JUNE 10th - JULY 10th
வினித்
2 நிமிஷம் பேசணும்னு சொல்லி, சவிதா கிட்ட பர்மிஷன் கேட்டு ஒரு வாரம் ஆச்சு.
“சாரி பா. குழந்தை தூங்கும் போது தான் நானும் ரெஸ்ட் எடுக்க முடியுது. பயங்கரமா தூக்கம் சொக்குது. நாளைக்கு பேசலாமா? ப்ளீஸ்.”
“பாப்பாவுக்கு தடுப்பூசி போட்டு பயங்கர ஃபீவர். 105 டிகிரி காட்டுது. தூக்கிட்டே நடந்தா மட்டும் தான் தூங்குறா.”
“தொட்டில்ல போடுற பங்க்ஷன் பத்தி அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கேன். நீயும் வந்து உட்காரேன்”
அவ ஒவ்வொரு வாட்டியும் வேற வேற காரணம் சொல்ல, நான் பயந்த மாதிரியே அவ என்ன விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகி, தூரமா போயிட்டு இருக்காளோன்னு தோணுச்சு.
அடி வயித்துல.ஒரு பெரிய பிரளயம் உருவாகி, வெடிக்க தயாராகிட்டே இருக்குற மாதிரி இருந்துச்சு.
அப்படி என்ன பெருசா கேட்டுட்டேன்? அவ மடில படுத்து, அவ ஏன் தலையைக் கோதி, நெத்தியில முத்தம் கொடுத்து, “ஒன்னும் கவலைப்படாதடா கண்ணா. எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட்” னு சொல்ற ஒரு அம்மாவோட அரவணைப்புத் தானே, அவள பார்த்த நாள்ல இருந்து அவ கிட்ட எதிர்பாக்குறேன்.
இதுக்குத்தான் முதல்லயே சொன்னேன். “எப்பவுமே எனக்கு நான். உனக்கு நீ’ன்னு இருந்துடலாம். நமக்கு நடுவுல குழந்தை எல்லாம் வேணாம். கல்யாணத்துக்கு முன்னாடியே நான் கருத்தடை பண்ணிக்கிறேன்” னு. கேட்டாளா அவ?
தாய்ப் பாசத்துக்காக ஏங்கிட்டே, என்னோட வாழ்க்கை முடிஞ்சி போயிருக்கும். நடுவுல தேவதை மாதிரி வந்து, மூச்சுத்திணற அளவுக்கு பாசத்த பொழிஞ்சுட்டு, இப்ப கொஞ்சம் கொஞ்சமா, உருவி திரும்ப எடுத்துக்கிறேன்னு சொன்னா எப்படி?
சவிதா
வினி கூட ஒரு வாரமா டைம் ஸ்பென்ட் பண்ண முடியாம, எனக்கு கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனா அது வெறுப்பாகி, கொஞ்சம் கொஞ்சமா கொழந்தைமேல கோவமா மாறுறத பாத்தப்பவும், எனக்கு பெருசா அதிர்ச்சியா தெரியல.
இவன தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னப்ப, இவனோட அதீத பொசசிவ்னஸ் அப்பாவுக்குத்தான் முதல்ல புரிஞ்சுது. கொஞ்சம் மிரண்டுதான் போயிட்டாரு. அவர சமாதானப்படுத்தறதுக்குள்ள தான் போதும் போதும்னு ஆயிடுச்சு.
“இம்ப்ரெஸ் பண்றதுக்காக, பொண்ணுங்கள கைல வச்சு தாங்குறா மாதிரி பசங்க ஆரம்பத்துல நடிப்பாங்க. ஆனா கடைசி காலத்துலயும் என்னை கண்டிப்பா கைல வச்சி தாங்க போறவன் தான் பா வினித். அப்படி ஒருத்தன என் வாழ்க்கையில சந்திச்சத்துக்கு, நான் தான் பா ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்.”
“இல்லம்மா. நான் என்ன சொல்ல வர்றேன்னா!”
“உங்க கவலை என்னன்னு எனக்கு நல்லாவே தெரியுதுப்பா. பாசத்துக்காக ஏங்கற அவனுக்கு, சுத்தியும் பாசத்த பொழியிற மக்கள்’ள உருவாக்கிட்டா? நாளடைவுல அவனோட பொசசிவ்னஸ் கம்மி ஆயிடும் பா. நான் பாதுக்குறேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.” னு சொன்னப்புறமும், கொஞ்சம் கவலையோட தான், கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாரு.
