இரவைத் தேடும் பனித்துளி

கற்பனை
4.8 out of 5 (177 )

இரவைத் தேடும் பனித்துளி!

ஆனந்த ஜோதி

அதிகாலையில் உதித்த ஆதவனின் செங்கதிர்கள் பூமிப்பரப்பெங்கும் தன்னுடைய பணிகளை செம்மையாக செய்திருக்க, அத்தனை நேரம் இருளின் தாக்கத்தால் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த தாவரங்கள், பட்க்ஷிகள், உயிரினங்கள் யாவும் தங்களுடைய அன்றாட பணிகளை செய்யும்பொருட்டு வேகவேகமாக இயங்க துவங்கின.

என்றும் காலை ஆறுமணிக்கு முன்பே எழும் வழக்கமுடையவள் ஜானவி, இன்று ஆறரை கடந்தும் காணாமல் அவளது மெய்காவலர்கள் அழைக்க ஆரம்பித்தனர். அதன் சத்தத்தில் மெதுவாக விழிகளை மலர்த்தினாள். அருகில் படுத்திருக்கும் கணவன் ஸ்ரீராமை ஏறிட்டாள்.

ஸ்ரீராம் மத்தியஅரசில் பணிபுரிந்து வருகிறான். திருமணமாகி இருபத்திரெண்டு வருடங்களும், வெளியிடங்களில் கணவனுடனே வசித்து வந்தாள் ஜானவி. மகன்கள் இருவரும் படிப்பு, வேலை விசயமாக வெளியூருக்கு சென்று விட, ஊருக்கு வந்துவிட்டாள். அவளது கணவன் 'விடமாட்டேன்' என்று அடம்பிடித்தான். அவளோ "என்னால் இப்படி வெறும் பச்சைக்காய்களை சாப்பிட்டு பட்டினி கிடக்க முடியாது. உங்களைக் கல்யாணம் பண்ணிட்டு வந்த இத்தனை வருசமா சதா வெளியிடங்களில் இருப்பதால், ஊர்ல என்னவெல்லாம் நடக்குது? யாரெல்லாம் எப்படி எப்படி இருக்காங்க? உறவுக்காரங்க வீட்டில் என்ன விஷேசம் நடக்குதுன்னு ஒரு விவரமும் தெரியலை..." என்று சலிப்புடன் கூறினாள்.

அவன் சிரித்தான்.

"வெளியிடத்தில் இருந்தாலும் வருசா வருசம்! உன்னை ஊருக்கு அழைச்சிட்டு போகத்தானே செய்றேன். என்னமோ இங்கேயே அடைச்சு வச்சிருக்கிற மாதிரி அலுத்துக்கிற" பொய்யாக கோபித்தான் ஸ்ரீராம்.

"என்னது? அடைச்சு வச்சிருக்கிற மாதிரி அலுத்துக்கிறனா? அடடா! இத்தனை நாள் அடைச்சு வச்சுட்டு வைக்காத மாதிரி வசனம் பேசி ஏமாத்த பார்க்கிறீங்களா? அதெல்லாம் முடியாது. நம்ம வீட்டுக்கு முன்னாடி வாங்கியிருக்கிற இடத்தில் பூந்தோட்டம், காய்கறி செடிகள், துளசிமாடமெல்லாம் வைக்கணும். சுதந்திரமான கிராமத்துக் காற்றை ஆழ்ந்து சுவாசித்து, ஞாயிற்றுக்கிழமைகளில் சூடா கருவாட்டுக் குழம்பும், மத்த நாட்களில் சாளை, நெத்திலி, வாளை, அயிலை மீன்களை வாங்கி நல்ல எரிப்பும், புளிப்பும் போட்டு சமைச்சி நொட்டை விட்டுக்கிட்டே சாப்பிடணும் போல ஆசையா இருக்கு!" என்று சொல்லும்போதே அவளது நாவில் நீர் சுரந்தது. "முடியாது. இனிமேலும் இந்த ஜெயில் வாழ்க்கையை அனுபவிக்க, என்னால் ஒருபோதும் முடியாது" என்று கூறினாள். ஒருசில சம்பவங்களை மனதில் வைத்துக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டாள்.

மனைவி தன்னுடன் இல்லையே என்கிற கவலை மனதை அரித்தாலும், தன்னுடைய வீட்டில்தானே அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற எண்ணத்தில், அவனும் தன்னை ஒருவாறு சமாதானப்படுத்திக் கொண்டான்.

