அத்தர் - நாணற்காடன்

உண்மைக் கதைகள்
5 out of 5 (4 )

அத்தர் - சிறுகதை

அந்த அத்தர் பாட்டிலை டிவி அருகே வைத்ததாகத் தான் ஞாபகம். பேண்ட் பாக்கெட்டில் தான் வைத்திருந்தேன். சில்லரைக் காசுகளை எடுக்கும்போது கைக்கு அகப்பட்ட அந்த அத்தர் பாட்டில் டிவி அருகே வைத்ததாகத் தான் ஞாபகம். எங்கே போயிருக்கும்? அல்லது பாக்கெட்டிலேயே இருக்கிறதா? ஹேங்கரில் தொங்கிக்கொண்டிருந்த ஜீன்ஸ் பேண்டின் நான்கு பாக்கெட்களிலும் கையை விட்டுத் தேடினேன். பக்கத்திலிருந்த சட்டைப் பாக்கெட்டிலும் தேடினேன். கிடைக்கவில்லை. எங்கே வைத்தேனோ தெரியவில்லையே.

“என்ன கண்ணு தேடற?” என்று அம்மா கேட்க, “ஒன்னுமில்லம்மா” என்று சொல்லியபடி சட்டைக்குப் பித்தான் மாட்டியபடி வெளியே கிளம்பினேன். நாமக்கல் வரை போக வேண்டும். ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி.

பேருந்து நிலையம் போய் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் மறுபடி அதே யோசனை. எங்கே வைத்தேனோ தெரியவில்லையே? ஒருவேளை டிவி அருகே வைக்கவில்லையா? பேண்ட் பாக்கெட்டிலேயே இருக்கிறதா? கை விரல்களுக்கு அகப்படாமல் பாக்கெட்டிலேயே ஒளிந்துகொண்டுவிட்டதா? நான் தான் சரியாகத் தேடவில்லையா?

அந்த அத்தர் பாட்டில் விலையுயர்ந்ததெல்லாம் இல்லை. முப்பது ரூபாயோ, நாற்பது ரூபாயோ தெரியவில்லை. நினைவுக்கு வந்துவிட்டது. சரியாக முப்பது ரூபாய் தான். அத்தர் பாட்டில் முப்பது ரூபாய். இரண்டு டீ இருபது ரூபாய். ஒரு பிஸ்கட் பாக்கெட் ஐந்து ரூபாய். ஆக மொத்தம் ஐம்பத்தைந்து ரூபாய். நூறு ரூபாய் தாளை நீட்டியபோது ஐந்து ரூபாய் சில்லரை கேட்டார் அந்த பாய். ஆனந்த் தான் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டினான். மீதி ஐம்பது ரூபாய் அவர் திருப்பிப் கொடுத்தது ஞாபகத்தில் இருக்கிறது.

இதெல்லாம் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த ஆள்காட்டி விரல் நீள அத்தர் பாட்டிலை எங்கே வைத்தேன் என்பது தான் தெரியவில்லை. எதை வாங்கி வந்தாலும், பாக்கெட்டிலிருந்து எதை எடுத்தாலும், சட்டென டிவி அருகே வைத்துவிடுவது தான் என் பழக்கம். ஆனால் இந்த அத்தர் பாட்டிலை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லையே? அத்தர், ஜவ்வாது என்றெல்லாம் கேள்விப்பட்டதோடு சரி. அதையெல்லாம் வாங்க வேண்டுமென்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. யாரேனும் கமகமக்க அருகில் வரும்போது ‘அட நல்லா இருக்கே வாசனை. இது அத்தரா? ஜவ்வாதா? இல்ல செண்ட்டா? என்னவா இருக்கும்’ என்று அந்தக் கணத்தில் யோசிப்பதோடு சரி. மற்றபடி அதை வாங்கி உடம்பில் பூசிக்கொண்டு கமகமக்க வேண்டுமென்று நினைத்ததேயில்லை.

