JUNE 10th - JULY 10th
ஆனந்தி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது, மார்கழி மாதம் பெருமாள் கோவிலில் திருப்பாவை பாடும் போட்டி நடந்தது. அங்கு தான் முதல் முறையாக ராதா மேடம், அக்பர் சாரை பார்த்தாள்.
ராதா மேடம் பெரிய பதவி வகிக்கும் அரசு அதிகாரி. அவரையும் அவருடைய கணவர் அக்பர் சாரையும் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தனர். அப்போது இருந்து தான் அவர்களுடன் ஆனந்திக்கு பழக்கம் ஆனது.
நிகழ்ச்சியை தொடர்ந்து பரிசு வழங்குதல் முடிந்து, மேடம் கிளம்பும்போது, ஆனந்தி தன் தோழி ஷாகிராவையும் அழைத்துச் சென்று அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தாள். கோவிலோ, சினிமாவோ ஷாகிராவும் அவளுடன் வருவாள். இருவரும் இணைப் பிரியாத் தோழிகள். கோவிலுக்கு போனால் ஆனந்தியை போலவே அவளும் விபூதி, குங்குமம் இட்டுக் கொள்வாள்.. அது அவளுக்கு மிகவும் அழகாகவும் இருக்கும்.
அறிமுகம் முடிந்து கிளம்பும்போது,
" நீங்க ரெண்டு பேரும் எங்க ஆத்துக்கு ஒரு வாட்டி வாங்கோளேன்" என்று கூறினார் ராதா மேடம்.
நிகழ்ச்சி முடிந்து அவர்கள் கிளம்பும்போது, ஆனந்தி அவர்களிடம் சென்று,
" மேடம், நீங்க வீட்டுக்கு வர சொன்னீங்க, ஆனா அட்ரஸ் தரலையே "
ஒரு கணம் திகைப்புடன் நின்றார்கள் சாரும் மேடமும். உடனே ராதா மேடம் சிரித்தபடியே தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தார்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஆனந்தி தன் தோழி ஷாகிராவுடன் அவர்கள் கொடுத்த அட்ரஸ் வைத்து ராதா மேடம் வீட்டுக்கு போனார்கள். அவர்கள் இருவரையும் மிகவும் அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள் சாரும் மேடமும்.
அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன். மிக அழகாக ' துறுதுறு ' வென்று இருந்தான். பெயர் டிங்கு. அவர்களின் வீடு, அவர்கள் பழகும் விதம், டிங்குவுடன் விளையாடுவது என பல விஷயங்கள் ஆனந்தியை அவர்கள் வசம் ஈர்த்தது. அதனாலேயே ஒவ்வொரு வாரமும் தவறாமல் அவர்கள் வீட்டுக்கு சென்றனர் தோழிகள்.
ஒரு நாள்,
" மேடம் நாங்க வரும்போதெல்லாம் நல்லா சமைச்சி தரீங்க, ஆனா நாங்க தான் உங்களுக்கு ஒன்னுமே கொண்டு வர்றது இல்ல, உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க நான் எங்க அம்மாகிட்ட கேட்டு செய்து கொண்டு வரேன் " என்றாள் ஆனந்தி.
" ம். நேக்கு மீன் ரொம்ப பிடிக்கும்டி.. அதுவும் ஃபிரை பண்ணினா இன்னும் பிடிக்கும் "
" மேடம் உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?"
" ம். கேளு"
" நீங்க பிராமின் பாஷை பேசறீங்க, ஆனா நான் வெஜ் எல்லாமே சாப்டறீங்க எப்டி மேடம்? பிராமின்ஸ் நான் வெஜ் சாப்ட மாட்டாங்க தானே.. சார் பேர் வேற அக்பர்னு இருக்கு, ஒன்னுமே புரியல மேடம் "
" நாங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் " ராதா மேடம் தோளில் கை போட்டபடி இருந்த அக்பர் சார் பதில் அளித்தார்.
" ஓ... அப்படியா.. " என்று ஆச்சரியத்துடன் வாய் பிளந்தனர்
ஆனந்தியும், ஷாகிராவும்.
