JUNE 10th - JULY 10th
தந்தை மகற்காற்றும்…..
”கிழக்கு லடாக் பகுதியில் தீரமாகச்சண்டையிட்ட ஐந்து இந்திய ராணுவ வீர்களுக்கு பாராட்டுப்பத்திரம் வழங்கினார் இந்திய ராணுவத்தளபதி”
பத்திரிகைச்செய்தி, ஜூன், 2020
ஆஷிஷ் அன்றைய பதிமூன்றாவது சிகரெட்டை முடித்து நிமிர்ந்தபோது தீப்தா உள்ளே நுழைந்தாள். கையிலிருந்த வெள்ளைக்கோட்டை சோஃபாவில் எறிந்துவிட்டு தொப்பென அதிலேயே விழுந்தாள்.
“எனதருமை ஆஷிஷ்! ரிடயர்ட் விங் கமாண்டர் ஆஷிஷ்! சூடாக ஒரு டீ போட்டுத்தாயேன்?”
ஆஷிஷ் எழுந்த நிலையும் அவனின் இறுகிய முகமும் தீப்தாவின் அழகான நெற்றியில் இரண்டு வளைகோடுகளை ஏற்படுத்தியது.
“க்யா ஆஷிஷ்! சப் டீக் ஹை நா? நீ மிகவும் சோர்வாக இருக்கிறாயே?”
“குச் நஹி தீப்தா! இதோ டீ போட்டுக்கொண்டு வருகிறேன்!”
பல வருஷங்களாகவே, ஏன் ரிடயர் ஆனபிறகும் கூட போன வாரம் வரை தீப்தா எழுவதற்கு முன்பே எழுந்து மூன்று மைல் ஓடிவிட்டு தோட்டத்தில் எக்ஸர்ஸைஸ் செய்து வேர்வைக்குளியலுடன் உள்ளே நுழையும் ஆஷிஷுக்கு இப்போது எழுபதை விட ஒரு வயது அதிகம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் இந்த வாரம் ஆரம்ப முதலே ஆஷிஷ் சரியிலை
“யேஹ் லேலோ?”
ஆஷிஷ் டீயுடன் சீஸ் கிராக்கர் பிஸ்கெட்டும் தந்ததை வாங்கிக்கொண்டு தீப்தா மறுபடி கேட்டாள்.
“ப்ளீஸ் ஆஷிஷ்! என்னவென்றுதான் சொல்லேன்! எனக்குமே வயது அறுபதுக்கு மேல் என்பதை மறக்காதே! உன்னைச்சங்கடப்படுத்துவது எது?”
“நரேன்!”
”அய்யோ! என்ன ஆச்சு நரேனுக்கு? எனக்குச்சொல்லாமல் ஏதானும் கெட்ட செய்தி வைத்திருக்கிறாயா?”
தீப்தா பதறினாள்.
“இரு இரு தீப்தா! நரேனுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் எந்தச்செய்தியும் வரவில்லை!அதுதான் எனக்குக்கவலை!”
”உன் ராணுவ ரகசியங்களையெல்லாம் ஒதுக்கி எனக்கு உண்மையைச்சொல்! நரேன் இப்போது எங்கே போஸ்டிங்கில் இருக்கிறான்?”
”கல்வான் பள்ளத்தாக்கு! பாங்காம் ஏரி!”
”ஓ மை காட்! அங்கேயா?”
”ஜூன் பதினைந்தாம் தேதி சண்டை பற்றி படித்தோமே! நரேன் தான் இரண்டாவது கமாண்டிங் ஆஃபீசர்!”
“கர்னல் சந்தோஷ் பாபு மரணம் அடைந்த…..?”
”யெஸ் யெஸ் தீப்தா! இன்னும் ஸ்கிர்மிஷ் ஓயவில்லை என்பதால் அங்கிருந்து வரும் எந்த செய்தியுமே கிளாஸிஃபைட்! நமக்கு சொல்லப்படக்கூடாது!”
“ஆஷிஷ்! நரேன் நம் ஒரே மகன்! நமக்குக்கூடவா செய்தி வராது? அதுவும் நீயுமே இண்டியன் ஏர் ஃபொர்ஸில் வீர் சக்ரா விருது வாங்கின வெட்டெரன்!”
