ஒரு நாள் இரவு

த்ரில்லர்
4 out of 5 (3 Ratings)
Share this story

மணி இரவு 9. 50. நைட் சிப்ட் பார்க்க வந்த பி.சி உள்ளே வர, ஸ்டேசனில் சப் இன்ஸ்பெக்டர் வேலு வீட்டிற்கு கிளம்ப தயாராக இருந்தார்.

மனதில் இருந்த பதற்றம் உடம்பில் தெரிய, பெரும் பயத்தோடு நடுங்கிக்கொண்டு கையில் ஒரு மஞ்சப்பை உடன் தயங்கி தயங்கி ஸ்டேஷன் உள்ளே நடந்து வந்தார் ஒரு பெரியவர். உள்ளே வந்ததும் நடந்து வந்து கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் வேலு

"அய்யா டைம் ஆயிடுச்சு போயிட்டு காலைல வாங்க.. " என்றாலும் அவர் போகாமல்

"அய்யா.. அய்யா.. ய்யா.." என வாய்க்குள்ளேயே முணங்கி கொண்டு அவரிடம் ஏதோ ஒரு விசயத்தை கூற வந்தார்.

"பெரியவரே சொல்றது கேக்கலயா.. போய்ட்டு காலைல வாங்க.." காது கேட்காதவராக இருப்பார் என்று கொஞ்சம் சத்தத்தை அதிகப்படுத்தி கூற

"இல்லையா.. இப்பவே சொல்லனும்"

"இப்பவே சொல்லனுமா.. சரி வேகமா சொல்லுங்க எனக்கு டைம் ஆச்சு.. நான் கெளம்பனும்.." என்றதும்

"கொலை.. கொலை..." என மெது மெதுவாக வாய்க்குள்ளே முணங்கினார்.

"அய்யா.. சவுண்டா சொல்லுங்க ஒன்னும் கேக்கல.."

"கொலை கொலை.." என்று கொஞ்சம் சத்தத்தை அதிகப்படுத்தி கூற,

"கொலையா.. எங்க யாரு பண்ணா.." வேலு கேட்டதும் சிறிது மௌனத்திற்க்கு பின்னால்

"நான்தான்.. நான் தான்.. பண்ணேன்.. அதுக்கு தான் சரணடைய வந்திருக்கேன்.."

கொஞ்சம் கடுப்பாகிய வேலு "சரி வாங்க.." என்று வீட்டிற்கு கிளம்ப தயாராக இருந்தவர் அவருக்காக ஒரு நிமிடம் உட்கார்ந்தார்.

முன்னால் உள்ள நாற்காலியில் பெரியவர் உட்கார, அதற்கு எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்த வேலு

"சரி சொல்லுங்க.. யார கொன்னீங்க.. ஏன் கொன்னீங்க.."

"நான் ரோட்டுல நடந்து வந்துட்டு இருந்தேன். அப்போ தான் ஒருத்தன் என்ன தள்ளிவிட்டான்... அவன தான் கொன்னுட்டேன்.."

பொது இடத்தில் கொலை நடந்திருந்தால் மக்கள் கூட்டம் அதிகமாகிருக்கும் என்று உணர்ந்த வேலு

"என்னது ரோட்டுலயா.. டேமிட்.. சரி எந்திரிங்க.. வந்து எங்கன்னு காமிங்க.."

இருவரும் எழுந்து வெளியே நின்ற ஜீப்பில் உட்கார, நைட் சிப்ட் வந்த பி.சி வண்டியை ஓட்டினார்.

சில நிமிடங்களுக்கு பிறகு ஆள் நடமாட்டமே இல்லாத ரோட்டில் ஜீப் வந்து நின்றது. வேலுடன் இறங்கிய பெரியவர்

"இங்க இங்க தான் குத்திப்போட்டேன்.." என கூற, கொலை நடந்ததற்கான எந்த தடயமும் இல்லாமல் ரோடே காலியாக இருந்தது.

"என்னய்யா சொல்றீங்க.. இங்க கொலை நடந்ததா எந்த அடையாளமும் இல்லையே.."

"இல்லையா இல்ல.. இங்க தான் இங்க தான் அவன குத்தி போட்டேன்... நம்புங்கய்யா நெசமாத்தான் சொல்றேன்.."

