JUNE 10th - JULY 10th
கார்… தரங்கம்பாடியை தாண்டியதும், இடதுபக்கமாக வண்டியை நிறுத்திவிட்டு, கண்ணாடியை இறக்கிவிட்டேன். ஹைவேயில் காற்று சுத்தமாக இருக்க ’இதயம் ஒரு கோவில்…’ என கார் ஸ்பிக்கரில் உருகிகொண்டிருந்தார் இளையராஜா.
ஜில்லென்று காற்று கார் முழுவதும் நிரம்பியது. .அலைகளின் ஒசையை, மணக்கும் மீன் வாசத்தை, உப்பின் சுவையை கொண்டுவந்தது கடல்காற்று. எப்பா…! எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது இந்த காற்றை சுவாசித்து, கல்லூரி செல்லும்போதெல்லாம் பேருந்தில் ஜன்னல் ஒரம் கிடைக்காதா,கண்ணெதிரே கடல் தெரியாதா என ஏங்க வைத்த காற்று.எக்ஸாம் ஹாலில் பேப்பர்களை சிதறடிக்கும் காற்று. எங்கோ ஒரு தொலைவில் ஒலிக்கும் திரைப்பட பாடல்களை எங்கள் வகுப்பறைக்கு ஏந்திவரும் காற்று.
அதே காற்று… இன்றும்… !!!
பத்துவருடங்களுக்கு பிறகு நான் படித்த கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கிறேன். என் கல்லூரி என்னை வரவேற்றது. பூரிக்கும் உணர்வுகளுடன் நான் உள் நுழைந்தேன்.நுழைவாயிலில் அலங்காரவளைவு. டி.பி.எம்.எல்.காலேஜ்-பொறையார். இதுதான் நான் படித்த கல்லூரி. தமிழில் தரங்கம்பாடி பிஷப் மாணிக்கம் லுத்திரன் கல்லூரி. என் இளமைக்காலத்தை வசந்தகாலமாக்கிய கல்லூரி.
என் முதல் காதல் இங்கேதான். மலர்ந்தது.உள்ளே நுழைந்தவுடன் இனம்புரியா சோகம், சந்தோஷம், ஏக்கம் என எல்லாம் கலந்தவொரு புது உணர்வு.
பூக்கள்...அன்று பார்த்த அதே பூக்கள்….. அதே வாசனை… அப்பூக்களின் பூமியாய் எங்கள் கல்லூரியின் வாசலிலேயே இருக்கும் கல்லறைத் தோட்டம்.
"மச்சி, பீ கேர்ஃபுல்…. கல்லறையில் இருக்கிற பேய்,பிசாசு எல்லாம் காலேஜில் பொண்னுங்களா சுத்திகிட்டு இருக்கு. மொத்த பிகரும் - மொக்க பிகருங்க" சுந்தர்.. அன்று சொன்னது சட்டென இன்று நினைவுக்கு வந்து மெலிதாக சிரித்தேன்.
சுந்தர்… என் உற்ற தோழன். படிப்பு வந்து ஒட்டிக் கொள்ளும் முன் அவன் நட்பு வந்து ஒட்டிக் கொண்டது. இன்றுவரை ஒரு உயிர் நண்பனாக, சுகதுக்கங்களில் பங்கெற்கும்
என்னை புரிந்துகொண்ட ஒரு ஜீவனாக என் வாழ்வில் பிணைந்து இருக்கிறான் அவன்.
காரை பார்க் செய்துவிட்டு மெதுவாக நடந்தேன். ஒரு மரத்தை என் கண்கள் தேடின. அந்த மரத்தை காணவில்லை. அது வெட்டப்பட்டு, இன்று பைக் பார்கிங்காக இருந்தது. தரையில் சிமிண்ட் குண்டும் குழியுமாய் இருந்தது. அந்த மரத்தின் பெயர் தெரியவில்லை - குட்டையாக, அடர்த்தியாக கிளைபரப்பி இருந்த மரம். வெய்யிலையும், மழையையும் தாங்கும் மரம். காலேஜ் விட்டதும் இங்கு நின்றுகொண்டு மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்போம்.