இப்போது மட்டும் நானா தேடிப்போய் வாங்கினேன்? அதிலும் இந்த முப்பது ரூபாய் அத்தர் பாட்டிலை வாங்க திருநெல்வேலிக்குப் போவார்களா யாராவது? திருநெல்வேலிக்குப் போனால் எல்லோரும் அல்வா தானே வாங்கி வருவார்கள். நான் ஒரு அத்தர் பாட்டிலை வாங்கி வந்து அதையும் எங்கே வைத்தேன் என்று தெரியாமல் யோசித்து யோசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். போனால் போகிறது என்று விட்டுவிட்டு நகரவும் மறுக்கிறது இந்த மனசு. பழைய பேருந்து நிலையம் தாண்டி, ரயில்வே மேம் பாலம் ஏறி இறங்கி, ஆண்டகளூர் கேட் தாண்டி என் ஹெச் 7 ல் நாமக்கல்லை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறது பேருந்து.

நாகர்கோயில் போகும் போதெல்லாம் திருநெல்வேலியைக் கடந்து தான் போயாக வேண்டுமென்றாலும் திருநெல்வேலியைச் சுற்றிப்பார்க்கவென்றே முதன் முறையாக போனது இரண்டு நாள் முன்பு தான். எங்கேயாவது வெளியூர் போய் சுற்றிவிட்டு வரலாமா என்று கேட்டான் ஆனந்த். நெல்லையப்பர் கோயிலுக்குப் போயிருக்கிறாயா என்று கேட்டதும், அது எங்க இருக்கு என்று திருப்பிக் கேட்டான் அவன். வீடு, கம்பெனி என்று உழன்று கொண்டிருக்கும் அவனிடம் இப்படி நான் கேட்டிருக்கக் கூடாது தான்.

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இறங்கும்போது விடியற்காலை மணி நாலரை. தாமிரபரணி ஆற்றில் தலை முழுக வேண்டும் என்பது தான் எனது பெரு விருப்பம். காவிரி தண்ணீர் குடித்து ஜீவிக்கிற எனக்கு தாமிரபரணி தண்ணீரை ஒரு மிடறாவது குடிக்க வேண்டும் என்பது வெகு நாள் ஆசை. மற்றபடி நெல்லையப்பராவது கோயிலாவது? ஆனாலும், அந்த இசைத் தூண்கள். அடடா…

சிவப்பு நிற டவுன் பஸ் அருகே நின்றிருந்த நடத்துநரிடம் “தாமிரபரணி ஆத்துக்கு எப்படி சார் போகணும்?” என்று கேட்டேன்.

“பஸ்ல ஏறுங்க அண்ணாச்சி. ஜங்ஸன்ல இறங்கிக்கோங்க. அங்கிட்டு ஒரு டீய போடுங்க. விடிய ஆரம்பிச்சதும் காலாற அப்படியே நடங்க. அங்கிடு இருந்து கொஞ்ச தூரம் தான் அண்ணாச்சி” நெல்லைத் தமிழில் கொஞ்சினார். பேருந்திலேறி ஜங்சனில் இறங்கி…

கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் மேலே எழுவதை தாமிரபரணி ஆற்றங்கரையில் நின்றவாறு பார்த்துக்கொண்டிருந்தோம். குளித்துக்கொண்டும், துணியை அலசிக்கொண்டும், நீச்சலடித்துக்கொண்டும் படித்துறையில் நெல்லை ஜனங்கள் குழுமியிருந்தார்கள். தலைமுழுகி, தண்ணீர் குடித்து நெடு நாள் விருப்பம் தீர்ந்து மனசு மிதந்துகொண்டிருந்தது எனக்கு. “கிளம்பி நேரா கோயிலுக்குப் போகலாமா அண்ணா” என்று கேட்டான் ஆனந்த்.

ஆற்றின் சலசலப்பு காதுகளை விட்டு நீங்க நீங்க கரைவிட்டு மேடேறி சாலையை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, “டீ சாப்பிடுங்க அண்ணாச்சி” என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு மசூதி. இதே பாதையில் கீழிறங்கிச் செல்லும்போது இருட்டாக இருந்ததால் இங்கொரு மசூதி இருந்ததே தெரியவில்லை போல எங்களுக்கு.

