தனிமையில் காதல் பயணம்

பயண இலக்கியம்
4.9 out of 5 (158 )

“பல நாள் கனவு நிறைவேறும் நாள் இன்று”.

ஆம்.. எங்களின் தனிமையில் ஒரு காதல் பயணம். இருவரும் தங்களின் தனிமை பயணத்தினை தொடங்கினோம்.

பயணம் விழுப்புரத்தில் தொடங்கியது.

விழுப்புரம் to மூணார் ஒன்பது மணி நேரம் பேருந்து பயணம்.

எனது காதலன் என்னுடன் இருந்ததால் பயணம் இனிமையாக தொடங்கியது.

“நாங்கள் காதல் செய்ய தொடங்கிய நாள் முதல் எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறவுள்ளது.”

இருவரும் தங்களின் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். ஏனோ சிறு அச்சம், பதட்டம், பயம் என்னை சூழ்ந்தது. பல வருடங்கள் காதலர்களாக வலம் வந்தாலும் முதல் முறை தனிமையில் ஒரு பயணம் தொடர்கையில் சிறு அச்சம் ஏற்பட்டது.

அவன் எனது மன ஓட்டத்தினை அறிந்துகொண்டான், அவன் எனது விழிகளை பார்த்து நான் உன்னுடன் இருக்கும் வரை நீ எனது அன்பு கடலில் மட்டுமே மூழ்கி இருக்க வேண்டும் என்று கூறினான்.

நானும் அவனை பார்த்து எனது இருவிழிகளால் சம்மதம் கூறினேன்.

“அந்த பேருந்து பயணத்தில் அச்சத்தை விடுத்து அவனின் அன்பு கடலில் மூழ்க தயாராகினேன். “

பேருந்து நகர தொடங்கியது. நாங்கள் செல்வது என்னவோ மூணார் தான்.

ஆனால் அந்த பேருந்து என்னை சொர்க்கத்தை நோக்கி அழைத்து செல்வதாக உணர்ந்தேன்.

ஒரு அரைமணி நேரம் பயணம் முடிந்திருக்கும்.

பேருந்தின் வெளிச்சம் அணைக்கப்பட்டது.

எங்களை சுற்றி அமைதி சூழல் மட்டுமே.

சிறிது நேரத்தில் பௌர்ணமி வெளிச்சம் எங்களை சூழ்ந்தது.

ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளை கோர்த்து அவனிடம் பேச நினைத்தேன்., அவனை வர்ணித்து கவிதைகள் கூற நினைத்தேன்.

ஆனால் என்னுடைய சத்தம் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்க கூடாது என்று அமைதிக்கொண்டேன்.

ஆனால் இந்த பயணத்தினை இப்படியே முடிய விட கூடாது. அழகிய நினைவுகளால் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஆனால் என்ன செய்வது?

இத்தருணத்தினை போல் இனி ஒரு நாள் எனது வாழ்வில் வருமா என்று நான் அறியேன்.

அதிகம் யோசித்தேன்.

குழம்பினேன்..

ஆனால், எதுவும் சிந்தையில் தோன்றவில்லை.

அவனாவது பேசுவான் என்று ஏங்கினேன். அவனும் என்னிடம் பேசவில்லை.

சரி… இந்த இரவு இனி இப்படித்தான் போகும் . இனி அதை பற்றி யோசிக்க கூடாது. அவன் பேசினாலும் நான் பேச மாட்டேன் என்று கோவம் கொண்டேன்.

இனி யோசிச்சால் நான் பைத்தியம் ஆகிவிடுவேன்.

நம் வாழ்வில் நாம் நினைப்பது அனைத்தும் நடந்துவிடும் என்று மனக்கோட்டை கட்டிவிடக்கூடாது.

இந்த தருணத்தில் அவன் கூறிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது.

" எனது அன்பு கடலில் உன்னை மூழ்க வைக்க போகிறேன்"

ஆனால் இவனோ என்னை கண்ணீர் கடலில் மூழ்க வைத்துவிடுவான் போல.

சரி… இனி என்ன செய்வது?.

ஜன்னல் ஓரம் இனி வேடிக்கை பார்க்க தொடங்கினேன்.

சற்று நேரத்திற்கு பிறகு அவன் என்னிடம் பேச தொடங்கினான்.

இரவின் நிலவொளியில் அவன் பொழியும் காதல் வார்த்தைகளில் மயங்கினேன்.

அந்த நொடி பொழுதில் தான் தொடங்கியது எங்களின் காதல் பயணம்.

அவன் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அவன் தோள்களில் சாய்ந்துக் கொண்டேன்.

பௌர்ணமி வெளிச்சம், சில்லென்ற சாரல் காற்று அவன் தோள்களில் சாய்ந்துகொண்டு யோசிக்கிறேன்.

இந்த பயணத்தில் எதோ ஒன்று குறைகின்றதே?

அது என்னவாக இருக்கும் என்று யோசித்தேன்.

ஆம்... அப்போது தான் ஞாபகம் வருகிறது.

