நண்பனது அப்பா

கற்பனை
5 out of 5 (758 Ratings)
Share this story

நண்பனது அப்பா

கயித்து கட்டிலில் சிவாஜி அரிசி பிராண்ட் பையில் நண்பனது ஏழாம் வகுப்பில் பின்பக்கம் ஓட்டையான ஸ்கூல் பேண்ட்டும், ஸ்கூல் டீசர்ட்டும், நண்பனது அம்மாவின் கிழிந்த புடவையும் ஜாக்கெட்டும் சேர்த்து வைத்து ஊசிநூலால் தைக்கப்பட்ட தலையணையில் ஒய்யாரமாய் தலையை வைத்து படுத்திருந்தார் நண்பனது அப்பா. எதிர்வீட்டு மாதுவிடம் ‘என்ன கொழம்புடா?’ என்று கேட்கவில்லை. தனது பேத்தியை தனதருகில் விளையாட வைக்கவில்லை. மனைவியை வம்பிழுக்கவில்லை. பரணையில் பதுக்கி வைத்திருந்த ஒரு பாட்டில் சாராயத்தையும் குடிக்கவில்லை. கால்மேல் கால்போட்டுக்கொண்டு கரகாட்டக்காரனையும் பார்க்கவில்லை. ஆனாலும் படுத்திருந்தார். சற்று வழக்கத்திற்கு மாறாக வாயில் வெள்ளைத்துணியால் கட்டப்பட்டும் நெற்றியில் ஒற்றை ரூபாயை பதித்தும் கட்டைவிரல்கள் இறுக்க கட்டப்பட்டும் படுத்திருந்தார் நண்பனது அப்பா.

“முந்தாநேத்து கூட வீட்டுக்கு வந்து காபி குடிச்சிட்டு போனானே என் மகராசன்...” செல்லாயி கிழவியின் மார்பில் கைகள் பட வாயிலிருந்து வந்து போயின இவ்வார்த்தைகள்.

“பாழாபோன கடவுளுக்கு என் உசுர கொண்டு போக தோணலயா... பாவி பையன் என் ராசாவ

கொண்டு போயிட்டானே...”

ஒப்பாரிகளும் அழுகுரல்களும் பறையிசையும் வெடியும் நண்பனின் காதுகளை ஒருசேர தழுவிக்கொள்ள செய்வதறியாமல் திகைத்துப்போய் காலையில் கத்த தவறிய பல்லியின் சுவரில் ஒட்டியிருந்தான் நண்பன். அழுதழுது கண்களும் கண்ணங்களும் வீங்கியிருந்த மல்லி எல்லாருக்கும் காபி கொடுத்துக்கொண்டிருந்தாள்.

“கடைசிக்கல்லுலதாம்பா குழி வெட்டனும். அவரு தம்பி குழிக்கு பக்கத்துலயே வெட்டிருங்க. ஏம்ப்பா ராமா சடையன கூட்டிட்டு குழி வெட்ட போங்கடா. அப்படியே சிவாகிட்ட பலக அடிச்சிட்டானான்னு கேளு. மணி ரண்டு ஆச்சுடா. எல்லாம் சுறுசுறுப்பா போனாதானடா...” சொல்லிக்கொண்டே மல்லியிடமிருந்து காபியை வாங்கி நண்பனுக்கு கொடுத்தார் ஊர்கவுண்டர்.

ஒவ்வொரு சொட்டாய் கத்தி கத்தி நீர்த்துப்போன நண்பனது தொண்டைக்குழிக்குள் விஷமாய் காபி இறங்கி கொண்டிருந்தது.

‘எப்பா பொட்டிய எடுத்து வரவா?’ குரல் வந்த பக்கம் திரும்பிப்பார்த்துவிட்டு வானத்தை அன்னார்ந்து பார்த்தார் ஊர்கவுண்டர்.

