JUNE 10th - JULY 10th
குளிரூட்டப்பட்ட அறையில் இருபதுக்கு பேர் மேல் மரண அமைதியில் அவரவர் மேசையில் வைத்து புத்தகங்களை வாசித்து கொண்டிருந்தனர். அந்த மரண அமைதியை குலைக்கும் விதமாக குறட்டை சத்தம் ஒன்று பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அங்கிருந்தவர்களின் ஒட்டு மொத்த பார்வையும் குறட்டை விடுபவரையை நோட்டமிட்டனர். அதில் ஒருவர் மட்டும் பார்ப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் எழுந்து போய் குறட்டை விடுபவரை எழுப்பினார்.குறட்டை விட்ட திரு மெல்ல கண் விழித்தான். அவன் எதிரே இருந்த நபர், "ப்ரதர் நீங்க குறட்டை விட்றது எல்லாருக்கும் தொந்தரவா இருக்கு" என்று அவர் காதில் விழும் அளவுக்கு மட்டும் மெதுவாக பேசினார். திருவுக்கு ஒன்றும் புரியாமல் திருதிருவென முழித்தான். அவனுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை போல, பிறகு நிலைமையை புரிந்துக் கொண்டு சுற்றி முற்றி பார்த்து "சாரி சாரி" என்று எல்லோரிடமும் திரும்பி மன்னிப்பு கேட்டான். அந்த நபர் அவருடைய மேசைக்கு சென்று விட்டார்.திருவுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. மீண்டும் ஒரு முறை சுற்றி முற்றி யாராவது தன்னை பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டான். நோட்டமிட்டதில் அவனுக்கு வலது புறமாக மூலையில அமர்ந்திருந்த சுருட்டை முடி பெண் ஒருவர் தலைகுனிந்தபடி சிரித்தாள்.திரு அந்த பெண்ணை பார்த்தபடியே இருந்தான்.திரு பார்ப்பதை அந்த பெண்ணும் பார்த்து விட்டாள். உடனே தன் சிரிப்பை அடக்க முயன்றால் ஆனால் அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. திருவிற்கு அது ரொம்ப அவமானமாகி விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் உடனே எழுந்து அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.
திருவிற்கு சிறு வயதில் இருந்தே இந்த குறட்டை பிரச்சினை இருக்கின்றது. எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் தீர்ந்தபாடில்லை. வெளியே வந்த திரு நூலகத்தின் தரை தளத்திற்கு வந்தான். தரை தளத்தில் ஈ மொய்ப்பது போல கூட்டமாக இருக்கும், ஆவின் பாலகத்தில் சூடான பாதாம் பால் வாங்கி பக்கத்தில் இருந்த படிக்கட்டில் அமர்ந்து உறிய ஆரம்பித்தான்.திரு கால்வாசி கூட உறிஞ்சி முடிக்காத பட்சத்தில் தானியங்கி இயந்திரத்தில் இருந்து நூலகத்தின் தரை தளத்திற்கு வந்தாள் அந்த சுருட்டை முடி பெண். அவளும் பாதாம் பால் வாங்கி, திரு அமர்ந்திருந்த அதே படிக்கட்டில் அவன் பக்கத்தில் வந்தமர்ந்தாள்.திரு அவள் பக்கம் திரும்பாமல் பாதாம் பாலை உறிஞ்சுவதில் மிக தீவிரமாக இருந்தான்.
"சாரி என்னால சிரிப்ப அடக்க முடியல அதான் சிரிச்சிட்டன்" என்று ஒரு பெண் குரல் கேட்க, திரு திரும்பி பார்த்தான். அந்த சுருட்டை முடி பெண் தான் திரு முகத்தை பார்த்தபடி இருந்தாள்."பரவால" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்.கல்கி, திரு நிறைய பேசுவான் என்று எதிர்பாத்திருப்பார் போலும் ஆனால் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது."கல்கி" என்று தன்னை திருவிடம் அறிமுகப்படுத்தி கொண்டாள். திருவோ கையை கொடுக்காமல் தலையாட்டி "திருக்குமரன்" என்று தன் பெயரை மட்டும் பதிவு செய்தான்.