ஆனா கடந்த ரெண்டு வருஷத்துல, வினி கொஞ்சம் கொஞ்சமா சோசியலா மாறுனதுல அப்பாவுக்கு சந்தோஷம் தான். மறுபடியும் கொழந்த பொறந்ததுல இருந்து தான், அவனுக்கு திரும்பவும் ஏக்கம் ஜாஸ்தி ஆயிடுச்சு.
மனசளவுல, நான் முதல் முதல்ல பார்த்த அதே குழந்தையாத்தான் வினி இன்னும் இருக்கான். கூட பொறந்தவங்களா இருந்தாலும், சின்ன வயசுல தாய் பாசத்த ஷேர் பண்ண முடியாம, நம்ம எல்லாரும் கோவப்படுறது இல்லையா?
ஞாயித்துக் கிழமை எப்படியாவது அவனுக்கு டைம் உருவாக்கி பேசிடனும்.
வினித்
ஒருவழியா சவிதா கிட்ட பேசுனதுக்கு அப்புறம்தான், மனசு தெளிவாச்சு. என் கையை இருக்கமா புடிச்சு கூட்டிட்டு போய், குழந்தையோட தொட்டிலுக்கு பக்கத்துல உக்கார வச்சிட்டு, அவ தூரமா போய் நின்னுகிட்டா.
முதல் முறையா கொழந்தைய உன்னிப்பா கவனிச்சேன், கால பலமா எட்டி உதைச்சிக்கிட்டு, இங்க ஒரு ஆள் இருக்கேன்றத கூட கவனிக்காம, தலைகீழ எக்கி, கழுத்து வலிக்க தன் அம்மாவ தேட ஆரம்பிச்சது அது.
கொஞ்சம் தயக்கத்தோட, என்னோட ஒரு விரலால குழந்தையோட விரல்களை தடவி கொடுத்தேன். டப்புனு அந்த ஒரு விரலை இறுக்கமா புடிச்சுகிச்சு குழந்தை. சவிதா கொஞ்சம் முன்னாடி சொன்னது தான் ஞாபகம் வந்துச்சு.
"உன்னோட ஏக்கத்தை புரிஞ்சுகிட்டு, கடவுள் தான் உனக்கு இன்னொரு அம்மாவா, இந்த தேவதையை அனுப்பி வச்சிருக்கார். என்ன விட, உன் மேல எவ்வளவு பாசத்த அவ பொழியப் போறான்னு நீ பார்க்க தான போற"
இன்னமும் என்னோட விரலை இறுக்கமா புடிச்சுட்டு இருந்த குழந்தை, இப்பதான் தலைய கீழ இறக்கி என்ன முதல்முறையா கவனிச்சுது. பொக்க வாயோட லைட்டா சிரிக்க ஆரம்பிச்சு, திடீர்னு உற்சாகம் பொங்க கைய தட்டுற மாதிரி ரெண்டு கையையும் பலமா ஆட்டி சத்தமா சிரிக்க ஆரம்பிச்சது. எனக்கு உடம்பு பூரா சில்லுனு ஆயிடுச்சு.
என்னோட தலைய மென்மையா கோதி விட்டப்புறந்தான், சவிதா அவ்வளவையும் கவனிச்சிட்டு இருந்திருக்கான்ற ஞாபகமே எனக்கு வந்தது. குனிஞ்சு என் நெத்தியில அவ முத்தம் கொடுக்க, வெள்ளம் போல கண்ணுல கண்ணீர் பெருக ஆரம்பிச்சது.
சவிதா
வினி'க்கும், குழந்தைக்குமான பாண்டிங் ஸ்ட்ராங் ஆனதுல எனக்கு அளவு கடந்த சந்தோஷம்.
தினமும் ஆபீஸ்ல இருந்து வந்த உடனே, அவனோட சத்தங்களை வச்சே குழந்தை அவனை தேட ஆரம்பிச்சா. அவனோட ஷூ சத்தம், வண்டி சத்தம், அவனோட போன் ரிங்க்டோன் எல்லாமே அவளுக்கு தனியா தெரிஞ்சது.
