தரிசனம்

prathap.pandiyan
பதின்பருவக் கதைகள்
5 out of 5 (4 )

"தரிசனம்"

திருச்சி மத்திய பேருந்து நிலையம்.இரவு மணி 12:30.பழனிமலை முருகனை தரிசிக்க எண்ணி ‘பழனி’ என்று அறிவிப்பு பலகை போட்டிருந்த பேருந்தில்,பழனிக்கு செல்ல டிக்கெட் எடுத்துக்கொண்டு ஏறி அமர்ந்திருந்தான் குமார். இயற்கை உபாதை காரணமாக பேருந்தை விட்டு கீழே இறங்கி சற்று தூரம் சென்ற போது தான் அவன் கண்ணில் பட்டது அந்தக்காட்சி.கட்டண கழிப்பிடத்தின் கட்டிடத்திற்கு அருகே சற்று இருளாகக் காணப்பட்டது.அந்த கும்மிருட்டில் சேலைக் கட்டிக்கொண்டு தலை முழுக்க மல்லிகைப்பூ சூடிக்கொண்டு கவர்ச்சியாக நின்று சபல ஆண்களை சுண்டி இழுத்துக்கொண்டு இருந்தார்கள் சில பெண்கள்.

குமார் அவர்களை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.கவர்ந்திழுக்கும் கண்கள், நிலவைப் போல ஜொலிக்கும் முகம்,உணர்ச்சிகளைத் தூண்டும் உதட்டுச் சாயமும்,பட்டு போன்ற மேனி,கட்டுக்கோப்பான தேகம் என்று சர்வ அலங்காரத்துடன் நின்று கொண்டிருந்தவர் களை சில ஆண்கள் தங்களுடன் அழைத்து சென்று கொண்டிருந்தார்கள்.

குமாரின் நாடி,நரம்புகளில் சூடேற ஆரம்பித்தது.எதோ நினைத்தவனாக பழனிமலை முருகனை நினைத்துக் கொண்டு தன் கன்னத்தில் தப்பு போட்டுக் கொண்டான்.

குமாரின் கண்கள் அவர்களை ஆராய ஆரம்பித்தது.அவர்களை இன்னும் சற்று நெருக்கமாக பார்த்தான்.அடுத்த நிமிடமே,அவனது கண்கள் ஏமாற்றம் அடைந்தன. உஷ்ணத்தோடு பெருமூச்சு விட்டான்.அங்கு சபலத்தோடு உள்ள ஆண்களுக்கு வலை விரித்து ஆவலோடு காத்துக் கொண்டிருந்தவர்கள் பெண்கள் அல்ல திருநங்கைகள் மற்றும் திருநம்பியர்கள்.

‘ச்சே.....இதுங்களா?அதானே பார்த்தேன்.இதுங்கள சும்மா விடக்கூடாது என்று தன் மனதில் தீர்மானித்துக் கொண்டு வேகவேகமாக நடந்தான். அருகில் ரௌண்ட்ஸில் இருந்த ஒரு போலீஸை அழைத்தான்.

“ வணக்கம் சார் ”

“ வணக்கம் என்ன சொல்லுங்க!”

“சார்...அங்க கட்டண கழிப்பிடத்துக்கு பக்கத்துல சில திருநங்கைங்க நிக்குதுங்க சார். அந்த பக்கமாக வரும் சில ஆண்களை கரெக்ட் பண்ணுதுங்க சார்.சீக்கிரம் வாங்க.”

“ஓ ! அப்படியா?உடனே வரேன்”என்ற சொல்லியவாறு ரௌண்ட்ஸில் இருந்த அந்த போலீஸ் கான்ஸ்டபிள் குமாரைப் பின் தொடர்ந்தார்.

இருவரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் நின்றுக் கொண்டிருந்த இடத்தை அடைந்தனர்.

போலீஸைக் கண்ட அவர்கள் தலை தெறிக்க ஓடினர்.போலீசுடன் வந்த குமாரையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

“இப்போதான் பஸ் ஸ்டாண்ட் முழுக்க ரௌண்ட்ஸ் போயிட்டு வந்தேன்.சரிங்க தம்பி நான் பார்த்துக்கிறேன் ” என்ற படி கான்ஸ்டபிள் கூலாக நடக்கத் தொடங்கினார்.

