வானம்பாடி பஞ்சாயத்து போர்டு

கற்பனை
4.3 out of 5 (9 Ratings)
Share this story

வானம்பாடி பஞ்சாயத்து போர்டு

சிறுகதை.

நேத்தா கார்த்திக்.

கோடை விடுமுறையை மாமா வீட்டில் கழித்துவிட்டு திரும்பி ஊருக்கு போக கிளம்பிக்கொண்டிருந்தான் சிவா, மாமா வாங்கிக்கொடுத்த துணிகளையும் கிரிக்கெட் பேட்டையும் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டான்.

அவனை அழைத்துப்போக அம்மா வந்திருந்தார், அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு பேருந்தில் ஏறி உட்கார்ந்துக்கொண்டார்கள், ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம்வகுப்பு வெளியூர் உயர்நிலைப்பள்ளிக்கு போகவிருப்பதை எண்ணி சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தான்.

பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தது வண்டி, இந்த ஒரு மாத காலமாக வானம்பாடியையும், ரதிதேவியையும் மறந்து போயிருந்த சிவா, மீண்டும் அந்த நினைவுகளை மீட்டுகொண்டுவர முயற்சிதான்.
பேருந்து முன்னோக்கியும், அவன் ஞாபகங்கள் பின்னோக்கியும் ஓட ஆரம்பித்தன.

வானம்பாடி,கிளிக்கூட்டம்,தண்ணீர்காடு இந்த மூன்றும் பக்கத்து பக்கத்து கிராமங்கள், தண்ணீர்காடு தான் கொஞ்சம் பெரிய ஊர், பேருந்து வசதி, சினிமா தியேட்டர் , உயர்நிலைப்பள்ளி, நீண்ட பெரிய கடைதெருவும், அதில் எப்போதும் மக்கள் நடமாட்டமும் இருக்கும்.

சிவாவின் ஊர் கிளிக்கூட்டம், ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூரிலேயே படித்ததால் தண்ணீர்காட்டிற்க்கு வரும் வாய்ப்பு பெரிதாக இருந்ததில்லை.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சலூனுக்கு அப்பா அழைத்துப்போவது மட்டும் தான், அப்படி போகும்போதெல்லாம், அந்த கடை வீதியையும், பேருந்து,வண்டிகளையும் வேடிக்கை பார்ப்பது அவனுக்கு அலாதி பிரியம்.

இதற்க்காகவே முடிவெட்டும் அண்ணனிடம் “அண்ணா ரொம்ப வெட்டிடாதீங்க “ என்று அப்பாவிற்க்கு கேக்காத குரலில் சொல்லிக்கொள்வான். அடுத்து வானம்பாடி , கிளிக்கூட்டத்திற்க்கு ரொம்ப பக்கத்து கிராமம். பத்து வயல்காடு தூரம் தான். கிளிக்கூட்டத்தில் யார் வீட்டிலும் டிவி இல்லை.

ஏதாவது விசேஷம் , ஊர் திருவிழா போன்ற நேரங்களில் வாடகைக்கு டிவியும் விசிஆர் ம் கொண்டு வந்து சினிமா போடுவார்கள். ஞாயிற்று கிழமை தமிழ் படமும், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் வானம்பாடிபஞ்சாயத்து போர்டு டிவியில் பார்ப்பது தான் கிளிக்கூட்டம் இளவட்டங்களுக்கும், சிறுவர்களுக்கும் வழக்கம்.

அப்படிதான் ஒரு நாள் ரதிதேவியைப் பார்த்தான் சிவா. பேருக்கு பொருந்திப்போகிற அழகு அவள், உடல்வாகுக்கு ஏற்ற நேர்த்தியாக உடை அணிவாள், எப்போதும் சிறுமிகள், சிறுவர்கள் சூழ இருப்பாள், சுமதி டீச்சரின் மகள் அவள்.

மல்லிகைப்பூ, மஞ்சள்,கோகுல் சாண்டல் பவுடர் இவை எல்லாம் கலந்து ஒரு வாசனை வரும் அவளிடமிருந்து, அந்த வாசத்தில், கூட்டத்திலிருந்து வரும் மற்ற புழுதி,வியர்வை நாற்றம் இன்னும் சில கெட்ட வாடைகளும் அடியோடு காணாமல் போய்விடும். இளவட்டங்களெல்லாம் டிவி பார்க்க வருவதை விட அவளைப்பார்க்கவே வருவார்கள்.