" ஆமாண்டி, நானும் சாரும் மதுரையில ஒரே காலேஜ்ல படிச்சோம், சார் எனக்கு சீனியர், அப்போ தான் எங்களுக்கு ஒருத்தர ஒருத்தர் பிடிச்சி போச்சு, படிப்பு முடிஞ்சு நானும் சாரும் வேலைக்கு போற வரைக்கும் காத்திருந்தோம்.. அப்புறம் எங்க ரெண்டு பேர் வீட்லயும் சொன்னோம்.. அவ்ளோ தான், தாம் தூம்னு குதிக்க ஆரம்பிச்சுட்டா.. எங்களுக்கு அது ஒன்னும் பெரிய அதிர்ச்சியா இல்ல.. அதான் நடக்கும்னு எங்களுக்கு ஏற்கனவே தெரியும், நாங்க ரெண்டு பேரும், எங்களோட நண்பர்கள் துணையோட பதிவு திருமணம் பண்ணிக்கிட்டோம் " என்று ராதா மேடம் சுருக்கமாக கூறி முடித்தார்..
" வாவ் சூப்பர் மேடம், உங்க ரெண்டு பேருக்குமே வேலை கிடைச்ச அப்பறம் ஏன் மேடம், சார் எப்பவும் வீட்ல இருக்காங்க, உங்களையும் டிங்குவையும் ஆபிஸ், ஸ்கூல்ல விட்டு கூடவே இருந்தும் கூட்டிட்டு வராங்க ...? "
" நான் வேலைக்கு எதுக்கும் போகலையாங்கறத தான் மறை முகமா கேக்கறா பாரும்மா.. " என்று சார் சிரித்துக் கொண்டே சொல்ல,
" அய்யோ.. சார் அப்படி எல்லாம் இல்ல, சும்மா தான் கேட்டேன்... " என்றாள் ஆனந்தி.
" அது ஒன்னும் தப்பு இல்லடீ... சும்மா கேக்கலாம் விடு .. அது என்ன விஷயம்னா, எனக்கு சென்ட்ரல் கவுர்மெண்ட் ஜாப், சாருக்கு ஸ்டேட் கவர்மென்ட் ஜாப், டிங்கு பிறந்ததும் பாப்பாவை பாத்துக்க வீட்ல யாரும் இல்ல, அதனால எங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வேலையை விட முடிவு செய்தோம்.. முதல்ல நான் தான் வேலையை விடறேன்னு சொன்னேன், அதுக்கு சார் சொன்னாங்க, ' இல்லம்மா நான் வேலையை விடறேன், உனக்கு சென்ட்ரல் கவர்மெண்ட் ஜாப், எனக்கு அப்புறம் உன் வேலை உனக்கு துணையாக இருக்கனும், அதனால நீ விட வேலையை வேண்டாம், நான் வேலையை விடறேன்னு " சொன்னாரு. அவர் கொஞ்சம் கூட ஈகோ பாத்தது இல்லடீ இப்போ வரைக்கும், எனக்கும், டிங்குக்கும் தேவையான அத்தனையும் பாத்து பாத்து செய்றார்... " என்று கூறியபடியே சாரோட கைக்களைப் பிடித்துக் கொண்டு சொல்லும் போதே ராதா மேடம் கண்கள் பனித்தன.
சார் மேடத்தின் அருகில் வந்து தோளோடு அணைத்தபடி,
" எதுக்கு இப்போ இவ்ளோ எமோஷனல்... நீ கூட தான் வீட்டுக்கு வேண்டிய வருமானத்துக்காக இவ்ளோ வேலை பாக்கற.. " என்று கூறி சமாதானப்படுத்தினார்.
ஆனந்தியும் ஷாகிராவும் மனம் நெகிழ்ந்து போனார்கள். சிறிது நேரம் இருந்து விட்டு அங்கிருந்து விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள்.
வீட்டுக்கு போகும் வழியில்..
" ஏய் ஷாகி, சார் சூப்பர் கேரக்டர் இல்ல.. மேடம், குழந்தைக்காக தன்னோட வேலையை கூட விட்டுட்டாரு... "
" ஆமாப்பா, மேடம் கூட பாரேன் ஒரு பிராமினா இருந்துகிட்டு சாருக்காக சாப்பாடு உட்பட அப்படியே மொத்தமா ஏத்துக்கிட்டும், ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விட்டுக் கொடுத்தும் வாழறாங்க.. "
" நமக்கு வாழ்க்கையில ரோல் மாடலே இவங்க தான்பா "
" சரியா சொன்ன ஆனந்தி, நம்ம வீட்லயும் இருக்குதுங்களே எப்பவும் வீட்ல சண்டை .. ச்சே.. " என்று அலுத்துக் கொண்டாள் ஷாகிரா.