அவனும் குளிச்சிட்டு வந்து அவ பக்கத்துல ஒக்காந்தா'ன்னா, ஒரு மணி நேரம் கழிச்சும் எழுந்திருக்கிறதே இல்ல. அவளுக்காக பாட்டு பாடறது, அவ கைல பலூன் கட்டி அவள விளையாட விடுறது'ன்னு ஒரே அமர்க்களம் தான், நைட்டு சாப்பிடுறதுக்கு கூட அவனை வலுக்கட்டாயமா இழுத்துட்டு வந்தா தான் உண்டு.
சின்ன குழந்தையா, அவ மோஷன் போறதுக்கு கஷ்டப்படும்போது, அவளுக்கு வயித்துல முதுகுல எல்லாம் தடவி கொடுத்து, "ஒன்னும் இல்லடா கண்ணா. அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு. அவ்வளவுதான்" ன்னு கண்ணீரோட குழந்தையோட வலிய தன் வலியா நினைச்சு அவன் தவிக்குறத பார்த்து எனக்கும் கண்ணுல தண்ணி வந்துடுச்சு.
அதே மாதிரி தான் கவுந்து படுக்க குழந்தை முயற்சி பண்ணி, முடியாம அழும்போது எல்லாம், இவனும் கூட சேர்ந்து அழுது. அடாடா! பாசத்த மட்டும் காட்ட ஆரம்பிச்சுட்டான்னா, வினி ஒரு அரக்கன் தான்.
கொஞ்சம் கொஞ்சமா அவ மழலை மொழியில பேச ஆரம்பிக்க, அத ரெக்கார்ட் பண்ணி ஒவ்வொரு நாளும் போன்ல புது ரிங்டோனா, பாக்குறவங்க எல்லாருக்கும் போட்டு காமிச்சு, அதன் மூலமா திரும்பத் திரும்ப கேட்டு ஒரே உற்சாக மழையில நனைஞ்சான் வினி.
குழந்தையை குளிப்பாட்டுறது உட்பட, நிறைய விஷயங்களை அவனே பண்ண ஆரம்பிக்க, எனக்கு கொஞ்சம் நல்ல தைரியம் வந்து, ஒன்பதாவது மாசமே வேலைக்கு கொஞ்சம் கொஞ்சமா திரும்பி போக ஆரம்பிச்சேன்.
வினித்
"எதுக்குப்பா குழந்தையை பாத்துக்குறதுக்கு ஒரு தனி ஆளு? நீ வேணும்னா இன்னும் ஒரு ஆறு மாசம் மெட்டனிட்டி பிரேக் எடுத்துட்டு அப்புறம் ஜாயின் பண்ணேன்"
"இல்ல வினி. எந்த பீல்டுலையுமே நாலேட்ஜ் அப்கிரேட் பண்ணலன்னா, அப்புறம் எல்லாமே வேஸ்ட்டா போயிடும். வொர்க் ஃப்ரம் ஹோம்ல, நான் நெனச்சா மாதிரி குழந்தையை தனியா பார்த்துக்க முடியல. ஒரு ஒத்தாசைக்கு தான் ஆள் போட்டுக்கிறமே தவிர, நான் புல்லாவே வீட்ல இருந்து தான் வேலை செய்யப் போறேன், குழந்தை கூடவே தான் இருக்க போறேன். அதனால பெருசா கவலைப்படாத,"
"என்னவோ பா. எனக்கு மனசு கேட்க மாட்டேங்குது. நீ வேலை பார்த்துகிட்டே, குழந்தையை பாத்துக்குறது கஷ்டம் தான். ஆனா ஒன்ஸ் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேனா, பழையபடி உன் ஸ்ட்ரெஸ் லெவல் ஜாஸ்தி ஆயிடும், அது உனக்கும் நல்லது இல்ல, குழந்தைக்கும் நல்லது இல்ல."
"எக்ஸாக்ட்லி. அதனாலதான் பகலில் மட்டும் வீட்டுக்கு ஒரு ஆள் வச்சுக்கிறது ரொம்ப உதவியா இருக்கும்."
எனக்கு வேற எப்படி அவள கன்வின்ஸ் பண்றதுன்னு தெரியல.
