வேணு டெய்லர்

கற்பனை
4.6 out of 5 (17 )


ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலங்களில்தான் வேணுவுக்கு அதிகமாக வேலை இருந்தது. கோடை விடுமுறை முடிந்ததும், பள்ளி துவங்கிவிடும், மாற்றுச் சீருடை தைப்பதற்கான வேலை ஆரம்பித்துவிடும். அந்தப் பகுதியில் வேணு டெய்லர் என்கிற பெயர் மிகப் பிரச்சித்தம். எப்போதும் பரபரப்பாக இயங்கும் டெய்லர் அல்ல அவன், ஆனாலும் அந்தக் காலங்களில் மட்டும் அவனது தேவை அதிகமாக இருக்கும். உதவியாளர் எல்லாம் அவன் வைத்துக்கொண்டதே இல்லை, என்ன காரணம் என்று அவனுக்குமே தெரிந்திருக்கவில்லை. வேணுவுக்கு நாற்பதைக் கடந்திருந்தது, திருமணம் செய்துக்கொள்ளவில்லை. பலரும் வற்புறுத்தினார்கள், கைத்தொழிலைக் காரணம் காட்டி, பெண்ணும் பார்த்தார்கள், எதற்கும் செவி சாய்க்கவில்லை, “அப்படியே தனியா இருந்துப் பழகிப் போச்சுப்பா” என்று சிரித்தபடி காரணம் சொல்லுவான், தனிமை அவனுக்கு பிடித்திருந்தது. அவன் என்ன செய்தாலும் உடன் இருந்து கேட்பதற்கு யாரும் இல்லை என்கிற நினைப்பாக இருக்கலாம், எதுவாக இருப்பினும் தனிமை பீடித்தவனுக்கு, அது சாபமாக இருக்கலாம், அல்லது வரமாக அமையலாம், வேணுவுக்கு எப்படி என நிச்சயமாக தெரியவில்லை. ஒருவகையில் தனிமை ஒரு ஆட்க்கொள்ளி நோய்தான்.


வேணுவுடன் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று பேர். அக்கா,அண்ணன், தங்கை என, அக்காவுக்கு திருமணம் ஆகி பதின்பருவத்தில் ஒரு மகன் இருந்தான் அவன் அவளுக்கு மிக தாமதமாகத்தான் பிறந்தான், அண்ணன் கள்ளுக்கடை நடத்தி வந்தார், பின் அவ்வேலையை விட்டுவிட்டு பிழைப்பிற்காக வெளியூர் சென்றுவிட்டார். தங்கைக்கு அவளது பதின் பருவத்திலேயே திருமணம் ஆகி, கணவன் வேறு ஓருவளுடன் சென்றுவிட்டான், அவள் தனியாக எங்கோ பெயர் தெரியாத ஊரில் தன் பெண் குழந்தையுடன் சித்தாள் வேலை செய்துக்கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் வேணுவுக்கு தெரியும். அக்காவின் கணவர் இறந்து, அது ஆகிவிட்டது, பதினைந்து வருடங்களுக்கு மேல்.