“வாங்க அண்ணாச்சி. டீ சாப்பிடுங்க. வாங்க வாங்க” என்றபடி மசூதி வாசலில் டீ விற்றுக்கொண்டிருந்தவர் மறுபடி கூப்பிட அந்தத் தை மாதக் குளிருக்கு டீ சாப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றியது எங்களுக்கும். தலையில் குல்லா. தாடி வெள்ளைக்கு மருதாணி பூசியிருந்தார்.

இரண்டுக்கு இரண்டடி மேசை. அதன் மேல் ஒரு டீ ட்ரம். பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் தட்டில் அடுக்கி வைக்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகள். இரண்டு மூன்று பிளாஸ்டிக் தட்டுகளில் வரிசை வரிசையாக அத்தர் பாட்டில்கள்.

“வெளியூரா அண்ணாச்சி” என்றபடி காகிதக் கப்பில் டீ பிடித்துக் கொடுத்தார் இருவருக்கும்.

“ஆமாங்க” என்றபடி வாங்கிக் குடிக்க ஆரம்பித்தோம். நாங்கள் கேட்கவேயில்லை. அவரே அடுத்து பிஸ்கட் பாக்கெட்டையும் எடுத்து நீட்டினார். மறுக்க வேண்டுமென்று எங்களுக்கும் தோன்றவில்லை.

“இதெல்லாம் என்னங்க” சுட்டுப்போட்டாலும் அண்ணாச்சி வராது எனக்கு.

“அத்தருங்க அண்ணாச்சி.” என்றபடி ஒரு பாட்டிலை எடுத்து மூடி திறந்து “கைய நீட்டுங்க அண்ணாச்சி” என்றார்.

கையைப் பிடித்து பின்னங்கையில் அந்த அத்தர் பாட்டில் மேலிருந்த வெள்ளை உருண்டைப் பந்தை உருட்டினார். சில்லென்ற ஈரம் பின்னங்கையில் படர்ந்தது.

“சட்டையில் தேச்சிக்கோங்க அண்ணாச்சி. நாள் முழுக்க வாசமா இருக்கும்” என்றார்.

சட்டையில் தேய்த்தபடி “ஆஹா, நல்ல வாசமா இருக்கே. ஒரு பாட்டில் கொடுங்க. எவ்வளவு ரூபாய்ங்க.” என்றேன்.

“முப்பது ரூவா தானுங்க.”

“நீங்க டீ வேவாரியா? அத்தர் வேவாரியா?” என்றேன்.

“ஹ ஹ ஹா. அத்தர் விக்கறது தான் அண்ணாச்சி என் தொழிலு. காலைல நேரத்துல தொழுகைக்கு வாரவுக, ஆத்துல குளிக்க வாரவுகளுக்காக ஒரு ட்ரம் டீயும் போட்டுட்டு வந்துடறது. அதுலயும் ஒரு நூறு ரூவா வரட்டுமே” என்றார் சிரித்தபடி.

“தாடிக்கு மைலாஞ்சி பூசியிருக்கீங்களா?”