இந்த அழகிய தருணத்தில் குறைந்த ஒன்று இளையராஜா பாடல்கள் தான்.

அவனோடு பாட்டு கேட்டுக் கொண்டு செல்கையில் இளையராஜாவின் இசை இன்னும் சிறுதுளி அதிகம் இனிக்கிறது.

எங்கள் இருவரின் பயணத்தில் இப்போது இளையராஜாவும் இணைந்து கொண்டார் .

அவனோடு பயணம் செய்கையில் “பட்டுப்போன மரங்களும் என்னோடு ஓடி வருவதாக எண்ணிக்கொண்டேன்”.

“எத்தனை அனுபவம் அவனோடு.”

ஜன்னலோர இருக்கை, பௌர்ணமி வெளிச்சம், சில்லென்ற குளிர் காற்று,

இளையராஜாவின் துணையுடன் அவனது தோள்களில் சாய்ந்து கொண்டு கதைகள் பேசத் தொடங்கினேன்.

இருவரும் தங்களை பற்றி புரிந்துகொள்ள இந்த இரவு ஏதுவாக இருந்தது.

இதுவரை துன்பமாக இருந்த பயணம் இப்போது தான் ரசிக்கத் தோன்றுகிறது.

இந்த அழகான இரவு முடிந்துவிட கூடாது என்று எண்ணிக்கொண்டு உறங்க தொடங்கினேன்.

ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினேன்.

திடீரென ஒரு குரல் கேட்டது.

“தேனி வந்துடுச்சி. எல்லாரும் இறங்கவும்” என்று கண்டக்டர் உறத்த குரலில் சொல்லி கொண்டிருந்தார்.

கண்விழித்து பார்த்தேன்.

“தனிமையில் நான் மட்டும்.”

அப்போதுதான் தெரிந்தது என்னுடன் இவ்வளவு நேரம் பயணம் செய்தது தினமும் எனது கனவில் வரும் காதலன் என்று.

“மௌனமாக சிரித்துக் கொண்டேன்.”

“நான் வாழ்நாள் முழுவதும் கனவில் மட்டும் தான் காதல் செய்ய போகிறேன்” என்று நினைத்து கொண்டேன் .

ஆனால் கனவில் காதல் செய்வதும் நன்றாக தான் உள்ளது.. பேருந்தை விட்டு இறங்கினேன்.

தேனி TO மூணார் பேருந்திற்கு காத்துக் கொண்டிருந்தேன். தேனி 2 வருடங்களுக்கு முன்பு எனது நண்பனை பார்ப்பதற்காக வந்தது,.

மண்மணம் மாறாத இயற்கை காட்சிகள்.

அரைமணி நேர காத்திருப்பிற்கு பிறகு மூணார் பேருந்து வந்தது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

மலை மீது பேருந்து ஏறிக்கொண்டிருக்கும் நேரம்.

ஏனோ அச்சம் எட்டி பார்த்தது என்னுள்.

மலை பாதையின் வளைவுகளில் தொண்டையை நிறைந்தது வயிற்றில் உள்ள உணவு.

எனது அச்சமும் உச்சத்தில் நின்றது.

இருந்தும் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் பாடல் கேட்டுக்கொண்டு பயணத்தை தொடங்கினேன்.

இறைவன் பல வண்ணங்கள் கொண்டு இந்த உலகத்தை வரைந்துள்ளான்.

ஆனால் இங்கு மட்டும் பச்சை வண்ணத்தை அதிகம் கொட்டிவிட்டான் போல என பல எண்ணங்கள் தோன்றியது.

திரும்பும் திசை எங்கும் பச்சை வண்ணங்கள்.

“மரங்களும் கூடு திரும்பும் பறவைகளையும் பார்க்கும் அந்த தருணம் எனது பெற்றோர்களின் ஞாபகம்.”

சில நினைவுகள் கண்ணீர் துளியுடன் என்னை பனிக்குளிரில் பயணிக்க வைக்கிறது.

எதிரில் இருப்பவர்கள் கண்ணிற்கு தெரியாத மூடுபடி. வழிநெடுக்க விற்பனையாளர்கள்.

இதை பார்க்கும் போது எங்கள் ஊரில் பலா முந்திரி விற்பது ஞாபகம் வந்தது.

ஒண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு மூணரை அடைந்தேன்.

உடல் உறையும் குளிரிலும் சாதாரணமாக நடந்து செல்லும் மனிதர்கள்.

சிறிது நேரத்தில் நான் ஒரு பாதையில் நடக்கத் தொடங்கினேன்.

நான் தனியாக நடக்கும் போது என்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டு சென்றேன்.

காட்டுவழி ஒரு பயணத்தை தொடங்கினேன்.

“இந்த மரங்களை பார்க்கும் போது வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.”

மனிதர்களிடம் பேசும் போது கிடைக்காத நிம்மதி மரங்களிடம் பேசும் போது அமைதியான மனநிலை அடைந்தேன்.

சிறிது நேரத்தில் தென்றல் என்னை தழுவியது. பிரித்து பார்த்து நேசம் காட்டாத ஒன்று தென்றல் மட்டுமே.