"நான் வேணும்னா வேலையை ரிசைன் பண்ணிடவா? ஒரு ஆறு மாசம் கழிச்சு, வீட்ல இருந்து வேலை செய்ற மாதிரி ஜாப் தேடுறேன். என்ன சொல்ற?"
என்றதற்கு என்னை முறைத்தாள்.
"நடக்கிற கதையா பேசு வினி." என்று என்னை உதாசீனப்படுத்தி அவளது முடிவை என் மேல் திணித்தது, எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.
ஏதாவது தப்பா நடக்க போகுதுன்னா, என்னோட உன் மனசு ஏதோ ஒரு விதத்துல அதை செய்ய விடாம, என்னை முன்னாடியே அலர்ட் பண்ணும். சவிதா எடுத்த இந்த முடிவும் அப்படிப்பட்ட ஒண்ணு தான்.
கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு வொர்க் ஸ்ட்ரெஸ் அதிகமாச்சு. சாயந்திரத்துல அவங்க அம்மாவும் வந்து, அவளுக்கும் குழந்தைக்கும் உதவி பண்ண ஆரம்பிச்சாங்க. சில நாள் நைட் லேட்டாக, அவங்க அம்மா நைட் ரெகுலரா தங்க ஆரம்பிச்சாங்க.
குழந்தை அவங்க அம்மா கிட்டயும், வேலைக்கார அம்மாகிட்டயும் பயங்கரமா ஓட்ட ஆரம்பிச்சது. என்கிட்ட இருந்து அதுவும் திரும்ப விலக ஆரம்பிச்சது. அதுவும் இந்த வேலைக்கார அம்மா, என்ன மாய மந்திரம் போட்டாங்கன்னு தெரியல. அவங்க வீட்டில இருந்தா, குழந்தை வேற யார்கிட்டயும் வர்றது இல்ல. அப்படியே என்கிட்ட எப்பயாவது விளையாடுற குழந்தை, லைட்டா சிணுங்க ஆரம்பிச்சா, உடனே வந்து அவங்க தூக்கிக்கிட்டாங்க.
நான் ஆபீசுக்கு கிளம்பும்போது, குழந்தைக்கு முத்தம் கொடுத்துட்டு கிளம்புறதும், திரும்பி வரும்போது குழந்தை எனக்காக வாசல் காத்துட்டு இருக்கிறத பார்க்கிறதுக்கும் அவ்வளவு சந்தோஷமா இருக்கும். குழந்தை கூட விளையாடிட்டு, பாட்டு பாடிட்டே தூங்குற அந்த சந்தோஷமும் கொஞ்சம் கொஞ்சமா காணாம போச்சு.
இது எல்லாத்துனாலயும், அந்த வேலைக்கார அம்மாவ எனக்கு சுத்தமா பிடிக்காம போயிடுச்சு. அவங்கள பார்த்தாவே எரிஞ்சு விழ ஆரம்பிச்சேன், அப்படியாவது கடுப்பாகி வேலைய விட்டு போறாங்களான்னு பார்த்தா, ம்ஊம். அசையுற மாதிரியே தெரியல.
இந்த பக்கம், பொண்ணோட உடம்பு தேத்துறேன்னு சவிதாவோட அம்மா வேற பயங்கர டார்ச்சர். இது தற்காலிகம் தான், பொறுமையா இருன்னு ஒரு பக்கம் மனசு சொல்லுச்சு. ஆனா மனசு எது நினைக்க கூடாதுன்னு, இவ்ளோ நாள் வைராக்கியமா இருந்தேனோ - அந்த கசக்குற பழைய நினைவுகள் மனசு பூரா ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுது.
ஆசிரமத்துல என்ன போட்டு அடிச்ச அந்த வார்டன், “டேய் தொம்ம. நீ.வாழ்க்கைல கடைசி வரைக்கும் அனாதை தாண்டா.”
