JUNE 10th - JULY 10th
“அந்தப் பொண்ணு பூங்குழலியை கொன்னுட்டாங்கலாம்டி” என்று அரைத்தூகத்திலிருந்த வேதவள்ளியின் காதருகே கிசுகிசுத்தான் அவளது கணவன் கலையரசன்.
அந்த காலைப்பொழுது அத்தனை அதிர்ச்சியுடன் விடியுமென்று வேதவள்ளி சிறிதும் நினைக்கவில்லை. பக்கத்தில் மகள் கார்த்திகா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். கார்த்திகா கொஞ்சம் தூக்கம் விரும்பி.
என்னய்யா சொல்றே...?” அதிர்ச்சி விலகாமல் கேட்டாள் வேதவள்ளி.
“ஆமாம்புள்ள.... சுக்கம்பட்டி சுடுகாட்டுல வெச்சு கொலை செஞ்சுருக்காங்க... நிர்வாணமா கெடக்குதாம். மொகத்த ரொம்ப சிதைச்சிருக்காங்களாம்”
“அட.... கொலகாரப்பாவிங்களா.. ஒரு பாவமும் அறியாத ஒரு பிஞ்ச இப்படி பண்ணிட்டிங்களேடா...”
“ஷ்.. சத்தம்போடாதே.. பாப்பா முழிச்சிடப்போகுது....” என்றான் மெல்லிய குரலில். வேதவள்ளியும் ஆமோதிப்பதுபோல் தலையாட்டிவிட்டு, திரும்பி மகளைப் பார்த்தாள். அவள் இன்னும் தூக்கத்திலிருந்தாள். மெல்ல எழுந்து வெளி வாசலுக்கு வந்தார்கள். வேலைக்காரி சங்கீதா வாசல் பெருக்கிக் கொண்டிருந்தாள். வேதவள்ளி மறுபடியும் ஒருமுறை மகளை திரும்பிப் பார்த்துக்கொண்டாள்.
மகள் கார்த்திகாவின் பள்ளித்தோழிதான் பூங்குழலி. பக்கத்து ஊரான பருத்திக்காட்டை சேர்ந்தவள். வறுமையான குடும்பம். பெற்றோர் பிச்சுமணி கிருஷ்ணம்மாள். இருவரும் காட்டு வேலைக்குப் போகிறவர்கள். அவர்களுக்கு பூங்குழலி ஒரே மகள்தான். படிப்பில் கெட்டிக்காரி. வறுமை தெரியாத நளினம் அவளது உடையிலும் நடையிலும் இருக்கும். வசதியான இடத்துப் பிள்ளையாயிருந்தால் தினமும் திருஷ்டி சுத்திப்போடுவார்கள்.
கார்த்திகா, பூங்குழலி இருவருக்குமே பதினைந்து வயதுதான் ஆகிறது. பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகத்தான் படித்தார்கள். பதினொன்றாம் வகுப்பிற்கு போகையில் கார்த்திகாவை அக்ரஹாரம் சென்மேரிஸ் பள்ளியில் சேர்த்து இப்போது பஸ்ஸில் பள்ளிக்குப் போய் வருகிறாள். பூங்குழலியோ வலசையூர் பள்ளியில் சேர்க்கப்பட்டு தினமும் சைக்கிளில் சென்று வந்துகொண்டிருந்தாள்.
பத்தாம் வகுப்புவரை இருவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்குப் போனார்கள். இருவரும் ஒன்றாகப் போனால் ஊராரின் கண்கள் அவர்கள் பக்கமே இருக்கும். அத்தனை அழகு. அதிலும் பூங்குழலி கொஞ்சம் கூடுதல் அழகு. அவளது பெயருக்கேற்ப நீள கூந்தல். இருவரையும் ஒப்பிடுகையில் பூங்குழலி கொஞ்சம் தைரியசாலி. துடுக்குத்தனம் நிறைந்தவள். கலகலப்புடன் பட்டென்று பேசிவிடக்கூடியவள்.
கார்த்திகா பயந்த சுபாவம். யோசித்து மெதுவாகப் பேசுபவள். கொஞ்சம் சோம்பேறி. அதனால் மிகத் தாமதாமக் எழுந்து மிக மெதுவாய் குளிக்கச் செல்பவள். சில நேரங்களில் தோழி வந்துதான் எழுப்பிவிடவேண்டும். பெரும்பாலும் பூங்குழலி தயாராகி வந்து காத்திருக்கும் வேளைகளில்தான் கார்த்திகா குளிக்கச் சென்றிருப்பாள். இருந்தும் அவள் விரைவாகக் குளித்துவிட்டு வந்துவிடுவதில்லை.
