JUNE 10th - JULY 10th
வாரிசு..!!
பல ஏக்கர் பரப்பளவை தனக்குள் விழுங்கிக் கொண்டு ஆளுமையுடன் பார்ப்பவரை மிளிர வைக்கும் தோற்றத்துடன் நிமிர்ந்து நின்றது அந்த பழங்கால அரண்மனை.
மூன்று தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த சத்யேந்திர ராஜாவின் அரண்மனை அது. அவரது மறைவிற்குப் பிறகு அவரது சந்ததிகள் ஆளுக்கொரு திசையில் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
அதன்பின் யாரும் அந்த அரண்மனையில் வசிக்கவில்லை என்றாலும் பணியாட்களைக் கொண்டு தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு கம்பீரம் குறையாமல் இருந்தது.
`கிரீச்..’ எனும் ஒலியுடன் இரும்பாலான நுழைவாயிற் கதவுகளைப் பாதுகாவலர்கள் திறக்க கருப்பு நிறக் கார் ஒன்று உள்ளே நுழைந்தது.
நுழைவாயிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த அரண்மனையைப் பார்த்த ஸர்வன் வாகனத்தின் ஜன்னல் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு கூர்மையான விழிகளால் இந்த இடங்களைப் பார்வையிட்டான்.
முன்னர் பசுமையாக பராமரிக்கப் பட்டிருக்க வேண்டும். இப்போது வறண்டு போய் ஆங்காங்கே பட்டுப்போன மரங்கள் எப்போதும் ஒடிந்து விழலாம் என்ற நிலையில் அந்த இடமே அமைதியாக மயானம் போல் காட்சியளித்தது.
“மாம்! நீங்க இதற்கு முன்ன இங்கே வந்ததில்லையா?” தன்னருகில் அமர்ந்திருந்த தாயாரிடம் கேட்டான்.
மகனின் குரலில் அவன் பக்கம் திரும்பிய மெர்லின், “நான் முதன்முறையாக இங்கே வருகிறேன் ஸர்வன்..” என்றவரும் ஆர்வத்துடன் அந்த இடங்களைப் பார்த்தார்.
“இம்பாசிபிள்..! டேட் எப்படி இந்த பேலஸ்ஸை விட்டு அங்கே இருக்கிறார்..” என்றவனின் விழிகள் மின்னின.
“அப்படின்னா உனக்குப் பிடித்திருக்கா? நாம சில வாரங்கள் இங்கே தங்குவதில் உனக்கு விருப்பம் தானே..” என்று கேட்டார் அவர்.
“அப்கோர்ஸ் மாம்” என்று சிரித்தவன், நொடியில் அந்த இடத்தில் ஒவ்வொரு அங்குலத்தையும் மனதில் கணக்கிட்டான். அரண்மனையின் எத்தனை கோடி போகும் என்ன செய்ய வேண்டும் என்று அப்போதே திட்டமிடத் துவங்கினான்.
ஸ்ரவன் அந்த அரண்மனையின் இளைய வாரிசு. இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை அவன் ராஜ வாரிசு என்று அவனுக்கே தெரியாது. திடீரென தாயார் தன்னிடம் வந்து தந்தையின் பின்புலத்தைப் பற்றிக் கூறி, தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த தந்தை நேரே தங்கள் பூர்வீக அரண்மனைக்கு வந்துவிடுவதாகவும், தங்களையும் அங்கே வரச் சொன்னார்.. அரண்மனையை விற்பது விசயமாகப் பேச வேண்டும் என்று மெர்லின் கூற, முதலில் அதை அவன் நம்பவில்லை.
டெல்லியில் பெரும் செல்வந்தரிடம் லீகல் அட்வைசராக வேலை செய்கிறான் அவன். அவனுக்குத் தெரிந்தது எல்லாம் எப்படிப் பணம் சம்பாதிப்பது என்பது மட்டுமே.. அவ்வளவு எளிதில் எதையும் நம்பிவிட மாட்டான்.. மெர்லினின் கட்டாயத்தின் பேரில் கிளம்பி வந்தவனுக்கு அரண்மனையின் கம்பீரம் அவனது கவனத்தை ஈர்த்தது.
அவன் அனைத்தையும் ஆர்வமாகப் பார்ப்பதைக் கண்டு “யாரோ இங்கோ வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாங்க..! அது யாரென்று உனக்குத் தெரியுமா..!” மெர்லின் அவனைக் கேலி செய்தார்.
“நெவர்மைன்ட்” என்றவன் கார் அரண்மனையின் வாயிலில் நின்க கதவைத் திறந்து கொண்டு இறங்கினான்.
