கருஞ்சாந்து நிறமொரு குட்டி

நகைச்சுவை
5 out of 5 (2 )

கருஞ்சாந்து நிறமொரு குட்டி

‘ச்சசந்ந்தர்ர்’ என்று என் மனைவி நித்யாவின் கோபக்குரல் கேட்கும் போது நான் பால்கனியில் அன்றைய தினசரியின் அடியில் என் கைபேசியை மறைத்து வைத்து சமூக வலைத்தளங்களை மேய்ந்து கொண்டு இருந்தேன். கண்டுபிடித்துவிட்டாளோ என்று பதறி உள்ளே ஓடினேன். நான் ரவிச்சந்திரன். தேசிய வங்கி ஒன்றில் அதிகாரி. மனைவி நித்யா பன்னாட்டு வங்கி ஒன்றில் மனித வளத்துறையில் மேலாளர். நித்யா கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தாள். கையில் ஒரு கிழிந்த துணி. அருகில் எங்கள் நாய் புஜ்ஜி. ‘இது என்ன தெரியுதா? நான் ரெண்டாயிரம் ரூபாய் செலவு பண்ணி தைச்சுக்கிட்ட ரவிக்கை. இன்னிக்கு சாயங்காலம் ஒரு ஃபங்ஷனுக்கு கட்டிக்கணும்னு நேத்து ராத்திரியே எடுத்து உன்கிட்ட அயர்ன் பண்ணி வைன்னு கொடுத்தா நீ அதை ஹால் ஸோபா மேல போட்டுட்டு மறந்துட்ட. இப்ப பாரு, உன் புஜ்ஜி என்ன பண்ணி வச்சிருக்குன்னு’ என்று கையைக் காட்டினாள். அதிர்ச்சி அடைந்தேன் என்றால் மிகையாகாது. இரண்டாயிரம் கொடுத்து தைக்கப்பட்ட ரவிக்கை தாறுமாறாக கிழிக்கப்பட்டு சட்டசபையிலிருந்து வெளிவரும் எதிர்க்கட்சித் தலைவரின் சட்டைபோல் ஆகியிருந்ததால் அல்ல. ஒரு ரவிக்கை தைக்க இரண்டாயிரம் ஆயிற்று என்று தெரிய வந்ததால். ‘புஜ்ஜிக்கு பல் வளரும் வயசு. இப்படித்தான் நேத்துகூட பேப்பரைக் கிழிச்சுப் போட்டுடுச்சு. என்னால பேப்பர் படிக்கவே முடியலை’ என்றேன். முதல் தவறு! ‘நான் ரெண்டாயிரம் ரூபா ரவிக்கை போச்சு, இன்னிக்கு ஆஃபிஸ் கெட் டுகெதர்க்கு என்ன பண்றதுன்னு புலம்பிட்டிருக்கேன்! உனக்கு உன்னோட பேப்பர்தான் முக்கியமாப் போச்சா? அதுகூட நீ பேப்பரைக் கையில வச்சிகிட்டு ஃபோனில வாட்ஸ்அப்பும் ட்விட்டரும் இல்ல பாக்கற?’ என்று நேரடியாக தாக்கினாள். நான் அவசரமாகப் பின்வாங்கி ‘போனாப் போகுது விடு. வார்ட்ரோப்ல நூத்துக்கணக்கில் புடவை வச்சிருப்பியே, வேற ஏதாவது எடுத்து கட்டிக்கோ’ என்றேன். மறுபடி தவறு! மனைவியின் புடவைக் கணக்கை தணிக்கை செய்யக்கூடாது என்பது தாம்பத்தியத்தின் பால பாடம். நித்யா வெகுண்டு ‘ஓஹோ? என்கிட்ட எவ்ளோ புடவை இருக்குன்னு எண்ணி வச்சிருக்கியா? ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன் நீ அவ்ளோ புடவை வாங்கிக் கொடுத்தேன்னு நினைச்சுட்டு இருந்தீன்னா அது தப்பு. என்கிட்ட அவ்ளோ கிடையாது. அதில்லாம நாங்க எல்லாரும் காப்பர் ஸல்ஃபேட் நீல நிறத்தில் தீம் ட்ரஸ் பண்றதா திட்டம். எல்லாரும் அந்த கலரில் போட்டுட்டு வருவாங்க. நான் மட்டும் வேற கலர்ல போட்டுட்டு போய் அசிங்கப்படப் போறேன். உனக்கு என்ன? ஆஃபீஸ் போற, ஃபோன் பாக்கற, டிவி பாக்கற, தூங்கற. வீட்டைப் பத்தி கவலையே படறதில்லை. இதுல பூனை, நாய்னு எதையாவது கொண்டு வந்து என் உசுரை வாங்கறீங்க. இதை காலைல வாக்கிங் கூட்டிட்டு போக வீட்ல ஆள் இல்ல. இதுவானா என்னை இழுத்துகிட்டு ஓடுது. என் தோள்பட்டையெல்லாம் விட்டுப் போகற மாதிரி வலி. தெருவில் சுத்தற நாயெல்லாம் இது பின்னாலயே வருது. எனக்கு வெட்கமும் அவமானமுமா இருக்கு. நான் எக்கேடோ கெட்டுப் போறேன். நீங்கள்லாம் சந்தோஷமா உங்க வேலையைப் பாருங்க’ என்று சொல்லி எங்கள் படுக்கை அறை உள்ளே சென்று படாரென கதவைச் சாத்திக்கொண்டாள். திருமணமாகி இருபத்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இது போன்ற நெருக்கடிகளைச் சமாளிக்கும் லாகவம் இன்னும் கைவராததால் என்ன செய்வதென்று தெரியாமல் சாத்தப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். சற்றுநேரம் கழித்து ஒரு உன்னதமான காப்பர் ஸல்ஃபேட் நீலத்தில் புடவையும் அதற்கு பொருத்தமாக ஜிமிக்கி எல்லாம் வைத்து தைத்த ரவிக்கையும் அணிந்து வெளிவந்து என்னை முறைத்து விட்டு ‘டிஃபனும் லஞ்ச்சும் டைனிங் டேபிள்ல இருக்கு. ராத்திரி நான் டின்னருக்கு இல்லை. ஸ்விக்கி பண்ணிக்கோ. ஒம்பது மணிக்கு அக்கார்ட் ஹோட்டலுக்கு வந்து என்னை பிக்அப் பண்ணிடு’ என்று வாசனையாகச் சென்றாள். வந்த எரிச்சலுக்கு புஜ்ஜியை பஜ்ஜி பண்ணலாம் என்று தேடினால் சோம்பேறி அதற்குள் ஸோபா அடியில் ஒரு குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தது. எங்கள் இல்லற வாழ்வில் புஜ்ஜி எப்படி நுழைந்தது என்பதை முதலில் சொல்கிறேன்.