“அதனால் என்ன தீப்தா? நாம் இப்போது சிவிலியன்கள்! ராணுவ கட்டுப்பாடு பற்றி உனக்கு நானா சொல்லவேண்டும்?”
”ஆனால் ஆஷிஷ்! நரேன் ஏதோ ஒரு போஸ்டிங்கில் பாதுகாப்பாக இருப்பான் என்றுதான் நம்பினேன். ஆனால் அவன் கல்வானில் பாங்காம் ஏரிப்பகுதியில் கோரச்சண்டையின் நடுவில் இருப்பானென்று நினைத்துப்பார்க்க முடியவில்லை!”
”பொறுமையாக இரு தீப்தா! பிரிகேடியர் பக்ஷியிடம் பர்சனலாகப்பேசியிருக்கிறேன்! எப்படியாவது நரேனின் சேஃப்டி பற்றி தகவல் சொல்லிவிடு என்று! ஃபோன் பண்ணுவார்! அதுதான் காத்துக்கொண்டிருக்கிறேன்! மொபைலில் பண்ண முடியாதாம். என்னை லேண்ட் லைனுக்குப்பக்கத்திலேயே காத்திருக்கச்சொன்னார்!”
“சரி, நானும் காத்திருக்கிறேன்!”
அடுத்த பதினைந்தாவது நிமிடம் ஃபோன் பெல் அடித்தது.
ரிடயர்ட் விங் கமாண்டர் ஆஷிஷ் மற்றும் தீப்தா பற்றி உங்களுக்குச்சொல்ல வேண்டும்.
நாற்பத்தொன்பது வருடங்களுக்கு முன்னால் டிசம்பர் 3, வெள்ளிக்கிழமை, 1971 பங்களாதேஷின் தாக்குதலுக்கு அடாவடியாக பாகிஸ்தான் இந்தியாவை தாக்க, யுத்தம் அறிவிக்கப்பட்ட தினத்தின் மாலை. சொட்டு சொட்டாக பனி பெய்த அந்த பாழும் தில்லி இரவில் ஒரு தேசத்தையே சுதந்திரமாக்கப்போகும் முடிவுகள் எடுக்கப்பட்ட மாலை
ஏர்ஃபோர்ஸின் ”பப்பரப்பே” என்று விரிந்த, ப்ரிட்டிஷ் காலத்து அலங்காரங்கள் கொண்ட அந்த ஸஃப்தர்ஜங் மெஸ்ஸில் ஆஷிஷ் சாவந்த் சர்க்கார்- ASS - என்று செல்லமாக அழைக்கப்படும் விங் கமாண்டர் ஆஷிஷ், ”சூரியப்பகுதி மேலே” என்கிற ஸ்திதியில் இருந்த தனது ஆறாவது பொரித்த முட்டையின் மஞ்சள் த்ரவத்தை, அகலமான ப்ரெட் ஸ்லைஸின் மேல் பாகத்தில் கவிழ்த்து, சுதந்திரமாக மிளகுப்பொடியைத்தூவி, அரை கிலோ தக்காளி ஸாசைக்கவிழ்த்து வாயில் அதக்கித்தின்று கொண்டிருந்த ஏழேகால் மணிக்கு க்ரூப் காப்டனால் அழைக்கப்பட்டான்.
நீங்கள் ஆஷிஷ் போல ஆசாமிகளை அதிகம் சந்தித்திருக்க முடியாது.
ஆறடி இரண்டங்குல உயரம். தொண்ணூறு கிலொ எடை. முழுவதும் முறுக்கேறிய தசை உடம்பு. சிவந்த முகத்தில் அமுல் பேபி போன்ற சிரிப்பு. தில்லியின் ஸெய்ன்ட் ஸ்டீஃபன்ஸ் காலேஜில் ஆஷிஷ் ஃபுட்பால் மாட்சில் இறுக்கிப்பிடித்த அரை டிராயருடன் பந்தை எக்கித்தட்டிக்கொண்டே ஓட்டமாக ஓடி, போட்டி டீம் ஆட்டக்காரர்களை லாவகமாக சமாளித்து, எதிர் முகாமில் அனாயசமாக நுழைந்து ஒரு அரைவட்ட ஸ்பின்னில் பந்தை கோல் கீப்பரிடம் அடித்துவிட்டு வானத்தைப்பார்த்து வெற்றிக்களிப்பில் எம்பிக்குதிக்கும்போது, பார்த்துக்கொண்டிருக்கும் மிராண்டா காலேஜ் இளம் பெண்கள் அடி மடியில் கை வைத்துக்கொண்டு சப்திப்பார்கள் என்று ஒரு காற்றுவாக்கு செய்தி உண்டு.