சில நேரங்களில் குளியலறையிலிருந்து “வீல்” என்று அலறுவாள். பூங்குழலிதான் அரக்கப் பறக்க ஓடிச்செல்வாள். சுவர் உச்சியில் கரப்பான் பூச்சி ஒன்று அவளைப் பார்த்தபடி மீசைபோன்றிருந்த உறுப்புகளை ஆட்டிக்கொண்டிருக்கும்..
“அடச்சீ... பயந்தாங்கொல்லி நகருடி... பாத்ரூமுக்குள்ள இப்படி பயப்படற.. எங்க வீட்டுல பாத்ரூமே இல்ல. சுத்திலும் கோணிப்பை மறப்புதான்.. தெரியுமா?.” என்று பேசியபடியே ஒட்டடை குச்சியால் இலகுவாய் தட்டிவிட்டு அதன் மீசையை கையில் பிடித்தபடி பூங்குழலி வெளியே எடுத்து வரும்போது. கார்த்திகாவிற்கு உடல் நடுங்கிப் போனது. அந்தக் குளியலறையில் பூங்குழலியைத்தவிர யாருக்கும் அனுமதியில்லை. அவள் குளிக்கையில் வேதவல்லியே உள்ளே நுழைந்ததில்லை. இதுவரை வேலை பார்த்த வேலைக்காரிகளுக்கும் அப்படியே.
பிள்ளைகள் பள்ளிக்கு போன பிறகு எத்தனையோ முறை வேதவல்லி கரப்பான் பூச்சியை அடிக்க முயற்சித்திருக்கிறாள். ஆனால் ஒரு முறைகூட அவளிடம் சிக்காமல் ஓடி ஒளிந்து கொள்ளும். கழிவுநீர் வாய்க்காலை ஒட்டிய வீடென்பதால் கரப்பான்களுக்கு அளவே இல்லை.
கார்த்திகாவின் குடும்பம் கொஞ்சம் வசதியானதுதான். அவளுக்கு இரண்டு தம்பிகள். கார்த்திகாதான் மூத்தவள். வேதவள்ளிக்கு சமையல் வேலை தாண்டி வேறு வேலைக்கு உடல் ஒத்துழைப்பதில்லை. காரணம் சரவாங்கி எனும் ருமட்டாய்டு நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறாள். கூட்ட, பெருக்க, துணி துவைக்க என்று எல்லா வேலைகளையும் ஒழிக்க வேலைக்காரி இருந்தால்தான் ஆச்சு. இல்லையென்றால் அந்தக் கவலையிலேயே படுத்து விடுவாள்.
வேலைக்காரிகளை தக்கவைத்துக் கொள்வதிலும் அவளுக்கு பெரும் போராட்டம்தான். இப்போது இங்கே தங்கி வேலைபார்க்கும் சங்கீதா ஐந்தாவது வேலைக்காரி. ஒடிசலான தேகம். கணவனால் கைவிடப்பட்டவள். சுறுசுறுப்பானவள். அவளுக்கும் பூங்குழலியை ரொம்பப் பிடிக்கும்.
“வாழ்க்கையில கொடுப்பினை இருந்தா எனக்கும் கார்த்திகா பூங்குழலி மாதிரி மணி மணியா ரெண்டு குழந்தைங்க இருந்தா போதுங்கா” வேதவள்ளியிடம் புளகித்து சொல்வாள் சங்கீதா.
“பொம்பள புள்ளையே போதுங்கிறியா? ஆம்பள பசங்க வேணாமா? பொம்பள பசங்கன்னா வாழ்க்கையில கடைசி வரைக்கும் எத்தன கஷ்டப்படனும் தெரியுமா?” பதிலுக்கு கேட்டுவைப்பாள் வேதவள்ளி. ஆனால் உள்ளூர பெருமையாயிருக்கும்.
“தாய்மைக்கா! உசுர உருவாக்கற சக்தி அது. அதுக்காக வாழ்க்கைல எத்தினி வேணா கஷ்டப்படலாம்.” வேலைக்காரியின் கூற்று வேதவள்ளிக்கு சரியென்றே பட்டது. எத்தனை தெளிவு. எத்தனை புரிதல். பெண்மையின் மகத்துவம் அப்படி.
தன் மகளாய் பெற்றுக்கொள்ள ஒரு வேலைக்காரியும் ஆசைப்பட்ட அந்தச் சின்னஞ்சிறு சிட்டு பூங்குழலியைத்தான் சிதைத்திருக்கிறார்கள்.
“எப்படிய்யா நடந்துச்சி இந்தக் கொடுமை?” கண்களில் நீர் கோர்க்க கேட்டாள் வேதவள்ளி.
“அதுதான் எனக்கும் தெரியல. அந்தப் பொண்ணோட சைக்கிள் ஓடையில கெடக்குது. ஸ்கூல் யூனிபாம் எரிமேடையில கெடக்குது.”
