JUNE 10th - JULY 10th
உறவுக்கு கை கொடுப்போம்
வாசு தேநீர் கடையில் தேநீர் அருந்திவிட்டு தனது இருசக்கர வாகனத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான். அன்று அலுவலகத்தில் ஏகப்பட்ட வேலைகள் அவனை நம்பி இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. மிகவும் களைப்புடன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
அப்போதுதான் அவனுடைய மனைவி சித்ரா கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது. "என்னங்க சாயந்திரம் 6 மணிக்கு உங்க அப்பா ஊரிலிருந்து வரதா நேத்து தபால் போட்டிருந்தார். பஸ் ஸ்டாண்டுக்கு போய்ட்டு மறக்காம கூட்டிட்டு வந்துடுங்க. போனவாட்டி நின்ன அதே கடைக்கு முன்னாடி தான் நின்னுட்டு இருப்பாரு மாமா".
வாசுவுக்கு தூக்கிவாரிப்போட்டது. எப்படி நம்ம மறந்தோம் ஐயோ அப்பா ரொம்ப பாவம் ஆச்சே என்று மனதிற்குள் நினைத்தபடி நேரத்தைப் பார்த்தான் கடிகாரத்தில் மணி அப்போது ஏழு கடந்து கொண்டிருந்தது.
பத்து நிமிடத்தில் மிகவும் விரைவாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து சித்ரா சொன்ன கடைக்கு முன்பாக பார்த்தான். 'தளர்ந்த தேகத்துடன் கையில் இரண்டு பையுடன் அவர் தந்தை ராமசாமி மகனின் வருகைக்காக காத்திருந்தார்'.
வாசுவை கண்டவுடன் அவர் கண்களில் ஆனந்த கண்ணீர். சாரிப்பா ஆபிஸ்ல நிறைய வேலை சித்ரா சொன்னது மறந்துடுச்சு என்று மிகவும் உடைந்த குரலில் கூறினான். "பரவாயில்லப்பா எனக்கு என்ன வேலையா வெட்டியா உனக்கு உத்தியோகம் தான் முக்கியம்". பொழுது போகாம இந்த பஸ் ஸ்டாண்ட்ல பஸ் எவ்வளவு வருது, போகுது என்று எண்ணிக் கொண்டிருந்தேன் நேரம் போறதே தெரியல.
வாசு தனது பள்ளிக்கால நினைவுகளுடன் பின்னோக்கி சென்றான். வீட்டில் இருந்து பள்ளி அதிகதூரம் இருந்ததனால் தினமும் இராமசாமி தான் வாசுவை வீட்டிற்கு அழைத்து வருவார். சில நேரம் அவர் வருவதற்கு தாமதம் ஆகிவிடும் அப்போதெல்லாம் வாசு அவரை கடிந்து கொள்வான். என்னப்பா நீங்க இவ்வளவு லேட்டா வந்தா எப்படி எனக்கு வீட்டுக்கு போய் நண்பர்கள் உடன் விளையாட நேரமே இருப்பதில்லை என்று கடிந்து கொள்வான்....
ராமசாமி அருகில் இருக்கும் நகரத்தில் உள்ள ரைஸ்மில்லில் மேனேஜராக வேலை செய்து கொண்டிருந்தார். சம்பளம் மாதம் 1500 ரூபாய் தான்... அவரின் மனைவி பாக்கியம். ராமசாமி அவர் மனைவியிடம் மாதாமாதம் 800 ரூபாய் மட்டுமே குடும்ப செலவிற்காக கொடுப்பார். 300 ரூபாய் சேமிப்பு மற்றும் 400 ரூபாயை அவசர தேவைக்காக வைத்துக் கொள்வார். மகன் வாசுவிற்கு தினமும் இரண்டு ரூபாய் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வாசுவும் ஓரளவுக்கு நன்றாக படித்து கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து சென்னையில் புகழ்பெற்ற ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியில் இருந்தான். ராமசாமி வாசுவை மிகவும் கண்டிப்புடன் வளர்க்கவில்லை... ஓரளவிற்குத் தான் பட்ட கஷ்டங்களை மட்டும் சொல்லி வளர்த்தார். வாசு வேலைக்கு வந்த சிறிது காலத்திலேயே அவரது தாய் பாக்கியத்தின் மரணம் திடீரென குடும்பத்தையே நிலைகுலையச் செய்துவிட்டது.