“ஆமாங்க அண்ணாச்சி. இதோ மைலாஞ்சி பாக்கெட். இயற்கையா தயாரிச்சது அண்ணாச்சி” என்றபடி காலடியிலிருந்த அட்டைப் பெட்டியிலிருந்து ஒரு பாக்கெட்டை எடுத்து நீட்டினார். வாங்கிப் பார்த்துவிட்டு அவரிடமே கொடுத்துவிட்டு, ஒரே ஒரு அத்தர் பாட்டில் மட்டும் வாங்கிக்கொண்டேன். மருதாணியை மைலாஞ்சி எனச் சொல்லும்போது அதுவும் ஓர் அழகு தான். அதுவுமில்லாமல் மைலாஞ்சி எனச் சொல்லும்போதெல்லாம் ரசூலின் முகம் நினைவில் சிவப்பதைத் தடுக்க முடியாது. இராசிபுரத்தில் மைலாஞ்சி என்று சொன்னாலும் யாருக்கும் தெரியப்போவதில்லை. மைலாஞ்சி என்ற சொல்லைச் சொல்ல வேண்டுமென்றாலும் பேருந்தேறி தெற்கே போக வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பாட்டிலையும் காட்டிக் காட்டி இது ரோஜா அத்தர், இது மல்லிகை அத்தர் என அவர் சொல்லிக்கொண்டிருக்க டீயைக் குடித்து பிஸ்கட்களையும் தின்று முடித்திருந்தோம் நானும், ஆனந்தும்.

புதன்சந்தை வந்துவிட்டதே தெரியவில்லை. மனம் அத்தர், தாமிரபரணி, மசூதி வாசல் பாய், நெல்லையப்பர் கோயில் இசைத்தூண்கள் என இப்படியே சுற்றிக்கொண்டிருக்கிறது. அதிலும் அந்த அத்தர் பாட்டிலும், அதன் வாசனையும் ஞாபகத்தில் இன்னமும் பரவிக்கொண்டிருக்கிறது. வாசனை என்பது என்ன? வெறும் ஞாபகம் மட்டும் தானே?

எங்கேயாவது தவறவிட்டுவிட்டேனோ? வரும்போது வழியில் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுக்கும்போது அத்தர் பாட்டில் தவறி கீழே விழுந்து அந்த திருநெல்வேலி டு சேலம் பேருந்திலேயே போய்விட்டதோ என்னவோ. நாளை மாலை நாமக்கல் திருமண வரவேற்புக்குப் போகும்போது அத்தர் பூசிக்கொண்டு போக வேண்டும் என நேற்று திருநெல்வேலியிலிருந்து திரும்பி வரும்போது கூட நினைத்துக்கொண்டே வந்தேன். “ நாலு தியேட்டர் இறங்குங்க” என்ற நடத்துநரின் குரலோடு அத்தர் பாட்டில் பற்றியும் அதன் வாசனை பற்றிய ஞாபகங்களையும் அந்தப் பேருந்திலேயே பயணிக்க விட்டுவிட்டு இறங்கிக்கொண்டேன்.

இந்த மாசி மாதக் கடைசியில் வெயில் சுர்ரென்று ஏறத் தொடங்கிவிட்டது. ஆதனுக்கு நுங்கு மாதிரி பிஞ்சு தலை. பிறந்து பத்து மாதத்தில் மொட்டையடித்தே ஆக வேண்டுமா என்ன? அதுவும் தாய்மாமன் என்கிற முறையில் என் மடியில் தான் வைத்து மொட்டையடிக்க வேண்டுமாம். அது கூட பரவாயில்லை. அவனது எலிக்குஞ்சு செவிமடல்களில் காதுகுத்து வேறு. அதுவும் என் மடியில் உட்கார வைத்து தான். வலிக்காதா அவனுக்கு?

ஒரு மினி ஆட்டோவில் பத்துப் பதினைந்து பேர் ஏறிக்கொண்டு மரப்பறை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறோம். ஆட்டோவில் ஏறியதிலிருந்தே ஒரு வாசனை என்னை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வாசனையை எங்கோ நுகர்ந்திருக்கிறேனே?