வீட்டில் வளர்ந்து வருகின்ற பூச்செடிகள், காய்த்து குலுங்கிய காய்கறிகள், புதியதாக வாங்கிய நாய்க்குட்டிகளை எல்லாம் புகைப்படமெடுத்து அனுப்பிவிடுவாள். அவளது கைவண்ணத்தில் சோபாசெட், டைனிங் டேபிள், தரைகள் அனைத்தும் பளபளத்தன. அவனுக்கும் ஊருக்கு வந்துவிட ஆவல் அதிகரிக்கும். 'வேலையை விட்டுட்டு வந்து உன்னுடனே இருக்கிறேன்' என்று ஆசையுடன் கூறுவான். "வேலையை விட்டுட்டு வந்து என்னப் பண்ண போறீங்க? இளையமகன் இன்னும் படிச்சிட்டு இருப்பது மறந்திருச்சா?" என்று எதிர்கேள்வியை முன்வைத்து, அவன் வாயை அடைத்துவிடுவாள் ஜானவி.

விடுமுறை நாட்களில் புடவை, இரவு ஆடைகள், அவள் விரும்பி கேட்பவை அனைத்தையும் வாங்கிக்கொண்டு வருவான். அங்கு நிற்கும் நாட்கள் முழுவதும் மனையாளின் விருப்பம் போலவே நடந்து கொள்வான். அவளுடனே தங்கியிருந்த நாட்களைவிட இப்போது ஆசையும், பாசமும் அதிகரித்தன. பிரிவு என்பது புரிதலையும், அவள்மீதான உண்மையான நேசத்தையும் உணரச் செய்தது.

காலையில் எழுந்த ஜானவி, முற்றத்தை சுத்தம் செய்து கோலமிட்டாள். குளியலை முடித்து உடைமாற்றி வந்து துளசிமாடத்தில் பூஜையை முடித்தாள். பூந்தோட்டத்தில் புதியதாக மலர்ந்திருக்கும் செம்பருத்தி, ரோஜா, மல்லிகை, பிச்சி, செவ்வந்தி, கிரைந்தி, துளசி, என்று விதவிதமாக வளர்த்து வருகின்ற பூச்செடிகளின் மீது நீரைப் பாய்ச்சினாள். அவை அசைந்தாடும் அழகை இதழ் விரிய ரசித்தாள்.

உறக்கம் கலைந்து எழுந்தான் ஸ்ரீராம். குளியலறைக்கு சென்றுவிட்டு வந்தான். மனையாளை காணாமல் முகப்பு பகுதியை நோக்கி நடந்தான். ஊதுபத்தி வாசனை நாசியை நிறைத்தது. காலையில் மலர்ந்த மலர்களுக்குப் போட்டியாக நிற்பவளை விழிகளுக்குள் சிறையெடுத்தான். சென்னையிலிருந்து நேற்று வாங்கி வந்திருந்த காட்டன் புடவையில் பொலிவுடன் நிற்பதை பார்க்கையில் வாரியணைக்க தோன்றியது. அடக்கிக்கொண்டு தன்முன்னே இருந்த தினமலர் நாளிதழை கையிலெடுத்துப் புரட்டினான்.

சற்றுநேரத்தில் நிமிர்ந்து பார்த்தான். வயது நாற்பத்திரெண்டு ஆனவள் போல் அல்லாமல் பொம்மேரியனுக்கு இணையாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள். அதனுடன் பேசி சிரித்தாள். அவனைப் பார்த்து ஏதோ சொல்லிவிட்டு கைகாட்டினாள். ஸ்ரீராமை பார்த்து அது குரைத்தது. அவள் சில்லறை காசுகளை சிதற விட்டவளை போல நகைத்தாள். அவன் முறுவலித்தான்.

"ரைட்டர் மேடம்! சூடா ஒரு கப் காஃபி கிடைக்குமா?" என்றான்.

கணவனின் அழைப்பில் சிலிர்த்தது. சம்மதமாக தலையசைத்து வீட்டிற்குள் நுழைந்தாள். பொம்மியும் அவள் பின்னே ஓடியது.

"ம்... நான் தேவையில்லை. நல்ல ஆளா பார்த்துதான் காவலுக்கு வச்சுருக்க" என்று முணுமுணுத்தான். அது அவனைப் பார்த்து குரைத்தது. அவள் வாய்விட்டு சிரித்தாள்.

"ஏய், உன்னைத் தூக்கி வெளியே போட்டு கதவடைச்சிருவேன். ஜாக்கிரதை!" என்று மிரட்டினான்.

உடனே பம்மியது. ஜானவியின் காலை ஒட்டிக்கொண்டே அவள் முகம் பார்த்தது. "இல்லைடா, உன்னை வெளியே விடமாட்டேன். வா, பால் எடுத்து தரேன்" என்றாள். பொம்மி அவள் பின்னே ஓடியது.

