ஒரு தலை ராகம்

nivethamarichamy2001
காதல்
4.9 out of 5 (65 Ratings)
Share this story

"ம்மா வேகமா சாப்பாடு எடுத்து வைங்க மா... லேட் ஆகிருச்சு" என்று நடுக்கூடத்தில் நின்று தன் கடிகாரத்தை கையில் மாட்டிய படி கத்திக் கொண்டிருந்தான் புகழ்.

"இப்போ எதுக்கு டா இப்படி கத்திட்டு இருக்க... இந்தா சாப்பாடு...சாப்பிட்டு வேகமா கிளம்பு" என்று காலை நேர பரபரப்பிற்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் வியர்த்து விறு விறுக்க தன் அன்பு மகனுக்கு உணவு எடுத்து வந்து கையில் திணித்தார் அவனது தாய் கோசலை.

தன் தாய் கொடுத்த உணவை நான்கே வாயில் உணவின் சூட்டையும் பொருட்படுத்தாமல் வேக வேகமாக உண்டவன், அதே வேகத்துடன் தன் பையில் ஒரு புத்தகத்தையும் மதிய உணவிற்கு தாய் கொடுத்த சாம்பார் சாதம் அடங்கிய டிபன் பாக்சையும் எடுத்துக் கொண்டு "போய்ட்டு வரேன் மா" என்று கத்தி கொண்டே எதிரில் வந்த தன் தங்கைக்கு பாசத்துடன் வலிக்கும் படியாக ஒரு கொட்டு வைத்து விட்டு "பை டி" என்று அவள் அங்கு திட்டுவதை எல்லாம் பொருட்படுத்தாமல் பேருந்து நிறுத்துமிடம் நோக்கி ஓடினான் புகழ்.

புகழ்...புகழ் வேந்தன்...ஒரு கல்லூரி மாணவன்...அவன் வசிக்கும் ஊரில் இருந்து இரண்டு ஊர்கள் தள்ளி இருக்கும் இரு பாலர் பயிலக் கூடிய கல்லூரியில் தான் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன்....தினமும் அரசுப் பேருந்தில் தான் போய் வந்து கொண்டிருக்கிறான்...அதை பிடிக்கத் தான் காலையில் அவ்வளவு அலப்பறை போட்டது எல்லாம்...

கல்லூரி ஆரம்பிக்கும் நேரம் என்னமோ பத்து மணிக்கு தான்... ஆனால் அவன் பார்க்கும் பைங்கிளிக்கு ஒன்பது மணிக்கு பள்ளி அல்லவா... அதனால் தான் இவ்வளவு ஓட்டம்... இன்று காலை அவளை பேருந்தில் பார்க்க முடியவில்லை எனில் இனி நாளை காலை தான் பார்க்க முடியும்..மாலை அவள் 'எந்த பேருந்தில் செல்கிறாள்' என்பது அவளுக்கு மட்டுமே வெளிச்சம்.. எனவே 'அதுவரை அவளை பார்க்காமல் இருக்க முடியுமா' என்ற கேள்வி அவனுள்...

ஐந்தே நிமிடத்தில் பேருந்து நிலையம் வந்து சேர அங்கு ஏற்கனவே அவனது நண்பர்கள் நின்றுக் கொண்டிருந்தனர்.. அவர்களுடன் சேர்ந்து அவனும் நின்றுக் கொண்டு மணியை பார்த்தான்...

மணி எட்டு, பேருந்து வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன... அப்போது தான் அவனுக்கு மூச்சே வந்தது...'எங்கே அவள் முகத்தை இன்று பார்க்க முடியாமல் போய் விடுமோ' என்ற எண்ணம் காலை எழுந்ததில் இருந்தே அவனுக்குள் இருந்துக் கொண்டே இருந்தது... இப்போது தான் மனம் சற்று நிம்மதி அடைந்தது.

இதோ அவன் காலையில் இருந்து வீட்டில் உள்ளவர்களை படுத்தி எடுத்து இங்கு வந்து எதற்காக காத்திருந்தானோ அந்த பேருந்து வந்துக் கொண்டிருந்தது... இன்னும் சில நொடிகளில் தன்னவள் என நினைப்பவளை காணப் போகிறான்.

பேருந்து வந்து நின்றதும் வேகமாக அடித்து பிடித்து தன் நண்பர்களுடன் முன்னே ஏறினான் புகழ். அங்கு தான் இருவர் அமரும் இருக்கையில் படிக்கட்டு ஓரமாக இருக்கும் முதல் இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள் அவன் தேவதை.அவளுக்கு அவ்விருக்கை தான் பிடித்தம் போலும்..அவன் பார்க்கும் நேரம் எல்லாம் அதில் தான் அமர்ந்திருப்பாள்...ஏறும் போதே அவளை பாத்துக் கொண்டே ஏறினான் புகழ்.

படிகட்டில் தன் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டே அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். இன்றும் எப்போதும் போலே பள்ளிச் சீருடையில் இரட்டை ஜடைப் போட்டு பின்னே இரண்டு புறமும் சேர்த்து பாலம் போல் மல்லிகை பூச்சூடி நெற்றியில் சிறு பொட்டும் அதன் மேல் குங்குமக் கீற்றும் வைத்திருந்தாள்.