நினைச்சு நினைச்சு, தினமும் அழுத நாட்கள். “அம்மா. நீ எங்கம்மா இருக்க? ஏம்மா என்ன இப்படி தனியா விட்டுட்டு போன? என்னை எப்படியாவது இங்கிருந்து கூட்டிட்டு போயிடும்மா”
பீச்ல பசங்களுக்கு ஐ’ஸ்க்ரீம் ஊட்டி விடுற அம்மா, வீட்டு வேலைக்கு போன இடத்துல உடம்பு முடியாத பையன பாத்து துடிச்சு போறா அம்மா, பையன போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிட்டாங்கன்னு போலீஸ் கிட்டயே சண்டை போடுற அம்மா, இப்படி எங்களை சுத்தி பாச மழையை பொழியிற எவ்வளவு நல்லா அம்மாக்கள். எல்லாத்தையும் என் கூடயே ஏக்கமா பாத்த நண்பன் முத்து.
“இந்த ஜென்மத்துல நமக்கு இந்த கொடுப்பன எல்லாம் இல்லடா. சீக்கிரமா செத்துப்போய், அடுத்த ஜென்மத்துலயாவது கூடவே வச்சுக்கப் போற அம்மா கிட்ட போய் பொறக்கணும்.”
சவிதாவோட புன்னகை முகம் திரும்பவும் ஞாபகத்துக்கு வர, எனக்கு கோபமும் வெறியும் தான் ஜாஸ்தியாச்சு.
“ ஆமா. நான் கடைசி வரைக்கும் அநாதை தான். அநாதை தான்.” னு பக்கத்துல இருக்குற கண்ணாடி அலமாறிய குத்தி உடைச்சத்துல கையெல்லாம் ரத்தம்.
சவிதா
வீடியோ கால் முடிச்சதுக்கு அப்புறம்தான், குழந்தை ரொம்ப நேரமா அழுவுறா’ன்னு புரிஞ்சுது.
“ வசந்தா மா. குழந்தை ரொம்ப நேரமா அழுவுறா. என்னன்னு பாக்கலையா?”ன்னு கேட்டுட்டே வெளியே வந்து பார்த்தா, கைல வழியிற ரத்தத்தோட வினித். அவன் கைல குழந்தை. கதவோரமா நின்னுட்டு என்ன பண்றதுன்னு முழிச்சிட்டு இருந்த வேலைக்கார அம்மா வசந்தா.
வினித், “ஏன்? நாங்க எல்லாம் குழந்தைய பாத்துக்க மாட்டோமா சவிதா? எல்லாத்துக்கும் அவங்களையே கூப்பிடுற.?”
“ சரி அத விடு. கையில என்ன ரத்தம்? இரு பாண்டேஜ் எடுத்துட்டு வரேன்.”
“ ஒரு மாசமா இருக்கேனா, சாப்டேனான்னு கேக்கல. இப்ப என்ன திடீர்னு பாசம்?”
அவன் இப்ப என்ன மூடுல இருக்கான்னு புரிஞ்சுது. வேலை டென்ஷன்ல நானும் கவனிக்காம விட்டுட்டேன். தனியா பேசுனா தான் அவன் சரிப்பட்டு வருவான்.
வேலைக்கார அம்மாவை திரும்பி பார்த்தேன்.
“நான் பாத்துக்கறேன். நீங்க போய் கிச்சன்ல வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க.” ன்னு சொன்னதும், அவங்க தயங்கிட்டே உள்ள போனாங்க.
“ குழந்தைய கூட்டிட்டு ரூமுக்குள்ள வா வினி பேசலாம்.” னு சொல்லிட்டு நான் ரூம நோக்கி நடந்தேன். திரும்பி பாத்தா அவன்.அதே எடத்துல உட்காந்துட்டு இருந்தான். குழந்தை பயங்கரமா வீரிட்டு அழ ஆரம்பிச்சு இருந்தது. அவன் ரெகுலரா பாடுற பாட்டு எல்லாம் பாடி குழந்தைய சமாதானம் பண்ண முயற்சி பண்ணிட்டு இருந்தான்.
ஆனா வழக்கமா பாடுற பாசம் அந்த பாட்டுல தெரியல. எதோ மூர்க்கத்தனமா குழந்தையோட அழுகைய நிறுத்த, ஏதோ வெறித்தனமா பாடிட்டு இருந்தான். பாக்குறதுக்கு ரொம்ப.வித்தியாசமா தெரிஞ்சான். கொஞ்சம் பயமாவும் இருந்தது.
"குழந்தையை நான் கொஞ்சம் சமாதானம் பண்ணிட்டு உன்கிட்ட திரும்ப கொடுக்கவா?" ன்னு மெதுவா பேசிகிட்டே அவன் பக்கத்துல போனேன்.