"தினமும் இங்க வருவீங்களா ஆனா இதுக்கு முன்னாடி நா உங்கள பாத்ததே இல்லயே" என்று கல்கி சொல்ல,"நா பால் குடிச்சிட்டு பதில் சொல்லளாமா" என்று திரு கேட்க, "சாரி சாரி" என்றாள் கல்கி.
திரு பாலை முழுவதும் குடித்து விட்டு எழுந்து போய் குப்பைத் தொட்டியில் பால் தம்ளரை போட்டான். கல்கியும் பின்னாடி போய் அவள் தம்ளரை குப்பைத் தொட்டியில் போட்டாள்.
"என்ன கேட்டீங்க தினமும் வருவனானா, ப்ரண்ட் ஒருத்தர பாக்க வந்தன் லேட்டாவும்னு சொன்னாரு அதான் உள்ள வந்துட்டன். உண்மையா சொல்லணும்னா நா சென்னை வந்தே ரெண்டு நாள் தான் ஆவுது" என்று திரு சொல்ல, கல்கி "ஓ" என்றாள் வேறு என்ன பேசுவதென்று தெரியாமல், "நீங்க டெய்லியும் வருவீங்களோ" என்று திரு கேட்க, "ஆமா அம்பேத்கருக்கு அப்றம் அதிக நேரம் லைப்ரரியில இருக்கறது நாந்தான்" என்று தன்னை மெச்சிக்கொண்டாள் கல்கி. ஒருவேளை இந்த கவுன்டருக்கு அவன் சிரிப்பான் என்று எதிர்பார்த்திருக்க கூடும். ஆனால் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.மாறாக "எனக்கும் லைப்ரரிக்கும் ரொம்ப தூரம்" என்றான் திரு. "என்ன 20 கிலோமீட்டர் இருக்குமா" என்று மீண்டும் தன் நகைச்சுவை உணர்வை நிரூபிக்க முயற்சித்தாள். இதை எதிர்பார்க்காத திரு "சத்தியமா முடியலைங்க ரெண்டு அடி கூட அடிச்சிடுங்க" என்றான்.
"நா அப்டிதாங்க கவுன்டர் குடுத்துட்டே இருப்பன் கண்டுக்காதீங்க" என்றாள்.
"நானும் கண்டுக்க கூடாதுனு தான் கம்முனு இருக்கறன் ஆனா விட மாட்றீங்களே" என்று தன் அவஸ்தையை அவளிடம் சொன்னான் திரு.
"பாத்தீங்களா பங்கமா கலாய்ச்சிட்டீங்க " என்று கல்கி சொல்ல, "சேச்சே அதெல்லாம் இல்லைங்க நா பொண்ணுங்க கிட்ட பேசவே தயங்குவன் கலாய்க்கறதெல்லாம் சுத்தமா வராது" என்றான் தன்னடக்கமாக, "இதுக்கு பேர் தான் எங்க ஊர்ல ஊமக் குசும்புனு சொல்லுவாங்க" என்று கல்கி கையால் நடித்து பேசினாள்.
"அப்படி என்ன ஊர்ங்க அது" என்று திரு திரும்ப கேட்க, "சொன்னா மயங்கி விழுந்திடுவீங்க" என்று கேஜிஎப் ராக்கி ரேஞ்சுக்கு தன் ஊருக்கு பில்டப் கொடுத்தாள் கல்கி.
"வேலூரா? ஏன்னா அங்க தான் வெயில் தாங்காம மயக்கம் வரும்னு சொல்வாங்க" என்று திரு கிண்டலடிக்க, "ரொம்ப டேமேஜ் பண்றீங்க நானே சொல்லிட்றன் பாண்டிச்சேரி" என்றாள் கல்கி.
"எது ஊர் புல்லா சரக்கு வித்துட்டு இருப்பாங்களே அந்த ஊரா ? அந்த ஊருக்கு இவ்ளோ பில்டப்பா? என்று திரு கலாய்ச்சி தள்ளினான்.
"பூத கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான் ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுத்தம் தானு வாலி சொல்லிருக்காரு" என்று கல்கி மேற்கோள் காட்டி பேசினாள்.
"பெரிய தமிழ் புலவியா இருப்பீங்க போலயே" என்று திரு மீண்டும் நக்கலடிக்க,
"ஆமா எம்.ஏ. தமிழ் லிட்ரேச்சர்" என்று காலரை தூக்கி விட்டு கெத்தாக சொல்லி கொண்டாள். "செம்மங்க தமிழ் படிக்கறதுக்கெல்லாம் தனி திறம வேணுல்ல" என்றான் திரு.