“அடக்கடவுளே...” எனக் காதுகளைப் பொத்தினாள்.
“ஊரே அங்கதான் கூடிக்கிடக்கு. போலீஸ் வந்து விசாரிச்சிட்டிருக்காங்க. மோப்ப நாயை வரவெச்சிருக்காங்க.”
அதிகாலையில் எழுந்துவிடுபவன் கலையரசன். வீட்டில் டீ தயாராவதற்குள் ரோட்டிற்கு சென்று பெருமாள் டீ கடையில் டீ சாப்பிட்டுவிட்டு வரும் பழக்கம் அவனுக்கிருந்தது. டீ முக்கியமல்ல. டீக்கடையில் பேசப்படும் உள்ளூர் விசயங்கள் முதல் உலக விசயங்கள் வரை கொட்டப்படும் கருத்துகள் முக்கியம். இவனது கட்சி சார்ந்த நடவடிக்கைகளை பகிர்தல் முக்கியம். இன உணர்வை தூண்டிவிட்டு வளர்ந்த ஒரு தேசிய கட்சியின் ஒன்றிய செயலாளர். கொஞ்சம் ‘பவர்’ உள்ள ஆளுமைதான் கலையரசன். கொஞ்சம் சுயநலம் கொண்ட சுகபோகி என்பதும், பெண் சபலம் கொண்டவன் என்பதும் அவனைப்பற்றிய கூடுதல் விவரணை.
உற்ற நண்பர்கள் வந்துவிட்டால் கொஞ்சம் பலான விசயங்களும் பேச்சில் அடங்கும். பெரும்பாலும் அவனது பேச்சிற்கு ஆமாம்சாமி போடுபவர்களுக்கே அனுமதியுண்டு. ஒருமுறை நெருங்கிய நண்பனொருவன் எதிர்த்துப் பேசிவிட்டானென்று இரண்டுநாள் டீக்கடை சபைக்கு போகாமலிருந்தான். வெளி விவகாரத்திற்கு போகவேண்டுமென்றால் கலையரசனின் தயவு தேவையென்பதால் நண்பர்களுக்குள் கூடிப்பேசி எதிர்த்துப் பேசியவனை மன்னிப்பு கேட்கவைத்து திரும்பவும் சபைக்கு வரவேற்றார்கள்.
இன்று காலை அப்படி டீக்கடைக்கு வந்தபோதுதான் பூங்குழலி கொலை செய்யப்பட்ட தகவலறிந்து சுடுகாடுவரை சென்று பார்த்து வந்தான். தன் மகளின் தோழி என்றோ, தன்னுடன் பயின்ற பிச்சுமணியின் மகள் என்றோ, தமது ஒன்றியத்திற்குட்பட்ட பிரஜை என்றோ எந்த சலனமும் அவனிடமில்லை. வீராணம் காவலர்கள் அவனுக்கு நல்ல பழக்கம் என்பதால் விசாரணைக்கு உதவும்படி அவனிடம் கோரிக்கை வைத்தனர். அவனது துணையுடன் பூங்குழலியின் தந்தை பிச்சுமணியிடம் விசாரணையை மேற்கொண்டனர். தாய் கிருஷ்ணம்மாள் மயங்கிச் சரிந்திருந்தாள்.
கார்த்திகாவும் பூங்குழலியும் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை மிகுந்த பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்று வந்தார்கள். இருவரையும் யாரும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. காரணம் கார்த்திகாவின் அப்பன் கலையரசன் முசுடனாயிற்றே. கொஞ்சம் வலுத்த கையும்கூட.
பூங்குழலி பத்தாம்பு முடித்தபிறகுதான் எல்லா சோதனைகளும். வசதியின்மை காரணமாக அவளை வலசையூர் அரசு பள்ளியில் சேர்த்தார் பிச்சுமணி. அப்போதுதான் தோழிகள் இருவரும் பிரிந்தார்கள். ஆனால் கார்த்திகா தன் தந்தையிடம் எவ்வளவோ மன்றாடினாள். தன் தோழிக்கும் பணம் கட்டி தன்னுடன் சேர்த்துவிட உதவும்படி. இல்லையென்றால் தன்னை அவளுடன் அரசு பள்ளியில் சேர்க்கும்படி. இதில் எதுவுமே நடக்கவில்லை, அதில் கார்த்திகாவிற்கு பெருத்த ஏமாற்றம்.