எத்தனை இனிய நினைவுகள். மழை நின்றதும் - மாணவிகள் நின்றுகொண்டிருக்கும்போது, மழைத்துளிகள் பூத்திருக்கும் மரக்கிளைகளை மாணவர்கள் உலுக்குவதை கண்டு ரசித்திருக்கிறேன். நிறைய நினைவுகள் மரத்தை சுற்றியே இருக்க – இன்று அங்கு இல்லாத மரம் வலித்தது.
சங்கீதா முதன்முதலாக என்னிடம் பேசியதும் அந்த மரத்தடியில்தான்.
சங்கீதா - கல்லூரி பருவத்தில் என் இனிமையான சங்கீதம். அதுவரை வறண்டு கிடந்த என் வாழ்க்கையில் என்னையும் அறியாமல் அவள் ஒரு தென்றலாய் நுழைந்த தருணம் அது.
கல்லூரி தொடங்கி ஒரு வருடம் முடிந்துவிட்டிருந்தது. ஆனாலும் என் வகுப்பில் இருந்த பெண்களிடம் நான் பேசியதே இல்லை. எனக்குள் இயல்பாகவே இருந்த கூச்சசுபாவமா இல்லை, வேறு எதாவதா என்று தெரியவில்லை. அப்பொழுது நான் பொறையாருக்கு சிதம்பரத்தில் இருந்து தினமும் வந்து கொண்டிருந்தேன். வகுப்பு முடிந்தவுடன் பஸ் பிடிக்க ஓடிவிடுவதும் ஒரு காரணம்.
அன்று…
அதுவொரு மழைநேரத்து மாலை. அன்றுதான் நான் சங்கீதாவை மிக அருகில் பார்த்தேன். காட்டன்புடவை. கூந்தலில் ஒற்றை மஞ்சள்ரோஜா. மாநிறம். மெல்லிய விரல்கள். புத்தகங்களை அணைத்தபடி நின்றிருந்தாள்...எளிமையான அழகு.
அவளது அந்த விழிகள்....
"பெரியமழையா இருக்கு. எப்படி பஸ் ஸாட்ண்டுக்கு போறதுன்னு தெரியல" இதுதான் அவள் என்னிடம் முதலில் பேசிய வார்த்தைகள்.
'நீங்களாவது இங்க இருக்கற காரைக்கால். நான் சிதம்பரம் போகனும்' என்றேன்.
"அதான் பெல் அடிச்சவுடனே யார்கிட்டயும் பேசாம ஒடிப்போயிடிறீங்களா ம்…பெல்பாய்!. நாங்க உங்களுக்கு பெல்பாய்ன்னு செல்லப்பெயர் வச்சிருக்கோம்" என்றாள் சிரித்தபடி.
நானும் சிரித்தேன். எங்கள் நட்பை பூக்கவைத்த அந்த மரம்
இன்று இல்லை… வெட்டி விட்டார்கள்… ஏன் வெட்டிவிட்டார்கள்? யார் வெட்டியது?
பழைய நினைவுகளை சுமந்தபடி லைப்ரரிக்குள் சென்றேன். மாற்றங்கள் இல்லாது பழைய வாசனையோடு என்னை வரவேற்றது. இங்கேதான் என் இலக்கியத்தேடல் ஆரம்பித்தது
"காலேஜ் மெகசின்ல உங்க கவிதைகள் படிச்சேன். சட்டுன்னு நம்பவே இல்லை. உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கவே இல்லை இன்பா. சூப்பர்" என்று என் பக்கத்தில் உட்கார்ந்தாள் சங்கீதா. நான் எழுதிய கவிதையில்… வார்த்தைகள் வந்து உட்கார்ந்ததை விட மிக நேர்த்தியாக. சிறகுகள் முளைத்ததாய் உணர்ந்தேன்.
"நீயும் கவிதை எழுதுவியா, சங்கீதா"
"அய்யோ இல்லை. நிறைய சினிமா பாட்டு கேட்பேன். இளையராஜான்னா எனக்கு ரொம்ப,ரொம்ப பிடிக்கும்". .
நீங்க என்று இருந்த நட்பை நீ என்று மலரவைத்தார் எங்கள் இருவருக்கும் பிடித்த இளையராஜா.
