சூல்

vijii2971
பதின்பருவக் கதைகள்
4.9 out of 5 (94 Ratings)
Share this story

தன் முன்னே கவிந்து கிடந்த கரிய வானத்தையே பெருமூச்சுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் "மாதி".. உள்ளுக்குள் அலைமோதிக் கொண்டிருந்தன‌ காலையில் சரசு சொன்ன வார்த்தைகள் ..


.."மாதி..நாஞ் சொல்றேன்னு தப்பா நெனக்காத ..நா புதுசுதான் இந்த கிராமத்துக்கு வந்தே ஐஞ்சு மாசந்தான் ஆகுது.ஆனாலும் நீ படற கஷ்டத்தப் பார்த்து எனக்கு மனசு கேட்கல.இதுல ஒரு ஆபத்தும் இல்ல.நல்ல பெரிய ஆஸ்பத்திரில வச்சுத்தான் செய்யறாங்க.சுளுவா கையில ஐம்பதாயிரம், முப்பதாயிரம் ன்னு தருவாங்க.இதுக்கு மேல நமக்கு ஒரு புண்ணியங் கூட.."


.."அக்கா..நீ சொல்றதெல்லாம் கேக்க நல்லாத்தான் இருக்கு..இருந்தாலும் இப்பத்தான் வயசுக்கு வந்து இரண்டு வருஷமாச்சு.‌நாள பின்ன கட்டிக் கொடுக்கறப்ப எதுனா பிரச்சினயாச்சுனா..?"


.."அட.. எந்தப் பிரச்னையும் ஆகாது.நானே எத்தினி புள்ளைங்கள கொண்டு போய் வுட்ருக்கேன் தெரியுமா..?! அதுகெல்லாம் இன்னக்கி கையில ஒண்ணும் வயத்துல ஒண்ணுமாத் திரியுது..என்னமோ நீ மூணு பொம்பளப் புள்ளைகள வச்சுட்டு திக்குத் தெரியாம நிக்குறியேன்னு வெசனப்பட்டுத்தான் சொல்றேன்.இதே சின்னான் உசுரோடு இருந்துசுன்னா நா ஏன் இந்த வழியச் சொல்றேன்..நின்னது நிக்க வந்த காச்சலு ரெண்டே நாள்ல அவரக் கொண்டு போச்சு.. போதாக்குறைக்கு பால் கறந்து வித்துகிட்டு இருந்த பசுமாடுமா சாகும்..?அது செத்த ஏக்கத்லேயோ என்னவோ கன்னுக்குட்டியும் ஒரே வாரத்துல செத்துப் போச்சு..என்ன வெனையோ..?!" நீளமாகப் பேசி முடித்த சரசு..


மீண்டும் .."நல்லா ரோசன பண்ணு..உம் மவகிட்டயும் கேட்டுட்டுச் சொல்லு ..திங்கக்கெழம நா‌ கீழ போறேன்.அப்படியே வள்ளிக்கண்ணையும் கூட்டிட்டுப் போயிட்டா..உம் பஞ்சமே வெடிஞ்சிரும்.‌"


சரசு சொன்னதையே நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த மாதியின் கண்ணில் பட்டது கொஞ்ச தூரத்துல காலியாக் கெடந்த பசுக் கொட்டில்..பார்க்கக் பார்க்க அவளையுமறியாமல் கண்ணில் நீர் சுரந்தது.வெள்ளையும் ,பழுப்பும் கலந்த கலரில் சின்னக் கொம்புகளுமா அத்தனை மங்களகரமா இருப்பா லட்சுமிபசு.அம்மாவ உரிச்சு வச்ச மாதிரியே இருப்பா கன்னுக்குட்டி கற்பகமும்..சின்னான் இருக்கற வரை இரண்டு பேரும் காட்டு வேலைக்குப் போவாங்க.மூணு பொம்பளப் புள்ளைங்க ..எப்படி கட்டிக் கொடுக்கிறதுன்னெல்லாம் சலிச்சுக்கவே மாட்டான் சின்னான்.மூணும் மூணு லட்சுமி 'மாதி' ம்பான்.அப்படிப்பட்டவன் போனதுக்கப்புறம் எதோ காட்டு வேலைக்குப் போயும் ,பால் வித்தும் பொழப்பப் பாத்துகிட்டு இருந்தா.. ஆனா சின்னான் இருந்த போது அவளுக்கிருந்த மரியாதையான பார்வை மாற ஆரம்பிச்சுது.சரி எதாவது வீட்டு வேலைக்குப் போயி பிழைப்பை ஓட்டலாம்னு பார்த்தால் அந்த மலை கிராமத்துல ஒவ்வொரு பொம்பளையும் பத்து வீட்டு வேலை செய்யற தெம்பு கொண்டவங்க.. அப்பத்தான் இன்னொரு இடியா திடீர்னு ராத்திரி நல்லா இருந்த லட்சுமி காலைல பார்க்கறப்ப வாயில் நுரை தள்ளி இறந்து போய்க் கிடந்தது.


