JUNE 10th - JULY 10th
தட்டொளித் தீவின் அதிபர் ‘சொம்புத்தூக்கி’ நடைபயிற்சி செல்ல மாளிகையை விட்டுப் புறப்பட்ட போது, மணி அதிகாலை நான்கு. அவரது இடதுகையில் தங்கத்தினால் செய்யப்பட்ட சொம்பு இருந்தது. அதில் சுடச்சுட டீ இருந்தது. குளித்து முடித்துவிட்டு, மேக்கப் செய்துக் கொண்டு, கோட், சூட் அணிந்திருந்தார். நடைபயிற்சி செல்வதற்கு டிராக் சூட்தானே அணிய வேண்டும்... கோட் சூட் எதற்கு? அதோடு, பயிற்சி முடித்துவிட்டுத்தானே குளிக்க வேண்டும் என்பது மாதிரியான கேள்வியை ‘சொம்புத்தூக்கி’ அதிபராக இருக்கும் தட்டொளித்தீவில் வசிக்கும் பதினைந்து கோடி மக்களில் ஒருவர் கூட கேட்க மாத்திரம் மட்டுமல்ல..... யோசிக்கக் கூட முடியாது.
காரணம், சிறுவர், சிறுமிகளில் ஆரம்பித்து, செயலற்று படுத்தப் படுக்கையாகக் கிடக்கும் பெரியவர்கள் உள்பட, அத்தனை பேர்களது தலைக்குள்ளும் ‘மூளை நினைவுகள் அவதானிப்பு மின்னணு அட்டை’ பொறுத்தப்பட்டிருக்கிறது. யாரும் அங்கே யாருக்கும் எதிராக யோசிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாற்றப்பட்டிருந்தது. அரசாங்கத்துக்கு எதிராக.... நாட்டுக்கு எதிராக என்றெல்லாம் ரொம்பக் காத்திரமாக உதாரணம் சொல்வதை விடவும் எளிமையாக சொல்வதென்றால், மாமியாருக்கு எதிராக மருமகளோ.... மருமகளுக்கு எதிராக மாமியாரோ அந்தத்தீவில் செயல்பட முடியாது. மாமியார் உடைத்தாலும் மருமகள் உடைத்தாலும் அங்கே பொன்சட்டிதான். எதிர்மறை சிந்தனைக்கே அங்கே வேலை இல்லை. எல்லோருக்கும் நேர்மறை சிந்தனைதான்.
தினமும் அதிகாலை நான்கு மணிக்குப் புறப்படும் அதிபர், தனது ஆடம்பரக் காரில் நேராகக் கடற்கரைக்குச் செல்வார். அங்கே ஏற்கனவே ‘‘சொம்புத்தூக்கி’ வருகைக்காக குப்பானியும் சுப்பானியும் காத்திருப்பார்கள். பதினைந்து வயது வரை வெறும் அண்ணன், தம்பிகளாக இருந்தவர்கள்தான் குப்பனும் சுப்பனும். வறுமையும் ஏழ்மையும் தங்களை புரட்டிப் போட்டதாக முன்கதை வரலாறு சொல்லும் குப்பனும் சுப்பனும் இன்றைக்கு உலக கோடீஸ்வரர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் இரண்டு மூன்று இடங்களில் இருப்பவர்கள். பணக்காரர்கள். குப்பன், சுப்பன் என்ற தங்களது பெயரை சர்வதேச சமூக, பெருவணிக அந்தஸ்து கருதி, குப்பானி, சுப்பானி என்று மாற்றிக் கொண்டவர்கள். என்றாலும் பழசை மறக்காதவர்கள் என்பதை நிறுவுவதற்காக தங்களது அத்தனை சர்வதேச தொழில் நிறுவனங்களையும் ‘குப்பா சுப்பா பன்னாட்டுக்குழுமம்’ என்ற பெயரிலேயே நடத்துகிறார்கள்.
பல யுகங்களாகவே ‘கச்சடாதீவு’ என்று நாமகரணத்தோடு இருந்ததை, தட்டொளித்தீவு என்று உலகமே இன்றைக்கு அழைக்கவும் வியக்கவும் வைத்தவர்களே குப்பானி, சுப்பானிதான். காரணம், தீவைச்சுற்றி பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு லட்சக்கணக்கான சோலார் பேனல்களை வைத்து, இருளாகக் கிடந்தத் தீவுக்கு இரவும் பகலும் மின்சாரம் வினியோகம் செய்வது இவர்கள்தான். அந்த சோலார் பேனல்களிலிருந்து மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுவதாக உலகமே நம்பிக் கொண்டிருக்கிறது. உண்மையில், உளவாளி பேனல்களும் அதின் ஊடாக நிறுவப்பட்டிருக்கும் விஷயம் அந்த நாட்டில் பறக்கும் காக்கா, குருவிக்குக் கூட தெரியாது. அவ்வளவு காக்திரமான ரகசியம் அது. பார்ப்பதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி போலவும் இரவில் நிலவு வெளிச்சத்திலும் பகலில் சூரிய வெளிச்சத்திலும் அந்த சோலார் பேனல்கள் பேரொளியைக் கொடுப்பதாலும் அந்தத்தீவுக்குத் தட்டொளித்தீவு என்று பெயர் வந்துவிட்டது.