வருடங்கள் பல ஓடின.. ராதா மேடத்துக்கு எந்த ஊரில் டிரான்ஸ்பர் கிடைத்தாலும் கடிதம் மூலம் தன்னுடைய புதிய தொலைப்பேசி எண்ணை ஆனந்திக்கு தெரியப்படுத்தி விடுவார். கடிதம் மற்றும் தொலைப்பேசி மூலம் அவர்கள் அன்பும் உறவும் தொடர்ந்தது.
ஆனந்திக்கும், ஷாகிராவுக்கும் திருமணம் ஆகி விட்டது. ஷாகிராவின் திருமண வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை, ஆனந்திக்கு தன் மனம் போல நல்ல புரிதலுடன் கூடிய கணவர் அமைய வாழ்க்கை நன்றாகவே இருந்தது.
எப்போதும் தன் கணவரிடம், ராதா மேடம் மற்றும் அக்பர் சார் பற்றி பேசாமல் இருந்தது இல்லை. அந்நியோனமான ஆதர்சன தம்பதிகள் என்றால் ஆனந்திக்கு அவர்கள் தான். ஏனோ கடந்த சில ஆண்டுகளாக அவர்களிடம் இருந்து எந்த தபாலும் இல்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நாள் தபாலில் ஒரு திருமண அழைப்பிதழ் ஒன்று வந்தது. ராதா மேடம் தான் அனுப்பி இருந்தார். அது டிங்குவின் திருமண அழைப்பிதழ். ஆனால் உள்ளே பிரித்துப் பார்க்கும் போது, மணமகன் பெயர் ரஷீத் என்கிற டிங்கு என்றும் மணமகள் பெயர் ஷாஜிதா என்றும் இருந்தது.
உடனே ஆனந்தி, ஷாகிராவுக்கு போன் செய்தாள். தனக்கும் அழைப்பிதழ் வந்து இருப்பதாக ஷாகிரா கூறினாள். இரண்டு குடும்பமும் சேர்ந்து டிங்குவின் திருமணத்திற்கு போவதாக முடிவு செய்தனர்.
இரண்டு பேரும் தங்கள் கணவர், குழந்தைகள் உட்பட அனைவரும் ராதா மேடம் வீட்டுக்கு முதல் நாளே செல்ல முடிவு செய்தனர்.
பல வருடங்களுக்கு பின் மேடம், சாரை சந்திக்கப் போகிறோம் என்ற மட்டற்ற மகிழ்ச்சியும் ஆவலும் ஆனந்தி மற்றும் ஷாகிரா முகத்தில் பொங்கியது.
மேடம் வீட்டு காலிங் பெல் அடிக்க கை எடுக்கும் போதே சார் வாசலுக்கு வந்து விட்டார். அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்றார்.
டிங்கு எவ்வளவு வளர்ந்துட்டான் , அழகான இளைஞனாக, மேடம் போலவே டிங்கு அழகு, வீட்டில் நிறைய விருந்தாளிகள், ஆண்கள் குல்லா போட்டும், பெண்கள் பர்தா அணிந்தும், தலையில் துணிப் போட்டும் இருந்தனர். ராதா மேடத்தை மட்டும் இன்னும் பார்க்கவில்லை .
சார், நெருங்கிய உறவினர் சிலருக்கு அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
" ஏய் ஷாகி, என்னடி இன்னும் மேடத்தை பாக்கவே இல்ல, ஏன் அவங்கள காணோம், சார் மட்டும் கலகலன்னு பேசிகிட்டு இருக்காரு " என்று காதோடு கிசுக்கிசுத்தாள் ஆனந்தி.
" இரு, நான் கேட்டுப் பாக்கறேன் " என்றவள்,
" சார், மேடம் எங்கே சார் வேலையா இருக்காங்களா? அவங்கள இன்னும் பாக்கவே இல்லையே.. " என்றாள் ஷாகிரா.
