மகா மன்னிப்பு

கற்பனை
5 out of 5 (5 )


பூனைகள் இரண்டு ஒன்றையொன்று பிறாண்டி சண்டை போட்டுக் கொண்டிருந்தன. சுற்றிலும் நின்ற பச்சை புற்கள் அமைதியாய் வேடிக்கை பார்த்தன. சற்று ஓரமாய் கருங்கற்களும் கூழாங்கற்களும் கலந்து கிடந்தன. ஒடக்கான் ஒன்று அதன் மேல் ஏறி சரக்கென மரத்தான் வீரனைப் போல ஓடியது. அதற்குச் சற்று மறைவில் ஒரு புதர். அங்கே கொலு பொம்மை மாதிரி ஒரு உருவம் தரையில் கிடந்தது. அது அசையவில்லையா? அசைகின்றதா? என்று தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்தப் பக்கம் தன் பசுமாடுகளோடு வேணி மேய்ச்சலுக்கு வந்தாள்.

என்னவோ அன்று நிலம் முழுவதும் படர்ந்திருந்த புற்கள் மிகவும் பசேலென இருந்த மாதிரி அவள் கண்களுக்குப் பட்டது. நேற்று பெய்த தூரல் மழை புற்களை குளிப்பாட்டி விட்டது போல என்று மனதுள் நினைத்துச் சிரித்தாள்.

"ஏய்! சுந்தரி! என்னத்துக்கு அந்தப் பக்கம் போற. இங்க மேஞ்சா இறங்க மாட்டேங்குதா? நல்லா தழதழனு இருக்க புல்லு தான் வேணுமோ? ஏய்! இந்தாட்டி அத தாண்டிப் போகாத."

என்று வேணிக் கூவினாள்.

சுந்தரி, "மா.. மா!" என்று அலறினாள்.

"நல்லா மண்டைய ஆட்டுடி!"

வேணி எல்லா மாடுகளையும் பார்வையிட்டபடி சுந்தரியிடம் வந்து சேர்ந்தாள். அப்போது தான் அங்கே புதர் அருகே தெரிந்த அந்த உருவத்தைக் கவனித்தாள். ஒவ்வொரு அடி வைக்கும்போதும் நெஞ்சு மேலே குதித்து கீழே விழுந்து நொறுங்கியது மாதிரி இருந்தது.

அருகில் சென்று உற்றுப் பார்த்தாள். கண்களில் நீர் தளும்பியது. பிறந்த பச்சைக் குழந்தை. மார்பின் மீது கை வைத்துப் பார்த்தாள். உயிர் ஓடியது. பசி மயக்கத்தில் ஈனச்சுவரம் இன்றிக் காய்ந்து கிடக்கிறது. சுற்றியும் முற்றியும் பார்த்தாள். சுமந்தவள் எங்கும் காணவில்லை. சொந்தக்காரன் எந்த திசையிலும் தெரியவில்லை. மீண்டும் கண்களைக் குழந்தை மீதே வைத்தாள்.

ஒரு கந்தல் துணி இடும்பின் கீழே கிடந்தது. அதை விலகிப் பார்க்க, கை நீண்டது. மனம் சொன்னது. நீ ஆணா? பெண்ணா? தெரியல. நீ ஒரு ஆத்மா தான. நீ ஒரு சாமி தான. இந்த புல்லும் உனக்கும் ஒரு மெத்தை தான. நானும் உனக்கு ஏதோ உறவு தான. அதனால தான நீ கண்ணுல பட்டு இருக்க? நேத்தி மடத்தில ஒரு கதை கேட்டேன். நாம சந்திக்கற ஒவ்வொரு உசுரு கூடவும் நமக்குப் பந்தம் இருக்கு தாம். அது ஏதோ ஜென்மத்துக் கணக்காம். வேணி நினைத்தபடியே துணியை லேசாக ஒதுக்கினாள். ஆண் சிசு.

