அன்பு சூழ் மனது

பயண இலக்கியம்
5 out of 5 (4 )

“அன்பு சூழ் மனது”

.

“அம்மா…மா…ஆ..! என்று காலையிலிருந்தே விசுவத்தின் பிதற்றல் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அவருக்குப் பால்ய வயது நினைவுகள் நிழல்காட்சிகளாகத் தோன்றி மறைகிறது.

இதோ..

"அன்னம்..அன்னம்.." அழுது கொண்டிருந்த விஸ்வத்தையும்..முறைத்துக் கொண்டிருந்த பரணியையும் இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு..

“இப்பிடியா வளக்குறது புள்ளைய ?” என்று சத்தமாகக் கேட்டுக் கொண்டே புயலைப் போல உள்ளே நுழைந்தாள் வசந்தா..

“என்ன வசந்தா என்னாச்சு.விஸ்வம் ஏன் அழறான்.? இருந்து முந்தானையில் கையைத் துடைத்தபடியே ஓடி வந்தாள் அன்னம்.

“ஆமாம் போ அன்னம்.. பரணி விஸ்வத்தை நல்லா கடிச்சி வெச்சிட்டான்..அப்புறம் அழாம என்ன பண்ணுவான். இனிமேல் இப்பிடி கடிப்பியா..” என்று பரணியின் முதுகில் நாலு சாத்து சாத்தினாள் வசந்தா.

“ஏய்..என்ன இது பச்சைப் புள்ளையப் போட்டு இந்த அடி அடிக்கிற..!”

பரணியை இழுத்து மார்போடு அணைத்து அன்னம் சமாதானப் படுத்த விஸ்வத்தின் கையில் பரணி கடித்து பற்கள் பதிந்த இடம் சிவந்திருக்க தேங்காய் எண்ணை எடுத்து வந்து பூசி விட்டாள் வசந்தா.

“ஏண்டா அவன் கடிக்கிறப்பவே ஓங்கி ஒரு அறை குடுக்காம நல்லா கடின்னு இப்பிடியா கையை நீட்டிகிட்டு இருப்பே.!”.

“யாரையும் அடிக்கக் கூடாது..அன்பா இருக்கணும்னு அம்மா சொல்லி இருக்காங்க. யாருகிட்டவும் கடுமையா இருக்கக் கூடாதாம்”

தேம்பிக் கொண்டே விஸ்வம் சொல்ல ..

இப்படியும் ஒரு புள்ள..! எனக்கும் பொறந்திருக்கே ஒண்ணு ..இப்பவே அராஜகம் பண்ணிகிட்டு.."

அன்னத்தின் மடியிலிருந்த பரணியை தரதரவென இழுத்து கொண்டு போனாள் வசந்தா. விஸ்வத்தை சமாதானப் படுத்த அவனை மடியில் போட்டுக் கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தாள் அன்னம் . கதை கேட்டு முடித்ததும்,

“அம்மா..அம்மா..எனக்கு ஏன் விஸ்வநாதன் னு பேர் வெச்சே..?

“விஸ்வநாதன்னா இந்த உலகத்துக்கே அரசன், கடவுள்னு அர்த்தம்டா கண்ணா!

“போம்மா..இதை நான் என் சினேகிதங்கிட்ட சொன்னா சிரிப்பாங்க. சமையல்காரர் மகன் நான். எப்பிடிம்மா இந்த உலகத்தை ஆள முடியும்.?.

ஏன் முடியாது? அன்பான மனசு ஒண்ணு இருந்தா போதுமே ! இந்த உலகத்தையே கட்டி ஆளலாம்.

நாம மசூதிக்கோ, சர்ச்க்கோ போகக் கூடாதுன்னு பஷீரும்,ஜார்ஜும் சொல்றாங்கம்மா. போனா நம்ம மதத்து சாமிக்குக் கோவம் வந்துருமாமே”

அதெல்லாம் பொய்டா கண்ணா.!.சாமியும், மதமும் எல்லோருக்கும் ஒண்ணுதான். மனிதம் தான் பொதுவான மதம். நீ தாராளமா போய்ட்டு வா!.