" ரஷீத் இவங்கள உங்க அம்மாகிட்ட கூட்டிட்டு போ.. " என்று பட்டும் படாமலும் கூறிவிட்டு சார் சென்று விட்டார். டிங்கு வந்து அவர்களை முதல் மாடிக்கு அழைத்துச் சென்றான்.
டிங்குவிற்கு அவர்களை மறக்கவில்லை, அவ்வப்போது போனில் பேசி இருப்பதாலும், அவர்களுடன் அந்யோன்யமான பழக்கம் இருந்ததாலும்...
மேலும் அவர்கள்கள் தன் திருமணத்திற்கு இவ்வளவு தூரம் வந்து இருப்பதில் அவனுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.
" ஆமா, உன் பேர் என்ன மாத்திட்டாகளா ? டிங்கு தான உன் பேரு.. " என்றாள் ஆனந்தி.
" ம் ...அது ஒரு பேரு, இது ஒரு பேரு.. என்று விளையாட்டாக கூறி விட்டு சிரித்தபடியே அம்மாவின் அறை கதவை தட்டினான் டிங்கு.
கதவை திறந்த பெண்மணியை பார்த்து, யார் என
நெற்றியை சுருக்கிப் பார்த்தாள் ஆனந்தி.
" என்னடி.. அப்டி பாக்கற... டீ.. ஆனந்தி.. " என்ற குரல் கேட்டு, இது மேடம் குரல் தான் என்று உறுதி செய்துக் கொண்டவள், மேடத்தை இறுகக் கட்டிக் கொண்டாள்.
" அய்யோ மேடம் நீங்க அடையாளமே தெரியல, ஆளே மாறீட்டீங்க.. " என்றாள் ஷாகிரா வியப்பு அகலாமல்.
தங்களுடன் வந்த கணவர் மற்றும் குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்தனர்.
" மேடம், ஆனந்திக்கு எப்பவும் உங்கள பத்தின பேச்சு தான்... அவ பேசி, பேசியே.. எனக்கே உங்கள பாக்கனும்னு ஆர்வம் வந்துடுச்சி .." என்றார் ஆனந்தியின் கணவர்.
" இங்கயும் அதே தான் " என ஷாகிராவின் கணவரும் சொல்ல, சந்தோஷத்தில் மேடம் கண்களில் ஆனந்த கண்ணீர் எட்டிப் பார்த்தது.
டிங்குவுடன் மற்றவர்கள் கீழே சென்று விட, ஆனந்தியும் ஷாகிராவும் மட்டும் ராதா மேடம் அறையில் இருந்தனர்.
ஆனந்தி மேடத்தின் அறையை சுற்றி கண்களால் துழவிப் பார்த்தாள்.. முழு அறையுமே பூஜை அறையாக இருந்தது. அனைத்து கடவுள்களும் அங்கே வீற்றிருந்தனர். மேடம் நெற்றியில் பெரிய பொட்டுடன் அடுக்கடுக்காக விபூதி, குங்குமம், சந்தனம், பச்சை வண்ணப் பொட்டு, மஞ்சள் என சிக்னல் லைட்டு போல வரிசையாக, முடி நரைத்து மிக வயதானத் தோற்றம் கொண்டு இருந்தார். பழைய ராதா மேடம், எவ்வளவு ஸ்டைலாக, ஸ்லிம்மாக, அளவாக வெட்டிய முடி, சின்ன பொட்டு, சின்ன ஒற்றைக் கல் கம்மல் என்று ஒரு அழகிய ஹீரோயின் போல கெத்தாக இருப்பாரே ... வயது கூடி இருந்தாலும் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை .
" என்னடி.. வந்ததுல இருந்து ஏதோ யோசிட்டே இருக்க.? ராதா மேடம் கேட்க,
" ப்ச்..தெரியல மேடம், நிறைய கேள்வி உள்ள ஓடுது, அதை எப்படி கேக்கறதுன்னு தெரியல.. நான் பார்த்த எதுவுமே இப்போ இங்க இல்ல.. நீங்க, சார்..அப்புறம்
டிங்கு கூட ரஷீத் ஆகி இருக்கான், சார் குல்லாவோட இருக்காரு, நீங்க மொத்தமா ஒரு சாமியாரம்மா மாதிரி இருக்கீங்க, உங்க வீட்ல நான் பார்த்த ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி அது... அது.. வந்து மேடம்... " அதற்கு மேல் ஆனந்திக்கு பேச முடியவில்லை.