பள்ளி நாட்களிலிருந்தே என்சிசி, ஹாக்கி, கிரிக்கெட், ஃபுட்பால் என்று வர்ஜ்யாவர்ஜ்யமில்லாமல் எல்லா வற்றிலும் ஆஷிஷ்தான் முதல் இடம்.
படிப்பு பற்றி அதிகம் சொல்ல இயலாது!
பிஏ சேர்ந்த மூன்றே மாதத்தில் எகனாமிக் அனாலிசிஸ் எடுக்கும், அந்த மூக்கின் கீழ்ப்பகுதியில் கண்ணாடியுடன், முக்கால் முதுகு தெரியும் ப்ளவுஸ் அணிந்த சுசித்ரா பானர்ஜி என்னும் வங்கள ப்ரொபசர், க்ளாஸ் டெஸ்ட் மார்க் கொடுக்கும்போது, “ஆஷிஷ்! வெட்கமாக இல்லை, இரண்டு மார்க் வாங்கியிருக்கிறாய்” என்று ஏசினவள், அடுத்த மாதமே “வெல் டன் ஆஷிஷ்! என்று பேப்பர் கொடுக்கும்போது ஆஷிஷின் முகத்தைப்பார்க்காமல் லேசான வெட்கத்துடன் கொடுத்த விவரம் ஒன்றிரண்டு சூட்சுமமான பசங்களைத்தவிர வேரு யாரும் கவனிக்க வில்லை.
எப்படியோ பிஏ பாஸ் பண்ணின ஆஷிஷ், ஏர்ஃபோர்ஸ் பரிட்சையில் முதலில் தேறி இடம் பிடித்தமைக்கு அவனின் அதீத ப்ளேன் ஆர்வம்தான் முழு முதல் காரணம். எல்லா ட்ரெயினிங்கிலும் அசத்தலாய்த்தேறி, முக்கியமாக ”குட்டி டைனமோ என்றும், Sabre Slayer என்றும் அழைக்கப்பட்ட Folland GNAT வகை ப்ளேன்களை இயக்குவதில் மன்னனாக பரிணமித்தான்.
க்ரூப் காப்டன் அறையில் அவசர மீட்டிங்.
“எப்போது வேணும் என்றாலும் நமக்கு க்ளியரன்ஸ் வரலாம். ஆகவே, பாய்ஸ்! உங்களின் பொம்மைகள் தயாராக இருக்கிறதா?”
“பாஸ்! நிஜமாகவே நாமும் இறங்கப்போகிறோமா? இது தரை வழி சண்டை மட்டுமே என்று பேசிக்கொண்டார்களே?”
“இல்லை நாமும் உண்டு. அப்படித்தான் மந்திரி சொன்னார்”
யேய்! என்ற கூக்குரல்.
”ஷட் அப் பாய்ஸ்! இது சண்டை, விளையாட்டில்லை!”
“சர்! வீ ஆர் இட்ச்சிங் டு டேக் ஆஃப்!”
சரி, கொஞ்சம் ப்ளான் பண்ணுவோமா?”
அடுத்த நாளே வெள்ளி முளைத்த விடியல் மூன்றரை மணிக்கு எஸ் ஓ எஸ் பறக்க, ஆஷிsh அவனின் கோ பைலட்டுடன் Fonton Gnatஇல் அபார டேக் ஆஃப் செய்து மேலே எழும்பினான். அவர்கள் கல்கட்டாவின் மேல் பறந்த போது நிச்சலனம் இன்றி இருந்த அந்த பாழும் உலகம் இன்னும் கிழக்கே சில ஆயிர மைல்கள் தூரத்தில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொல்லும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆஷிஷுக்கு வலது புறம் கோ பைலட், வட்ட வடிவ ஸ்க்ரீனை உற்றுப்பார்த்து கீழே உள்ள எதிரியின் ராடர்களின் சுழலும் நாக்குக்கு அகப்படாமல் இருப்பதைக்கண்காணித்துக்கொண்டிருந்தான். இலக்கை நெருங்க நெருங்க அந்த மேல் வானம் ஒரு தீபாவளி போன்ற வெளிச்ச சிதறல்களை வாரி இறைத்துக்கொண்டிருந்தது.