"அப்டியா" என்று கல்கி ஆச்சர்யமானாள்.
"அட ஆமாங்க நாலாம் ப்ளஸ் டூவுல தமிழுக்கு தான் டியூஷன் போனனே அப்படி இருந்தும் பெயில் ஆயிட்டேன்" என்று தன் ப்ளாஷ்பேக்கை போட்டுடைத்தான் திரு.
"நெஜமாவா சொல்றீங்க பொய் சொல்லாதீங்க" என்று நம்பாமல் கேட்டாள் கல்கி. "நா தமிழ்ல 200-க்கு 200 எடுத்தனு சொன்னா தான் நீங்க நம்பக் கூடாது. இத நீங்க தாராளமா நம்பலாம்" என்று விளக்கம் கொடுத்தான் திரு.
"சரி சரி நம்பறன்" என்றாள் கல்கி. "வேற" என்று திரு உரையாடலை முடிக்க "வாங்களேன் வாக்கிங் போய்ட்டே பேசலாம்" என்றாள் கல்கி."அப்ப என்ன விட்றதா இல்ல" என்று திரு கிண்டலடிக்க, "ரொம்ப ப்ளேட் போட்றனோ ? என்று கேட்க, திரு ஆமா என்பது போல தலையசைத்தான்.
"சின்ன வயசுல இருந்தே நா அப்படி தாங்க, பேச ஆள் கெடைச்சா பேசிட்டே இருப்பேன். ஒரு வாட்டி கொரியர் பாய் அண்ணா டெலிவரி பண்ண எங்க வீட்டுக்கு வந்தாரு காலையில வந்தவரு சாயந்தரம் தான் போனாரு பேசியே சாவடிச்சிட்டன்" என்று சொல்லி சிரித்தாள் கல்கி.
"அப்ப என்னையும் மர்கயா பண்ணாம விட மாட்டீங்க அப்டி தான" என்ற திரு முகத்தில் ஒரு மரண பயம் தெரிந்தது. கல்கி சிரித்தபடியே
"பயப்படாதீங்க கொஞ்சம் ரத்த வர மாதிரி இருந்துச்சுனா கூட சொல்லிடுங்க நா நிறுத்திக்கறன்" என்றாள்.
"பரவால பரவால வாங்க" என்றான் திரு. இருவரும் நூலகத்தின் அருகே அமைந்திருந்த கார்டன் ஏரியாவில் நடக்க தொடங்கினர்.
"சொல்லுங்க என்ன பண்றீங்க" என்று கல்கியே மீண்டும் உரையாடலை தொடங்கி வைத்தாள்.
"சொந்த ஊர் திருச்சி பக்கத்துல ஒரு கிராமம். டிப்ளோமா மெக்கனிக்கல் படிச்சிட்டு கிண்டில ஒரு கம்பெனில வேலைக்கு சேர வந்து இருக்கறன். தங்கி இருக்கறது சைதாப்பேட்ட ப்ரண்ட் ரூம்ல இதான் இப்போதைக்கு என்னோட பயோடேட்டா" என்று தன் பயோடேட்டாவை அவளிடம் சமர்ப்பித்தான் திரு.
"பயோடேட்டால சாதி மதம் மொழி எல்லாம் மிஸ்ஸாவுதே" என்று கல்கி கேட்க, "சென்னைல கூட சாதி மதம்லாம் பாக்கறாங்களா ?" என்று அதிர்ச்சியானான் திரு.
"சென்னைல வாழ்ற முக்கால்வாசி பேரு கிராமத்துல இருந்து பொழைக்க வந்தவங்க தானே. என்ன தான் படிச்சி கோட்டு சூட்டு போட்டு வெளிய மறைச்சிக்கிட்டாலும் உள்ளுக்குள் சாதிவெறி தான் ரத்தமா ஓடுது" என்று தன்னுடைய தார்மீக கோபத்தை வெளிப்படுத்தினாள் கல்கி.
"நிறைய விஷியம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க போலயே பேசாம நீங்க அரசியலுக்கு போயிடலாம்" என்று திரு, கல்கியை பாராட்டினான்.