தினமும் அவளுடன் பேசுவதற்காக காத்திருக்க தொடங்கினேன். அப்படி பேசும்பொதெல்லாம் இனம்புரியா ஒரு பரவசம் பரவுவதை உணர்ந்தேன்
மற்ற மாணவர்களின் கண்களுக்கு நாங்கள் ஜோடியாக தெரிய ஆரம்பித்தோம். "நம்ம க்ளாசில் இருந்து ஒரே டைம்ல இரண்டு மேரேஜ் இன்விடேஷன் வரப்போகுது" என்று ஒருநாள் அனைவரின் முன்பாகவே எங்களை கலாய்த்தான் சுந்தர்.
எங்கள் பேச்சுக்கள் எத்தனையோ இருந்தன. பல விஷயங்கள் பலமணி நேரம் பேசி இருக்கிறோம். ஆனால், நாங்கள் இருவருமே பேசிக்கொள்ளாத டாபிக் காதல்.
காதல் சம்பந்தப்பட்ட பேச்சுக்களை நான் மிகவும் கவனமுடன் தவிர்த்தேன் என்று சொல்லவேண்டும். மற்ற மாணவர்களைவிட அவள் என்னிடம் அதிகமாக நெருங்கிப்பழக அதுதான் முக்கிய காரணம் என்று புரிந்துவைத்திருந்தேன்.
ஒரு நாள் அவள் என்னிடம் பேசியதை மறக்கமுடியாது.
"இன்பா, நீ ரொம்ப நல்லவன்டா" என்றாள்.
"எப்படி சொல்ற. ஒரு பொண்ணு க்ளோஸா பழக ஆரம்பிச்ச உடனே நான் மத்த பசங்க மாதரி லவ்ன்னு டிராக் மாறாம இருக்கறதனாலயா" என்று கேட்டேன்.
இல்லை என்று தலையாட்டினாள்.
"எப்ப பேசினாலும் நீ என் கண்ணை நேரா பாத்து பேசற" என்று சொல்லிவிட்டு புன்னகைத்தாள்.
அன்று அவள் சொன்ன பதில் ஒரு மின்னலாய் எனக்குள் வெட்டியது.
முதன்முறையாக நட்பை தாண்டிய காதலை உணர்ந்த நொடி - அந்த நாள் வந்தது.
"அம்மனுக்கு மட்டும் பூ வாங்கினா போதுமா. உன் ஆளுக்கும் ரெண்டு முழம் வாங்கிகொடுப்பா" என்று திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில் வாசலில் பூ விற்கும் பெண்மணி சிரித்தபடி சொன்னபோது, சுர்றென்றது. ஒரு கணம் திடுக்கிட்டேன். ஏதோ ஒரு பெரிய மழையில் நனைந்ததை போல நடுங்கிவிட்டேன். சட்டென்று திரும்பி சங்கீதாவை பார்த்தேன்.
முகத்தில் நாணம். உதட்டோர புன்னகை. என் படபடப்பு மெலிதானது. அப்புறம் என்னைப் பார்த்த அந்த விழிகள்...வழுக்கி விழ வைத்தன அவள் விழிகள். அந்தப் பார்வைக்கு நிறைய அர்த்தங்கள். அர்த்தங்கள் அத்தனையுமே சம்மதம் எனும் திசையில் பயணித்தன.அந்த ஒற்றைப் பார்வை சில நாட்கள் தூக்கத்தை விலையாய்க் கேட்டது.
ஆனாலும், அந்த சம்பவத்திற்கு பின்னும்கூட நாங்கள் இருவருமே அது பற்றி பேசியதில்லை.
வகுப்புகள் நடந்துகொண்டிருந்ததால் படித்த க்ளாஸ் ரூமை ஒருகணம் எட்டிப்பாத்துவிட்டு, நடந்தபடியே கேண்டின் பக்கம் வந்தேன். நானும், சங்கீதாவும் கடைசியாக பேசிக்கொண்ட இடம். ஒரு டீக்கடை போல இருந்த கேண்டின் இன்று ஒரு சிறிய ஹோட்டல் போல மாறி இருந்தது. டீ குடித்தபடி அமர்ந்தேன்.