"ம்... ஏற்கனவே என்னோடு இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டா, இதில் நீவேற ரொம்பத்தான் என் பொண்டாட்டி கிட்ட உரிமை எடுத்துக்கிற" என்று விசனப்பட்டான். பொம்மி தலையை உயர்த்தி பார்த்துவிட்டு, அதற்குரிய பாலை ருசிக்க தொடங்கியது.

"ரைட்டர் மேடம், எனக்கு காஃபி கிடையாதா?" என்று கேட்டான். அவனுக்கு முன்பகுதியில் சூடாக பால், ஏத்தம் பழம், பேரீட்சை, பிஸ்கட் வந்தது. அவனது விழிகள் விரிந்தன. புன்னகையுடன் கீழே சென்றாள் ஜானவி.

ஸ்ரீராம் செய்தித்தாளை பார்த்துக்கொண்டே, ஏலம் கலந்த பாலை அருந்த துவங்கினான். அவள் அருகில் நின்றிருந்த ராஜேஷ் எனும் கருப்பு, செவிலை நிறம் கலந்த நாய்க்குட்டி பாலை குடித்துக்கொண்டே வாலை ஆட்டியது.

ஜானவி சிறு வயதாக இருக்கும் போது அவளது அப்பா பரமேஸ்வரன் போலீஸ் நாய் என்று சொல்லி இதேபோன்ற நாய்க்குட்டி ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதற்கு ராஜேஷ் என பெயரிட்டு பாசமாக பார்த்துக்கொண்டனர். எங்கு சென்றாலும் அவர்கள் பின்னே வந்துவிடும். சொல்பேச்சு கேட்டு நடக்கும். அது இறந்த பிறகு வேறெந்த நாய் மீதும் அவளுக்கு பற்றுதல் ஏற்படவில்லை. அதுபோல வேறெந்த நாயும் அவர்கள் வீட்டில் வருடக்கணக்காக இருந்ததும் இல்லை.

தற்சமயம் கணவன் வீட்டில் தனியாக வசிப்பதால் சிறுவயது நியாபகத்தில் அதேபோன்ற தோற்றத்தில் உள்ள நாய்க்குட்டியை வாங்கி, ராஜேஷ் என்றும் பெயரிட்டு வளர்த்து வருகிறாள்.

அப்போது கேட் 'கிரீச்' எனும் ஓசையை எழுப்பியது. அவளது விழிகள் அந்த பக்கம் நகர்ந்தன. இரண்டு பாதுகாவலர்களும் குரைத்தார்கள். கேட் பக்கம் நின்ற நபர் தயங்கினார். உடனே ராஜேஷ், பொம்மி இருவரையும் அமைதியாக போகச்சொன்னாள். "வாங்க அண்ணா!" என்று வாய் நிறைய அழைத்தாள்.

ஜானவியை கண்டதும் புன்னகைத்தான் ஆகாஷ். உள்ளே வந்து குசலம் விசாரித்தான். வீட்டாரின் நலத்தை பற்றி விசாரித்துக்கொண்டே கேட்டை தாளிட்டாள்.

முன்பகுதியில் நாற்காலியில் அமர்ந்திருந்தான் ஸ்ரீராம். நண்பனைப் பார்த்ததும் வாயெல்லாம் பல்லாக எழுந்து வரவேற்றான். வீட்டுக்குள் அழைத்தும் வராமல் அவனும் வெளியில் காற்றாட அமர்ந்து கொண்டான்.

குளிர்ந்த நீரை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து வந்தாள் ஜானவி. அவனிடம் கொடுத்துவிட்டு சமையலறை நோக்கி நடந்தாள்.

"ஸ்ரீராம் எப்படி இருக்கே? எப்போ வந்து சேர்ந்த? காலையிலே கவனிப்பெல்லாம் பிரமாதமா இருக்கு. நீ கொடுத்து வச்சவன்! அதான் இப்படி குடும்பத்தை அனுசரிச்சு போறவ மனைவியா கிடைச்சிருக்கா" என்று நிறைவுடன் கூறினான்.

அவனது விழிகள் பழைய நினைவில் மூழ்கினாலும், உதடுகள் விரிந்தன.

