங்க.. ஆனா எனக்கு தெரிஞ்சு, இங்க எல்லா உயிருக்கும் ஒரே பர்ப்பஸ் தான் இருக்கு.. அது வாழ்றது தான்! நமக்குனு கெடச்ச இந்த கொஞ்ச காலத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பு செலுத்தி இந்த உலகத்த அனுபவிச்சுட்டு வாழ்ந்துட்டுப் போறது தான் இந்த பூமில தோன்ற ஒவ்வொரு லைஃப்-ஓட நோக்கமா இருக்க முடியும்..”.

இது போன்ற எண்ணங்களே அந்தப் பூனைக்குட்டிகளின் செயல்களை உற்று கவனித்த எனக்கு பாடமாக கிடைத்தது.

இரண்டு முறை மருந்திடப்பட்ட மீன் தொட்டி இப்போது மருந்தின் சுவடேயில்லாமல் தெளிந்த நீரைக் கொண்டிருந்தது. நோய்வாய்ப்பட்டு அடியில் கிடந்த மீன் இப்போது முன்பை விட பல மடங்கு வேகத்துடனும் சுறுசுறுப்புடனும் வட்டமடித்து நீந்திக்கொண்டிருந்தது. பிரம்மாண்டமாக விரிந்திருந்த வால் துடுப்பின் அழகும், வசீகரிக்கும் தன்மையும் முதல் நாள் பார்த்ததை விட மிஞ்சியது போன்று இருந்தது. உயிர் பிழைப்பது கடினம் என்று நம்பியிருந்த மீன் இப்போது இவ்வளவு வேகத்துடன் செயல்பட என்ன காரணமாக இருக்க முடியும் என்று சிந்தித்து சிந்தித்துப் பார்க்கிறேன். வியப்பாக இருந்தது! ‘ஃபைட்டர்’ வகை மீன்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும் போது நடக்கும் போராட்டத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் தன்னை மீட்டெடுக்க துடித்த இந்த ‘ஃபைட்டர்’ மீனின் போராட்ட குணம் என்னை மலைக்க வைத்தது. அன்று அது எனக்கு பல உண்மைகளைப் புரிய வைத்தது.

“நாம இருக்குற சூழல் நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் வேணாலும் கொடுக்கலாம்..எவ்வளவு வேணாலும் போட்டு அழுத்தலாம்..ஆனா ஒவ்வொரு முறையும் விழுந்து எந்திரிக்குறப்ப முன்ன விட வலிமையாவும் துணிச்சலாவும் இந்தச் சூழல எதிர்கொள்ள கத்துக்கணும்..முன்ன விட திடமா போராடணும்..முன்ன விட ஒரு படி முன்னேறியிருக்கணும்..நம்மள அடக்க வந்த அழுத்தங்கள அடக்கி ஆளுற அளவுக்கு ஒரு வீரனா உருவாகியிருக்கணும்..

பொதுவா மன அழுத்தத்த கட்டுப்படுத்த மனச சமநிலைல வைக்க பழகணும்பாங்க.. ஹும்! இந்த உலகமே இன்னும் சமநிலைக்கு போராடிட்டு இருக்குறப்ப, நம்ம மனசு மட்டும் எளிமையா சமநிலை அடஞ்சுடுமா என்ன? போராடித் தான் ஆகணும்..

புயலுக்குப் பின் அமைதின்றது இயற்கைக்குப் பொருந்தலாம்.. ஆனா நம்ம வாழ்க்கைல புயல் வீசினா.. அதுக்குப் பின்னால ஒரு பெரிய போராட்டம் தான் இருக்கும்.. எப்படியாச்சும் அதச் சந்திச்சு நின்னுட்டோம்னா, நம்மள விட வேறெந்த புயலும் வலிமையானதா இருக்காது.. சில சமயம் தடுமாறாம இருக்க ஏதாச்சும் பிடிமானம் கூட அவசியப்படலாம்.. அப்போலாம் தோள் கொடுக்குற மாதிரி ஒரு நட்போ இல்ல ஒரு உறவோ இருந்துட்டா போதும்.. எல்லாத்தையும் தைரியமா சமாளிக்கலாம்..

காலத்துக்குத் தான் காயத்த ஆத்துற சக்தி இருக்கும்பாங்க.. ஆனா ஏற்பட்ட காயம் என்னமோ அப்படியே தான் இருக்கும்.. நாம தான் அதத் தாங்கி தாங்கி வலிமையடையுறோம்.. இன்பம் வர்றப்ப அத அனுபவிக்குற மாதிரி, துன்பம் வர்றப்பயும் அத அனுபவிக்குற தைரியத்த நமக்குள்ள வளர்த்துக்கணும்.. அதுல இருந்து தப்பிக்க முயற்சிக்குறது எப்பவும் நிரந்தர தீர்வ தராது.. வர்ற கஷ்டத்த நேரடியா எதிர்கொள்ளணுமே தவிர ஒரு நாளும் அதுக்கு நம்ம அடங்கி போயிரக்கூடாது..

நம்ம வாழ்க்கைலேயே நம்மள நாம ஜெயிக்குறது தான் முக்கியமான வெற்றியா இருக்க முடியும்.. அதுக்கு மிகப்பெரிய பொறுமையும் போராட்டமும் தேவை.. அது மட்டும் நம்மளால செய்ய முடிஞ்சதுனா, அதுக்கப்பறம் நமக்குனு ஒரு சீரான மென்மையான வாழ்க்க காத்துட்டிருக்கும்.. அதனால நடப்பு சூழல வச்சு எந்தவொரு முடிவையும் தீர்மானிச்சுரக்கூடாது.. ஏன்னா இங்க எல்லாமே தற்காலிகமானது தான்.. எல்லாமே மாறக்கூடியது தான்.. மனசுக்குப் பிடிக்காத இந்த இருட்டான சூழல் மாறணும்னா போராடணும்.. நமக்குள்ளயும் வெளியயும் இருக்குற அழுத்தத்த ஜெயிக்குற வர போராடணும்.. நாம ஒரு புது மனுஷனா வளர்ந்து நிக்குற வர போராடிட்டே இருக்கணும்.. ஏன்னா.. ஃபைட்டர்ஸ் ஃபைட் ! பி எ ஃபைட்டர் அகெயிண்ஸ்ட் யுவர் ஓன் ட்ராமா (Trauma)! பி எ வாரியர் (Warrior)! பி எ லைட் (Light) டு யுவர்செல்ஃப்!”.

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...