JUNE 10th - JULY 10th
கொலையாளி..!!
கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
அந்தக் காலை வேலையை மேலும் அழகாக்குவது போல் எம்எஸ்எஸ் குரலில் ஒலித்துக் கொண்டிருந்த சுப்ரபாதத்தை ரசித்துக் கொண்டே செய்தித்தாளை பிரித்துப் படிக்கத் துவங்கிய ஆனந்தக்கண்ணன் தன் கையில் இருந்த காபியை பருக துவங்கினார்.
அதில் நேற்று ஒரே நாளில் அவர் கண்டு பிடித்திருந்த சவாலான கொலை வழக்கை பற்றி ஸ்லாகித்து எழுதி இருந்ததோடு, இன்னும் மூன்று மாதத்தில் ஓய்வு பெறப்போகும் இன்ஸ்பெக்டர் ஆனந்தக்கண்ணன் இதுவரை கண்டுபிடித்து இருந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கைகளை பற்றிய தகவல்களும் அவர் பணியில் சேர்ந்ததில் இருந்து எடுத்துக் கொண்ட அத்தனை வழக்குகளையும் திறம்படவும் துரிதமாகவும் செயல்பட்டு கண்டுபிடித்து இருந்ததைப் பற்றியும் முக்கியமாகக் கொலை வழக்குகளில் ஆனந்தக்கண்ணனின் வேகம் பல குற்றவாளிகளைத் தப்பிக்க விடாமல் செய்திருக்கிறது என்பதைப் பற்றியும் விவரித்து, இதுவரை பணியில் சேர்ந்த நாள் முதல் அவர் கண்டுபிடித்து இருந்த முக்கிய வழக்குகளின் விவரங்களும் அதை எவ்வாறு எளிதாகக் கையாண்டு இருந்தார் என்பதைப் பற்றியும் சுருக்கமாகச் சிறு விளக்கங்களுடன் சேர்த்து ஆனந்தக்கண்ணனின் சிறு பேட்டியும் இறுதியாக இணைக்கப்பட்டு இருந்தது.
அதைக் கம்பீரமாக முறுக்கி விடப்பட்டிருந்த மீசைக்குக் கீழ் இருந்த இதழ்களில் உறைந்த சிறு புன்னகையோடு ஆனந்தக்கண்ணன் படித்துக் கொண்டு இருக்கும் போதே வாசலில் இருந்த தபால்பெட்டியில் இருந்ததாகச் சொல்லி ஒரு காகித உரையோடு வேலையால் வந்து அவர் முன்னே நின்றிருந்தான்.
அதில் யோசனையாக அதைப் பார்த்தவாறே வாங்கிக்கொண்ட ஆனந்தக்கண்ணன் முன்னும் பின்னுமாக அதைத் திருப்பிப் பார்க்க.. அதிலோ இவரின் பெயரைத் தவிர, அனுப்புனர்.. பெறுநர் போன்ற எந்த ஒரு விவரங்களும் இல்லை. அவரின் பெயர் கூடச் செய்தித்தாள்களில் இருந்து கத்தரித்து ஒவ்வொரு எழுத்துக்களாக இணைத்து ஒட்டப்பட்டதாக இருந்தது.
இதைக் கண்டவுடன் அவரின் போலீஸ் மூளை விழித்துக் கொள்ள.. மிகக் கவனமாக அந்தக் காகித உரையைப் பிரித்துப் படிக்கத் துவங்கினார் ஆனந்தக்கண்ணன். உள்ளேயும் இவரின் எதிர்பார்ப்பை துளியும் பொய்யாக்காமல் ஒரு வெள்ளைக் காகிதத்தில் அதேபோன்று செய்தித்தாள்களில் இருந்து கத்தரிக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டு தான் இவருக்கான தகவல் காத்திருந்தது.