இரண்டு வருடங்கள் முன்பு எங்கள் ஃப்ளாட்டுக்குள் எலி வர ஆரம்பிக்க அதைத் தடுக்க பல நாட்கள் போராடினேன். அப்போது கார் பார்க்கிங்கில் மழைக்குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது என்று ஒரு பூனைக்குட்டியை மகள் ஸ்ருதி எடுத்து வந்தாள். எலியைத் துரத்த உதவும் என்ற அவள் எளிய தர்க்கத்தை என்னால் மறுக்க முடியவில்லை. அந்த ‘டாம்’ எலி பிடிப்பதைத் தவிர மற்ற அனைத்தையும் செய்தது. ஒருநாள் ப்ரணவ், ஸ்ருதி வீட்டில் இல்லாத பகல் வேளையில் ஸ்டார் மூவிஸ் ஆங்கில சானலில் ஒரு காதல் திரைப்படத்தைப் பார்த்து என் நடுத்தர வயது ஹார்மோன்கள் கிளர்ச்சியுற்று நித்யாவை தேடினேன். அவள் சமையலறையில் வேர்க்க விறுவிறுக்க ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்து உற்சாகமுற்று அவளைப் பின்னாலிருந்து கட்டிக் கொள்ள முயன்றேன். சமயம் பார்த்து சரேல் என்று டாம் ஜன்னலில் இருந்து சமையல் மேடைக்கு தாவ, நித்யா தடுமாற, எண்ணெய் மற்றும் ஏதேதோ மாவுக்கலவை எல்லாம் தட்டிவிடப்பட்டு ஒரே களேபரம். அவலை நினைத்து உரலை இடித்த கதையாக எதற்கோ வந்து கடைசியில் சமையலறையை சுத்தப்படுத்திவிட்டுப் போனேன். பிறிதொருநாள் காலை நித்யா சமையலறையிலிருந்து இதேபோல் அலறினாள். சென்று பார்த்தால் சமையல்மேடை மேல் அங்கங்கே ரத்தக் குதறலாக ஒரு மீன் துண்டு!