“இலக்கை நெருங்குகிறோம்!”
“ரோஜர்!”
அந்த Fonton Gnat நானூறு நாட்ஸ் என்னும் ஸ்பீடில் சீய்த்துக்கொண்டு பறக்க, பன்னிரெண்டு முன்னூறு பவுண்ட் பாம் இருந்தும் அந்த கனத்தில் வேகத்தை இழக்காமல் சென்றது.
“ரேடியோ கொப்பளித்தது, “நான்கு மணி உயரத்தில் உங்களுக்கு ஒரு நண்பன்”. கேர்ஃபுல்”!
கீழ் வானில் சூரிய உதயத்தினிலிருந்து எழுந்தது அந்த பாகிஸ்தனிய சேபர் ஜெட். ஆஷிஷ் கவனிக்கும்போதே தன் வயிற்றிலிருந்து ஒரு குண்டை செலுத்த, அது ஆஷிஷை நெருங்கி வர.ஆரம்பித்தது. இதோ,.ஆயிரம்…..அறுனூறு…….நானூறு அடிகள்..
“ஆஷிஷ்!” கோ பைலட் பதட்டத்தில் குரல் கொடுக்க ஆஷிஷ் காத்திருந்தான்.
அந்தக்கடைசி கணத்தில் சில இரும்புத்துண்டங்களை கொட்டினான். சென்சர் மூலம் ஏவப்பட்ட அந்த பாகிஸ்தானிய பாம் வெற்று இரும்புத்துண்டங்களை மோப்பம் பிடித்து ஓட, அதே மைக்ரோ செகண்டில் விமானத்தை சடாரென்று கீழிறக்கி ஒரு சக்கர வட்டம் அடித்து அந்த சேபரின் பின் பக்கம் போய் பட்டனை அழுத்த, இங்கிருந்து புறப்பட்ட ஒரு சைட்வைண்டர் மிஸ்ஸைல் அந்த சேபரின் வால் பக்கம் நெருங்கி முத்தமிட, அடுத்த க்ஷணத்தில் பாகிஸ்தான் சேபர் ஜெட் ஒரு ஆரஞ்சுப்பந்தாய் எழும்பி கரும்புகையை கக்கியவாறே அந்த விடியற்காலை துல்லிய காற்றின் உதவியோடு, பங்களாதேஷின் மண்ணில் விழுந்தது.
”வாவ்!”
கோ பைலட் ஆச்சரியத்துடன் பெருமூச்சு விட்ட அந்த நிமிடம் விமானம் ஒரு ஆட்டம் ஆடி குலுங்கியது.
“ஆஷிஷ் அடி பட்டுக்கொண்டோம்!”
கோ பைலட் கத்தினான்.
விமானம் சட்டென்று சொம்பேறித்தனமாய் இழுக்க ஆரம்பித்தது. வேகம் நழுவ, உயரம் தள்ளாடியது.
கண்ட்ரோல் ரூமிலிருந்து “ஷல் வீ செண்ட் கவர்?” என்று கேட்க, ஆஷிஷ், ”தேவையில்லை. வில் ரிடர்ன் டு பேஸ்” பதில் சொன்னான்.
விமானத்தை சமாளிப்பது கடுமையாகிக்கொண்டே போனது.
“சீக்கிரம் ஆஷிஷ், நமக்கு ப்ரேக்ஃபாஸ்டுக்கு நேரமாகிறது!”
“கவலைப்படாதே. இன்று சுடச்சுட உனக்கு ஆம்லெட் உண்டு!”
ஆஷிஷ் முடிக்குமுன் எங்கிருந்தோ இரண்டு பாகிஸ்தனிய சேபர் ஜெட் விமானங்கள் தோன்றி இரு பக்கமும் குண்டு மழை.
“பார்ட்னர்! பெயில் அவுட்” என்று கத்திய ஆஷிஷ் திரும்பிப்பார்த்தபோது கோ பைலட் சீட்டிலேயே சரிந்திருந்தான். அவனின் மார்புக்கருகில் பல சல்லடைத்துளைகளின் வழியாக புது ரத்தம்.