அருகில் இருந்த தூணை நிமிர்ந்து பார்த்தான். சுமார் முப்பது அடி உயரத்தில் பழங்கால கலை ஓவியங்களை வரையப்பட்ட மேற்கூரையைத் தாங்கி நின்றது. ஒவ்வொரு ஓவியங்களும் தத்ரூபமாக வரையப்பட்டிருக்க அவனது உடல் சிலிர்த்தது.
பணியாட்கள் வந்து அவர்களது பயணப்பொதிகளை உள்ளே எடுத்துச் செல்ல.. “வா ஸர்வன் உள்ளே போகலாம்..” மெர்லின் உள்ளே செல்ல, ஸ்ரவனின் அலைபேசி அழைத்தது.
அவனது வேலை நிமித்தமாக அழைப்பு வரவும், “நீங்க போங்க..” அவரிடம் கூறிவிட்டு அழைப்பை ஏற்றபடி பேசிக் கொண்டே நடந்தவன் அரண்மனையின் பின்பக்கம் தோட்டம் போல் இருந்த இடத்திற்கு வந்திருந்தான்.
பேசி முடித்துவிட்டு அலைபேசியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி சில அடிகள் எடுத்து வைத்திருப்பான்.
யாரே தன்னைப் பார்க்கும் உணர்வு எழச் சுற்றிலும் பார்த்தான். ஆங்காங்கு செடிப்புதர்களும், மரங்களும் சூழ சிறு காட்டை ஒத்திருந்தது அந்த இடம். பின்னால் திரும்பி அரண்மனையைப் பார்த்துவிட்டு, நேரே தெரிந்த பட்டுப்போன செடிகளை விலக்கியவாறு சிறு தூரம் சென்றவன் ஓரிடத்தில் நின்றான். அங்கே கட்டப்பட்டிருந்த மணிமண்டபத்தை கண்டவனுக்கு ஆச்சரியத்தில் புருவம் உயர்ந்தது.
அவன் ஓரடி முன்னே வைக்க, நொடியில் அந்த இடம் பெரும் புழுதியாய் கிளம்பத் திடுக்கிட்டான். இது சரியில்லை என்று அவன் நினைக்கும் பொழுதே ஏதோ ஒன்று தன்னை மணிமண்டபத்தை நோக்கி இழுப்பதைப் போல் உணர்ந்தவனுக்கு இதயம் பலமாக முடித்தது.
ஆவென அலறியடித்து கொண்டு புதரைவிட்டு வெளியே ஓடி வந்தவனுக்கு மேலும் திகிலைக் கிளப்பியது. காரணம், எங்கிருந்து ஓடி வந்தானோ அதே மணிமண்டபம் அவன் முன் இருந்தது. பயத்தில் முகம் வெளிறப் புழுதியாகக் கிளம்பிய காற்றைக் கண்டு மயங்கி விழுந்தான்.
அரண்மனையில் மெர்லின் தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த பணியாள் ஒருவர் “அம்மா! சின்னவர் பின் தோட்டத்தில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.. எவ்வளவோ முயற்சி செய்தும் கண்விழிக்கலை.. நீங்க வாங்கம்மா..” என்று கூற அவர் திடுக்கிட்டார்.
சற்று முன்னர் வரை நலமாகத் தானே தன்னுடன் பேசினான். அதற்குள் என்னவானது..?
அவர் அதிர்ச்சியுடன் “ஸ்ரவன் இப்போ எங்கே?” என்று கேட்டார்.
“அவரோட அறைக்கு தூக்கிட்டுப் போயிருக்காங்க அம்மா..”
அதைக் கேட்டதும் அறையிலிருந்து வெளியேறியவர் வேகமாக மகனது அறையைத் தேடிச் சென்றார்.
“மாம்..”
ஸ்ரவனின் குரலில் நடையை நிறுத்தி அரண்மனையின் வாயிலைப் பார்க்க, மகன் நின்ற தோற்றத்தைக் கண்டு அவரது இதயம் தன் துடிப்பை நிறுத்தியது.
போருக்குச் சென்று திரும்பியவனைப் போல் கசங்கிய உடையும், புழுதியில் புரண்ட முகமுமாய் நின்றவனைக் கண்டு பதறிப் போனவராய் அவனிடம் சென்றார்.
“ஸ்ரவன் என்ன இது?”
கை, கால்களில் குருதி வழிய நின்ற மகனைக் கண்டு உள்ளம் பதறினார். கால்கள் வலுவிழக்கத் தரையில் மண்டியிட்டவனிடம் ஓடிச் சென்று தானும் மண்டியிட்டு அவன் தோள்களைப் பற்றியவர் வார்த்தையின்றி கண்ணீருடன் அவனைப் பார்த்தார்.