புரிந்ததோ இல்லையோ அந்த வயசில்.! தலையை ஆட்டி வைப்பான்.

அம்மா எப்பவும் இப்பிடித்தான். ரொம்ப மென்மையானவள்.அதிர்ந்து பேசாதாவள். அன்பானவள்.அந்த அன்பைத்தான் தாரக மந்திரமாக மகனுக்கும் போதித்து வைத்தாள். விஸ்வமும் வளர்ந்தான் அந்த அன்பு என்னும் மந்திரச் சொல்லுக்கு கட்டுப்பட்டு சகல ஜீவராசிகளிடமும் அன்பைப் பொழிந்தான். அவனுடைய அப்பாவும் ரொம்ப சாது. விஸ்வத்திற்கு பத்து வயதாக இருக்குப் போதே இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறச் சென்று விட்டார்.

அவர் நினைவடுக்குகளில் இருந்து ஒவ்வொரு காட்சிகளாகத் தொடர்கிறது.

இன்னொரு நாள்..”அம்மா விஸ்வநாதர்னு காசியில் ஒரு கடவுள் இருக்காராமே. ரகு சொன்னான் அவரைப் போய்ப் பாக்கணும்மா.நாளைக்கே போலாமா?”

மகனை உச்சி மோந்து அவன் முன் நெற்றியில் முத்தம் பதித்தவள்..

“காசிக்குப் போகணும்னா கொஞ்சம் பணம் தேவைப்படும். இப்ப இருந்தே மாசா மாசம் நாம உண்டியல்ல பணம் போட்டுகிட்டு வரலாம்.” போட்டார்கள். ஆனால் உண்டியலில் சேரும் பணம் அவ்வப்போது பஷீரின் அக்கா திருமணத்திற்குப் புடவை எடுக்கவோ..ஜார்ஜின் அம்மாவின் மருத்துவத்திற்கோ ரகுவின் பூணூல் கல்யாண செலவுக்கோ யாருக்கு அவசரத்தேவையோ அவர்களுக்காக எடுக்கப்பட்டது.. திரும்ப அந்தப் பணத்தை உண்டியலில் போடும் போது சிறிது வட்டியுடன் போடுவார்கள். அந்தப் பணம் ஜாதி,மதம் பாராமல் பலருக்கும் உபயோகமாகிக் கொண்டிருந்ததில் அந்த ஜீவன்கள் இரண்டும் மகிழ்ந்தன.

”என்னம்மா இது நாம காசிக்கு போலாம்ன்னு நினைக்கிறப்பல்லாம் அந்தப் பணத்துக்கு வேற ஒரு அவசரத் தேவை வந்துடுதே !"

"அந்தப் பணம் நம்முடையதில்லைடா கண்ணா.! அது இறைவனோட பணம். அது எப்போ,யாருக்குப் பயன்படணும்னு இருக்கோ அது அவருடைய சித்தம். நமக்கு எப்போ காசிக்குப் போக அவரோட ஆணையும்,ஆசியும் கிடைக்குதோ அப்போ கண்டிப்பா போகலாம். அதுவரை இந்த உண்டியல் பணம் தேவையானவர்களுக்கு உதவட்டும். “பிறரை மகிழ்வித்து மகிழும் மனம்தான் ஆண்டவன் குடியிருக்கும் வீடு” என்றாள்.