" ஆனந்தி, நீ தாராளமா கேக்கலாம்டி, ஏன் தயங்குற.. சரி விடு, நானே சொல்றேன்..சாரும் நானும் ரொம்ப சந்தோஷமா தான் இருந்தோம்... சில வருடங்களுக்கு முன்னாடி சாரோட சொந்தக்காரங்க எங்களோட சமாதானமா ஆனாங்க... எல்லாரும் வர போக இருந்தாங்க, எல்லாமே நல்லா தான் போய்ட்டு இருந்துச்சி, டிங்கு படிப்பை முடிச்சிட்டு, பேங்க் எக்ஸாம் எழுதி நல்ல வேலையிலயும் இருக்கான் ... எங்களுக்கு எந்த குறையும் இல்ல....
ஒரு நாள் சாரோட அம்மா டிங்குக்கு தன் சொந்தத்துல பொண்ணு இருக்கறதா சொன்னாங்க.. "
" எனக்கு அதுல எதுவும் பிரச்சனை இல்ல, ஆனா அவங்களோட மதத்துக்கு டிங்குவை மாறனும்னு சொன்னாங்க, அதுக்கு நான் ஒத்தக்கல... ஆனா அதுக்கு சார் எதுவுமே சொல்லல.. அமைதியாவே இருந்தாரு.."
" நான் சார்கிட்ட கேட்டதுக்கு,
' அம்மா சொன்னதுல தனக்கு முழு சம்மதம்னு ' சொல்லிட்டாரு..
" சாருக்கு என் மேல கோவம் எதுவும் இல்ல, ஆனா ஏதோ ஒரு விரக்தி நிலை தெரிஞ்சிது, இத்தனை வருமாவும் வேலைக்கு போகாமல் என்னோட வருமானத்துல இருந்த விரக்தி அது, ஆனால் அது அவருக்கே தெரியாம அவருக்குள்ள அழுத்திக்கிட்டு இருந்து இருக்கு... அந்த அழுத்தத்தை அவர் எப்பவும் எங்கிட்ட காட்டினது இல்ல, ஆனா அதோட முழு வெளிப்பாடு தான் சார் எடுத்த ரஷீத்தோட இந்த கல்யாண முடிவு "
" மதங்களை கடந்த எங்க அழகான காதல் இன்னும் எங்க மனசுல இருக்கு, நான் சார்கிட்ட அதுக்கப்புறம் எதுவும் விவாதம் பண்ணல, சாருக்காக விட்டுக் கொடுத்துட்டேன்.. டிங்குவும் அவங்க மதப்படி பெயர் மாற்றிக்கவும் திருமணத்துக்கும் சம்மதிச்சான்.. ஆனா அவன் என் மனச புண்படுத்தல, என்னோட சம்மதமும் வேணும்னு கேட்டு தான் அவன் சம்மதிச்சான் ... டிங்கு எப்பவும் கிரேட் தான் " என்றார் ராதா மேடம்
" ஆனா சார்கிட்ட ஏனோ எனக்கு பழையபடி ஒட்டல, சொல்லப் போனா அவருக்கும் தான். என்னோட சொந்தம் இன்னமும் கூட என்னை ஏத்துக்கல. ஆனா இப்போ எனக்கு யாருமே இல்லாம தனியா ஆனது போல இருக்கு டீ...நாங்க ஒரே வீட்டுல இருந்தாலும் பேசிக்கிறது கூட கொஞ்ச கொஞ்சமா நின்னு போச்சு. நான் என் தனிமையை வெறுமையை போக்கிக்க முழுக்க பக்தியில கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். அதனால மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு..."
" ஆனா சாருக்கு அது பிடிக்கல, வீட்ல இப்டி பூஜை அறை எல்லாம் வச்சி சாமி கும்பிடறது, ஹராம்னு சொல்லி என் மேல கோவமா இருக்காரு " என்று மேடம் சொல்லி முடிக்கையில் ஷாகிராவும், ஆனந்தியும் கவலைத் தேய்ந்த முகத்தோடு இருந்தனர்.. விட்டால் ஆனந்தி அழுதே விடுவாள்.