ஸ்ரவன் அவர் முன் தன் இடக்கரத்தை நீட்ட, அதில் இருந்த பொருளைப் பார்த்தவர் பதறித் துடித்து இரண்டடி பின்னால் சென்று அமர்ந்தார்.
“அங்கே என்ன செய்றீங்க அம்மா.. சின்னவர் அவர் அறையில் இருக்கார்..” அவருக்குப் பின்னாலிருந்து பணியாள் ஒருவன் கூற, திடுக்கிட்டு திரும்பினார். அங்கே அவன் குழப்பமும், கவலையுமாக நின்று கொண்டிருந்தான்.
“அப்படியென்றால் இத்தனை நேரம் இங்கே இருந்தது..” என நினைத்தவராக வேகமாக மகன் இருந்த இடத்தைப் பார்க்க அங்கே யாருமில்லை.
விழிகள் விரிய, மனதில் பயம் சூழ, சற்று முன் மகன் தன்னிடம் காட்டிய பொருள் மட்டும் அங்கே கிடந்தது. அது அரண்மனையின் ராஜ முத்திரை பதிக்கப்பட்ட சங்கிலி. அதிர்ச்சி என்ன வென்றால் அது சத்யேந்திர ராஜாவின் சங்கிலி. அதனை நடுங்கும் கரங்களால் தொட எத்தனிக்க, அதற்குள் அது மணலாகக் கரைந்து காற்றோடு கலந்தது.
நடப்பதை நம்பமுடியாத சிலையாக உரைந்துவிட்டார் மெர்லின். தனது மாமியார் கூறியது அவரது நினைவில் வந்து போகத் தேகம் நடுங்கியது.
“அம்மா” பாதுகாவலனின் குரலில் கண்ணீரைத் துடைத்துவிட்டு மகன் இருந்த அறைக்கு விரைந்தார்.
சத்யேந்திர ராஜாவிற்கு இரண்டு மகன்கள், நான்கு மகள்கள். அவர் காலம் வரை அப்படி ஒரு செழிப்புடன் திகழ்ந்த மாகாணம் அது. அவர் ராஜாவாக முடி சூட்டிய காலம் முதல் மக்கள் யாரையும் பட்டினியில் வாட விடவில்லை. இல்லையென்றவர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அனைவரையும் சமமாக நடத்தினார்.
அவரது அந்த குணம் அது அவரது மூத்த மகன் நரசிம்மனுக்கு என்றுமே பிடிக்காது. ஆனால் தந்தையிடம் வாய் திறந்து சொன்னதில்லை. தான் ராஜாவாகப் பதவியேற்றதும் தன் இஷ்டப்படி ஆட்சி செய்யலாம் என்று கனவு கண்டான்.
ஆனால் சத்யேந்திர ராஜா அவனது குணம் தெரிந்து.. தன் குணத்தைக் கொண்டு பிறந்த இளைய மகன் விஜயனுக்கு முடி சூட்டி ராஜாவாக்க எண்ணினார்.
அதைக் கேள்விப்பட்ட நரசிம்மனுக்குத் தந்தையின் மீது வெறுப்பும், கோபமும் உண்டானது. அன்றிரவே விஜயனின் படுக்கையில் கொடிய விசச் சிலந்திகளை மறைத்துவைத்தான். உறக்கத்தில் அந்த சிலந்திகள் விஜயனைக் கடித்து இறந்துபோனான். அடுத்ததாக யாரும் அறியாமல் தந்தையின் அறைக்குச் சென்ற நரசிம்மன் தன் கையாலே கழுத்தை நெறித்துக் கொன்றான். அவர் துடிதுடித்து இறந்ததை திருப்தியாக பார்த்தவன் அவரை உறங்குவது போல் சரியாகப் படுக்க வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.
`உன்னோட பதவி ஆசைக்காக பெற்ற அப்பன், கூடப் பிறந்த தம்பியென்று கூடப் பார்க்காமல் கொன்னுட்டல்ல.. நீ செய்த பாவத்திற்கெல்லாம் உன் சந்ததிகள் அதற்கான பலனை அனுபவிக்கும்.. இல்லை இல்லை சந்ததி என்ற ஒன்று இல்லாமலே போகும்..! உன்னுடைய வம்சத்தை அடியோடு அழிக்காமல் விடமாட்டேன்..’ சத்யேந்திர ராஜாவின் அருவம் சூளுரைத்தது.
