காதல் எஃப் எம்

நகைச்சுவை
5 out of 5 (2 )

வருடம் 2002

நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் இந்த பாடலுடன் முடிவுக்கு வருகிறது மாலைத்தென்றல்.திஸ் இஸ் ஆர்.ஜே செந்தில் சைனிங் ஆஃப் என்ஜாய் ஸ்டே டியூன்ட் அன்ட் ஹாவ் ஃபன். சொல்லிமுடித்துவிட்டு பெரிதாக ஒரு சோம்பல் முறித்தான் .ஆன் ஏர் ரூமிலிருந்து வெளியே வந்தான்.

பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்தான்.

"யோவ் செந்திலு" குரல் கேட்டுத் திரும்பினான்.எதிரே நண்பன் பாலா நின்றிருந்தான்."செந்திலு வாயா ஒரு டீ சாப்பிடுவோம்"என்றான்.

"வேண்டாம் மாமா ,நீ குடி" என்று கிளம்ப முற்பட்டான்..

"யோவ் இவ்வளவு சீக்கிரம் ரூமுக்குப் போய் என்ன பண்ண போற? வாயா ஒரு விஷயம் பேசனும்.

ஸ்ஸ்ப்பா! பெருமூச்சுவிட்டபடி பைக்கிலிருந்து இறங்கினான். அருகிலுள்ள டீக்கடைக்குள் நுழைந்தார்கள்.

"மாஸ்டர் ரெண்டு டீ "சொல்லிவிட்டு இருவரும் அமர்ந்தனர்.."சொல்லு மாமா"என்ன பேசனும்?

"யோவ் இருயா டீ வரட்டும்"டீ வந்ததும் குடித்துக்கொண்டே கேட்டான் பாலா.

நேத்து அம்மா ஃபோன் பண்ணுனாங்களா.?

ஆமா பாலா உனக்கு எப்படி தெரியும்.

எங்கிட்டயும் பேசுனாங்க செந்திலு ..

செந்தில் டீயை பலகைமீது வைத்துவிட்டு பாலாவை முறைத்துக்கொண்டே சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டான்.

"யோவ் செந்திலு ஏன்யா கோபப்படறே?

அம்மா என்ன சொன்னாங்க பாலா, என் புள்ளைய கல்யாணம் பண்ணிக்கோனு நான் ஒரு பக்கம் டார்ச்சர் பண்றேன், நீ ஒரு பக்கம் டார்ச்சர் பண்ணுனு சொன்னாங்களா?

ஏன்யா இப்படி பேசற அம்மா கேட்டதுல என்ன தப்பிருக்கு பெத்தவங்க இதக்கூட கேக்கமாட்டாங்களா?

இதப்பாரு மாமா நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிப்பான்.எங்கம்மா சொல்ற மாதிரி முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னால சந்தோஷமா இருக்கமுடியாது.இனிமே கல்யாண விஷயமா பேசறதுனா என்கிட்ட பேசவே வேண்டாம்.சொல்லிவிட்டு வேகமாக எழுந்து செல்கிறான்.

யோவ் ஒரு நிமிஷம் நில்லுயா...பாலா கத்த நிற்காமல் சென்றான் செந்தில்.

அடுத்த நாள்..

கோயிலின் முன் பைக்கை நிறுத்தினான் செந்தில்.ஒரு கடையில் தேங்காய் வாங்கி வருகிறான்.சாமிசிலைக்குமுன் நிற்கிறான்.ஐயர் வர அவர் கையில் தேங்காய் கொடுக்கிறான்.

"என்ன வோய்." இன்னிக்கு ஏதாவது விஷேஷமா?

ஒன்னும் இல்லையே சாமி ஏன் கேக்கறீங்க?

நீங்களும் தினமும் ஆலயத்துக்கு வர்றேள் .உம்ம முகத்துல இவ்வளவு சந்தோஷத்த பாத்ததில்லயே அதான் கேட்டேன். என்று சொல்லிவிட்டு அர்ச்சனை செய்ய கர்ப்பகிரகத்திற்குள் செல்கிறார்....

சாமி இந்த வருஷமாவது மனசுக்குப் பிடிச்ச பொண்ண என் கண்ல காட்டு என வேண்டிக்கொண்டான்.