'உவ்வே! உருப்படியா ஒரு வேலை செய்கிறாயா நீ? எலியை விரட்டு என்றால் பூனையைக் கொண்டு வந்தாய். அது என்ன கண்றாவியையெல்லாம் கொண்டு வந்து போடுது பாரு! நான் எப்படி இங்க சமையல் செய்வது? இந்த வீட்டில் இனி நான் சமைக்க மாட்டேன்!’

'எங்கிருந்து வந்தது? நம்ம வீட்டில் மீன் தொட்டிகூட கிடையாதே' என்று நான் யோசித்துக் கொண்டிருக்கையில் அழைப்புமணி ஒலித்தது. கதவைத் திறந்தால் பக்கத்து அபார்ட்மெண்ட் அஞ்சு ஜார்ஜ் கையில் கத்தியோடு!

'சார், ப்ரிஜ்லருந்து சமைக்க மீன் எடுத்து மேடைமேல வச்சுட்டு குளிக்க போனேன். திரும்பி வந்து பாத்தா ரெண்டு எலும்புத் துண்டுதான் கிடக்கு!'

'ஓ... மீன் உங்க வீட்டுதுதானா! கவலைப்படாதீங்க, மிச்சம் எலும்பு எங்க வீட்லதான் இருக்கு! நான்கூட குழம்பிட்டேன், மீன் எங்கருந்து வந்திருக்கும்னு. நித்தும்மா, கண்டுபிடிச்சுட்டேன்! மீன் பக்கத்து வீட்லருந்து வந்திருக்கு' என்றேன் மகிழ்ச்சியுடன்.

'சாஆர்! பிரச்னை அதில்லை! இதெல்லாம் உங்க டாம் பண்ற வேலை. ஜோஸ் மீன் இல்லாம சாப்பிட மாட்டான். அழுவான்! இப்ப நான் என்ன பண்றது?'

'ஏங்க, நேத்து ராத்திரிகூட மீன் வறுத்தீங்க போல? வாசனை வந்ததே? மிச்சம் மீதி ஏதாவது ஃப்ரிஜ்ல இருக்கும் பாருங்க. இல்லன்னா ஆம்லெட்டாவது போட்டுக் கொடுங்க. பாவம் பையன் இளச்சுட்டான்' என்றேன்.

நித்யா என்னை கண்களால் கடிந்து கொண்டாள். ஜோஸ் அவங்க பையன். நல்ல ஊட்டம்! நாலு வயதுக்கு நாற்பது கிலோ இருப்பான்! ஒருமுறை தூக்கிக் கொஞ்ச முயற்சி செய்து முதுகு பிடித்துக்கொண்டு ஒரு வாரம் குனியக்கூட முடியாமல் அவஸ்தை!