"சரி.. குத்தி போட்டீங்கன்னா.. எங்க இங்க யாரும் இல்ல.."

"இல்லையா.. இங்க தான் இங்க தான்.." என்று திரும்ப திரும்ப அவர் ஒரே பதில்களையே கூறிக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் தலையை கையை வைத்து விட்டு யோசித்த வேலு, ஜீப்பில் உள்ளே இருந்த வாட்டர் பாட்டிலில் தண்ணியை எடுத்து குடித்தார். பின்னர் பெரியவர் அருகில் வந்து நின்று

"அய்யா.. என்ன நடந்தது.. எனக்கு ஒன்னும் புரியல.. விளக்கமா சொல்லுங்க.." கொஞ்சம் ஆக்ரோஷமாக கேட்க,

"சொல்றேன்யா சொல்றேன்.." என நடந்ததை கூறத் தொடங்கினார்.

"அய்யா என் பேரு கண்ணாயிரம். ஒரு பெரிய முதலாளி வீட்டுல கார் டிரைவரா வேலை பாக்குறேன். நாளைக்கு தான் என் பொண்ணுக்கு கல்யாணம்.. 25 வயசாகியும் கல்யாணம் ஆக இருந்தவளுக்கு கடைசியா ஒரு வரண் கிடைச்சது. நகை எதுவும் வேண்டாம் 5 லட்சம் பணம் மட்டும் கேட்டாங்க.. நானும் ஒரே பொண்ணுங்கறதால அப்டி இப்டி னு 4 லட்சம் ரெடி பண்ணிட்டேன். இன்னும் ஒரு லட்சம் மட்டும் எனக்கு கிடைக்கவே இல்ல.. எவ்ளோ காசு வேணாலும் கேளு நான் தாரேன்னு முதலாளி சொல்லிருந்தாரு. ஆனா நான் தான் முதலாளி மேல இருக்குற விஸ்வாசத்துல எதுவும் வேண்டாம்னு சொன்னேன். கடைசி நேரத்துல வேற வழியில்லாம முதலாளி கிட்ட கேக்கலாம்னு இப்போ வந்து கேட்டேன். அவரும் மறுபேச்சு பேசாம கேட்டதும் குடுத்தாரு.. அத வாங்கிட்டு தான் இந்த வழிய வர்றப்போ என் பின்னாலயே ஒருத்தன் என்னைய பின் தொடர்ந்தே வந்தான். திடீர்ன்னு என் முன்னால வந்து நின்னு கத்திய காட்டி மிரட்டி பணத்தை பிடிங்கிட்டு நடந்து போனான். இது கெடைக்கலனா என் பொண்ணு கல்யாணமே நடக்காது அதுனால தான் வேற வழி தெரியாம கீழே உடஞ்சு கிடைந்த கண்ணாடி பாட்டில்ல எடுத்து அவன் முதுகுல குத்திட்டேன். நான் குத்துனதும் பணத்தை கீழப் போட்டுட்டு அவனும் கீழ விழுந்துட்டான். பொழச்சுறுவான்னு நினைச்சு பாத்தேன்.. ஆன கடைசி வர அவன் எந்திக்கவே இல்ல.. அப்றம்மா மூக்குல கைய வச்சு பாத்தேன்.. அப்ப தான் தெரிஞ்சது அவன் இறந்துட்டான்னு.. என் பொண்ணு கல்யானம் நடக்கலனாலும் பரவாயில்ல.. அவன கொன்னது என் மனசுல உருத்திட்டே இருந்துச்சு.. அதான் நானே சரண் அடையலாம்ன்னு இங்க வந்துட்டேன்.."

பெரியவர் கூறி முடித்ததும் பெரு மூச்சு விட்டுவிட்டு சில நிமிடங்கள் அவரையே பார்த்தார் வேலு. இவர் சொல்வதை பார்த்தால் நடந்தது எல்லாம் உண்மையாகவே இருப்பது போல் அவனுக்கு தோன்றியது.

"நீங்க குத்தனதும் அவனுக்கு ரத்தம் எதும் வரலையா.."

"பாட்டில் ரொம்ப ஆழமா இறங்கிருச்சு போல.. ரத்தம் பெருசா வந்த மாதிரி தெரியல.."

"உங்க கிட்ட பணத்த புடுங்குறப்ப இங்க ஒரு ஆள் கூடவா இங்க இல்ல.."

