சிவப்பு சிக்னல் விளக்குகள்

உண்மைக் கதைகள்
3.7 out of 5 (3 )

அவசர அவசரமா ஓடுற இந்த வாழ்க்கைல ஒவ்வொரு நாள் முடியும் போதும் அந்த நாள் நம்மல சுத்தி என்னலாம் நடந்ததுன்னு ஒரு நிமிசம் நினைச்சு பாத்துருக்கிங்களா..

திங்கள் கிழமை வந்தா அவசர அவசரமா வேலைக்கு கிளம்புற நம்ம அடுத்த வெள்ளிக்கிழமை எப்ப தான் வரும்ன்னு ஏங்க வைக்கிற இந்த வாழ்க்கைல நம்ம கண்ணு முன்னாடியே நடக்குற சில நல்லா விசயங்களையும் பல கெட்ட விசயங்களையும் ஒரு நாளாச்சும் நினைச்சு பாத்துருக்கிங்களா..

நமக்கு தெரியாமலயே நம்ம முன்னாலயே நடக்குற பல விசயங்கள மறந்து கடந்து போய்க்கிட்டு இருக்கோம். இப்படி தான் நானும் இருந்தேன்.. ஆனா என் வாழ்க்கைல அந்த ஒரு நாள் நடந்த விசயம் தான் நாமலாம் எதுக்குகாக இப்படி அவசர அவசரமா எதை தேடி ஓடிட்டு இருக்குறோம்ன்னு என்னைய நினைக்க வச்சது..

காலேஜ் முடிஞ்சு நாட்களும் நிறைய தள்ளி போக இதுக்கு மேல வீட்டுல இருந்தா வீட்டுல உள்ளவங்களே கேள்வி கேக்க ஆரம்பிச்சுருவாங்கன்னு ஒரு புது வாழ்க்கைய தேடி சென்னைய நோக்கி கிளம்புனேன். வந்த சில நாட்கள் வீட்டுல கொடுத்த காச வச்சு சென்னைய முதல் முறைய பாத்த அனுபவம்ன்னு வாழ்க்கைய பிடிச்ச மாதிரி செலவு பண்ணி வாழ்ந்துட்டு இருந்தேன்.. நாட்கள் செல்ல செல்ல ஒரு கட்டத்துக்கு மேல வீட்டுல காசு கேக்கவும் மனசு வரல.. இதுக்கு அப்றம் வேலைக்கு போனாதான் சோறுங்குற நிலைமைக்குள்ள போக, நான் எடுத்த சில பல முயற்சியால எனக்குன்னு ஒரு நல்ல வேலையும் கிடைச்சது. பேங்க்ல சேல்ஸ் எக்ஸிக்யுட்டிவ். காலைல இருந்து சாய்ந்தரம் வர பைக்ல வெளியே சுத்திட்டே இருக்குறது தான் வேலையே.. ஒவ்வொரு நாளும் புது புது மனிதர்கள்ல சந்திக்கிறதுன்னு முதல் சில மாதங்கள் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு.. சேல்ஸ் எக்சிகியூட்டிவ்னால எப்பவும் கால் வந்துட்டே தான் இருக்கும்.. அதுனால காதுல மாட்டி இருக்குற கெட்செட்டையும் சாய்ந்தரம் வீட்டுக்கு வந்ததும் தான் கழட்டுவேன்.