அந்தத் தீவின் நிரந்தர அதிபர், ‘சொம்புத்தூக்கி’தான். இவர் குப்பானி, சுப்பானியின் பால்ய சினேகிதன். அப்போதே குப்பனும் சுப்பனும் இவன் கையில் நெளிந்த பித்தளை சொம்பு ஒன்றைக் கொடுத்து, தங்களுக்கு டீ வாங்கிவரச் சொல்லி, அனுப்புவார்கள். ஒரு நாளைக்கு பத்து தடவைக்கு மேலாக, கையில் சொம்பைத் தூக்கிக் கொண்டு, டீ கடைக்குப் போகவும் வரவுமாக இருப்பான். சொம்பும் கையுமாக எப்போதும் இருப்பதால், இவனை ‘சொம்புத்தூக்கி’ ஆக்கிவிட்டார்கள். இப்போதும் கூட, ஒரு நாட்டின் அதிபர் என்று கூட கெத்து காட்டாமல், தன்னை அதிபராக்கி அழகுபார்க்கும் தனது நண்பர்களுக்காக, தானே டீ போட்டு, அதனை ஒரு சொம்பில் ஊற்றி எடுத்துச் செல்வதை, அன்றாட முதல் கடமையாக வைத்திருக்கிறார். அப்போது பத்து ரூபாய் சொம்பு. இப்போது பத்துலட்ச ரூபாய் சொம்பு. அவ்வளவுதான் வித்தியாசம்.
அவருக்காகக் காத்திருந்த குண்டு துளைக்காத காரில், முன்பக்கம் ஏறி அமர்ந்தார், அதிபரின் பாதுகாவலர்களான நான்கு பேரும் காரின் பின்பக்கத்தில் ஏறி அமர்ந்தார்கள். அந்த கார் மட்டும் மாளிகையை விட்டு மெள்ள வெளியேறியது. வேறு எந்த பாதுகாப்பு வாகனங்களும் பின்னால் அணிவகுத்து வரவில்லை. கடற்கரைக்குச் செல்லும் பிரதானச் சாலைக்கு வந்து, வேகமெடுத்தது கார். அப்போது, ஒட்டுமொத்தத், தீவிலும் மின் விநியோகம் நின்றது. ‘இது எப்படி சாத்தியம்.... சோலார் பேனல்கள் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கிக் கொண்டுதானே இருக்கும்.... அவை செயல் இழந்தால்தானே ஒட்டு மொத்த தீவின் பவர் சப்ளை நின்று போகும்’ என்று ‘சொம்புத்தூக்கி’ யோசித்துக் கொண்டிருக்கும் போதே, குண்டு துளைக்காத அந்தக்காரின் முகப்புக் கண்ணாடியை ஏழு குண்டுகள் துளைத்திருந்தன. அத்தனை குண்டுகளும் மிகச்சரியாக அதிபரைத் தாக்கி, அவரது உயிரைப் பறித்திருந்தது. ஒட்டுனருக்கோ, பின்னால் அமர்ந்திருந்த பாதுகாவலர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. அதிபர், காரில் ஏறும் போது கார் பேனட் மீது வைத்த டீ சொம்பு கூட அதிர்வில் கீழேவிழவில்லை. குண்டுகள் பாய்ந்ததான ஏழு துளைகளைத் தவிர, முகப்புக் கண்ணாடியில் சிறு விரிசல் கூட இல்லை. மிக... மிகத் துல்லியமானத் தாக்குதல். இது நிகழ்ந்த மறுவினாடி, சொல்லி வைத்தது போல, பவர்சப்ளை மீண்டுமாக வந்தது.