ஆனால் பூங்குழலி ஏமாற்றங்களை ஏற்கப்பழகிவிட்டாள். தினசரி சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது அவளுக்கு பெரும் உவகையாயிருந்தது. ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. அவள் சைக்கிளில் வரும்போதும் போகும்போதும் உடன் பயிலும் மாணவர்களின் காதல் தூதுக்கள், ஊரில் சுற்றித்திரியும் இளவட்டப் பசங்களின் அணுகுமுறைகள் என ஆளாளுக்கு முறைவைத்து முயற்சியை மேற்கொண்டனர். காரணம் ஏழை அன்றாடங்காய்ச்சி பெற்றோர் எதிர்த்து எதுவும் செய்ய மாட்டார்கள் என்கிற துணிச்சல். கார்த்திகாவுடன் பள்ளிக்கு சென்றுவந்த சுதந்திரம், பாதுகாப்பு இப்போது இல்லாததை உணர்ந்தாள். அப்போதுதான் கார்த்திகாவின் அருமை அவளுக்குத் தெரிந்தது.
பூங்குழலியின் இயலாமை கண்டு விதியும் கொஞ்சம் விளையாடியது. பள்ளி முடித்து வீடு திரும்புகையில் வழக்கமாய் துரத்தும் சைக்கிள் படையிலிருந்து தப்பிக்க கொஞ்சம் வேகமாய் சைக்கிளை மிதித்தாள். சர்க்கார் மேடு வந்தபோது எதிரே தனியார் பேருந்து ஒன்று வேகமாய் வருவதைக் கண்டு சாலையின் ஓரம் ஒதுக்கியவள் சாலையின் விளிம்பில் சைக்கிளின் முன்சக்கரம் இறங்கி நிலை தடுமாறி சாலை ஓரத்தில் வெட்டப்பட்டிருந்த பத்தடி பள்ளத்தில் விழுந்தாள். மண்டையில் பலத்த அடி. அப்படியே மயங்கிச் சரிந்தவளை பின்னால் வந்த மாணவர்களும், சில ஊர்ப்பெரியவர்களும் மீட்டு நூத்திஎட்டில் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஊர்ப்பசங்களின் துரத்தல்களினால் ஏற்பட்ட மன அழுத்தம், தலையில் ஏற்பட்ட பலத்த அடி, உடனடியாக உரிய வைத்தியம் செய்ய முடியாத வறுமை என எல்லாமுமாக சேர்ந்து பூங்குழலியை மன நிலை பிறழச்செய்தது, அவள் நினைவிழந்தாள். பூவாய் இருந்த அழகு மகளை இந்தக் கலிகாலம் சிதைத்து பெரும் பாரமாய் ஆக்கிவிட்டதே என்று விசனப்பட்டார்கள் பிச்சுமணியும் கிருஷ்ணம்மாளும். ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்கு கூட்டி வந்தார்கள். “நாள்பட நாள்படத்தான் சரியாகும்” என்று பொத்தாம் பொதுவாக மருத்துவர் சொல்லி அனுப்பிவைத்தார்.
வீட்டிற்கு வந்தவள் தானாய்ப் பேசுவதும், தானாய்ச் சிரிப்பதுமாயிருந்தாள். சைக்கிளை தள்ளிச் செல்வதும், அவ்வப்போது கிடைக்கும் ஏதாவதொரு பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்குப் போவதாய் கிளம்புவதும் “ஏடி..! கார்த்திகா...! நேரமாச்சுடி.... சீக்கிரம் கெளம்பு” என்பதுமாக அவளது பொழுதுகள் கரைந்தன.
“கார்த்திகாவை மட்டும்தான் நினைவில் வைத்திருக்கிறாள் பூங்குழலி” என்று கார்த்திகாவின் பெற்றோரிடம் மன்றாடி அவளை ஞாயிறு பொழுதுகளில் வந்து செல்லும்படி கேட்டுகொண்டனர். ஆனால் கார்த்திகாவின் அப்பா கலையரசன் அதற்கு மறுத்துவிட்டான். கார்த்திகா அவளது அம்மா வேதவள்ளியிடம் அழுது அடம்பிடித்து அனுமதி வாங்கினாள்.
தனது தோழியை சந்திக்கும் ஆவலுடன் வந்த கார்த்திகாவிற்கு ஏமாற்றமாய் இருந்தது. பூங்குழலி இருந்தாலேயொழிய பழைய தோழியாக் இல்லை. அந்த குழந்தைமை இல்லை. கள்ளம் கபடமற்ற சிரிப்பில்லை. கார்த்திகா தன்னைச் சொல்லி அறிமுகம் செய்தும் அவளிடம் எந்த சலனமுமில்லை. அவளது பரிதாபமான நிலையைக் கண்டு அழுது கொண்டே வீடு திரும்பினாள்..