இப்படி,அவள் வீட்டு அருகிலும், பஞ்சாயத்து போர்டு முன்பிலும், அவளை பார்த்திருக்கிறான் சிவா, அவனை விட அவள், ஐந்தாறு வயது மூத்தவள்., சிறுவர்கள் அவளைச்சுற்றி இருப்பதை பார்க்கும்போதெல்லாம், தானும் இந்த ஊரிலேயே பிறந்திருக்கக் கூடாதா?! என்று எண்ணிக்கொள்வதோடு
அவனும் அவர்களோடு இருப்பது , விளையாடுவது போல கற்பனை செய்து கொள்வான்.

ஒரு ஞாயிற்று கிழமை மாலை, டிவி முன்பாக இரண்டு ஊர் சனங்களும் கூடியிருக்கிறார்கள், சிவா மற்றும் கிளிக்கூட்டத்து சிறுவர்களுக்கு முன் வரிசையில் எப்போதும் இடம் கிடைக்காது, முதல் இரண்டு மூன்று வரிசைகளை வானம்பாடி ஊர் சிறுவர்களும் பெண்களுமே பிடித்து விடுவார்கள். அதனால் சிவா உள்பட கிளிக்கூட்டத்து சிறுவர்கள் எப்போதும்
இரண்டாம் மூன்றாம் வரிசையின் ஓராமாகவே உட்கார்ந்திருப்பார்கள்.

அன்றும் அதே போல மூன்றாம் வரிசையின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தான் சிவா. படம் போடுவதர்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன. டிவி பெட்டியை ஒரு நிமிடம், திரும்பி கூட்டத்தை ஒரு நிமிடம் என மாறி மாறி
பார்த்துக்கொண்டே ரதிதேவியை தேடினான், கூட்டத்தில் எங்குமே அவளைக்காணவில்லை.

அவளுடைய சிறுவர் சிறுமியர் படை வீரர்கள்அனைவரும் கூட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உட்கார்ந்திருந்தார்கள். தேடித்தேடி களைத்துப்போன சிவா டிவியில் கவனம் செலுத்த, அப்போது தான் தெரிந்தது படம் ஐந்து நிமிடங்கள் ஓடிவிட்டிருந்தது.

“வைதேகி காத்திருந்தாள்” தான் அன்றைய படம், ரதியை மறந்துபோன சிவா, சினிமாவில் கவனமாயிருந்தான், ஐந்து நிமிடங்கள் கடந்திருந்தது, அப்போது தான், மல்லிகைப்பூ, மஞ்சள்,கோகுல் சாண்டல் பவுடர் எல்லாம் ஒன்றாக கலந்த அந்த வாசனை, அவனுக்கு மிக அருகில் இருந்து வந்துகொண்டிருப்பதை, நாசித்துளை வழியே நுழைந்த காற்று, அவன் மூளைக்குச் சொல்லியது.


சட்டென திரும்பி பார்த்தான், பின் வரிசை ஓரத்தில் அவனுக்குப் பின்னால்,
முழங்கையை தொடையில் ஊன்றி முகத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டு சினிமா பார்த்துக்கொண்டிருந்தாள் ரதிதேவி. தூரத்திலேயே பார்த்துக்கொண்டிருந்த அந்த தேவதையை தன் அருகில் பார்க்கவும் நிலைகொள்ளவில்லை அவனுக்கு.

சிறிது நேரம் டிவியையும் , அவளையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்,
“என்னடா படம் தெரியமாட்டுதா? முன்னாடி மறைக்கிறாங்களா? இங்க வந்து உக்காந்துக்குறியா? கேள்வியும் கேட்டு பதிலும் தந்தாள். “ஆமாக்கா என்றவன் அவசரமாக எழுந்து அவள் அருகில் போய் அமர்ந்துகொண்டான்.

“படம் ரொம்ப நேரம் ஓடிருச்சா தம்பி” ரதி கேட்டாள்.
“இல்லக்கா இப்ப தான் போட்டாங்க” என்றான் சிவா.
“ ம்ம்ம் சரி ,, நீ கிளிக்கூட்டமாட தம்பி” என்றாள், “எப்படிக்கா கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க “ என்றான் அவன்.

இது பெரிய விஷயமா? எங்க ஊர் பசங்க எல்லாரையும் எனக்கு தெரியும்ல, நீ புதுசா இருக்கியா அதான்” .
அப்போ உங்களுக்கு என்னைய தெரியாதா? குழந்தையாக கேட்டான் சிவா.
உன்னை எப்படிடா தெரியும், என்றாள் ரதி. “ஓஒ அப்டியா என்று ஒரு நொடி முகம் வாடிய சிவா சொன்னான் , “ ஆனா நான் உங்கள பார்த்திருக்கேன் நிறையவாட்டி “.