”நோ”! கத்திய ஆஷிஷின் மார்பில் ஒரு மரண இடி. சொல்லொணாத வலி. ரத்தம்.
எப்படி இஜெக்ட் செய்து வெளியே வந்தான் என்பது தெரியாமலேயே மயங்கினான்.
கல்கத்தாவின் ராணுவ ஆஸ்பத்திரியில் அவனை பரிசோதித்த பெரிய டாக்டர்கைவிரித்தார்.
”இவனை கொண்டு வந்தது வேஸ்ட். பிழைக்க பத்து சதவீதம் சான்ஸ் கூட இல்லை!”
அந்த மரண மயக்கத்திலும் குழந்தைப்புன்னகை மறையாத ஆஷிஷின் முகத்தைப்பார்த்த நர்ஸ் தீப்தா, “வீரனே! உன்னை சாக விடமாட்டேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டதை அங்கு வேறு எவரும் கேட்கும் நிலையில் இல்லை. மார்ஃபைன் ஊசி போடப்பட்டிருந்ததால் வலி மறந்த ஆஷிஷ் அவ்வப்போது கண் முழித்து, பிதற்றுவான்.
தீப்தா டாக்டரிடம் கிட்டதட்ட கெஞ்சினாள்.
“எனக்கென்னமோ இவன் பிழைத்துக்கொள்வான் என்று தோன்றுகிறது. ப்ளீஸ்!, ஆபரேட் செய்யுங்கள்!”
“எதற்காக இப்படிப்போராடுகிறாய், இவன் இன்னொரு அடிபட்ட வீரன் அவ்வளவுதான்!”
”இல்லை டாக்டர், ப்ளீஸ்!”
”உண்மையைச்சொல், இவன் உனக்கு உறவா அல்லது தெரிந்தவனா?”
”உறவுதான் டாக்டர்”.
”வருங்காலக்கணவன்” என்று தீப்தா தீர்மானம் செய்துவிட்டதைச்சொல்லவில்லை!
மூன்று ஆபரேஷன் செய்து, நான்கு ஐவி கொடுத்து ரத்தம் ஏற்றிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. இரண்டு நாள் கழித்து, ”தீப்தா! சாரி, இவன் பிழைக்கப்போவதில்லை” என்று பொது வார்டில் கொண்டு வந்து போட்டார்கள்
டாக்டருக்கு ஆஷிஷைத்தெரிந்திருக்கவில்லை. தீப்தாவையும்தான்.
அடுத்த ஆறு நாட்கள் தீப்தா ட்யூடி முடிந்தால் உடனெ ஆஷிஷின் படுக்கைக்கு வந்து விடுவாள். ஆஷிஷ் அவ்வப்போது கண்களைத்திறப்பான்.
“பாய்ஸ்! Combat என்றால் ஒரே முடிவுதான். எதிரியின் உயிர் போய்விடவெண்டும்”
“சரியான கணம் என்பது நாம் முடிவு செய்வது இல்லை. லிமிட் உயரம் தாண்டின பிறகும் எனக்கு மூளைக்குள் அந்த க்ளிக் சத்தம் கேட்டால் தான், ஜாய் ஸ்டிக்கைத்தொடுவேன்”
”சுசித்ரா! மூணு மார்க்கா குடுத்தே? இப்போது முப்பது நிமிடம் கதற வைக்கிறேன் பார்”
“பந்தை என்கிட்ட பாஸ் பண்ணிட்டா, நீ நேரே ஃபுல் ஃபார்வார்டுக்கு போய்விடு. டி வட்டத்தில் உனக்குத்தருவேன். சொதப்பினே சாலா, உனக்கு சமாதிதான்”
அவன் பேசின எதுவுமே தீப்தாவுக்குப்புரியவில்லை. இந்த சுசித்ரா சமாசாரம் மட்டும் எதோ புரிந்தாற்பொல் இருக்க கொஞ்சம் வேதனையாக இருந்தது.