திடுதிப்புன்னு சேர்ல இருந்து எழுந்துக்கிட்டான். குழந்தையை இறுக்கமா புடிச்சுகிட்டு,
"இனிமே இவதான் எனக்கு எல்லாமே'ன்னு நீதான சொன்ன. அப்புறம் நீயே பிடுங்க பாக்குற? அவள எப்படி சமாதானப்படுத்துறது'ன்னு எனக்கு தெரியும்."
நான் அவனை நோக்கி அடிமேல் அடி வைக்க, அவனும் கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு தூரமா நடந்துட்டே பேசினான். குழந்தையோட கைக்குள்ள தன்னோட ஒரு விரலை அவனே நுழைச்சிக்கிட்டு,
"இந்த பேபி. டைட்டா புடி. டைட்டா புடி" னு திரும்ப மூர்க்கத்தனமா குழந்தையை சமாதானம் பண்ண ட்ரை பண்ணான். எனக்கு வயித்துல புளியைக் கரைக்க, நான்அமைதியா நின்னேன்.
ஆனா அவன் தொடர்ந்து பால்கனி டோரையும் திறந்து கிட்டு வெளியே போனான். குழந்தை இன்னும் பயங்கர சத்தத்தோட அழுவ ஆரம்பிச்சது. பயத்துல விக்க ஆரம்பிச்சுது. நான் கதவோரமா நின்னு, எட்டி மட்டும் பார்த்தேன்.
"ஏன் நீயும் நான் சொல்றத கேட்கவே மாட்டேங்குற? என் கூடவே இருக்க மாட்டேங்குற?"ன்னு குழந்தை கிட்ட கத்திட்டு இருந்தான்.
நான் பால்கனி வாசல்ல உள்ள நுழைய, அவன் குழந்தையோட இன்னும் சுவுர் ஓரத்துக்கு போனான்.
"வினி. என் செல்லம் இல்ல. குழந்தையை என்கிட்ட கொடுத்துடு. நம்ம ஒக்காந்து பேசலாம். ஒன்னும் பிரச்சனை இல்ல. கவலைப்படாதே" னு சொல்லிட்டு குழந்தையை வாங்குறதற்காக கையை நீட்ட,
கொஞ்சம் யோசிச்சுட்டு, குழந்தையை என்கிட்ட கொடுக்க வந்தவன், திடீர்னு திரும்ப அவன் நெஞ்சோட அணைச்சுக்கிட்டான். தலைய லைட்டா ஆட்டிகிட்டே.
"இல்ல. இல்ல. முத்து சொன்னது தான் கரெக்ட். இந்த ஜென்மத்துல எனக்கு அம்மா கிடைக்கப் போறது இல்ல. நீ போயிட்டு, அடுத்த ஜென்மத்துலயாவது நல்ல அம்மாவா திரும்பி வா" னு டக்குனு பால்கனி வழியா குழந்தைய வெளியே தூக்கி வீசிட்டான்.
ஒரு நொடியில, என்ன நடந்துச்சுன்னு புரியறதுக்குள்ள எல்லாம் நடந்துருச்சு. நான் அப்படியே அதிர்ச்சியில உரைஞ்சு போயிட்டேன்.
அவன் தான் பால்கனி வழியா கீழ எட்டிப் பார்த்து, ஓலம் விடுற குரல்ல கோரமா அழ ஆரம்பிச்சான்.
மேலும் அதிர்ச்சியாகி, நான் அப்படியே கீழ சரிஞ்சேன். கட்டிலோட கால்ல தல பலமா முட்டனதுக்கு அப்புறமும், எனக்கு உணர்ச்சியே தெரியல.
கிச்சனுக்குள்ள இருந்து ஓடி வந்த வேலைக்கார அம்மா, பால்கனி வழியா எட்டி பாத்துட்டு, அவளும் நெஞ்சில அடிச்சுக்கிட்டு அழ ஆரம்பிச்சா.
கொஞ்சம் கொஞ்சமா அப்பார்ட்மெண்ட் ஜனங்கள் வீட்டுக்குள்ள வர, ஆம்புலன்ஸ் சத்தம், போலீஸ் கூட சேர்ந்து அம்மா அப்பாவும் உள்ள வர, எல்லாமே யாருக்கோ நடக்கிற கனவு மாதிரி எனக்கு கலங்கல் ஆயிட்டே போய், கடைசியா எனக்கு முழுசா இருட்டு ஆயிடுச்சு.