மீண்டும் நடக்க தொடங்கினேன்.

திகைத்து நின்றேன்.

எனது எதிரில் ஒரு அழகிய மலை.

அந்த மலை மேல் படர்ந்துள்ள பசுமை எனதிரு விழிகளுக்கு விருந்தளித்தது.

சற்றும் எதிர் பாராமல் ஓர் சாரல் மழை எனது அங்கத்தை நனைத்தது. இந்த தருணத்தில் ஒரு கவிதை சொல்ல தோன்றுகிறது.

“வான் அவன் மலை அரசி மேல் காதல் கொண்டு

சிறு சிறு மழைத்துளிகளால் அவளை நனைக்க

மலை அரசியோ மோகத்தின் உச்சத்தில் வெட்கம் கொண்டால் “ ..

மலை அரசியின் அழகை பார்த்துக்கொண்டே மலர்களை காண பயணத்தில் விரைந்தேன்.

இந்தஊரில் மட்டும் ஏனோ காற்றின் வாசம் புது நறுமணத்தையும் சில நினைவுகளையும் தந்தது.

வண்ண பூக்களை காண எனது கண்கள் எத்தனை தவங்கள் செய்ததோ தெரியவில்லை.

ஒவ்வொன்றாய் கண்டு அவன்றின் மீது காதல் வயப்பட்டேன்.

சிறிது நேரம் நடந்து சென்றான்.

எதோ ஒரு சத்தம் கேட்டது.

சிறு குருவிகளின் சத்தம்.

தாய் பறவை உணவை தனது பிஞ்சு குழந்தைகளுக்கு பரிமாறும் அழகை கண்டேன்.

“காண கிடைக்காத காதல் காட்சி அது.”

“ பறவைகளை கொஞ்சும் காதல் ஜோடிகள். மனதில் சிறு ஏக்கம் பிறந்தது. “

சில கடந்தகால நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு செல்லும் போது ஒரு அருவியை பார்த்தேன்.

அதை பார்க்கும் போது மலைகளின் மேலிருந்து நீர்வீழ்ச்சி தற்கொலை செய்து கொள்வதை போல் கற்பனை செய்து கொண்டேன்.

பாவம்…

நீர்வீழ்ச்சிக்கு என்னை போல் காதல் தோல்வி என்று நினைத்து சிரித்துக்கொண்டேன்

வியர்வையை காணாத பனி கூட்டத்தில் எனது நேரம் கழிந்தது..

தனிமையில் இருநாட்கள் பயணம் முடிந்தது.

மலை பயணம் முடித்து வீடு நோக்கிய பயணம் தொடங்கினேன்.

இந்த தனிமை பயணம் எனது வாழ்வில் சில உண்மைகளை எழுதி சென்றது.

மனம் விட்டு பேச யாரும் இல்லா தருணங்களில் தனிமைப் பயணங்கள் தன்னம்பிக்கை தருகிறது.

இந்த தனிமை பயணம் ஒரு சொர்க்கலோகம் சென்றது போல் ஒரு சிறப்பான அனுபவத்தை பெற முடிந்தது .

யாருமே இல்லாத இடத்தில் என்னால் பல அழகிய காட்சிகளை கற்பனை செய்ய முடிந்தது.

என்னால் எனது சொந்த அனுபவத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் வரலாற்றில் பதிக்க முடிந்தது.

கற்பனை விரிவடைந்து கதைகள், கவிதைகள், ஓவியங்கள், கலை என பல்வேறு வடிவில் வெளிப்படுத்தவும்,

எனக்குள் இருக்கும் ஒருத்தியை என்னால் இந்த இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தவும் இந்த பயணம் ஏதுவாக இருந்தது. .

உங்களுக்குள் ஒருவன்... அவனை நீங்களே நட்பாக்கிக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும்.

அது தனிமையில் நீண்ட தூரம் பயணித்தால் மட்டும் கிடைக்கும் ஒரு அனுபவம்.

“புத்தகம் படிக்கும் பழக்கம் அவ்வளவு எளிதாக எவர் வசமும் வந்துவிடாது. “

அந்த பழக்கத்தை கொண்டு வர ஒரு தனிமை பயணம் சிறந்தது.

இப்படி பல நல்ல நன்மைகளை தனிமைப் பயணம் எனக்கு உணர்த்தியது.

தனிமை சிலருக்கு வாழ்க்கையில் வெறுமையை நாட வைக்கிறது.

அதுவே தனிமையில் பயணித்தால் நம்மை பற்றி நம்மை நாமே உணர்ந்துகொள்ள முடிகிறது.

“பயணத்தின் முடிவில் நான் யார் என்று உணர்ந்து கொண்டேன்.”

இடையில் ஏனோ இந்த பயணம் எனது கனவு காதலையும், காதலனையும் நினைவுபடுத்தி

மின்மினி பூச்சியாய் இரவில் வந்து பகலில் மறைந்தது.

இத்தனை இன்பங்களையும் தந்து சென்றது இந்த தனிமை பயணம்…

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...