மெல்லத் தூக்கி மார்பில் போட்டு அதன் தலை முதல் கெண்டைக்கால்கள் வரை வருடினாள். தனியே நிலத்தில் தாழ்ந்தவள், குழந்தையோடு நிமிர்ந்து எழுந்தாள். மிகவும் பக்கத்தில் கடைகண்ணி இல்லை. வீட்டிற்கு இந்த மாடுகளை எல்லாம் ஓட்டிக் கொண்டு திரும்புவதற்குள் குழந்தை நிலைமை இன்னும் மோசமாகி விடும். ஒரே வழிதான் அவளுக்குச் சரியாகப்பட்டது. சுந்தரியின் அருகே சென்றவள், அதன் மடியருகே குழந்தையைக் கிடத்தினாள்.

"சுந்தரி! இப்போ நீ தா இந்த குழந்தைக்கு அம்மா! கொஞ்சம் பால் கொடுத்து இது பசிய ஆத்தும்மா!"

என்று வேணி கூறி அதன் முதுகை நீவிக் கொடுத்தாள். பின் அதன் காம்புகளைப் பற்றிப் பீய்ச்சினாள். குழந்தையின் அதரங்களில் பால் விழுந்து தெளித்தது. நுண் திறனாலே அது பசி போக்கும் நீர் என்று குழந்தைக்குத் தெரிந்து விட்டது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு ஞானியே தான். மூடிய கண்களுடன் சிசு செம்பருத்தி இதழ் போன்ற நாக்கை வெளியே நீட்டி நீட்டிச் சப்பியது. குட்டி வாய் குவியும்போது பிஞ்சு நெல்லிக்காய் மாதிரி இருந்தது. சிதறிய பால் கடைவாயில் வழிந்து கழுத்தில் நீர் ஊற்று மாதிரி பிரிந்து ஓடியது.

வேணி குழந்தையின் வயிற்றைப் பார்த்தாள். அது லேசாக மேடாகி இருந்தது. காம்பிலிருந்து கையை எடுத்தவள், குழந்தையைத் தூக்கினாள். அது கண்களைச் சுருக்கி சுருக்கி திறந்து இவளைப் பார்த்தது. பின்பு ஞங்.. ஞங்.. என்று கத்தியது. அதைத் தேற்றி சமாதானம் செய்தாள். ஒரு மரத்தடியிலேயே சென்று அமர்ந்தாள். தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்தாள். நேரம் ஓடியது. யாரும் வரவில்லை. மேய்ந்து முடித்திருந்த மாடுகளைச் சற்று நேரமாகவே வீட்டிற்கு ஓட்டினாள்.

வீட்டிற்குச் செல்லும் வழியில் எல்லோரும் இவள் கையிலிருந்த குழந்தையை ஒரு மாதிரிப் பார்த்தனர்.

"வேணி! யாரு பிள்ளை அது?"

வழியில் தென்பட்ட பாவைக் கேட்டாள்.

"மேய்ச்சல் நெலத்துல கிடந்துச்சுக்கா!"

"அடியாத்தி! கூறு கெட்டுப் போச்சா? இத என்னத்துக்கு எடுத்துட்டுப் போற."

வேணி சிரித்தாள்.

"இத்தன உசுர வச்சு வளத்தறேன். இது தான் எனக்குப் பாரமா?"

"மாடும் மனுசனும் ஒன்னாடி?"

"அதோ பாரு பாவையக்கா! உன் வீட்டுக் கூரை மேல சிட்டுக்குருவி உக்காந்து இருக்கு."

"ஆமா! அதுக்கென்ன?"

"அதுக்குள்ள ஓடுற அது என்னது? மடத்துல சுவாமி சொல்வாங்களே! ஆங்.. ஆத்மா. அந்தக் குருவிக்குள்ள ஓடுற ஆத்மாவும் நம்ம உடம்புல ஓடற ஆத்மாவும் ஒன்னு தான்."

"நீ என்னவோ சொல்ற வேணி! அது எனக்குப் புரியல. வேலை இருக்கு வரேன்."

என்று விட்டுப் பாவை இடத்தை காலி செய்தாள்.