'மாதி' இருந்த நிலையிலேயே திக் பிரமை பிடிச்சுக் கெடந்தா.வீட்ல மொத்தம் நாலு ஜீவன்கள் பசியாறணுமே.மூத்தவ வள்ளிதான் கொஞ்சம் விவரமானவ.மத்தது ரெண்டும் வேளாவேளைக்குச் சோறு போடலின்னா "அம்மா..பசி..பசி.."ன்னு பறக்குமே.அப்பத்தான் சரசு வந்து ..."பொம்புளைங்களுக்கு மாசாமாசம் தூரமாகி முடிச்ச பதினொன்னா நாளுலேர்ந்து பதினைஞ்சா நாளு வரைக்கும் கொழந்த பொறக்கிறதுக்கான கருமுட்ட வரும்.மாசத்துக்கு ஒண்ணுதான் வரும்.அதுதான் ஆம்பள விந்தணுவோட சேர்ந்து கருவா வளரும் .சிலசமயம் ஒவ்வொரு பொம்பளைகளுக்கு இந்த முட்ட சரியா வரலன்னாலோ எதாவது சத்து பத்தலன்னாலோ கொழந்த பொறக்காது.அத நல்லா பண்ண இப்பல்லாம் டாக்டருங்க நெறய வழி முற வச்சுருக்காங்க.அதுலயும் கெடக்கலைன்னாத்தான் நா சொன்ன மாதிரி நம்ம வள்ளிக்கண்ணு மாதிரி சின்னப் பொண்ணுங்க கிட்ட இருந்து கருமுட்டய வாங்கி ஆம்பள விந்தணுவோட சேத்தி வெளில டியூப்ல வளர வச்சு பொம்பளைங்க வயத்துல வெப்பாங்க.அதுக்கப்புறம் அது பொறக்கறதெல்லாம் அவங்க பாடு.இப்புடி நல்ல கருமுட்டையத் தர்றதுக்குத்தான் முப்பதாயிரம் ,ஐம்பதாயிரம்னு காசு. என்ன சொல்ற.."


சரசு சொன்னதைக் கேட்டு குழம்பிப் போய் உட்கார்ந்திருந்த மாதியின் பக்கத்தில் வந்து அவளைத் தொட்ட மாதிரி உட்கார்ந்த வள்ளிக்கண்ணு,"அம்மே..நாஞ் சொல்றதக் கேளும்மே..நாம அத்தன பேரும் பசியால கெடக்கறதுக்கு சரசக்கா சொல்ற மாதிரி நா மட்டும் போறேனே.. எதாவது தப்புன்னா வேண்டாட்டு சொல்லிப் புட்டு வந்திரலாம்மே.‌.அது மட்டுமல்ல அம்மே..தேவானையையும்,ராதையையும் மேல்தட்டு மக்க படிக்கிற பள்ளிக்கூடத்துல சேத்து நல்லாப் படிக்க வச்சுரலாம்.நம்ம பள்ளிக்கொடத்துல எட்டு வகுப்பு தான இருக்கு.அதுக்கும் வாத்தியாரே வாரதில்ல.."


சொன்ன வள்ளிக்கண்ணுவையே பார்த்தாள் மாதி. மனசுக்குள்ள வந்து நின்னது காலியாக் கிடந்த அரிசிப் பானையும் .. கடைசியா வள்ளி சொன்ன படிப்பு சமாச்சாரமும் .. இருந்தாலும் உயிரைக் கையில் புடிச்சுக்கிட்டு , மீண்டும் சரசுவிடம் கேட்டாள்.."ஏன் சரசக்கா .. அதெல்லாம் எடுக்கறப்ப வலிச்சா புள்ள துடிச்சுப் போயிருமே.."