அதிபரைத்தவிர, காரில் இருந்த மற்ற ஐந்து பேரும் பதட்டமானார்கள். கார் ஓரங்கட்டப்பட்டு நிறுத்தப்பட்டது. பாதுகாவலர்கள் காரைவிட்டு இறங்கி, ‘அதிபர் சொம்புத்தூக்கி’யைத் தூக்கி, சாலையில் படுக்க வைத்துப் பரிசோதித்தார்கள். அடுத்த பத்தாவது நொடியில் அவர்களே, செயற்கைக்கோள் துப்பாக்கியைக் கொண்டு, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்துவிட்டார்கள். நால்வரும் வானத்தை அண்ணாந்துப் பார்த்து ஆவேசமாகக் கத்தினார்கள். அவர்களில் ஒருவன், கடற்கரையில் காத்துக் கொண்டிருக்கும் குப்பானி சுப்பானிக்கு போனில் தகவல் சொன்னான்.
இங்கே ‘சொம்புத்தூக்கி’ தாக்குதலில் இறந்த அதே வினாடியில், கத்திரிகா தேசத்தில், தனது ஆடம்பர பங்களாவின் மேல்தளத் திறந்தவெளியில் நடைபயிற்சி சென்றுக் கொண்டிருந்த காத்தவராய்ஸ் இறந்துக் கிடந்தார். அவர் மீதும் செயற்கைகோள் துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அவரது உடலில் பத்து குண்டுகள் பாய்ந்திருந்தன. ஒருவேளை, உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் என்பதால், அதிபர் ‘சொம்புத்தூக்கி’யை விட, கூடுதாக மூன்று குண்டுகள் செலுத்தி, மரியாதை செய்யப்பட்டிருக்கலாம். காத்தவராய்ஸ் கத்திரிகா தேசத்தின் ஆயுள்கால அதிபரான ‘டொனால்டடக்டக்’க்கு மிக நெருக்கமான நண்பரும் கூட. அவருக்குத் தகவல் சொல்லப்பட்டதும் ரொம்பவும் ஸ்டைலிஷாக தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். அவரின் அந்த உடல்மொழியைக் கண்டவர்கள், நண்பர் இறந்ததற்கு இவர் சந்தோஷபடுகிறாரா... சந்தேகப்படுகிறாரா... சஞ்சலப்படுகிறாரா... என்று புரியாமல் தவித்தார்கள்.
அங்கே, ‘சொம்புத்தூக்கி’ இங்கே, ‘காத்தவராய்ஸும்’ படுகொலை செய்யப்பட்ட செய்தியை உலக ஊடகங்கள் ஊதி ஊதி பெரிதாக்கிக் கொண்டிருந்தன. பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களைத் தவிர, வேறு யாரும் இந்தத் துன்பியல் சம்பவங்களுக்காக அதிர்ச்சி அடையவில்லை. மாறாக, பலநாட்டைச் சேர்ந்தவர்களும் க்ரீன் டீயை உறிஞ்சியபடியே, “நம்மநாட்டு அதிபருக்கோ, பிரதமருக்கோ இப்படியெல்லாம் நடக்காதா?” என்று கவலைப்பட்டுக் கொண்டார்கள்.
அடுத்த அரைமணி நேரத்தில், இந்த இரண்டு தாக்குதலையும் நடத்தியது நான்தான். இதற்கு எனது தீவிரவாத அமைப்பு பொறுப்புடன் பொறுப்பு எடுத்துக் கொள்கிறது என்று அறிக்கை விட்டான் வோசாமி.
இரண்டு தாக்குதல்கள் நடந்து முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில்,... அதாவது, அதிகாலை 5.05 மணிக்கு தனது மாளிகையில் அவசர பத்திரிக்கையாளர்கள் சந்திப்பைக் கூட்டினார் டெரரிஸ்ட் வோசாமிக்கு எதிராக, ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். “எனது நண்பரான காத்தவராய்ஸையும் என் எதிரி நாட்டு அதிபரே ஆனாலும் முன்னாள் நண்பரான சொம்புத்தூக்கியையும் ஸ்பேஸ் டெரரிஸம் மூலமாக கொன்ற, வோசாமியையும், அவனது தீவிரவாத தலைமையகத்தையும் இன்னும் நாற்பத்தெட்டு மணி நேரத்துக்குள்ளாக தரைமட்டமாக்குவேன். இதற்காக, எனது தேச ராணுவ வீரர்கள் நானூறு பேர் கொண்ட படை புறப்பட்டுவிட்டது” என்றார். அவர் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே முதன்மை காரியதரிசி அதிபரை நெருங்கி, காதில் ஏதோ கூறினான். அதனைக் கேட்ட டொனால் டடக்டக், பிரஸ் மீட்டை அவசரகதியில் முடித்துவிட்டு, மாளிகைக்குள் விரைந்தார். கான்பிடன்ஸியல் அறைக்குள் நுழைந்த அதிபர், அங்கே ஓடிக்கொண்டிருந்த பிளாஸ்மா டிவியைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே, அங்கிருந்த தலைமை விஞ்ஞானி, ராணுவத் தலைவர் உள்ளிட்ட மேல்மட்ட முக்கியஸ்தர்கள் அதிர்ச்சியில்தான் இருந்தார்கள். கொல்லப்பட்ட ‘சொம்புத்தூக்கி’ டிவியில் நாட்டு மக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். தான் தாக்குதலில் இறக்கவில்லை என்றும் தன்னைப் போன்று வடிவமைக்கப்பட்ட ரோபோதான் காலையில் தாக்குதலுக்குள்ளானது என்றும் கூறிக் கொண்டிருந்தார். மேலும் தன்னைக் கொல்லுவதற்குத் திட்டமிட்ட நாடு எது என்று தனக்குத் தெரியும். அதன் அதிபரை எச்சரிக்கிறேன் என்றும் ‘சொம்புத்தூக்கி’ கூறினார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த ‘டொனால் டடக்டக்’ முகம் கோபத்தில் சிவக்கிறது. காரணம், ‘சொம்புத்தூக்கி’ சவால் விட்டதே அவருக்குத்தான். “ஜென்டில்மேன்ஸ்.... என்னதான் நடக்குது. ஒருமணி நேரமா அதிர்ச்சிமேல் அதிர்ச்சியா இருக்கு எனக்கு. என்னோட குருவிமூளைக்கு ஒன்னும் புரியலே” என்றார். அங்கிருந்த ஒரே ஒரு ஜென்டில்வுமன் தன் தலையில் சொருகியிருந்த ஹேர்பின்னை உருவி, அதிபரிடம் குறியீடாகக் காட்டினாள். எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்து இருக்கிறதாம்.
அந்தப் பெண் காட்டிய குறியீடு உண்மைதான். அந்த கான்பிடன்ஸியல் அறைக்குள் அதிபர் உள்பட எல்லோரும் தாங்கள் திட்டமிட்டிருந்த சொம்புத்தூக்கி தாக்குதல் முடிவுக்காக விடியவிடிய காத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் குறிப்பிட்டிருந்த மணி நேரத்தில் சொம்புத்தூக்கி மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், தாக்கியது, இவர்களது செயற்கைகோள் துப்பாக்கி அல்ல. வேறு யாருடையதோ... அதே சமயம், காத்தவராய்ஸ் இந்தத் தாக்குதல் பட்டியலில் இல்லை. ஆனால், அவரை அதே நேரத்தில் தாக்கியது, இவர்களது செயற்கைகோள் துப்பாக்கி. இது எப்படி சாத்தியம் என்று தலைமை விஞ்ஞானி ஆராய்ந்த போதுதான், விஷயம் புரிந்தது. செயற்கைகோள் துப்பாக்கி மூலம் ஒருவரை கொல்ல வேண்டுமென்றால், சம்பந்த்தப்பட்டவரின் டி.என்.ஏ. தகவலையும் அந்த நபர் வசிக்கும் இடத்தையும் புகைப்படத்தையும், கொல்லப்பட வேண்டிய நேரத்தையும் சேகரித்து செயற்கைகோள் துப்பாக்கிக்கு அனுப்ப வேண்டும்.
அப்படித்தான் கடந்த ஆறு மாதங்களாக ரகசியமாக செயல்பட்டு, சொம்புத்தூக்கியின் டி.என்.ஏ. உள்பட அத்தனைத் தகவல்களையும் சேகரித்து அனுப்பினார் கத்திரிகா தேசத்தின் தலைமை விஞ்ஞானி, அதனை ஹேக் செய்து, எடுத்து விட்டு, காத்தவராய்ஸ் டி.என்.ஏ. மற்றும் அவரைப் பற்றிய தகவலை அனுப்பி, அவரைத் தூக்கிவிட்டார்கள். அதே சமயம், இவர்கள் அனுப்பிய சொம்புத்தூக்கியின் தகவல்களை பயன்படுத்தி, அவரையும் தூக்கிவிட்டார்கள். அந்த சமயத்தில் நிஜமாகவே சொம்புத்தூக்கி இறந்துவிட்டான் என்றுதான் நம்பினார்கள். இதைச் செய்தது யாராக இருக்கும் என்று டொனால் டடக்டக் தலைமயிலான குழு மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த பிஸியில், அதி பயங்கரவாதி வோசாமியை மறந்தே போய்விட்டார்கள். இவர்களின் இந்த சதித் திட்டத்தில் வோசாமியின் பங்களிப்பும் இருக்கிறது. முன்பே முடிவு செய்தபடி, சொம்புத்தூக்கி படுகொலை செய்யப்பட்ட அடுத்த அரைமணி நேரத்தில், ‘தாங்கள்தான் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பு’ என்று அவன் அறிக்கை விட வேண்டும். இதனை டொனால் டடக்டக்கே வோசாமியை போனில் தொடர்புக் கொண்டு சொல்லியிருந்தார்.