ஆனால் அன்னத்தின் இறுதி மூச்சு நிற்கும் வரை கங்கையில் முழுகவோ, விஸ்வநாதரைத் தரிசிக்கவோ அந்த சர்வேஸ்வரன் ஏனோ அனுமதி தரவில்லை. உண்டியலில் சேரும் பணம் மட்டும் தர்மகாரியங்களுக்காகப் பயன்பட்டு வந்தது. சரி அம்மாவின் அஸ்தியையாவது கங்கையில் கரைக்கலாம் என்ற விஸ்வத்தின் ஆசையாவது நிறைவேறியதா? அதுவுமில்லை. அம்மா இறந்த சமயம் அவர் மகன் குமரனுக்கு விஷக்காய்ச்சல் கண்டு ஆஸ்பத்திரியில் படுத்திருக்க..அருகிலிருந்த நீர்நிலையில் அம்மாவின் அஸ்தியைக் கரைத்து விட்டு மகனிடம் ஓடினார். பலவருடங்கள் கழிந்து கையில் வேண்டிய அளவு பணம் சேர்ந்த நிலையில், காசிக்குப் போகலாமென மனைவி, மகனிடம் கேட்க இருவருமே வரமுடியாதென சத்யாக்கிரகம் செய்ய..விரக்தியுடன் அதன் பிறகு உண்டியலில் பணம் சேர்ப்பதையே நிறுத்தி விட்டார். ஆனால் உதவிகளைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருந்தார்.

அவர் நினைவலைகளில் மீண்டும் காசிக்குப் போக வேண்டுமென்ற எண்ணம் மேலெழும்ப..அம்மாவின் கை பிடித்து காசிக்கு அழைத்துச் செல்வது போலக் காட்சிகள்.

விஸ்வத்தின் பிதற்றலை அதிகாலை எழுந்ததில் இருந்தே கேட்டுக் கொண்டிருந்த விஸ்வத்தின் மருமகள் தாரிணிக்கு மனசுக்குள் ஏதோ படபடப்பாகவே இருந்தது. படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமனாருக்குத் தேவையான பணிவிடைகளை செய்து முடித்துத் தான் சூபர்வைசராக வேலை செய்யும் பிரபலமான துணிக்கடைக்குப் பத்து மணிக்குள் செல்ல வேண்டும். பத்தாவது படிக்கும் மகன் வாசுவுக்கு இன்று மாடல் எக்ஸாம். அவனை எழுப்பிப் படிக்க வைக்க வேண்டும். கடைக்கு ஒரு வாரமாக லீவு போட்டாயிற்று. இன்று போயே ஆக வேண்டும். ஆனால் ஏனோ இன்று உடம்பும், மனசும் ஒத்துழைக்க மறுக்கிறதே…! கடைக்கு ஃபோன் செய்து லீவ் சொல்லி விடலாமா? ஆமாம் அதுதான் சரி.

இன்றும் லீவ் சொல்லி விடலாமென முடிவெடுத்தவுடந்தான் .படபடப்பு குறைந்த மாதிரி இருந்தது. கடந்த ஒரு வாரமாகவே விசுவத்தின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. திட உணவு எதையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திரவ உணவுகள்தான். அதையும் மறுதலித்து விடுகிறார். நாக்கும்,உதடும் வறண்டு போகாமல் இருக்க ஒரு ஸ்பூன் தண்ணீர் மட்டும்தான் இறங்குகிறது. எத்தனை பேருக்கு உணவு சமைத்துப் பரிமாறி,மகிழ்ந்த ஆத்மா. இன்று ஒரு வாய்க்கஞ்சி கூட சாப்பிட முடியாமல் படுக்கையில் கிடப்பதைப் பார்த்தால் மனசு பரிதவிக்கிறது தாரிணிக்கு.

திருமணமாகிப் புகுந்த வீட்டுக்குள் முதன்முதலாக அடியெடுத்து வைத்ததும்..தன் கையால் செய்த பால்பாயசத்தை மருமகளுக்குக் கொடுத்து உபசரித்தாரே.. அந்த பாயசத்தில் தித்தித்தது விஸ்வத்தின் அன்பே அல்லவா..!

கல்யாண விருந்துகளுக்கு சமைக்கும் விஸ்வத்தின் கைமணத்தில் மயங்காதவர்களே இல்லை. “கையில் ஏதாவது மந்திரக்கோல் வைத்திருக்கிறீர்களோ?” என்று எல்லோரும் வியந்து பாராட்டினால்..