செய்யூர் செல்லும் சாலையில், புளியமரத்தின் அடியில் இருந்தது வேணுவின் கடை. கடையெல்லாம் இல்லை, ஒரு தையல் மெஷின், புங்கை மரத்தினால் செய்ப்பட்ட ஒரு மர ஸ்டூல், துணியை விரித்து வெட்டுவதற்கு பெரிதான மேசை ஒன்று. அளவெடுக்கும் ‘டேப்’ இரண்டு. இன்னபிற பொருட்கள்,அவ்வளவே. பெரிதாக பேருந்து செல்லாத சாலை மார்க்கம் அது, எப்போதாவது சில இருச்சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும், இருபுறமும் புளியமரம் நிரம்பிய ஏகாந்தமான சாலை அது. தனியாக பீடி புகைத்தவாரு துணிகளை தைத்துக்கொண்டிருப்பான், பெரும்பாலும் வானொலியில் பாடல்கள் ஒலித்தவாரு இருக்கும், துணைக்கு ஆள் இல்லாதப் போது எதையோப் பறிக்கொள்ளுதள்தானே வாழ்வு. அவனுக்கு டிஎம்மெஸ்ஸின் பாடல் வெகுவாக பிடித்திருந்தது. “ன்னா கொரலுடா அந்தாளுது” என தனக்குத்தானே வெகுவாக அவரைப் புகழ்ந்து தள்ளுவான். புளியமரத்தின் நிழலில் கூட நிற்கக் கூடாது என்பார்கள், ஆனால், வேணுவுக்கு ஜாகையே புளியமரத்தின் அடியில்தான் இருந்தது. கோடைக்காலங்களில் மட்டும், அப்புளியமரம் தகிக்கும் வெப்பத்தில் சருகெல்லாம் கொட்டி கிழட்டு தெருநாயின் ரோமமில்லா முதுகைப் போலாகிவிடும், அப்போது மட்டும் நிலத்திற்கு உரம் போட்ட கோணிப் பைகளை கிழித்து தைத்து கூடாரம் போட்டுக்கொள்வான். ஆனாலும் வேணுவுக்கு ஒவ்வொரு ஆண்டும் அப்போதுதானே மிகச் சுமையான பணியே! மழைக்காலங்களில் தன் அக்கா வீட்டு திண்ணையில் தையல் மெஷினை போட்டு வேலை செய்துக்கொள்வான், அதுவும் இல்லையெனில் விடுப்பு எடுத்துக்கொள்வான், யார் கேட்கப் போவது, ”நானே மந்திரி நானே ராஜாடா, நான் எவன்கிட்டயும் கைக்கட்டி நிக்க மாட்டேன், புர்தா?” என பெரும்போதையில் உளறுவான். அவனது சம்பாஷணைகள் அதிகமும் தனக்குத்தானேதான் இருந்தது. பெரும்பாலான நாட்களில் கன்னியம்மாவின் சாரயக்கடையில்தான் இருப்பான். கோடைக்காலங்களில் சம்பாதிக்கும் சம்பாத்யம் அனைத்தும், மற்ற காலங்களில் பொழுதோட்டிக்கொள்வான். நல்ல வேலைக்காரன் என பெயர் பெற்றிருந்தான், வேணுவிடம் துணி தைத்தால் அத்தனை விரைவில் தையல் விடாது, நினைத்த கச்சிதத்தை தன் கைவண்ணத்தில் கொண்டு வந்துவிடுவான், ஆனாலும், தைத்த உடையை கொடுப்பதற்கு மட்டும் சிறிது காலம் எடுத்துக்கொள்வான் அவ்வளே, இதுதான் அவ்வூராரின் மத்தியில் வேணு மீது இருந்த குற்றச்சாட்டு.


கன்னியம்மாவின் சாராயக்கடை வெகுப் பிரபலம். ஏரிக்கரை ஓரமாக அமைந்திருந்தது. அந்தக் கடையின் மூலமாக சில பேர் வாழ்ந்தார்கள், சில பேர் அழிந்துக்கொண்டிருந்தார்கள். பெண்களின் அனல் வீசும் வசைச் சொற்களை அந்தக்கடை எப்போதும் தாங்கிக்கொண்டே இருந்தது. அதன் பாதுகாப்பில் கன்னியம்மாள் வாழ்ந்தாள். கூட்டம் அலைமோதும், பல்லி வால், பேட்டரி என கலக்காத, பழ வகைக் கொண்டு, ஊறல் இடப்பட்ட நாட்டுச் சாராயம்தான். ஆனாலும், பெண்கள் கரித்துக்கொட்டுவதற்கு காரணம், ஆண்கள் சம்பாதிக்கும், பணம் வீடு வரை சேராததே. சாக்கனாக்கடை, தோசைக்கடை, சுண்டல்க்கடை, என மாலை நேரம் அத்தனை லாகரித்தனமாக இருக்கும், அதிலும் தோசைக்கு மாட்டுக்கறி கொழம்பு ஊற்றி கொடுக்கும் அந்த உணவு மிகச் சுவையானது. வேணுவுக்கு அங்குதான் மாலை நேரங்களில் பொழுதுப் போகும், மில்லி சாராயத்தை குடித்துவிட்டு கதை அளக்க துவங்கிவிட்டால், பீடி புகைத்துக்கொண்டே பல மில்லிகளை கடக்கும், பல மணி நேரங்கள் கடக்கும், பல யுகங்கள் கூட கடக்கும். அகாலத்தில்தான் வீடு வந்துச் சேர்வான், அவனது அக்கா சமைத்ததை சாப்பிட்டுவிட்டு உறங்கிவிடுவான்.