கிராமத்தில் சொந்த ஒரு ஓட்டு வீடும் பசு மாடுகள் இருந்ததினால் கடன் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார் ராமசாமி. வாரத்தின் இறுதி நாட்களில் வாசு கிராமத்திற்கு வந்து சென்று கொண்டிருந்தான். வாசு அந்த காலத்து நடிகர் கார்த்திக் போன்று அழகாக இருந்ததால் நிறைய பேர் அவனை தங்கள் வீட்டிற்கு மாப்பிள்ளையாக விரும்பினர்.
வாசுவின் அத்தை மகள் தான் சித்ரா. ராமசாமி தனது தங்கைக்கு சிறுவயதிலேயே வாக்கு கொடுத்திருந்தார். உனக்கு பெண் பிள்ளை பிறந்தால் எனது பையனுக்கு மனம் முடிக்கிறேன் என்று. வாசு வேலைக்கு சென்றதிலிருந்து உறவு பெண்ணை மணம் முடிப்பதில் அவனுக்கு இஷ்டமில்லை.
அவன் நண்பனும் மருத்துவருமான சங்கரிடம் இதுபற்றி பேசுகையில் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டால் பிற்காலத்தில் பிறக்கப்போகும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு ஏற்படும் என்று அவர் கூறியிருந்தார். இதைக் காரணம் காட்டி வாசு தன் தந்தையை ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான்.
அதற்கு காரணமும் இருந்தது தான் பணி செய்யும் இடத்தில் ஒரு பெண்ணை வாசு காதலித்துக் கொண்டிருந்தான். அவள் பெயர் ஸ்டெல்லா பாரம்பரியமான கிருத்துவ குடும்பம். இருவரும் மிகவும் கண்ணியமான முறையில் தான் தங்கள் காதலை வளர்த்து வந்தார்கள். வெளியே அதிகம் சுற்று மாட்டார்கள்.
ஒரு சில வருடங்களுக்கு பிறகு வாசு ஸ்டெல்லாவிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்... உன் அப்பாவிடம் நான் வந்து பேசி உன்னை திருமணம் செய்கிறேன் என்று கூறினான். ஸ்டெல்லா மிகவும் பதட்டத்துடன் அதெல்லாம் வேண்டாங்க கொஞ்ச நாள் கழிச்சு நானே சொல்லிக்கிறேன். எங்க அப்பாக்கு காதல் கத்திரிக்காய் எல்லாம் சுத்தமா பிடிக்காது என்று கூறினாள்.
இரண்டு நாட்களாக ஸ்டெல்லா அலுவலகத்திற்கு வரவில்லை. தொலைபேசியும் எடுப்பதில்லை. அடுத்த ஞாயிற்றுக்கிழமை மதியவேளையில் வாசு ஸ்டெல்லா வீட்டிற்கு அவளுக்கு தெரியாமல் சென்றான். அழைப்பு மணியை அடித்து விட்டு வெகு நேரம் வெளியில் காத்திருந்தான். யாரும் வருவதற்கான அறிகுறியே இல்லை. நேரம் செல்லச் செல்ல வாசுவுக்கு பதட்டம் அதிகமாகியது.
அந்த பகுதி வளர்ந்துவரும் பகுதி என்பதால் அருகில் வீடுகள் மிகவும் குறைவாகவே இருந்தது. எங்காவது ஜன்னல் இருக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டின் வலப்பக்கம் பாதை செல்வது அவனுக்கு தெரிந்தது அதன் வழியாக நடந்து சென்று கொண்டிருக்கும்போது நல்லவேளையாக அங்கு ஒரு ஜன்னல் தென்பட்டது... கொசுவலை அடிக்கப்பட்டு இருந்தால் உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று அவன் கண்ணுக்கு சரியாக புலப்படவில்லை... அங்கிருந்தும் ஸ்டெல்லா ஸ்டெல்லா என்று பலமுறை குரல் கொடுத்தான்... பதில் இல்லை.