"நா இப்பவே அரசியல்ல தான் இருக்கன் ஏன் நம்ம எல்லார் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கு" என்றாள் தீர்க்கமாக.
"எனக்கு உங்க அளவுக்கு அரசியல் அறிவெல்லாம் இல்லைங்க என் மனசுக்கு யார் நல்லவங்களா தெரியறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவன்" என்றான் திரு.
"அப்படி பாத்தா நம்மூர்ல யாருக்குமே நீங்க ஓட்டு போட முடியாது. நாலாம் நோட்டாவுக்கு தான் ஓட்டு போட்டன்" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் கல்கி.
"நோட்டாவுக்கு போட்டா மட்டும் இங்க எல்லா மாறிடுமா என்ன" என்று திரு கேள்வி கேட்க, "உடனே மாறாது தான் ஆனா இப்ப விதை போட்டா தான் பத்து வருஷத்துக்கு அப்பறமாச்சி அது கொஞ்சமா வளரும் இல்லனா பட்டு போயிடும்" என்று திருவுக்குள் அவள் அரசியல் சிந்தனையை விதைத்தாள் கல்கி. திருவுக்கு எல்லாமே புதுசாக இருந்தது. எந்த அரசியல் கருத்தியலும் இல்லாத ஒரு குக் கிராமத்தில் பிறந்து, கிடைத்த சோறை தின்று, எப்படியோ டிப்ளோமா வரை படித்து முடித்து விட்டு சென்னை வந்து விட்டான்.அவனுக்கு சென்னை இன்னும் புரியாத புதிராகத் தான் இருக்கிறது. சென்னை வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது.போக போகத் தான் சென்னை அவனை பயமுறுத்தும், பகடியாடும் பிறகு பக்குவப்படுத்தும்.
"நீங்க மொக்க போட போறீங்கனு தான் முதல்ல நெனச்சன் ஆனா போக போக சிக்ஸரா அடிச்சி தள்ளிட்டீங்க போங்க" என்று புகழ்ந்து தள்ளினான் திரு.
"இதெல்லாம் சாதாரண விஷியம் தான்.நம்ம எல்லாரும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும். இல்லனா நம்மள வித்துட்டு போய்டுவாங்க" என்று அறிவுரை சொன்னாள் கல்கி.
"நீங்க ஏதேதோ சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல" என்று சலித்துக் கொண்டான் திரு.
"இப்ப தானே சென்னை வந்திருக்கீங்க போக போக எல்லாம் புரியும். யாருக்கு தெரியும் எதிர்காலத்துல நீங்க சென்னையை விலைக்கு வாங்குனாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல" என்று கல்கி கிண்டலடிக்க,
"அட ஏங்க நீங்க வேற இப்போதைக்கு இருக்குற வேலையை வாங்குணா போதும் மத்தத அப்றம் பாத்துக்கலாம்" என்றான் திரு விரக்தியாக,
"அப்ப ப்யூச்சர் ப்ளானோட தான் சென்னை வந்துருக்கீங்க" என்று கல்கி கேட்க, "ப்யூச்சர தேடி தான் சென்னை வந்துருக்கறன் இனிமே தான் ப்ளான் போடணும்" என்றான் திரு.
"நடத்துங்க நடத்துங்க எவ்ளோ பேர வாழ வச்சி அழகு பாத்துருக்கு இந்த ஊரு உங்கள மட்டும் விட்ருமா என்ன" என்று நம்பிக்கையூட்டினாள் கல்கி.
"அந்த நம்பிக்கையில தாங்க நானும் வந்து இருக்கறன் பாக்கலாம்" என்று தன் நிலையை பற்றி சொன்னான் திரு.
"காதல் எதாவது" என்று கல்கி கேட்க, "என்ன பாத்துக்கவே என்னால முடியல நா எங்கங்க காதலிக்கறது. அத பத்திலாம் பொறுமையா தாங்க யோசிக்கணும்" என்று தன் அபிப்ராயத்தை அவளிடம் சொன்னான்.
"தெளிவா தான் இருக்கீங்க பொழைச்சிப்பீங்க" என்று கல்கி அவனை அங்கீகரித்தாள்.