"கழிஞ்ச வாரம் உன் மனைவியை பார்த்தேன். நீ வரப்போகும் விசயத்தை சொன்னாங்க. நாளைக்கு காலையில் எனக்கு மும்பை போக வேண்டியிருப்பதால் உடனே உன்னைப் பார்க்க வந்தேன்" என்றான். இருவரும் சற்றுநேரம் வேலை விசயமாக பேசினார்கள். பின்னர்,

"என் நண்பனின் மனைவி ஒரு எழுத்தாளர் என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. என்மனைவி அவங்களோட சில நாவல்களை எல்லாம் வாங்கிட்டு போயிருக்கிறா... ஒண்ணு ரெண்டு படிச்சு பார்த்திட்டு ஆஹா ஓஹோன்னு புகழுறா. 'உங்க நண்பர் கொடுத்து வச்சவர்னு வாழ்த்துறா' நீ லக்கி!" என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

உடனே அவன் மனம் சுணங்கியது. ஆரம்ப நாட்களில் நேரம் போகாமல் வாசிப்பில் மூழ்கியவள், பிறகு எழுத துவங்கினாள். அவன் எதிர்ப்பு தெரிவித்தும் கேட்காமல் இரவு பகலாக கடினப்பட்டு, மூன்று வருடங்களில் தான் நினைத்ததை சாதிக்கத் தொடங்கிவிட்டாள். 'திறமைசாலி' என்று நினைத்தான்.

அப்போது, சூடான இட்லி, சாம்பார், சட்னியை சாப்பாட்டு மேஜையின் மீது வைத்துவிட்டு, அவர்களை அழைக்க வந்தாள் ஜானவி.

"வாங்க அண்ணா சாப்பிடலாம்" என்றாள்.

அவனும் தயக்கமின்றி எழுந்தான். முகப்பு பகுதியை பார்த்துவிட்டு அதிசயித்தான். உள்ளே நுழைந்து ஹாலை நோட்டமிட்டான். "இது எப்போ வச்சது? முன்பு இல்லயே?" என்று கேட்டான்.

"கல்யாணநேரம் அவசரமா கட்டுனது. இடப்பற்றாக்குறை, வெளியிடத்தில் இருந்ததால் வீட்டையும் சரிபண்ண முடியலை. அம்மா இறந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமா வீட்டு வேலைகள் நடந்தது. எதிர்வீட்டு நபர் பக்கத்து ஊரில் நிலம் வாங்கி வீடு போட்டார். இந்த இடத்தை ஒன்றரை லட்சம் வீதம் நாலு சென்ட் இடத்தையும் விற்பனை செய்தார். மனைவியின் நகையை அடமானம் வச்சு வாங்கினேன், எல்லாத்தையும் இடிச்சு தரை மட்டமாக்கி, இதோடு இணைச்சுட்டேன்.

அவள்தான் 'வீட்டுல இடவசதியில்லை. நாலு சென்ட்டையும் சும்மா போட்டு என்ன பண்றது? வீட்டு முன்பகுதியில் ஒரு பெரிய ஹால் எடுக்கலாம்'னு சொன்னாள். நானும் சரின்னு செஞ்சுட்டேன். இப்போ சோபாசெட் எல்லாம் போட்டு, எத்தனை பேர் வந்தாலும் புழங்கும் விதமா வீடு பெருசாயிருக்கு! முன்பு ஹாலா இருந்த அறையை இப்போ சாப்பாட்டு அறையா மாத்திட்டா. மாடியில் ரெண்டு அறை பசங்களுக்காக எடுத்திருக்கோம்" என்றான்.

ஜானவியை பார்த்தவனின் புருவம் பாராட்டுதலாக உயர்ந்தது.

"நீ வேறு யாரையாவது கட்டியிருந்தா, நிச்சயம் இந்த அளவுக்கு பண்ணியிருக்க மாட்ட. அதட்டி வாய்திறக்க முடியாம செய்திருப்ப. வீட்டு பெண்களின் பேச்சையும் கொஞ்சம் செவி சாய்ப்பது நல்லது. 'மனைவி ஒரு மந்திரி'ன்னு சும்மா சொல்வதில்லை போலும். இப்போ பார் உன்வீடு எப்படி மினுமினுக்குது!" என்று கூறிக்கொண்டே உணவை முடித்தான். வீட்டை சுற்றிப் பார்த்தான். சற்றுநேரம் பேசிவிட்டு விடைபெற்றான். ஆகாஷ், ஸ்ரீராமுடன் முன்பு ஒரேஇடத்தில் பணிபுரிந்தவன். தற்சமயம் இடமாற்றலால் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

மாலையில் வெளியே கிளம்பினார்கள். நாகராஜா கோவிலுக்குச் சென்றார்கள். ஹோட்டலில் உணவை முடித்தார்கள். இரவுநேரம் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

நாட்கள் அழகுற நகர்ந்தன. மகன்கள் இருவரும் தகப்பனார் வந்திருக்கும் நேரத்தில், தங்களுக்கும் விடுமுறை கிடைக்காமல் வருந்தினார்கள். அதைப் புரிந்துகொண்டு "நீங்க வரும்போது மறுபடியும் வரேன்" என்று ஆறுதலாக கூறினான். அக்கா, தங்கை வீட்டிற்கும் மனைவியுடன் சென்று வந்தான்.