வேணுவின் அக்கா சாப்பாட்டுக்கடை நடத்தி வந்தாள், உணவகம் அல்ல, உணவை சமைத்து, கூடையில் தலையில் சுமந்து சென்று விற்பது. அந்தக் கூடையில் இட்டிலி, தோசை,இனிப்பு போண்டா, வடை வகையெல்லாம் இருக்கும், அதில் கொழம்பு வகை மாத்திரம் இருக்காது. வீட்டில் வைக்கும் கொழம்போ, அல்லது பச்சை மிளகாய்த்தூளில் பூண்டுப்பல் பல் வைத்து நசுக்கி, தொட்டு சாப்பிட்டுக்கொள்ளலாம். இல்லையேல், வெறும் நல்லெண்ணையை இட்டிலி மீது ஊற்றி, ஊற வைத்துச் சாப்பிடலாம். பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கும், மற்றும் வேலைக்குச் செல்லும் ஆட்களுக்கும், அவளது நடமாடும் சாப்பாட்டுக்கடை பெரும் உதவியாக இருந்தது. அவளது மகன் படிப்பதை பாதியிலேயே நிறுத்தியிருந்தான், அதனால், அதற்காக ஆகும் செலவு அவளுக்கு மிச்சம் ஆகியிருந்தது. விடியற்காலையில் எழுந்து இட்டிலி சூடுவதில் ஆரம்பமாகும் அவளது வேலை. இனிப்பு போண்டா சுடும்போது மட்டும் அவளது மகன் எழுந்துக்கொள்வான், இட்டிலியுடன், இனிப்பு போண்டாவை வைத்து சாப்பிடுவது அவனுக்கு பிடித்தமானதாக இருந்தது. வேணுவுக்கு உணவின் மீதெல்லாம் பெரும் அலாதியெல்லாம் இருந்ததில்லை, இருப்பதை கொடுத்தால், சாப்பிடுவான். அவள் அக்காவும், தன் தம்பியை தன்னை விட்டால் யார்ப் பார்த்துக்கொள்ளுவார்கள் என்கிற தாட்சண்யம் கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த பிழைப்பு பெரும் உதவியாக இருந்தது. அவளது மகனும் கள்ளுக்கடையில், எதோ ஒரு வேலைக்குச் சென்றுக்கொண்டிருந்தான். அதனால் அவளது குடும்பத்திற்கு எந்த பாதகமும் இல்லாமல் இருந்தது.