"ஆமாய்யா.. யாருமே இல்ல.." அவர் சொன்னதும் சுற்றி பார்க்க ஆள் நடமாட்டம் இல்லாமலும் ஒரு CCTV கேமரா கூட இல்லாமலும் இருந்தது அந்த வீதி. எல்லாம் பக்காவாக யோசித்துவிட்டு தான் செய்திருக்கிறார்கள் என்று உணர்ந்தவன்

"மூச்சு வருதான்னு மட்டும் தான் பாத்தீங்களா.. நாடில வச்சு இல்ல நெஞ்சுல காத வச்சு எதுவும் பாக்கலயா.." என்று கேட்க

"இல்லைய்யா.. மூக்குல வச்சு மட்டும் தான் பாத்தேன்.. அவன் உடம்பு அசையாம இருந்ததால தான் அதையும் பாத்தேன்.." என்றதும் ஆழ்ந்து யோசித்த வேலு

ஒரு வேளை போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக மூச்சை அடக்கி இருந்து, பின்னால் இவர் சென்றதும் எதுவுமே இங்கு நடப்பது போல் மாற்றி இருக்கலாம் என ஒரு பக்கம் யோசிக்க, ஒரு வேளை இங்க கொலை எதுவும் நடக்காமல் இவரே வேற எதுவும் பிரச்சனைக்காக பொய்யா ஒரு கொலைய செட் பண்ணிருக்கலாமோ என இன்னொரு பக்கமும் மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் எதுவும் அவருக்கு சாதகமாக அமையாததால் "சரி.. வாங்க ஸ்டேஷன்க்கு போலாம்.." என இருவரும் ஜீப்பில் ஏறி ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள்.

தனி பலகையில் பெரியவர் உட்கார்ந்திருக்க, அறையின் உள்ளே நடந்து கொண்டே, பெரியவர் சொன்னதை தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார் வேலு, பின் அவர் அறையிலிருந்து வெளியே வந்து

"நடந்ததலாம் சொல்லி உங்க பொண்ண போன் போட்டு இங்க வரச் சொல்லுங்க.." சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்று சேரில் உட்காந்தார்.

கையில் இருந்த போனில், தன் மகளுக்கு கால் செய்துவிட்டு சிறிது நேரம் காத்திருந்ததும் பெரியவரின் மனைவி, மகள் மற்றும் தம்பி மூவரும் உள்ளே வந்தார்கள். பின் நான்கு பேரும் சிறிது நேரம் மாற்றி மாற்றி பேசிக் கொண்டனர். அப்போது பெரியவரின் முகம் எந்த அளவு மாறுகிறது என ஒரு சிறிய இடைவெளி வழியே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அப்போது ஒரு கொலை பண்ணியவர் போல எந்த ஒரு மாறுபாடும் அவர் முகத்தில் தெரியவில்லை.

அவர் பொண்ணை தனி அறையில் கூப்பிட்டு விசாரிக்க தொடங்குகிறார்.

"உங்களுக்கு நாளைக்கு கல்யாணம்ன்னு உங்க அப்பா 1 லட்சம் அவங்க முதலாளிட்ட வாங்க போறேன்னு உங்க கிட்ட சொன்னாரா.."

"ஆமா சார்.. 4 லட்சம் இருக்கு இன்னும் ஒரு லட்சம் தேவைப்படுது என்ன பண்ணன்னு தெரியலன்னு காலைலயே வீட்ட விட்டு போனாரு.."

சிறிது நேரம் யோசித்த வேலு "சரி நீங்க போகலாம்.." என்று கூற அவள் சென்றதும் மீண்டும் வெளியே வந்து

"உங்க முதலாளிக்கும் போன் போட்டு வரச் சொல்லுங்க.." என்று கூற முதலாளி வந்ததும் அவரிடமும் விசாரணை நடத்துகிறார்.

"ஆமா சார்.. என்கிட்ட தான் கண்ணாயிரம் 10 வருசமா வேலை பாக்கான். ஆனா ஒரு நாள் கூட சம்பளத்த தவிர அவர் எதுவும் கேட்டதில்லை. பொண்ணுக்கு கல்யாணம் சொன்னதும் நானே மொத்த பணத்தையும் தாரேன்னு சொன்னே.. எதுவும் வேண்டாமன்னு போனவன் கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் வந்து 1 லட்சம் வாங்கிட்டு போனான்.. " என்று கூற பெரியவர் கொண்டு வந்த மஞ்சப்பையிலும் 1 லட்சம் ரூபாய் சரியாக இருந்தது.