‘ம்ம்ம் வாடா. இப்ப ஏறனாதான் பொழுதோட போவ முடியும். வானம் வேற இருட்டி கிடக்கு. ஏம்மா சரசு துணியல்லாத்தயும் கட்டியாச்சான்னு பாத்துக்கம்மா. ஒரு வேஷ்டி சட்ட மட்டும் எடுத்து வச்சிருமா. சாமி கும்பிட ஆவும்’

“கால்கடுக்க நடந்த தடத்த ஒட்ட வச்சா கூட ஏழாயிரம் பொட்டி செய்யனுமப்பா

காசு சம்பாதிக்க ஓடுன தேசத்த ஒன்னு ஒன்னு சேத்தா கூட ஏழு கெரகமும் பத்தாதய்யா

உன் புகழ ஒன்னு ஒன்னா சொல்ல சொல்ல என் ஆயிசும் தீராதுப்பா

குதிர வாகனம் மேல ஏறி வானம் பறக்க ஆசபட்டியோ

முறுக்கிவிட்ட மீசையோட தேசம் ஆள புறப்பட்டியோ

எவன் கண்ணு பட்டதோ ஆறுக்குள்ள பொசுங்கிட்டியே”

செல்லாயி குரல் பொசுங்கிக் கொண்டிருக்க மஞ்சள் தண்ணீரில் புனித நீராடிக்கொண்டிருந்தார் நண்பனது அப்பா. அவரோடு ரோசா பூக்களும் சாமந்தி மலர்களும் பிரியாவிடை பெற்றுக்கொண்டிருந்தன.

‘அடிடா மோளத்த’ சுந்தரின் குரல் தெற்கு பக்கம் வீச பறையடிக்க தொடங்கினர் நீலாம்பரி குழுவினர்.

கடைசி குளியலை முடித்துக் கொண்ட நண்பனது அப்பா பெட்டிற்குள் வலுக்கட்டாயமாக உறங்க வைக்கப்பட்டார். என்ன சின்ன வித்தியாசம் அவருக்கு பதில் அவர்கள் அடம்பிடித்து அழுது கொண்டிருந்தனர். எட்டவரும் பெட்டியைத் தூக்க சனமே இவர்கள் பின் திரண்டது கடைசிகல்லுக்கு.

வழி முழுதும் ஓணான்களும், பட்டாம்பூச்சிகளும், ஈக்களும், பச்சைப்பாம்பும், குருவிகளும் வரவேற்க கால்கடுக்க மலையேறினர் சனங்கள்.

உச்சி வானில் கொடும்பசியோடு இறைதேடி பறந்து கொண்டிருந்த கழுகு சனம் வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் சனம் ஏறிக்கொண்டிருந்ததைப் பார்த்து சாரைப்பாம்பு ஊர்ந்து செல்வதாய் எண்ணி வேகமாய் படையெடுத்து சனத்தை நோக்கி வந்து அது பாம்பில்லை என தெரிந்ததும் சட்டென்று மேலே கத்திக்கொண்டே பறந்து நடுவானில் மறைந்து போனது. இதை கவனித்த கந்தன் ‘எப்பா கருடன் கிட்ட வந்து உரசிட்டு போதுப்பா’ என்றதும் ஒப்பாரி குழவை சத்தமாய் மலை முழுதும் எதிரொளித்தது.

நண்பனது அப்பா முன்னே வழிநடத்தி செல்ல பின்னிருந்து தொடங்கின உரையாடல்கள்.

‘ஏண்டா கந்தா கோவிலூருக்கு ரோடு போடற சேதி என்னாச்சுடா?’

‘அது எங்கப்பா இந்த கவுர்மெண்ட்டு ஆளுங்க வந்து வந்து பாத்துட்டு போறதுலேயே தேஞ்சி கல்லு ரோடு தார் ரோடாயிரும் போல’

‘சுரேஷ் தான் சொன்னான் இந்தவாட்டி போட்ருவாங்கன்னு. அவன்தான் போன விசாழக்கிழம கூட போயி தாசில்தார பாத்துட்டு வந்தானமா’

‘எங்க அவனும் ஏழு வருசமா போயிகிட்டுதான் இருக்கான். இந்தா போட்ருவாங்க அந்தா போட்ருவாங்கன்னு ஏங்கனதுதான் மிச்சம். ஏதாச்சும் பன்னனும்ப்பா’

ஊர்கவுண்டரும் கந்தனும் பேசிக்கொண்டிருக்கையில் முன்பகுதியிலிருந்து அலறல் சத்தமும் விசில் சத்தமும் ஒன்று கூடி இவர்கள் இருவரின் உரையாடலையும் தடுத்து நிறுத்தியது.