வேணுவுக்கும், பெண்களுக்கும் எட்டா தூரம்தான், அவன் அதிகமாக பெண்களிடம் பேசியதில்லை, பார்த்த மாத்திரத்தில் அனைத்துப் பெண்களும் அவனுக்கு எதோ உறவு முறையாகிவிடுவார்கள். அவன் வயதில் உள்ளப் பெண்கள் அனைவருக்கும், திருமணம் ஆகி, திருமண வயதில் பெண் பிளைகளும், ஆண் பிள்ளைகளும் இருந்தார்கள். அதைப் பற்றியெல்லாம் அவன் ஒருபோதும் யோசித்ததில்லை. அவனுக்கு இளம்பிராயத்தில் காதல் ஒன்று இருந்தது. அப்போது வேணு டெய்லரெல்லாம் அல்ல. வெறும் வேணுதான். அப்போது வேலைக்குக் கூட செல்லவில்லை., அந்தப் பெண்ணுக்கு அவனைவிட ஐந்து வயது குறைவாக இருக்கலாம். வெறும் பார்வையால் மட்டுமே பேசிக்கொண்டிருந்த விடலைக் காதல். அவள் அந்தப் பக்கம் செல்வாள், இவன் இந்தப் பக்கம் செல்வான்.பார்வையில் மட்டுமே ஓராயிரம், கண்ணதாசன்களும், டிஎமெஸ்களும், எம்மெஸ்விக்களும் வரியமைத்து, இசையமைத்து, பாடியக் கானத்தை கற்பனையில் காற்றிலொலிக்க விடுவான். ஒரு முறை தன் காதலைச் சொல்லிவிடலாம் என எண்ணி, அவள் முன் சென்றுக் கேட்டான்.”உன்னை ரொம்ப புட்ச்சிருக்கு, என்னைக் கட்டிக்கிறியா?” அதற்கு, அவள் பதிலேதும் கூறாமல் சென்றது ஒரு மெளன ஓவியத்தின் சாட்சி. அதற்கு மேல் இவனும், அவளைப் பார்ப்பதில்லை. எதற்காக பார்த்தாள்? எதற்காகச் சிரித்தாள்? என்கிற காரணம் அந்த வயதின் ஈர்ப்பு மட்டுமே அறியும். அதன் பின், அவளை திருமணக்கோலத்தில், மணமகனுடன் ஊர்க்கூட்டி அனுப்பும்போது கண் இமைக்காமல் பார்த்துவிட்டு தனக்குள் ஒரு சிரிப்பு சிரித்துக்கொண்டான், அந்த சிரிப்பின் காரணத்தை அவன் மட்டுமே அறிந்திருக்கக் கூடும். காதலைப் பற்றிப் பேச்சு வருகிற போது, வேணுவிடமும் அதைப் பற்றிக் கேட்பார்கள். “என்னத்த லவ்வோ கிவ்வோ, கருமம், நா அப்படி ஒரு எழவ பாத்ததுல்ல”. பெண் பிரக்ஞை அற்றுதான் வாழ்ந்துக்கொண்டிருந்தான். தன் கடைக்கு வருகிற பெண்களிடம் பேசும்போது கூட அவனது கண்கள், அவர்களின் கண்களைப் பார்த்து மட்டுமே பேசுவது வாடிக்கையாக இருந்தது.


புளிய மரம் இருக்கும் சாலை மார்க்கம் சீர்ப்பட்டுப் போனது. சாலையைப் புணரமைத்திருந்தார்கள், பேருந்து வசதி இன்னும் மேம்படுத்தியிருந்தார்கள், இருச்சக்கர வாகனங்கள் பெருவாரியாக செல்லத் துவங்கியது. சாராயக்கடை, கள்ளூக்கடை இத்யாதி, இத்யாதி அனைத்தும் முற்றிலும் ஒழிந்திருந்தது. மதுபானக்கடையை அரசங்கமே நடத்த துவங்கியிருந்தது. வேணுவின் புளியமரத்துக்கடையின் எதிரே கீற்றுக் குடிசையாக தொழில்ப்போட்டிக்கு தணிகைவேலு கடை வந்தது. வேணுவுக்கு ஐம்பதை தாண்டியிருந்தது. முன்வழுக்கையில் ரோமங்கள் உதிர்ந்து கோடைக்காலத்தின் மீன்ப்பிடி குட்டைப் போலாகியிருந்தது. முன்பல் வரிசையில் இரு பல் காணாமல் போயிருந்தது. அவனது அக்கா,இறந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தது, அவளது மகனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் சகிதம் வாழ்க்கை சென்றுக்கொண்டிருந்தது. இப்போது யாரும் வேணுவிடம் அவனது திருமணம் குறித்து விசாரிப்பது இல்லை. அந்த வயதை