ஆனந்தியின் கணவரும், ஷாகிராவின் கணவரும் சாருடன் கீழே பேசிக் கொண்டு இருந்தனர்.
" சார், நீங்களும் மேடமும் எவ்வளவு கிரேட் ஆனந்தி உங்க ரெண்டு பேர் பத்தியும் பேசாத நாளே இல்ல, வாழ்ந்தா உங்க மாதிரி கணவன் மனைவியா வாழணும்னு அடிக்கடி சொல்லுவா... உங்களுக்கு தெரியுமா சார்..நாங்களும் லவ் மேரேஜ் தான்... " என்றவுடன் சார் அவர் முகத்தை உற்று நோக்கினார்.
" கிருஸ்தவ மதத்தை சேர்ந்த நானும் ஆனந்தியும் இன்னைக்கு வரைக்கும் மதம் பற்றிய எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லாம இருக்கோம்.. எங்க குழந்தைங்களையும் எதுலயும் கட்டாயப்படுத்தாம அவங்க விருப்பபடி வளர்க்கறோம்... இதுக்கெல்லாம் காரணம் நீங்களும் மேடமும் தான் சார்... " மன நெகிழ்ச்சியோடு பேசிக் கொண்டு இருந்தார் ஆனந்தியின் கணவர் சார்லஸ்.
பக்கத்தில் நின்று இருந்த டிங்கு அப்பாவைப் பார்க்க..
சார்லஸ் பேச, பேச அக்பர் சாருக்கு உள்ளே ஏதோ புரட்டியது போல இருந்தது. தன் காதல் மனைவி ராதாவை நினைத்து மனம் விம்மியது.
" அப்பா, வாங்கப்பா .. ப்ளீஸ் அம்மாகிட்ட பேசுங்க.. " என்றான் டிங்கு.
சார் தயங்கி, தயங்கி நிற்க..
சார்லஸ் க்கும், ஷாகிராவின் கணவருக்கும் ஒன்றும் புரியவில்லை..
" அப்பா.. வாங்கப்பா யோசிக்காதீங்க.."
" ப்ச்.. டிங்கு நான் எதுவும் வேணும்னு.. பண்ணல, ஆனா இப்போ ... எப்டி..போய் .. என்ன சொல்லி பேசறது... தப்பு பண்ணின குற்ற உணர்ச்சி தோனுது டிங்கு.."
சாருக்கு நா தழுதழுத்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு ராதா மேடத்தின் அறையில் அனைவரும் இருந்தனர்..அக்பர் தன் குல்லாவை கழற்றி இருந்தார்.. ராதா மேடம் அறை பூஜை அறையாக மாறிய பின் சார் உள்ளே வருவது இதுவே முதல் முறை. மேடம் கண்கள் ஆச்சரியத்தில் .. சற்றும் எதிர்பாராத போது, சார் ராதா மேடத்தை இறுகக் கட்டிக் கொண்டு தேம்பி, தேம்பி அழுதார். அழுகை நிற்க கொஞ்ச நேரம் ஆனது.
" சாரி ராதா, சாரிம்மா, என்னை மன்னிச்சிடு, உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் ..எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல, எப்படி எல்லாம் உங்கிட்ட நடந்துக்கிட்டேன், எனக்கு என்ன சொல்றதுன்னே புரியல " என்று அழுதபடியே கூற...
ராதா மேடம்க்கு ஒன்றும் புரியவில்லை, சுற்றி அனைவரும் நிற்பதால் வெட்கம் தாளாமல் சிறிது நேரத்தில் ராதா மேடம் தன்னை விடுவித்துக் கொண்டார்..
டிங்கு தவிர, ஆனந்தி, ஷாகிரா மற்றும் அவர்கள் கணவன்மார்களுக்கும் ஒன்றுமே புரியவில்லை...
மறுநாள், டிங்குவின் திருமணம் மணமகளின் சம்மதத்தோடு எந்த ஒரு மத சடங்குகளும் இன்றி இனிதே நடந்தது.
காதல் வளர்ந்தது இறுதிவரை.
பூ. கீதா சுந்தர்
சென்னை
91508 27982
#174
51,113
2,780
: 48,333
58
4.8 (58 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
isaisangamamgrand
jegac.eswar
Super
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50