ஏன் வனிதா

உண்மைக் கதைகள்
4.8 out of 5 (54 )

ஏன் வனிதா

by சுபஸ்ரீ மோஹன்

ஏய் வனிதா என்னடி செய்துட்டிருக்க கூக்குரலிட்டாள் கஸ்தூரி. அம்மாவின் குரலை கேட்ட வனிதா வாயில் அள்ளி போட்டுக்கொண்ட சோறை முழுங்கி கொண்டே வந்துட்டேன் ம்மா என்று அவசர அவசரமாக தங்கைகள் லதா, சுகன்யாவை பள்ளிக்கு அழைத்து செல்ல விரட்டினாள். அம்மா சாப்பிட்ட இடத்தை சுத்தபடுத்திட்டு கிளம்பரேன் என பதிலுரைத்துகொண்டே துரித கதியில் வேலையில் ஈடுபட்டாள்.

கனகமும் அவள் கணவரும் சேர்ந்து வீட்டு பக்கத்தில் ஒரு பெட்டி கடை நடத்தி வந்தார்கள். அந்த பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் அவசர தேவைக்கு அங்கு தான் வாங்குவார்கள். வியாபாரமும் நல்லாவே நடக்கும். காலை காப்பி, டிபன் செய்து தான் சாப்பிட்டுவிட்டு கடைக்கு போய்விடுவாள் கனகம். கணவர் பக்கத்திலிருக்கும் பெரிய ஊரில் , கடைக்கு தேவையான சாமான்களை மலிவாக சந்தையில் வாங்கி வர சென்றிருப்பார். வனிதா தானும் டிபன் , இல்லை சோறு சாப்பிட்டு பசங்களுக்கும் கொடுத்து , மதியம் சாப்பாடும் கட்டி கொடுத்து , எல்லாவற்றையும் ஒதுக்கி, தங்கச்சி சுகன்யா, லதாவிற்கு குளிக்க தயார் செய்து, தலை வாரி பள்ளிக்கு அனுப்புவாள். வீட்டு பொறுப்பு முழுதும் வனிதாவின் தலையில் தான் விடியும். சோறு போடுவது, வீட்டை சுத்தப்படுத்துவது, தெரு குழாயில் தண்ணி பிடிப்பதுன்னு அந்த சிறு பெண்ணிற்கு ஏகப்பட்ட பொறுப்பிருந்தாலும் சிரித்த முகமாக வளைய வருவாள். உதவிக்குன்னு யாரையும் வைத்து கொள்ளாததால் இவர்களே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஆனால் ஏனோ வனிதாவை பார்க்கும்போது அவள்மேல் ஒரு பரிதாபம் தோன்றும். எம்புட்டு வேலை செய்யுது அந்த புள்ள எனக்கும் வந்து வாச்சிருக்குங்களே, ஒத்தை வேலை செய்ய ஐயோ ஆத்தாடின்னு பேப்பசங்கன்னு தன் பசங்களை திட்டி, வனிதாவை பார்த்து பார்த்து பெருமூச்சு விடும் தாய்குலங்கள் இருக்க, கனகத்திற்கு மட்டும் ஏனோ வனிதாவின் மேல் ஒரு வெறுப்பு. அதனாலோ என்னமோஅவளுள் ஒரு சோகம் இழையோடுவதாகவும் அது வேற என்னவாக இருக்கும்னு பேசிக்கொள்வார்கள் ஊருக்குள். ஒரு வேளை கனகம் ரொம்ப கொடுமை படுத்தராளோ. என்ன தான் வேலைன்னு இருந்தாலும் அந்த அப்பன் இப்படியா எதிலேயும் பட்டும் படாலும் இருப்பான்னு ஊருகாரங்க பொழுது போகாதப்ப அந்த ஆளையும் இந்த மேட்டர்ல இழுத்து கண்ணு மூக்குன்னு வச்சு அலசுவாங்க. ஆனால் வனிதாவை பத்தி பரிதாபம் மட்டு எல்லோருக்கும். அந்த புள்ளையை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசமாட்டாங்க.

வனிதா எல்லோருக்குமே சொன்ன வேலையை, உதவியை செய்து நல்ல பெண்ணுன்னு தான் பேரு வாங்கிவச்சிருக்கு. அவளோட அழகிற்கும் குணத்திற்கும் நல்ல கணவன் வாய்ப்பான்னு பக்கத்து வீட்டினர், உறவினர் எல்லோரும் மனசார சொல்லுவாங்க. குறிப்பா கோவிலுக்கு வனிதா செல்லும்போதெல்லாம் காளி கோவில் பூசாரியும், அங்கிருக்கும் பெரியவர்களும் வாழ்த்துவதை பார்த்து பூரித்து கன்னம் சிவப்பாள். அதை நானும் கோவிலுக்கு செல்லும் போது கவனித்து ரசித்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சிக்காகவே இத்தனை வேலைகிடையிலும் காளிகோவிலுக்கு போவதையும் வழக்கமாக்கியிருந்தாள். துர்கை அம்மன் அவள் இஷ்ட தெய்வம். வெள்ளி, செவ்வாய் சாயுங்காலம் அவளை அங்கு காணலாம். சில சமயம் ஸ்லோகம் சொல்லிக்கொண்டே அம்மன் அலங்காரத்திற்கு பூக்கட்டி கொண்டிருப்பாள். கோவிலிலும் இழுத்து போட்டு வேலை செய்து கொண்டிருப்பாள். சாமி கும்பிடும் போது பாவாடை தாவணியில் காது ஜிமிக்கி ஆட மெய்மறந்து பக்தி பரவசத்துடன் கண்மூடிய அவள் தோற்றம் இன்னொரு அம்மனாகவே எனக்கு தெரியும்.