வேலு நினைத்த எதுவும் சாதகமாக இல்லை. எல்லாம் சரியாக இருக்க பெரியவர் பண்ண கொலை மட்டும் எங்கே என ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்.

அன்று இரவு முழுவதும் போலீஸ் ஸ்டேஷனிலே கழிய, விடிய விடிய யோசித்தும் வேலுவிற்கு எதுவும் புத்தியில் எட்டவில்லை. மறுநாள் விடிந்ததும் வெளியே சென்றவர் மதியம் 12.30 அளவில் ஸ்டேஷனிற்கு வருகிறார். உள்ளே வந்து நிற்க பெரும் கூட்டமே ஸ்டேஷன் உள்ளே இருந்தது. நடக்காமல் நின்ற கல்யாணத்திற்காக என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ள எல்லோரும் அங்கு கூடி இருந்தனர்.

அவரை தவிர வேறு யாரும் நிற்க கூடாது என்று கூற எல்லோரும் வெளியே சென்றனர். தனி அறையில் சென்று வேலு உட்கார்ந்ததும் எதர்ச்சையாக வெளியே உட்காந்திருந்த கண்ணாயிரத்தை பார்க்கிறார். அப்போது அவர் முகம் மிகவும் ஆக்ரோசமாக மாறியிருந்தது. உடனே அவர் முக மாற்றத்திற்கான காரணத்தை எழுந்து வந்து பார்க்க, கண்ணாயிரமும் அவள் மகளுக்காக பார்த்திருந்த மாப்பிள்ளையும் ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

உடனே கண்ணாயிரத்தை கூப்பிட்டு விசாரிக்க, மீண்டும் மீண்டும் நடந்ததையே அவர் கூறினார். பின்னர் சாய்த்து வைக்கப்பட்டிருந்த லத்தியை எடுத்து அவரை அடிக்க கை ஓங்க

"சொல்லு உனக்கும் உன் மாப்பிள்ளைக்கும் என்ன பிரச்சனை சொல்லு.." மிகவும் ஆக்ரோஷமாக கேட்க உடனே அவரும்

"சொல்றேன்யா சொல்றேன்யா.. எல்லாத்தையும் சொல்றேன்.." என பேசத் தொடங்குகிறார்.

"முதல்ல என்ன மன்னிச்சிடுங்க அய்யா.. இப்டி ஒரு கொலை நடக்கவே இல்லை. என் பொண்ணுக்கு பாத்திருக்குற மாப்ள நல்லவன்னு அவளுக்கு பேசி முடிச்சேன். ஆனா நேத்து தான் எனக்கு அவன பத்தி முழுசா தெரிஞ்சது. அவன் பெரிய மோசக்காரன். பல பொண்ணோட தொடர்பு வச்சிருக்கான்.. எல்லாம் தெரிஞ்சு அவன்கிட்ட போய் கேட்டேன். என் பொண்ணையும் கல்யாணம் பண்ணி ஏமாத்த போறேன்னு என்கிட்டயே சொல்றான். இந்த கல்யாணத்தை நிறுத்திட்ட மொத்த குடும்பத்தையும் எரிச்சிருவேன்னு மெரட்டுனான். அதுனால தான் எனக்கு வேற வழி தெரியாம இப்டி பண்ணிட்டேன்.. இப்படி பண்ண என்னைய அரெஸ்ட் பண்ணுவிங்க அதுனால கல்யாணம் நிக்கும்ன்னு நெனச்சேன். என்னைய மன்னீச்சுடுங்கய்யா.." என்று பெரியவர் வேலு காலில் விழ உடனே அவரை எழுப்பி விட்டு தன்னால் முடிந்த உதவியாக மாப்பிள்ளையை சிறையில் அடைத்து பெரியவரையும் அவர் குடும்பத்தையும் ஸ்டேஷனை விட்டு வெளியேற சொல்லி தன் கடமையை முடித்தார் எஸ். ஐ. வேலுச்சாமி.

Stories you will love

X
Please Wait ...