அன்றைக்குதான் ஐந்தாவது செமஸ்டரின் கடைசிதேர்வு முடிந்திருந்தது..அதற்கு பிறகு ஆறாவது செமஸ்டருக்கு கம்ப்யுட்டர் சயின்ஸ் மாணவர்களாகிய நாங்கள் கல்லூரியைவிட்டு வெளியில் சென்று ப்ராஜெக்ட் செய்யவேண்டும்.
நாங்கள் இருவரும் இங்கேதான் அமர்ந்திருந்தோம்.
"சென்னைல ப்ராஜெக்ட் கிடைச்சருக்கு. மேல எம்.பி.ஏ படிக்கனும்னு நினைக்கிறேன் உன் ப்ளான் என்ன இன்பா".
"சிதம்பரத்திலேதான் ப்ராஜெக்ட் பண்ணப்போறேன். எங்க பெரியப்பா ஒருத்தர் துபாய்ல இருக்கார். அவர் டிகிரி வாங்கினதும் விசா அரென்ஜ் பண்றேன்னு சொல்லி இருக்கார்"
கடல்காற்று ஊவென்று சத்தத்துடன் பலமாக வீச, உடல் மாலை நேர குளிரில் நடுங்கியது. சங்கீதா என்னை பார்த்த பின் தலை குனிந்து சொன்னாள்.
"என்ன வேணாலும் படிச்சிக்கோ.ஆனா அப்படியே அலயண்ஸ் பாக்குறேன்னு அப்பா சொன்னார்" சொல்லிவிட்டு நேராக என் முகத்தை பார்த்தாள் சங்கீதா.
"நீ என்னப்பா சொன்ன" உள்ளுக்குள் எழுந்த பதட்டத்தை வெளிக்காட்டாமல் சாதாரண தொனியிலே கேட்டேன்.
"என்ன சொல்றது. சரின்னுதான் சொன்னேன். ஆனா மாப்பிளையை எனக்கு பிடிச்சாத்தான் மேரெஜ் அப்படின்னு சொல்லிட்டேன் இன்பா"
ஒரு நிமிட அமைதிக்கு பின்னால் சொன்னாள்.
"உன்னை மாதரி ஒரு நல்ல பையன் கிடைச்சா உடனே ஒகேதான்".
இப்படி ஒரு பதிலை அவளிடம் இருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை..கைகள் நடுங்கத்தொடங்கின.
"ஐ லவ் யூ சங்கீதா" என்று வாய்வரை வந்த வார்த்தைகளை மிகுந்த சிரமத்துடன் தொண்டைக்குளே விழுங்கினேன்.பதில் எதுவும் சொல்லாமல் ஒரு வெற்று சிரிப்புடன் தலையாட்டி விட்டு உடனே எழுந்துவிட்டேன்.
எதற்கு பயம். ஏன் என்னை பிடிக்கவில்லையா? இத்தனை நாட்களாக நம்மிருவரிடம் இருந்த உறவு என்ன? கேள்விகளை வீசிய அவளது விழிகளுக்கு அன்றைக்கு விடைகள் இல்லையே என்னிடம்.
பாவம் அவள். ஆசையாய் காதலை சொல்லவரும்போது நான் எந்த பதிலும் பேசாமல் சட்டென்று விலகிபோனது அவளுக்கு எவ்வளவு வலித்திருக்கும்? என்ன நினைத்திருப்பாள்? காதலனாக மட்டுமல்ல ஒரு நண்பனாகவும் இருக்க தகுதியற்றவன் என்றா? உலகின் மிகக்கொடுரமான தண்டனையான புறக்கணிப்பை அவளுக்கு தந்தேன். அதை எண்ணி எண்ணி வருந்தினேன்.எனக்குள் அந்த வலியின் சுவடுகள் இன்னமும் மறையவே இல்லை.
அதுதான் நாங்கள் கடைசியாக பேசிக்கொண்டது. அதன்பிறகு நான் அவளை முற்றிலுமாக தவிர்க்கதொடங்கினேன். ப்ராஜெக்ட்டுக்கான அந்த இடைவேளை எனக்கு மிகவும் உதவியது. ஒரு சிலமுறை அவள் தொலைபேசியில் அழைத்துபோது, மிகச்சுருக்கமாக சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு, அப்புறம் பேசலாம் என்று 'கட்' செய்துவிட்டேன். அதன்பிறகு சங்கீதாவும் என்னை தொடர்புகொள்ள முயற்சிக்கவில்லை.