அப்போதான் ஒரு நாள் வழக்கமா நிக்கிற ஒரு சிக்னல்ல பைக்ல உக்காந்துட்டு இருந்தேன்.. கரக்டா அந்த சிக்னல்ல வந்து நிக்கிறப்போலாம் யார்க்கிட்டயாவது போன்ல பேசிட்டுதான் இருப்பேன்.. ஒரு நாள் அப்படி பேசிட்டு இருக்குறப்போ தான் போன்ல பேசுறவர் என்ன பேசுறாருன்னு கூட கேக்காத அளவுக்கு யார்க்கூடயோ போன்ல சண்டை போட்டுட்டு இருந்தாரு பக்கத்து பைக்ல உக்காந்து இருந்தவரு.. இவர இதுக்கு முன்னாலயும் பாத்துருக்கேன் இதே சிக்னல்ல.. எப்பவும் இப்படி தான் யார்ட்டயாவது கத்தி சண்டை போட்டு பேசிட்டு இருப்பாரு.. ஆனா இன்னைக்கு ரொம்ப கோபத்துல இருந்தாரு போல.. அவரு வாழ்க்கைக்கு நம்ம வாழக்கை எவ்வளவோ பரவாயில்லன்னு சிரிச்சுட்டு சிக்னல் போட்டதும் அப்போ அங்க இருந்து கிளம்பிட்டேன்.. இப்படி வாழ்க்கை தினமும் ஒரு விசயத்தை கத்துக்கொடுத்து நல்லா தான் போயிட்டு இருந்தது.. ஆனா பேங்க்ல குடுக்குற ப்ரசர், போற இடத்துலலாம் நான் நினைச்சது நடக்காம போறதுன்னு சந்தோசமா வாழ்ந்த வாழ்க்கை எதுக்குடா வாழ்றோம்ன்னு நினைக்க ஆரம்பிச்சது.. அது மட்டும் இல்லாம பேங்க்க்கும் வீட்டுக்கும் தூரம் அதிகமா இருக்குறதும் ஒரு பிரச்சனையா இருக்க உடனே பேங்க் பக்கத்துல இருக்குற மேன்சன்க்கு சிப்ட் ஆனேன். அப்போ தான் தினமும் நான் பேங்க் போறப்ப ஒரு ஸ்கூல்க்கு போற குட்டி பொண்ணு எனக்கு கை காட்டுவா.. நான் பர்ஸ்ட் சில டேஸ் அவள கண்டுக்கல.. அப்றம் தினமும் அவ கை காட்ட பர்ஸ்ட்டு சிரிக்க ஆரம்பிச்சேன்.. அப்றம் நானும் கைகாட்ட ஆரம்பிச்சேன்.. ஆனா இத்தன நாள் கைகாட்டுறப்பவும் ஒரு விசயம் என் மனசுக்குள்ள ஓடிட்டு இருக்கும்.. யாரு இந்த பொண்ணு எதுக்கு தினமும் நமக்கு கைகாட்டுதுன்னு.. அது மட்டும் இல்லாம இந்த பொண்ண நான் இதுக்கு முன்னால எங்கையோ பாத்துருக்கேன்.. அதுவும் எனக்கு சரியா ஞாபகம் வரல.

இப்படியே நாட்கள் போக போக நானும் டெய்லியும் அந்த பொண்ணுக்கு கைகாட்டிட்டு இருந்தேன்... திடீர்ன்னு சில நாள் கழித்து அந்த பொண்ண காணும்.. தினமும் நாம பாக்குற ஒரு விசயம் அதுக்கு அப்றம் அந்த இடத்துல இல்லாம போன நமக்கு எப்படி வலிக்கும்ன்னு எனக்கு அப்போ தோணுச்சு.. இத்தனைக்கும் அந்த பொண்ணு யாருன்னு இப்ப வர எனக்கு தெரியாது.. கொஞ்ச நாள்ல இதுவும் பழகிருச்சு..