எங்கடா பார்த்த என்னைய? என்றாள்,
இங்கதான்க்கா, டிவி பார்க்கும்போது, அப்புறம் உங்க வீட்டு பக்கத்தில, உங்கள பார்த்துட்டே இருப்பேன் தெரியுமா என்றான்.

அடிவாங்க போறே, எதுக்குடா பார்த்துக்கிட்டே இருந்தே” என்றாள் பொய்க் கோபத்தோடு. “ இல்லக்கா ,,,, உங்கள சுத்தி எப்பயும் பசங்க பிள்ளைங்க
இருப்பாங்களா, அதான் நானும் அந்த மாதிரி உங்க கூட இருக்கணும்னு பார்த்துட்டு இருப்பேன், என்றான் சிவா.

அப்டியா ,, சரி இனிமேல் டிவி பார்க்கும் பொது என் பக்கத்தில உக்காந்துக்க சரியா, என்றாள். நிஜமாவாக்கா என்று ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்து கேட்டான் சிவா. “நிஜமாத்தான் ,,, ஆனா இப்ப ஒழுங்கா படத்த பாரு” உஷ்ஷ்ஷ் என்று ஆள்காட்டி விரலை குவிந்த இரு உதடுகளுக்கு மேல் வைத்துச் சொன்னாள்.

அடுத்தடுத்த ஞாயிற்று கிழமைகளில், அவளுக்கு அருகிலேயே சிவாவிற்க்கு
உட்கார இடம் கிடைத்தது. பிடிக்காத படம் போடும் போதெல்லாம் வானம்பாடி சிறுவர்களோடு சிவாவையும் வீட்டிற்கு கூட்டிப்போனாள். அவனுடைய குழந்தைத்தனமான பேச்சு அவளுக்கு பிடித்துப்போனது. அவனை ஏதாவது பாட்டுப் பாட சொல்லியோ , பேசச் சொல்லியோ கேட்டுக்கொண்டிருப்பாள்.

அவன் மேல் தனிப்பிரியம் உண்டானது அவளுக்கு, சனிக்கிழமைகளில் கூட வானம்பாடிக்கு வந்து போக ஆரம்பித்திருந்தான் சிவா, “ஞாயிற்று கிழமை தானே படம் போடுவான், இன்னைக்கி எங்கேடா போறே “ என்று அம்மா கேட்ட போதுதான் ரதியைப் பற்றி சொன்னான் சிவா.

“ சுமதி டீச்சர் பொண்ணாடா,,, நம்ம ஊர்ல தான் சொல்லிக்குடுத்தாங்க, தங்கமான மனுசி, அவங்கள மாதிரி தான் பொண்ணும் இருப்பா போல, இன்னிக்கு நீ போகும்போது அம்மா பேர டீச்சர்ட்ட சொல்லு, நல்லா தெரியும் என்னைய அவங்களுக்கு. ஒரு நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வாடா” என்றார். சரிம்மா என்று சொல்லிக்கொண்டே ரெட்டை சந்தோசத்தோடு துள்ளிக்குதித்து ஓடினான்.

சிவா அம்மா பெயரைச் சொன்னதும், “அடப்பாவி சொர்ணலட்சுமி பையனாடா நீ !?!? உங்க ஊர்ல தான் வேலை பார்த்தேன், அப்போ தான் உங்க அம்மா வாக்கப்பட்டு வந்தா, ரெண்டு வருசத்துக்கு அப்புறம் தான் நீ பொறந்த,, அந்த வருஷமே எனக்கு வேற ஊருக்கு டிரான்ஸ்பர் ஆகிடுச்சு,அப்புறம் இப்ப ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் இங்க வந்தோம்”
என்று பழைய நினைவுகளில் சிறிது மூழ்கிப்போனார் சுமதி டீச்சர்.

ஒரு நாள் வீட்டுக்கு அழைத்துப்போனான் ரதிதேவியை, மடியில் தூக்கி வைத்துக் கொள்ளாத குறையாக அப்படி உச்சிமுகர்ந்து அவளைக் கொஞ்சினார் சிவாவின் அம்மா. அப்பாவைக் கூட்டிப்போய் நுங்கு வெட்டி திகட்ட திகட்ட கொடுத்தார்கள். போகும்போது, வீட்டில் செய்ததும், கடையில் வாங்கியதுமாக நிறைய தின்பண்டங்களை கொடுத்து அனுப்பினார்கள். சிவா ஐந்தாம் வகுப்பு முடித்திருந்தான்.