மூன்று மாசத்திற்கு பின்
"மேடம். நான் சொல்றது கேக்குதா? மேடம்"
திருதிருன்னு முழிச்சு, சுத்தியும் பார்த்தேன்.
கோர்ட் வளாகம். எதிர்ல, குற்றவாளி கூண்டுல வினித்.
பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்து இருந்த அப்பா அம்மாவை திரும்பிப் பார்த்தேன்.
அம்மாவோட குரல், "நீ இருக்கிற மனநிலைமையில சாட்சி சொல்ல வர முடியாதுன்னு பல தடவை சொல்லிட்டோம். நீதான் ஒரே நேரடி சாட்சியின்'றதால கூப்பிட்டுகிட்டே இருக்காங்க. போய் மனசுக்கு தோன்றத சொல்லிட்டு வந்துரு மா"
நிமிர்ந்து வினித்தை பார்த்தேன். தலை குனிந்தபடியே இருந்தான். என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
கடந்த மூணு மாசமா, நான் அனுபவிச்ச நரக வேதனையில, இன்னமும் கோவம் தான் மேலோங்கி இருந்துச்சு.
மயக்கம் தெளிஞ்சு திரும்பி வந்தப்புறம், கை வலிக்க வலிக்க நான் வினித்த போட்டு அடிக்க, வேலைக்கார அம்மா நடந்ததை விவரிக்க, போலீஸ் வந்து அவனை புடிக்குறதுக்குள்ள, மத்தவங்களும் அவனை அடிச்சு துவைச்சிட்டாங்க.
எவ்வளவு வற்புறுத்தியும், மன்னிப்பு கேட்க வந்த வினித்தை பார்க்க எனக்கு பிடிக்கல. அப்பாவோட தோட்டத்திலேயே குழந்தையை புதைச்சோம். ரூமுக்குள்ளேயே அடங்கி, அழுது அழுது கண்ணெல்லாம் வீங்கி, மாச கணக்குல வெளி உலகத்த பாக்காம அப்படியே கிடந்தேன்.
"ஜூலை 29ஆம் தேதி, உங்களுக்கும் உங்க கணவருக்கும் என்ன வாக்குவாதம்?. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு, கொஞ்சம் விவரமா சொல்றீங்களா?"
என்னோட எண்ண ஓட்டத்தை, தடை பண்ணிய வக்கீலை நிமிர்ந்து பார்த்தேன். எந்த பதிலும் சொல்ல தோணல.
"உங்க வீட்டுக்காரர் தான் உங்க குழந்தையை கொன்னுட்டாருன்னு போலீஸ்ல வழக்கு பதிவு செஞ்சிருக்காங்க. அவரா அவருக்கு எந்த வக்கீலும் ஏற்பாடு பண்ணிக்கல. கோர்ட் தான் உங்க கணவருக்கு வக்கீலா என்ன நியமிச்சு இருக்காங்க. இந்த வழக்குல உங்களோட சாட்சி தான் ரொம்ப முக்கியமானது. கொஞ்சம் தயவு செஞ்சு என்ன நடந்துச்சுன்னு விவரமா சொல்றீங்களா?"
நான் அவர வெறுமையா பார்த்தேன். அப்புறம் தலை குனிஞ்சு, பொறுமையா பேச ஆரம்பிச்சேன்.
"குழந்தையை வளர்க்கிறது பத்தி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வாக்குவாதம் நடந்துச்சு. அதனால, அவரு கையில இருந்த குழந்தையை நான் பிடுங்க பார்த்தேன். இரண்டு பேரும் மாத்தி மாத்தி இழுக்க, குழந்தை கைத்தவறி மாடியில இருந்து கீழே விழுந்துருச்சு."
சொன்ன பதிலால, அந்த வக்கீல் முதல்ல ஆச்சரியம் ஆனார். சுதாரிச்சுக்கிட்டு, திரும்ப கேட்டார்.
"சோ. இது ஒரு விபத்து தான்'னு நீங்க ஒத்துக்கிறீங்களா?"