அதற்கப்புறம் பள்ளிக்கூடம், பரிட்சை என்று கார்த்திகாவின் சிந்தனை எல்லாம் படிப்பு சார்ந்தே அமைந்துவிட்டது. பூங்குழலியின் விதி அவளை அதோடு விடவில்லை. அக்கம் பக்கமிருந்த வக்கிர மிருகங்கள் அவளது தாய் கிருஷ்ணம்மா இல்லாத நேரங்களில் கடித்துக் குதறக் காத்திருந்தன. பாதுகாப்பற்ற சூழலில் பூங்குழலியும் பள்ளிக்குச் செல்வதாய் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள். ஒன்றிரண்டு முறை அவளை பக்கத்து ஊர்களிலிருந்து மீட்டுக் கொண்டுவந்து சேர்ப்பதற்குள் பெற்றோருக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. வீட்டிற்கு அழைத்துவந்து பூங்குழலியை அடித்து அவள் அழுவது பொருக்க மாட்டாமல் தாங்களும் சேர்ந்தழுது பெரும் துயருடன் விதியை நொந்தபடி வாழ்க்கையை கடந்துவந்தனர்.
யாராவது ஒருவர் வீட்டில் இருந்து அவளுக்கு காவல் காக்கும்படி பார்த்துக் கொண்டனர். ஆனால் விதி இன்னும் இன்னும் அவர்களை நெருக்கவே செய்தது. வாழப்பாடியில் மிக நெருங்கிய உறவினர் மறைவிற்காக இருவருமே சென்றாகவேண்டிய சூழலில் செய்வதறியாது நின்றனர். நீண்ட யோசனைக்குப் பிறகு பக்கத்து வீட்டு பெரியம்மாளிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு நேரமாக சென்று திரும்பி விடலாம் என்று பயணப்பட்டார்கள். மூதாட்டி கண்ணயர்ந்த வேளையில் பூங்குழலி தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு புறப்பட்டாள். துக்க காரியத்திற்கு சென்று வந்தவர்கள் மகளைக் காணாமல் தங்கள் வீட்டை துக்க வீடாக்கி அழுது அரற்றினர். அக்கம் பக்கம் தெரிந்த இடங்களில் தேடி அலுத்துப்போய் இருண்ட வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தனர். விளக்கேற்றக் கூட திராணியில்லை.
உன் மகளை அங்கே பார்த்தேன் இங்கே பார்த்தேன் என்று யாராவது தகவல் சொல்வார்கள் என்று காத்திருந்த பிச்சுமணி கிருஷ்ணம்மா தம்பதிக்கு காலையில் காவலர் ஒருவர் வந்து சுக்கம்பட்டி சுடுகாட்டில் பிணமாய்க் கிடக்கிறாள் என்று சொன்னபோது இந்த உலகமே இருண்டுபோனதாய் இருந்தது.
பிள்ளையின் முகத்தை பார்த்தே ஆகவேண்டுமென்று சுடுகாட்டிற்கு வந்தாள் வேதவள்ளி. மகளின் தோழி என்பதைவிட பூங்குழலியும் தன மகளென்றே பாவித்து வந்தாள். சொந்த மகள் கார்த்திகாவிற்கு இத்தகவலை சொல்லி அவளை வேதனைப்பட வைப்பதில் வேதவள்ளிக்கு உடன்பாடில்லை. எனினும் ஒரு மகளுக்கு ஆற்றும் கடமைகளிலிருந்து தான் தவறக்கூடாது என்றும் கவனம்கொண்டாள். மகள் பூங்குழலியை சிதைத்தவர்களை வெட்டிப் புதைக்கும் வரை, அந்தக் கொடூரர்களுக்கு உரிய தண்டனை வாங்கிக்கொடுப்பதுவரை தனது கடமை என்றெண்ணினாள்
வேதவள்ளி சுடுகாட்டிற்கு வந்தபோது மோப்ப நாய் அவளெதிரே ஓடிவந்தது.. அவள் ஒதுங்கிச் சென்று துணியால் போர்த்தப்பட்டிருந்த பூங்குழலியின் உடலருகே குனிந்தாள். அவளை நன்கு தெரிந்து வைத்திருந்த உள்ளூர் கான்ஸ்டபிள்...
“வேணாம் மேடம். ரொம்பக் கோரமா இருக்கு. உங்களுக்கு அலவ் பண்ணினா மத்தவங்களும் வேடிக்கை பார்க்க வந்துடுவாங்க...” என்று தடுக்க வந்தான்.