.."அதெல்லாம் மயக்க மருந்து குடுத்து பக்குவமாத்தான் எடுப்பாங்க..ஒரு துளி வலிக்காது..ஆனா ..மறுக்கா ரோசனை பண்ணிக்க..அப்பால அது நொள்ள..இது நொட்டைங்கக் கூடாது.."


.."நீ எங்களுக்கு கெட்டதா செய்யப்போற..எதோ சாமியே அனுப்புன மாதிரி வந்து சேர்ந்துக்கற.சரி..கூட்டிட்டுப் போ..நா..நா.."என்றாள் கண்ணீர்க் குரலில்..


அந்தத் திங்கள் கிழமை கீழே நகரத்திற்கும் செல்லும் பேருந்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றப் போகும் கனவுகளுடன் சரசுவுடன் ஏறிப் போனாள் வள்ளிக்கண்ணு..


கோயமுத்தூரின் புறநகர் பகுதியில் ஏக்கரா கணக்கில் விரிந்து கிடந்தது அந்தத் தனியார் மருத்துவமனை.அதன் உள்ளே தலைமை மருத்துவரின் முன் உள்ள அறையில் அமர்ந்திருந்தார்கள் காதம்பரியும்,கார்த்திக்கும்..இருவர் முகத்திலும் துடிப்பும் ,தவிப்புமான

ஆர்வம் தெரிந்தது ."காதம்பரி"என்று பணியாள் அழைக்கவே, உள் நுழைந்தனர்.


அறைக்குள் நுழைந்தவர்களை உட்காரும் படி சைகை காட்டி விட்டு, மீண்டும் தன் முன் இருந்த மருத்துவக் குறிப்புகளையும் ,எக்ஸ்ரே பிரதியையும் பார்த்தவர்,"ப்ச்.."என்று உதட்டைச் பிதுக்கி ,"சாரி மிஸ்டர் அண்ட் மிஸஸ் கார்த்திக் இந்தத் தடவையும் கரு கூடல‌‌..."


மருத்துவரின் வார்த்தைகளால் உள்ளே சுக்குநூறாக நொறுங்கிக் கொண்டிருந்தாலும்,"வேறு வழியே இல்லையா டாக்டர்..?"என்றான் கார்த்திக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டே..


.." உங்க மிஸஸூக்கு இந்த வருஷத்துலேயே ரெண்டு தடவ டெஸ்ட் டியூப் மெத்தட் பண்ணியாச்சு.அதுக்கு முன்னாடி வேற சில மெத்தட்ன்னு டிரை பண்ணியாச்சு.. அவங்க கருமுட்டை என்ன மருந்து கொடுத்தாலும் வீரியமாகல..ஆனா கர்ப்பப்பை நல்லாருக்கு.அதுனால அடுத்தது எக் டோனர் போயிராலாம்னு பீல் பண்றேன்.மறுபடியும் பழய மெத்தட் போயி கர்ப்பப்பை வீக்காயிருச்சுன்னா அப்புறம் அது இன்னும் கஷ்டம்..இனி உங்க முடிவுதான்..இப்ப ஆயிருக்கிற செலவேதான் ஆகும்.கூட கூடுதலாக எக் டோனருக்குப் 'பே' பண்ண வேண்டியிருக்கும்.."


.."அதுல சக்ஸஸ் ஆகுமா டாக்டர்.."என்றாள் காற்றாய் வந்த குரலில் காதம்பரி.


.."எல்லாத்துலேயும் சக்சஸ் ரேட் செவன்டிபைவ் பர்செண்ட்ஜ் தான்மா..முதல்ல எல்லாம் ஐம்பது தான் இப்பதான் இந்த அளவுக்கே வந்திருக்கு.அப்புறம் மிஸஸ் கார்த்திக்..இதுல உங்க முழு சம்மதமும் மனசார வேணும் அப்பதான் வைக்கற கரு வளர்றதுக்கு உதவும்.யாரோ பெண்ணோடதுங்கற உணர்வே உங்களுக்கு வரக்கூடாது.நீங்க சாப்பிடற சாப்பாட்டுல கருவா வளர்ந்து ,உங்க ரத்தத்த பாலாக் குடிக்கப் போற பேபின்னு மைண்ட்ல வைக்கணும்..வீட்டுல போய்க் கலந்து பேசிட்டு வந்து சொல்லுங்க.புரசீஜர் ஸ்டார்ட் பண்ணிரலாம்.இந்தத் தடவ உங்களுக்கு அத்தன இன்ஜக்ஷன் தேவப்படாது.அந்தப் பொண்ணுக்கு த்தான்.." நீளமாகப் பேசி நிறுத்தியவரையே பார்த்தவர்கள்..