கடந்ததினால் இருக்கலாம், அல்லது, ’இவனுக்கெல்லாம் இனி யார் பெண் கொடுப்பார்கள்’ என்கிற காரணமாகக் கூட இருக்கலாம், ஆனாலும், இனி திருமணம் குறித்து அவன் யோசிப்பதற்கு எந்த முகாந்திரமும் அவனிடம் இல்லை. எப்போதாவது யாராவது அவனது தொழில் நுணுக்கத்தின் காரணமாக துணி தைக்கக் கொடுப்பார்கள், அதையும் விற்று செலவு செய்வதை வாடிக்கையாக்கினான். ஒருமுறை முருகேசன் மனைவி கொடுத்த அளவு ஜாக்கெட்டோடு, சேர்த்த ஜாக்கெட் ‘பிட்’ துணியைக் கொண்டுப் போய் விற்று அதைக் காசாக்கினான், விஷயம் தெரிந்து வந்து முருகேசன் அடித்ததில் மூக்கில் ரத்தம் வந்தது மட்டும்தான் மிச்சம். அதனால் அந்தப் பிழைப்பும் தடைப்பட்டுப் போனது. குடிப்பது இன்னும் அதிகமாகிப் போனதால், வழக்கத்தை விட செலவும் அதிகமானது. ஆனால், வேலை என்று எதுவும் இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு வாங்கிய தையல் மெஷினைக் கூட விற்றுக் குடித்தான்.இப்போதும் உணவைப் பற்றியெல்லாம் அவன் கவலைக் கொள்ளவில்லை. யாரிடமும் எந்த நலம் விசாரிப்புகளும் அவனுக்கு இருந்திருக்கவில்லை, யாரிடமாவது, “சாப்டியாப்பா?” என்றால், அவர்கள் புரிந்துக்கொண்டு உணவளித்துவிடுவார்கள். ஆதலால், ஒவ்வொரு நாளுடைய உணவுப் பொழுது கடினமில்லமால் கடக்க ஆரம்பித்தது. கிடைக்கிற வேலைகளைச் செய்யத் துவங்கினான், புகைக்கிற பீடிகளுக்கு யார் பணம் தருவது, அதற்காகவாவது வேலை செய்தாக வேண்டும் அல்லவா? இன்ன இடமென்று இல்லை, எங்கு வேண்டுமானாலும், படுத்துறங்கத் துவங்கினான். ஒரு முறை வேணுவுக்கு வேண்டப்பட்ட ஒருவர், அவனை அவன் சார்ந்த வேலைக்கேக் கொண்டுச் சென்று சேர்த்துவிட்டார்,விருப்பமில்லாமல்தான் சேர்ந்தான்.


கே.கே.நகரின் ராஜமன்னார் சாலையில் இருந்தது, வேணு வேலைச் செய்யும் டெய்லர் கடை. ஜனநெருக்கடி இல்லாத பகுதிதான்.ஆனாலும், அவனுக்கு இறுக்கமாக இருந்தது. ஏகாந்தமான நிலப்பரப்பில், அலைந்து திரிந்தவன் அவன். இந்த நகரம் அவனுக்குப் பிடிக்கவில்லை. இந்த நகரம் கெட்டவர்கள், நல்லவர்கள் என பேதம் பார்ப்பதில்லை, அனைவரையும் ஒருசேரத்தான் பார்க்கிறது, அதைப் புரிந்து உள்வாங்கிக்கொள்கிறவர்களை ஒருபோதும் அது கைவிட்டதில்லை., இன்னொருவரிடம் சம்பளத்திற்காக வேலைப் பார்ப்பது, அவனுக்கு முடியாத காரியமாக இருந்தது, டெய்லர் ஆவதற்கு முன் லூர்து டெய்லரிடம் ‘காஜாப்பையன்’ ஆக வேலைப் பார்த்தவன் தான், அந்த வயது வேறு; இப்போது எந்த வசைவையும் ஏற்றுக்கொள்கிற மனநிலை அவனிடத்தில் இல்லை. தங்குவதற்கு இடம் கொடுத்திருந்தார்கள். பத்துக்கு பத்து அறைதான், அதுவே அவனுக்குப் போதுமானது. சாப்பிடுவதற்கு தனியாக தினப் பேட்டா கொடுத்தார்கள். தினமும் காலை ஒன்பது மணியைப் போல் கடையை திறந்து, சுத்தம் செய்து, துணிகளை தைக்க வேண்டும். தினசரி இதுதான் அவனது நடவடிக்கையாக இருந்தது. இரண்டு மாதக் காலம் கடந்திருந்தது. அவனால் ஒழுங்காக வேலை செய்ய முடியவில்லை, பார்வையும் சிறிது மங்கியிருந்தது. கடை முதலாளி செய்த கடும் ஆளுமையைக் காரணமாகக் காட்டி, வேலையை விட்டுவிட்டான்.