நேரம் செல்லச் செல்ல வாசுவுக்கு பதட்டம் அதிகமாகிக்கொண்டே இருந்தது... யாரையாவது துணைக்கு கூப்பிடலாம் என்றால் அவனுக்கு தெரிந்தவர்கள் யாரும் அந்த பகுதியில் இல்லை. மாலை நெருங்க நெருங்க சூரியன் ஒளியானது அந்த ஜன்னலில் பட்டது. வாசு மீண்டும் ஜன்னல் அருகே சென்று உள்ளே பார்த்தான். யாரோ ஒரு பெரிய மனிதர் மல்லாந்து படுத்து இருப்பது போன்று அவன் கண்களுக்கு புலப்பட்டது... அய்யா அய்யா என்று கத்தினான்... கண்களை குறுக்கிக்கொண்டு உள்ளே பார்த்தான், அப்படியே அதிர்ந்து போய் கீழே சரிந்தான் அவன் கண்ட காட்சி அவனுக்கு சிறு மயக்கத்தை கொடுத்தது. உள்ளே பெரியவர் தலைப்பகுதியின் அருகில் பக்கவாட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்தார்.
உடனே அந்த வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து விட்டான். சற்று தொலைவில் இருந்த ஒரு வீட்டின் முன்பாக போய் நின்று அங்கு இருப்பவர்களை உதவிக்கு அழைத்தான். அது ஒரு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீடு. அவர் வெளியே வந்தவுடன் தான் யார் என்பதையும் அந்த வீட்டில் நடந்த விஷயங்களை அவரிடம் கூறினான். அவர் உடனடியாக அருகிலிருக்கும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு அவர்கள் வருகைக்காக காத்திருந்தனர்.
மாலை நேரத்தில் நான்கு காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் ஸ்டெல்லா வீட்டின் முன்பாக தங்களது வாகனத்தில் வந்து இறங்கினர். வாசு அந்த அதிகாரிகளிடம் சென்று நடந்த விஷயங்களைக் கூறினான். கதவை உடைத்துக்கொண்டு அனைவரும் வீட்டின் உள்ளே சென்றனர். ஒருவித துர்நாற்றம் அனைவருக்கும் குமட்டலை ஏற்படுத்தியது.
வாசு கூறிய ஜன்னல் இருக்கும் அறைக்குள் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் நுழைந்தார்... அவர் கண்ட காட்சி அவரையே பதட்டம் அடையச் செய்தது... பெரியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனே வங்கி அதிகாரியை அழைத்தார் இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார்... சார் இவர்தான் ஸ்டெல்லா அப்பா பிரான்சிஸ் சேவியர் மிகவும் தங்கமான மனுஷன் சார் என்று தன் கண்களில் வரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கூறினார்.
மற்ற அறைகளில் சோதனை செய்து கொண்டிருந்த காவலர்கள் சமயலறையிலிருந்து ஐயா என்று குரல் கொடுத்தனர்... சோதனை மேல் சோதனையாக அங்கு ஸ்டெல்லாவும் கொலை செய்யப்பட்டு கிடந்தாள்... அதேபோன்று கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஸ்டெல்லாவை பார்த்தவுடன் வாசு மயங்கிக் கீழே சரிந்தான்.
மறுநாள் காலை இரு உடல்களும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது... வீட்டில் எந்த பொருளும் திருடு போகவில்லை... கொலையாளி யார்? விசாரணைக்காக வாசு அழைக்கப்பட்டான். இன்ஸ்பெக்டர் வாசுவிடம் கொலையாளி பிடிபடும் வரை நீங்கள் இந்த ஊரை விட்டு வெளியேறக்கூடாது என்று கூறியிருந்தார்.