‘என்னாச்சுடா எதுக்கு இப்டி உசுரு போற மாதிரி கத்தரானுங்க’

முன்பகுதியிலிருந்து...

‘எருமகடாப்பா... சவுக்க உடச்சி தள்ளிட்டு போது... கொஞ்ச நேரத்துல சரவணன காவு வாங்கிருக்கும்’

‘எல்லாரும் நில்லுங்கடா. எலுமிச்சயும் கோழிக்குஞ்சயும் கொண்டா’ ஊர்கவுண்டர் முன்பகுதிக்கு முன்னேறினார்.

‘ஊரில் பஞ்சம் போல. அதான் எல்லாரும் மலய நோக்கி போறாங்க. அப்பாடா நாம மட்டும்தான் தப்பிச்சோம்’ மனதில் குதூகளப்பட்ட கோழிக்குஞ்சின் தலை துண்டாகி சனத்தின் அலறலையும் பயத்தையும் தனக்குள் புதைத்துக்கொண்டது. தான் ஆசை அசையாய் வளர்த்த கோழிக்குஞ்சையும் வாரி அணைத்துக் கொண்டு புறப்பட்டார் நண்பனது அப்பா.

‘ஒரு நிமிஷத்துல கொலயெல்லாம் நடுங்கிடுச்சு. இப்படிதான் போன வருசம் பட்டா வாங்கற விசயமா கலெக்டர் ஆபிசு போய்ட்டு வர்ரப்ப முனியப்பன் கோவிலுகிட்ட பஸ்சு கவுந்துடுச்சு. புளியமரம் மட்டும் இல்லன்னா அங்கயே எல்லாரும் பொசுங்கிருப்போம்’

‘அத ஏம்ப்பா இப்ப நியாபகபடுத்திக்கிட்டு… ஆறு கலெக்டருங்க மாறிட்டாங்க. பட்டா வாங்க நாம தேயறது மட்டும் மாறல. நம்ம பசங்களுக்கு பட்டாதான் புத்தி வரும் போல. எவனாவது கவுர்மெண்ட்டு ஆபிசுல உக்காருங்கடான்னா… எவன் கேக்கறான். பத்தாப்பு தாண்டறதே பெரும்பாடா இருக்கு. எல்லாம் மரத்து வேலைக்கும் காபி பறிக்கறதுக்கும் சாராயம் பீடிக்கு அடிமையாறதுக்கும் பம்பரம் உடற வயசுல பட்டு வேஷ்டிக்கு கட கடயா ஏறி இறங்கரதுக்கும் பசங்க மூள வேல செய்யறதுக்குதான் நேரம் சரியா இருக்கு. இதுல எங்க கவுர்மெண்ட்டு உத்தியோகத்த பத்தி யோசிக்க வைக்கறது. இவனுங்களுக்கெல்லாம் பட்டா வாங்க அலையும் போதும் எவன் எவன் காலையோ பிடிச்சி மிதி வாங்கும்போதும் காலையில பத்து மணிக்கு வர்ரவங்களுக்காக பத்து மாசமா ஆபிசு வாசல்ல காத்துக்கிடக்கும்போதும் தான் புரியும். உங்களுக்கெல்லாம் பட்டாதண்டா புரியும்’

பூசாரி தாத்தாவின் புழம்பல்கள் சனத்தின் காதுகளைத் தவிர மண், மரம், செடி, கொடி, வீடு, மாடு, நாய் இப்படி எல்லோரின் காதுகளுக்குள்ளும் ஒட்டிக்கொண்டது. தாத்தாவின் கால்களை நாக்கால் தடவி விட்டு எல்லோரையும் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது சீமராஜா. ஒப்பாரிகளின் குமுறல்களுக்குள் தாத்தாவின் குரலும் சீமராஜாவின் குரலும் மண்டியிட்டு மறைந்து போயின.

‘டேய் முருகா. இங்க வாடா. பன்னி தடம். அந்த பலா மரத்துக்கு நேரா தடம் போது பாரு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் போயிருக்கும் போல. கனி இருக்காடா’

‘இருக்கு சார. கொட்டாயில கீது. நீ போய்ட்டே இரு. நா போய் எடுத்துட்டு வரன். சுப்ரா கடப்பாரய (நாட்டு துப்பாக்கி) வேகமா கொண்டாடா’ முருகன் சுப்ரனிடம் சொல்லிவிட்டு வேகமாய் ஓடினான்.