இப்போதைக்கு இந்த நகரத்தைவிட்டு வெளியேற வேண்டும், அது மட்டுந்தான் அவனது நிலைப்பாடாக இருந்தது. இதுவரை செய்த வேலைக்கான சம்பளத்தை கொடுத்திருந்தார்கள், அதில் எந்த சிக்கலுமிருக்கவில்லை. புழுக்கத்தில் இருந்து விடுப்பட்டு மலைதேசத்தில் பறக்கும் வலைசைப் பறைவயைப் போல் இருந்தது அவனுக்கு, மிக உயரப் பறந்து தன் கூட்டை அடைந்துவிட வேண்டும், அதுதான் இலக்கு. அப்போதுதான் சாவித்திரியைப் பார்த்தான், மிக ஒடிசலாகியிருந்தாள், உருவமாற்றத்தில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை, ஆனால், தலைமுடி மட்டும் நரைத்திருந்தது. சித்தாள் வேலையை விட்டுவிட்டு இங்கே எப்போது வந்தாள் என தெரியவில்லை. இங்கே வீட்டு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் வேணுவை அடையாளம் கண்டுக்கொண்டாள். அவளைக் கண்ட வேணு சலனமே இல்லாமல் இருந்தான், தினமும் நினைவுகளில், கனவுகளில் பார்த்துக்கொண்டிருப்பவளை, இப்போதுதான் பார்க்கிறோம் என்று எப்படி ஆச்சர்யப்படுவான்? அவள் மட்டும் கைகளை பிடித்துக்கொண்டு கதறி அழுதாள், இவனது உருவ மாற்றம், நிச்சயமாக அவளை தடுமாற செய்திருக்கும். இவன் மட்டும் அவளது தலையில் கைவைத்து தேற்றினான். ராஜ மன்னார் சாலையின் முடிவில் உள்ள பள்ளியில், குழந்தைகள் சந்தோசமாக விளையாடியபடி இருந்தனர். இந்நேரம் மழைப் பெய்தால் நன்றாக இருக்கும் என வேணு மனம் பதைத்தது. எதிர்பார்க்காத மழையை மனம் எப்போதும் விரும்புவது இயல்புதானே! மேகங்கள் மட்டும் விரைந்துக் கடந்தது.


வேணு சாப்பிடுவதை கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தாள். வேணு சாப்பிட்டு அவள் முதன்முறையாக பார்க்கிறாள். மிகச் சிறுவயதிலேயே திருமணம் ஆகி சென்றவள், இவனும் பிழைப்பிற்காக எங்கோ ஓடியவன், காலம் மட்டும்தான் இவர்களை இந்த தாழ்வாரத்தின் கீழ் அமரச் செய்திருக்கிறது. சாவித்திரி இந்த பகுதிக்கு வந்து பத்து வருடம் ஆகியிருக்கும். வேறு ஒரு நபரை திருமணம் செய்துக்கொண்டாள். அவளது உலகம், அவள் படைக்கும் மனிதர்கள், அவளது உரிமை, யார் கேட்கக் கூடும்? கெளரி மட்டும் வளந்திருந்தாள், பள்ளியை முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்கமுடியாததால், அருகில் இருக்கும் மளிகைக் கடை ஒன்றில் கணக்கு எழுதும் பணியில் இருந்தாள். வேணு சாப்பிட்டுவிட்டு கைக்கழுவினான். எத்தனை நாள் கழித்து நிம்மதியாக அமர்ந்து உணவருந்தினோம் என்பது அவனுக்கு சுத்தமாக மறந்துப் போயிருந்தது. கிடக்கட்டும், உணவில் என்ன இருக்கிறது. அது எங்கே யாரால் கொடுக்கப் படுகிறது என்பதுதானே விஷயம்.