கல்லூரியின் இறுதி நாளான ஃபேர்வெல்டேவுக்குகூட நான் சொல்லவில்லை. அவளை மீண்டும் சந்திக்கும் துணிவு அற்றவனாக இருந்தேன்.
அதற்குபின் ஒரு நாள் சுந்தரே என்னை தேடி சிதம்பரம் வந்தான். என் வீடு அலங்கோலமாய் இருந்தது. வீட்டுவாசலில் அப்பா குடித்துவிட்டு படுத்துகிடந்தார். மதுவின் மணம், அப்பாவின் நிலை இரண்டுமே சுந்தரை அவஸ்தைப்படுத்தியது.
அவனை பார்த்ததும் அம்மா "வாப்பா சுந்தரு. வா… உள்ள வா… அவரு அப்படித்தான்… வீட்டுல வயசுக்கு வந்த பொண்னுங்க இரண்டு இருக்கு. இந்த ஆளு எப்படி கிடக்குறாரு பாருப்பா" என்று
அழுகையான குரலில் அவனிடம் சொன்னாள்.
"இவருதான் இப்படின்னா இன்னொரு பக்கம் ஒன் ப்ரெண்டு யார்கிட்டயும் எதுவும் பேசாம, கொஞ்ச நாளா பைத்தியம் புடிச்சா மாதரி இருக்கான். நீதான்ப்பா அவன் கிட்ட பேசி என்ன பிரச்சனைன்னு கேட்கனும்" அம்மா அவனிடம் அழுதபடி புலம்பினாள்.
எனக்கும் அது கேட்டது.
சுந்தர் என்னைக் கண்டதும் மெலிதாய் புன்னகைத்தான். கோபமும்,பரிதாபமும் கலந்தவொரு புன்னகை.நான் துவண்டேன்.
"என்னாடா ஃபேர்வெல்டேக்கு வரல. ஒரு தகவலும் இல்லை. ஏன் இப்படி இருக்கே".
‘ஒண்ணும் இல்லடா. நல்லாதான் இருக்கேன்.
" உனக்கு என்ன… சினிமாவுல வர்ற ப்ளட்கேன்சரா" என்றான் கோபத்துடன்.
"நீ இப்ப அப்படித்தான் இருக்கடா. இந்த ஆறுமாசத்துல பாதி உடம்பு போயிடுச்சு. தாடி வேற" என்றவன், சற்று நிதானித்து கேட்டான்.
"உண்மைய சொல்லு. சங்கீதா என்ன சொன்னா. பிடிக்கலன்னு சொல்லிருப்பா. அதான. அவளும் அந்த பங்ஷனுக்கு வரல".
சங்கீதா அன்று கேண்டினில் பேசியதை சொன்னேன். பெரும் ஆச்சரியத்துடன் என்னைப்பார்த்தான் சுந்தர்.
"இதைவிட ஒரு பொண்ணு எப்படிடா காதலை சொல்லுவா. உன் கையை பிடிச்சு லவ் யூன்னு சொல்லனும்னு எதிர்பார்க்கிறியா
முட்டாள்" என்று உரிமையாடு கத்தினான்.
எனது மெளனம் அவனை இன்னும் கோபப்படுத்தியது.
"உடனே போய் ஆம்பளையா தைரியமா போய் லவ்வ சொல்லுடா. எப்பேர்ப்பட்ட பொண்னுடா அவ. போடா" என்றான்.
அன்று அவனிடம் நான் சொன்ன வார்த்தைகள் இன்று அப்படியே நினைவுக்கு வந்தது.
“அவளை நான் உயிரா லவ் பண்றேன். ஆனா நான் இப்ப இருக்கிற நிலமையில அதை அவகிட்ட போய் சொல்லமுடியாதுடா~ என தொடர்ந்து என் நிலையை விளக்கினேன்.
என் பேச்சில் இருந்த நியாயத்தை கண்கூடாக உணர்ந்திருந்த சுந்தர், கோபம் தணிந்து திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான்.