மரப்பறை அங்காயிக்கு சாத்துவதற்காக வாங்கி வைத்த ரோஜாப்பூ மாலை, வாழைப்பழ சீப்பு, தேங்காய், ஊதுபத்தி, கற்பூரம் லொட்டு லொசுக்கெல்லாம் என் காலடியிலிருந்த ஒரு கூடையில் குலுங்கிக் குலுங்கி வந்துகொண்டிருந்தன. மினி ஆட்டோவில் ஆறேழு பெண்கள் காலை நீட்டிப்போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நாலைந்து பொடுசு பெண் பிள்ளைகள் வேறு. எல்லாம் பத்துப் பன்னிரண்டு வயசுக்குள். கண்ணுக்கு மை என்ன? உதட்டுக்கு லிப்ஸ்டிக் என்ன? விரல்களுக்கு நெயில் பாலீஸ் என்ன? இந்தப் பெண் பிள்ளைகளுக்கு எங்கிருந்து தான் இந்த மேக்கப் சாதனங்கள் கிடைக்கிறதோ! அழகழகாய் இருக்கிறாள்கள்.

ஆண்களெல்லாம் நின்று கொண்டு ஆட்டோவின் குலுங்கள்களுக்கேற்ப கீழே விழுந்துவிடாதபடி அவரவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு போகிறோம். இங்கிருந்து மரப்பறைக்கு பதினைந்து கிலோமீட்டர் தான். அதனால் சமாளித்துக்கொண்டு போய்விடலாம்.

நேற்று மாலையே என் டிவிஎஸ் எக்ஸ் எல்லில் உட்காரவைத்து அம்மாவைத் தங்கை வீட்டுக்கு கொண்டு போய் விட்டுவிட்டேன். அவள் வீடு பழைய பேருந்து நிலையத்தில். எங்கள் வீடு புதிய பேருந்து நிலையத்தில். ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட வராது. மினி ஆட்டோவில் போவதாகச் சொல்லியிருந்ததால் விடிந்ததும் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பி ஆட்டோ புறப்படுவதற்கு சற்று முன் தங்கை வீட்டுக்கு போய்ச் சேர்ந்துவிட்டேன். எல்லா பூஜை பொருட்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு இப்போது போய்க் கொண்டிருக்கிறோம்.

ஒன்பது மணிக்கெல்லாம் கோயிலுக்குப் போய்விடலாம். பத்து மணிக்குள் மொட்டையடித்து, குளிக்க வைத்து, பதினொரு மணிக்குள் காது குத்தி, பொங்கல் வைத்து பன்னிரண்டு மணி உச்சிகால பூஜை முடித்து இரண்டு மணிக்குள் வீட்டுக்குத் திரும்பிவிடலாம்.

வண்டி குலுங்கிக் குலுங்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஊதுபத்தியிலிருந்து அந்த வாசனை வருகிறதா? மிகவும் பிடித்த இந்த வாசனையை முன்பு எப்போதோ நுகர்ந்திருக்கிறேனே? வாசனையாக இருப்பதற்கு அங்காயிக்கு சார்த்த வாங்கிய ரோஜாப் பூ மாலையில் தெளித்திருப்பார்களோ? எழவு காரியத்துக்கு மாலை வாங்கும்போது வாசனையாக இருக்க எதையோ தெளித்துக் கொடுப்பார்களே? அந்த வாசனையா இது? இல்லையில்லை. இது வேறு வாசனை. ஞாபகத்தில் பரவிக்கிடக்கிற வாசனை.

ஞாபகம் வந்துவிட்டது. இது அத்தர் வாசனை. இது அத்தர் வாசனையே தான். இல்லையில்லை. அத்தர் வாசனை போல் தெரியவில்லை. குழப்பமாக இருக்கிறது. ஆனாலும், அத்தர் போல ஏதோவொன்றைத் தான் ஆட்டோவிலிருக்கும் யாரோ பூசியிருக்கிறார்கள். ஜவ்வாதாக இருக்குமோ? இந்தப் பெண் பிள்ளைகளே இத்தனை மேக்கப்போடு வந்திருக்கிறார்களே. இவர்களின் அம்மாக்களில் யாராவது ஒருத்தி தான் பூசியிருப்பார்களாய் இருக்கும். அல்லது எல்லோருமே கூட பூசியிருப்பார்கள். ஏன் என்னோடு நின்று கொண்டு வருகிற இந்த ஆண்கள் கூட பூசியிருக்கலாம். நானோ முகத்துக்குக் கூட பவுடர் அடிக்காத ஆள். என்னைப் போலவே எல்லா ஆண்களும் இருப்பார்களா என்ன? அதோ ஆதனின் தாத்தா திட்டுத் திட்டாக முகமெல்லாம் பவுடர் பூசிக்கொண்டு ஜொலிக்கிறாரே. ஆஹா. என்னவொரு அற்புத வாசனை. இங்கு பரவிக்கிடக்கும் இந்த வாசனை அந்த அத்தர் பாட்டிலை மறுபடியும் நினைக்க வைத்துவிட்டது. நான் வாங்கி வந்த அந்த அத்தர் பாட்டில் எங்கே தவறவிட்டேனோ தெரியவில்லை.