”கைல மந்திரக்கோல் இல்லை. ஆனா மனசுல மந்திரம் இருக்கு.! அன்பு என்னும் மந்திரம்” என வசீகரமாக சிரிப்பார்.உணவோடு சேர்த்து திகட்டத் திகட்ட அன்பையும் சேர்த்துப் பரிமாறிய விசுவத்தின் குடும்ப வாழ்க்கை அத்தனை இனிமையானதாக இல்லை என்பதுதான் சோகம். ஆனாலும் விஸ்வத்துக்கு மனைவியின் மேல் அதீத பிரியம்.

“அவளுக்கு என்மேல் அன்பு இல்லாம இல்ல அத வெளிக்காட்டத் தெரியல. பாவம்” என்று மனைவியைத் தாங்குவார். சமையல் கலைஞரான விசுவத்தின் மனைவிக்கு அவர் கொண்டு வந்த பணத்தின் மீது இருந்த மரியாதை அவர் மீதோ அவருடைய தொழிலின் மீதோ இல்லை. அவள் இருந்தவரை தான் ஒரு சமையல்காரரின் மனைவியாக வெளியுலகத்திற்கு அறியப்படுகிறோமென்ற மனக்குறையோடே நாற்பதாவது வயதில் இறந்து விட்டாள். அதற்குப் பிறகு மகன் குமரனை வளர்த்து ஆளாக்குவதற்குள்….அப்பப்பா…எத்தனை கஷ்டப்பட்டிருப்பார். குணத்தில் அம்மாவைக் கொண்டிருந்த அவனுக்கு படிப்பும் ஏறவில்லை..தந்தையின் தொழிலைச் செய்யவும் விருப்பமில்லை. ஆனால் காதலிக்க மட்டும் பிடித்திருந்தது. ஜவுளிக் கடைக்கு வேலைக்குப் போன எதிர்வீட்டுப் பெண் தாரிணியைக் காதலித்தவன் நாள் பூரா அவளுடன் இருக்க முடியுமே என்ற ஆசையில் தானும் அதே கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.. அவர்கள் காதலிப்பதைத் தெரிந்து கொண்ட விசுவம்…தெரிந்த குடும்பம்..அமைதியான பெண் என்பதால் சாதி வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் தாரிணியைத் தன் மருமகளாக.. .இல்லையில்லை மகளாகவே ஏற்றுக் கொண்டார். அவளும் பெற்ற தந்தையைப் பேணிக் காப்பது போல அவரைப் பாசமும்,பரிவுமாகக் கவனித்துக் கொண்டாள். தனக்குக் கிடைக்கும் வருமானத்தில் கால் பாகத்தை அந்த ஊரிலிருந்த ஆதரவற்றோர் காப்பகத்திற்கு தந்து விடுவார். ஊரில் யாருக்கு என்ன உதவி தேவைப் பட்டாலும் அவர்கள் கேட்காமலே ஓடிப் போய் உதவுவார்.

விசுவத்தின் அறுபதாவது வயதில் அவருக்குத் திடீரெனப் பக்கவாதம் தாக்க, சமையல் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வீட்டிலயே முடங்கி விட்டார். வீட்டில் வறுமை தலை காட்டத் தொடங்கியது. குமரனுக்கும் தகாத சகவாசத்தால் குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது. இரவு நேரங்களில் அவன் குடித்துவிட்டு வந்து செய்யும் அட்டகாசம் சொல்லி மாளாது. வீட்டில் பணத்தை எங்கே ஒளித்து வைத்தாலும்…தேடி எடுத்துக் கொண்டு போய்க் குடித்து விட்டு வருவான். தள்ளாத வயதில் விசுவத்திற்கு உடல் உபாதையைக் காட்டிலும் அதிக வலியைத் தந்தது மனசுதான்.இப்படியே வருடங்கள் ஓட…விசுவத்தின் உடல் நிலை நாளுக்கு நாள் நலிவடைந்து வந்தது.

இப்போது அவருடைய ஆயுளின் கடைசிக் கட்டத்திற்கு வந்து விட்டார். மூச்சை மட்டும் பலவீனமாக இழுத்துக் கொண்டு..எலும்பும்,தோலுமாகக் கட்டிலில் கிடக்கும் அவரைப் பார்க்கப் பார்க்க அழுகை வந்தது தாரிணிக்கு. !