“என்ன மிஸ்டர் ஆனந்தக்கண்ணன் ரொம்பச் சந்தோஷமா இருக்கீங்களா..? இதுவரை நீங்க எடுத்த ஒரு கேஸ் கூடத் தோல்வியைத் தழுவலைன்னு ரொம்பக் கர்வம் போலவே..! இதில் உங்களைப் பாராட்ட என்ன இருக்கு..? சரியா சொல்லணும்னா நீங்க கையாண்ட எல்லா வழக்குகளிலும் கொலைகாரன் தான் சரி இல்லைன்னு அர்த்தம்.. அவனே அறியாமல் விட்டுச்சென்ற ஏதோ ஒரு க்ளுவை வைத்துக் கண்டு பிடித்ததை எல்லாம் உங்க திறமையா பெருமையா எண்ணி மார்தட்டிக் கொண்டு இருக்கும் உங்களுக்கு உண்மையான ஒரு பர்ஃபெக்ட் மர்டர் எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா இருக்கா..? ஒகே கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்.. விரைவில் மூன்று கொலைகள் நடக்கப்போகுது.. அதைச் செய்யப் போறது வேற யாருமில்லை.. சாட்சாத் நானே தான்.. முடிஞ்சா, உங்களால் முடிஞ்சா என்னைக் கண்டுபிடிங்க..” என்பதோடு அந்தக் கடிதம் முடிந்திருக்க..
மீண்டும் மீண்டும் அதைத் திருப்பி வேறு ஏதாவது இதில் அறிந்துக்கொள்ள முடியுமா..! என ஆராய்ந்த ஆனந்தக்கண்ணன் அந்தக் கடிதத்தை நான்கு முறைக்கும் மேல் படித்து விட்டார்.. இன்னும் சொல்லப் போனால் அதில் உள்ள வரிக்குவரி இப்போது அவருக்கு மனப்பாடம். ஆனால் இதைக் கொண்டு எதையும் அனுமானிக்க தான் அவரால் முடியவில்லை.
சில நேரங்களில் இது போன்ற அநாமதேய அழைப்புகளும் கடிதங்களும் சும்மாவேணும் நேரத்தை வீணாக்குவது போல் வர கூடும் என்பதால் அதைப் பற்றிப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை அவர்.
மூன்று நாட்கள் கடந்திருக்க... ஆனந்தக்கண்ணனின் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு விட்டதாகத் தகவல் வந்தது. இறந்தது ஓர் முன்னாள் கதாநாயகி, இந்நாள் அம்மா நடிகையுமான சாதனா.. இன்று வரும் பாதிக்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகனுக்கோ இல்லை நாயகிக்கோ அம்மாவாக இவர் தான் இருப்பார் எனும் அளவிற்குப் பிரபலம்.
இன்றும் காலை படப்பிடிப்புக்கு வந்தவர்தான் மர்மமான முறையில் அவரின் கேரவனில் இறந்து கிடந்தார். விவரம் அறிந்த உடன் ஆனந்தக்கண்ணன் அங்குச் செல்ல.. படப்பிடிப்பு தளமே பரபரப்பாகக் காணப்பட்டது. சற்று முன் தங்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஒருவர் இப்போது உயிரோடு இல்லை என்பதையும் கடந்து வாயில் இருந்து லேசாக ரத்தம் வழிய மயங்கிக்கிடந்தவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகே அது கொலை எனவும் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்திருந்தது.
அதில் அங்குள்ள அனைவரிடமே ஒரு பதட்டமும் படபடப்பும் தொற்றிக் கொள்ள.. தன் விசாரணையைத் தொடங்க வேண்டி அங்கு நுழைந்தார் ஆனந்தக்கண்ணன். சாதனா படுத்திருந்த இடத்தில் எந்த ஒரு வாக்குவாதமோ சண்டையோ போராட்டமோ நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் துளியும் இல்லாமல் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருந்து அசையாமல் அப்படியே இருந்தது.
சாதனா சரிந்து கிடந்ததாகச் சொல்லப்பட்ட படுக்கையைச் சுற்றிப் பார்வையை ஓட்டியவர், அந்த இடம் முழுவதையும் அலசியதில் சாதனாவின் கைப்பைக்குள் ஒரு காகித உரை இருப்பது தெரிந்தது.