அஞ்சு ஜார்ஜ் மலர்ந்து 'அட! மறந்தே போய்ட்டேன். நேத்திக்குதான் முட்டை வாங்கிட்டு வந்தேன்’ என்று தன் வீட்டின் புறம் திரும்பி 'ஜோஸ் குட்டா கரையண்டா. ஞான் ஆம்லெட் செய்து தரான்' என்று சொல்லி 'ஆனா உங்க டாம் பிரச்னைக்கு ஒரு வழி பாருங்க சார். மீன் வாங்கி வைக்க முடியலை’ என்று சென்றாள்.

'இவ்ளோ மீன் சாப்டறீங்க, ஞாபகசக்தி ஒண்ணும் பெரிசா இம்ப்ரூவ் ஆன மாதிரி தெரியலை!' என்று சத்தமில்லாமல் அவள் பின்பக்கத்தைப் பார்த்து சொன்னேன்.

நித்யா என் மண்டையில் ‘நங்’ என்று ஒரு குட்டு வைத்து ‘இந்த வம்பு, வெட்டி அரட்டையெல்லாம் விட்டுட்டு முதல்ல டாமை சரி பண்றதுக்கு வழியைப் பாரு' என்றாள். என் எலி ஒழிக்கும் திட்டத்தில் பூனையையும் சேர்த்துக் கொண்டேன். அந்த சமயம் ஸ்ருதியின் பிறந்தநாளுக்கு முதல்நாள் இரவு பதினொன்றரை மணி அளவில் வாசல் கதவுமணி அடிக்க பயத்துடன் தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறந்தேன். நாலு பையன்கள், நாலு இளம் பெண்கள் என ஒரு கும்பல் ‘அங்கிள்.. எக்ஸ்யூஸ் அஸ், நாங்க ஸ்ருதி ஃப்ரெண்ட்ஸ், அவள் பர்த்டேக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று வந்தோம்’ என்று சொல்லி திபுதிபுவென உள்ளே வந்தார்கள். பன்னிரெண்டுவரை காத்திருக்க அவர்களுக்கு நித்யா தேநீர் கொடுத்து உபசரித்தாள். சரியாக 12 மணிக்கு ஸ்ருதியின் அறைக்கதவைத் தட்டி பிறந்தநாள் கொண்டாடி பரிசாக ஒரு அட்டைப்பெட்டியை வைத்து விட்டுப் போனார்கள். பிரித்துப் பார்த்தால் ‘பக்(pug)’ என்றொரு இன நாய்க்குட்டி. மின்னும் கருப்பில் சிறியதாக இருந்தது. ‘ச்சோ ச்வீட்’ என்று அம்மாவும் மகளும் உருகி ‘புஜ்ஜி’ என்று பெயரிட்டார்கள். எனக்கென்னவோ அது ஏற்கனவே தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் எலி மற்றும் பூனையோடு சேர்ந்து கொள்ளும் என்று தோன்றியது. இவ்வகை நாய்கள் நாம் நினைத்திருக்கும் நாய்களுக்கான எந்த வரையறைக்குள்ளும் வராது. அது வீட்டின் வெளியே இரவெல்லாம் சுற்றி உம்மைக் காக்காது. யாராவது திருடிப் போய்விடாமல் வீட்டுக்குள் வைத்து நீர்தான் அதைக் காக்க வேண்டும்! சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கும். அதுவும் புஜ்ஜி ஒரு சோம்பேறி. அதற்கு விருப்பமிருந்தால் வந்து கொஞ்சும். இல்லையென்றால் பக்கத்தில் போனாலே பிராண்டும். நான் நாயைப்பற்றித்தான் சொல்கிறேன்! புஜ்ஜியும் டாமும் முதல்பார்வையிலேயே விரோதித்துக் கொண்டதால் டாம் தன் பழைய ஜாகையான கார் பார்க்கிங்கிற்கு திரும்பியது.