"ஹேய்! க்ங்.. ஹேய்..!"

என்று நடக்காமல் முரண்டு பிடித்த ஒரு மாட்டை வேணி முடுக்கினாள்.

"ம்மா.. மா..!"

என்று சத்தமிட்டபடி அது நகர்ந்தது. அதற்குள்ளே குழந்தை விழித்துக் கொண்டு அழு குரல் எழுப்பியது.

"அழுகாச்சி வேண்டாம்டா பவுனு! கொஞ்சம் பொறு. வீட்டுக்குப் போயிடலாம்."

என்று தேற்றினாள். குழந்தை பசியில் விட்டு விட்டு அழுதது.

ஒருவழியாய் வீடு வந்தது. குழந்தையைத் திண்ணையில் கிடத்திவிட்டுத் தொழுவத்தில் மாடுகளைப் பிடித்துக் கட்டினாள். கட்டிலில் இடுப்பு ஒடிந்து கிடந்த அப்பன் காசி தான் அவளுக்கு மிஞ்சிருக்கும் உறவு.

தொழுவத்தை ஒட்டியிருந்த கிணற்றில் இரண்டு குடம் தண்ணீர் சேந்தி எடுத்தாள். பிறந்த குழந்தைக்கு நீர் ஊற்றுவது எப்படி என்று சரியாகத் தெரியவில்லை. ஆட்டுக் குட்டிகளையும், கன்றுகளையும் பராமரித்த தினுசில் சமாளித்தாள். முகம் காதிற்குப் படாமல், குழந்தையின் மேனிக்குத் தண்ணீர் ஊற்றினாள். உடம்பில் காய்ந்து கிடந்த இரத்தத் திட்டுகளைத் தேய்த்துக் கழுவினாள். குழந்தை நெளித்தது. கையில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, முகத்தைத் துடைத்தாள்.

கொடியில் தொங்கிய அவள் சேலையை நான்காக மடித்து, குழந்தையைச் சுற்றினாள். அது இவளின் மார்பை நோக்கி ஒண்டியது. உள்ளே எடுத்துச் சென்றாள்.

"யாரு குழந்த?"

"தடத்துல கெடந்ததுப்பா!"

"இங்க கொண்டாந்துட்டையாக்கும்?"

"பின்னே அதுவா நடந்து வரும் அப்பா!"

வேணி களுக்கிச் சிரித்தாள்.

"எனக்குக் கஞ்சிய ஊத்து. குடலு அலறது."

"இருப்பா! இது காஞ்சு கெடக்கு. இத அடக்கிட்டு வரேன்."

குழந்தை வீல் வீல் என்று அலறியது.

"அட கிரகத்த! விசில முழுங்கன மாதிரி என்னதுக்கு இப்படிக் கத்துது. அந்தப் பக்கம் கொண்டு போ."

காசிக் கோபப்பட்டான்.

"கத்தாதே அப்பா! உனக்கு வாயிருக்கு சொல்ற. அதுக்கு?"

என்று கேட்டபடி நடந்தாள்.

பசியாறிய பின் குழந்தை கிறங்கி தூங்கிப் போனது. தொட்டில் சேலை கட்டி குழந்தையைப் படுக்க வைத்தாள்.

ஒரு வாரம் ஓடியது. எல்லோரும் வீட்டிற்கு வந்து, வேண்டாத வேலை என்று அவளைத் திட்டி விட்டுப் போனார்கள். ஆனால் அவள் மனம் மாறவில்லை.

"பாவம்! பச்ச புள்ள. இந்த மனுசங்களுக்கு இரக்கமே இல்ல."

என்று வேணி மனதில் திட்டிக் கொண்டாள்.

குழந்தைக்குக் கேசம் சுருளாக இருந்தது. சில நாட்கள் ஓடியதில் இவளை நன்கு அடையாளம் கண்டது. கண்கள் கோலிக் குண்டு மாதிரி இருந்தன. மாடுகளையும், குழந்தையையும் ஒரு ஆளாகச் சமாளிக்கச் சிரமமாகத் தான் இருந்தது. காசி வேறு கண்டபடி மகளைத் திட்டியபடி இருந்தான்.