மொட்டையடித்து, காதுகுத்தி, பூஜைகளெல்லாம் முடித்துக் கிளம்பும்போது மணி மதியம் ஒன்றை நெருங்கிவிட்டது. மர ஸ்டூல் போட்டு பெண்கள் ஒவ்வொருவராக வண்டியில் ஏறத்தொடங்கினார்கள். ஏறத் தடுமாறிய ஒவ்வொருவரையும் கையைப் பிடித்து பாதுகாப்பாக மேலே ஏற்றி உட்கார வைத்துக்கொண்டிருந்தேன். அம்மா கையிலிருந்த சின்ன பர்ஸையும், மூக்குக் கண்ணாடி வைக்கும் சின்னப் பெட்டியையும் என் கையில் கொடுத்துவிட்டு தட்டுத் தடுமாறி மேலே ஏறி முயல பர்ஸையும், கண்ணாடிப்பெட்டியையும் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கை கொடுத்து தூக்கிவிட்டேன். பொடுசுப் பெண் பிள்ளைகளையும் ஒவ்வொருத்திகளாக ஏற “பசிக்குது பசிக்குது சீக்கிரம் போலாம் மாமா” என என்னைப் பார்த்துக் குரல் கொடுத்தாள்கள் அவள்கள்.

வண்டி கிளம்பி ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தது. வழியெங்கும் இரு புறமும் பனை மரங்கள். தூரத்து பனை மரங்களில் சட்டி கட்டி வைத்திருக்கிறார்கள். கள் இறக்குகிறார்கள் போல.

“கண்ணு, அந்தக் கண்ணாடிப் பொட்டிய கொடு” என்று கால் நீட்டி உட்கார்ந்திருந்த அம்மா கேட்க வண்டியின் குலுங்கல்களுக்கு நடுவே பாக்கெட்டில் கைவிட்டு எடுத்துக்கொடுத்தேன். சட்டென பாக்கெட்டிலிருந்த அம்மாவின் பர்ஸ் ஞாபகம் வந்ததும் கைவிட்டு எடுத்துப் பார்த்தேன். அது ஒரு பழைய பர்ஸ். அழுக்கு படிந்து கிடந்தது. அநேகமாக தங்கை திருமணத்திற்கு தோடெடுத்தபோது நகை போட்டுக்கொடுத்த பர்ஸாக இருக்கலாம். அப்போது அப்பாவும் கூட வந்திருந்தார். இப்போது தான் அப்பா இல்லையே. கயல் பிறந்து அவளுக்கும் கூட ஐந்து வயசு ஆகிவிட்டது. கயலையும், ஆதனையும் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை அப்பாவுக்கு. நானும், அம்மாவும் அதன் பிறகு நகைக் கடைக்கு எங்கே போனோம்? ஏழெட்டு வருசமாச்சு.

அந்தப் பர்ஸின் ஜிப்பைத் திறந்து பார்த்தேன். பத்து, இருபது ரூபாய்த் தாள்கள் சில இருந்தன. அவற்றைக் களைந்து விட்டுப் பார்க்க விரல்களில் தட்டுப்பட்டது நான் தொலைத்துவிட்டதாக நம்பிக்கொண்டிருந்த அந்த அத்தர் பாட்டில்.
நாணற்காடன்

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...