"ஃபோன் பேசுவதில்லை. வீட்டுக்கு வருவதில்லை. சதா வீட்டிலே அடைஞ்சு கிடக்கிறா. என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு, வந்து போயிருந்தா என்ன?" புகார் வாசித்தாள் தங்கை. அவன் அமைதியாக இருந்தான். அவள் கேளாதது போலிருந்தாள்.

ஸ்ரீராம் மருமகள்களை பற்றி விசாரித்தான். உடனே அவள் மகள் வீட்டில் நடப்பதை பற்றி சொன்னாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் வீட்டில் நடப்பதையெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தாள். அவன்கேட்டு பதில் கூறினான், அவளது பொறுமையோ பறிபோனது.

"அண்ணி, 'யானைக்கும் அடி சறுக்கும்'னு கேள்விப்பட்டதில்லை. அப்புறம், சாதாரண மனுஷனாகிய நாம் மட்டும் எப்படியிருப்போம்னு எதிர்பார்க்கறீங்க? "குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை" பலதையும் கடந்து போக பழகிக்கணும்" என்று மறைமுகமாக கூறினாள்.

"நான் குறையா பேசலை. நடப்பதை சொன்னேன்" என்று மழுப்பினாள்.

"நடப்பதென்பது மனிதனுக்கு மனிதன் மாற்றமாக நிகழ்வது. நாம் நினைப்பதையே மற்றவரும் நினைக்கணும்னு எதிர்பார்ப்பது முட்டாள்தனம்! காலம் நிறைய மாறிடுச்சு. யாரின் பேச்சையும், அறிவுரையைக் கேட்டு வாழும் நிலையில் யாருமே இல்லை" தெளிவாக கூறினாள் ஜானவி.

இருவருடைய பேச்சையும்கேட்ட ஸ்ரீராம், நிலைமையை சமாளிக்கும்பொருட்டு வீட்டிற்கு கிளம்புவதாக கூறிவிட்டு எழுந்தான்.

பைக்கில் பயணிக்கையில் கூறினாள். "அவங்கதான் புரிஞ்சுக்காம பேசுறாங்கன்னா, நீங்களும் கேட்டுத் தலையாட்டிக்கிட்டே இருக்கணுமா? படிச்சவர்தானே?" குறைபட்டாள் ஜானவி.

"சரி விடு, அண்ணன் அண்ணி தானேன்னு சொல்லியிருப்பா" சமாளித்தான் ஸ்ரீராம்.

மனையாளைப் பற்றி அவனுக்குத் தெரியும். நியாயமாக பேசுபவள். பிறரை குறைகூறுவது பிடிக்காது. அதுபோல, தங்கையின் குணமும் தெரியும். இந்த ஜென்மத்தில் திருத்த முடியாதென்று!

மாலைநேரம் சென்னைக்கு கிளம்பவேண்டும். தயாராகிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். மனையாள் அவனுக்குத் தேவையானதை பார்த்துப் பார்த்து செய்துகொடுத்தாள். அப்போது அவனது அம்மாவின் உறவினர் பாலகுமார் வந்தார். கணவனும் மனைவியும் வரவேற்று அமர வைத்து உபசரித்தனர்.

மூவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள். அவர் பேக்கிலிருந்து பத்திரிகையை எடுத்து நீட்டினார்.

"என்ன மாமா உங்கமகனுக்கு கல்யாணஏற்பாடு பண்ணியிருக்கறீங்களா? பொண்ணுக்கெந்த ஊரு? பையனுக்கு பொண்ணைப் பிடிச்சிருக்கா?" என்று கேட்டான்.

முகவாட்டத்துடன் அவர் பதில்கூறாமல் இருந்தார். பத்திரிகையை நோக்கி கைகாட்டினார். உடனே ஏதோவிசயம் இருக்கிறது என்று ஊகித்தான். பேசாமல் புரட்டிப் பார்த்தான். பார்த்தவனுடைய விழிகள் திகைப்புடன் விரிந்தன.

"என்ன மாமா இது? உங்க மூத்தமகள் பெயரை பத்திரிகையில் போட்டிருக்கு. அவளுக்குத் திருமணமாகி ஏற்கனவே ஒருமகன் இருக்கிறானே! பிறகும் இதென்ன?" புரியாமல் கேட்டான் ஸ்ரீராம்.