‘ஏண்டி நேத்து விறகு வெட்ட போனப்ப ஃபாரஸ்ட் ஆளுங்க வந்துட்டானுங்களாமே? காச குடுத்துட்டுதான் வெறகு எடுக்கனும்னு சொன்னாங்களாம்?’

‘ஆமா சரசு கட்டையில போவ... மாடு மேய்க்கறதுக்கும் ஆடு மேய்க்கறதுக்கும் காசு குடுக்கனுமா. நேத்து காமாட்சி ஆடு மேய்ச்சிகிட்டு இருந்துருக்கா. ரெண்டு ஆட பிடிச்சி வச்சிகிட்டானுங்களாம். இரண்டாயிரம் ரூவா கட்டணாதான் குடுப்பன்னு சொல்லிட்டாங்களாம். பாவம் காசில்லாம அழுவுறா.’

‘ராத்திரில்லாம் தூங்கவே இல்லக்கா. எங்க இவனுங்க பான வயித்துக்கு என் புள்ளங்க பலியாயிடுமோன்னு விசனமாவே இருக்குதுக்கா’

‘கவுண்டர... இவனுங்ககிட்டதான் போயி பேசி பாக்கறது. பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து இந்த காடுதான் கதின்னு வாக்கப்பட்டு கிடக்கோம். நாமளும் இந்த நாட்டு சனம்தான. நாம ஏதோ அசலூருகாரங்கமாறி திடீர்னு வந்துட்டு அதுக்கு காச குடு இதுக்கு காச குடுன்னா எப்படி. போற போக்க பாத்தா இங்க வாழனும்னாலும் காசு குடுத்துட்டுதான் வாழனும் போலருக்கு. திடீர்னு இப்ப கூட வந்து அங்க புதைக்கறதுக்கு கூட காசு கேட்டாலும் கேப்பானுங்க…’

‘பாடையில போவ... இவன ஏண்டா தூக்க விட்டீங்க... இந்நேரம் கவுத்துட்டுருப்பான். இவனுக்கு மட்டும் எங்க இருந்துதான் சாராயம் குடம் குடமா கிடைக்குதோ?’

சரசிடம் பதில் சொல்ல திரும்பிய போது சிவாவின் குரல் வந்த பக்கம் திரும்பினார் கவுண்டர்.

‘இந்த எழவுக்குதான் இவன உடாதீங்கடான்னு சொன்னன். எவன் கேக்கறான். வாடா மாறா நீ ஒரு கை பிடி. ஏம்மா சரசு இவன் மேல ஒரு கொடம் தண்ணி ஊத்திவுடுமா. இதுக்கு எப்போதான் முடிவுகட்டறதோ?’

போதையில் கல்தடுக்கி கீழே சரிந்த மாரிமுத்துவின் மேல் ஒரு குடம் முழுதும் தண்ணீர் ஊற்றி அவன் போதையை தணித்து விட்டு கிளம்பியது சனம்.

ஊர்க்கவுண்டருக்கு ஒன்று மட்டும் புரிந்தது. எல்லா பிரச்சினைகளையும் பேச துவங்கும் போது அவை கிளை கிளையாய் சிதறி ஓடிக்கொண்டிருந்தன. சனமும் ஒவ்வொரு கிளைகளாய் தனித்து விடப்பட்டிருந்தனர். இது திட்டமிடப்பட்டதா? யதார்த்தமாய் நடந்ததா? புதிராகவே தனக்குள் புதைத்துக்கொண்டு கிளம்பினார் ஊர்கவுண்டர். சனங்களோ இவையேதுமறியாமல் கடைசிகல்லுக்கு பயணபட்டுக் கொண்டிருந்தனர்.

ஓரமாய் இருந்த மண்குவியலில் இருந்து எல்லோரும் மூன்று கை அளவு மண் அள்ளி குழியில் போட்டு நண்பனது அப்பாவையும் இவர்களது பிரச்சினைகளையும் புதைத்துக்கொண்டிருந்தனர்.

Stories you will love

X
Please Wait ...