குமாருக்கு ஏதோ போல் ஆகிவிட்டது.ஆனாலும் திருநங்கைகள் மீதான கோபம் அவனுக்கு குறையவில்லை. அவனுக்கு திருநங்கைகள் மீதான தீராத கோபம் உண்டானதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

ஒரு நாள் திருச்சி மலைகோட்டைக்கு அருகில் உள்ள புத்தகக் கடையில் புத்தகம் வாங்கிக் கொண்டிருக்கும் போது,இரண்டு திருநம்பியர்கள் அவன் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்தனர்.அவன் அரண்டு போனான்.

“என்ன பண்றீங்க ?”

“ம். ஆசீர்வாதம் பண்றோம்.”

“ச்சீ...கையை எடுங்க.எனக்கு அருவறுப்பாகஇருக்கு.”

“இப்போ,உன்னை என்ன பண்ணிட்டோம்?ஆசீர்வாதம் தானே பண்றோம்?உன்னால முடிஞ்சா காசை கொடு” இல்லைன்னா சும்மா மூடிக்கிட்டு போ ! என்றனர் திருநம்பியர்கள்.

பயத்தில் தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்தான்.அதில் புத்தம் புதியதாக இருந்த நூறு ரூபாய் நோட்டுக்களுக்கு இடையே இருந்த இருபது ரூபாய் நோட்டை அவர்களிடம் நீட்டினான். ஆனால்,அவனிடமிருந்த ரூபாய் நோட்டுகளில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை மட்டும் வெடுக்கென பிடுங்கிக் கொண்டு அவர்கள் சட்டென இடத்தைக் காலி செய்தனர்.

“அய்யோ என் பணம்...பணம்”என்று குமார் புலம்பினான்.

யாரும் அவனுடைய வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லை.இப்படித் தான் திருநங்கை கள் மற்றும் திருநம்பியர்கள் மீது குமாருக்கு தீராத வெறுப்பு உண்டாகி இன்றுவரை தொடர்கிறது.

அதன் வெளிப்பாடுதான் இப்பொழுது மத்திய பேருந்து நிலையத்தில் நடந்தேறிய சம்பவமும் கூட.

இவ்வாறாக திருநங்கையர்கள் மூலம் தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தை தனக்குள் அசைபோட்டுக் கொண்டிருக்கையில் பழனிக்கு செல்லும் பேருந்தும் மெல்ல நகர ஆரம்பித்தது.

குமாரும் சுய நினைவுக்கு வந்தவனாக தன் கட்டைப்பையை தூக்கிக்கொண்டு ஓடினான். அப்பொழுது குமாரின் சட்டைக் காலரையாரோ இழுப்பதுப் போல இருந்தது. அவன் திரும்பிப் பார்த்தான்.ஒரு திருநம்பியர் கை தட்டியபடி வந்து அவனிடம் காசு கேட்டாள்.

அந்த திருநம்பியரைக் கண்ட குமார் கோபத்தில் வெடித்தான்.பேருந்தில் ஏற வேண்டிய அவசரத்தில் தன் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அந்த திருநம்பியரின் முகத்தில் வீசிவிட்டு பேருந்தில் ஏறி ஒரு ஜன்னல் ஓர சீட்டாக பார்த்து அமர்ந்து உறங்க ஆரம்பித்தான்.குமாரைத் தொடர்ந்து அந்த திருநம்பியர் உட்பட வேறு சில பயணிகளும் அந்த பேருந்தில் பயணிக்க ஆரம்பித்தனர்.

விடியற்காலை நேரம் !

“பழனியை அடைந்தது பேருந்து.”பழனி இறங்கு ! பழனி இறங்கு !” என்றார் கண்டக்டர் .

குமார் கண்களை கசக்கிக் கொண்டு கண் விழித்தான்.நேற்று இரவு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பார்த்த அதே திருநம்பியர் அவனுக்கு முன் நின்றுக் கொண்டு இருந்தாள்.குமாருக்கு கோபம் தலைக்கேறியது.கோபத்தில் பேச ஆரம்பித்தான்.

“சனியனே ! நீ இங்கேயும் வந்து தொலைச்சிட்டியா?போ !போய் செத்துத் தொலை” என்று ஒரே கத்தாக கத்தினான்.எந்தவித சலனமுமின்றி அந்த திருநம்பியர் மௌனம் காத்தாள்.

திடீரென அங்கே வந்த டிக்கெட் பரிசோதனை செய்யும் செக்கர் அனைவரின் டிக்கெட்டையும் பரிசோதனை செய்துக் கொண்டிருந்தார்.