சத்யேந்திர ராஜா மற்றும் விஜயனின் இறப்பிலிருந்து அந்த அரண்மனையில் அடிக்கடி நிறைய அசம்பாவிதங்கள் நடக்க ஆரம்பித்தது. பூசாரியை வைத்து பூஜை செய்து பார்த்தான். ஒன்றும் மாறவில்லை. இரண்டிரு முறை நூலிலையில் உயிர் தப்பினான். அதன்பின் மாந்திரீகனிடம் சென்ற போது தான் தந்தையின் ஆத்மா மூர்க்கத்துடன் இன்னும் அரண்மனையில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டான்.
பதவி ஆசைக்காக தந்தையையும், சகோதரனையும் கொண்டவன், உயிருக்கு ஆசைப்பட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தான். அதன்பின் அங்கு யாரும் செல்லக் கூடாது கட்டளையிட்டான். அரண்மனையை விக்கலாம் என்று முயன்ற போது அவ்வூர் கிளம்பிவிட்ட புரளியில் யாரும் அரண்மனையை வாங்க முன்வரவில்லை.
அதையெல்லாம் மெர்லினுக்கு அவரது மாமியார் கூறித்தான் அவருக்குத் தெரியும். அதை அவர் அப்போதெல்லாம் நம்பவில்லை. இப்போது நடப்பதை வைத்து நம்பாமல் இருக்க முடியவில்லை. அதோடு அந்த ராஜமுத்திரை பதித்த சங்கிலியும் அவரின் மூலமாகத் தான் அவருக்குத் தெரியும். அந்த சங்கிலி வழிவழியாய் ராஜாக்கள் மட்டும் அணிவது ஆகும். அது கடைசியாக சத்யேந்திர ராஜாவிடம் இருந்தது. இப்போது அதை அவர் நேரில் பார்த்திருக்கிறார் என்றால்..! அதை நினைத்தாலே அவருக்கு படபடவென அடித்து கொண்டது.
ஸ்ரவன் படுக்கையில் கண்மூடியிருக்க, சுவாசம் சீராகச் சென்று கொண்டிருந்தது. அவனருகில் மெர்லின் அமர்ந்து அவனின் வலக்கரத்தை தன் கைகளுக்கு அடக்கியவாறு அமர்ந்திருந்தார். பலமணி நேரமாகியும் இன்னும் கண்விழிக்கவில்லை. மருத்துவரை அழைத்து வருகிறேன் என்று சொல்லிச் சென்ற பணியாளை இன்னும் காணவில்லை.
மகனது நிலையைக் கணவருக்குத் தெரிவிக்க நினைத்து கைப்பேசியில் அழைத்தால் அழைப்பை எடுக்கவில்லை. கவலையுடன் அமர்ந்திருந்தவரின் கைப்பேசி அழைத்ததும் அலைபேசியை காதுக்குக் கொடுத்தார்.
“மெர்லின் எங்கே இருக்க.. உனக்குக் கால் செய்தால் கனெக்ட் ஆகலை.. பிசினஸ் ட்ரிப் முடித்து நேராக வீட்டிற்கு வந்தால் வீடு பூட்டியிருக்கு..” என்க.. மெர்லின் இதயம் பலமாகத் துடிக்க தொடங்கியது.
“நீ..நீங்க.. வீட்டில் இருக்கீங்களா.. இங்கே வரலை..?” வார்த்தைகள் திக்க, அவரது முகம் வியர்த்து வலிய ஆரம்பித்தது.
“ஆமாம்.. நீ எங்கே இருக்க? ஸ்ரவன் எங்கே?”
அதற்கு மெர்லின் பதில் கூறப் போனவர், அவரது காலில் ஈரத்தை உணர்ந்து கீழே குனிந்து பார்த்தவருக்கு தொண்டையை அடைத்தது. அவரது காலடியில் ரத்தம் வழிய, எங்கிருந்து வருகிறது என்று சற்று நிமிர்ந்து படுக்கையைப் பார்த்தவர் திடுக்கிட்டு பின்னால் சென்றார். மகனின் உடல் முழுவதும் ரத்தம் ஆறாகப் பெருக, மெர்லின் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சரிந்தார்.
பலமான காற்றோடு ஓர் உருவம் அறையில் நுழைவதை உணர்ந்தவரின் இதயம் மெல்ல தன் துடிப்பை நிறுத்தியது.
.............................
#311
Current Rank
46,190
Points
Reader Points 1,190
Editor Points : 45,000
25 readers have supported this story
Ratings & Reviews 4.8 (25 Ratings)
yinise2186
wiraf44331
nice
vijirsn1965
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points