"உனக்குத் தெரியக்கூடாதுன்னு எதுவுமில்லை ராமு. என்பொண்ணு அவள் புருஷனைவிட்டு பிரிஞ்சு வந்து மூணு வருசமாகுது. அவனோடு சேர்ந்து வாழமாட்டேன்னு சொல்லிட்டா. எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தும் கேட்க மறுத்திட்டா. வீட்ல அவள் அம்மா, அண்ணா எல்லாரும் அவளுக்கு சப்போர்டா பேசுவதால், என்னோட பேச்சு எடுபடல" வருத்தமுடன் கூறினார் பாலகுமார்.

"இப்படி கணவனைவிட்டுப் பிரிஞ்சிருக்கிற அளவுக்கு, அப்படியென்ன சித்தப்பா நடந்தது? எதுவாயிருந்தாலும் நிதானமா பேசி முடிவெடுக்கலாமே? அதுக்குள்ளே ரெண்டாவது கல்யாணம் பண்ணினா எப்படி? அவளோட புருஷனும் குடும்பமும் ரொம்ப நல்லவங்களாதானே தெரிஞ்சாங்க?" யோசனையுடன் கேட்டாள் ஜானவி.

அவர் பெருமூச்சை வெளியேற்றினார். சிலநிமிடங்கள் பேசிவிட்டு எழுந்து சென்றார்.

அவரது பேச்சைக்கேட்ட இருவருக்கும் மனதிற்கு பாரமாக இருந்தது. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. கணவன் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் ஜானவி.

"என்னங்க இது, இப்படி சொல்லிட்டுப் போறாங்க? நீங்க எதுவுமே பேசாம வாயடைச்சு போயிருக்கறீங்க?" என்று கேட்டாள்.

"என்ன சொல்ல சொல்ற?"

"அந்த பொண்ணு தேன்மொழிக்கு கல்யாணம் நடந்தப்போ, ஏகப்பட்ட சீர்செய்து, பேசியதைவிட அதிகமா தொகை கொடுத்து, நல்ல குடும்பம்; வசதியான இடம்னு சொல்லித்தானே, வீட்டாரின் விருப்பத்தோடு கட்டிக்கொடுத்தாங்க. பிறகும் எப்படி பிடிக்காம போகும்?"

"தேன்மொழிதானே அவனோடு வாழமாட்டேன்னு சொல்லிட்டு பிடிவாதமா வந்திருக்கா? அவங்களும் என்ன செய்வாங்க? உருட்டி மிரட்டி பணிய வைக்க, அவள் ஒண்ணும் சின்னப்பிள்ளை இல்லையே? இருபத்திநாலு வயசுப்பொண்ணு" என்று கூறினான்.

"சரிங்க, இருக்கட்டும். நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்கிட்டாலும், இப்போ கல்யாணம் பண்ணிக்க என்ன அவசியம் நேர்ந்தது? வெறும் இருபத்திநாலு வயசுதானே ஆகுது. மாப்பிள்ளை திட்டினான். மாமியார் வீட்டு வேலைகளை பார்க்கச் சொன்னார். மைத்துனன் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களை கழுவணும். நாத்தனார் அவளைக்கண்டு கொள்ளாமல் இருக்கிறாள். ஓய்வில்லா உழைப்பு; கணவன் ஏன்னு கேட்கல; ஆறுதலா எனக்காக பேசல; தனிக்குடித்தனம் போக கேட்டும் சம்மதிக்கல. அதனாலேயே அவனோடு வாழமுடியாதுன்னு வந்து, டைவர்ஸ் பண்ணிட்டு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப்போறாளே! நாளைக்குப் போறவீட்டிலும் இதுபோல நடந்தா, இவங்க என்ன செய்வாங்க? அவனையும் டைவர்ஸ் பண்ணிட்டு மறுபடியும் வேறு மாப்பிள்ளையை பார்த்துக் கட்டிக்கொடுப்பாங்களா?" என்று கேட்டாள்.

ஸ்ரீராம் வாயை திறக்கமுடியாமல் இருந்தான். "இங்கே பாருங்க, குடும்பம்னா சண்டை, சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அதுக்கு விவகாரத்து ஒருபோதும் தீர்வாகாது? சாதாரணமான பிரச்சனைகளுக்கெல்லாம் விவகாரத்து பண்ணினா, பிறகு அவங்களுக்கும் குடும்ப பொறுப்பு வரவேணாமா? மாப்பிள்ளைவீட்டார் கொடுமைப்படுத்தி, அடிச்சு, மிரட்டி, அவமரியாதையா நடந்திருந்தாலோ, குழந்தையில்லாமல் பாதிக்கப்பட்டு மனஅழுத்தத்தில் சிக்கிக்கொண்டாலோ, அவளைவிட்டு வேறொரு பெண்ணுடன் தகாதஉறவு வச்சிருந்தாலோ, விவகாரத்து பண்ணுவதைப் பற்றி யோசிக்கலாம். அதைவிட்டு ஆரம்பத்திலேயே பிரிவு, திருமணம்னா எப்படி?" என்று கேட்டாள்.