“சில பேருக்கு மனசுக்குள்ள நிறைவேறாத ஆசை இருக்கும் தாரிணி..அந்த ஆசை நிறைவேறும் வரை இப்படித்தான் இழுத்துகிட்டிருப்பாங்க.” .என்று நேற்று தாரிணியைப் பார்க்க வந்த சினேகிதி வனிதா சொல்லி விட்டுப் போக ,சில மாதங்களுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சி மின்னலடித்தாற்போல அவள் நினைவில் பளிச்சிட்டது.. விஸ்வம் நாக்குழறாமல் பேசிக்கொண்டிருந்த நாட்கள் அவை. ஒரு நாள் தாரிணி அவருக்கு அரிசிக்கஞ்சியை ஸ்பூனால் ஊட்டிக் கொண்டே…

“அப்பா…எல்லோருடைய தேவையையும் நீங்க நிறைவேத்தினீங்க. உங்களுக்கும் மனசுக்குள்ள ஏதாவது ஆசை இருந்திருக்குமில்ல. சொல்லுங்கப்பா..அதை நான் நிறைவேத்தி வைக்கிறேன்” பாசமாகக் கேட்டாள்.

“சின்ன வயசுல இருந்தே எனக்கு இருந்தது ஒரே ஒரு ஆசைதான்மா. எங்கம்மா எனக்கு ஆசை ஆசையா விஸ்வநாதன்னு பேர் வெச்சாளே.. கங்கா ஸ்நானம் செய்துட்டு என்னப்பன் அந்த காசி விஸ்வனாதனையும்..அன்னபூரணித் தாயாரையும் தரிசனம் பண்ணனும்கிறதுதான். ஆனா அதுதான் நிராசையாப் போயிடுச்சே. ஆ…! தாரிணி ! இப்பதான் ஞாபகம் வருது..நான் காசியாத்திரைக்காக உண்டியல்ல பணம் போட்டு வெச்சிருந்தேன்.உம் புருஷனையும்,உன் மாமியாரையும் காசிக்குப் போலாம்னு நான் கூப்டப்ப,

"காஷ்மீருக்குப் போறதுன்னா சொல்லுங்க நாங்க வர்றோம்..காசிக்குப் போக எங்களுக்கு இன்னும் வயசாயிடலை" ன்னுசொல்லி வர மறுத்துட்டாங்க. நானும் ஏதோ ஒரு வெறுப்புல,

"இந்தா இத நீயே வெச்சுக்கோ..எங்க வேணும்னாலும் போய்க்கோ" ன்னு சொல்லி உங்க மாமியார்கிட்டவே குடுத்துட்டேன். அவளும் சந்தோஷமா அதை வாங்கித் தன் பெட்டியில வெச்சுகிட்டா. ஆனா அவளும் காஷ்மீருக்குப் போகல. அல்பாயுசுல கைலாசத்துக்குத்தான் போய்ச் சேர்ந்தா. அந்த உண்டியல் உங்க மாமியாரோடபெட்டியில இருக்கும். சீக்கிரமா எடுத்துட்டு வா. எவ்வளவு இருக்குன்னு பாக்கலாம்.காசிக்குப் போக முடியலேன்னாலும் கங்காதீர்த்தம் கெடச்சாலே எனக்கு சந்தோஷம்தான்.அந்தப் புண்ணிய தீர்த்தத்தைத் தலையில் தெளிச்சுகிட்டு தீர்த்தமா ரெண்டு சொட்டு உள்ளே எறங்கினா கூட போதும். எனக்கு அந்தக் கொடுப்பினை இருக்கான்னு தெரியல” என்று விரக்தியுடன் சிரித்தார்.

தாரிணி எழுந்து போய் அந்த உண்டியலை எடுத்துப் பணத்தை எண்ணினாள். மூவாயிரத்து அறுனூற்று எண்பது ரூபாய் இருந்தது.. அதை அப்படியே கொண்டு போய் மாமனாரின் கையில் தர….அவர் அதை வாங்க கை நீட்டிய கணம் வாசற்கதவு தட்டப்பட்டது.