அதன்படி, வோசாமியும் அறிக்கை விட்டான். அதில் கூடுதலாக காத்தவராய்ஸ் படுகொலையையும் சேர்த்துக் கொண்டான். ‘அய்யய்யோ தன்னோட அதிரிபுதிரி அட்டாக் திட்டமெல்லாம் உதிரி உதிரியாக ஒரு மாதிரியாகப் போய்க்கொண்டு இருக்கிறதே... என்று பதறிய அதிபர், அடுத்த அரைமணி நேரத்தில் பிரஸ் மீட்டை கூட்டி, வோசாமிக்கு எதிராக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில்தான் தட்டொளித்தீவின் அதிபர் சாகவில்லை என்ற சேதி வந்தது. அறைக்கு வந்துப்பார்த்தால், அந்த சொம்புத்தூக்கி டிவியில் பகிரங்க சவால் விட்டுக் கொண்டிருக்கிறான். கத்திரிகா தேசத்தின் அதிபருக்கு மண்டை சூடேறியது. தலைமை விஞ்ஞானியையும் ராணுவத் தலைவரையும் “ஏதாவது பக்கா ப்ளான் சொல்லுங்க. உடனடியா நாம செயல்படனும்” என்று விரட்டினார்.
தலைமை விஞ்ஞானி, “வேறு வழியே இல்லை பிரசிடெண்ட். அந்த சொம்புத்தூக்கியை ரகசியமா கடத்திட வேண்டியதுதான். நம்ம நாட்டுக்குக் கொண்டுவந்து போட்டுத்தள்ளிட வேண்டியதுதான்.” என்று ஆரம்பித்து, தனது திட்டத்தை விவரித்தார். அதனைக் கேட்ட டொனால் டடக்டக் சந்தோஷத்தில் பெல்லி டான்ஸ் ஆடினார். அந்த சமயம் பார்த்து, அவரின் போனுக்கு அழைத்தான் வோசாமி.
“தலைவா, நீங்க சொன்னபடியே ஷார்ப்பா அறிக்கையைக் கொடுத்துட்டேன்... பார்த்தீங்களா?”
“பார்த்தேன். உன்னை சொம்புத்தூக்கி தாக்குதலுக்கு மட்டும் பொறுப்பு அறிக்கை விட சொன்னா, காத்தவராய்ஸ் படுகொலைக்கும் சேர்த்து விட்டு இருக்கியேப்பா.”
“ஒன்னு எடுத்தா, ஒன்னு இலவசம் ஆஃபர்னு நெனச்சுட்டேன் தலைவா” என்று வோசாமி சொன்னதைக் கேட்டு, அதிபர் தலையில் அடித்துக் கொண்டார். பின்னே, அவர் தலைமையிலான ‘உயர்மட்ட சதிதிட்டக்குழு’வில் இருக்கும் எல்லோருமே தன்னைப் போலவே தத்தியாக இருந்தால், அவரால் என்னதான் செய்யமுடியும்.
“அடேய்... வோசாமி, சொம்புத்தூக்கியை கடத்தனும். ரகசியமா கடத்தனும். அதை நீதான் பண்ணனும்.”
“அந்தத் தீவுலதான் எல்லாரோட மூளைக்குள்ளேயும் சிப் வெச்சிருக்கானுங்களே தலைவா. நாமளும் அந்த நாட்டுக்குள்ளே நுழைய முடியாது. அங்கே இருக்கிற அதிபரை ஆள் வெச்சும் கடத்த முடியாது.”
“தெரியும் வோசாமி, அந்தத்தீவுல நம்ம ஏஜென்ட் ரெண்டு பேரு டூப்ளிகேட் பிரைன் மெமரிசிப் வெச்சுகிட்டு நமக்காக வேலை செய்யறாங்க. அவர்களை வெச்சு வேலையை முடிச்சுடு” என்று கூறிவிட்டு போனை துண்டித்தார். டிவியில் மறுபடியும் மறுபடியும் சொம்புத்தூக்கி பேசுவதை போட்டுக்கொண்டே இருந்தார்கள். அதனைப் பார்த்த டொனால்டடக்டக்குக்கு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. அங்கே இருக்க பிடிக்காமல், உயர்மட்ட சதிதிட்டக்குழுவிடம் சொல்லி விட்டு, தனது ஓய்வறைக்குச் சென்று, படுக்கையில் சரிந்தார்.