கெளரி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தாள். வேணு பழைய நினைவுகளைச் சொல்லி சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான், அவனது முன் பல் இல்லா வாய் மட்டும், ஜன்னலிலிருந்து ஒளி ஊடுருவும் வெளிச்சத்தில் பளிங்கு போலிருந்தது. கெளரி அவனைப் புரியாமல் பார்த்தாள், அவளால் அவன் யாரென்று யூகிக்க முடியவில்லை. சாவித்திரிதான் உடைந்து அழுதாள், கெளரி புரியாமல் பார்த்தாள். ”தே... பைத்தியம் எப்ப பாரு அழுதுகினே இருக்க, அதுக்கு ன்னா தெரியும்...நான் மாமாம்மா... உங்கொம்மாவோட அண்ணன்” என்றான். அவள் விழித்தாள், நல்ல உயரம், சிவப்பு நிறம், மிதமான உடல்வாகு; ரோஜா இதழ்களில் இருக்கும் நிறத்தின் சாயல் அவளது உதட்டில் தெரிந்தது. பாங்கான உடை உடுத்தியிருந்தாள். சாவித்திரிதான் சொன்னாள்,”கெளரிய கூட்டிக்கினு போய்டிறியா? உனக்கு ஒத்தாசையா இருக்கும், சோறாக்கிப் போடும்”. வேணுவுக்கு புரிந்தது, மிகவும் கோவப்பட்டான்.”இந்த கொழந்தைய எங்க கூட்டுக்கினு போய் லோல் பட சொல்ற? இன்னொரு முற இப்படி பேசுன வாய ஒட்ச்சுருவேன்”, என்றான். கெளரியை அருகே அழைத்தான். கையில் இருந்த சம்பளப் பணத்தை எடுத்து மொத்தமாக அவளிடம் கொடுத்தான்.”துணி எதுனா வாங்கிப் போட்டுக்கோ” எனக் கொடுத்து, தலையை நீவினான். இப்போது வெளியே லேசான தூறல் போட்டுக்கொண்டிருந்தது. விடைப்பெற்றுக்கொண்டான், சாவித்திரி ஒரு பையில் கொஞ்சம் சாப்பாடும், செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்தாள், இங்கேயே இருந்துக்கொள்ளச் சொல்லி மீண்டும் ஒரு முறை மன்றாடினாள், மறுத்துவிட்டான். மிக உயரப் பறக்கும் பறவைகள் நிச்சயம் ஒரே இடத்தில் தங்கிவிடுவதில்லை.


கோடைக்காலம் அது- வெம்மையின் உச்சம், உச்சஸ்தாயில் இருந்தது. கடுமையான போதையில் ஏரிக்கரையில் நடந்து வந்துக்கொண்டிந்தான், தலையில் போடப்பட்ட துண்டை மீறிக் கொளுத்திக்கொண்டிருந்தது சூரியன், நரமஞ்சள் நிறத்திலான சூரியக்கீற்றின் வெப்பக் காற்று நாசியில் ஏறிக்கொண்டிருந்தது. பீடி ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துப் புகைத்தான். அதன் தாக்கம் இன்னும் கொடூரமானதாக இருந்தது. மரத்தில் உதிர்ந்த்துக் கிடந்த சருகையெல்லாம் பார்த்தான், மஞ்சள் நிறப் பூக்கள் அனைத்தும், ஏரிக்கரையின் வசம், பட்டுப்போய்க் கிடந்தது, அவனுக்கு அந்த மலர்கள் மீதெல்லாம் இரக்கம் வந்தது, அல்லது தன்னையும் அந்த மலரைப் போலவே எண்ணினான், கிளையிலிருந்து உதிர்ந்த மலருக்கும், மரத்திற்கும் இனி என்ன சம்மந்தம் இருக்கப் போவதில்லை. மலர்களை கையில் எடுத்து வாசம் வீசுகிறதா என முகர்ந்துப் பார்த்தான், வாசமே இல்லை. கடும் விரக்தியாக இருந்தது. தனிமையை ரசித்த அவனுக்கு, இப்போது அது சாபமாக இருந்தது நன்றாகத் தெரிந்தது. ஏரியில் இறங்கினான், உடைகளைக் களைந்தான், அழுக்குப் போகிற அளவுக்குக் குளித்தான், மீன்கள் அவனை சுற்றி மொய்த்துக்கொண்டிருந்தது. அம்மீன்கள் அவனது அழுக்குகளை மட்டுமே சுவைத்துக்கொண்டிருக்கவில்லை. மீன்கள் மனித ரத்ததைக் கூட உண்ணும் குணாதிசயம் கொண்டவை. உடைகளோடு கரை ஏறினான், கடுமையானப் பசி, யாசகம் கேட்கும் மனநிலை இப்போது இல்லை, யாரிடமும் இனி எந்த நலம் விசாரிப்புகளும் வைக்க வேண்டாம் என்கிற மனநிலையோடு நடக்கத் துவங்கினான்.