"மழ வர மாதிரி இருக்கு கெளம்பலாமா" என்று திரு சொல்ல, "யாரையோ பாக்கணும்னு சொன்னீங்க" என்று கல்கி அவனுக்கு நினைவூட்டினாள்.
"அது ஒண்ணும் பிரச்சனையில்லை நா ரூமுக்கு போய்ட்டே பாத்துக்கறன்" என்றான்.
"எப்டி வந்தீங்க" கல்கி கேட்க, "பஸ்ல தான்" என்றான் திரு.
"வாங்க நானே உங்கள ட்ராப் பண்ணிட்றன்" என்றாள் கல்கி.
"வேணாங்க நானே போய்க்கறன்" என்று தயக்கம் காட்டினான் திரு.
"பயப்படாதீங்க ஒண்ணும் பண்ணிட மாட்டன். உங்க கற்புக்கு நா கியாரண்டி" என்று கிண்டலடித்தாள் கல்கி.
"உங்கள மாதிரி ஒரு ஆள பாத்ததே இல்லைங்க" என்று திரு சொல்ல, "நல்லா பாத்துக்கங்க" என்று தன் கைகை விரித்து காட்டினாள். திரு மெல்லியதாய் புன்னகைத்தான். இருவரும் உரசிக் கொள்ளாமல் இடைவெளி விட்டு இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தனர். மேகம் சூழ்ந்து மழை பொழிய ஆரம்பித்தது. கல்கியோ மழையை பொருட்படுத்தாமல் வேகமாய் சென்று ஒரு வீட்டு முன்பு வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்து இறங்கியவள் அதே வேகத்தில் வீட்டை திறந்து உள்ளே நுழைந்தாள்.
திருவிற்கு ஒன்றும் புரியாமல் திருதிருவென முழித்தான். உள்ளே போனவள் திரு பக்கமாய் திரும்பி பார்த்து "உள்ள வாங்க" என்றாள். "யார் வீடுங்க இது" என்று திரு கேட்க, "சாவி போட்டு கதவ திறந்து உள்ள போறன். அப்ப யார் வீடா இருக்கும்" என்று கல்கி கண் புருவத்தை உயர்த்த, "உங்க வீடா" என்று திரு அப்பாவியாய் கேட்க, "எங்க வீடு தான் பயப்படாம உள்ள வாங்க நா வீட்ல சிங்கம், புலி எல்லாம் வளக்கறது இல்ல" என்று சொல்லி அவளே சிரித்துக் கொண்டாள். திரு, கல்கி வீட்டிற்குள்ளே காலடி எடுத்து வைத்தான். ஹாலில் ஒரு சிவப்பு நிற சோஃபா மட்டும் இருந்தது.அந்த சோபாவில் உட்காரலாமா, வேண்டாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து "உக்காருங்க" என்றாள் கல்கி. திருவும் அமைதிப்படை சத்யராஜ் போல சோஃபா நுனியில் அமர்ந்தான். "டீயா, காபியா" என்று கல்கி கேட்க, "எதுவா இருந்தாலும் ஓகே" என்றான் திரு. திரு சோஃபாவில் அமர்ந்தபடியே 360 டிகிரிக்கு வீட்டை சுற்றி நோட்டமிட்டான். வீட்டு சுவற்றில் குடும்ப புகைப்படத்தில் கல்கி புசுபுசுவென அவள் அப்பா, அம்மாவுடன் சிரித்த முகமாய் நடுவில் நின்றிருந்தாள். "நீங்களா இது அடையாளமே தெரியல" என்று திரு கேட்க, "ஆமா ஆமா செகண்ட் ஸ்டேண்டட் படிக்கறப்ப எடுத்தது" என்று கல்கி உள்ளிருந்து குரல் கொடுத்தாள். "அப்பா அம்மாலாம் எங்க" என்று திரு கேட்க, "வெயிட் பண்ணுங்க காபியோட வந்து ப்ளாஷ்பேக் சொல்றன்" என்று கல்கி குரல் கொடுத்தாள். சொன்னது போலவே கல்கி காபியோடு ஹாலுக்கு வந்தாள். திரு அவனுக்கான காபி கோப்பையை வாங்கி கொண்டான். கல்கியும் சோஃபாவில் காபி கோப்பையோடு அவனருகில் அமர்ந்தாள்.