“குமரனாத்தான் இருக்கும். இது காசி விஸ்வனாதனோட பணம்.நல்ல புண்ணிய காரியத்துக்குத்தான் பயன்படணும் .உம்புருஷன் வந்து இதைப் பிடுங்கிட்டுப் போறதுக்குள்ள பத்திரப் படுத்து” அவசரப்படுத்தினார்.

தாரிணி பணத்தை மறைத்து வைத்துவிட்டு வாசற்கதவைத் திறக்க, வாசற்படியில் வயதான ஒரு தம்பதி நின்றிருந்தார்கள் அவர்களைப் பார்த்ததும் இருகரங்களையும் கூப்பி நமஸ்கரித்த தாரிணி..

“வாங்க…உங்களுக்கு யாரைப் பாக்கணும்” பவ்யமாகக் கேட்டாள்.

“நாங்க பக்கத்துக் கிராமத்துல இருக்கோம்.. எனக்கு உடம்பு சரி இல்லாமப் போய் படுத்த படுக்கையா ஆயிட்டேன். அப்ப என் பொஞ்சாதி நான் பழையபடி உடம்பு தேறி நடமாடினா…வீடு வீடாப் போய் மடிப்பிச்சை எடுத்து..அந்தப் பணத்துல காசிக்கு வர்றதா வேண்டியிருக்கா. அவ வேண்டுதல் பலிச்சிடுச்சு.

எனக்கு உடம்பு பூரணமாக் குணமாயிடுச்சு. அதுதான் ஒவ்வொரு வீடா மடிப் பிச்சை கேட்டுகிட்டு வர்றோம்…ஆனா யாரும் எங்களை நம்பல! உங்களால முடிஞ்சா காசிக்குப் போகணும்..இல்லேன்னா இங்கிருந்தே கும்பிட வேண்டியதுதானே? னு நாயைத் துரத்தறாப்புல துரத்தறாங்க. அன்பான வார்த்தைகளுக்குக் கூட இந்தக் காலத்துல பஞ்சமா போய்டுச்சு. அதுதான் மனவருத்தத்தோட.கிராமத்துக்கே திரும்ப முடிவெடுத்தோம். ஏனோ தெரியல..உங்க வீட்டைப் பாத்ததும் எங்க கால் இங்கயே நின்னுடுச்சு.” என்றார்..

அவர் மனைவி “உன்னால முடிஞ்சதைக் கொடும்மா” முந்தானையைக் காட்டினார்.

அப்படியே உடம்பும் மனசும் சிலிர்த்துப் போக, தாரிணி…

"வீட்டுக்குள்ள வந்து கொஞ்சம் மோராவது குடிச்சிட்டுப் போகலாமே” என்று அழைக்க..

“அதுக்கென்ன…தாராளமா வர்றோம். நீயாவது எங்களை மதிச்சுக் கூப்புடறியே! நீ மகராசியா இருப்பே” வாழ்த்தியவாறே, உள்ளே வந்த அவர்களைத் தன் மாமனாருக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் வந்த காரியத்தை விவரமாகச் சொன்னாள் தாரிணி, அகமும்,புறமும் குளிர்ந்து மெய் சிலிர்த்துப் போனார் விஸ்வம்.

“இறைவா இதுவும் உன் திருவிளையாடலா" என இருகரம் கூப்பி வணங்கினார்.அதற்குள் வேகமாகப் போய் மோர் எடுத்து வந்து உபசரித்தாள் தாரிணி. தன் கணவன் வருவதற்குள் அவர்களிடம் பணத்தைக் கொடுத்து வழியனுப்பி விட வேண்டும் என்ற அவசரம் அவளுக்கு. அந்த முதிய தம்பதியரிடம் விஸ்வத்தின் கையாலேயே பணத்தைக் கொடுக்கச் சொல்லி, அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு அவர்களை வழியனுப்பிய பிறகுதான் அவளுக்கு மூச்சே வந்தது.