அந்தக் காகித உரையைக் கையில் எடுத்தவருக்கு மின்னலெனத் தனக்கு வந்த கடிதத்தைப் பற்றிய நினைவு மனதில் வந்தவுடன் அவசரமாக அதைப் பிரித்துப் படிக்கத் துவங்கினார் ஆனந்தக்கண்ணன்.
இதுவும் அவருக்கு வந்தது போலவே எழுத்துக்களை ஒட்டி வெட்டி தான் தயாரிக்கப்பட்டு இருந்தது. சாV3 என்றும் அதற்குக் கீழே ஆறுலட்சத்து இருபது என்றும் மட்டுமே அதில் இருக்க.. அதையே வெகு நேரம் புரியாமல் பார்த்து கொண்டிருந்தவர், இங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய முயல.. அது திறந்த வெளியில் நடக்கும் படப்பிடிப்பு என்பதால் அங்கு அருகில் சிசிடிவிகள் எதுவும் இல்லை.
அதுமட்டுமின்றி இது ஒரு படப்பிடிப்புத் தளம் என்பதால் நூறுக்கும் மேற்பட்டோர் வந்து சென்று கொண்டு இருந்ததில் யாரை எல்லாம் சந்தேகிப்பது என புரியாமல் திகைத்தார் ஆனந்தக்கண்ணன்.
ஆனாலும் மனதில் தோன்றிய சிறு நம்பிக்கையைக் கொண்டு தன் வீட்டில் அந்தக் கடிதத்தைப் போட வந்தவனைப் பற்றி அறிய எண்ணி அவரின் வீட்டுச் சிசிடிவி காட்சிகளைச் சென்று ஆராய்ந்தவருக்கு அங்கேயும் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை.
ஏனெனில் நள்ளிரவில் நல்ல மழை நேரத்தில் வந்து அந்த கடிதத்தை போட்டிருந்தது அந்த பகுதியில் இருக்கும் வயதான பிச்சைக்காரன்.. அவனை கடந்த பத்து வருடங்களாக அந்த பகுதியில் பார்த்து கொண்டு தான் இருக்கிறார். இருப்பினும் அவனிடம் சென்று விசாரித்தவருக்கு இவர் எதிர்பார்த்த மாதிரியே இருளில் யாரென்றே தெரியாத ஒருவன் ஐநூறு ரூபாயை கொடுத்து போட சொன்னது தெரிந்தது.
இதில் ஒன்றும் புரியாமல் ஆனந்தக்கண்ணன் சாV3 என்பது மட்டும் சாவித்ரியாக இருக்குமென எண்ணி யார் அந்த சாவித்ரி என அறிய முயன்று ஆறுலட்சத்து இருபது என்பது பணமாக இருக்குமோ என அடியையும் நுனியையும் பிடிக்க முடியாமல் குழம்பி கொண்டிருக்கும் போதே அடுத்த ஐந்து நாட்களில் மற்றொரு கொலை நடந்திருந்தது.
கொலை அடையாறில் நிகழ்ந்திருக்க.. அங்குக் கொலை செய்யப்பட்டது ஒரு பெண் மருத்துவர் பெயர் சார்மிளா. வழக்கம் போல் நோயாளிகளைப் பார்த்து கொண்டிருந்தவர் தன் இருக்கையில் இருந்தவாறே மின்சாரம் தாக்கி இறந்திருந்தார். முதலில் இதை விபத்து என்று நினைத்தவர்கள் பின்பே அவரின் நாற்காலியில் மின்சாரம் பாய்வதற்கான ஒயர் சுற்றப்பட்டு இருப்பதையும் அதில் இந்த நேரத்தில் மின்சாரம் பாய வேண்டுமென டைமர் செட் செய்யப்பட்டு இருப்பதையும் கண்டு இது பக்காவாகத் திட்டமிடப்பட்ட ஒரு கொலை என அறிந்தனர்.
அங்கும் இதே போல ஒரு கடிதமும் அதிலும் சாV3 என்றும் இருக்க.. அதற்குக் கீழ் கிருஷ்ணகுடில் என்றும் இருந்தது. இப்படி ஒரு கடிதம் சம்பந்தப்பட்ட கொலை வழக்கை ஆனந்தக்கண்ணன் விசாரித்துக் கொண்டிருப்பது அறிந்து அவருக்குத் தகவல் கொடுத்திருந்தார் அந்தப் பகுதி இன்ஸ்பெக்டர் குமரன்.