“ச்சே... ஆறுமாதங்களாக திட்டமிட்டு செய்த காரியம் இப்படி சொதப்பிவிட்டதே.... சாட்டிலைட்டுக்கு அனுப்பும் ரகசியத் தகவல்களைத் கூட ஹேக்கர் பண்ணும் கில்லாடிகள் உருவாகிவிட்டார்களே.... கடைசியில், ஆதிகாலத்து ஐடியாவான ஆள்கடத்தல் மூலமாகத்தான் காரியத்தை சாதிக்க வேண்டியதாயிருக்கிறது. இதுவும் கை கொடுக்குமா... இல்லை, சொதப்புமா?” என்று மனத்துக்குள்ளாக யோசித்தார். தனக்கும் சொம்புத்தூக்கிக்குமான பதினைந்து வருடங்களாக நீடித்து வரும் பகைக்கான சம்பவங்களை மெல்ல அசை போட்டார்.
சொம்புத்தூக்கி தட்டொளித்தீவின் அதிபராவதற்கு முன்பு அதிபராக இருந்தவர் கூழைகும்பிடு குப்பண்ணா. அவர் டொனால் டடக்டக்கின் அடிமையாக இருந்தார். பேருக்குத்தான் அவர் அதிபர். மற்றபடி அந்தத் தீவில் மறைமுக அதிபராக கோலோச்சிக் கொண்டிருந்தவர் டொனால்தான். அந்த நாட்டின் வளங்களை எல்லாம் சூறையாடினார்.
காத்தவராய்ஸுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் அப்போது கச்சடா தீவாக இருந்தபோது அங்கே ஏராளமாக நிறுவப்பட்டன. கடல் வளங்கள், மலை வளங்கள், ஏனைய இயற்கை வளங்கள் அத்தனையும் சூறையாடப்பட்டன. உள்நாட்டு கோடீஸ்வரர்களாக இருந்த குப்பானி, சுப்பானிக்கு அப்போது தான், “ஒ! நம்ம நாட்டுல இத்தனை வளங்கள் இருக்கிறதா... இதை இப்படியெல்லாம் சூறையாடி, மலை மலையாக பணம் குவிக்கலாமா....” என்று விசயமும், ‘விடக்கூடாது.... நம் நாட்டை வெளிநாட்டுக்காரன் கொள்ளையிட அனுமதிக்கக் கூடாது. அதற்கான முழுத்தகுதியும் திறமையும் தங்களுக்கு மட்டுமே இருக்கிறது’ என்று யோசித்து, பக்காவாகத் திட்டமிட்டார்கள். அது, அடுத்த ஐம்பதாண்டுகளுக்கானத் திட்டம்.
அப்போது வந்தத் தேர்தலில் தங்களது நண்பனான சொம்புத்தூக்கியை அதிபர் வேட்பாளராக களமிறக்கினார்கள். பணத்தை பருவமழையாகப் பொழிந்தார்கள். டொனால் டடக்டக் கட்டுப்பாட்டில் இருந்த அத்தனை அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினார்கள்... தேர்தலில் தில்லு முல்லு செய்தார்கள்.... எல்லா மொள்ளமாரித்தனமும் முடிச்சவிக்குத்தனமும் கார்பரேட் முலாம் பூசி செய்தார்கள். விளைவு... சொம்புத்தூக்கி தனிப் பெரும்பான்மையோடு அதிபர் ஆனார். குப்பானியும் சுப்பானியும் அடுத்தடுத்து காய்களை வேகமாக நகர்த்தினார்கள். முதல் ஒரு வருடத்தில் தீவைச்சுற்றி சூரியத் தகடுகளும் ஆயுதத்தடுப்புத் தகடுகளும் வைக்கப்பட்டன. புதிதாக ஐநூறு செயற்கைக்கோள்கள் தீவை கண்காணிப்பதற்கென்றே அனுப்பப்பட்டன. சொம்புத்தூக்கி, குப்பானி, சுப்பானி ஆகிய மூவரைத் தவிர அந்த நாட்டு அத்தனை பிரஜைகளுக்கும் ‘மூளை நினைவு அவதானிப்பு அட்டை’ பொறுத்தப்பட்டது. முழுத்தீவையும் மூன்றே வருடங்களில் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். பிறகுதான் முக்கிய வேலையையே ஆரம்பித்தார்கள். தீவில் செயல்பட்டு வந்த அத்தனை காத்தவராய்ஸ் குழும நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அத்தனைக்கும் சீல் வைக்கப்பட்டன. எல்லாம் முதலில் அரசுடமை ஆக்கப் பட்டன. பிறகு, குப்பா - சுப்பா பிரதர்ஸுக்கு அடிமாட்டு ரேட்டுக்கு விற்கப்பட்டன. காத்தவராய்ஸ், தனது நண்பனான டொனால் டடக்டக் உதவியை நாடினார். அவரும் போர்கப்பல்கள், போர்விமானங்களை அதிரடியாக அனுப்பி, தீவின் மீது போர்த் தொடுத்தார். அதில் அணுஆயுதமும் அடக்கம்.