விஸ்வத்தின் மனதில் அவர்கள் எப்போது வருவார்களோ என்ற நினைப்பும் ஏக்கமும் எழாமல் இல்லை. ஆனால் தாரிணிக்கோ இத்தனை நாள் அவர்களைப் பற்றிய நினைவே இல்லை.உண்மையாகவே அவர்கள் காசிக்குப் போயிருப்பார்களா..இல்லை ஏமாற்றுக்காரர்களாக இருப்பார்களோ? சேசே…அப்படி எல்லாம் இருக்காது..பார்க்க நல்லவர்களாகத்தானே தெரிந்தது என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்... அப்போதே நாம் அவர்க்ளிடம் கேட்டிருக்கலாம்..காசியிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து தர முடியுமா என்று? அவர்களுடைய விலாசமோ, தொலைபேசி எண்ணோ எதையும் வாங்கவில்லை. கங்கையில் ஸ்நானம் செய்ய முடியா விட்டாலும் அந்த தீர்த்தத்தைத் தலையில் தெளித்து,வாயிலும் கொஞ்சம் விட்டிருக்கலாமே! எல்லோருடைய தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றிய அப்பாவின் கடைசி ஆசை நிறைவேறி இருக்குமே! இப்போது யாரிடம் கேட்டால் தீர்த்தம் கிடைக்கும் ? பரபரப்பாக சில தோழிகளுக்குப் ஃபோன் செய்ய, யாரிடமிருந்தும் உருப்படியான தகவல் இல்லை. என்ன செய்வது என்ற யோசனையிலேயே..வீட்டு வேலைகளில் மூழ்கியவளுக்கு வாசற்புறம் யாரோ கூப்பிடும் குரல் கேட்க தன்னிலைக்கு வந்து வாசலுக்கு ஓடினாள். கதவைத் திறந்தவள் அப்படியே ப்ரமித்து நின்றாள். அவர்கள் வேறு யாருமில்லை..காசிக்குப் போவதாகச் சொல்லிப் பணத்தை வாங்கிச் சென்ற அந்த தம்பதியர்தான்.

“உள்ளே வரலாமா” என்று கேட்டுக் கொண்டே வந்தவர்கள்…

“ரயிலில் டிக்கட் கிடைக்காமல் காசிக்குப் போக கொஞ்சம் தாமதமாகி விட்டதும்மா. இந்தாம்மா ப்ரசாதம்” என்று ஒரு கவரையும், காசித் தீர்த்தம் அடங்கிய செம்பையும் நீட்ட..அப்படியே தடாலென அவர்கள் கால்களில் விழுந்து விட்டாள் தாரிணி. பேச முடியாமல்..தன்னுடைய தணியாத ஆசை நிறைவேறுமா என்ற ஏக்கம் நிறைந்த பார்வையை மட்டும் அறைக்குள் சுழல விட்டுக் கொண்டிருந்த விசுவத்திடம் ஓடிப்போய்..

”அப்பா இதோ உங்க ஆசை நிறைவேறப் போகுதுப்பா…”.

என்று சொல்லிக் கொண்டே காசி தீர்த்தத்தை அவர் தலையில் தெளித்து..அவர் வாயிலும் சில சொட்டுகள் விட்டாள் தாரிணி. ஒளி மங்கிக் கிடந்த அவர் விழிகளில் திடீரென ஒரு ப்ரகாசம். அவர் கண்களுக்கு சாட்சாத் காசி விஸ்வனாதரும், அன்னபூரணியாகவுமே காட்சி தந்தார்கள் அந்தத் தம்பதியர்! மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்ந்த..அந்த அன்பு கொண்ட நெஞ்சம் தன்னுடைய ஆசை நிறைவேறிய திருப்தியில்,முகம் மகிழ்ச்சியில் விகசிக்க, இதழ்கள் புன்னகைக்க, விழிகளை நிரந்தரமாக மூடிக் கொண்டது…!

“அப்பா..பா..ஆ” என்ற தாரிணியின் கதறல் வீடெங்கும் எதிரொலித்தது.

(முற்றும்)

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...