"நாமளே ஒரு வேள சோத்துக்கு உழைச்சு தேயணும். இதுல என்னத்துக்கு உனக்கு தரும சிந்தனை? இத கொண்டு போய் எடுத்த எடத்துலேயே கிடாசு."

"அப்பா! சும்மா பேசிட்டே கெடக்காத. நா தானே தேயறேன்."

"நா வேல செய்ல. கட்டிலில கெடுக்கறேனு சொல்லறீயா வேணி?"

"இல்ல. உழைச்சு உனக்கும் கஞ்சி ஊத்துறேன். இதுக்கும் ஊத்தறேங்கறேன்."

"நல்லா ஊத்து."

என்றுவிட்டுக் காசி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

வேணி தன் வீட்டின் பக்கத்திலே இருக்கும் மடத்திற்குத் தினம் இரவு வேளை சொற்பொழிவைக் கேட்கச் செல்வாள். இப்போது எல்லாம் குழந்தையோடு செல்லத் தொடங்கி விட்டாள். அதுவும் கொஞ்ச நேரம் கதை கேட்கும் பின்பு மெல்லத் தூங்கிவிடும்.

ஒரு சில நாளில் அங்கே ஒரு பெண் இவள் செல்லும் அதே நேரத்திற்குப் புதியதாய் வந்தாள். பின்பு தினமும் வரத் தொடங்கினாள். இவளுக்குச் சற்று பக்கவாட்டில் அமர்ந்து கொண்டு, சொற்பொழிவைக் கவனிப்பது போலக் குழந்தையையே பார்த்துக் கொண்டிருப்பாள். வேணி இதை ஆரம்பத்தில் சாதாரணமாக நினைத்தாள். ஆனால் போகப் போக ஏதோ நெருடியது.

அன்றும் தில்லைசுவாமி தன் தித்திப்பான குரலில் கடவுளின் பெயரில் உருகி வழிந்த அன்பில் சொற்பொழிவை உயிர்ப்பாக்கிக் கொண்டிருந்தார். கையில் கிடந்த பிள்ளையைச் சொத் சொத்தென மிருதுவாகத் தட்டியபடியே, வேணி காதுகள் கூர்மையாக உள்வாங்கினாள்.

"மதுரமான வாழ்வு நமக்கெல்லாம்! மதுரமான நினைவு நமக்கெல்லாம் வேண்டும்! நதி நில்லுனா? நிக்குமா? ஓடிண்டே இருக்கும். ஏன் அதுக்கு ஓய்வு வேணாமா? அது மனசுல கஷ்டம் இல்லையா? அது வேலை, கடமை ஓடறது! நாம மனுசால் நிறைய துன்பத்த கடக்கறோம். எந்த துன்பமும் தானா வராது. நாம தேடிண்டதா தான் இருக்கும். ஆனா அது விசயம்ல. பிரச்சனைனு வந்தா நடுங்கி உக்காந்துடுறோம். அதான் பிரச்சனை. சரியா? என்னப் பண்றது? மனச தேத்துங்கோ. நா இத சமாளிப்பேன். பகவான் எனக்கு ஏதோ சொல்லித் தரார்னு புரிஞ்சுக்கோங்க. ஒரு கதை சொல்றேன் கேளுங்கோ! கதைனா லேசா நினைக்கக் கூடாது. ஒருத்தரோடு அனுபவம் தான் கதையோட ரூபம். அந்த சாரத்த எடுத்துண்டா செய்தி லேசா விளங்கிடும். ஆரம்பிக்கலாமா?"

என்று கேட்டுச் சிரித்த சுவாமியின் கண்கள் ஔிர, முகம் பளபளத்தது. கூட்டத்தின் தலையாடியது.