“சங்கீதா ஒரு தேவதை. ஆனா என் வீடு ஒரு மிடில்க்ளாஸ் நரகம்டா மச்சி. “என்று முடித்தேன் நான்.
இன்று நிதானமாக அலசிப்பார்க்கிறேன்.உணர்ச்சிவயப்பட்ட அந்த கல்லூரி வயதில் எப்படி என்னால் குடும்பசூழலை முன்னிருத்தி காதலை புறக்கணிக்கமுடிந்தது? அப்படி ஒரு முடிவு எடுக்கும் மனப்பக்குவத்தை தந்தது எது?
அப்பொழுதெல்லாம் நான் தேடித்தேடி படித்த பாலகுமாரனின் எழுத்துக்களா?அல்லது இளமையில் நான் அனுபவித்த வறுமையா?
ஒருவேளை நான் சங்கீதாவை ஏற்றுக்கொண்டிருந்தால், அன்று இருந்த நிலையில் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நிச்சயம் என்னால் அமைத்து தந்திருக்கமுடியாது.
இன்று துபாயில் ஒரு நல்ல வேலையில் செட்டில் ஆகி இருக்கிறேன்., என் குடும்பபொறுப்புகளை எல்லாம் முடித்து சமுகத்தின் முன்பு, உறவுகள் முன்பு தலை நிமிர்ந்து கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறேன். இவை அனைத்துக்கும் முழுக்காரணம் அன்று நான் காதலில் தோற்றதுதான்.
ஆனால் இத்தனை வருடங்கள் கடந்தும் மனதுக்குள் பாரமாய் உறுத்திக்கொண்டிருக்கிறாள் என் முதல் காதலி சங்கீதா. என் இருதயத்தின் நான்கு அறைகளிலும் அழிக்க இயலா ஒவியங்களாய் வரையப்பட்டு இருக்கிறது அவளின் முகம்.
காதலித்த சங்கீதாவையும், படித்த கல்லூரியையும் எப்படி மறக்கமுடியும்? இரண்டும் என் ஒவ்வொரு நாளிலும் ஏதோவொரு நொடியில் எனக்குள் வந்துவிட்டு போகிறது.
பழைய கல்லூரி நினைவுகள் எல்லாம் ஒரு திரைப்படத்தின் காட்சிகள் போல எனக்குள் வந்து சென்றன. காரின் ஜன்னல்வழி கல்லூரியை ஒருமுறை எட்டிபார்த்துவிட்டு,அந்த நாட்கள் மீண்டும் திரும்பிவராதா என்று ஒரு ஏக்கப்பெருமூச்சு விட்டேன்.
காரைக்காலில் இருக்கும் சுந்தர் வீட்டை நோக்கி காரை செலுத்தினேன்.
"ஒரு வழியா துபாய் ஷேக்குக்கு புத்தி வந்துடுச்சி" எனது திருமண அழைப்பிதழை வாங்கி கொண்டு சிரித்தபடி சொன்னான் சுந்தர்.
வழக்கமான உபசரிப்புகளுக்கு பின் மெதுவாக என்னிடம் சொன்னான். "சங்கீதா என் கூட இன்னும் காண்டாக்டுலதான் இருக்காடா. உன்னை கஷ்டப்படுத்தவேண்டாமேன்னுதான் நான் அவ சம்பந்தமா எதுவும் உங்கிட்ட இதுவரைக்கும் பேசல".
நான் சட்டென்று தலை நிமிர்ந்து அவனை பார்த்தேன். துபாய்க்கு சென்ற புதிதில் சுந்தரிடம் பேசும்பொதேல்லாம் சங்கீதாவை பற்றி விசாரிப்பேன்.
"சங்கீதாவுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சி. மாப்பிள்ளை லண்டன்ல இருக்காறாம்"
என்று சுந்தர் என்னிடம் சொன்ன அன்றைய தினம் மட்டும் ஒரு இனம்புரியாத சோகத்தை அனுபவித்தேன். அதன்பிறகு நானும் சரி,அவனும் சரி அவளை பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டோம்.