“எனக்கு க்ளியரன்ஸ் குடுக்கச்சொல்லு. அப்புறம் பார்”
“சரி சொல்கிறேன், இப்போ நீ தூங்கு”
“செந்தில்! உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஹிந்தி பேச கத்துக்கோ. அது இங்கே ரொம்ப முக்கியம்”
சரியாக ஏழாவது நாள் ஆஷிஷ் தொபக்கென்று படுக்கையிலிருந்து எழுந்த உட்கார்ந்து கொண்டு, “கனவில்லையே, நீ நிஜம்” என்றான், தீப்தாவைப்பார்த்து!
”ஆம், நிஜம்தான்!”
”செத்துப்போய் சொர்க்கத்தில் விஷ்ணு பகவான் உன்னை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைத்தேன்!”
தீப்தா வெட்கத்துடன் சிரித்தாள்.
”எப்படிப்பிழைத்தேன்? உன் அழகால்தான் என்று சொல்லிவிடாதே!”
”சோல்ஜர்! உன்னை சாக விட்டிருக்கமாட்டேன்!”
”நான் சோல்ஜரில்லை. விங் கமாண்டர்! நான் செத்துப்பொயிருந்தால்?”
”நீ மட்டும் செத்திருந்தால் உன்னைக்கொலையே பண்ணியிருப்பேன்!”
தீப்தா சிரித்தாள், கண்ணீருடன்.
“ரொம்ப தாங்க்ஸ் தீப்தா. எப்படி நன்றி சொல்றதுன்னே….?”
“என்ன, ஃபேர்வெல் ஸ்பீச்சா? இந்த விங் கமாண்டரை இன்னொரு பெண் நர்ஸ் தொட விடுவேனா?”
எப்போது காதலாயிற்று?
சரியாக இருபத்தேழாம் நாள் ஆஷிஷ் ஆஸ்பிடலைவிட்டு வெளியே வந்த தினமே திருமணம். திருமணம் முடிந்த அடுத்த நாளே இருவரும் விமானத்தில் கிளம்பி சென்னை வந்து, காரில் திண்டிவனம் தாண்டி ஆலப்பாக்கத்தில் தேடி அந்த வீட்டை அடைந்தபோது வீடு சென்ற மாத பேரிழப்புகளில் கலைந்து கிடந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஆறு மாதம் முன்பு பிறந்த குழந்தையைப்பார்க்காமலேயே கோ பைலட் செந்தில் இறந்து போயிருக்க, அவன் மனைவி – சின்னப்பெண், இருபது வயதுகூட நிரம்பாத படிப்பறிவில்லாத கிராமத்துப்பெண் – அதீத துக்கத்தில் கெமிக்கல் உரத்தைக்குடித்து – எக்ஸெஸிவ் இஞ்செக்ஷன் ஆஃப் பெஸ்டிசைட் – தற்கொலை செய்துவிட்டிருக்க, ஆறுமாதக்குழந்தை பேசக்கூட திராணியற்ற பாட்டியின் கைகளில் மோகனமாகச்சிரித்த அந்தக்கணத்தில் தீப்தா கேட்டாள்.
“இந்தக்குழந்தையை எங்கள் குழந்தையாக வளர்க்க அனுமதிப்பீர்களா?”
ஃபோனின் இரண்டாவது ரிங்கிற்குக்கூட காத்திராமல் ஆஷிஷ் பாய்ந்து எடுத்தான்.
பிரிகேடியர் பக்ஷிதான் பேசினார்.
“ஆஷிஷ்! குட் ந்யூஸ்! உன் மகன் நரேன் நன்றாக இருக்கிறான். கல்வான் பள்ளத்தாக்கு பாங்காங் ஏரிச்சண்டையில் சீனப்படைக்கு எதிரான தீரச்செயலுக்காக ஆர்மி சீஃப் ஜெனெரல் நராவானே நரேனுக்கும் இன்னும் நான்கு வீர்களுக்கும் கமெண்டேஷன் கார்டு கொடுத்து கௌரவிக்கப்போகிறார்!”
நாற்பத்தொன்பது வருடங்களூக்குப்பின் விமானத்தின் பக்கத்து சீட்டில் சல்லடைபோலத்துளைத்து ரத்தம் ஒழுகியவாறே இறந்து போன கோ பைலட் செந்தில் தன்னைப்பார்த்து நிறைவாகச்சிரிப்பது போல ஆஷிஷ் உணர்ந்தான்.
#282
55,537
1,370
: 54,167
29
4.7 (29 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Saran Saru
gunamozart
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50