அலுவலகத்தில் நண்பன் ராஜாராமிடம் ‘என்னடா நாய் அது? எதைப்பார்த்தாலும் கடிச்சு வைக்குது’ என்று சலித்துக் கொண்டேன். ‘கண்டதை எல்லாம் கடிக்கக்கூடாதே? ஆளைக் கடிச்சா பரவாயில்லை! எதுக்கும் ‘பெட்’ டாக்டரைப் பாத்துடலாம்’ என்றான். அன்று மாலை அடையாறில் ஒரு பங்களாவில் இருந்த ‘பெட் க்ளினிக்’குக்கு சென்றோம். வரவேற்பறை ஐந்து நட்சத்திர ஹோட்டலை நினைவுபடுத்தியது. நாசூக்கான இளம்பெண் ’நாயைப்பற்றி விவரங்கள் கொடுங்கள்’ என்று கத்தை காகிதங்களைக் கொடுக்க பக்கம் பக்கமாக நிரப்பித் தள்ளினேன்.

பக்கத்தில் உடலெல்லாம் அடர்த்தியான முடியோடு ஓநாய்போல் ஒன்றை வைத்துக்கொண்டு ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தாள். அது என்னையும் புஜ்ஜியையும் விரோதத்துடன் பார்த்தது. ‘என்னடா இது ஓநாய்?’ என்றேன். ‘ஷ்ஷ்’ என்றான் ராஜா. இப்போது அந்தப் பெண்ணும் என்னை விரோதமாகப் பார்த்தாள். ‘டேய் அதெல்லாம் சைபீரியன் ஹஸ்கி வகை நாய். ரொம்ப ஒசத்தி’ என்றான் சன்னமாக. ‘சைபீரியாவா?சைதாப்பேட்டை மாதிரி சொல்ற? அது எங்கயோ வடதுருவத்துக்கிட்ட இல்லடா இருக்கு? அதான் அவ்ளோ முடி! அந்த குளிர் பிரதேச நாயை வெய்யில் கொளுத்தும் சென்னையில ஏன்டா வளர்க்கிறாங்க?

‘மாப்ள நீ சில விஷயங்களில் ரொம்ப பின்தங்கி இருக்க. நாய் வளர்ப்பதெல்லாம் இப்ப அந்தஸ்தின் சின்னம்! உன்னோட புஜ்ஜிகூட சைனாவிலும் இங்கிலாந்திலும் மஹாராஜாக்கள் வைத்திருந்த இனம்! நீயும் பெரிய ஆளுதான்டா’ என்றான். சைபீரியாவா சைனாவா எது உசத்தி என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது ‘த டாக்(doc) வில் ஸீ யுர் டாக்(dog) நவ், ப்ளீஸ் பே டூ தவுஸண்ட்’ என்றாள் வரவேற்பாளினி. நான் அதிர்ச்சியிலிருந்து மீளுமுன் ராஜா ‘பணத்தைக் கொடுத்துட்டு வா’ என்று புஜ்ஜியைக் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றான். அந்த டாக்டர் புஜ்ஜியை கவிழ்த்து, நிமிர்த்து, உருட்டி பரிசோதித்தபின் மூக்கு நுனி கண்ணாடிக்கு பின்னாலிருந்து என்னைப் பார்த்து ‘உங்க நாய் கொஞ்சம் ஓவர் வெய்ட்டா இருக்கு. ரொம்ப சோம்பேறியா வளர்க்கிறீங்க. இப்படியே விட்டால் சுகர், பிபி வந்துடும். அதுகூட நிறைய ஒடி விளையாடுங்க.. அதுக்கு ஒரு ’ஃபிட்னஸ் பேண்ட்’ வாங்கி கட்டிவிட்டு எவ்வளவு தூரம் நடக்குது, எவ்வளவு கலோரி செலவு செய்யுது என்பதை எல்லாம் கண்காணிங்க.. அதுக்கு வயசாகிட்டு வருது. ‘மேட்டிங்’குக்கு ஏற்பாடு பண்ணிக்கங்க’ என்றான்.