விவரம் அறிந்ததும் அங்கு விரைந்தவருக்கு இங்கும் வேறு எந்த க்ளுவும் கிடைக்கவில்லை. ஒன்றே ஒன்றை தவிர.. அது இந்தக் கொலை நடந்த பகுதி அடையாறு என்பதும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த ஆறுலட்சத்து இருபது என்பது இந்தப் பகுதியின் பின்கோடோடு ஒத்து போவதும் மட்டுமே..!
அதைத் தான் மறைமுகமாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறான் எனப் புரிய.. இனி ஒரு கொலை நடக்கவே கூடாது என்ற எண்ணத்தோடு இதுவரை வந்த இரண்டு கடிதங்களையும் வைத்து குமரனோடு இணைந்து அதில் புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ள க்ளுவை கண்டு பிடிக்க முயன்றார் ஆனந்தக்கண்ணன்.
இதற்கிடையில் மருத்துவமனையில் இத்தனை பேர் வரும் இடத்தில் இப்படி யாருக்கும் தெரியாமல் நாற்காலியில் மின்சாரம் பாயச் செய்வது எல்லாம் அத்தனை எளிதல்ல என்றெண்ணி குமரன் மருத்துவமனை உதவியாளரை விசாரிக்கத் துவங்கினார்.
“புதுசா சந்தேகப்படற மாதிரி யாரையாவது பார்த்தீங்களா..?”
“இங்கே வருபவர்கள் பெரும்பாலும் புது ஆட்கள் தான் சார்.. ஆனா சந்தேகப்படற மாதிரி யாரையும் பார்க்கலை..”
“டாக்டர் சார்மிளா இன்னைக்குக் காலையில் இருந்து எப்படி இருந்தாங்க..?’
“எப்போவும் போலத் தான் சார் இருந்தாங்க..”
“புதுசா ஏதாவது வித்தியாசமா.. வழக்கத்துக்கு மாறா இப்படி ஏதாவது..?”
“அப்படி எதுவும் இல்லை சார்..”
இப்படியான பதில்களே அனைத்து பக்கமிருந்தும் வரவும் சோர்ந்து போனவர், சிசிடிவி காட்சிகளை ஆராய.. ஊழியர்கள் சொன்னது போலவே சந்தேகப்படும்படி அதில் எதுவுமே பதிவாகவில்லை. முதல் நாள் நள்ளிரவு இரண்டு மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்குப் பின் மீண்டும் வந்திருப்பது மட்டுமே சந்தேகத்தைத் தர.. “இங்கே ஜென்ரேட்டர் இல்லையா..?” என்றார் குமரன்.
“இது அவங்க தனிப்பட்ட கிளினிக் சார்.. ***** ஆஸ்பிட்டலில் இருந்து விஆர்எஸ் வாங்கின பிறகு அவங்க விருப்பத்துக்காகச் சின்னதா நடத்திட்டு இருக்காங்க.. காலையில் மட்டும் தான் வருவாங்க..” என உதவியாளர் கூறவும், சோர்ந்து போனார் குமரன்.
இவற்றை எல்லாம் கவனித்திருந்த ஆனந்தக்கண்ணனுக்கும் அடுத்து என்ன செய்வது என்று புரியா நிலை தான்.
“சார் சாV3 இந்த சாவித்ரின்றது தான் நமக்கு இருக்கும் ஒரே க்ளு.. இது ஏன் கொலைக்காரியா இருக்கக் கூடாது..? நாம கொலைக்கரனை தேடிட்டு இருக்கோம்.. ஒருவேளை இது பெண்ணா இருந்தா..?” என்ற குமரனை கண்டு மறுப்பாகத் தலையசைத்தவர், “ம்ஹும்.. எனக்கு அப்படித் தோணலை குமரன்.. இதில் வேற எதுவோ ஒளிஞ்சுட்டு இருக்கு..” என்றவர் குமரனிடம் கூடத் தனக்கு முதலில் வந்த கடிதத்தைப் பற்றிச் சொல்லவில்லை.