"மயூரினு ஒரு அழகான பெண் குளத்து கரையில வாழ்ந்து வந்தா. மயூரினா நம்பிக்கைனு ஒரு பொருள் வரும். இவளும் நம்பிக்கை நிறைவா வச்சிருந்தா. பருவ வயசுல லோகத்துல எல்லாருக்கும் நடக்கற சவால இவளும் கடந்து வந்தா. தேகசந்திரா என்ற ஆடவனுக்கு இவள் மேல பிரேமம் வந்துடுச்சு. இவ கண்டுக்கல. ஆனா மனச கூழாங்கல்லு மாதிரி வெச்சுட்டாலும், அடிக்கற அலை நிக்குமோ? அரிக்கிற வேலைய விடுமோ? இவளும் மனச மாத்திண்டா! விவாகம் செஞ்சுண்டு வாழத் தொடங்கினா. சந்தோசமா காலம் ஓடிண்டே இருந்துச்சு. மயூரி கர்ப்பம் தரிச்சாள். நிறைமாசமா இருக்கற வேளையில ஆம்படையானும் பொண்டாட்டியும் சேந்து புஷ்பம் பரிச்சுட்டு இருந்தாங்கோ. அப்ப அந்த பக்கமா ஒரு மான் ஓடி வந்துச்சு. இராமாயணத்துல கதையவே மாத்தினது மான் தானே? இந்த மான் கூட்டம் எல்லாம் சாதாரணமானது இல்ல."

என்று கூறிவிட்டுச் சுவாமிகள் பொற்காசு உருளும் குடுவை மாதிரிச் சிரித்தார். கூட்டமும் சிரித்தது.

"பின்னாடி இருந்து ஓடி வந்த வேடன் மான் மேல அம்பு பாய்ச்சறதா நினைச்சுட்டு தெரியாம கீழே குனிஞ்சு புஷ்பம் கொய்துட்டு இருந்த சந்திராவோட மார்பு மேல எய்திட்டான். கீழே சுருண்டு விழுந்து உயிர் போற நிலையில இருக்க புருசன பார்த்த அதிர்ச்சியல மயூரிக்கு வலி வந்துடுச்சு. இவளும் கத்திண்டே தரையில விழுறா. சந்திராவோட உயிர் போகுது. புதுசா ஒரு உயிர் வருது. எல்லாத்தையும் பாத்த வேடன் தன் தப்ப புரிஞ்சுண்டு தலையில அடிச்சுண்டான். 'பாவம் பண்ணிட்டேனே! கர்ப்பிணிய கண்ணீர் சிந்த வச்சு பாவம் பண்ணிட்டேனே!'னு அழறான். மயூரி கிட்ட வர சொல்லிச் சைகை காட்டறா. கிட்டப் போனவன் அவ காலடியல விழுந்துன்டு மன்னிப்பு கேக்கறான். மயூரி சந்திரா மார்புல ஏறின அம்ப உருவி அவன் கிட்ட நீட்டி சைகை காட்டறா. புரிஞ்சுண்டவன் மெல்ல தொப்புள்கொடிய அறுத்து குழந்தைய கையில எடுத்துண்டான். 'தெரியாம தப்பு பண்ணிட்டே மன்னிச்சுடறேன். இவன நல்லபடியா வளர்த்து உன் பாவம் எல்லாம் கரையும்.'னு சொல்லிட்டு மயூரியும் இறந்துட்டா. இந்தக் கதை சோகமா இருக்கலாம். இதுல யாருமே பண்ண முடியாத காரியத்த அதாவது இரண்டு விசயத்த மயூரி பண்றா. உங்களுக்கு எல்லாம் அது என்னனு தோணிச்சா?"

கூட்டம் சலசலத்தது.

தில்லைசுவாமி குரலின் ஸ்ருதியை மாற்றித் தொடர்ந்தார்.