"ஆமா"
கோர்ட்டில் இப்போது சலசலப்பு கேட்டுது. என்னோட அப்பா எழுந்து என்கிட்ட வர பார்க்க, போலீஸ் அவரை தடுத்தாங்க. நானும் அவரை பாக்குறத தவிர்த்தேன்.
வக்கீல் திரும்பவும் விடாம, "அப்ப சம்பவம் நடந்த, அடுத்த நாள் உங்க கணவரை போட்டு ஏன் அப்படி அடிச்சீங்க?"
"வாக்குவாதத்த ஆரம்பிச்சதால அவரு மேல கோபம். குழந்தை இறந்துடுச்சுன்னு, என் மேலேயே எனக்கு கோபம் வேற. சேர்த்து வச்சு, அவரு மேல ஏறிட்டேன்."
"தட்ஸ் ஆல் யுவர் ஆனர்" னு அந்த வக்கீல் முடிச்சுகிட்டாரு.
அடுத்து கேட்ட பப்ளிக் ப்ராசிகியூட்ட'ருக்கும் அதே பதில சொல்லிட்டு, நான் கூண்ட விட்டு இறங்கினேன். வினித்தை திரும்பி கூட பாக்காம, கோர்ட்டை விட்டு வெளியே நடக்க ஆரம்பிச்சேன். வாசல் தாண்டி ஒதுக்குப்புறமா வந்ததுக்கப்புறம், அடக்கி வச்சிருந்த அழுகை எல்லாம் பீறிட்டு சத்தமா வெளி வர ஆரம்பிச்சது.
—------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோர்ட் வாசல்ல இருந்த அந்த மரத்தடியில் அம்மா, அப்பா மற்றும் நான்.
அம்மா என்னோட தலையை மென்மையா வருடி கொடுத்துட்டு, அமைதியா இருந்தாங்க.
"உலக மகா சைக்கோ மா அவன். எதுக்கு மா அவன தண்டனை'யிலிருந்து தப்பிக்க விட்ட?"
நான் பெருமூச்சு விட்டுட்டு, அவரையும் அதே வெறுமையோடு பாத்தேன் “எது அவனுக்கு தண்டனை’ன்றது தாம்பா கேள்வி? இந்த தப்புக்கு.ஜெயில்’ல அவன் அனுபவிக்க போறதா? இல்ல ஒரு பிஞ்சு குழந்தைய கொன்னுட்டமேன்னு வாழ்க்க பூரா வருத்தப்பட போறதா?”
அப்பா அமைதியாக இருந்தார்.
“அப்படி குழந்தைய நினைச்சு வருத்தப்படுறவனுக்கு, ஒரு தாயால மட்டும்தான் அவனோட பொசசிவ்னஸ் தப்புன்னு புரிய வைக்க முடியும். என்ன? துரதிருஷ்ட வசமா என் விஷயத்துல அந்த தாயாவும் நானே இருக்க வேண்டி இருக்கு, இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்து, ஒரு தாயாவே அவனுக்கு தகப்பனோட அருமையையும், புரிய வைக்க வேண்டி இருக்கு.”
என் பதிலில் எரிச்சலாகி அவர் வேறு பக்கம் திரும்பி கொண்டார். இன்னமும் தலையை வருடிக் கொண்டே இருந்த அம்மா,
"என்னமோ மா. இந்த சைக்கோவை போய் திருத்துறேன்னு, உன் வாழ்க்கையையும் அழிச்சிக்கிட்டு, எனக்கும் இது எதுவுமே பிடிக்கல மா"
“இது அவனுக்கு ஒரு அக்னி பரீட்சை தான். அதுல ஜெயிச்சு அவன் என்கிட்ட திரும்ப வரத்துக்கு என்னிக்குமே ஒரு ஜெயில் கம்பி தடையா இருந்திட கூடாதுமா. அவ்வளவு தான் நான் சொல்றது. திருந்தி வந்தா வரட்டும். இல்ல குற்ற உணர்ச்சியிலேயே சாகட்டும்”
தீர்மானமா சொன்ன என்னை, ரெண்டு பேருமே ஆச்சரியமா பார்த்தாங்க. நான் அமைதியா எழுந்து காரை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன்.
—------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#491
45,500
500
: 45,000
10
5 (10 )
karthick.muc
Nice
premchand1989
vijiram233
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50