இது வெளியில் பரவினால் தேவையில்லாமல் தன் பெயர் எல்லா இடங்களிலும் அடிப்படும் என்றெண்ணி அதை மறைத்து விட்டவருக்கு எப்படியும் கொலையாளியை கண்டுபிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.
இப்போதைக்கு அந்த கிருஷ்ணகுடில் என்றால் என்னவென்பதை கண்டுபிடித்து விட்டால் அடுத்து நடக்கவிருக்கும் கொலையைத் தடுத்து விடலாம் என்று தோன்றவும், “அந்த லெட்டர்ல சொல்லி இருந்தது இந்தக் கொலைக்கான க்ளுனா..! அப்போ இது நெக்ஸ்ட் கொலைக்கானதா சார்..?” என்றார் குமரன்.
“அப்படித் தான் இருக்கும்னு நினைக்கறேன்..” என்றவர், அந்தப் பெயரில் சுற்றுப் பகுதிகளில் ஏதாவது இடம் உள்ளதா என அறிய முயல.. “பெயரை பார்த்தா ஏதாவது முதியோர் இல்லம்.. ஆதரவற்றோர் ஆசிரமம்னு இருக்குமோ சார்..” என்றார் குமரன்.
“ஹ்ம்ம்.. வாய்ப்பிருக்கு, நீங்க அந்தக் கோணத்தில் விசாரிங்க.. நான் வேற ஏதாவது க்ளு கிடைக்குதான்னு பார்க்கறேன்..” என்ற ஆனந்தக்கண்ணன் முதல் வேலையாக வீட்டிற்குச் சென்று மூன்று கடிதங்களையும் வைத்துக் கொண்டு ஆராயத் துவங்கினார்.
அதே நேரம் இரண்டு கொலை நடந்த இடங்களிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் கூர்ந்து கவனித்துக் குறிப்பெடுக்கத் துவங்கியவருக்கு, தலை சுற்றாத குறை தான்.. ஒரு துளி கூட வழக்கை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் படியான எதுவுமே கிடைக்கவில்லை.
இவர்கள் இந்தக் குழப்பத்திலும் தேடலிலும் இருக்கும் போதே மூன்றாவது கொலையும் நடந்திருந்தது. ஆனந்தக்கண்ணனுக்கு லேசாக இருந்த சந்தேகம் சரியே என்பது போல் அதுவும் ஒரு பெண் தான்.. அவர் பெயரும் சா என்ற எழுத்திலேயே துவங்கியது. ஆனால் அது சாவித்ரி இல்லை.. சாரதா.
அதிலும் இந்தக் கொலை ஆனந்தக்கண்ணனின் காவல் நிலையத்திற்கு அடுத்து உள்ள வீதியிலேயே நடந்திருந்தது.. அங்குச் சென்றவரை வாசலில் இருந்த பிருந்தாவனம் என்ற முகப்புப் பலகை வரவேற்க.. சட்டென கிருஷ்ணகுடில் என்பதற்கான அர்த்தம் அவருக்கு விளங்கியது.
கைக்கும் எட்டும் தூரத்தில் இருந்தும் தவற விட்டு விட்டதை உணர்ந்து தனக்குள் உண்டான கோபத்தோடு வேகமாக உள்ளே நுழைந்தவர், தோட்டத்திற்குச் செல்லும் வாயிலின் அருகே தாறுமாறாக விழுந்து கிடந்த பெண்மணியை கண்டார்.
அவர் அருகில் மெல்லிய கம்பி ஒன்று தரைக்குச் சற்று மேல் கட்டப்பட்டு இருப்பதும் அதில் தடுக்கியே சாரதா விழுந்திருப்பதும் சரியாக அவர் தலை மோதும்படியாக அங்குப் பழைய உரல் ஒன்று வைக்கப்பட்டிருப்பதும் அதற்கு சற்று தள்ளி ஒரு பழைய அலார டைம்பீஸ் சம்பந்தமே இல்லாமல் அங்கு இருப்பதும் எல்லாம் சேர்ந்து இதுவும் பக்காவாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை என்று உறுதியாகியது.