"போனமாசம்தான் லண்டன்லேர்ந்து வந்துட்டு போனா.அவ குழந்தைக்கு சிக்கல் கோவில்லதான் முடி இறக்கினாங்க.நானும் பேமலியோடு அதுக்குபோயிருந்தேன்டா." என்று சொல்லிவிட்டு ஒரு கணம் என் முகத்தை உற்றுப்பார்த்துவிட்டு தொடர்ந்தான்.
"உன்னை பத்தி விசாரிச்சா. ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலனு அக்கறையா கேட்டா. உன் மேரஜ் நியுஸ் கேட்டா ரொம்ப சங்தோஷப்படுவா. வாட்ஸ்அப் நம்பர் நோட் பண்ணிக்கோ "என்றான். டின்னரை முடித்துவிட்டு, மறுநாள் காத்திருக்கும் வேலைகளை காரணம்காட்டி, அவனிடமிருந்து விடைபெற்றேன்.
இதோ என் தொடர்பு எல்லைக்குள் இருக்கிறாள் சங்கீதா. ஆனாலும், அவளை அழைத்து இழந்த நட்பை புதுபித்துக்கொள்ளவதற்கு எனக்கு விருப்பமில்லை. இறைவா! இனி அவளை என் வாழ்நாளில் மீண்டும் சந்திக்கவே கூடாது என்று மனத்துக்குள் வேண்டினேன்.
படித்த கல்லூரிதான் காலப்போக்கில் உருமாறிவிட்டது. கல்லூரிக்காதலியாவது எனக்குள் மாறாமால் இருக்கட்டுமே.
மஞ்சள்ரோஜாவுடன் காட்டன்சேலையில் இருக்கும் சங்கீதா. "அவள் முகத்துக்கு மட்டும் இரண்டு பக்கமும் பூக்கள்" என்று காலேஜ் மேகசினில் அவளை மனதுக்குள் வைத்து நான் எழுதிய கவிதை ஒன்று என் நினைவுக்கு வந்தது.
எனக்குள் என்றேன்றும் அதே சங்கீதா அப்படியே இருக்கவேண்டும். காதலும், காதல் தரும் சுகமும், காதலியின் பிரிவும், கடந்தகால ஏக்கமும்.... ஆழ்மனதின் ரகசியங்களாய் இப்படியே தொடரட்டும்.
இன்று நான் ஒரு நல்ல கவிதையை ரசிப்பதற்கும், சிறந்த இசையை கேட்டு உருகுவதற்கும், சுற்றி இருக்கும் இயற்கையை நேசிப்பதற்கும் 'பழைய' சங்கீதாவே காரணம்.
இன்னமும் உயிர்ப்புடன் இருக்கும் அந்த காதல் நினைவுகள் ஒரு பறவைக்கூடு.
அந்தக்கூட்டை நிகழ்காலம், யதார்த்தம் என்ற கரங்கள்கொண்டு கலைத்து எறிய என்னால் எப்படி முடியும்? ஆம், எனக்குள் என்றேன்றும் அதே சங்கீதா அப்படியே இருக்கவேண்டும். This world is all that remains of her.
காரைக்காலில் இருந்து கிளம்பும்பொழுது மணி இரவு பத்தாகிவிட்டது. லேசாக மழை பெய்யத்தொடங்கியது, காரை மெதுவாக சிதம்பரத்தைநோக்கி செலுத்தினேன். "தங்கபூவே சந்திப்போமா. சந்தித்தாலும் சிந்திப்போமா" எப்.எம்மில் ராஜாவின் பாடல்.
காதலர்கள் பிரிந்துவிடலாம். ஆனால் ராஜாவின் இசை இருக்கும்வரை இங்கே எந்த காதலுக்கும் பிரிவோ,முடிவோ இல்லை என்று தோன்றுகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி. எப்பொழுது கேட்டாலும் சரி. மனதில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நம் முதல்காதலை தனது ஏதோ ஒரு பாடல் மூலம் நினைவுபடுத்திவிடுகிறார் ராஜா. எனக்கும், சங்கீதாவுக்கும் ரொம்ப்ப பிடித்த இளையராஜா.
- இன்பா
#885
मौजूदा रैंक
53,383
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 50
एडिटर्स पॉइंट्स : 53,333
1 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (1 रेटिंग्स)
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स