அவளது கைபக்குவமும் யாருக்கும் வராது. வேலை செய்யும் நேர்த்தி, பூக்கட்டும் அழகு, சமையல்னு அடடா எத்தனை வேலை செய்வான்னு அங்கலாய்ப்பாங்க. எல்லாருக்கும் குழந்தைன்னு ஒண்ணு வாய்ச்சா வனிதா மாதிரி இல்ல இருக்கனும், செய்யனும்னு சொல்ல சொல்ல மத்த பசங்களுக்கு லேசா எரிச்சல் தான். ஆனாலும் அவளை எல்லா குட்டீஸ்களுக்கும் பிடிக்கும். அவளுக்கு படிப்பு கொஞ்சம் தகராறு தான். பார்டர் பாஸ் எடுக்கறதே அவளை பொருத்தவரை எவரெஸ்ட்ல ஏறின மாதிரி. என்னிடம் வருவாள் சில சந்தேகங்களை கேட்க. பொறுமையாக புரியர மாதிரி சொல்லித்தருவேன் . புரிந்ததோ இல்லையோ ஆனால் அதற்கு மேல் சந்தேகம் எதுவும் கேட்காமல் நன்றி என கூறி சென்று விடுவாள் . இந்த நிகழ்வு அவ்வப்போது நடக்கும்.

அதற்கு மேல் அவள் வீட்டில் அவளை விட நன்றாக படிக்கும் தங்கைகளை உசத்தியாய் கவனித்து ஏக சலுகைகள் . படிக்கற பசங்கன்னு நீ செய். உனக்கு தான் மண்டைல ஏறதில்லை. உனக்கு வீட்டு வேலை தான் வருது. அதை செய்யுன்னு ஒரே மிரட்டல் வரும் கனகத்திடமிருந்து. வேண்டாத மருமகள் கைபட்டா குத்தம்னு சொல்லுவாங்களே அதே மாதிரி பிடிக்காத மகளும் எது செய்தாலும் குத்தம்னு சொல்லற பெற்றோரும் இருக்காங்க. அதுக்கு நம்ம கதை நாயகி வனிதாவே சாட்சி.

அப்பாவை பாராட்டுக்கு எதிரே பார்க்க மாட்டாள் வனிதா. அந்த மனுஷன் வெள்ளன காப்பி குடிச்டுட்டு போனா இரவு தலையை சாய்க்க தான் வருவாரு. ஆனா ஒவ்வொண்னும் பார்த்து பார்த்து செய்தால் இந்த அம்மா ஒரு தரமாவது என்னை அன்பா தட்டி கொடுத்திருக்கிறாளா என மனசுக்குள் குமைவது தான் மிச்சமாயிருக்கிறது. சில நேரங்களில் கண்ணீராக வெளிபட்டிருக்கு. அவள் துணி தோய்க்கும்போதும், கோவிலில் கண்ணை மூடிக்கொண்டு பிரார்தனை செய்யும் போதும் அவளது கண்களில் இருந்து பெருகும் கண்ணீர் சிலருக்கு சில ஊகங்களை ஏற்படுத்திச்சு. வாரமொருதரம் ஒரே பொழுதுபோக்கான சினிமாவிற்கு கூட அம்மா, ரெண்டு தங்கச்சிங்க மட்டும் கிளம்பிடுவாங்க. வர்ரியான்னு கேக்க மாட்டாங்க. எங்கே வந்துடுவாளோன்னு பயத்துடன் வேலையை அவளிடம் திணிச்சுட்டு ஓடிடுவாங்க.

வனிதாவிற்கு இரவு கடை அடைச்சுட்டு வரும் அப்பாவிற்கு இரவு சோறுபோடும் வேலை இருக்கும். எல்லாவற்றையும் ஒழித்து பாத்திரம் தேச்சு விடியல் காலைக்கு ஏற்பாடு செய்துட்டு படுக்க போவாள். வீடே கதி என்றிருப்பவளுக்கு விசேஷத்துக்கு வீட்டிற்கு வரும் மாமா, அப்பத்தா வற்புறுத்தி அழைத்து சென்றால் தான் உண்டு. அவர்கள் வந்தா இவளை தாங்கு தாங்குன்னு தாங்குவாங்க. அதெல்லாம் இவளுக்கே கூச்சமா இருக்கும்.