"இப்போ நீ என்னதான் சொல்ல வர்ற?"

"அந்நாளிலிருந்து இந்நாள்வரைக்கும் மாமியார், நாத்தனார், கணவன்மார்களில் ஒருசிலரைப் போல், வீட்டுக்கு வரும் மருமகள்களில் சிலரும், கொடுமைப்படுத்துபவரா இருக்கத்தான் செய்றாங்க. அவர்களெல்லாம் தானாக திருந்தினால் மட்டுமே சாத்தியம். நாமாக ஒண்ணுமே பண்ணமுடியாது! அதேநேரம், குடும்பத்தை அனுசரிச்சு போவது நல்ல குடும்பபெண்களுக்கு அழகு! தன்னை நம்பி வந்திருப்பவளை காப்பது கணவனுக்கு அழகு! தன்வீட்டுக்கு வந்திருக்கும் புதிய உறவை மரியாதையுடன் நடத்துவது வீட்டாருக்கு அழகு!!" என்று கூறினாள் ஜானவி.

மனையாளின் பேச்சைக்கேட்டதும் அவனது உதடுகள் விரிந்தன.

"ரைட்டர் அம்மாயில்ல, அதான் வார்த்தைகள் அருவியா கொட்டுது. நீ மட்டும் லாயராயிருந்தா ஒரு கேஸுமே தோற்காது" என்று பரிகாசம் செய்தான்.

அவளும் 'களுக்'கென்று சிரித்து விட்டாள்.

ஜானவியின் பேச்சைக்கேட்டவன் உள்ளம், தன்வீட்டிலும் இதேபோல் நடந்து, எத்தனையோ நாட்கள் நிம்மதியை தொலைத்து, மனையாளிடம் கடுமையை காட்டியது தற்சமயம் நினைவிற்கு வந்தது. 'உடன்பிறப்புகள் இருவரும், அம்மாவும் அவளைக்குறைவாக பேசியபோது ஒருநாளுமே 'இப்படி பேசாதீங்க' என்று சொன்னதில்லை. வீட்டாரின் மீதான பாசத்தில் மனைவியென்றும் பாராமல், எத்தனையோ நாட்கள் அவமதிப்பாக நடத்தியிருக்கிறான். அவள் வீட்டாரைப்பற்றி தவறாக பேசுயிருக்கிறான். உடனே ஜானவி, அவனில்லா நேரங்களில் வீட்டார் பேசியதையெல்லாம் சொல்லித் திட்டுவாள். அவன் போட்டு அடிப்பான். "நீயொரு சுயநலக்காரன். உனக்கெதுக்கு மனைவி, குழந்தை?" என்பாள். ஒருவாரமாக பேச்சற்று போகும். இத்தனைக்கும் அவளைவிரும்பி மணந்தவன் ஸ்ரீராம். ஒருமுறை வேலை விசயமாக கன்னியாகுமரிக்கு சென்றவன், இரண்டு மாதங்களுக்கு மேலாக அங்கேயே தங்கிவிட்டான். குடும்பத்தாருடன் இணைந்து இன்பச்சுற்றுலா, திருவிழா, திருமணவீடுகள் என்று உல்லாசமாக சுற்றி நாட்களைக் கடத்தினான். அவளால் அதை ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை.

அப்போது அவனது விசப்பேச்சு செவியில் விழுந்தது. "இவளால் எனக்கு நிம்மதியே இல்லை. என்பெற்றோர் பார்த்திருக்கும் பெண்ணை மணந்திருந்தால் நல்லா இருந்திருப்பேன்" என்று அவளது உறவினரிடமே சொல்லியிருக்கிறான். ஊரிலிருந்து அவன் வந்ததும், "என் மகன்கள் படிக்க சென்ற பின்னர், உங்களோடு வரவேமாட்டேன். உங்க குடும்பத்தாருடன் இணைஞ்சு சந்தோஷமாயிருங்க. என்னால் உங்கநிம்மதி பறிபோக வேண்டாம்" என்றாள். அவன் மனம் பரிதவித்தது.