அந்த இடத்தின் கோரம், திரண்டிருந்த கூட்டம், போர்த்தப்பட்ட உடல் என வேதவள்ளிக்கு மயிர்க்கூச்செரியச் செய்தது. இரத்தம் உடலெங்கும் வேகமாகப் பரவி குப்பென்று சூடேறி ஆவேசத்தில் உடலைப் போர்த்தியிருந்த துணியை விளக்கினாள். உடன் திக்கென்றானது. சிதைக்கப்பட்ட முகத்தின் கோரம் அதிர்ச்சியாய் நெஞ்சை தாக்கியது. இதில் எது பூங்குழலி? பார்க்கிறவர்கள் எல்லோரும் திரும்பத் திரும்ப பார்க்கத்தூண்டிய உருவம் எங்கே? பூமுகம் எங்கே? பஞ்சு உடல் எங்கே? தோகை கூந்தல் எங்கே? இந்த சிதைக்கப்பட்ட முகத்தைக் காணவா ஓடிவந்தேன்?’ முகத்தை துணியால் மூடிவிட்டு அருகில் பார்த்தாள். கிருஷ்ணம்மாள் கத்துவதற்குக் கூட திராணியற்று கிடந்தாள். அவளைப் பார்த்ததும் வேதவள்ளிக்கு அடி வயிற்றிலிருந்து ஒரு தீப்பந்தம் கொழுந்துவிட்டு எரிந்து நெஞ்சம் வரை சுட்டது.
“ஐயோ! என் அக்கா இதுக்கா நாம இத்தனைக் கஷ்டப்பட்டோம்? என் செல்லமே உனக்கா இந்த கதி? ‘எவன்டா இந்த மாபாதகத்தை செய்தது? உன்னைப் பெற்றவளும் ஒரு தாய்தானேடா? நல்ல வயிற்றில் பிறந்தவர்களா நீங்களெல்லாம்? உங்களுக்கெல்லாம் அந்த ஆண்டவன் கூலி கொடுப்பானா?” கிருஷ்ணம்மாளை கட்டிப்பிடித்து அழுது அரற்றினாள். தன மகள் கார்த்திகாவை மனசுக்குள் நினைத்து அத்தனை வேகம், அத்தனை காந்தல். அத்தனை உக்கிரம்.
அதே வேகத்தில் எழுந்தவள் கான்ஸ்டபிளை நோக்கினாள். “ இதுவரைக்கும் என்ன தெரிஞ்சது? அழுத்தமாய்க் கேட்டாள்.
“ரேப்பிங் அட்டம்ப்ட் மேடம். அதுல நடந்த போராட்டத்துல...”
“ஐயோ கடவுளே..! இது குழந்தையாச்சே...” என்று கத்தினாள்.
பெண்ணென்றால் அத்தனை கேவலமா? அதுவும் இது சிருமுகையாயிற்றே? பெண்மை கடவுளுக்கு நிகர். குழந்தை என்றால் அதுவே கடவுள்தான். கடவுளையே சிதைப்பார்களா இங்கே?
வேதவள்ளி பூங்குழலியின் உடலை ஆம்புலன்ஸ் வண்டியில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டிற்காக் அனுப்பிவைத்துவிட்டு கனத்த மனதுடன் வீடு திரும்பினாள். வரும் வழியில் மோப்ப நாயை பின்தொடர்ந்த கூட்டம் சிறுபான்மையினர் குடியிருக்கும் காந்தி நகரின் பிரதான வீதியின் துவக்கத்தில் நின்றிருந்தார்கள். மோப்ப நாயோ அப்பகுதி மக்கள் விநாயகர் சதுர்த்திக்காக வைத்து வழிபட்ட பத்தடி பிள்ளையார் சிலையை சுற்றிச் சுற்றி வந்தது. பிறகு பிள்ளையாரைப் பார்த்து குறைத்தது.
ஆவலோடிருந்த மக்களுக்குப் புரிந்து போனது. தலித் மக்கள் குடியிருக்கும் அந்தப் பகுதியிலிருந்துதான் கொலைகாரனோ அல்லது கொலைகாரர்களோ வந்திருக்க வேண்டும்.
வேதவள்ளி வீட்டிற்குள் நுழையும்போது கலையரசன் போனில் லவுட் ஸ்பீக்கரை போட்டு பேசியபடி வெளியே வந்தான். அதில் கேட்ட கரகரப்பான குரல் ஏட்டுவினுடையது என்பதை யூகித்தாள்.
“மோப்ப நாய் காலனி வரைக்கும் வந்து நின்னுடுச்சிங்க.”
நான் நெனச்சேன் அந்த ஈனப் புத்தி அவனுங்களுக்குதான் வரும்னு. எவனாயிருந்தாலும், எத்தனப் பேரா இருந்தாலும் உடனே பிடிச்சி தூக்குல போடணும். ஊரு உலகத்துல இருக்கிற நாய்களுக்கெல்லாம் புத்திவரனும்”
“விசாரிச்சதுல நேத்து சாயங்காலம் வரைக்கும் அந்தப் பொண்ணு இங்கதான்யா இருந்திருக்கு.”
“அப்புறம் என்ன? தூக்கு எல்லாரையும். முட்டிக்கு முட்டி தட்டி கண்டுபிடிங்க..இது நான் வந்துட்டே இருக்கேன்.” என்றபடி செல்போனை அனைத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கிளம்பினான்.