இன்னிக்கு நிஜமாவே உமக்கு விசேஷம்தான் வோய் தேங்காய்ல பூ விழுந்திருக்கு.நல்லது உங்கள தேடி வரப்போகுது ..

அப்படியா சாமி என்று சந்தோஷமாக கேட்கிறான் செந்தில்...

கான்ஃப்ரன்ஸ் ஹால்..

எல்லாரும் கூட்டமாக அமர்திருந்தனர். பாலாவின் தோளைச் சுரண்டினான் செந்தில்.

என்னயா?

இன்னிக்கு கோயில்ல தேங்காய் உடைக்கும்போது தேங்காய்ல பூ விழுந்திருந்துச்சு தெரியுமா?

அதுக்கென்ன?

யோவ் மாமா தேங்காய்ல பூ விழுந்திருந்தா நல்ல சகுணம் , ரொம்ப நாளா தேடிட்டு இருந்தது நம்மள தேடி வரப்போகுதுனு அர்த்தம்.

.டேய் சும்மாயிருடா லூசு மாதிரி பேசிகிட்டு....

பாலா நான் அம்மாகிட்ட கூட கேட்டேன் அப்படி ஒரு ஐதீகம் இருக்கறது உண்மைதான்..

சும்மாயிருயா காலங்காத்தால கடுப்பேத்திகிட்டு.

பாலா நான் கண்ணமூடிக்கிட்டு இந்த வருஷம் எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ண காட்டுனு வேண்டுனப்போ கரெக்டா மணி அடிச்சிது..

சும்மாயிரு செந்திலு கோயில்னா மணி சத்தம் கேட்காமயா இருக்கும்...

உனக்கு நம்பிக்கை இல்லனா போ, எனக்கென்னமோ என்னதேடி ஒரு தேவதை வரப்போறானு தோணுது...

செந்தில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே லெட்டர் பாக்ஸை கொண்டுவந்து மேஜைமீது வைத்தான் முருகேசன்..

எல்லாரும் அவர்களுக்கான லெட்டரை தேட , செந்திலும் தேடினான்.

முருகேசன் கேட்டான்"அண்ணே இங்க என்னணே பண்றீங்க?

என்னடா ?என்றான் செந்தில்.

இது ஆடியன்ஸ்கிட்டயிருந்து வர அப்ரிசியேசன் லெட்டர்னே.

பாலா புரிந்துகொண்டுச் சிரித்தான் .,செந்தில் அவன் என்ன சொல்றானு புரியுதா?உன் ஷோவுக்குதான் லெட்டர் வந்ததே இல்லையே.அப்புறம் இங்க என்ன டாஷ் புடுங்கறேனு கேட்கிறான்.

சொல்லிவிட்டு பாலாவும் , முருகேஷும் சிரிக்க

என்னடா நீயும் இவன்கூட சேர்ந்துகிட்டு சிரிக்கிறியா?

முருகேஷ் கையில் ஒரு லெட்டர் கிடைக்க "அண்ணே உங்களுக்கு லெட்டர் வந்திருக்குணே"

மறுபடியும் கலாய்க்காதடா ..என்றான் செந்தில்

அண்ணே நிஜமாதானே சொல்றேன் என்று சொல்லி லெட்டரை நீட்டினான் முருகேஷ்...

செந்தில் கடிதத்தைப் பிரித்துப் பார்க்கிறான்..

.கோணல்மாணலாக எழுத்துகள் ஓடின...

அன்புள்ள செந்தில் அவர்களுக்கு...

உங்கள் மாலைத்தென்றல் நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும். நல்ல பாடல்கள் கேட்க மிகவும் இனிமையாகவும்., உற்சாகமாகவும் இருக்கும்.உங்கள் நிகழ்ச்சியின் மூலம் நல்ல கருத்துகள் சொல்வதற்கு மிகவும் நன்றி.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இப்டிக்கு உங்கள் அன்பு ரசிகை ஜீவா.

கடிதம் முடிந்துப்போயிருக்க...

பாலா சொன்னான்..யோவ் செந்திலு நீ சொன்னது நடந்திரும்போல...

செந்திலுக்கு எல்லாம் புதிதாக இருந்தது.ஸ்டைலாக முடி வெட்டிக்கொண்டான்.குறுந்தாடி வைத்துக்கொள்கிறான்.காதல் பாடல்களை விரும்பிக்கேட்கிறான்.ஏனோ அனைத்துக்காதல் பாடல்களும் அவனுக்காக எழுதியதுபோல் தோன்றியது...அவளுக்கு பதில் கடிதம் எழுதினான்.