’என் சுகர், பிபிக்கே என்னால வாக்கிங் போக முடியல. டேய் இதெல்லாம் நான் செய்ய வேண்டியதாச்சே’ என்று நினைத்துக்கொண்டே ‘என்ன சொன்னீங்க? டேட்டிங்கா?’ என்றேன்.

‘ஏறக்குறைய அதுதான்! ஏதாவது நல்ல ’பெடிக்ரீ’ நாயா பாத்து சேரவிடணும்’ என்றான்.

‘யு மீன் ஒரு ஆண்நாய்கிட்ட கூட்டிட்டு போகணுமா?’

‘ப்ரில்லியண்ட்! புரிஞ்சுகிட்டீங்க’ என்று புன்னகைத்து ‘நான் ஏற்பாடு பண்ணட்டுமா?’ என்றான்.

‘நீங்க இந்த வேலைகூட பண்ணுவீங்களா?’ என்றேன் நக்கலாக. குடுத்த காசுக்கு ஏதாவது சொல்லிவிட்டாவது வரவேண்டாமோ? அவன் என்னை முறைக்க ‘நாங்களே பாத்துக்கறோம் டாக்டர்’ என்று ராஜா என்னை இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

‘என்னடா அவன் பாட்டுக்கு டேட்டிங் மேட்டிங்கறான். நீ பாட்டுக்கு வந்துட்ட. நான் என்னதான் பண்ணறது?’ என்றேன். ‘மாப்ளை. இதுல ஒரு கணக்கு இருக்கு. இது பெரிய வியாபாரம் இப்பல்லாம். நம்மளுது நல்ல கருப்பு பக். கொஞ்சம் அரிதான கலர். ஒரு சில்வர் கலர் பக் நாயா பாத்து சேரவிட்டோம்னா டால்மேஷன் மாதிரி கருப்பு வெள்ளையில் மூணு நாலு குட்டி போடும். குட்டி ஐம்பதாயிரம்னு வித்துரலாம். நமக்கு சுலபமா ஒரு லட்சம் கிடைக்கும். இந்த டாக்டர் ஏற்பாடு பண்ணினா அவருக்கு ஒரு குட்டி கொடுக்கணும். என்கிட்ட விடு. நான் பாத்துக்கறேன்’ என்றான்.

‘என்னது? ஒரு லட்சமா? நல்ல யோசனையா இருக்கே. அப்படியே மாசாமாசம் நாலு குட்டி போடற மாதிரி ஏற்பாடு பண்ணிடு. நான் வேலையை ராஜினாமா பண்ணிட்டு நாயைப் பாத்துக்கறேன். அது சரி என்னவோ ’பெடிக்ரீ’ன்னானே என்னடா அது?’ என்றேன்.

‘அதுவா? நம்ம நாய் என்ன இனம்? அதோட பாட்டன் முப்பாட்டன் யாரும் கலப்புத் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதுக்கு இருக்க வேண்டிய உடல் உறுப்பெல்லாம் இருக்க வேண்டிய இடத்துல இருக்கு என்று ஒரு சான்றிதழ் வைத்திருக்கணும். அப்பதான் மேட்டிங்க்குக்கு ஒத்துக்குவாங்க’.

‘சரி இதையெல்லாம் எப்படி புஜ்ஜிக்கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கிறது?’ என்றேன். முறைத்துவிட்டு போய்விட்டான்.