‘அந்த நாய்களுக்கா இத்தனை திமிர்? சும்மா விடக்கூடாது அவர்களை” என மனதிற்குள் கருவியபடியே குளியலறைக்குள் நுழைய முற்பட்டாள். அப்போதுதான் உள்ளிருந்து விசும்பல் சப்தம் கேட்டது. குழப்பமாக கவனித்தவள் அது வேலைக்காரி சங்கீதா என்பதை யூகித்தவள் ‘இந்தப் பிஞ்சுக்குழந்தை எல்லோரையும் எந்தளவிற்கு பாதித்திருக்கிறாள்? கார்த்திகாவிற்கு தோழி என்றாலும் இந்த குடும்பத்தில் ஒருத்தியாகத்தானே வாழ்ந்திருக்கிறாள்? அந்த வலி இருக்கத்தானே செய்யும்?
முதல் கட்ட விசாரணையில் காலனி இளைஞர்கள் பத்து பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தார்கள். அவர்களை இரும்பாலை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில், அந்தப் பத்து பேர்தான் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்தவர்கள் என்றும், சமபவம் நடந்ததற்கு முதல் நாள் பள்ளிக்குப் போகிறேன் என்று சைக்கிளில் வந்த பூங்குழலி அவர்கள் கொடுக்கும் பிரசாதத்தை வாங்குவதற்காக அங்கு வந்திருந்தாள் என்றும் ஒப்புக்கொண்டார்கள்.
அவளது பசியை தெரிந்துகொண்ட நண்பர்கள் அவளுக்கு பொங்கலும் சுண்டலும் கொடுத்து சாப்பிட வைத்திருக்கிறார்கள். பிறகு அவளை அங்கேயே மாலைவரை உட்கார வைத்திருக்கிறார்கள். அதற்குப்பிறகு என்ன நடந்தது என்று தங்களுக்கு எதுவும் தெரியாது” என்றார்கள்.
பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள் என்பது ஊர்ஜிதமானது. ஒன்றிற்கு மேற்பட்டோர் மாறி மாறி இந்த இழி செயலில் ஈடுபட்டிருப்பதும் அறிக்கை சொன்ன தகவல்.
இச்சம்பவம் மாநிலமெங்கும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலையரசனுக்கு கட்சி மேலிடத்திலிருந்து அழைப்பு வந்தது.
“உள்ளூர்ல இருந்துகிட்டு நீயெல்லாம் என்னய்யா பண்ணிட்டிருக்கே? வேடிக்கை பார்த்துட்டிருந்தா உள்ளாட்சித்தேர்தல்ல நாமத்த போட்டுறுவாங்க. சுறுசுறுப்பா செயலாற்றுங்க...” என்று கடுமையான குரலில் உத்தரவு வந்தது.
இந்த மக்களா இப்படி செய்தார்கள்? என்று சிலரும், இந்த மக்கள் இப்படி செய்ய மாட்டார்களே என்று சிலரும் பேசிக்கொண்டார்கள். அந்த ஜனங்களின் தலைவன் அந்த பத்து பேரை காக்கும் பொருட்டு தனது மேலிடத்திற்கு போன் போட்டான். இப்போதுள்ள கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையில் நாம கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று அடக்கி வாசிக்க சொன்னது.
கலையரசன் தனது உறவினர்கள் மற்றும் கட்சி சகாக்களுடன் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டான். உடனடியாக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கு என்று கூட்டம் சேர்த்து கோசமெழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டான். அவர்களை கும்பலாக அள்ளிச்சென்று தற்காலிகமாக ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்தது காவல்துறை.
அன்று மாலையே அவர்களை மண்டபத்திலிருந்து விடுவிக்க வந்த கான்ஸ்டபிள்தான் அந்த தகவலை கலையரசனிடம் ரகசியமாக சொன்னார். அதைக் கேட்டதும் அவனது முகம் இருளடைந்து.
"என்னயா சொல்றே?"
"ஆமாய்யா உங்க ஆள்தான்னு கண்டுபிடிச்சி அவனை நெருங்கறதுக்குள்ள அவனா வக்கீலோட வந்து சரண்டர் ஆயிடடான். "
"அடத் தாயோளி..." என்றவன் சிறிது யோசனைக்குப் பின் " அந்த காலனிகாரன் எவனும் சிக்கலயா? இந்த நாயோட சிநேகிதன்னு யாராவது இருந்தா கொஞ்சம் கோத்துவிடுங்க... ஆனத பாத்துக்கிறேன்னு சொல்லு... இல்லனா இங்க என்னால அரசியல் பண்ணமுடியாதுய்யா கவனத்துல வெச்சிக்க" என்று கிசுகிசுத்தபடி வெளியேறினான்.