இப்படி தங்களைத் தரைமட்டமாக்குவார்கள் என்பதை கணித்தே, தீவைச் சுற்றி சூரியத் தட்டுகள் மூலம் பலத்த முன் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள் குப்பா-சுப்பா பிரதர்ஸ். விளைவு, டொனால் டடக்டக் அனுப்பிய அத்தனை போர்கப்பல்களும் போர்விமானங்களும் செயல் இழந்தன. ஆயுதங்களை அல்ல.... ஒரு காயித அம்பை கூட, அவர்களால் தீவுக்குள் அனுப்பமுடியவில்லை. ஒரு சாதாரண தீவு தனக்கு இப்படி தீ வைக்கிறதே என்று டொனால் டடக்டக் வெதும்பினார்... புலம்பினார்... வெம்பினார். அவரின் அத்துனை அதிரிபுதிரி ஆட்டபாம் ஆட்டங்களும் ஆல் பெயில் ஆகின. கடைசிவரை அவருக்கு போர்விமானங்களும் போர்கப்பல்களும் எப்படி தீவை நெருங்கியதும் செயலற்றுப் போனது என்கிற விசயம் புரியவே இல்லை. அவரும் அவரது சகாக்களும் தட்டொளித்தீவைச் சுற்றி குப்பானி, சுப்பானி, அமைத்திருப்பது மின்சாரத் தயாரிப்புக்கான சூரியத் தட்டுக்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அங்கே ஆயுதங்களைக் கண்டறிந்து, அதனை செயலிழக்கச் செய்யும் சென்ஸார் சோலார் உளவாளி பேனல்களும் அமைக்கப்பட்டிருந்த விஷயம் அதிபருக்குக் கடைசிவரை தெரியாமலேயே போனது.
தன் கண்களுக்கு முன்னாலேயே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் தட்டொளித்தீவின் அபார மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டு கத்திரிகா தேசத்தின் அதிபர் கடுப்பானார். ஆறு மாதங்களுக்கு முன்பு செயற்கை கோள் துப்பாக்கி மூலம் சொம்புத்தூக்கியைத் தூக்குவதென முடிவு செய்தார். உயர்மட்ட சதித்திட்டகுழுவைக் கூட்டி, தனது திட்டத்தை விவரித்தார்.
அதன்படி, குழுவில் இருந்த ஹேர்பின் குறியீட்டு லேடிக்கு சொம்புத்தூக்கியின் டி.என்.ஏ. மற்றும் அவரைப் பற்றிய டேட்டாக்களை சேகரித்துத் தரும் பணி வழங்கப்பட்டது. அந்த லேடி, குப்பானி, சுப்பானிக்காக வேலை பார்க்கும் ஏஜென்ட் என்பது, டொனால்டுக்கோ, மற்றவர்களுக்கோ தெரியாமல் போனது. விளைவு....? அடுத்த அரைமணி நேரத்தில் டொனால் டடக்டக் போடும் சதிதிட்டம் குறித்த அத்தனை தகவலும் அந்த லேடி மூலம் குப்பானி, சுப்பானிக்கு வந்துவிட்டது. இவர்கள் மாற்று சதிதிட்டம் தீட்டினார்கள். காத்தவராய்ஸ் டி.என்.ஏ. மற்றும் அவரது டேட்டாக்களை சேகரித்து தங்களுக்கு அனுப்புமாறு, அந்த கறுப்பாடு லேடியிடம் குப்பானி கட்டளையிட்டார். ஆச்சரியப்படுத்தும் விதமாக இரண்டே வாரங்களில் அத்தனை தகவல்களையும் சேகரித்து அனுப்பினார் அந்த சூப்பர் பாஸ்ட் லேடி.