அன்புள்ள ரசிகை ஜீவாவிற்கு,

ஆர்.ஜே ேசெந்தில் எழுதுவது உங்கள் கடிதம் கிடைத்தது.எனக்கு வந்த முதல் கடிதம் உங்களுடையது.நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட்.உங்ககிட்ட நிறைய விஷயம் ஷேர் பண்ணிக்கனும்.உங்கள நேர்ல பார்ககனும்..எப்போ சந்திக்கலாம்..

இப்படிக்கு,

ஆர்.ஜே செந்தில்

பின் குறிப்பு: கண்டிப்பாக பதில் கடிதம் போடவும்.

சில நாட்களுக்குப் பிறகு.,

யோசனையாய் அமர்ந்திருந்தான் செந்தில்..

என்னயா உம்முனு இருக்க என்றான் பாலா.

அந்தப் பொண்ணு இருக்கால...

எந்த பொண்ணு? ஓ அந்த லெட்டர் பார்டியா..

ஆமா அவதான் பத்து நாளாச்சு லெட்டர் அனுப்பி இன்னும் எந்த ரிப்ளையும் வரல..

இதுக்கா உம்முனு உட்கார்ந்திருக்க? போய் பொழப்ப பாருயா...ஆமா செந்திலு நாளைக்கு ஒரு கிராமத்துக்கு போறேன் வர்றியா?

என்ன கிராமம் பாலா? என்ன வேலையா போற?

குச்சனூர்னு ஒரு கிராமம் அந்த ஊர் பெரியவர பேட்டி எடுக்கணும் வர்றியா கார்லயே போயிட்டு வந்துடலாம்.

ம்ச்! நான் வரல நீயே போயிட்டு வா என்றான் செந்தில்

பரவால நானே போயிக்கிறேன் என்றான் பாலா முறைத்துக்கொண்டே..

"அடடா அது ஜீவாவோட ஊராச்சே " செந்திலுக்கு நினைவுவர எழுந்து பாலாவிடம் போகிறான்.

மாமா ஊர் பேர் என்ன சொன்ன .?

குச்சனூர் ஏன் கேக்கறே ?

பக்கமா, தூரமா ?

கொஞ்சம் தூரம்தான் .நீதான் வரலனு சொல்லிட்டியே அப்புறம் ஏன் கேட்கறே...நான் தனியாவே போயிக்கறேன்..

.என்ன மாமா இப்படி பொறுப்பில்லாம பேசற அவ்ளோ தூரம் எப்படி தனியா போவ நானும் வர்றேன்...

இப்பதான் வரலனு சொன்ன அதுக்குள்ள என்னாச்சு?

எல்லாம் பாசம்தான் நீ தனியா போய் கஷ்டப்படவேணாமேனுதான்....

நீ ஆப்படியெல்லாம் யோசிக்கிற ஆள் இல்லையே சம்திங் ராங்?

.அதெல்லாம் ஒன்னுமில்ல நானும் வர்றேன் அவ்ளோதான் என்றான் செந்தில்...

மறுநாள் காலையில்,

காரில் போய்க்கெண்டிருக்கிறார்கள்.டிரைவிங் சீட்டிலிருந்து செந்திலை திரும்பி பார்த்தான் பாலா..

என்ன இன்னிக்கு ரொம்ப குஷியா இருக்கமாதிரி தெரியுது?

இல்லையே எப்பவும்போலதான் இருக்கேன்.யோவ் மாமா வண்டிய அந்த கடைக்கிட்ட நிறுத்து..

ஏன் செந்திலு?

அட நிறுத்து மாமா.கடைமுன் அம்பாஸிடரை நிறுத்தினான் பாலா...

உள்ளே சென்று பொக்கே வாங்கி வந்தான் செந்தில்.

யோவ் செந்திலு எதுக்குயா பொக்கே அந்த பெரியவருக்கா?

வா சொல்றேன்..

காரை கிளப்பினான் பாலா..

சொல்லு செந்திலு பெரியவருக்கா பொக்கே வாங்குன?

.இல்ல பாலா இது ஜீவாவுக்கு அவளும் அதே கிராமம்தான்..