அடுத்த நாள் காலையில் சமையல் வேலையெல்லாம் முடித்து கார்த்திகாவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு குளிக்கலாமென்று குளியலறைக்கு போனாள் வேதவள்ளி. அங்கு சங்கீதா உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்.
“ஏய்.. என்ன இது சின்ன புள்ளையாட்டம்? திட்டவட்டமா யாருன்னு தெரிஞ்சா நாமே அவனுங்களுக்கு ஒரு முடிவு கட்டிடலாம்.” என்று சமாதானம் செய்தால்.
அதில்லக்கா... என்னால முடியலக்கா . நீங்க எத்தன நல்லவங்க? ஆயுசு முழுக்க உங்களுக்காக ஊழியம் செய்ய நான் தயார்தாங்கா. ஆனா...” தயங்கினால் சங்கீதா.
“ஆனா என்னடி? குழப்பமாய் கேட்டாள் வேதவள்ளி.
“என்னை மன்னிச்சிடுங்கக்கா”
என்ன சொல்லப் போகிறாள் என்ற குழப்பத்தில் புருவம் சுருக்கிப் பார்த்தாள்.
“நா உங்களுக்கு நல்ல வேலைக்காரியா இருக்கணும்னு நினைக்கிறேன்கா.. ஆனா உங்க வீட்டுக்காரருக்கு வப்பாட்டியா இருக்க முடியாதுக்கா” என்று சொன்னவளின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வந்தது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தால்.
“என்னடி சொல்றே? அதிர்ச்சியுடன் கேட்டாள் வேதவள்ளி.
“இங்க பாருங்க அக்கா...” என்று கையைக் காட்டினாள். மேற்கையில் நகக்கீறல்கள். பாவாடையை கொஞ்சம் மேலே தூக்கி தொடையில் காட்டினாள். ஆங்காங்கே திட்டுதிட்டாய் கன்னிப் போயிருந்தது. கத்தியெடுத்து நெஞ்சில் குத்தியதுபோல் இருந்தது வேதவள்ளிக்கு.
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும். இப்பவே நான் போறேன். வெளில சொன்ன கொன்னுடுவேன்னு மிரட்டிட்டு போறாரு. என்னால் உயிர் பயத்தோட இங்க இருக்க முடியாது. நா தாலிய அறுத்திட்டு வந்தவன்னாலும் எனக்குன்னு ஒரு ஒழுக்கம் இருக்குதுக்கா. அதுக்கு பங்கம் வர நான் அனுமதிக்க மாட்டேன். ரெண்டு நாளா உங்ககிட்ட சொல்லனுமின்னுதான் இருந்தேன். முடியல. இப்பதான் நேரம் வாய்ச்சது நான் வரேன்கா.” என்று கைகூப்பி வணங்கிவிட்டு வேதவள்ளியின் பதிலுக்கு காத்திருக்காமல் விருட்டென்று கிளம்பினாள்.
சிதைக்கப்பட்ட முகத்தோடும், கடித்து குதறிய உடலோடும் பூங்குழலி கார்த்திகாவிற்காக காத்திருப்பதாக தோன்றியது அவளுக்கு. மறுகணம் கார்த்திகாவின் சிதைக்கப்பட்ட முகமும் உடலும் தோன்றி அவளை உலுக்கியெடுத்தது. வீடு சுடுகாடாய்த் தெரிந்தது.
வேதவள்ளி செய்வதறியாது இடிந்துபோய் உட்கார்ந்தாள்.
#276
मौजूदा रैंक
68,410
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 1,410
एडिटर्स पॉइंट्स : 67,000
29 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 4.9 (29 रेटिंग्स)
dtrajanslm
திரைக்கதை நிழலாடியது
m.jayamohansrirajan
உங்களின் படித்தேன், கதை மிகவும் அருமையாக உள்ளது.நான் உங்களுக்கு 5 star கொடுத்துள்ளேன் .படித்து பார்க்கும் பொழுது நன்றாக இருந்தாலும் நிறைய பேர் ரேட்டிங்ஸ் தருவதில்லை. என்னுடைய கதையின் பெயர் லீகார் ஒரே ஒரு கார். இந்த கதைக்கு ஆதரவு தாருங்கள். ஒரு எழுத்தாளராக பெருந்தன்மையுடன் எனது கதைக்கு ரேட்டிங்ஸ் தாருங்கள் நன்றி MJMS !! கிளிக் செய்து ஆதரவு தாருங்கள் https://bit.ly/3caKy2F
babychitra86
மிகவும் அருமையான கதை பெண்களின் அதுவும் குழந்தைகளின் இவ்வாறு கயவர்களால் சூறையாடப்படும் கற்புக்கு நல்லதொரு தண்டனை முடிவு தெரியாமல் போய்விட்டது ம கதை அருமையாக இருக்கிறது
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स