.."அந்தப் பொண்ணு யாருன்னு..?!" என்றனர் ஒரே குரலில்..


.."நோ.நோ..உங்கள மாதிரியே அந்தப் பெண்ணுக்கும் சொல்ல மாட்டோம்.எல்லாமே ரொம்ப சீக்ரெட்டாத்தான் இருக்கும்."


"டாக்டர் .. நீங்க இப்பவே புரசீஜர ஆரம்பிக்கலாம்.ஏன்னா..எங்களப் பொறுத்தவரை எங்களுக்கு மட்டுமல்ல.எங்க குடும்பத்துக்கும் வாரிசு ரொம்ப முக்கியம்..ஆனா நாங்க டீரீட்மெண்ட் எடுத்துக்கற விவகாரம் எங்க ரெண்டு குடும்பத்துல கூட யாருக்கும் தெரியாம ரகசியமாய் தான் வச்சுகிட்டு இருக்கோம்.."


.."அது உங்க ப்ராப்ளம்..எங்களப் பொறுத்தவர இங்க கொழந்தைக்காக டிரீட்மெண்ட் பண்ணிக்க வர்றவங்களோட எல்லா டிடெயிலும் எங்க மருத்துவமனையை விட்டு எந்த நிமிஷத்திலேயும் வெளிய போகாது..எப்ப வரணும்னு நாங்க கால் பண்றோம்.."


.."ஓ.கே.மேடம்..தேங்க்யூ"என்றபடி வெளியே வந்தனர்.


ஈரோட்டில் இருந்த தனியார் மருத்துவமனையின் ஆபரேஷன் வார்டுக்கு முன்புறம் அமர்ந்திருந்தனர் வள்ளியும்,சரசுவும்..அங்கே இருந்த பணியாளிடம் விபரம் சொல்லி விடவே மருத்துவரிடம் இருந்து அழைப்பு வந்தது.


.."என்னம்மா..டோனர் கொண்டாந்திருக்கியா..?!எல்லாம் பேசிட்ட இல்ல.பிரச்சினை வராதே.."


.."ஆமா.. டாக்டர்.. எல்லாத்துக்கும் ஒத்துகிட்டுதான் வந்திருக்கு.இல்லாத பட்ட குடும்பம்.."


.."சரி.. எப்போதும் போல சின்ன டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போ.. டெஸ்ட் பண்ணுவாங்க..எப்பவும் போல எக் டிரான்ஸ்பர் பண்ணினவுடனே பணம் வாங்கிக்க.."என்றவரைப் பார்த்து வாயெல்லாம் பல்லாக எழுந்த சரசு வள்ளிக்கண்ணுவை அழைத்துக் கொண்டு போனாள்‌.


சின்ன டாக்டருக்கு முன்பே தகவல்

சொல்லப்பட்டு விட்டதால் தயாராக இருந்தார்.

"வள்ளி..தெகிரியமாப் போ.. உன்னாலதான் உங்கூட்டுல சோறே பொங்கப் போகுது ..போ..சாமி.." என்று சொல்லவே ,மௌனமாக அந்த வெள்ளை உடை அணிந்த பெண்ணின் பின்னால் போனாள் வள்ளிக்கண்ணு..


அவளை அனுப்பி விட்டு தனக்கு பணம் செட்டில் பண்ணும் நபரிடம் வந்து நின்றாள் சரசு.


அவளை நிமிர்ந்து பார்த்த அவர்,பொருட்படுத்தாமல் தன் போக்கில் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.


.."மேனேசரு.." என்று ராகம் பாடினாள்.


.."என்ன சரசு .. என்ன விஷயம்..மடமடன்னு சொல்லிட்டுக் கெளம்பு.. ஏகப்பட்ட வேல கெடக்கு.. உங்கிட்ட பேசப் பொழுதில்ல.."