நெடுநாட்களுக்குப் பிறகு தன் அக்கா மகனின் வீட்டிற்கு வந்தான், அவனைப் பார்த்து நலம் விசாரிக்கத்தான் வந்திருந்தான், ஆனால் அவன் இல்லை, அவனது மனைவி மாத்திரம் இருந்தாள். வேணுவைப் பற்றி நன்றாக அறிந்தவள்தான் அவள். கடுமையான போதை, பசி, விரக்தி மிகவும் ஆட்க்கொண்டிருந்தது அவனை. அவள் வேணுவுக்கு மகள் முறைதான், ஆனாலும் அவளிடன் வாய்விட்டுக் கேட்க, கூச்சமாக இருந்தது அவனுக்கு. கூச்ச உணர்வை அறவே விட்டுவிட்டு, அனைவரிடத்திலும் கேட்கும் ”சாப்டியாம்மா” என்கிற வார்த்தைய வாஞ்சையோடு கேட்டான், அவளுக்கு போதையில் இருக்கும் இவனுடம் பேசுவது அசூயையாக இருந்தது போலிருக்கிறது. அவள் பதிலேதும் சொல்லாமல் வீட்டின் உள்ளே சென்றுவிட்டாள். அவனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை, ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. தாளாத் துயரத்தில் இருப்பவனுக்கு நிராகரிப்பு என்பது பெரும் துயரம். வேகம் எடுத்து நடக்கத் துவங்கினான், இலக்கெல்லாம் இல்லை, எங்கேயாவது நடக்க வேண்டும், அதுவும் இப்போதைய மனநிலைக்கு எங்கேயாவது தொலைந்துப் போக வேண்டும். மனம் லேசாகிற என்கிற நம்பிக்கை இல்லை, ஆனால்; நடக்கவேண்டும். போகிற வழியில் புளிய மரம் ஒன்று இருப்பதைக் கண்டான், நின்று பார்த்தான், பட்டுப் போயிருந்தது, அதனுடம் பேசலாமா, என்னப் பேசுவது? ஒன்றுமே இல்லை அவனிடம். மேலேப் பார்த்தான். சூரியன் நடுவானில் நின்றுக்கொண்டிருந்தது. அதன் ஒளிப் பட்டு அவனது கண்களில் கூசியது சில ஆயிரம் சூரியன்கள். ஆழ்ந்து சுவாசித்தான், நாசியில் ஏறியது, வெப்பக்காற்று. எதைப் பற்றி யோசித்தானோ, தெரியவில்லை, அவனது கண்கள், கலங்கியது. சில நொடி அமைதிக்குப் பின், தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறினான், நார் நாராக கிழித்தான், கயிறாக்கினான், தாழ்வான கிளையில் கட்டினான். கழுத்தில் இறுகக் கட்டிக்கொண்டு தரையை நோக்கிக் குதித்தான். சில நொடி சிரமங்களுக்குப் பின் உயிர் மெல்ல பிரிந்தது. அவனுக்குஅஞ்சலி செலுத்துவதற்கு அப்புளியமரத்தில், பூவுமில்லை, பிஞ்சுமில்லை. இப்போதும் அனல்காற்று வீசியது, மெல்ல சருகுகள் உதிர்ந்தது. அவனது கால்கள் உதிர்ந்த சருகுகளில் சன்னமாகக் கிடந்தது.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...