கணவர் இறந்துவிட, வெளிநாட்டில் வசிக்கும் மகள் மட்டுமே இருக்க.. அந்த வீட்டில் சாரதா தனியே வசித்து வந்ததும் தெரியவர, யாரிடம் சென்று என்னவென விசாரிப்பது எனப் புரியாமல், வீட்டிற்குள் ஏதாவது கிடைக்கிறதா எனத் தேடலை துவங்கியவருக்கு அதே போல் ஒரு கடிதம் கிடைத்தது.
அதிலும் வழக்கம் போலவே சாV3 என்று போட்டிருக்க.. அதன் கீழே ஓவர் என்றிருந்தது. உடனே காவல் துறைக்கு முதலில் தகவல் கொடுத்த பக்கத்து வீட்டு நபரிடம் விசாரணையைத் துவங்கியவருக்கு உருப்படியாக இங்கும் எதுவும் கிடைக்கவில்லை.
காலையில் செடியில் பூப்பறிக்கப் பின் கட்டிற்கு வந்தவர் இப்படித் தாறுமாறாக சாரதா விழுது கிடப்பதை கண்டே சுவர் ஏறி குதித்து இந்தப் பக்கம் வந்ததாகவும், மற்றப்படி வேறு எதுவும் தனக்கு தெரியாது என்றிருக்க.. பல வழக்குகளைக் கையாண்டிருந்த விதத்தை வைத்து இரவில் அலார சத்தம் கேட்டு சாரதா இந்தப் பக்கம் வந்திருக்க வேண்டும் என்றும் அப்போது இருளில் இப்படிக் கம்பி கட்டப்பட்டிருப்பது தெரியாமல் கால் இடறி விழுந்திருக்க வேண்டும் என்றும் யூகித்தார் ஆனந்தக்கண்ணன்.
இதைத் திட்டமிட்டே அனைத்தும் ஏற்பாடு செய்யபட்டிருப்பது புரிய.. இங்கும் சிசிடிவியில் சந்தேகப்படும்படி எதுவுமே அவருக்குக் கிடைக்கவில்லை. பின்பக்கமாகவே கொலையாளி வந்து சென்றிருக்க வாய்ப்பிருப்பதும் அங்குள்ள சிசிடிவி கேமரா உடைக்கப் பட்டிருப்பதும் தெரிந்தது.
ஆனந்தக்கண்ணனுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது. மூன்று கொலைகள் மூன்றிலுமே ஒரே ஒரு க்ளு கூடக் கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன் ஒரு கைரேகையோ கொலையாளி தன்னையறியாமல் விட்டு சென்ற அவன் சம்பந்தப்பட்ட பொருட்களோ எதுவுமே கிடைக்கவில்லை.
‘இதில் எங்குச் சென்று எப்படி இந்த வழக்கை ஆராய்வது..? எப்படி முடிப்பது..?’ எனப் புரியாமல் ‘அன்று அவன் சொன்னது போல் தான் தோற்று விட்டோமோ..!’ என்ற யோசனையில் இரவெல்லாம் உறக்கமின்றித் தவித்தவருக்கு அடுக்கடுக்காக மூன்று கொலைகளும் மன கண்ணில் வலம்வர துவங்கியது.
முதலாவது சாதனா இவர் விஷம் கொடுக்கப்பட்டு இருந்திருந்தாலும் அது உடனடியாகக் கொல்ல கூடிய விஷமில்லை.. எட்டு மணி நேரத்திற்குப் பின் வேலை செய்வது போன்ற விஷம்.
அடுத்ததாக சார்மிளா இவர் மின்சாரம் தாக்கி இறந்திருந்தாலும் அதிலும் கூட டைமர் செட் செய்யப்பட்டு இருந்தது.. இறுதியாக சாரதா இவருடைய மரணம் கம்பி தடுக்கி விழும் போது தலை சரியாக உரலில் இடிப்பது போல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது..