அதானே என்னடா எலி அம்மணமா ஓடுதேனு பார்த்தேன். என்மேல பாசம்னு சொல்லும்போதே யோசிச்சிருக்கனும் என்று தலையில் அடித்துக்கொண்டான் ஐயோ! இன்னிக்கு என்ன கிறுக்குத்தனம் பண்ணப் போறானோ வந்த வேலை ஒழுங்கா நடந்தா மாதிரிதான்.

எல்லாம் நடக்கும்போ மாமா...

செந்திலு வந்த வேலைய முடிச்சிட்டு அவள தேடலாம்யா...

என்ன மாமா என் லைஃப விட வேலயா முக்கியம்.? அவள பாத்துட்டு அப்புறம் வேலைய பார்க்கலாம்.

ஐயோ என்று ஸ்டீரிங்கில் தலையை முட்டிக் கொண்டான். பாலா.

காரைத்தெருமுனையில் நிறுத்தி இறங்கினர்.

அப்டித்தான் நினைக்கிறேன் மாமா...

காலைலயிருந்து இததான் சொல்ற தெருதெருவா அலைந்ததுதான் மிச்சம்.

பெரியவர் ஒருவர் வர அவரிடம் ஜீவா வீட்டை விசாரிக்க அவர் ஒரு வீட்டை காட்டுகிறார்.

ஒரு அழகான பெண் திண்ணையில் அமர்ந்திருப்பது தெரிந்தது.... செந்தில் கையில் பொக்கேவை எடுத்துக்கொள்ள இருவரும் வீட்டை நெருங்கினர்.

எகஸ் கியூஸ் மீ என்று செந்தி்ல் கூப்பிட நிமிர்ந்தவள் கேட்டாள் "யார் வேணும்" .நெற்றியில் குழப்ப ரேகைகள் தெரிந்தன.

நான்தான் செந்தில் உங்கள பார்க்கதான் வந்தேன்..

எந்த செந்தில் சாரி நீங்க யாருனு எனக்குத் தெரியல...

ஆர்.ஜே செந்திலுங்க லெட்டர்கூட போட்டீங்களே அதுக்குள்ள மறந்துட்டீங்களா?

அவள் டக்கென்று சிரித்துவிட்டு சொன்னாள்'"ஓ அவரா நீங்க? அப்ப நீங்க பார்க்க வந்தது என்ன இல்ல.என் பாட்டிய...

பாட்டியா என்றான் செந்தில் அதிர்ச்சியாக...

.ஆமாங்க சார் அது சரியான ரம்பம் பேசியே கொன்னுரும் .பாவம் நீங்க தேடி வந்து மாட்டிக்கிட்டீங்க..இருங்க பாட்டிய கூப்பிடறேன் சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள்..

பாலா சிரித்துக்கொண்டே பல்பு பல்பு என்று குதித்தான்"ஏன்டா இதுக்கா இவ்வளவு சீன் போட்ட இதுல குறுந்தாடி வெக்கறதென்ன கலர் கலரா ட்ரெஸ் பண்ணிக்கிறதென்ன? இதப்பார்க்கிறதுக்கு காலைல இருந்து அலையவிட்டுடியேடா அதான்டா தாங்கமுடியல...

சாரி மாமா வாயா ஓடிரலாம் செந்தில் கதற

அதெப்படி செந்திலு உன் லைஃப் எனக்கு ரொம்ப முக்கியமாச்சே இன்னிக்கு வேலையே நடக்காட்டியும் பரவால உன் காதலியை பார்க்காம போககூடாது என்று கையை பிடித்து பலியாட்டைப்போல் இழுத்துச்சென்றான் பாலா.

யோவ் மாமா வேணாம்யா பலி வாங்குற நேரமாயா இது !ப்ளீஸ் விட்றுயா...

எதிரே பாட்டி வர பாலா கூறினான் "பாட்டி இதுதான் செந்தில் ஆச தீர பேசுங்க எவ்ளோ நேரமானானும் பரவால என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான் பாலா..

"அது சரியான ரம்பம் பேசியே கொன்னுரும் அவள் சொன்னது நினைவுவர , பாட்டி அவனைப் பார்த்து 'ஏ!ராசா செந்திலு' என்று சிரிக்க...

செந்தில் திருதிருவென முழித்தான்...

.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...