.."இல்லைங்க..மேனேசரு..போன தடவ ஒரு லட்சம் தான் கொடுத்தாங்க..இந்தத் தடவ ஐம்பதாயிரம் மேல கேட்டு வாங்கிக் கொடுத்தீங்கன்னா.."என்று இழுத்தாள்.


.."ஏன் சரசு.. உனக்குன்னு கொஞ்சங் கூட மனசாட்சியே இல்லையா..இப்புடி சின்னப் பொண்ணுங்கள காசுக்காக கூட்டிட்டு வர்றியே.. அதுவும் இங்க ஒரு தடவ எடுக்க வக்கறதோட நிறுத்தாம ,எத்தன ஆஸ்பத்திரிக்கு ஊர்ஊரா கூட்டிட்டுப் போற.. நாளையும் பின்ன அதுங்களுக்கு தன்னோடு சொந்தக் கொழந்தய பெத்துக்க முடியாம போயிரும் சிலசமயம் உசுருக்கே ஆபத்தாயிரும்ங்கறதெல்லாம் தெரிஞ்சுகிட்டேதான கூட்டிட்டு வர்ற.. ஏன்தான் இப்புடி அறியாச்சனங்களோட பாவத்த வாரிக் கொட்டிக்கிறியோ.. அதுவும் உனக்கு கெடக்கிற காசுல காப்பங்கு கூட அதுகளுக்கு குடுக்கறது இல்ல.."என்றார் கசந்த குரலில்..


.." மேனேசரு ..பாவ புண்ணியம் பாத்தா வயத்துல ஈரத்துண்டத்தான் போத்திக்கணும்..மொதல்ல எங்கிட்ட சொன்னத பெரிய டாக்டர்கிட்ட போயி சொல்லு..கேக்குறாங்களான்னு பாப்போம்..அக்காங்க்.."


.."என்னவோ பண்ணு போ..மொதல்ல நடயக் கட்டு.. வேல இருக்கு.."என்றபடி முகத்தை கம்ப்யூட்டர் பக்கம் திருப்பியவரைப் பார்த்து ஏளனமாகத் சிரித்தபடி நடந்தாள் சரசு.


அன்றிலிருந்து சரியாக பதிமூன்றாவது நாளில் வள்ளிக்கண்ணுவிடமிருந்து கருமுட்டை எடுக்கப்பட்டது.பாவம் ..வள்ளிக்கண்ணு மொதல்ல பயந்து நடுங்கினாலும் ,மருத்துவமனை அவளைக் கவனித்ததில் மயங்கியே போனாள்.அது மட்டுமல்ல.‌.கையில் கிடைத்த பல ஆயிரங்கள் வாழ்க்கை யில் அவள் பார்த்தே இராதது. மயங்கிய அவளை சரசு தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுவதும் அந்த ஏழெட்டு மாதங்களில் பல மருத்துவமனைகளுக்கும் அழைத்துப் போய் விட்டாள்.கையில் கிடைத்த பணத்தினால் மாதியின் குடும்பத்திற்கே குலதெய்வமாகி விட்டாள் சரசு.


அடுத்த நாள் காலையில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக வேண்டும் காதம்பரி . நகரின் முக்கியமான அத்தனை கோவில்களிலும் அவள் பெயரில் அபிஷேகமும் அன்னதானமும் ஏற்பாடு செய்திருந்தான் கார்த்திக்.


.அன்றிரவு தொலைக்காட்சியில் செய்தி கேட்டவர்கள் அதிர்ந்து போனார்கள்."கருமுட்டை தானம்"என்ற பெயரில் அறியாத பதின்பருவப் பெண்களிடம் நடக்கும் திருட்டு..எல்லாச் சேனல்களிலும் இதே செய்தி அலறியது.


.."ஐயோ .. என்னங்க இது‌."


.."அதெல்லாம் எங்கியோ நடக்கறது காதம்பரி..நாம போற ஹாஸ்பிடல் ரொம்ப ஜெண்டில்"


..இருந்தாலும்‌.."என்று இழுத்தாள். .."மனசப் போட்டு குழப்பிக்காத.. டாக்டர் என்ன சொன்னாங்க.. ரிலாக்ஸாக இருக்கணும்தானே..உங்க அம்மா அப்பா வெளிநாடு போயிருக்கறதும்,எங்க அம்மா அப்பா கிராமத்துல இருக்கறதும் நல்லதாப் போச்சு போ.."