சாதாரண குடும்பபிரச்சினையை தீர்வு காணாமல், அவர்களை விட்டுவிலகி வந்து மறுமணம் செய்துகொள்ள தயாராகியிருக்கும் தேன்மொழி எங்கே? இத்தனை பிரச்சனைகள் நடந்தும் எதுவுமே நடவாதது போல் புன்னகையுடன் நிற்கும் ஜானவி எங்கே? அன்று அவளது குடும்பத்தினரை தவறாக பேசியதற்காக கோபமுடன் கொதித்ததையெல்லாம் திமிரென்று நினைத்துவிட்டான். இன்றானால் அவையனைத்தும் அவளது தன்மானம், சுயமரியாதை என்று தெரியவும் வெட்கித் தலைகுனிந்தான். தன்குடும்பத்தினர் மீதிருக்கும் பாசம்தானே, அவளுக்கும் இருக்கும் என்ற உண்மை தாமதமாக புலப்பட்டது. தன்னுடைய அத்தனை நாளைய தவறும் கண்முன் நிழலாடியது. இனிமேல் எந்தவொரு சூழ்நிலையிலும் மனைவியை தவறாக பேசக்கூடாது, யார் முன்பும் விட்டுக்கொடுக்க கூடாது என்று உறுதிபூண்டான்.

இருவருடைய பேச்சையும்கேட்ட பாலகுமார் அதிர்ந்துபோய் நின்றார். ஒருவீட்டில் பேசுவதைக் கேட்டாகிவிட்டது. இது போலத்தானே மற்றவர் வீட்டிலும் பேசுவார்கள் என்ற உண்மை உறைத்தது. ஜானவி சொல்வதிலும் தவறொன்றும் இல்லையே! முதலில் தீரவிசாரித்து உண்மைநிலையை கண்டறியவேண்டும். மருமகனையும் பார்த்துப் பேசவேண்டும். தவறு யார்பக்கம் இருக்கிறதென்று தெரிந்துகொண்டு, அதற்குப் பிறகு மற்ற விசயங்களைப் பற்றி பார்க்கலாம் என்ற எண்ணத்தில், வேறுயாருக்கும் பத்திரிகையை கொடுக்காமல் வீட்டைநோக்கி விரைந்தார்.

மனையாளிடம் விடைபெற்று அனந்தபுரியில் அமர்ந்தவன் உள்ளம், அவளை நினைத்து வெகுவாக ஏங்கியது. எத்தனையோ முறை அழைத்தும் வரமறுத்துவிட்டாளே என்று... ரெயில் கிளம்பும் ஓசைகேட்டது. விழிகள் ஜன்னல்புறம் நகர்ந்தன. புத்தககடையில் ராணிமுத்து நாவலில் மனைவியின் பெயர் ஜொலித்தது. அவள் எழுத ஆரம்பித்த நாட்களிலிருந்து சதா மட்டம் தட்டும்விதமாக பேசுவானே தவிர, என்றுமே அவளுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஒருநாவலையும் வாசித்து பார்த்ததுமில்லை. இப்போது அதைவாங்கும் ஆவல் எழுந்தது. விரைவாக சென்று வாங்கிவந்தான். "இரவைத் தேடும் பனித்துளி" எனும் தலைப்பிலுள்ள நாவலை புரட்டினான். அதன் இறுதிபக்கத்தில் "ஒவ்வொரு இரவுகளையும் தேடிக்காத்திருக்கும் பனித்துளிகளைப் போல், நானும் என்மன்னவன் வருகைக்காக காத்திருப்பேன்!" என்று எழுதியிருந்தாள். அத்துடன் அவளது புகைப்படத்தையும் பார்த்தவன் விழிகள் பனித்தன.

"ஒருநல்ல எழுத்தாளராக பெயர்பெறுவதே என்னுடைய நெடுநாளைய ஆசை. உங்களோடு வெளியிடத்தில் இருந்தால் என்னோட லட்சியம், குறிக்கோள் எதுவுமே நிறைவேறாமல் போயிடும். அத்துடன் வீடும் பார்க்க ஆளில்லாம கிடக்கு. நான் இருந்து என் வேலையோடு அதையும் பார்த்துக்கறேன். நீங்க நிம்மதியா சந்தோஷமா இருங்க" என்றாள். அவன் பதில்கூறமுடியாமல் நின்றான். அவளது வார்த்தை எதற்கானது என்று தெரிந்ததால்... இப்போது அவளது ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஈடேறி வருகின்றன. மிகவிரைவில் அவளது லட்சியம் முழுவதுமாக நிறைவேறவேண்டும் என்று நினைத்து, விழிகளை மூடிக்கொண்டான். அவனது எண்ணவோட்டத்தைப் போலவே ரெயிலும் வேகமெடுக்க துவங்கியது.

*** சுபம்***

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...