விஷயம் முழுவதும் கேள்விப்பட்ட ராமசாமியின் சித்ராவும் அடுத்த நாள் காலை வாசுவின் இல்லத்திற்கு வந்தனர். சித்ரா வழக்கறிஞர் படிப்பை முடித்துவிட்டு ஒரு சீனியர் வழக்கறிஞரிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஸ்டெல்லாவின் உறவுக்கார பையன் ராபர்ட் மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. தீவிர விசாரணையில் ராபர்ட் தான் இந்த இரண்டு கொலைகளையும் செய்தான் என்று போலீசார் முடிவு செய்தனர்.... அவனிடம் அதற்கான காரணத்தையும் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினார்கள்....அவன் ஒருதலைப்பட்சமாக ஸ்டெல்லாவை காதலித்து வந்தான். வாசுவை பற்றி ஸ்டெல்லா தன் தந்தையிடம் கூறியதை ராபர்ட் கேட்டான்.
அன்றிரவு தலைக்கேறிய போதையுடன் ராபர்ட் ஸ்டெல்லா வீட்டுக்கு வந்தான்... பிரான்ஸிஸ்யிடம் உங்கள் மகளை நான் தான் திருமணம் செய்து கொள்வேன் மீறி செய்து வைத்தால் வரப்போற மாப்பிள்ளையை நானே என் கைகளால் கொன்றுவிடுவேன் என கர்ஜித்தான்.
ஸ்டெல்லாவும் பிரான்சிஸ் ராபர்ட்யை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார்கள். கையில் கொண்டு வந்த கத்தியால் முதலில் பிரான்சிஸ் கழுத்தை அறுத்து பின்பு ஸ்டெல்லாவை அதேபோல கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு இரு உடல்களை வெவ்வேறு இடத்தில் போட்டுவிட்டு... உள்பக்கமாக வீட்டை பூட்டி விட்டு வெளியேறி விட்டான். மறுநாள் வந்து உடல்களை அப்புறப்படுத்தி விட்டு தலைமறைவாக ஆகலாம் என்று எண்ணியிருந்தான். அதற்குள் வாசு வந்துவிட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ராமசாமியும் சித்ராவும் வாசுவை ஒருவகையாக தேற்றே பல மாதங்கள் ஆகியது. சித்ரா அருகில் இருந்து வாசுவை நன்றாக கவனித்துக் கொண்டாள். ராமசாமி ஒருநாள் வாசுவிடம்... நீ ஸ்டெல்லாவ கல்யாணம் பண்ணி இருந்தா கூட நான் உன்னை ஒன்னும் சொல்லிருக்க மாட்டேன்... இப்ப அவளே இல்ல உனக்கு கண்டிப்பா ஒரு துணை வேணும் அதனால நீ சித்ராவை கல்யாணம் பண்ணா உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன் என்று கூறினார்.
வாசுவிற்கு உள்மனம் உறுத்தியது. சித்ராவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உனக்கு இஷ்டம்னா அப்பா சொல்ற மாதிரி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று கேட்டான். அப்போது சித்ரா உங்கள நான் தப்பா நினைக்கலை அப்போ நீங்க நினைச்சது வேற மாதிரி இருந்தது. எனக்கு இதுல சம்மதம் என்று கூறினாள். திருமணம் இனிதே நடைபெற்றது.
வாசுவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு ஸ்டெல்லா எனப் பெயரிட்டான். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தந்தை ராமசாமி வாசு வீட்டிற்கு வந்து பேத்தியுடன் விளையாடி விட்டு ஒரு பத்து பதினைந்து நாட்கள் அங்கு இருந்துவிட்டு மீண்டும் கிராமத்திற்கு சென்று விடுவார்...
அதே போலத்தான் இந்த முறையும் வாசு வீட்டிற்கு ராமசாமி வருகை தந்தார். கடைசி வரை இந்த பந்தம் தொடர வேண்டும் என்று வாசு மனதிற்குள் நினைத்து அப்பாவின் கைகளை பிடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து சென்றான்.
தந்தைகள் மகன்கள் வாழ்க்கைக்கு என்றுமே ஏணி படிகள் தான்... சொந்தபந்தங்கள் என்றுமே நமது வாழ்க்கைக்கு துணை இருக்கும்.
ஹரி ரகோத்தமன் (ஹரி பிரசாத்)
40/87 கிழக்கு வீதி
திருக்கோயிலூர்
8838075077
#34
53,057
11,390
: 41,667
233
4.9 (233 )
ramasubbiah
jega.guru
jayarajvijay23
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50