"ஒன்னு! லோகத்துல எந்த பொம்மனாட்டியும் தன் ஆம்படையான கொன்னவன மன்னிக்க மாட்டா. ஆனா மயூரி மன்னிச்சுடறா. இன்னொன்னு அவனுக்குத் தண்டனையும் தந்துடறா! உம்! குழந்தைய பாக்கறச்சலாம் அவனுக்கு அந்த நினைப்பு வரும். அவன் குழந்தைய ரொம்ப பத்திரமா பாத்துக்குவானு மயூரிக்குத் தெரியும். அவனுக்கு மோட்சம் வேணும்னா பாவம் கரையணும். பாவம் கரையணும்னா மயூரி சொன்னத செய்யணும். நா ஏன் இந்தக் கதைய சொன்னேன் தெரியுமா? மன்னிச்சுடுங்கோ! உம்! எல்லோரையும் மன்னிச்சுடுங்கோ. யாரும் மேலயும் கோபம் வேணாம்."

வேணியின் மடியில் கிடந்து சிசு துள்ளியது. சற்று தொலைவிலிருந்த அந்தப் பெண் குழந்தையையே பார்த்தாள். அவள் கண்களில் சரக்கென்று கண்ணீர் வழிந்து கொட்டியது. மடத்திலிருந்த கூட்டம் களையத் தொடங்கியது. வேணிக்கு யோசனைப் போய் அவள் மீது கோபம் வந்தது.

வெளியே எழுந்து நடந்தாள். அவளும் பின்னே வந்தாள். அதை உணர்ந்த வேணி,

"இந்தாம்மா! நீ யாரு? எதுக்கு இந்தக் குழந்தைய இப்படிப் பாக்கற? உன் கு..ழந்தையா என்ன?"

என்று கேட்டே விட்டாள்.

"ஆமா."

வேணிக்கு மூச்சு வேகமானது.

"இப்படிப் பெத்து போட்டுட்டு போயிட்டியே. பாவம் பச்சைப் பிள்ளை. உனக்கு வெக்கமா இல்ல? அப்புறம் என்னதுக்குச் சுமந்தேனேன்?"


என்று கோபமாகக் கேட்டாள்.

அவள் சிரித்தாள்.

"நா பெக்கல. ஆனா என்னது தான்."

"என்ன சொல்..ற?"

"இது என் கணவருக்கும் எ..ங்க வீட்டுல வேல செய்றவளுக்கும் பொறந்தது. அவளுக்கு வெறும் பதினஞ்சு வயசு. எனக்குத் தெரிஞ்சுடுச்சுனு அவர் குற்ற உணர்வுல இருந்தார். போன வாரம் தற்கொலை பண்ணி இற..ந்துட்டார். எனக்கு யாரும் இல்லை. அந்தப் பெண் எங்க பெத்துப் போட்டேனு சொல்லிட்டு அழுதுட்டே அவ குடும்பத்தோட ஊர காலி பண்ணிட்டுப் போயிட்டா. அவ வேற வாழ்க்கைய அமைச்சுப்பா. எனக்கு இந்தக் குழந்தை நெனைப்பாவே இருந்தது. தேடி வந்தேன். விசாரிச்சப்ப உங்கக்கிட்ட இருக்கறத தெரிஞ்சுட்டேன். தினம் உங்களையும் குழந்தையையும் மடத்துல பாப்பேன். இத கேக்கலாம வேணாமானு மனசு பிறாண்டும். இது அசிங்கம்னும் தோணும். என்னதுனும் தோணும். முடிவுக்கு வர முடியாம தவிச்சேன். இன்னிக்கு மடத்துல கேட்ட கதை என் மனச மாத்திடுச்சு. தப்ப உணர்ந்து அவர் போயிட்டார். அவர மன்னிச்சுட்டேன். இது பாவம். என்ன தப்பு பண்ணிச்சு? நா ஏத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்."

வேணிக்குக் கண்கள் குலமாகின.

"நீங்க எவ்வளவு உசந்தவங்கனு தெரியாம தப்பா பேசிட்டேன். இந்தாங்க பிடிங்க."


என்று குழந்தையை அவள் கைகளில் வைத்தாள்.

சிசு அந்தப் பெண்ணின் மார்பில் தன் தலையை அழுத்தமாய் புதைத்துக் கொண்டது.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...