திரு காபியை மெல்ல பருக ஆரம்பித்தான்.கல்கியும் காபியை பருகியபடி குடும்ப புகைப்படத்தை பார்த்து பேச ஆரம்பித்தாள். "அப்பாவும், அம்மா காதலிச்சி தான் கல்யாணம் பண்ணாங்க. அப்பா, அம்மாவ விட தாழ்ந்த சாதியாம் அதனால நெறய எதிர்ப்பு அதை எல்லாம் மீறி தான் அப்பா, அம்மாவ கல்யாணம் பண்ணாரு. ஊர்ல இருந்தா பாதுகாப்பு இல்லனு அப்பா, அம்மா சென்னைக்கு வந்துட்டாங்க. ரெண்டு பேரும் சந்தோஷமா தான் வாழ்ந்தாங்க. அவங்கள இன்னும் அதிகமா சந்தோஷப்படுத்தறதுக்கு நா பொறந்தன்" என்று சொல்ல, திருவுக்கு பொறை ஏறி இருமல் வந்து விட்டது. கல்கி , திருவை பார்த்து முறைக்க "அதுவா தாங்க வந்துச்சி நா வேணும்னு பண்ணலைங்க" என்று பயந்து கொள்ள, கல்கி மெல்லியதாய் புன்னகைத்து கதையை தொடர்ந்தாள்.
"நாங்க ரொம்ப சந்தோஷமா இருந்தோம்.ஒருநாள் பேமிலி போட்டோ எடுக்கலாம்னு போட்டோ ஸ்டூடியோ போனோம். அப்ப எடுத்த போட்டோ தான் இது" என்று கல்கி சொல்ல, திரு மீண்டும் ஒரு முறை போட்டோவை பார்த்தான். "அந்த போட்டோ எடுத்துட்டு வெளிய வந்தப்ப தான் அம்மா வீட்டு ஆளுங்க அப்பாவ கத்தியால குத்தி கொல பண்ணிட்டானுங்க" என்று சொல்ல, திரு அதிர்ச்சியில் கையில் இருந்த காபி கோப்பையை கீழே போட்டு விடுகிறான். கல்கி கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது. "சாரிங்க" என்றான். கல்கி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். திரு உடனே தரையில் கொட்டிய காபியை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.சிறிது நேர மௌனத்திற்கு பின் கல்கியே பேச ஆரம்பித்தாள். "அதுக்கப்பறம் அம்மாவும், நானும் உடைஞ்சு போய்ட்டோம்.என்ன பண்றதுனே தெரியல. ஒரே நாள்ல எங்க சந்தோஷம் மொத்தமா இருண்டு போயிடுச்சி.எங்க அம்மா அந்த இருட்டுல இருந்து வெளிய வரணும்னு முடிவு பண்ணாங்க.அவங்க வீட்டு ஆளுங்க மேல தனியாளா வழக்கு போட்டாங்க. நிறைய மிரட்டல் வரும் அம்மா எதுக்கும் பயப்படல.சிங்கிள் பேரன்ட்டா என்ன
கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க.நானும் நல்லா படிச்சி டிகிரி வாங்குன. எங்க வாழ்க்கையே பிரகாசமாயிடுச்சினு நெனச்சிட்டு இருந்தப்ப தான் எங்கம்மா போன வருஷம் இறந்து போய்ட்டாங்க" என்று வெடித்து அழுதாள். திருவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. "அழாதீங்க எல்லாம் சரியாயிடும்" அவள் பக்கத்தில் அமர்ந்து தனக்கு தெரிந்த ஆறுதல் வார்த்தைகளை கூறி சமாதானப்படுத்தினான். கல்கி அழுதப்படியே இருந்தாள்.
"ப்ளீஸ்ங்க அழாதீங்க" என்று திரு மீண்டும் சொல்ல, கல்கி மெல்ல அழுகையை விழுங்கினாள்.
"சாரி என் கதையை சொல்லி உங்கள கஷ்டப்படுத்திட்டன்" என்று கல்கி மன்னிப்பு கேட்க, "அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க" என்று திரு அவளை தேற்றினான். மழை பெய்து ஓய்ந்திருந்தது.