அந்த அழகு சிலையை கண்கள் இமைக்காமல் புகழ் பார்த்திருக்க, அவளோ 'தன்னை ஒருவன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்பதை அறியாமல் ஜன்னல் வழியாக தன்னை கடந்து செல்லும் காட்சிகளை கண்களில் ரசனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.அதுவும் அவன் கண்களுக்கு அழகாக தான் தெரிந்தது.

"டேய் இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் டா அவளை பார்த்துட்டே மட்டும் இருக்க போற" என்று அவன் காதோரம் கேட்ட நண்பனின் கேள்வியில் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, அவன் புறம் திரும்பி மெலிதான புன்னகையை மட்டுமே தன் நண்பனுக்கு பரிசாக கொடுத்தான்.

"டேய் அவகிட்ட போய் சொல்லி தான் தொலையேன்டா.. இப்படியே எத்தனை நாள் தான் இருப்ப" என்று மற்றொரு நண்பனின் வார்த்தைகளுக்கு மீண்டும் புன்னகைத்தவன்,

"படிக்கிற பிள்ள டா... விடு படிக்கட்டும்" என்றான் அவளை பார்த்துக் கொண்டே.

அவனும் பல மாதங்களாக அவளை பார்த்துக் கொண்டிருக்கிறான்.ஏனோ பல பெண்களை பார்த்து விட்டான்...ஏன் அவன் படிப்பதே இரு பாலர் கல்லூரியில் தான்...ஆனால் இவளை மட்டும் பார்த்தவுடன் பிடித்து விட்டது... அவளை பற்றி தன் நண்பனின் தங்கை மூலம் விசாரிக்கும் போது, அவள் நன்றாக படிக்கும் மாணவி என்று தெரிந்துக் கொண்டவனுக்கு ஏனோ அவளிடம் போய் தன் காதலை சொல்ல மனம் வரவில்லை.

அவள் படிக்கட்டும் தன்னால் அவள் படிப்பில் சிக்கல் வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறான். அதனாலே இன்று வரை தன் காதலை அவளிடம் சொல்லாமல் எட்டி நின்றே அவளை ரசித்து அவளுக்காக தன் காதலுடன் காத்துக் கொண்டு இருக்கிறான் இன்று வரை... இனிமேலும் தான்...

இது எதுவும் அறியாதவளோ தன் படிப்பை மட்டுமே முழு மூச்சாக எண்ணி அதில் தன் மொத்தக் கவனத்தையும் செலுத்திக் கொண்டு உள்ளாள்.

அவன் நண்பர்களும் அவன் எண்ணத்தை புரிந்துக் கொண்டு அமைதியாகி விட்டனர். இருந்தாலும் பல நேரங்களில் அவன் படும் பாட்டையும் தங்களை படுத்தும் பாட்டையும் கண்டு "அவளிடம் சொல்லி தான் தொலையேன்டா" என்று ஆதங்கப் பட்டுக் கொள்வர்.

இதோ அவன் காலையில் இருந்து எதற்காக காத்திருந்தானோ அந்த பதினைந்து நிமிட பேருந்து பயணம் முடிந்து அவன் பயிலும் கல்லூரி வந்து விட்டது.அவள் அடுத்த ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள்.

தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மனமே இல்லாமல் அவளை பார்த்துக் கொண்டே இறங்கினான் புகழ். அவளோ அருகில் இருந்த தன் தோழியிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தாள். கீழே இறங்கி பேருந்து கிளம்பும் வரை அவளை மட்டுமே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் புகழ். அவளோ அவன் பக்கம் கூட திரும்பவில்லை.இப்போது அவள் தோழியிடம் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்து தீவிரமான பேச்சு அவர்களுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

இறங்க வேண்டிய பயணிகள் இறங்கி, பயணம் செல்ல வேண்டிய பயணிகளும் ஏறிக் கொண்டனர்... இதோ பேருந்தும் எடுத்தாயிற்று... அவனும் அவள் ஒரு முறையாவது தன் புறம் திரும்புவாள் என்று ஏக்கத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் இன்றும் அவள் அவன் புறம் திரும்பவில்லை... பேருந்தும் அவனை தாண்டி கிளம்பி சென்று விட்டது.'எப்போது தன் காதல் தன் கையில் சேரும்' என்ற எண்ணத்துடன் செல்லும் பேருந்தையே கண்ணில் இருந்து மறையும் வரை இமைக்காமல் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த ஒரு தலைக் காதலன்.

அருகில் இருந்த டீக்கடையில் இருந்த வானொலியில் அவன் மனதை படமாக காண்பிப்பது போல,

"என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம் எனக்கு அவ வேணும்"

என்ற டி.ஆர். குரலரசன் அவர்கள் எழுதிய பாடல் வரிகள் சிலம்பரசனின் குரலில் மற்றவர்களின் கவனத்தை கவரும் படி ஓடிக் கொண்டிருந்தது.

அதைக் கேட்டவனுக்கு அந்த வரிகள் தன் வாழ்வில் ஒற்றுப் போவதாக தோன்ற இடது கை தானாக சென்று பின்னங் கழுத்தை சின்ன சிரிப்புடன் நீவிக் கொண்டது..'இனி தன்னவளை நாளை தான் பார்க்க முடியும்' என்ற நினைப்பு தந்த ஏக்கத்துடன் தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு கல்லூரியை நோக்கிச் சென்றான் புகழ் வேந்தன்.

Stories you will love

X
Please Wait ...