அடுத்த நாள் அதிகாலையில் அலாரம் அடித்து எழுந்த கார்த்திக் கட்டில் மேல் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த காதம்பரியைப் பார்த்து.."என்ன காதம்பரி..புறப்படல"


‌."இல்லங்க ..எனக்கு ஒப்பல..நம்ம ஹாஸ்பிடல் நல்லதா இருந்தாலும் மனசு உறுத்திட்டேதான் இருக்கும்.இது அறிவியல்ல ஒரு வரப் பிரசாதமா இருந்தாலும் எனக்கு வேண்டாங்க.நா யாரையும் கொற சொல்லல.. எப்படி ஒரு கொழந்த கெடைக்க பணக்காரங்க எது வரைக்கும் வேணும்னாலும் போகத் தயாரா இருக்கோமோ அதே போலதான் ஏழைகளும் செய்யறாங்க .இப்பதான் நா பண்ணுன தப்பே எனக்கு ஒரைக்குது.என் வயத்துல பொறக்கற கொழந்த தான் வேணும்னு நா பிடிச்சு பிடிவாதந்தான் எல்லாத்துக்கும் காரணம்.. நாளைக்கே உங்க அப்பா அம்மா கிட்டயும் எங்க அப்பா அம்மாகிட்டயும் உண்மையச் சொல்லிட்டு, நமக்குன்னு ஒரு கொழந்த பொறந்தாலும் சரி..பொறக்காட்டாலும் சரி..ஒரு கொழந்தய தத்து எடுத்து வளர்க்கப் போறேன்.நீங்க மறுக்க மாட்டீங்கன்னு நம்பறேங்க.." கண்ணீர் துளிர்க்க

மேல்முச்சு கீழ் மூச்சு வாங்கப் பேசிய மனைவியையே பார்த்த கார்த்திக், பக்கத்தில் வந்து தோள் மேல் கை வைத்து ,தலை கோதி நெற்றியில் முத்தமிட்டு‌."கூல் கண்ணா..அமைதியாயிரு.நீ எடுத்துருக்கறது அருமையான முடிவு..நா போயி நேர்லயே டாக்டர்கிட்ட சொல்லிட்டு வர்றேன்.என்ன பணம் தர மாட்டாங்க.பரவாயில்ல போனாப் போகுது.‌"என்றபடியே கார் சாவியை எடுக்கப் போனான்.


. "மாதி"வள்ளிக்கண்ணுகிட்ட இனி போதும்னு சொல்லிட்டாங்க. கவலப்படாத ..தேவான உட்கார்ந்ததும் சொல்லி விடு..இந்தா மீதிப் பணம்.."என்று கையில் திணித்த பணத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் மாதி.


மனசுக்குள் செத்துப் போன லட்சுமிபசுவோட நெனப்பு வந்துச்சு.அது சாகறதுக்கு ரெண்டு நா முன்னாடி ஒடம்பு சரியில்லைன்னு மாட்டாஸ்பத்திரிக்கு கொண்டுட்டுப் போன போது பரிசோதனை பண்ணிப் பார்த்த டாக்டர்.."ஏம்மா .. உனக்கெல்லாம் அறிவே இல்லையா..உன்னோட பணத்தாசைக்கு வாயில்லா ஜீவன கொடுமப் படுத்துவீங்களா.? சினையாயிருச்சுன்னா பால் கறக்காதுன்னு சினைக்கு வுடாமயே மடி வத்தற வரைக்கும் பாலக் கறந்துருக்கற ..இனி உம் பசு பால் கறக்காது அதுக்குப் பதிலா ரத்தத்தான் வரும்.."


.."அம்மே..அம்மே.." முனகல் கேட்டு தன்னுணர்வுக்கு வந்த மாதி .."என்ன வள்ளி..ஏம் மொனகற .."என்றபடி உள்ளே போனாள்.


அங்கே வள்ளிக் கண்ணுவின் பாவாடை தாண்டி ஒழுகத் தொடங்கியிருந்தது உதிரப் போக்கு..

Stories you will love

X
Please Wait ...