தண்ணீர்காட்டில் பேருந்து வந்து நிற்க்கும் போதுதான் நிகழ்காலத்திற்கு வந்தான் சிவா. பேருந்திலிருந்து இறங்கியதும் விறுவிறுவென நடக்க தொடங்கினார் அம்மா. “ ரதியக்காவுக்கு ஏதாச்சும் வாங்கிட்டு போலாம்மா”
என்றான் சிவா.
“அதெல்லாம்ஒன்னும் வேணாம், வா சீக்கிரம் , ஊருக்கு இருட்டுறதுக்குள்ள போகணும் என்றார் அம்மா.
“ஒரு மாசம் ஆச்சும்மா ரதியக்காவ பாத்து, ஏதாச்சும் வாங்கிட்டு போலாம்மா”
அம்மாவிடம் கெஞ்சினான் சிவா.
“வீட்ல நிறைய தின்பண்டம் இருக்குப்பா அத குடுக்கலாம் வா” என்று சொல்லி அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள் இருவரும்.
“நாளைக்கு போயி என்னோட புது டிரெஸ், கிரிக்கெட் பேட் எல்லாம் ரதி அக்காகிட்ட காட்டணும், அப்புறம் இந்த ஒரு மாசத்தில பாத்த சினிமா, அப்புறம் நடந்தது எல்லாத்தையும் சொல்லணும் , என்று சொல்லிக்கொண்டே வந்தான் சிவா.

சிறிது நேரம் இரண்டு பேரும் அமைதியாக நடந்து போய்க்கொண்டிருக்கும் போது, அம்மா கேட்டார் “சிவா,, ரதியக்கா வேற ஊருக்கு போயிட்ட என்னப்பா பண்ணுவ?
“ஏம்மா வேற ஊருக்கு போறாங்களா?
“இல்ல சும்மா கேட்டேன்”
“போமா என்கிட்ட சொல்லாம போகமாட்டாங்க”
நடையை நிறுத்திவிட்டு சிவாவை பார்த்தார், அவன் முகம் வாடியிருந்தது.
அவனைத் தூக்கி வைத்துக்கொண்டு அம்மா சொன்னார். “சிவா,, ரதியக்கா செத்துப்போச்சுப்பா”
அவனுக்கு எதுவும் பேச வாய் வரவில்லை, அம்மா முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனுக்கு கண்களில் நீர் வழிந்து கன்னத்தை ஈரமாக்கியது. வாய்விட்டு அழத்தெரியாமல் இரண்டு நிமிடம் இருந்தவனுக்கு,
எங்கிருந்தோ திடீரென்று பொத்துக்கொண்டு வந்தது அழுகை, ஹோவென்று சத்தம் போட்டு அழத்தொடங்கினான், கருவேல மரங்களில் இரவுத் தங்களுக்காக அப்போதுதான் வந்து அமர்ந்த கொக்குகளும், குருவிகளும் அவன் அழுவதைப்பார்த்து என்னமோ, ஏதோவென்று அலறியடித்துப் பறந்தன.

அம்மாவின் கழுத்தைக்கட்டிக்கொண்டு தேம்பி தேம்பிஅழுதுகொண்டே வந்தான், பாதி வழியில் தூக்கியவனை வீடு வந்து தான் இறக்கிவிட்டார் அம்மா.

காலையில், ரதி எப்படி இறந்தாள் என்று கேட்டு அப்பாவை நச்சரித்துக்கொண்டிருந்தான் சிவா, ஆடு மேய்க்கும் ஒருவன் அவளைக் கொன்றுவிட்டதாக பட்டும்படாமலும் சொல்லிவைத்தார் அப்பா. இரண்டு மூன்று வடங்கள் ஓடிமுடிந்திருக்க,,, ரதி எப்படி இறந்தாள் என்ற விவரம் அவனுக்கு தெரிய வந்தது,, அதே ஊரைச்சேர்த்த ஒருவன் அவளை பாலியல் வன்புணர்வு செய்ய முயல, அது முடியாமல் போகவும், எங்கே வீட்டில் சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் அவளை கொன்றுவிட்டதாகவும் தெரிந்துகொண்டான்.

இப்போது கிளிக்கூட்டத்தில் நிறைய வீடுகளில் டிவி வந்துவிட்டது, ஆனாலும் ஞாயிற்று கிழமைகளில், வானம்பாடி பஞ்சாயத்து போர்டு முன்பு உட்கார்ந்தே படம் பார்த்துக்கொண்டிருந்தான் சிவா.

நிறைவு.

Stories you will love

X
Please Wait ...