அடுத்து சில நாட்களுக்கு அப்றம் மீண்டும் அதே சிக்னல்ல நின்னுட்டு இருந்தேன்.. அன்னைக்கும் அதே ஆள் போன்ல யார்க்கிட்டையோ கத்தி, சண்டை போட்டு பேசிட்டு இருந்தாரு.. ஆனா என் அதிர்ஷடமோ என்னமோ எனக்கு அன்னைக்கு கால் எதும் வரல.. இத்தன நாளா கைகாட்டுன அந்த பொண்ணு எங்கையோ பாத்துருக்கேன் ஆனா எங்கன்னு தெரியலன்னு யோசுச்சுக்கிட்டு இருந்தப்போதான் நான் நினைச்ச அந்த பொண்ணு கைல ஒரு உடஞ்ச ஒரு தட்டோட என்னைய பாத்து ஏந்திட்டு வந்துப்போ தெரிஞ்சது.. இதுக்கு முன்னால இவளுக்கு நான் பிச்சையா போட்ட 50 ரூபா.. அன்னைக்கு நான் காசு போடும்போது பாத்த அந்த முகம் தான் அடுத்த ஒவ்வொரு நாளும் எனக்கு காட்டுன அந்த பொண்ணு முகம். இத்தன நாள் டெய்லி இதே சிக்னல்ல தான் இவ பிச்ச எடுத்துட்டு இருந்துருக்கா.. ஆனா எப்பவும் நான் போன் பேசிட்டு இருந்ததால எனக்கு ஒருநாள் கூட ஞாபகம் வரல.. எப்பவும் என்னைய பாத்ததும் வழக்கமா அவ சிரிச்ச மாதிரி தான் இன்னைக்கும் எனக்கு சிரிச்சுட்டே கைகாட்டுனா.. ஆனா அப்போ தினமும் அவ முன்னாடி சிரிச்சுட்டே கைகாட்டுன என் முகத்துல இன்னைக்கு சிரிப்பு வரல.. என்னையே அறியாம என் கண்ணுல கண்ணீர்தான் வந்துச்சு.. இத்தனை நாளா ஸ்கூல்க்கு போனவ ஏன் கொஞ்ச நாளா வரலன்னு கேட்டதுக்கு அவ பேசாமலேயே முழுசா உணர்த்தியது வறுமைல இருக்குற அவ உடுத்தியிருந்த கிழிந்த பள்ளி சீருடை.. இந்த நிமிசம் அவளுக்கு எதாவது பண்ணணும்ன்னு என் மனசு சொல்லிட்டே இருந்தது.. உடனே திரும்பவும் நீ ஸ்கூல்க்கு போறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன் போய் உங்க அம்மா அப்பா யாராவது இருந்தா கூட்டிட்டு வான்னு நான் சொன்ன மறுநிமிசமே வெயில் தாங்க முடியாம தள்ளாடி நின்ற அவ கால்கள் துள்ளி குதிச்சு ஓட ஆரம்பிச்சது..

ஆனா யாருமே நினைக்காத அடுத்த சில நிமிடங்கள் சிக்னல்ல சிவப்பு விளக்கு மாறி மஞ்ச விளக்கு வந்த மறு நிமிடம் பச்சை விளக்கும் எரிந்தது. உடனே என் பக்கத்துல கத்தி பேசிட்டே இருந்தவர் பைக் ஆக்ஸிலேட்டர முறுக்க, வேகமா வந்த பைக் அந்த பொண்ணு மேல மோதிருச்சு.. அது மட்டும் இல்லாம வலது பக்கம் சிவப்பு விளக்கு போட்டது கூட தெரியாம மீறி வந்த லாரியும் அந்த பைக்கோட மோத அடுத்த நிமிசமே இரண்டு பேரும் ரெம்ப தூரம் தூக்கி வீசப்பட்டு என் முன்னாடியே கீழ விழுறாங்க.. அந்த நிமிசம் சிறுமியின் கனவோடு சேர்த்து அந்த சிறுமியும் சுக்கு நூறாய் போய் விழுறா..

இத்தனை நாளா நானும் இதே ரோட்டு வழியா தான் போய்க்கிட்டு இருந்திருக்கேன். இதே சிக்னல்ல தான் நின்னுக்கிட்டு இருந்திருக்கேன். நான் 50 ரூபாய் கொடுத்தது போல யாரோ ஒருவர் செய்த சிறு உதவியினால தான் கொஞ்ச நாள் அந்த பொண்ணு ஸ்கூல்க்கு போயிருக்கா.. அப்போ தான் எனக்கும் கை காட்டிருக்கா.. அதுக்கு அப்றம் காசு இல்லாததால அவளால திரும்ப ஸ்கூலுக்கு போக முடியல அதுனால அவ திரும்பவும் பிச்சை எடுக்க வந்துருக்கான்னு பொண்ணு உடம்புக்கு கொள்ளி வச்ச அவங்க அப்பா என்கிட்ட அழுது நிக்கிறப்போ தான் தெரிஞ்சது கைகாட்டுன அந்த ஒரு நிமிசம் எனக்கு அந்த பொண்ணு எங்க பாத்தோம்ன்னு ஞாபகம் வந்திருந்தா கூட என்னால அந்த பொண்ண படிக்க வைக்க முடியலனாலும் கண்டிப்பா பிச்ச எடுக்க விட்டுருக்க மாட்டேன்னு.. இப்போ நான் படிக்க வைக்க நினைச்சாலும் அந்த பொண்ணு உயிரோட இல்ல..

அவசர அவசரமாக செல்ல வேண்டும் என்று நினைத்த இந்த மனிதர்களுக்காவது சிறு நிமிடம் ஒளிந்து கொண்டு இருந்திருக்கலாம் இந்த சிவப்பு சிக்னல் விளக்குகள்..

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...