ஞாயிறு காலை பதினொரு மணிக்கு காரை எடுத்துக் கொண்டு வந்தான். நேரே பெசண்ட் நகரில் ஒரு பங்களாவிற்குச் சென்றோம். அந்த வீட்டு அரைக்கால் சட்டை ஆசாமி ‘வாங்க. ரூமெல்லாம் சூப்பரா ஏற்பாடு பண்ணிட்டேன். இதான் எங்க ஜேக்கியோட கேர்ள்ஃப்ரண்டா? டார்லிங், அவங்க வந்துட்டாங்க’ என்று உள்ளே சென்றான். தன் உடலமைப்புக்கு சற்றும் பொருந்தாத ஷார்ட் கவுன் அணிந்து வந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி எங்களை ஏற இறங்கப் பார்த்து ‘நாயோட பெடிக்ரீ சர்ட்டிஃபிகேட்ஸ் எல்லாம் காட்டுங்க’ என்று வாங்கிப் பார்த்துவிட்டு ‘வாங்க. அதான் எங்க ஜேக்கியோட பெட்ரூம்’ என்று அழைத்துப்போய் குளிர் சாதனப் பெட்டி, நுரை மெத்தை எல்லாம் போட்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு கொழுகொழுவென இருந்த ஒரு சில்வர் நிற பக் நாயிடம் சென்று ‘ஹாய் ஜேக்கி மீட் யுவர் ஃப்ரண்ட் புஜ்ஜி’ என்றாள். நான் ராஜாவைப் பார்க்க அவன் சும்மாயிரு என்று கண்ணால் சைகை செய்தான்.

‘வாங்க. அவங்க ரெண்டு பேரும் தனியா இருக்கட்டும்’ என்று எங்களைக் கூட்டிக்கொண்டு வெளியே வந்து கதவைச் சாத்தினாள்!

‘ஏங்க உங்க புஜ்ஜிக்கு எல்லாம் தெரியும் இல்ல? பதவிசா நடந்துக்குமா? நீங்க போய்ட்டு மூணுமணி நேரம் கழிச்சு வாங்க. ஏதாவதுன்னா நான் ஃபோன் பண்றேன்’ என்றாள்.

‘என் ஃபர்ஸ்ட் நைட்டப்ப எனக்கே எப்படி நடந்துக்கணும்னு தெரியாதுங்க’ என்று சொல்ல வந்தேன்! ராஜா சைகை காட்ட வீட்டை விட்டு வெளி வந்தோம்.

‘ஏண்டா டேய், குடும்பமே லூஸாடா? இந்த லட்சணத்துல அவங்க வளர்க்கிற நாய் எப்படி இருக்குமோ?’ என்றேன்.

‘மாப்ள கோழி குருடா இருந்தா என்ன? குழம்பு ருசியா இருந்தா சரி! உனக்கென்ன, வேலை நடந்தா போதுமில்ல?’

இரண்டு மணி நேரத்திலேயே ஃபோன் வந்து விட்டது! ‘உடனே வாங்க சார்’. பாய்ந்து சென்றோம். வாசலிலேயே நின்றிருந்த அரை நிஜார் ‘என்ன சார் நாய் வளக்கறீங்க! எங்க உசுரை வாங்கறீங்க’ என்றான் சிடுசிடுப்புடன். என்ன ஆச்சோ என்ற கவலையுடன் உள்ளே சென்றேன். ஹாலில் நாயை மடியில் படுக்க வைத்துக்கொண்டு அந்தப் பெண்மணி ஸோபாவில் அமர்ந்திருந்தாள். அந்த ஜேக்கி சோம்பேறித்தனமாக எதையோ மென்று கொண்டிருந்தது. ’உங்க நாய் ரொம்ப மோசம். போய் அதைக் கூட்டிட்டு போங்க சார்’ என்றாள். என்னைப் பார்த்ததும் புஜ்ஜி குஷியுடன் தலை தெறிக்க இங்கும் அங்கும் ஓடி மிக வேகமாக சுற்றி சுற்றி வந்தது.

‘இப்படித்தான் பண்ணிகிட்டே இருந்தது. ஒரு நிமிஷம் ஒரு இடத்தில் நிக்கலை. எங்க ஜேக்கி இது பின்னாடி ஓடி ஓடியே டயர்ட் ஆயிடுச்சு. ஒண்ணுமே நடக்கலை’ என்றாள். எனக்கென்னவோ ஜேக்கி ஞாயிற்றுக்கிழமை அசைவத்தை ஒரு வெட்டு வெட்டிவிட்டு உண்ட களைப்பில் செயலிழந்திருந்ததோ என்று தோன்றியது. ஒன்றும் சொல்லாமல் வீடு வந்தோம். நித்யா ஆவலோடு ‘என்ன எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?’ என்றாள். ‘ஹூம்! சொதப்பல. நம்மள மாதிரி....’ என்று மேலே சொல்ல வந்தேன். கன்னம் சிவந்து ராஜாவைப் பார்த்து கண்ணைக் காட்டியபடி உள்ளே போனாள்.