அதன்படி பார்த்தால் மூன்று கொலைகள் நடந்த போதுமே அதைச் செய்தவன் அங்கு இல்லை என்று உறுதியாக.. மூன்று இடங்களுக்குமே கடைசி ஒரு வாரத்தில் வந்து போன நபர்கள் அவர்களைப் பற்றிய விவரங்கள் அந்த ஒரு வாரத்திற்கான சிசிடிவி காட்சிகள் என அலசப்பட்டதில் ஒரே ஒருவன் சார்மிளா மற்றும் சாரதா இருவரையும் காண அவர்கள் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் வந்திருப்பது தெரிந்தது.
அதில் அவன் உருவத்தைப் பெரிதுப்படுத்தி முகம் தெளிவாகத் தெரியுமாறு தனியே எடுத்தவர், அந்த நபர் பற்றிய விவரங்களை விசாரிக்கச் சொல்லி விட்டு மீண்டும் தன் தேடுதலைத் தொடர.. ‘சாV3 என்பது சா என்ற எழுத்தில் துவங்கும் மூன்றும் பெண்கள் என்பதைக் குறிக்குமோ..!’ என்று யோசித்தவருக்கு இதைத் தவிரக் கிட்டத்தட்ட ஐம்பத்துஐந்து வயது மதிக்கத்தக்க அந்த மூவருக்கும் இடையில் வேறு எதுவும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவரை யோசித்தது சரியென்றாலும் கூட அப்போதும் அந்த V என்பதற்கான அர்த்தம் என்னவென்று அவருக்குப் புரியவில்லை.
இதே யோசனையில் இருந்தவருக்கான விடையோடு வந்தார் சப்இன்ஸ்பெக்டர் ரத்தினம். ஆனந்தக்கண்ணன் கண்டுப்பிடிக்கச் சொன்ன அந்த நபர் விதார்த் என்பதும் அவன் இவர்களை அடிக்கடி வந்து சந்தித்து விட்டு செல்வதையும் பற்றிக் கூற.. உடனே சாதனாவுடைய உதவியாளரை அழைத்து அந்தப் புகைப்படத்தைக் காண்பித்து விசாரித்ததில் துளியும் யோசிக்காமல் “இது நம்ம விதார்த் தம்பி..” என்றிருந்தார் அவர்.
இதில் மூன்று பேர்களையுமே அறிந்தவனாக விதார்த் இருப்பது சந்தேகத்தை அதிகரிக்க.. உடனே அவனைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார் ஆனந்தக்கண்ணன். அதிர்ந்து பேச கூடப் பயப்படும் அப்பாவி தோற்றத்தில் இருந்தவனைக் கண்டவருக்குப் பல சைக்கோக்களும் சீரியல் கொலைக்காரர்களும் இப்படித் தான் வெளித்தோற்றத்தை வைத்து யூகிக்க முடியாதவர்களாக இருப்பார்கள் என்பது புரிய, எடுத்தவுடன் அவனிடம் கடுமையைக் காண்பிக்கத் துவங்கினார் ஆனந்தக்கண்ணன்.
அவரின் அத்தனை கோபத்தையும் அவனின் அப்பாவி தோற்றத்தையும் மீறிய உறுதியோடு எதிர்கொண்ட விதார்த், தனக்கு எதுவும் தெரியாது என்பதிலேயே உறுதியாக நின்றான். அதே போல் இவர்கள் மூவரோடு இவனுக்கு என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கும் அவனிடம் பதிலில்லை.
மிரட்டி அடித்துப் பலவாறாகக் கேட்டு பார்த்தவர், அவன் வாயையே திறக்காமல் போகவும், அவன் தங்கி இருந்த அறை, விதார்த்தின் அலைபேசி பேச்சுக்கள் மற்றும் சாட்களை ஆராய்ந்ததில் சாதனா பலமுறை இவனுக்குப் பணம் கொடுத்திருப்பதும் சார்மிளா உனக்கு என்ன தேவையென்றாலும் தயங்காமல் என்னை வந்து கேள்..’ எனப் பலமுறை மன்னிப்பை யாசித்துப் பேசி இருப்பதும் தெரிய வந்தது.