குமார் தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த டிக்கெட்டை திருநம்பியரை முறைத்துப் பார்த்தப் படியே திமிராக தேடினான்.தன் சட்டைப் பை,பேண்ட் பாக்கெட் மற்றும் தான் வைத்திருந்த கட்டைப் பை உட்பட அனைத்து இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.

“ சார் ! டிக்கெட் காணும் சார்.”

“என்னது டிக்கெட்டை காணுமா?யாரை ஏமாத்த பாக்குற?”என்று செக்கர் குமாரை அதட்ட ஆரம்பித்தார்.

“சார் ! சத்தியமா டிக்கெட் எடுத்து வச்சிருந்தேன்.இப்போ காணும் சார்.வேணும்னா கண்டக்டர் சாரை கேட்டுப்பாருங்க” என்று பாவமாகக் கூறினான் குமார்.

கண்டக்டர் தலையை சொறிந்தார் ‘எனக்கு சரியாக ஞாபகமில்லை தம்பி ’ என்றார்.

குமாருக்கு குப்பென்று வியர்த்து விட்டது.

“தம்பி ! ஒன்னு டிக்கெட்டைக் கொடு.இல்லைன்னா அபராதமாக ஐநூறு ரூபாய் கட்டு. அதுவுமில்லனா நீ ஜெயிலுக்குதான் போகணும்” என்றார்.

குமாரிடம் தற்போது முன்னூற்று ஐம்பது ரூபாய் மட்டுமே தான் இருந்தது.என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான்.

அந்த நேரம் நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த திருநம்பியர் தன் வசமிருந்த இரண்டு டிக்கெட்டைக் காண்பித்து ஒன்று தன்னுடையது என்றும் மற்றொன்று இவருடையது என்றும் குமாரைக் காண்பித்துக் கூறினாள்.

டிக்கெட்டுகளைப் பார்த்து பரிசோதித்து விட்டு சரிபார்த்த பின்னர் கண்டக்டரும் செக்கரும் வேகவேகமாக அந்த இடத்தை விட்டு விலக ஆரம்பித்தனர்.

குமார் என்ன பேசுவதென்றே தெரியாமல் மௌனம் காத்தான்.குமாரும் திருநம்பியரும் பேருந்தை விட்டுக் கீழே இறங்கினர்.

குமார் பேச ஏதும் வார்த்தைகளின்றி எச்சிலை விழுங்கினான்.அந்த திருநம்பியரே பேச ஆரம்பித்தாள்.

“நேத்து ராத்திரி உங்ககிட்ட காசு கேட்டபோது நீங்க ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை தூக்கி என் மூஞ்சுல வீசிட்டு போயிட்டீங்க.அந்த ரூபாயோடு உங்க பஸ் டிக்கெட்டும் ஒட்டிக்கிட்டு வந்துடிச்சசு.அந்த டிக்கெட்டை உங்கக்கிட்ட கொடுக்கத்தான் பஸ்ல ஏறுனேன். ஆனால்,நீங்க பஸ்ல ஏறுனதும் ஜன்னலோரமாக உட்கார்ந்து தூங்கிட்டீங்க.நான் உங்க தூக்கத்தை கெடுக்க விரும்பவில்லை. டிக்கெட்டை உங்கக்கிட்ட கொடுக்கறதுக்குள்ள இப்படி-ஆகிப்போச்சு.உணர்வுங்குறது (ஆண்- பெண்- திருநங்கை- மற்றும் திருநம்பியர்)எல்லோருக்கும் பொதுவானது.நாங்களும் ஒரு உயிர் தான்.எங்களையும் மதிச்சு வாழ விடுங்க” என்று சொல்லிவிட்டு குமாரிடம் அவன் கொடுத்த ஐம்பது ரூபாயையும் திருப்பி கொடுத்துவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் அந்த திருநம்பியர் நடக்க ஆரம்பித்தாள்.

குமார் பேச வார்த்தைகள் ஏதுமின்றி கூப்பிய கரங்களோடு திருநம்பியர் நடந்து சென்ற திசையை வணங்கினான்.பழனிமலை ரம்யமாகக் காட்சியளித்தது.

நன்றி.

இப்படிக்கு,

பெண்ணாகடம் பா.பிரதாப்.

மெயில்:prathap.pandiyan@gmail.com

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...