சில நேரங்களில் சின்னதுங்க பேர்ல பொறாமை கூட வரும். ஆனால் கிஞ்சித்தும் சீரியல் கதாபாத்திரம் போல பழிவாங்கறதை பார்க்கும் காட்சிகளில் கூட அடடே இதை எல்லாம் எப்படிதான் செய்யறாங்களோன்னு அங்கலாய்ப்பாள், வருத்தபடுவாள் தனக்குள் எத்தனை வேதனை இருந்தாலும் கூட பிறந்ததுங்களை அம்மாவை மாதிரி பார்த்து கொள்வாள். இத்தனை வேலைகளுக்கு நடுவே பள்ளியில் மாதிரி தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. அதற்கும் அவள் போராட வேண்டியிருந்தது. படிக்க உக்காந்தாலே வேலை, தூக்கம் தான் வருது. எப்படியாவது 12 பாஸ் செய்தா போதும்னு நினைச்சிட்டிருந்தா. இன்னும் ஒரு மாதத்தில் பரிட்சைகள் முடிந்து விடும். படிக்கற பசங்க பர பரத்து கொண்டிருந்தாங்க. அன்றாட நிகழ்ச்சிகள் விளையாட்டு, டிவி பாக்கறதுன்னு கூடாதுன்னு பெற்றோர்களிடமிருந்து ஒரே கண்டிப்பு.

திடீரென்று ஒரு நாள் விடியலில் பரபரப்புடன் அந்த ஊர் துக்கத்தை போர்த்திகொள்ள தயாராகியிருந்தது. ஊர்காரங்க அழுது அரட்டி யாரு யாரு எதோ வட்ட கிணத்துல பொணம் மிதக்குதாம்னு கூக்குரலிட்டு ஓடியவர்களை பார்த்து , வீட்டிலிருந்து வெளி வந்தவர்களும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓட அந்த இடம் , ஊருக்கு நடுநாயகமான வட்ட கிணறு.

எல்லோரும் எட்டி பார்க்க முயற்சித்தனர். தலை குப்பர பள்ளி சீருடையுடன் ஒரு பெண் மிதந்து கொண்டிருந்தாள் . பார்த்து கொண்டிருந்த போதே ஊரின் இரண்டு இளவட்ட பசங்க சட்னு கிணற்றில் குதித்து பிணத்தை தூக்க முயற்ச்சித்தனர். முகம் ஊதிப்போய் இருந்தாலும் அடையாளம் தெரிந்தது பள்ளி சீருடையில் வனிதா! எல்லோருக்கும் அதிர்ச்சி அந்த பொண்ணா ஏன் என்ற பல கேள்விகள்? எல்லோருமே அடி பாதகத்தி ஏண்டி இப்படி செய்துட்டேன்னு அழுது அலறினர். புலம்பி தீர்தனர். தீராத சோகம் ஊருக்குள் வடு மாதிரி

வேலை, உழைப்புன்னு கடிகாரம் மாதிரி ஓடிகொண்டிருந்தவள் தன் உயிரை போக்கிகொண்டாள். ஏதோ தாங்காத பாரம் இறக்கி வைக்க முடியாமல் தத்தளித்திருக்கிறாள். துவண்டுருக்கிறாள். அவளுக்கென்று மனசு விட்டு பேச , தன் சுமையை இறக்கிவைக்க ஒரு தோளில்லாத காரணத்தினாலோ , அதிக மன அழுத்தத்தில் உழண்டிருப்பாளோ? நினைத்து நினைத்து மனது ரணமாகிவிட்டது.

கிணற்றில் குதிக்கும் பொழுது தன் பாவாடை விலகாமல் இருக்க நடுவில் நாலு , ஐந்து பின்கள் போட்டு அவளுக்கே உரித்தான கச்சிதம் இறப்பிலும் வெளிபடுத்தி போய்விட்டாள். எத்தனை பொருமை, சிரிச்ச முகம், எத்தனை அமைதி ஊரார் மத்தியில் கேள்விகணைகளுக்கு மத்தியில் பெருங்குரலெடுத்து அழுதாள் கனகம். அவளை பொறுத்த மட்டும் இனி வேலைகள் செய்ய யாருமில்லை என்ற கவலை போல. துக்கம் போய், ஆற்றாமை போய் காதல் தோல்வியோ, இல்லை கர்பமோ என்று கண், காது, மூக்கு வைத்து பேச்சுக்கள் பரவலாக.

ஏன் வனிதா இறந்தாள் என்ற மர்ம முடிச்சு மட்டும் அந்த வட்ட கிணற்றில் புதைந்தே கிடக்கிறது. என்னை மாதிரியே அந்த ஊரிலிருக்கும் சிலருக்கும் அவ்வப்போது எழும் கேள்வி ஏன் அவள் இறந்தாள்?

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...