தங்களுக்கு வந்த காத்தவராய்ஸ் விபரங்களை அப்படியே தங்கள் நண்பன் சொம்புத்தூக்கியின் டேட்டாவாக மாற்றி, அந்த லேடிக்கு அனுப்பினார்கள் குப்பானி பிரதர்ஸ். அதனை அந்த லேடி தலைமை விஞ்ஞானியிடம் கொடுக்க, அவர் சொம்புத்தூக்கி போர்வையில் இருந்த, காத்தவராய்ஸ் டேட்டாவை செயற்கைகோள் துப்பாக்கிக்கு அனுப்பினார். இதனிடையே, தீவு முழுவதும் தங்களது கண்ட்ரோலுக்குக் கொண்டு வந்து விட்ட, சகோதரர்கள், இனி தங்களுக்கு நண்பன் சொம்புத்தூக்கியின் தயவு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தனர். கத்திரிகா அதிபர் போடும் சதிதிட்டத்தை முழுவதுமாக தங்களுக்கு சாதகமாக மாற்றம் செய்தனர். சொம்புத்தூக்கியின் டி.என்.ஏ. உள்ளிட்ட டேட்டா தரவுகளை சேகரித்து, அவர்களுக்குச் சொந்தமான செயற்கைகோள் துப்பாக்கிக்கு அனுப்பிவிட்டு, அசிமா தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, சொம்புத்தூக்கி உருவத்தில் சிலிக்கான் சொரூபத்தை ஒரே இரவில் தங்களது ஆய்வுக் கூடத்தில் விஞ்ஞானிகளை வைத்துத் தயார் செய்தார்கள். எல்லாவற்றையும் மிக நேர்த்தியும் பூர்த்தியுமாக, முடித்துவிட்டு, தாக்குதல் நடத்தும் நாள் பற்றிய தகவலுக்காகக் காத்திருந்தார்கள்.
தனது நண்பர்கள் இப்படியொரு ஏற்பாட்டில் இருப்பதும் அவர்களே தன்னைக் கொல்லப்போவதும் பற்றிய ஒரு தகவலும் தெரியாமல் இருந்தார் சொம்புத்தூக்கி.
அந்த நாளும் வந்தது.
சொம்புத்தூக்கி வழக்கம் போல் அதிகாலை நண்பர்களுக்கான டீ சொம்புடன் காரில் பயணித்தார். தாக்குதல் நடத்தும் நேரம் வந்ததும் மிகத்துல்லியமாக, தீவைச் சுற்றி இருக்கும் அத்தனை லட்ச சூரியத் தட்டுகளின் இயக்கமும் நாற்பது வினாடிகள் நிறுத்தப்பட்டன. அந்த நேரத்தில் தட்டொளித்தீவில் சொம்புத்தூக்கியும் கத்திரிகா நாட்டில் காத்தவராய்ஸும் தாக்கப்பட்டு இறந்தார்கள். பாதுகாப்பு காவலர்கள் போன் செய்து சொன்னதும் உடனே விரைந்து வந்த குப்பானியும் சுப்பானியும் பிணமாகக் கிடந்த நண்பனைத் தூக்கி தங்களது காரில் போட்டுக் கொண்டு, அருகில் இருந்த அவர்களுக்குச் சொந்தமான காப்பர் தொழிற்சாலைக்கு விரைந்தார்கள். அங்கே ராட்சத கொதிகனலில் பல ஆயிரம் பாரன்ஷீட்டில் கொதித்துக் கொண்டிருந்த காப்பர் குழம்பில் சொம்புத்தூக்கியைத் தூக்கிப் போட்டு பஸ்பமாக்கினர். அடுத்த அரைமணி நேரத்தில், தாங்கள் தயார் செய்த சொரூபத்தை நாட்டு மக்களுடன் டிவியில் பேச வைத்தனர். அந்த ரோபோவை கடத்துவதற்கு டொனால் டடக்டக் திட்டமிட்டு, அந்தப் பொறுப்பை வோசாமி வசம் ஒப்படைத்து இருக்கிறார். அந்தத் தகவலும் ஹேர்பின் குறியீடு லேடி மூலம் இவர்களுக்கு வந்து சேர்ந்துவிட்டது. இந்தக் கடத்தலை வெற்றிகரமாக வோசாமி செய்து முடிக்க ஆறுமாதங்களோ... ஒரு வருடமோ ஆகலாம். அது வழக்கம் போல் சொதப்பலாம்.
ஆனால், அன்று மாலை உலக ஊடகங்கள் எல்லாம் ஒருமித்தக் குரலில் ஒரு சென்சேஸனல் செய்தியை உலகுக்கு உரக்கச் சொன்னது அதுதான் இங்கே முக்கியம்.
“உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தை ‘குப்பா-சுப்பா சகோதர்கள்’ பிடித்தார்கள்.”
-நிறைவு-
#688
48,513
180
: 48,333
4
4.5 (4 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
gowrigopal1968
vasanthalakshmi
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50