திரு அலைபேசி சிணுங்கியது. திரு தன் போனை எடுத்து கால் அட்டன்ட் செய்தான். மறுமுனையில் பேசியவன் திருவின் அறைத் தோழன். திரு பேசி முடித்ததும் "ப்ரண்ட் சீக்கரமா வர சொல்றான் நா கெளம்பட்டுமா? என்று கல்கியிடம் சொல்ல, "வாங்க நானே உங்கள ட்ராப் பண்ணிட்றன்" என்கல்கி சொல்ல, "இல்ல பரவால நானே போய்க்கறன் நீங்க ரெஸ்ட் எடுங்க" என்றான் திரு. "எனக்கு ஒண்ணும் இல்ல நா வர்றன்" என்று கல்கி மீண்டும் சொல்ல, "எனக்கு ரூட் தெரியும் பக்கத்துல தான் போய்க்கறன்" என்றான் திரு விடாப்பிடியாக. "கரெக்டா போய்டுவீங்கள்ல" என்று கல்கி கேட்க, "போய்டுவன் போய்டுவன்" என்று சொல்லி, வீட்டை விட்டு வெளியே போகிறான். கல்கி கதவருகே நின்றபடி திருவை வழி அனுப்புகிறாள். திரு சென்றதும் கல்கி கதவை மூடி கதவில் சாய்ந்து கொண்டு அழுகிறாள்.
சிறிது நேரம் கழித்து காலிங்பெல் சத்தம் கேட்க, கல்கி கண்களை துடைத்து கொண்டு கதவை திறக்கிறாள். கதவிற்கு வெளியே திரு நின்றிருக்கிறான்.கல்கி உடனே "எதாவது மறந்து வச்சிட்டீங்களா" என்று வீட்டுக்குள்ளே பார்க்க, "இல்ல நீங்க அழுதுட்டு இருந்தீங்க, நானும் போய்ட்டன். தனியா வேற இருக்கீங்களா அதான் மனசு கேக்கல கொஞ்ச நேரம் உங்க கூட இருந்துட்டு போலாம்னு வந்தன்" என்று திரு சீரியஸாக சொல்ல, கல்கி கண்கள் கலங்கி திருவை கட்டியணைத்து கொண்டாள்.
கல்கி கட்டியணைத்தபடியே திரு காதோரமாய் "தேங்ஸ் திரு தேங்ஸ் லாட்" என்றாள். "இப்ப ஓகேவா நீங்க" என்று திரு கேட்க, "பீல் பெட்டர்" என்றாள். "எனக்கும் ஒரு மாதிரி பீல் ஆகுதுங்க" என்று திரு சொல்ல, கல்கி சத்தமாய் சிரித்தபடியே கட்டியணைப்பில் இருந்து அவனை விடுவிக்கிறாள். "அப்பா சிரிச்சிட்டீங்க இது போதும். இதுக்காக தான் திரும்ப வந்தன்" என்று சொல்ல, "நா எதிர்பாக்கல நீங்க திரும்ப வருவீங்கனு" என்று சொல்ல, "நா முத தடவ பாக்கறப்பவே நீங்க சிரிச்ச முகமா இருந்தீங்க ஆனா இப்ப போறப்ப அது மிஸ்ஸாச்சி அதான் வந்துட்டேன்" என்று சொல்ல, "இந்த மனசு தான் சார் கடவுள்" என்று சொல்லி கல்கி சிரிக்க, "இப்ப தான் அந்த பழைய கல்கி வெளிய வர்றாங்க" என்று திரு சொல்ல, "இப்ப தான் மனசு கொஞ்சம் லேசா இருக்கு" என்று கல்கி சொல்ல, "அப்பவே உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்னு நெனச்சேன் ஆனா நீங்க அழுதுட்டு இருந்தீங்களா அதான் சொல்லள" என்று திரு எதையோ மறைத்து பேச, "என்ன சொல்லுங்க? என்றாள் கல்கி."இனிமே நீங்க காபி போடாதீங்க ப்ளீஸ்" என்று திரு சொல்ல, "உங்கள" என்று கல்கி, திருவை அடிப்பதற்கு துரத்த, திரு வேகமாய் ஓடுகிறான்.அந்த வீடு முழுக்க சிரிப்பு சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது.
தா.கலை ராகவ்
#339
51,873
1,040
: 50,833
21
5 (21 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Paventhan
kajamohideen.jyoti786
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50