‘இப்ப என்னடா பண்றது?’ என்றேன். புஜ்ஜி இந்தக் குழப்பங்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் எங்களைச் சுற்றி வந்து வாலாட்டியது.

‘எனக்கு தெரிஞ்ச ஒரு மன நல மருத்துவர் இருக்காரு. அவர்கிட்ட அப்பாய்ன்மெண்ட் வாங்கறேன்’ என்றான் ராஜா. ‘டேய், எனக்கு எதுக்குடா மனோதத்துவ சிகிச்சை? நீ கூட்டிட்டு போனியே ஒரு வீடு அந்த கும்பலுக்கு வேணா தேவை’ என்றேன் கடுப்பாக.

‘உனக்கு இல்லடா முட்டாளே, உன் நாய்க்கு’ என்று சொல்லிச் சென்றான். அதிர்ச்சியில் அப்படியே சோபாவில் உட்கார்ந்தேன். அதை ஆக்கிரமித்திருந்த புஜ்ஜி வவ் என்று குரைத்து எதிர்ப்பைத் தெரிவித்துச் சென்றது.

மறுநாள் ஆர்ஏபுரத்தில் ஒரு செல்லப் பிராணிகள் மருத்துவமனைக்கு போனோம். அந்த ஃப்ரெஞ்ச் தாடி வைத்திருந்த டாக்டர் புஜ்ஜியை சில கமாண்ட்கள் சொல்லி பரிசோதித்துவிட்டு கவலை தோய்ந்த முகபாவத்துடன் ‘உங்க நாய் மனச்சோர்வில் இருக்கிறது.. கவுன்சலிங் தேவைப்படும். ஒரு பத்து நாள் தினமும் கூட்டிட்டு வாங்க’ என்றான். வரவேற்பாளினி ‘டாக்டர் ஃபீஸ் டூ தௌஸண்ட் ருபீஸ். கவுன்சலிங் ஃபீஸ் ஃபைவ் தௌஸண்ட் என்றாள்! மனச்சோர்வு புஜ்ஜியிடமிருந்து எனக்குத் தொற்றியது.

எனக்கென்னவோ பத்து நாள் கவுன்சிலிங்கிற்கு அப்புறமும் எந்த மாற்றமும் ஏற்ப்பட்ட மாதிரி தெரியவில்லை. கடைசி நாள் அந்த டாக்டர் ‘உங்க நாய்க்கு டிப்ரஷன் இருக்கு. ’டச் தெரபி’ தேவைப்படுது. அதுகிட்ட அன்பா இருங்க! அப்பப்ப முதுகு, காதுகளுக்குக் கீழே எல்லாம் தடவிக் கொடுத்தீங்கன்னா சரியாயிடும்’ என்று வசூல் ராஜா போல் சொன்னான். நித்யாவிடம் சொன்னதில் ‘அப்படியா? அதுகூட விளையாட நம்மால் ஆகாது. பேசாம இன்னொரு நாய்க்குட்டி வாங்கிடலாம். ஆண் நாயா பாரு. அதுங்க பாட்டுக்கு விளையாடிட்டு இருக்கும். காலையில் வாக்கிங் மட்டும் நீதான் கூட்டிக்கொண்டு போகணும்’ என்றாள்! உங்களிடம் கருப்பைத் தவிர வேறு நிறத்தில் பக் ஆண் நாய் இருந்தால் தொடர்பு கொள்ளவும்!

***

ரமேஷ் ரங்கநாதன்

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...