இது மேலும் குழப்பத்தை உண்டாக்க.. மூன்று பேரை பற்றிய தீவிர விசாரரணையில் இறங்கியவருக்கு மூவருமே பால்யகாலச் சினேகிதிகள் என்பது தெரிய வந்தது.
அடுத்து அவர்களுக்கும் விதார்த்துக்குமான உறவை பற்றிய தேடலில் சாதனாவின் வங்கி லாக்கர் பற்றிய விவரம் கிடைக்க.. அதைக் குடைந்ததில் அங்கு இருந்த டைரியில் எழுதப்பட்டிருந்த தகவல்கள் இந்த வழக்கிற்கான முக்கிய முடிச்சை அவிழ்த்தது.
அதாவது சாதனா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த போது அப்போது பிரபலமாக இருந்த திருமணமான கதாநாயகனோடு உண்டான தொடர்பில் கருவுற்றதும் அதைக் கலைக்கும் நிலையை எல்லாம் கடந்து விட்டப்படியால் யாருமறியாமல் தன் உயிர் தோழியான சார்மிளாவின் உதவியோடு அதை ஈன்று தன் மற்றொரு தோழியின் மூலம் அவருக்குத் தெரிந்தவர்களுக்குக் குழந்தையைத் தத்து கொடுத்த விவரமும் தெரிய வந்ததில் கொலைக்கான காரணம் ஆனந்தக்கண்ணனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
சாதனாவின் மகனாக அனைத்து வசதிகளோடும் பிறந்து வளர வேண்டிய தன்னை இப்படி யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து வளர்த்து ஐந்துக்கும் பத்துக்கும் கையேந்தும் நிலைக்கு ஆளாக்கிய மூவரின் மீதும் உண்டான வன்மமே இந்தத் தொடர் கொலைகளுக்கான காரணம் என நிரூபித்து விதார்த்துக்கு இரட்டை ஆயுள்த்தண்டனையை வாங்கிக் கொடுத்தார் ஆனந்தக்கண்ணன்.
ஒருவாறாக ‘இத்தனை வருடங்களாகக் கட்டி காப்பாற்றிய பெயர் எங்கே இந்த இறுதி வழக்கில் கெட்டுவிடுமோ..!’ என்ற பதட்டத்தில் உள்ளுக்குள்ளேயே நடுங்கி கொண்டிருந்தவர் இந்த வழக்கையும் வெற்றிகரமாகத் தான் ஓய்வுப்பெறுவதற்குள்ளேயே முடித்துத் தன் வாழ்நாளில் ஒரு வழக்கும் கண்டுப்பிடிக்க முடியாமல் போனதில்லை என்ற கர்வத்தோடு ஓய்வு உபசார விழாவை முடித்துக் கொண்டு வந்து வீட்டில் அமர்ந்திருக்க.. மீண்டும் அதே போன்ற ஒரு கடிதத்தோடு வந்து நின்றிருந்தான் வேலையாள்.
இதை யோசனையாகப் பார்த்தவர் அதை வாங்கி வேகமாகப் பிரிக்க, அதிலும் ஒட்டி வெட்டப்பட்ட வார்த்தைகள் சொன்ன செய்தியை படித்துச் செய்வதறியாது திகைத்தார் ஆனந்தக்கண்ணன்.
அதில் “பர்பெக்ட் மர்டர்ன்றது நீங்க நினைக்கறது போல மாட்டிக்காம கொலை செய்யறது இல்லை மிஸ்டர் இன்ஸ்பெக்டர்.. மற்றவனை மாட்டிவிடச் செய்யறது..” என்று கேலி செய்து சிரிக்கும் ஒரு ஸ்மைலி ஒட்டப்பட்டு இருந்தது.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
#51
78,840
8,840
: 70,000
185
4.8 (185 )
telepathi333
aadharshg.k
வாழ்த்துகிறேன்... தாங்களும் எனது கதையை படித்து ரேட்டிங் செய்ய வேண்டுகிறேன் ✒ஆதர்ஷ்ஜி திருநெல்வேலி 〰 〰 〰 〰 〰 https://notionpress.com/ta/story/ssc/22752/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF#.Ysm14rMw5FA.whatsapp
sugan.lakshna
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50